‘தமிழ்ப் பண்பாடு : ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ என்ற தேடலின் இரண்டாம் பகுதியான ‘சாதிய வாழ்வியல்’ தோற்றம் பெற்று வளர்ந்தவாறினைக் கடந்த எட்டு இயல்களில் கண்டு வந்துள்ளோம். ஏனைய சமூகங்களில் ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமை ஏற்பட்ட பின்னர் சாத்தியப்பட்டு இருந்த பண்பாட்டு விருத்தியைத் தமிழகம் அதனது வேறுபட்ட புவிச் சூழல்கள் (திணைகள்) வழங்கிய வாய்ப்பில் சமத்துவத்தை உள்ளும் புறமும் பேணியபடியே எட்ட இருந்த பிரத்தியேகக் குணாம்சங்களை முதல் பகுதியில் பேசியிருந்தோம். விவசாயப் பெருக்கத்தின் பேறாகப் பெரும்படை நடாத்தி ஏனைய திணைகளை மருதத் திணை வெற்றி கொண்டு மேலாதிக்கம் புரிந்த பின்னராக உள்வாங்கப்பட்ட சாதிய வாழ்வியல் பற்றியது நிறைவை எட்டி இருக்கும் இந்த இரண்டாம் பகுதி!
முதல் திணை மேலாதிக்கம் (இதனை ஐரோப்பியப் புரிதல் அடிப்படையில் ஏங்கல்ஸ், ‘முதல் வர்க்கப் பிளவு..’ என்பார்) பெண்கள் மீதான ஆண்கள் மேற்கொண்ட ஒடுக்குமுறை; மருதத் திணை மேலாதிக்கத்தின் சாத்தியப்பாட்டிலும் கொற்றவை பெற்றிருந்த முக்கியத்துவத்தைப் பறித்தெடுத்து அந்தத் தாய்த் தெய்வம் உள்ளிட்ட மூத்த தேவிகள் அனைவரையும், வேறுள தெய்வங்களையும் அடக்கி ஆளும் ஆண் தெய்வ மேலாதிக்கம் சிவன் எனும் பரம்பொருள் பற்றிய பேசுபொருளை மேற்கிளம்ப வழி கோலியது. கொற்றவை மைந்தன் எனக் கொண்டாடப்பட்ட முருகன் சிவனின் மகனாக வரிக்கப்பட்டார்; கொற்றவையும் பிராமண மதத்தின் உமையுடன் இணைக்கப்பட்டு மாதொரு பாகமாக சிவன் வெளிப்பட உதவும் துணை(வி)ப் பொருள் என மாற்றப்பட்டார். அனைத்தையும் வெற்றிகொண்டு அடக்கி மேலாண்மை பெற்ற ‘தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறை’ எனும் வகை மேலாதிக்கம் சோழப் பேரரசின் ஊடாக எட்டப்பட்டு இருந்தது!
முன்னதாகத் திணைகளின் உள்ளேயும் திணைகள் இடையேயும் சமத்துவம் ஊடாடிய காலத்தில் இருந்து ஆசீவகக் கருத்தியலுக்கு உட்பட்ட வகையில் வழிபடப்பட்டு வந்த தாய்த் தெய்வ வழிபாடுகளுக்கு உரிய மூத்த தேவியான மூதேவியைத் தொடர்ந்தும் போற்றுவதாக அமைந்த சமூக உணர்வானது நிலப்பிரபுத்துவ எழுச்சி வலுப்பட்டு உச்ச நிலையெய்தி வந்த போது தரவிறக்கத்துக்கு உள்ளாகித் திட்டுதலுக்கு உரிய பொருளாக்கப்பட்டார் மூதேவி.
வணிக எழுச்சி நிலவிய ஆரம்ப காலத்திலும் வணிக மேலாதிக்கம் சாத்தியப்பட்டு இருந்த அறநெறிக் காலத்திலும் காகம் (கடல் பயணத்தில் தரையின் நெருக்கத்தை அறிய உதவியது), கழுதை (பொதி சுமந்த வாகனம்), ஆமை (கடல் பயணத்துக்கு உரிய நீரோட்ட வழித்தடத்தைக் காட்டுவது) எனும் உயிரினங்கள் வணிகத்துக்கு உதவின என்ற வகையில் தமிழர் சமூகத்தில் பெரு மதிப்பைப் பெற்றனவாக இருந்தன. நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் வலுப்பட்டு வந்தபோது காகமும் கழுதையும் திட்டுதலுக்கு உரியனவாக ஆக்கப்பட்டன; ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என ஆமையையும் கண்டிக்கும் நிலை தோன்றியது (ஆமையை விஷ்ணுவின் ஒரு அவதாரமாகப் பார்க்கும் வைணவத்துக்கும் தமிழர் வாழ்வியலில் அதியுயர் மேலாதிக்கம் பெற்ற சைவத்துக்கும் இடையே உள்ள முரணும் அவற்றிடையேயான இணக்கங்களும் கவனிப்புக்கு உரியன).
நீண்ட காலமாக மிகப் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தவை கால மாற்றத்துடன் தூற்றலுக்கு உரியனவாகத் திரிபுறக் காரணம் என்ன? ஆரியப் பிராமணர் மேலாதிக்கம் பெற்றுச் செய்த சதியின் விளைவாகத் தமிழர் மனப்பாங்கு கெடுக்கப்பட்டதான குற்றச்சாட்டுகள் இன்று முன்வைக்கப்படுவதனைக் காண்கிறோம். இத்தகைய உணர்வு மாற்றத்தில் பிராமணியத்துக்கு உரிய இடம் மறுக்கவிலாதது; அத்தகைய ‘பிராமணச் சதிக்கு’ தமிழர் பண்பாடு ஆட்பட்டது எதன் அடிப்படையில் என்ற தேடல் அவசியமானது!
பிராமணரே முன்முயற்சி எடுத்துப் பூர்வத் தமிழ்க் கருத்தியல் தளத்தைத் தகர்த்தவர்கள் அல்ல. வட இந்தியாவில் சாதிபேதம் ஏற்பட்ட மூன்று, நான்கு நூற்றாண்டுகளில் கூட சாதிப் பிளவுறாமல் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வாழ்ந்த தமிழர் பண்பாட்டில் சாதிக்கொரு நீதி பேசிய மனு தர்மம் புகுந்துவிட இயலுமான சூழல் தமிழகத்தில் உள்ளியக்கத்தின் வாயிலாக ஏற்பட்ட பொருளுற்பத்தி விருத்தியின் விளைவாக நிழ்ந்தாக வேண்டிய, தவிர்க்க இயலாத மாற்றம். இயற்கை விளைபொருட்களான ஏலம், கறுவா (இலவங்கம் பட்டை), கராம்பு, மிளகு, முத்து, உப்பு என்பனவற்றை தமக்கிடையேயும் கடல் கடந்தும் வர்த்தகம் செய்த திணைகளுக்குள் கைத்தொழில் விருத்தியும் வலுத்து வந்த கிமு 6 முதல் கிமு 3 ஆம் நூற்றாண்டுகள் வரையான காலப் பரப்புக்கு உரியதாய் நிலவிய சமத்துவம் பலராலும் புரிந்து கொள்ளச் சிரமமானதாக உள்ளது. அந்தச் சமகாலத்தில் வட இந்தியாவில் விவசாய விருத்தி சாத்தியப்பட்டு, அதனை வாய்ப்பாக கொண்டு பிற நிலப் பரப்புகளை ஆக்கிரமிக்கும் சத்திரியரும் நிலவுடமையைப் பெற்ற பிராமணரும் அவ்விரு தரப்பாருக்கும் பண்டப் பரிவர்த்தனையை மேற்கொண்ட வணிகரும் உடலுழைப்புக்கு மட்டுமானவர்களாக ஒடுக்கப்பட்டுச் சுரண்டப்படும் சூத்திரர்களும் எனச் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு உரிய வாழ்முறை வளர்ந்து வரலாயிற்று; மேலைத் தேசங்களான கிரேக்கத்திலும் ரோமிலும் வர்க்கப் பிளவடைந்த வாழ்முறை தோன்றி ஆண்டான் – அடிமைகள் கொண்ட வர்க்கச் சமூக வாழ்முறை உருப்பெற்றிருந்தது. திணைகள் இடையே கொண்டும் கொடுப்பதுமாக அமைந்த பண்டப் பரிமாற்ற முறைக்குரிய வர்த்தகம் மற்றும் கடல் கடந்த வாணிகப் பெருக்கம் சாத்தியப்படுத்தி இருந்த கைத்தொழில் விருத்தி என்பவற்றுடன் இணைந்து ஏற்பட்டு வந்த நகர்ப் பண்பாட்டு விருத்தியில் ஊடாடிய சமத்துவத்தைத் தகர்த்து கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் ஏற்பட்டு வந்த மருதத் திணை மேலாதிக்கம் எமக்கான ஏற்றத்தாழ்வுச் சமூக முறைமையை தோற்றுவித்தது. இந்த ‘முழுச் சமூக சக்தி’ என்பதான மருதத் திணையின் மேலாதிக்கம் வாயிலாக உருப்பெற்ற சமூகப் படிநிலையாக்கம் மிகுந்த கவனிப்புக்கு உரியது!
இத்தகைய வரலாற்று இயக்கத்தினூடாக மேலாதிக்க வாய்ப்பைப் பெற்றவர்கள் அதனைக் கருத்தியல் ஆயுதத்தின் வாயிலாக நிலைநிறுத்தத் தாமாகவே பங்காளிகளாக்கி அரவணைத்த ஒரு சமூக சக்தியே பிராமணர்கள்; அவர்கள் அனைவரும் வடக்கில் இருந்து வந்தவர்களும் அல்ல – வந்தவர்களுடன் தமிழகத்தில் உருப்பெற்ற பிராமணக் கோத்திரங்களும் கைகோர்த்து இயங்கின என்பதனைப் பல ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. தம்மால் அரவணைக்கப்பட்டவர்கள் தமது மேலாதிக்கத்தை நியாயப்படுத்த ஏற்ற அதியுயர் பீடத்தில் உள்ளனர் என முழுச் சமூகத்துக்கும் எடுத்துக்காட்டும் வகையில் பிராமணர்களுக்கானதாகத் தாமே வழங்கிய அதீத ஆன்மீகப் புனிதம் தம்மிலும் மேலான இடத்தை அவர்களுக்கு வழங்கிவிட்டது என வரலாறு உணர்த்திய போது அவர்களினதை விடவும் மேலாதிக்கம் பெற்ற தத்துவமாகத் தமக்கே உரியதான சைவ சித்தாந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டனர் தமிழக மேலாதிக்கத்தைக் கையகப்படுத்திய வெள்ளாளர் எனும் சாதிப் பிரிவினர்.
இராமானுஜரின் சைவ மேலாதிக்க எதிர்ப்பில் சாதிய மறுப்பு
வணிகக் கருத்தியலின் அடித்தளத்தில் சமத்துவக் குணாம்சங்கள் பலவற்றை உடையதானதாகக் கட்டமைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தை மாற்றியமைத்து ஏற்றத்தாழ்வுச் சாதியக் கருத்தியலுக்கு இடமளிக்க வைக்க வேண்டியிருந்தது. அதன்பொருட்டு வடக்கில் இருந்து வந்த பிராமணர்களது சாதியக் கருத்தியலுக்கு தாம் வெளிப்படுத்திய பக்திப் பாசுரங்கள் வாயிலாக மிகை முக்கியத்துவம் கொடுத்துப் பரப்புரை செய்த வெள்ளாளர்கள் என்ற திணை பின்னர் பிராமணச் சமூக சக்தியுடன் முரண்பாட்டை வெளிப்படுத்திய போதிலும் அதனைச் சகோதர மோதலாகவே கையாண்டனர்.
பகை முரண்பாட்டுக்கு உரியனவாகிய பௌத்தம், சமணம் என்ற மதப் பிரிவுகள் முற்றாக வீழ்த்தப்பட்டு முழுமையான மேலாதிக்கத்தை நிலவுடமையாளர்களுக்கு உரியதான சைவநெறி பெற்றுக்கொண்ட பின்னர் கூர்மையான போராட்டங்களுக்கு இடமிருக்கவில்லை என்றில்லை; ‘புறச் சமயங்கள்’ எனப் பௌத்தமும் சமணமும் வீழ்த்தப்பட்ட பின்னர் வேத-ஆகமங்களைப் பின்பற்றும் ‘அகச் சமயங்கள்’ எனப்பட்ட சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையிலான முரண் மேலெழுந்து வரலாயிற்று. வேதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய வேதாந்தப் பிராமணர்கள் – ஆகமத்தைப் பின்பற்றிய சைவசித்தாந்த வெள்ளாளர்கள் எனும் சமூக சக்திகள் (திணைகள்) ஒரேவகையான பொருளுற்பத்தித் தளத்தின் மேலாதிக்கத்துக்கு உரியவர்கள் என்ற வகையில் அவர்களிடையேயான பிணக்கு நட்பு முரணுக்கு உரியதாக அமைந்திருந்தது. வணிக – நிலவுடமைச் சமூக சக்திகள் இடையேயான புற – அகச் சமயங்கள் என்பவற்றின் வாயிலாக வெளிப்பட்ட அதிகார மோதல் மற்றொரு வடிவத்துக்கு உரியது; இவ்விரு மதப் பிரிவுகளும் வேறுபட்ட பொருளுற்பத்தி உறவுகளைக் கட்டமைப்பன என்ற வகையில் பகை முரண்பாட்டுக்கு உரியதாக புற – அகச் சமயங்கள் இடையேயான மோதல் அமைவுபெற்று இயங்கின.
சைவநெறியின் முற்றுமுழுதான மேலாதிக்கம் உறுதிப்பட்ட (நிலப்பிரபுத்துவச் சமூக முறைமை வலுவாக வேரூன்றிவிட்ட) உச்ச நிலையாக சோழப் பேரரசர் காலம் திகழ்ந்தது. பின்னதாக, சோழப் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து விஜய நகரப் பேரரசர் ஆட்சிக் காலத்தில் வெள்ளாள – பிராமண முரண்பாடு தொடக்கம் பெற்றபோது தமக்கு உரியதாக சைவசித்தாந்தத்தை வெள்ளாளர்கள் வெளிப்படுத்த வேண்டி இருந்தது குறித்து இந்த இரண்டாம் பகுதியில் ஏற்கனவே பார்த்து வந்திருக்கிறோம். சோழப் பேரரசு உச்சத்தில் இருந்தபோது வேறொரு முரண்பாடு இயக்கம் பெற்றிருந்தது. இது ‘புறச் சமயங்களுடன்’ ஏற்பட்ட பகை முரண்பாடு அளவுக்கு மோதி வீழ்த்தும் தீவிரத்துக்கு உரியதும் அல்ல, பின்னர் மேலெழுந்த வெள்ளாள – பிராமணர் இடையே ஏற்பட இருக்கும் நட்பு முரண்பாட்டைப் போன்றதாயும் இல்லை. முழுத் தமிழகத்திலும் மேலாதிக்கம் செலுத்திய சைவத்துடன் முரண்பாட்டை வெளிப்படுத்திய வைணவம் அதனைப் போல நிலப்பிரபுத்துவப் பொருளுற்பத்தி முறைக்கு உரியதாக இருந்த வகையில் நட்பு முரண் என்ற போதிலும் பூரணமான உடன்பாட்டுக்கு வர இயலாததாக இருந்தது.
பெரு நிலப்பிரபுத்துவத்துக்கு உரிய கருத்தியலைச் சைவம் கொண்டிருந்தது. வைணவமோ சிறு நிலவுடமையாளர்களின் கருத்தியலை வெளிப்படுத்தியது. இரண்டுமே நிலவுடமைப் பொருளுற்பத்தி சார்ந்தன என்ற வகையில் வைதிக நெறிக்கு உரியவை என்ற போதிலும் பெரு நிலப்பிரபுக்கள் – சிறுநிலவுடமையாளர் எனும் வர்க்க பேதமானது தமக்குள் அடிப்படைப் பண்பு வேறுபாடுகளை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன. இத்தகைய வர்க்க மோதலை முன்னதாக பக்திப் பேரியக்கச் சூழலிலும் காண இயலுமாக இருந்தது. அறநெறிக் காலத்தில் அரசு முறை வணிக சக்திக்கானதாக இருந்தது. வணிகத் தரப்புக்குள் கடல் கடந்து வர்த்தகத்தை மேற்கொண்ட பொற்குவை உடையோர் – உள்ளூர் வணிகச் செயற்பாட்டில் ஈடுபட்ட சிறு வணிகர் என்ற வர்க்க பேதம் நிலவியது. பெரு வணிகரது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கிய அரசியல் முன்னெடுப்பில் விவசாயம் நலிந்து போன காரணத்தால் பஞ்சம், பசி, பட்டினி பெருக வழியேற்பட்ட போது சிறு வணிகர்களும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
பெரு வணிகர்களது மேலாதிக்கத்தைத் தகர்த்து விவசாய நலன்பேணும் ஆட்சி மாற்றத்துக்காகப் பக்திப் பேரியக்கம் செயற்படத் தொடங்கிய போது பெரு வணிகர்களுடன் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டவாறு இருந்த சிறு வணிகர்கள் விவசாயத் திணைக்குத் தமது ஆதரவுக் கரத்தை நட்ட ஏற்றதான சமூக அமைப்பு மாற்ற உணர்வுந்தல் கிபி 7 ஆம் நூற்றாண்டு முதல் ஏற்படலாயிற்று. முன்னதாக மருதத் திணை மேலாதிக்கத்தில் நிலவுடைமையாளர்களான விவசாயச் சமூகச் சக்தியிடம் இருந்து கிபி 2 ஆம் நூற்றாண்டில் வணிகச் சமூகச் சக்தி (திணை) அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டது. வணிக மேலாதிக்கம் நிலவிய கிபி 2 – 6 ஆம் நூற்றாண்டுகளின் அறநெறிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விவசாயத் திணையின் மீளெழுச்சியே கிபி 7 ஆம் நூற்றாண்டின் பக்திப் பேரியக்கமாக வெளிப்பட்டது. இவ்வாறு திணைகளிடையேயான மோதலின் வாயிலாக எட்டப்படும் மேலாதிக்க ஆட்சி முறைமையானது ஒன்றிடம் இருந்து மற்றொரு திணைக்கு கைமாறுவதாக அமைவு பெற்று இயங்கியவாறு தான் எமக்கான சமூக மாற்றச் செயலொழுங்கு நிகழ்ந்தேறி வந்துள்ளது. அதன்போது இடம்பெறும் (சிறுவணிகர்கள், சிறுநிலவுடமையாளர்கள் மேற்கொண்டது போன்ற) வர்க்கப் போராட்டத்துக்கான சாத்தியங்கள் இருப்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் அவசியம். திணைகள் இடையேயான மோதலின் வாயிலாக அரசியல் அதிகாரத்துக்கு உரியதாயுள்ள மேலாதிக்க சக்தி ஒன்றிடம் இருந்து மற்றொன்றுக்குக் கைமாறுவதாகவே எமக்கான சமூக மாற்றப் போக்கு அமைகிறதே அன்றி வர்க்கப் போராட்டத்தின் மூலமாகச் சமூக மாற்றம் ஏற்படவில்லை என்பதனை வர்க்க வாதிகள் கண்டுகொள்வதில்லை. இந்தத் திணை மோதல்களின்போது ஆட்சி அதிகாரம்பெற்ற திணைக்குள்ளே இடம்பெறும் வர்க்கப் போராட்டம் முதன்மையான கருவியாக இல்லாத போதிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற உந்துவிசையாகச் செயற்படுகிறது. இத்தகைய வர்க்கப் போராட்டத்தின் இடத்தைச் சாதிவாதிகள், இனவாதிகள் போன்ற அடையாள அரசியலாளர்கள் கவனங்கொள்வதில்லை.
பெரு நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்தால் பாதிக்கப்படும் சிறுநிலவுடமையாளர்களின் கருத்தியல் வெளிப்பாடாக வைணவம் அமைந்திருந்தது. வெள்ளாளர்களிலும் சிறுநிலவுடமையாளர் எனும் வர்க்கத் தட்டுக்கு உரிய தரப்பினர் பெருநிலப்பிரபுத்துவ வர்க்கப் பிரிவினருக்கு எதிரான போர்க்குரலை வைணவ மதத்தின் வாயிலாக வெளிப்படுத்தினர். மேலாதிக்க நிலைபெற்ற வெள்ளாளர்கள் அந்த ஆட்சி உரிமைக்கான கருத்தியலைப் பிராமணியத்தின் ஊடாக உறுதிப்படுத்திய வகையில் பெருநிலப்பிரபுத்துவ வர்க்க நிலையுடைய பிராமணர்களே வெள்ளாளரது பெருந்தெய்வமான சிவனை எந்நாட்டவர்க்கும் இறை என உணர்த்தும் புனிதத்தைக் கற்பித்தனர். பிராமணருக்குள் இடம்பெறும் வர்க்கப் போராட்டத்தில் வைணவப் பிராமணர் சைவ எதிர்ப்பை வெளிப்படுத்தும் முதல் சமூக சக்தியாக வெளிப்பட்டனர். இராமானுஜர் அத்தகைய மேலாதிக்க எதிர்ப்பாளராக இலக்கியப் பதிவைப் பெற்றுள்ளார்.
சைவ மேலாதிக்கத்தை எதிர்த்த வேகத்தில் வைணவத்தின் வர்க்கத் தளமான சிறுநிலவுடமையாளர்களுக்கும் அவசியப்பட்டதாக இருந்த சாதியத்தையும் இராமானுஜர் நிராகரிப்பவராக இருந்தார். அவரது தீவிர நிலைப்பட்ட சமத்துவ நாட்டம் வைணவத்தில் பிளவை ஏறபடுத்தி, மேலாதிக்க நாட்டத்தைத் தமக்குரிய அளவில் உள்வாங்கிய வடகலை வைணவத்துக்கு மாறாக இராமானுஜரின் தென்கலை வைணவப் பிரிவை உருவாக்கித் தொடர வேண்டி இருந்தது. இராமானுஜர் வெளிப்படுத்திய சமத்துவ நாட்டத்தின் நீடிப்பாக சுதந்திரப் போராட்ட காலத்தில் பாரதியின் கண்ணன் பாடல்கள் அமைந்தன; மார்க்சியத்திலும் எஸ்.என். நாகராஜன் முன்னிறுத்திய ‘கீழை மார்க்சியக்’ கருத்தியலுக்கான அடித்தளமாக ஆகியிருந்தது!
வடகலை வைணவத்தின் மேலாதிக்கக் கருத்தியலுக்கான அடித்தளம் வட இந்நியச் சமூக முறையினூடாகவும் தொற்றிக்கொள்வதாக இருந்தது; அங்கே சைவம் சிறுநிலவுடமையாளரது மதமென இயக்கம்பெற வைணவமே பெரு நிலப்பிரபுக்களுக்கான கருத்தியலை வெளிப்படுத்தி இருந்தது. சாதிய மறுப்பு, அதற்கான ஆட்சியதிகாரத்தைப் பெற்றிருந்த சைவ சமயத்தை எதிர்த்தல் என்பன காரணமாக சோழப் பேரரசு எல்லைக்குள் வாழ இயலாமல் இராமாநுஜர் தேசப்பிரஷ்டம் செய்துகொண்டு தலைமறைவாக வாழ வேண்டியவரானார். அத்தகைய சைவ – வைணவ முரண்பாட்டை விடக் குறைவற்ற வகையில் வடகலை – தென்கலை எனுமிரு வைணவப் பிரிவுகளுக்கு இடையேயான மோதல் அன்று தொட்டு இன்று வரை நிலவி வருவதனை அவதானிக்க இயலும்.
முழுச் சமூக சக்திகள் (திணைகள்) இடையேயான மோதலே எமக்கான சமூக மாற்றக் கருவி என்பதனை விளக்கம் கொள்ளும் அதேவேளையில் அவற்றினுள் இயக்கம் பெறும் இத்தகைய வர்க்கப் போராட்ட நிதர்சனத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது சமூக மாற்றப் போராட்ட சக்திகளுக்கு மிகமிக அவசியப்படுகின்ற கற்கைத் தளமாகும்!
‘புறச் சமயங்களின்’ தாக்கமும் அறுவகைச் சமயங்களும்
அரசியல் அதிகாரத்தை வெற்றி கொண்ட நிலவுடமையாளர்கள் இடையேயான வர்க்க வேறுபாடு பின்னர் ஏற்பட்டு வளர்ந்த ஒன்று. பக்திப் பேரியக்கத்தின் தொடக்க நிலையில் வணிக மேலாதிக்கம் தகர்க்கப்பட வேண்டி இருந்த போது அதற்கு உரியதான மதங்களாகத் திகழ்ந்த சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் எதிராகப் போராடும் அவசியம் நிலவியது. நிலப்பிரபுத்துவப் படிவளர்ச்சியை இன்னமும் எட்டாத விவசாயத் திணைக்குரிய கருத்தியல்களாக வெளிப்பட்ட சைவமும் வைணவமும் தமக்குள் பேதப்படாமல் ஒன்றுபட்டு இயங்கியவாறு ‘வேத, ஆகம மறுப்பாளர்கள்’ என்ற வகையில் ‘புறச் சமயத்துக்கு’ உரியோர் என அடையாளப்படுத்தப்பட்ட அவைதிக சமயங்களுக்கு எதிராக முனைப்புடன் போராடின. அத்தகைய கருத்தியல் தளப் போராட்டம் வாயிலாக ஆட்சி அதிகாரத்தை வென்ற பின்னர் பெருநிலப்பிரபுக்களாக வளர்ந்துவிட்ட வெள்ளாளப் பிரிவினருக்கு உரியனவாகத் தேவாரப் பாடல்பெற்ற தலங்கள் (சிவன் கோயில்கள்) ஆட்சியாளர்களது அனுசரணையுடன் விண் முட்டும் கோபுரங்களுடன் விருத்தி பெற்றன. ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தப் பாடல்களில் இடம்பெற்ற திருத்தலங்களில் மிகப் பெரும்பாலானவை சிறுநிலவுடமையாளர்களுக்கு உரியன என்பதைப் பறைசாற்றும் வகையில் இன்று வரை எவ்விதப் பிரமாண்டங்களையும் எட்டாமல் எளிமைத் தோற்றத்துடனேயே உள்ளன. பின்னதாக விஜயநகரப் பேரரசர் காலத்தில் வைணவ சமயம் ஆட்சாயாளரது மதமாக ஆகிவிட்ட சூழலில் சில வைணவக் கோயில்கள் பிரமாண்ட விருத்தியுடன் திகழ்ந்த போதிலும் ஒட்டுமொத்தமாக சைவக் கோயில்களே தமிழகத்துக்கான பேரடையாளங்களாக போற்றப்படும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை!
இவ்வகைச் சைவ – வைணவ முரண் தோன்றுவதற்கு முன்னரும் அவை ஒன்றுபட்டுப் போராடக் களம் அமைத்த பக்திப் பேரியக்கம் தோற்றம்பெற்று ஒரு நூற்றாண்டின் பின்னர் அது வீறுபெற்று இயக்கம் கொண்டவாறிருந்த காலத்துக்கு உரியதுமான தமிழகத்தின் (இன்றைய கேரள எல்லைக்கு உட்பட்ட) காலடியில் இருந்து வட இந்தியா சென்ற சங்கரரே ஒன்றுபட்ட வைதிகநெறிக்கான கருத்தியலாளராக மேற்கிளம்பி வந்துள்ளார் என்பது வரலாற்று முக்கியத்துவமிக்க ஒரு அம்சம். பிராமணியம் வடக்கில் இருந்து தெற்குக்கு வந்ததாயினும் நிலப்பிரபுத்துவக் காலத்துக்கு ஏற்புடைய உச்ச வடிவக் கருத்தியலை ஒழுங்கமைத்து வெளிப்படுத்தியது தென்னிந்தியாவே என்பது கவனிப்புக்கு உரியது. இதையடுத்த இரு நூற்றாண்டுகளின் பின்னர் சோழப் பேரரசின் விரிவாக்கத்தில் தமிழக நிலப்பிரபுத்துவத்தின் அதியுச்ச மேலாதிக்கமும் சைவ வேளாளரின் சாதிய மேட்டிமையும் மிகைப்பட்டு இருந்தன. அவ்வகையில் பெருநிலப்பிரபுத்துவ வர்க்க வெள்ளாளரின் பிரதிபலிப்பான சிவனுடன் முரண்படுவதாகவே இராமானுஜரின் தென்கலை வைணவம் எழுச்சி பெற்றது!
அத்தகைய எதிர் நிலைக்குள் கூட ‘ஹரி ஹர’ மூர்த்தமாக விஷ்ணு – சிவன் இணைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறும் வகையில் சங்கரர் கிபி 8 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்திய சண் மார்க்கம் (ஆறு சமயங்களின் இணைப்பாக) வைதிக நெறியின் ஒருமையை வெளிப்படுத்தி இருந்தது. ஸ்மார்த்த பிராமணர்களான சங்கரர் மரபினர் இவ்வகையில் சிவ – விஷ்ணு இணைப்பை வலியுறுத்தி இயங்கி வந்ததன் பேறாக வேற்றுமைக்குள் ஒற்றுமை இழையோட இயலுமாயிற்று. அதேவேளை, தம்மை நடுநிலையாளர்களாகக் கருதி இரு மதப் பிரிவினரது உள்விவகாரங்களில் ஸ்மார்த்தப் பிராமணர்கள் கருத்துரைக்கும்போது எதிர் நிலைச் சமயக்காரராக ஒவ்வொரு தரப்பாலும் அடையாளப்படுத்தபடுகின்றனரே அன்றி எந்தத் தரப்பும் இவர்களை நடுநிலையாளர்களாக ஏற்பதில்லை. சைவர்கள் இவர்களை வைணவர்களாகப் பார்க்கும்போது வைணவர்களால் ஸ்மார்த்தப் பிராமணர்கள் சைவர்களாகக் கண்டுணரப்படுகின்ற விநோதம் நிலவுகின்றது. ஒருவகையில் இரண்டற்ற குணாம்சத்தின் விவர்த்தமான வெளிப்பாடாக இதனைக் கொள்ளலாம்!
புறத்தாக்கங்களால் தமக்குள் ஒன்றுபட வேண்டி வரும்போது வைதிக நெறி – அகச் சமயங்கள் என ஐக்கியப்படுவதும், தத்தமக்கான சாதிய வர்க்க நலன் பேணுகையில் வேறுபட்டு மோதுவதும் அறுவகைச் சமயங்களுக்கான நியதி. ‘சனாதன தர்மம்’ என ஒன்றுபட்ட கூறுகளுடன் இயங்கியவர்கள் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் குடிசன மதிப்பீட்டின் நிர்ப்பந்தத்தால் இடப்பட்ட ‘இந்து சமயம்’ எனும் அடையாளத்தை ஏற்க வேண்டியவர்களாகினர். நிலப்பிரபுத்துவத்தை முற்றாகத் தகர்க்காத அதே நேரம் காலனித்துவம் ஏற்படுத்திய நவீன வாழ்வியலுக்கான அறிமுகமாக ஊடுருவிய காலனித்துவ கிருஸ்தவ மதமும் (‘புறப் புறச் சமயம்’) இந்து சமயப் பாதுகாப்பு உணர்வை வலியுறுத்தும் பின்புலமாக அமைந்தது. மட்டுமன்றி, முன்னர் ஒன்றுபட்டு (‘புறப் புறச் சமயம்’ என வகைப்படுத்திய போதிலும் கொண்டும் கொடுத்தும்) வாழ்ந்த இஸ்லாமியருடன் மோதும் நிலைக்கு இந்து மதத்தவர்கள் உள்ளாக்கப்பட்டு காலனித்துவ ஆட்சியில் இந்து – முஸ்லிம் முரண் வளர்க்கப்பட்ட போது இந்து சமய அடையாளத்தைச் சிக்கெனப் பற்றும் நிர்ப்பந்தம் இந்தியா பூராவிலும் இருந்த மேலாதிக்கச் சாதிய வர்க்கத்தவர்களுக்கு ஏற்பட்டது.
நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் உறுதிப்படுத்திய வாழ்வியல் நிலப்பிரபுத்துவச் சமூகச் சிதைவுடனும் காலனித்துவ மயப்பட்ட காலத்திலும் எத்தகைய அதிர்வுகளுக்கு உள்ளானது. ‘சாதியத் தகர்ப்புக் கருத்தியல்கள்’ எவ்வகையில் வெளிப்பட்டன என்பதனை மூன்றாம் பகுதிக்கு உரிய ஆறு இயல்களினூடாகத் தொடர்ந்து அலசுவோம்!
தொடரும்.