‘முல்லை’ தயாரிப்புகள் : பாலுணவுப் பொருட்களில் முதலீடு
Arts
14 நிமிட வாசிப்பு

‘முல்லை’ தயாரிப்புகள்: பாலுணவுப் பொருட்களில் முதலீடு

February 3, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில் : த. சிவதாசன்

சீலன் என்ற பெயரால் அறியப்பட்ட திரு.எஸ். தவசீலன் வட மாகாணத்தின் வடக்கிலுள்ள வேலணைக்கு அடுத்துள்ள ஊர்காவற்றுறையில் பிறந்தவர். இலங்கைத் தபாற் திணைகளத்தில் தபால் விநியோகம் செய்யும் உத்தியோகத்தராகக் கடமையாற்றிய இவரது தந்தையார் இவருக்கு நான்கு வயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் இந்த இளம் குடும்பம் புதுக்குடியிருப்பிலிருந்த தாயாரின் பெற்றோருடன் சென்று வாழ நேரிட்டது. தந்தையாரின் ஓய்வூதியத்திலும், தாயாரின் சிற்றூழியங்கள் மூலம் பெறப்பட்ட சிறிய வருமானத்திலும் தாயார் இந்த இளம் குடும்பத்தை நிர்வகித்து வந்தார். நான்கு வயதிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும்வரை சீலன் இங்கு தான் கல்வி கற்றார்.

1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை முடித்துக்கொண்ட சீலன், கணித ஆசிரியராகத் தனது உத்தியோக வாழ்வை ஆரம்பித்தார். போர்ச் சூழல் காரணமாக 1990 இல் சீலன் சாம்பியாவுக்குச் சென்று அங்கு தனது கணித ஆசிரிய உத்தியோகத்தைத் தொடர்ந்தார். போர் விரைவில் முடிந்துவிடும் என நம்பிய சீலன் இரண்டு வருடங்களில் ஊருக்குத் திரும்புவதாகவே திட்டமிட்டிருந்தார். 2001 இலும் போர் ஓய்வதாக இல்லையெனக் கண்டதும் ஐக்கிய இராச்சியத்தில் கணித ஆசிரியராக நியமனம் பெற்று வடக்கு கென்ட் கல்லூரியின் கிரேவ்செண்ட் வளாகத்தில் பணியை ஆரம்பித்தார்.

mullai owner

ஆசிரிய உத்தியோகத்தில் திருப்தியை இழந்த சீலன், அதைத் துறந்துவிட்டு உணவகம் (Fried Chicken Restaurant), மது விற்பனை நிலையம் (Off-License) மற்றும் பல்பொருள் அங்காடி (Supermarket) ஆகிய வியாபார நிலையங்களை ஆரம்பித்தார். இங்கு கற்றுக்கொண்ட வியாபார உத்திகளே பின்னர் அவரது இலங்கையில் ஆரம்பித்த வியாபார முயற்சிகளுக்கும் உதவியாகவிருந்தது.

2016 இல் சீலன் தன்னை வளர்த்த பூமியான முல்லைத்தீவுக்குத் திரும்புவதென முடிவுசெய்தார். மனைவியும், நான்கு பிள்ளைகளும் பிரித்தானியாவில் தங்குவதென முடிவெடுத்தனர். நான்கு பிள்ளைகளில் மூவர், அரசியல், டிஜிட்டல் ஊடகம் மற்றும் கட்டிடக் கலை ஆகிய துறைகளில் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டார்கள். நான்காவது பிள்ளையான மகள் தற்போது க.பொ.த. சாதாரணம் கற்கிறாள். அவளது கல்வி, பராமரிப்பு ஆகியவற்றை மனைவியார் பார்த்துக்கொள்கிறார். தனது குடும்பத்தினரின் கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றை ஸ்திரமாக்கிக் கொண்டதும் சீலன் தான் கற்ற தொழில் திறமைகளைக் கொண்டு தனது தாய் நிலமான முல்லைத்தீவிற்குத் திரும்ப முடிவெடுத்தார்.

பால் பண்ணையில் முதலீடு

அரசாங்கத்தால் தாயாருக்கு வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலமிருந்தது. ‘பேர்மிட் நிலம்’ (permit land) எனப்படும் இன் நிலத்துக்கான உரிமையை ஒருவர் பரம்பரை பரம்பரையாக தனது குடும்பத்தினருக்கு மட்டுமே மாற்றிக் கொள்ளலாமே தவிர வேறொருவருக்கு விற்க முடியாது என்பது விதி. இக் காணியை ஈடு வைத்து எவரிடமும் கடன் பெற்றுக்கொள்ளவும் முடியாது. இப்படி ஈடுவைத்துப் பணத்தைப் பெற்ற ஒருவர் பணத்தைத் திருப்பச் செலுத்தத் தவறினால் கடன் கொடுத்தவர் இக்காணியை உரிமயாக்கிக் கொள்ள முடியாது. இப்படியான பேர்மிட் நிலங்களை வேறொருவர் உரிமைப்படுத்திக்கொள்ள (freehold) வழிவகைகள் இருந்தாலும் அதற்கு நீண்ட காலம் எடுக்கும். சீலன் தனது தாயாரின் காணியைத் தனக்கு உறுதி மாற்றிக்கொள்வதற்கான விண்ணப்பத்தை 2017 இல் செய்திருந்தார். இருப்பினும் அது இன்னும் நிறைவேறவில்லை.

இலங்கைக்கு இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் மிகவும் பொருட் செலவைக் கொண்டது பாலுணவுப் பொருட்களின் இறக்குமதி. எனவே சீலன் இத்தொழிலில் முதலீடு செய்ய உத்தேசித்தார். 2021 இல் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி 2020 இல் மட்டும் ரூபா 62 பில்லியன் பெறுமதியான பாலும், பாலுணவுப் பொருட்களும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும், நியூசீலந்து, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இலங்கையில் நுகரப்படும் மொத்த உணவுப் பொருட்களில் இது 20% ஆகும்.

பிரித்தானியாவில் பலவித தொழில் உத்திகளைக் கற்றுக்கொண்டிருந்தாலும், பால் பண்ணைத் தொழில் பற்றி சீலனுக்கு எதுவுமே தெரியாது. சுமார் இரண்டு வருடங்களாக இந்தியா, சீனா, யப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து இத் தொழில் பற்றிய விபரங்களைக் கற்றுக்கொண்டார். சீலனின் நண்பர் ஒருவர் பல பால் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பால் பொருள் தயாரிப்பு பொறியியலாளராக இருந்தது உதவியாகப் போய்விட்டது. இருவருமாகச் சேர்ந்து சீலனின் முல்லைத்தீவு காணியில் ஒரு பால் பொருள் தயாரிப்பு ஆலையை நிறுவினார்கள்.

புதுக்குடியிருப்பில் சீலனது குடும்பம் பல தலைமுறைகளாக மிகவும் அறியப்பட்டதும் நம்பிக்கைக்கு உரியதுமான ஒன்றாக இருந்தது வாய்ப்பாகப் போய்விட்டது. இதனால் அங்கேயே அவர் தனது பண்ணை நிறுவ முடிவெடுத்தார். ‘புதியவர்’ ஒருவரின் வருகை மக்களிடையே ஏற்படுத்தும் சந்தேகம் இவரைப் பாதிக்கவில்லை. ‘உள்ளூர் பொடியன்’ என்ற வகையில் அப் பிரதேசத்திலுள்ள பால் பண்ணை விவசாயிகள் சிரமமேதுமில்லாது சீலனது பால் பொருள் உற்பத்தி ஆலைக்குப் பால் விநியோகித்தார்கள். இவ் விவசாயிகளின் குடும்பத்தவர்களில் 25 பேருக்குத் தொடர்ச்சியாகத் தன் ஆலையில் வேலை கொடுத்தார். ஆலையின் தேவைச் சுமை அதிகரிக்கும்போது சில வேளைகளில் இது 32 பேராகவும் மாறும். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு வேலைகளை வழங்கியதன் மூலம் அப் பிரதேச விவசாயிகளுடனான சீலனின் உறவு நெருக்கமுற்றது. சீலனின் பால் பொருள் ஆலையில் ஆரோக்கியமான பாலுணவுகளும், குடிநீர் வகைகளும் உற்பத்திசெய்யப்படுவது பற்றிய செய்தி இந்த இளம் தொழிலாளர்கள் மூலம் அப்பிரதேச மக்களிடையே விரைவாகப் பரவியது. ‘முல்லை’ என்ற ஒரு நல்ல ஆலையில் தயாரிக்கப்படும் தரமான பாலுணவுப் பொருட்களை இம் மக்கள் விரும்பி வாங்கினார்கள்.

முல்லை தயாரிப்புகள்

முல்லையில் தயாரிக்கப்படும் பண்டங்களுக்கு இரசாயன ஊட்டிகளோ அல்லது பதனூட்டிகளோ பாவிக்கப்படுவதில்லை. அவை முற்றிலும் இயற்கைப் பண்டங்களுடன் இயற்கை முறைகளில் தயாரிக்கப்படுபவை. இதனால் அவற்றின் பாவனைக்காலம் -திறக்கப்படாமல் இருக்கும்வரை- 30 நாட்கள் மட்டுமே. பண்டங்கள் தயாரிக்கப்பட்டு 5 நாட்களுள் சில்லறை வியாபாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு விடுகிறது என்பது மட்டுமல்ல; பாவனையாளரும் அவற்றைப் பெரும்பாலும் 5 நாட்களுக்குள் நுகர்ந்துவிடுவர் என்பதால் இது தங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை எனக் கூறுகிறார் சீலன். விற்பனைக்கென விதிக்கப்படும் கால எல்லைக்கு 15 நாட்களுக்கு முன்னரே அவை விற்று நுகரப்பட்டுவிடுவதுண்டு. தமது பண்டங்களுக்கு மக்களிடையே அதிக கிராக்கி இருப்பதால் வியாபாரிகளிடமிருந்து தமக்கு பண்டங்கள் திரும்பி வருவது வெகு குறைவு எனக் கூறுகிறார் அவர்.

mullai Products

இலங்கையின் கொழும்பு மற்றும் வடக்கு, கிழக்கு, மலையக மாகாணங்களிலுள்ள பல்பொருள் அங்காடிகளே முல்லைத் தயாரிப்புகளின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள். மன்னாரிலுள்ள மீனவ சமூகத்திடமும் பெரும் கிராக்கி இருக்கிறது. கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் பலர் தமது பயணங்களின்போது பருகும் தயிரைக் (drinking yoghurt) கொண்டு போகிறார்கள். முல்லைத் தயாரிப்புகளுக்கு கொழும்பில் இருக்கும் கிராக்கியளவுக்கு தம்மால் பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாமல் இருக்கிறது எனவும் இத் தேவையைச் சமாளிக்க தற்போது திட்டங்களைத் தீட்டி வருவதாகவும் சீலன் தெரிவிக்கிறார்.

எதிர்நோக்கும் சவால்கள்

அதிகாரத்துவம் (Bureaucracy) : ஒரு தொழிலை ஆரப்பிப்பதற்கான அனுமதியைப் பெறுவது என்பது மிகப் பெரிய சவால். வங்கிக் கணக்கு திறப்பது முதல், கடவுச் சீட்டு விண்ணப்பம், திட்டமிடல் அனுமதி பெறுதல், வியாபார முயற்சிக்கு விண்ணப்பித்தல் என எதற்கு விண்ணப்பிப்பதானாலும் இலங்கையில் அது பலருக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகவே இருக்கிறது. இவற்றுக்கான தகவல்களை அதிகாரத்துவத்திடமிருந்து பெறுவதானால் உறிஞ்சித்தான் எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு பத்திரத்தைப் பரிசீலிக்கும்போது அவர்கள் கண்டுபிடிக்கும் முதல் தவறோடு நிறுத்திவிட்டு அதைத் திருத்திக்கொண்டு வரும்படி திருப்பிவிட்டுவிடுவார்கள். அதற்கு மேல் அப்பத்திரத்தை வாசித்து இருக்கும் தவறுகளை ஒரேயடியாகச் சுட்டிக்காட்ட மாட்டார்கள். ஒவ்வொரு தடவை செல்லும்போதும் மேலும் புதிய பத்திரங்களை நிரப்பும்படி கேட்பார்கள். எல்லாவற்றையும் அவர்கள் கூறியபடியே நிரப்பிக் கொடுத்தாலும் அவற்றில் மேலும் தவறுகளைக் கண்டுபிடித்தோ அல்லது மேலும் புதிய பத்திரங்களை நிரப்பும்படி பணித்தோ அல்லது சில பத்திரங்களை முற்றிலும் இரண்டாம் தடவையாக நிரப்பும்படி பணித்தோ விண்ணப்பதாரிகளை அலைக்கழித்து சக்தி விரயத்தையையும் வெறுப்பையுமே உண்டாக்குவார்கள்.

பணிக் கலாச்சாரம் (Work Culture) : முல்லை ஆரம்பிக்கப்பட்டபோது அவற்றில் பணிபுரிந்த வடமாகாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் ‘நாட் கூலிக்காரர்களாகவே’ இருந்தார்கள். நாள் முடிய அவர்களது சம்பளம் வழங்கப்பட்டதும் தங்களது பணி முடிந்துவிட்டதாகவே அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் அடுத்த நாள் வேலைக்குத் திரும்பி வருவது சந்தர்ப்பவசமானது. ஒருநாள் வேலை முடிந்ததும் அடுத்தநாள் வேலை இருக்கிறது என அவர்கள் அதற்குத் தயாராக இருப்பதில்லை. தமது பணி நீண்ட நாளானது என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை. இதனால் அதிக உற்பத்தித் திறனுடன் சீரிய முறையில் பண்டங்களைத் தயாரிப்பதற்கு அவர்களைப் பயிற்றுவிப்பது மிகச் சிரமமாக இருக்கிறது. அவர்களின் அணுகுமுறை, சிந்தனை மாற்றங்களை உருவாக்கி அவர்களுடைய எதிர்பார்ப்புக்களையும் நிறுவனத்தின் எதிர்பார்ப்பையும் சமப்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுத்தது. தற்போது நிலைமை ஓரளவு மாற்றம் கண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் மூன்று அல்லது மேலான வருடங்களாகப் பணிகளில் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் தமக்கு ஒரு நிரந்தர வருவாயை ஏற்படுத்தக்கூடிய நிலையில் நிறுவனம் வளர்ந்திருக்கிறது என்ற நம்பிக்கை பணியாளர்களிடத்திலும், தமது நிறுவனத்துக்கு நம்பிக்கையானதும் உறுதியானதுமான பணியாளர்களை உருவாக்க முடியுமென்ற நம்பிக்கை நிறுவனத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், இரு தரப்பினருமே தமது எதிர்காலத்தைத் திட்டமிடும் சூழல் உருவாகியிருக்கிறது.

நிதி ((Finance) : முதலீட்டுக்குரிய நிதியைத் திரட்டுவது பெரும் சவாலான ஒன்று. வங்கியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதே பெரும்பாடு. கணித ஆசிரியராகவும், பிரித்தானியாவில் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்தி அனுபவம் பெற்றவருமான சீலனுக்கே இந்தக் கதி. குறைந்த வட்டியுடன் (தற்போது 4%) வழங்கப்படும் விவசாயக் கடன்கள் கிடைப்பினும் அவற்றைப் பெறுவது மிகவும் சிரமமான ஒன்று. அவரது நிலம் ஒரு ‘பேர்மிட்’ நிலமாக இருப்பதால் வங்கிகள் அதை ஈடாக வைத்து கடனைத் தர மறுக்கின்றன. கடனைத் திருப்ப முடியாத நிலை ஏற்பட்டால் வங்கி தனது முதலைப் பெற முடியாது போய்விடும் என்ற அச்சம் வங்கிகளுக்கு இருக்கிறது.

மூலப் பொருட்கள் (Raw Materials) : கால்நடை விவசாயிகள் நம்பிக்கைக்குரியவர்கள் எனினும் அவர்களிடம் போதுமான பாலுற்பத்தி இல்லை. தற்போதுள்ள தேவைகளைச் சமாளிக்க ‘முல்லை’ க்கு நாளொன்றுக்கு 5,000 லீட்டர்கள் பால் தேவை. ஆனால் விவசாயிகளிடமிருந்து நாளொன்றுக்கு 1,500 லீட்டர்களே கிடைக்கிறது. தை, மாசி காலங்களில் இது 500 லீட்டர்களாகக் குறைந்துவிடுகிறது. பசுக்கள் இம் மாதங்களில் தான் கன்றுகளை ஈனுகின்றன என்பதால் கன்றுகளுக்குப் பாலூட்டுவதற்கு பெரும்பாலான உற்பத்தி பாவிக்கப்படுகிறது. மாரி காலத்தில் மாடுகள் சேற்றில் உழல்வதால் அவற்றைக் கழுவிப் பால் கறக்க நேரமாகிவிடுவதும் இன்னுமொரு காரணம். இதைச் சமாளிக்க சீலன் திட்டமொன்றைத் தீட்டியுள்ளதாகக் கூறுகிறார்.

எதிர்காலத் திட்டங்கள்

தன் உற்பத்திக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில் பால் விநியோகத்தை அதிகரிக்க சீலன் சில திட்டங்களை வைத்திருக்கிறார். சொந்தமாகத் தனது கால்நடைப் பண்ணையொன்றை ஆரம்பிப்பதே அதிலொன்று. இதற்காக அவர் முல்லைத்தீவில், நன்நீர் ஏரிக்கு அருகேயுள்ள 50 ஏக்கர் நிலமொன்றை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நாளொன்றுக்கு 10 லீட்டர்கள் பாலை உற்பத்தி செய்யும் 75 பசுக்களை அவர் வாங்குவதற்குத் திட்டமிடுகிறார். இதற்கு சுமார் ரூ.50 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படும். இதை வங்கிகளில் கடனாகப் பெற முடியாது. இதற்காக அவர் தன்னோடு இணையக்கூடிய முதலீட்டுப் பங்காளி (sleeping partner) ஒருவரைத் தேடுகிறார். நிறுவன நடவடிக்கைகளில் தலையிடாது இலாபத்தை மட்டும் பங்கிடுபவராக இப் பங்காளி இருக்க வேண்டும்.

Mullai factory

‘முல்லை’ தயாரிப்புகளாகத் தற்போது பால், தயிர், பருகும் தயிர், பால் ரொஃபீ ஆகியன இருக்கின்றன. இவற்றில் சிலவற்றுக்கு வித்தியாசமான மணம், குணம், சுவை ஆகியவற்றை ஊட்டி புதிய பண்டங்களை உற்பத்தி செய்ய சீலன் திட்டமிடுகிறார். பனம் பழச் சுவையைக் கொண்ட பால் ரொஃபீ யும் இதிலொன்று. இதற்காக அவர் யாழ் பல்கலைக்கழகத்தின் வியாபார இணைப்புடன் (University Business Link (UBL)) பணியாற்றி வருகிறார். ‘முல்லை’ விரைவில், வெண்ணெய் (butter), பாலாடைக் கட்டி (cheese) ஆகியவற்றையும் தயாரிக்கவுள்ளது. நோர்வேயிலுள்ள ஒருவர் அந்நாட்டு பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் முறைகள் பற்றி சீலனுக்கு அறிவுறுத்தி வருகிறார். பல வீடுகளில் இன்னும் குளிரூட்டிகள் (fridges) இல்லாதபடியால், சுண்டிய பாலைத் (condensed milk) தயாரித்து தகரங்களில் அடைத்து விற்பனை செய்வதற்கும் தயாராகி வருகிறார். இவை திறக்கப்பட்ட பிறகும் பழுதாகாமல் இருக்கும்.

‘முல்லை’ தயாரிப்புகள் தற்போது இலங்கைவாழ் மக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதை விரிவாக்கி சர்வதேசங்களில் வாழும் மக்களுக்கும் விநியோகிக்க திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பால் ரொஃபீ மற்றும் நெய் போன்றவற்றை இலகுவாக ஏற்றுமதி செய்யலாம்.

பல்கலைக்கழக வியாபார இணைப்பு (University Business Link)

யாழ் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பீடத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஈஸ்வரமோஹனே எனக்கு சீலனை அறிமுகம் செய்திருந்தார். பல்கலைக்கழக வியாபார இணைப்பின் யாழ் பல்கலைக்கழகக் கிளையின் பணிப்பாளராக கலாநிதி ஈஸ்வரமோஹன் இருக்கிறார். பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பீடத்தை தனியார் நிறுவனங்களுடன் இணைத்துச் செயற்பட வைக்கும் திட்டத்தை இலங்கையின் பல்கலைக்கழக மானிய ஆணையம் 2016 இல் அறிமுகம் செய்திருந்தது. இதன் பிரகாரம், யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது தனியார் நிறுவன இணைப்பு ‘முல்லை’ உடன் நடைபெற்றது. இதன் விளைவாக, வில்வம் பழத்தின் (Bael fruit) சாற்றைக் கலந்து ‘முல்லை’ உருவாக்கிய பருகும் தயிர் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று.

வடக்கில் முதலீடு செய்ய விரும்பும் புலம் பெயர் தமிழர்களுக்கு சீலனின் ஆலோசனை

வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தமது அறிவை, செயற்திறமைகளை, முதலீடுகளை, தொடர்புகளைக் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமாகும். பல தசாப்தங்களாக இழக்கப்பட்ட மக்களாலும், இழக்கப்பட்ட முன்னேற்றங்களாலும், இழக்கப்பட்ட சந்தர்ப்பங்களாலும் வடக்கின் மீள்வளர்ச்சி தாமதமாகி விட்டது. இதைத் துரிதப்படுத்த சீலன் பின்வரும் ஆலோசனைகளைத் தருகிறார்.

1. உங்கள் சொந்த முதலீடுகளை இலங்கையில் செய்யும்போது குறைந்தது மூன்று வருடங்களுக்காவது நீங்கள் இங்கு வந்து நின்று நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். அது எந்தவிதமான தொழிலாக இருந்தாலும், ஒரு தொழிலை நடத்துவதற்குத் தேவையான பணியாளர்களை இனம் கண்டு, உள்வாங்கி, அவர்களைப் பயிற்றுவித்து அவர்களாக உங்கள் தொழில் நிர்வாகத்தை முன்னெடுத்து ஸ்திரப்படுத்துவதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் வேண்டும். உங்கள் முதலீட்டிற்கான பலனை உங்களால் உடனடியாகப் பெற முடியாது, அதற்கு பொறுமையும் உளவுரமும் தேவை.

2. வடக்கிற்கு வந்து முதலீடுகளைச் செய்ய முடியாத புலம் பெயர் தமிழர்கள் வடக்கின் உற்பத்திப் பண்டங்களுக்கு சர்வதேச சந்தைகளுடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். யாருக்கு என்ன, எப்படியான தேவைகள் இருக்கின்றன, அச்சந்தைகளுள் எப்படி உட்புகமுடியுமென்ற உத்திகளை அறிந்து பகிர்ந்து இரு தரப்பினரிடையேயும் பாலங்களைக் கட்டியெழுப்ப உதவலாம். லண்டனிலோ அல்லது ரொறோண்டோவிலோ தமிழர் அல்லது சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்கள் உங்கள் ஆரம்பச் சந்தைகளாகவும் இருக்கலாம்.

3. முதலீட்டில் மட்டும் பங்குதாரியாக ஆரம்பிப்பதே புத்திசாலித்தனமானது. தொழில் முகவரின் நிர்வாகத்தில் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும். வியாபாரத்தின் இலாப நட்ட வரவு செலவு அறிக்கைகளை ஒழுங்காகப் பரிசீலனை செய்து உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குங்கள். தொழில் முகவரின் நிர்வாகத் திறமையிலும் தொழில் நேர்த்தியிலும் நம்பிக்கை ஏற்பட்டால் உங்கள் முதலீட்டை அவரிடம் விட்டுவிட்டு இலாபத்தை அனுபவியுங்கள். உங்கள் அதீத தலையீட்டால் அவரது நிர்வாகக் கவனம் சிதறிக் குழம்பிப் போவதற்கு காரணமாகிவிடாதீர்கள்.

சீலனோடு தொடர்புகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் mullai.ig@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி : மறுமொழிLanka Business Online (www.lankabusinessonline.com)

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

9646 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்