போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வுநிலை - நூல் அறிமுகம்
Arts
14 நிமிட வாசிப்பு

போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை – நூல் அறிமுகம்

February 8, 2024 | Ezhuna

‘இலங்கையில் பௌத்தம்’ என்னும் இந்தத்தொடர் பௌத்தம் பற்றி மானிடவியலாளர்களாலும் சமூகவியலாளர்களாலும், அரசியல் விஞ்ஞானிகளாலும் எழுதப்பட்ட ஆய்வுகள் பற்றி அறிமுகம் செய்வதாக அமைகின்றது. குறிப்பாக 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய சீர்திருத்தவாதம், சமூகம், பண்பாடு, அரசியல், இன உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களில் அரசியல் பௌத்தத்தின் வகிபாகம் என்பன பற்றி ஆய்வாளர்களின் கருத்துக்கள் விரிவாக இந்தத் தொடரில் நோக்கப்படும்.  கணநாத் ஒபயசேகர, ஸ்டான்லி ஜே. தம்பையா, எச். எல். செனவிரத்தின, கித்சிறிமலல் கொட, சரத் அமுனுகம, ஜயதேவ உயன்கொட, குமாரி ஜயவர்த்தன, லெஸ்லி குணவர்த்தன ஆகிய இலங்கையின் சமூக விஞ்ஞானிகளின் நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் , ஹவ்வார்ட் றிஜின்ஸ், உர்மிலா பட்னிஸ், றிச்சார்ட் கொம்பிரிட்ஜ், யொனதன் ஸ்பென்சர் முதலிய இலங்கையரல்லாத ஆய்வாளர்களின் ஆய்வுகள் சிலவும் இந்தக் கட்டுரைத்தொடரில் விமர்சன நோக்கில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

‘போருக்குப் பின் சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலை’ (History After the War Historical Consciousness in the Collective Sinhala Buddhist Psyche in Post war Sri Lanka) என்ற தலைப்பிலான நூலை கலாநிதி. நிர்மால் ரஞ்சித் தேவசிறி வெளியிட்டார். இந் நூலை அவர் எழுத முன்னர், ‘போருக்குப் பின் வரலாறு : நல்லிணக்கத்திற்கு எதிரான சவால்’ எனும் கட்டுரையை ground views (groundviews.org) இணைய சஞ்சிகையில் 12 ஆண்டுகளுக்கு முன் (02/25/2012) வெளியிட்டார். வடக்குக் கிழக்கின் சிங்கள பௌத்த மரபுரிமை கருத்தியலின் பிரசார வலிமையை எடுத்துக்காட்டும் சிறந்த உதாரணத்தை தேவசிறி அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

B Book

வட பகுதி யாத்திரைக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்து சபையின் பஸ்வண்டியில் ‘இது கௌதம புத்தரின் இராச்சியம்’ (மே கௌதம புத்த ராஜ்ஜிய) என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ‘ஸ்ரிக்கர்’ ஒட்டப்பட்டிருந்தது. இது சிங்கள பௌத்தர் இராச்சியம் என்ற செய்தி தமிழர்களை நோக்கி சொல்லப்பட்டதா? அப்படியாயின் சிங்கள அறிவு அற்றவர்களுக்கு ஏன் சிங்கள மொழியில் இதனைச் சொல்ல வேண்டும்? சாதாரண சிங்கள மக்கள் மனதில் வடக்குக் கிழக்கு உங்களுக்கு உரியதே என்ற கருத்தை ஆழப் பதிப்பதற்காக இது செய்யப்பட்டது என்பதையும் தேவசிறி விளக்கியிருந்தார். ஆதலால் இது திட்டமிடப்பட்ட செயல் என்பது அவரது வாதமாகும்.

தேவசிறியின் கட்டுரையின் கருத்துக்களை மறுதலிக்கும் வகையில் கலாநிதி. இராஜசிங்கம் நரேந்திரன் ‘கிறவுண்ட் வியூஸ்’ இணையத்திற்கு பதிவு ஒன்றை அனுப்பினார். அப்பதிவில் ஒரு பகுதி பின்வருமாறு இருந்தது,

“பெரும்பான்மையினரான சிங்கள – பௌத்தர்களை இவ்விதமான நோயியல் கூறுடைய மனம் கொண்டவர்கள் என்று குற்றம் சுமத்துவது தவறு. பல பத்து ஆண்டுகளாக தாம் போகமுடியாது இருந்த யாழ்ப்பாணத்திற்கு, இத்தீவின் ஒரு பகுதிக்குப் போய் அங்கு யுத்த அழிவுகளைப் பார்க்கவும், விடுதலைப் புலிகளின் யுத்த யந்திரத்தினதும் ஆட்சியினதும் மிச்சங்களையும் பார்வையிடவுமே அவர்கள் செல்கிறார்கள். நாகதீபத்திலும் நல்லூரிலும் சென்று வழிபடுவதும் கருவாடு, திராட்சைரசம், பனாட்டு, பனங்கட்டி என்பனவற்றை கொள்வனவு செய்வதும் அவர்களது விருப்பமாகும். சிலர் அங்கு பனங்கள்ளுக் குடிக்கவும் விரும்புவார்கள்.”

“பலர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாரை அவர் உயிரோடு இருந்தபோது போய்ப் பார்த்தார்கள். அவருக்கு அப்பிள், திராட்சை பழங்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டைப் பார்ப்பதற்கும் பலர் ஆவல் கொண்டார்கள். அங்குபோய் கையில் ஒரு பிடி மண்ணை எடுத்தும் சென்றனர்.”

“இக்கருத்து மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது நியாயமானது போல் தோன்றலாம். தனிநபர்களின் செயல்களை, அத் தனிநபர்களின் ஆசைகள், விருப்பங்கள், உணர்வுகளின் விளைவாகப் பார்க்காமல் ‘கருத்தியல்’ (Ideology) என்று வருணிப்பதும் ‘நோய்க்கூறான (Pathological) மனம்’ என்பதும் விதண்டாவாதம் அல்லவா?” என்று இப்பதிவைச் செய்தவர் வாதிட்டார்.

இவ்வாதம் கருத்தியல் என்றால் என்ன என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பத்தைத் தேவசிறிக்கு வழங்கியது.

தனி நபர்களின் செயல்கள் ‘தனிப்பட்டவை’, நடைமுறை (Practical) சார்ந்தவை. ஆகையால் அவற்றுக்குக் கருத்தியல் முக்கியத்துவம் கிடையாது என்றால், மனிதரின் எந்தச் செயலையும் கருத்தியல் சார்புடையது என்று கூறவே முடியாது என்று குறிப்பிடும் தேவசிறி, பிரடரிக் யேம்சன் என்ற மார்க்சிச சிந்தனையாளரின் மேற்கோள் ஒன்றை எடுத்துக்காட்டுகிறார்.

“தனி நபருக்கும் சமூகத்திற்கும், பகுத்தறிவுக்கும் அடிமன எண்ணங்களுக்கும், தனிப்பட்டதற்கும் பொதுக்களத்திற்கு உரியதற்கும் இடையே உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்புவதே கருத்தியல் (Ideologies of Theory, Verso London, 2008, பக். 7)”

சில தனி நபர்களின் அடிமன எண்ணங்களாகவோ தனிப்பட்ட அபிப்பிராயங்களாகவோ இருந்த விருப்பங்கள், ஆசைகள் என்பனவற்றை சிங்கள சமூகத்தின் பொதுக் களத்தின் பகுதியாக, வடக்குக் கிழக்கின் சிங்கள பௌத்த மரபுரிமைக் கருத்தியலாகக் கட்டமைத்து வரலாற்று நியாயங்கள் முன்வைப்பதே தலயாத்திரை இயக்கத்தின் பின்புலம் என்பதைத் தேவசிறி எடுத்துக் காட்டுகிறார்.

தேவசிறி, இணையத்தளத்தில் எழுதிய கட்டுரையை விரிவாக்கி மேற்குறித்த சிறு நூலை 2013 யூலை மாதம் பிரசுரித்தார். அந்த நூல் ‘History After the War’ என்பதாகும். ஆங்கில நூல்களிற்கு தலைப்பு இடும் போது பிரதான தலைப்பு ஒன்றும் நீண்ட உப தலைப்பும் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றி ‘Historical consciousness in the collective Sinhala – Buddhist Psyche in post war Sri Lanka’ என உப தலைப்பும் இடப்பட்டுள்ளது. இந்நூலை கொழும்பு ICES நிறுவனம் பிரசுரித்துள்ளது. A4 தாளில் 22 பக்கங்களைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.

போருக்குப் பிந்திய இலங்கை அரசியல் சூழ்நிலையில் சிங்கள – பௌத்த கருத்தியலில் வெளிப்பட்ட இரு போக்குகளை தேவசிறி ஆராய்கிறார். தேவசிறியின் கருத்துக்களை பின்வரும் தலைப்புகளின் கீழ் இக் கட்டுரையில் விளக்கலாம் எனக் கருதுகிறேன்.

  1. வடக்குக் கிழக்கின் புவிவெளி (Space) பற்றிய சிங்கள பௌத்தக் கருத்தியல்.
  1. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதாயப் பேரழிவுக்கு (Humanitarian Disaster) கருத்தியல் வழியான பதிற்குறி.

 வடக்கு கிழக்கின் புவிவெளி (Space)

இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் இரு தேசியவாதங்கள் தோன்றின. ஒரு தேசியவாதம் சிங்கள பௌத்த தேசியவாதமாகும். இது அநகாரிக தர்மபால போன்ற சிங்கள பௌத்த தேசியவாதிகளால் கருத்தியலாக வடிவமைக்கப்பட்டது. இன்னொரு தேசியவாதம் தமிழ்த் தேசியவாதம் ஆகும். தமிழ்த் தேசியவாதம் காலத்தால் பிந்தியது. 1948 இன் பின்னர் தோன்றியது. சமஷ்டி முறையிலான சுயாட்சியே தம் பிரச்சினைகளுக்கு விடிவைத் தரும் என நம்பிய தமிழர்கள், தமது பிரதேசமான வடக்குக் கிழக்கு பகுதியை தமிழர் தாயகம் (Tamil Homeland) என்று கூறினர். தமிழர் தாயகம் என்ற கருத்து இலங்கையின் புவிவெளியின் (Space) ஒரு பகுதியை ஒரு தேசிய இனம் தனது இருப்புக்கு ஆதாரமான வாழ்விடமாகக் கொள்வதைக் குறிக்கும். அவ்வாழ்விடம் இன்று அம் மக்கள் வாழும் இடமாக மட்டுமன்றி நீண்ட வரலாற்றுக் கால வாழ்விடமாக, மரபுரிமையாக (Heritage) பெறப்பட்டதுமாகும். தமிழர் தாயகக் கருத்துக்கு எதிராக தோன்றிய கருத்தியல் அண்மைக்காலத்திய ‘வடக்குக் கிழக்கின் சிங்கள பௌத்த மரபுரிமை’ (Sinhala Buddhist Heritage of North East) என்ற வடிவத்தைப் பெற்றது. 

2009 ஆம் ஆண்டு போரின் முடிவில் தமிழர் தமது தாயகம் எனக் கோரிய புவிவெளியை அரச இராணுவம் முழுமையாகக் கைப்பற்றிவிட்டது. ‘வடக்குக் கிழக்கின் சிங்கள பௌத்த மரபுரிமை’ என்ற கருத்தியல், வரலாற்று நியாயங்களைக் காட்டி இப் புவிவெளியின் சிங்கள – பௌத்த மரபுரிமையை நிலை நிறுத்துவதற்கான முயற்சியென்பதை தேவசிறி இந்நூலில் எடுத்துக்காட்டுகிறார். ‘வடக்குக் கிழக்கின் சிங்கள பௌத்த மரபுரிமை’ என்ற கருத்தியல் முன்வைக்கும் வாதம் ‘வரலாறு’ பற்றியதாக வெளியே தோன்றலாம். ஆனால் அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும் தேவசிறி சுட்டிக் காட்டுகின்றார். இதன் அரசியல் நோக்கம் யாது? பிரிவினைக் கோரிக்கையை இராணுவ வெற்றி முறியடித்துவிட்டது. ஆயினும் ‘வடக்குக் கிழக்கு தமிழர்களின் தாயகம்’ எனும் கோட்பாடு முழுமையாக கருத்தியல் மட்டத்தில் தோற்கடிக்கப்படாவிட்டால் வடக்குக் கிழக்கை ஒரு அலகாகக் கொண்டு அதிகாரப் பகிர்வையோ சமஷ்டி முறைத் தீர்வையோ தமிழர் கோரலாம். அதில் வெற்றி பெற்றுவிடலாம் அல்லவா? தமிழர்களின் வடக்குப் பகுதியை நோக்கிய தலயாத்திரைக்குப் புறப்பட்ட போக்குவரத்துச் சபை பஸ்ஸில் சிங்களத்தில் ஒட்டப்பட்டிருந்த வாசகம் பற்றி இக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டோம். அது அரசியல் உள்ளடக்கம் கொண்ட வாசகம் என்பது வெளிப்படையானது.

கந்தரோடை ‘கதுறுகொட’ ஆதல்

தமிழர்களால் கந்தரோடை என அழைக்கப்படும் யாழ்ப்பாணக் கிராமத்தின் பெயர் இப்போது ‘கதுறுகொட’ ஆகியுள்ளது. பெருங்கற்கால நாகரிகம் செழித்திருந்த வழுக்கியாறு பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தின் புதைபொருள் சின்னங்கள் உள்ள இடம் ‘கதுறுகொட விகாரய’ என்ற பெயரில் யாத்திரைத் தலமாக இன்று காட்சியளிக்கிறது. இங்கு உருவாக்கப்பட்டுள்ள புவிவெளியை சிங்கள – பௌத்த புவிவெளி (Sinhala Buddhist Space) என தேவசிறி குறிப்பிடுகிறார். இலங்கை இராணுவத்தின் முகாம் ஒன்று இந்த இடத்தின் அருகே இருப்பதையும் அவ்விடம் பாதுகாப்பாக உள்ளதையும் பெருந் தொகையான கிராமப்புறச் சிங்களவர்கள் இங்கு வந்து போகின்றார்கள் என்பதையும் தேவசிறி குறிப்பிடுகிறார்.

Kantharoda board

சிங்கள பௌத்த பிரபஞ்சவியலில் ‘தம்பதிவ’ என்ற ஒரு கற்பனையான உலகம் (Imagined Cosmos) உள்ளதாக தேவசிறி குறிப்பிடுகிறார். இந்த உலகத்தில் வட இந்தியாவிலும், நேபாளத்திலும் உள்ள பௌத்த தலங்கள் உள்ளடங்கியுள்ளன. இந்தத் தலங்களைத் தரிசிக்கச் செல்வோர் இந்தியாவிற்கான ‘விசாவுடன்’ விமானம் ஏறினாலும் பேச்சு வழக்கில் ‘இந்தியா செல்கிறேன்’ என்று கூறுவதில்லை. ‘தம்பதிவ யனவா’ என்றே கூறுவர். வெளிநாடொன்றுக்குச் செல்வோர் உபயோகிக்கும் ‘றட்ட யனவா’ (வெளிநாடு செல்கிறேன்) என்ற தொடரை ‘தம்பதிவ’ பயணத்தின் போது பௌத்தர்கள் உபயோகிப்பதில்லை என்றும் தேவசிறி கூறுகின்றார். ‘தம்பதிவ’ என்பது கற்பனையான ‘Cosmos’ பற்றியது என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

Kantharoda

1920களில் இந்தியாவில் உள்ள பௌத்த தலமான புத்தகயாவை மீட்க வேண்டும் என அநகாரிக தர்மபால இயக்கம் நடத்தினார். புத்தகயா புனிதப் பிரதேசம் அப்போது இந்து ஒருவரின் தனிப்பட்ட காணியாக இருந்தது. ‘விழித்தெழுமின், புத்தகயாவை மீட்டெடுங்கள்’ என்று தர்மபால அறைகூவல் விடுத்ததை குறிப்பிடும் தேவசிறி, புத்தகயாவை மீட்டெடுத்தல் தனிநபர் ஒருவரிடமிருந்த பௌத்த சமயத்தினரின் மரபுரிமைச் சொத்தை மீட்பதற்கான நியாயமான கோரிக்கையே எனக் கூறுகிறார். இந்த அறைகூவல் இந்திய நாட்டின் பிரதேசம் ஒன்றின் மீது அந்நாட்டிற்குள்ள நியாயாதிக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்கும் கோரிக்கை என்பதையும் தேவசிறி குறிப்பிடுகிறார். ‘தம்பதிவ’ என்ற சமயச்சார்புடைய புவிவெளி பற்றிய கருத்தை வடக்குக் கிழக்கின் பௌத்த புவிவெளியுடன் ஒப்பிட்டும் தேவசிறி முக்கியமான கருத்தொன்றைப் பதிவு செய்கிறார். ‘தம்பதிவ’வில் உள்ளடங்கிய பௌத்த மரபுரிமை இடங்களின் நியாயாதிக்கம் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் உரியது. அதைத் தட்டிக் கேட்கும் எண்ணம் சிங்கள பௌத்த மக்களிடம் கிடையாது. ஆனால் வடக்குக் கிழக்கில் இருக்கும் மரபுரிமை இடங்கள் என சிங்கள பௌத்தர் கருதும் இடம் கற்பனை செய்யப்படும் இடமாக (Imagined Territory) உள்ள போதும், கற்பனை என்ற எல்லைக் கோட்டையும் கடந்து அரசின் நியாயாதிக்கத்தை (Jurisdictional Authority of the State) உபயோகித்து தமதாக்கிக் கொள்ளக்கூடியவை என்பதையும் தேவசிறி குறிப்பிடுகிறார்.

மனிதாயப் பேரழிவும் அதற்கான கருத்தியல் பதிற்குறியும்

போரினால் ஏற்பட்ட அழிவு சிங்கள பௌத்தர்களின் கூட்டு மனச்சாட்சியை (Collective Conscience) உறுத்துகிற விடயமாகும். இதன் பதிற்குறிகளையும் கருத்தியல் வெளிப்பாடுகளில் காணலாம் என்பதை தேவசிறி எடுத்துக் காட்டுகிறார்.

மனிதாயப் பேரழிவுக்கான பதிற்குறி ‘நீதியான யுத்தம் (Just War)’ என்ற கருத்தியலாக வெளிப்பட்டது. இந் நீதியான யுத்தம் எனும் கருத்தியலுக்கு துட்டகைமுனு என்ற பெரு வீரனுக்கும் எல்லாளனுக்கும் நடைபெற்ற போர் அதிசிறந்த உதாரணமாகும். சிங்கள பௌத்த புத்திஜீவிகளான சிலர் துட்டகைமுனு – எல்லாளன் போருக்குப் புத்துயிரும், புதுவடிவமும் கொடுத்து விளக்கங்கள் அளிக்கலாயினர். இவர்களில் எல்லாவல மெத்தானந்த தேரரும் நளின் டி. சில்வாவும் முக்கியமானவர்கள். இவர்களின் எழுத்துக்கள் கட்டுரை வடிவில் வெளியாகின. மகாவம்சத்தில் விபரிக்கப்படும் துட்டகைமுனு என்ற சிங்கள வீரனைக் கதாநாயகனாகக் கொண்ட நாவல் ஒன்றை – ஜயந்தா சந்திரசிறி என்ற பிரபல சிங்கள எழுத்தாளர் எழுதினார். சந்திரசிறியின் நாவலின் தலைப்பு ‘மகாராஜ கமுனு (பேரரசன் கைமுனு)’ என்பதாகும். இந்நாவல் 2011 இல் வெளியாயிற்று, கட்டுரைகள் வடிவில் வெளிப்பட்ட ‘நீதியான யுத்தம்’ கருத்தியலை விட சந்திரசிறியின் நாவல் இலக்கிய நயத்துடன் சுவாரசியமாக இக்கருத்தியலைப் புகுத்தும் நோக்கம் கொண்டது என்பதை தேவசிறி இந்த நாவலின் கருப்பொருளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் விளக்குகிறார். மகாராஜ கைமுனு நாவல் துட்டகைமுனுவின் மனச்சாட்சியின் உறுத்தல்களை விசாரணை செய்வது. 1995 இல் சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட ‘சமாதானத்திற்கான யுத்தம்’ (War For Peace) என்ற கருத்திலிருந்து தோற்றம் பெற்ற இன்னொரு வடிவமே நீதியான யுத்தம் ஆகும். இது 2006 ஆம் ஆண்டில் மனிதாய நடவடிக்கை (Humanitarian Operation) என்று கூறப்பட்டதையும் தேவசிறி குறிப்பிடுகிறார். 1995 இல் சமாதானத்திற்கான யுத்தம் தொடங்கப்பட்டபோது அதற்குத் துணையாக ‘வெண்தாமரை இயக்கம்’ (சுதுநெளும் வியாபாரய) நடத்தப்பட்டது. வெண்தாமரை இயக்கத்தின் நோக்கங்கள் இரண்டாகும். அவை,

• போரை முன்னெடுத்துச் செல்வது.

• தமிழ்த் தேசியவாதத்தின் கோரிக்கைகளுக்கு ‘அரசியல் தீர்வைக்’ காண்பது.

சிங்கள பௌத்த தேசியவாதம் வெண்தாமரை இயக்கத்தின் முதலாவது நோக்கத்தை ஆதரித்தது. இரண்டாவது நோக்கமான ‘அரசியல் தீர்வை’ அது கடுமையாக எதிர்த்தது. 2006 ஆம் ஆண்டில் ‘மனிதநேய நடவடிக்கை’ தொடங்கப்பட்டபோது அரசியல் தீர்வு என்ற விடயம் கைவிடப்பட்டது.

சந்திரசிறியின் நாவல் சிங்கள கலை இலக்கிய உலகில் புகுந்த காலத்திற்கு முன்பாக 2006 ஆம் ஆண்டில் கொழும்பு எல்பின்ஸ்டன் தியேட்டரில் ‘ரத்னாவளி` என்ற நாடகம் மேடையேற்றப்பட்டது. அவ்வாண்டு யூலை 26 ஆம் திகதி மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்தின் பிரதி சுனில் விஜயசிறிவர்த்தன என்ற இடதுசாரி எழுத்தாளரால் எழுதப்பட்டது. லிபரல் முற்போக்கு சிந்தனையுடையவர்களும் இடதுசாரிகளும் இணைந்து இந்த நாடகத்தை மேடையேற்றினர். தேவசிறி, ‘ரத்னாவளி’ நாடகத்தை சந்திரசிறியின் நாவலோடு ஒப்பீடு செய்கிறார். ‘ரத்னாவளி’ நாடகமும் துட்டகைமுனுவின் உறுத்தலுக்கு உள்ளாகும் மனச்சாட்சியை பிறிதொரு கோணத்தில் சிங்கள பௌத்தக் கருத்தியலுக்கு மாறுபட்ட வகையில் விசாரணை செய்வது. சந்திரசிறி, விஜயசிறிவர்த்தன என்போரின் இலக்கிய ஆக்கங்களை ஒப்பீட்டாய்வுக்கு உட்படுத்தவேண்டிய பொருத்தப்பாடு என்ன என்பதைத் தேவசிறியின் வார்த்தைகளில் பின்வருமாறு குறிப்பிடலாம்.

“மகராஜா கைமுனு, ரத்னாவளி என்ற இரண்டு இலக்கியப் பிரதிகளிலும் பிரதான கவனக்குவிப்பு துட்டகைமுனுவின் மனச்சாட்சியாகும். இதனை இப்பிரதிகள் துட்டகைமுனு – எல்லாளன் யுத்தத்தை மையப்படுத்தி பரிசீலிக்கின்றன (பக்.10).”

இவ்வாறு கூறிவிட்டு தேவசிறி துட்டகைமுனு எல்லாளன் யுத்தம் சிங்கள – பௌத்த மாயக் கற்பனை (Fantasy) என்று கூறுகிறார். இந்த மாயக் கற்பனை 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட கற்பனை என்றும் பின்னர் அது தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான இக்கால இனத்துவ முறுகலையும் மோதலையும் நவீனத்துக்கு முற்பட்ட காலத்து வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தித் தவறான விளக்கத்தைத் தர முற்படுகிறது என்றும் கூறுகிறார். சிறிவீர என்ற வரலாற்றாசிரியர் 2002 ஆம் ஆண்டு சிங்கள மொழியில் எழுதிய நூல் ஒன்றில் இருந்து மேற்கோள் ஒன்றை அவர் தந்துள்ளார். அவ் வரலாற்றாசிரியரின் கூற்று வருமாறு:

“Dutugemunu and Elara were not partakers of a conflict between Tamil Hindus and Sinhala Buddhists, but they were those of a feudal power struggle”

இக்கூற்றின் சாரமான கருத்தை பின்வருமாறு தமிழில் கூறலாம்.

“துட்டகைமுனு எல்லாளன் யுத்தம் தமிழ் இந்துக்களுக்கும் சிங்கள – பௌத்தர்களுக்கும் இடையிலான யுத்தம் அன்று. (இலங்கையில் அக்காலத்தில்) இரு நிலமானியக் குழுக்களிற்கிடையே ஏற்பட்ட அதிகார மோதலையே அவர்கள் இருவருக்கும் இடையிலான யுத்தம் பிரதிபலித்தது.”

சிறிவீரவின் மேற்குறித்த கூற்றை ஆதாரம் காட்டும் தேவசிறி சந்திரசிறியின் நாவல் மட்டுமன்றி முற்போக்காளரான சுனில் விஜயசிறிவர்த்தனவின் நாடகமும் ஆதாரமற்ற கற்பனை ஒன்றைப் பற்றியதே என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்.

‘ரத்னாவளி’ நாடகத்தை ஒரு தடவை மட்டுமே மேடையேற்ற முடிந்தது. இடதுசாரிகளும், லிபரல் முற்போக்காளர்களும் இணைந்து மேற்கொண்ட இம்முயற்சி அவர்களிடையே ஏற்பட்ட உள் முரண்பாடுகள் காரணமாகக் கைவிடப்பட்டது என்றும் தேவசிறி குறிப்பிடுகின்றார்.

முடிவுரை

நிமால் ரஞ்சித் தேவசிறியின் நூல் சிங்கள பெளத்த தேசியவாதம் பற்றிய சிந்தனையை தூண்டும் ஆக்கமாகும். இது இலங்கையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

‘Imagined Communities’ (கற்பிதம் செய்யப்பட்ட சமுதாயங்கள்) என்ற நூலின் ஆசிரியரான பெனடிக்ற் அன்டர்சன் தேசியவாத வரலாறுகளை ‘உண்மையான நேர்வுகள், நாட்டார் வழக்குகள், பொய்ப்புனைவுகள் ஆகியவற்றின் வளம் மிக்க கலவை (A rich amalgam of fact, Folklore and Fiction) என்று குறிப்பிட்டார். இலங்கையின் பண்டைய காலம் பற்றிய தேசியவாத வரலாறுகளில் உண்மை நேர்வுகள் என்ற நெல்மணிகளை பொய்ப்புனைவுகள் என்ற குப்பை கூழங்களில் இருந்து பிரித்துப் பார்ப்பது மிகுந்த கடினமான பணி என்பதை தேவசிறியின் நூல் உணர்த்துகிறது.

வடக்குக் கிழக்கு தமிழர்களின் மரபுவழித் தாயகம் என்ற கருத்து கடந்த 80 ஆண்டு காலத்திற்கு முன்னர் தமிழர்களால் முன்வைக்கப்பட்டு, இப்போது வரலாற்று ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட கருத்தாக ஏற்புடைமை பெற்றுள்ளது. அதேவேளை, இலங்கையில் பரவிய பௌத்தம் தமிழர்களின் பௌத்தமாகவும், தமிழர்களால் போற்றப்பட்ட பௌத்தமாகவும் கூட இருந்து வந்தது என்றும், வட இலங்கையிலும் கிழக்கு இலங்கையிலும் ‘தமிழ்ப் பௌத்தம்’ பண்டைய நாளில் நிலைபெற்று இருந்தது என்றும் அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. தமிழ் அறிஞர்களான கா. இந்திரபாலா, பொ. இரகுபதி, ஆ. வேலுப்பிள்ளை, சி. பத்மநாதன், பரமு. புஷ்பரட்ணம், சிவா. தியாகராஜா ஆகியோர் எழுதிய நூல்களும் கட்டுரைகளும் ‘தமிழ்ப் பௌத்தம்’ பற்றிய ஆய்விற்கு வளம் சேர்த்து வருகின்றன. இப் பின்னணியில் ரஞ்சித் தேவசிறி அவர்களின் நூல் கருத்தியல்களின் பின்னால் உள்ள அரசியலை விளக்கிக் கூறுவதாக அமைகிறது.

Ranjith Thevasri

குறிப்பு : மேற்படி நூலின் ஆசிரியர் கலாநிதி. நிர்மால் ரஞ்சித் தேவசிறி கொழும்புப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறை முதுநிலை விரிவுரையாளராக இருந்தவர். தற்போது அப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.

History After the War Historical Consciousness in the Collective Sinhala Buddhist Psyche in Post war Sri Lanka. Nimal Ranjith Dewasiri (ICES Colombo July 2013).

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

11479 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)