இலங்கையில் சூழலியல் : சில அறிமுகக் குறிப்புகள்
Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கையில் சூழலியல் : சில அறிமுகக் குறிப்புகள்

February 15, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையின் கடந்த அரைநூற்றாண்டு கவனங்கொள்ளத் தவறிய முக்கியமான துறைகளில் ஒன்று சூழலியல். இன முரண்பாடும் பொருளாதாரச் சிக்கல்களும் சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியலரங்குகளை ஆக்கிரமித்து நின்றன. இப்பின்புலத்தில் நமது இயற்கையும் வளங்களும் அபிவிருத்தியின் பெயரால் கொள்ளையடிக்கப்பட்டன. விவசாய மையப் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டிருந்த நாடு சேவை மையப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தது. வளமான மண்ணும் கடலும் தந்திருக்கக் கூடிய பயன்களை வினைத்திறனுடனும் பேண்தகைமையுடனும் தக்கவைக்க நாம் தவறினோம். நாட்டின் இயற்கையை சீரழித்ததன் வழி தன்னிறைவுப் பொருளாதார மாதிரிக்கு எவ்வாறு குழிபறிக்கப்பட்டது என்பது இன்று இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்துக் கவனம் குவிப்போர் பேசத் தவறுகின்ற விடயங்களில் முக்கியமானது. 

இலங்கையின் சூழலியல் வரலாற்றை மூன்று பகுதிகளாப் பிரிக்கவியலும். முதலாவது, கொலனியாதிக்கத்துக்கு முந்தையது; இரண்டாவது போத்துகேய, டச்சு மற்றும் பிரித்தானியக் கொலனியாதிக்க காலம்; மூன்றாவது சுதந்திரத்துக்குப் பிந்தையது. இக்கட்டுரையில் கொலனியாதிக்கத்துக்கு முந்தைய கால சூழலியல் சார்ந்த ஆய்வுகள் சொல்கிற முக்கியமான செய்திகளையும் கொலனியாதிக்கம் எவ்வாறு பொருளாதார நோக்கங்களுக்காக இலங்கையின் காடுகளையும் உயிர்ப்பல்வகைமையையும் அழித்தது என்பதையும் ஆராய்கிறது. 

இலங்கையின் காடுகளின் அளவுகளை ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டால் இலங்கையில் தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு காடுகள் அழிக்கத் தொடங்கும்வரை பல்வகைமையில் காடுகள் முக்கிய பங்காற்றின. 1881 இல் 84 வீதமான பகுதி காடுகளால் சூழப்பட்டதாக இருந்தது. 1956 இல் இது 56 வீதமாகி 1996 இல் 30 வீதமாகி இப்போதைய தரவுகளின்படி இது கிட்டத்தட்ட 16 வீதமாகவுள்ளது. இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது? இது நாட்டின் சூழலியலில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன போன்ற வினாக்கள் அடிப்படையானவை.

இலங்கைத் தீவு குறிப்பிடத்தக்க உயிரியல் பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கிறது. உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் மிகவும் சிறப்பான நாடாக இலங்கை கருதப்படுகிறது. நாட்டின் சுற்றுச்சூழல், தட்பவெப்பநிலை, மண் மற்றும் நிலப்பரப்பு மாறுபாடு ஆகியன பல்வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு சாதகமான நிலைமைகளை வழங்குகிறது.  

தேசிய சிவப்புப் பட்டியலிலுள்ள பல அழிவுறும் ஆபத்திலுள்ள (endangered) உயிரினங்களும் தாவரங்களும் இலங்கையில் இருக்கின்றன. இதனால் இலங்கை உயிர்ப்பல்வகைமை அடிப்படையில் முக்கியமானது. குறித்த பட்டியலின் அடிப்படையில் இலங்கையில் 253 நில நத்தை இனங்கள், 245 வகையான பட்டாம்பூச்சிகள், 240 பறவைகள், 211 ஊர்வன, 748 முதுகெலும்புள்ள உயிரிகள், 1,492 முதுகெலும்பற்ற உயிரிகள், 336 வித்திலித் தாவரங்கள் மற்றும் 3,154 பூச்செடிகள் உள்ளன. இந்த உயிரியல் செழுமையானது இலங்கைக்கு மட்டுமன்றி உலகத்துக்கே முக்கியமானது. தற்போது, நாட்டில் இருக்கும் 3,000 பூக்கும் தாவரங்களில் கால்வாசி அழிவுறும் அபாயத்தில் இருக்கிறது. இதேபோலவே நாட்டில் உள்ள முதுகெலும்புள்ள உயிரினங்களில் 43 வீதமானவை அழிவுறும் ஆபத்தில் உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

சிறிய நாடாக இருந்தாலும், காடு முதல் விவசாயம், நீர்வாழ் மற்றும் கடல் சூழல்கள் வரையிலான பரந்த அளவிலான சுற்றுச்சூழல் அமைப்புகளை இலங்கை கொண்டிருக்கிறது. நாட்டில் இருக்கும் பல வெப்ப மண்டலங்கள் மழைக்காடுகள், மலை மேகக் காடுகள், உலர் மண்டல பருவக்காடுகள் மற்றும் வறண்ட முட்புதர்க்காடுகள் உள்ளிட்ட பல்வகைக் காடுகள் உயிர்ப்பல்வகைமைக்கு முக்கிய பங்களிக்கின்றன. இலங்கையின் கடல்வளமும் பல்வகைப்பட்ட அரிய கடலுயிரிகளின் வாழ்விடமாக உள்ளது. 

இலங்கையின் ஈரநிலங்களும் பன்முகத்தன்மை கொண்டவை. இதில் 103 பெரிய ஆறுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சதுப்பு நிலங்கள் மற்றும் ஈரநில இனங்களை உள்ளடக்கிய சுமார் 12,000 குளங்கள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக நாட்டில் செழித்தோங்கியுள்ள தனித்துவமான நீர்முகாமைத்துவ அமைப்பு, விவசாயிகளின் நடைமுறைகள் ஆகியன மாறுபட்ட சூழலியல் நிலைமைகளுக்கு ஏற்றவாறு இலங்கையை வளமான விவசாய – பல்லுயிரியலைத் தக்கவைக்கும் நாடாக மாற்றியிருக்கிறது. 

எவ்வாறாயினும், தற்போது, இலங்கையின் தனித்துவமான உயிரியல் பன்முகத்தன்மை பொதுவான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 240 பறவை இனங்களில் 27%, 66% நீர்நில வாழ் உயிரிகள், 56% பாலூட்டிகள், 49% நன்னீர் மீன் இனங்கள் மற்றும் 59% ஊர்வன ஆகியன அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, இலங்கையின் முதன்மையான சின்னங்களில் ஒன்றான யானையின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. பூக்கும் தாவரங்களைப் பொறுத்தவரை, அடையாளம் காணப்பட்ட 3,154 இனங்களில் 1,385 இனங்கள் அச்சுறுத்தலுக்கு உட்பட்டவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன, அவற்றில் அதிகப் பெரும்பான்மையானவை (594 தாவரங்கள்) இலங்கையில் மட்டுமே உள்ளன. 

நாட்டின் உயிர்ப்பல்வகைமையில் இருந்து பெறப்படும் நன்மைகள் இலங்கைப் பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்குகின்றன. உண்மையில் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளின் ஆதார சுருதியாக இந்த உயிர்ப்பல்வகைமை விளங்குகிறது. இன்று நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போதும் பொருளாதார மீட்சியில் முக்கிய பங்காற்றக்கூடிய உயிர்ப்பல்வகைமை பற்றிய கவனம் எமக்கு சிறிதளவும் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. வளமான சமூகத்திற்கு வளமான சூழலியல் நிலவ வேண்டும். சுத்தமான காற்று, சுகாதாரமான குடிநீர், சத்தான உணவு ஆகியவை அடிப்படையானவை. இம்மூன்றையும் தக்கவைக்க சூழலியல் பற்றிய கவனம் அடிப்படையானது.  

இலங்கையில் சுமார் 1.42 மில்லியன் வீட்டுத் தோட்டங்கள் உள்ளன (மொத்தம் சுமார் 76,483 ஹெக்டேர்) அவை நாட்டின் விவசாயப் பல்லுயிர் பெருக்கத்தின் இதயமாக கருதப்படுகின்றன. அவை நாடு முழுவதும் (உலர் ஈர மண்டலங்கள் இரண்டிலும்) பரந்துள்ளன. நூற்றுக்கணக்கான பயனுள்ள தாவர இனங்கள் மற்றும் அவற்றின் மரபணு வேறுபாடுகளைப் பாதுகாப்பதில் வீட்டுத் தோட்டங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதே நேரத்தில் இத்தோட்டங்கள் கிராமப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகளின் குடும்பங்களுக்கு அரிசி, கிழங்குகள், பயன்படுத்தப்படாத பழ வகைகள், நாட்டுக் காய்கறிகள், இலைக் காய்கறிகள், வாசனைத் திரவியங்கள் போன்ற சத்தான உணவுகளை சீராக வழங்குகின்றன. அத்துடன் வீட்டு வைத்தியம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருத்துவத் தாவரங்கள் இத்தோட்டங்களிலேயே வளர்க்கப்படுகின்றன. இவை ஆரம்பச் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வணிக முயற்சிகளுக்கான வாய்ப்பை வழங்குகின்றன.

இன்று நாம் வாழும் சூழலைப் பற்றிய அக்கறை குறைவான, உயிர்ப்பல்வகைமையைத் தக்கவைப்பதில் கவனம் குவிக்காத ஒரு சமூகமாக இலங்கைச் சமூகம் எப்படி மாறியது? பன்நெடுங்காலமாகவே சூழலியல் மீது அக்கறையற்ற சமூகமாகவா இலங்கையர்கள் இருந்தார்கள்? அதன் தொடர்ச்சியைத்தான் இப்போது காண்கிறோமா? அவ்வாறு இல்லை எனில் இம்மாற்றம் எப்போது, எப்படி, ஏன் நிகழ்ந்தது? இவற்றை ஒரு வரலாற்றுப்புல நோக்கில் விசாரிக்கலாம். 

பண்டைய இலங்கையில் சூழலியல்

அகழ்வாராய்ச்சி ரீதியான ஆய்வுகள் பண்டைய இலங்கையின் வாழ்வியலைப் பற்றிய ஒரு சித்திரத்தைத் தருகின்றன. அவை குறிப்பாக இரண்டு விடயங்களில் கவனம் குவிக்கின்றன. முதலாவது பண்டைய கால இலங்கையின் விவசாயம், பயிர்ச்செய்கை தொடர்பானது. இரண்டாவது நீர்முகாமைத்துவம் தொடர்பானது. 

இலங்கை பாரம்பரியமாக விவசாய நாடாகும். பண்டைய இலங்கையர்கள் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள அபிவிருத்தியில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வருடத்தில் 3-4 மாதங்கள் மட்டுமே மழை பெய்யும் நாட்டின் வறண்ட வலயத்தில், மழை நீரை நேரடியாகச் சேமித்து வைப்பதற்கும், வற்றாத ஆறுகளில் இருந்து திருப்பிவிடப்படும் நீரைச் சேமிப்பதற்கும் அவர்கள் நீர்த்தேக்கங்களை கட்டினார்கள். இதன் விளைவாக, நீர்வள நாகரிகம் அதன் விவசாயத்திற்கான நீர்ப்பாசன முறைகளை பெரிதும் சார்ந்திருந்தது. 

பண்டைய இலங்கையில் அனைத்துக் கிராம விவசாய – சுற்றுச்சூழல் வளாகங்களும் பொதுவான குணாதிசயங்களைக் கொண்டிருந்தன. அதனால் அவை பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருந்தன. ஒவ்வொரு கிராமச் சுற்றுச்சூழல் வளாகமும் நெற்பயிர்ச்செய்கை, மாற்றுப் பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம், கிராமத்துக்குரிய காடுகள், மீன்பிடித்தல் மற்றும் ஓரளவிற்கு கால்நடை வளர்ப்பு ஆகிய முக்கிய கூறுகளைக் கொண்டிருந்தன.

அந்தக் காலத்தில் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பிரதான பயிர் நெல். நெற்பயிர்ச் செய்கைக்கு இரண்டு வெவ்வேறு நீர்ப்பாசன முறைகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு வகை பயிர்ச்செய்கையானது தொட்டிப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது. செயற்கையாக கட்டப்பட்ட தொட்டிகளில் மழை நீர் சேகரிக்கப்பட்டது. மழைக்காலம் முடிந்து தண்ணீர் தேவைக்கேற்ப வயல்களுக்கு வாய்க்கால் மூலம் விநியோகிக்கப்பட்டது. சிறிய தொட்டிகள் இடையிடையே நுண்ணிய நீர்ப்பிடிப்புகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப்பட்டன. அருவியின் மேல் பகுதியில் உள்ள நெல் வயல்களில் இருந்து வரும் வடிகால் கீழே உள்ள நெல் வயலில் மறுபயன்பாட்டிற்காக கீழ்நிலை தொட்டியில் பாய்ந்தது.

நீர்ப்பாசனத்தின் மற்றொரு வடிவமானது, பெரிய ஆறுகளில் இருந்து அகழ்வாய்வுகளை தொலைதூர வயல்களுக்கு அல்லது நீர்த்தேக்கங்களைக் கட்டுவதற்கு ஏற்ற இடங்களுக்கு இழுப்பது. மிகக் குறைந்த சாய்வுகளுடன் நீண்ட கால்வாய்களை அமைப்பதற்கான திறன்கள் குறிப்பிடத்தக்கவை. இன்று அதிநவீனக் கருவிகள் மட்டுமே அதே துல்லியத்துடன் வேலை செய்ய முடியும். அந்த முறையில் கட்டப்பட்ட தொட்டிகள் மற்றும் கால்வாய்கள் விவசாயிகளுக்கு நன்மையை அளித்தது மட்டுமல்லாமல் நிலப்பரப்பின் பன்முகத்தன்மையையும் கட்டமைப்பையும் வளப்படுத்தியது. மீன்கள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் பல்வேறு இனங்கள் தொட்டிகளில் வசித்து வந்தன. விளிம்புகளில் மரங்கள் வளர்க்கப்பட்டு குளிர்ச்சியான சூழல் உருவாக்கப்பட்டது. 

இலங்கையர்கள் கால்நடைகளை வளர்த்து, எருதுகளைக் கொண்டு வயல்களை உழுதார்கள். எருமைகள் வயல்களை உழுவதற்கும், நெற் கதிரடிப்பதற்கு மட்டும் பயன்படவில்லை. அவை சமூக அமைப்பின் முக்கிய அங்கமாக அமைகின்றன. அறுவடை செய்த பிறகு, தங்கள் எருமைகள் மற்றும் பிற கால்நடைகளை வயலில் எஞ்சியிருக்கும் நெல் எச்சங்களை உண்ண அனுமதித்தனர். அதே நேரத்தில் அவற்றின் சாணம் ஒரு உரமாக செயல்பட்டது. அதுமட்டுமின்றி, எருமைக் கொட்டகைகளில் தேங்கியிருந்த சாணம் நெல் வயல்களில் அடித்துச் செல்லப்பட்டது. இரவு நேரங்களில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்களில் மாடுகளைக் கட்டி வைத்தார்கள். இதன் மூலம் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை மரங்களின் வினைத்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்பட்டன.  

இயற்கையின் பல்வேறு கூறுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் கலை, கொலனித்துவத்திற்கு முந்தைய விவசாயத்தில் மிகவும் வளர்ந்தது. வயலின் உற்பத்தித்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் சில சமயங்களில் மிகவும் எளிமையானவை. உதாரணமாக குளியல் நீர் மற்றும் பாத்திர நீர் பொதுவாக நெல் வயலுக்குச் சேகரிக்கப்படும். வயல்களின் எல்லையில் இலுப்பை மரங்கள் நடப்பட்டன. இந்த மரத்தின் பழங்களை வவ்வால்கள் உண்ணும்; அவை பழங்கள் பழுத்தவுடன் மரத்தைச் சுற்றிக் கூடுகின்றன. வவ்வால்களின் எச்சத்தில் உள்ள நைட்ரஜன் வயல்களுக்கு உரமானது.

சில நேரங்களில் பசுந்தாள் உரம், சில மரத்தாலான அல்லது மூலிகைச் செடிகளின் இலைகள் பயன்படுத்தப்பட்டன. காய்கறிகளின் இலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் தரிசு காலங்களில் கால்நடை மேய்ச்சல், மண் உற்பத்தியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. கூடுதலாக உருவாக்கப்பட்ட வேளாண் சுற்றுச்சூழல் அமைப்பு பாம்புகள், சிறிய பாலூட்டிகள் மற்றும் மீன்கள் போன்ற வளமான விலங்கினங்களைப் பராமரித்தது. இது உயிரியல் நிலைத்தன்மைக்கு கணிசமாகப் பங்களித்தது.

பல விவசாயிகளுக்கு நெல் வயல்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அரை வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. மேலும் அரிசிப் பற்றாக்குறையை ஈடுகட்ட, சேனைப் பயிர்ச்செய்கை மூலம் உலர் தானியப் பயிர்ச்செய்கை பரவலாக மேற்கொள்ளப்பட்டது. இந்த முறையின் கீழ் காய்கறிகள், பயறு வகைத் தாவரங்கள் மற்றும் பல்வேறு வகையான தானியங்கள் பயிரிடப்பட்டன. திட்டமிடப்பட்ட சுழற்சி முறையில் சேனைப் பயிர்ச்செய்கை செய்யப்பட்டது. சிறிய புதர்கள் மற்றும் மரங்களை நிலத்திலிருந்து அகற்றிய பிறகு, அது எரிக்கத் தயாராக இருந்தது. இந்த நேரத்தில் மக்கள் வேட்டையாடச் சென்று பழங்களையும் தேனையும் சேகரித்தனர். 

விதைப்பதற்கான விதைகள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டன: மக்காச்சோளம், தினை, பச்சைப்பயறு, மிளகாய், மிளகு, பாக்கு, பூசணி, மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி ஆகியன இவற்றில் சில. அதன் பிறகு சிறிய குடிசைகள் கட்டப்பட்டன. பகல் நேரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கண்காணித்தனர். இரவு நேரங்களில் ஆண்கள் குடிசைகளில் தங்கினர். இந்தக் காலம் மிகவும் உழைப்பு மிகுந்ததாக இருந்தது.

மண்ணின் உற்பத்தித்திறன் வேகமாகக் குறைந்து, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பகுதியை விட்டு, வேறு இடத்தில் புதிய காடு எரிக்கப்படுகிறது. காடு மீண்டும் வளர்ச்சியடையலாம். மேலும் நிலத்தின் இருப்பைப் பொறுத்து விவசாயி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே நிலத்தில் பயிரிடுவார். மனித மக்கள்தொகை பெருகவில்லை; மற்றும் வன இருப்பு போதுமானதாக இருந்தால் மட்டுமே அவர் அதைச் செய்வார். பயிர்ச்செய்கையின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. சூழலியல் நம்பகத்தன்மைக்கு காட்டின் அளவு மற்றும் சுழற்சிக் காலங்களும் முக்கியமானவை. பயிர்ச்செய்கை முறைகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை வெவ்வேறு தரவுகள் காட்டுகின்றன. 5 முதல் 25 ஏக்கர் வரையில் சேனைப் பயிர்ச்செய்கைக்கான நிலத்தின் விரிவாக்கங்கள் மற்றும் தரிசு காலங்களை (6 முதல் 15 ஆண்டுகள் வரை சுழற்சிக் காலங்களை) விவரிக்கும் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. 

பண்டைய இலங்கையர்களுக்கு நெற்பயிர்ச்செய்கை என்பது வாழ்க்கைத் தொழில்; தோட்டப் பயிர்ச்செய்கை என்பது வளமான இயற்கையின் நல்ல விஷயங்களைப் பெறுவது. குடும்பங்களுக்கு அன்றாடத் தேவைகள் பலவற்றையும் வீட்டுத்தோட்டம் வழங்குகிறது. பல நூற்றாண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வற்றாத மரங்கள் கிராமவாசிகளின் வாழ்க்கையில் பல நன்மைகளுடன் சேர்ந்தன. தனி வீடுகள் கட்டப்பட்ட சிறிய வளாகத்தைச் சுற்றி மரங்கள் வளர்க்கப்பட்டன. பெரும்பாலான இனங்கள் காட்டு இனப்பெருக்கம் மூலம் முளைக்கின்றன; அவை விவசாயிகளால் நடப்படுவதில்லை. நெல் வயல்கள் மற்றும் சேனைப் பயிர்ச்செய்கைக்குத் தீவிர உழைப்பு தேவைப்படுவதால், வீட்டுத்தோட்டம் தானே வளர வேண்டும். இருப்பினும், அமைப்பை வடிவமைக்க ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மர இனங்கள் இதற்குள் இணைக்கப்பட்ட விதம் தோட்டங்களுக்குத் தோட்டம் வேறுபட்டது. 

தாவரங்களின் பன்முகத்தன்மை கொண்ட வெப்பமண்டலப் பகுதிகள் இந்த வீட்டுத் தோட்ட அமைப்புகளை நிறுவுவதற்கு சாதகமானதாக இருந்தது. இதை ‘சோம்பேறி விவசாயம்’ என்று நகைச்சுவையாக அழைத்தார்கள். நீங்கள் ஒரு விதையை துப்பினால், பெரும்பாலும் ஒரு மரம் வளரும். தோட்டத்தை பராமரிக்க அதிக உழைப்பு தேவையில்லை என்றாலும், பல்வேறு தாவரப் பயன்பாடுகள் மற்றும் தேவைகள் பற்றிய போதிய அறிவு அவசியம். இவ்வறிவு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டது. 

மலையுச்சிகளும் மத்திய மலைப்பகுதிகளும் அடர்ந்த காடுகளாக இருந்தன. பாசனத்தின் மீதான தாக்கம் காரணமாக, காடுகள் உற்பத்தி செய்யாத நிலமாக கருதப்படாமல் நீர் மற்றும் வளத்திற்கான ஆதாரமாக கருதப்பட்டது. இக்காடுகளில் இருந்து மருந்துகள், எரிபொருள் மற்றும் சிறு வனப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. உலர் வலயத்தின் மக்கள் செறிவான பகுதிகளில், அக்கிராமங்களுக்கு அருகிலுள்ள காடுகள் அவ்வாறே பேணப்பட்டன. பண்டைய காலத்தில் ஈர மண்டலத்தின் மழைக்காடுகள் பெரும்பாலும் தீண்டப்படாமல் இருந்தன. 

பண்டைய நீர்வள நாகரிகத்தின் சரிவு 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இந்தியப் படையெடுப்புகள், மலேரியா மற்றும் உள்நாட்டு அரசியல் சிக்கல்கள் ஆகியன இணைந்து மேம்பட்ட விவசாய அமைப்பை அழித்தது. அன்றிலிருந்து பாரம்பரிய முறையான கிராமங்கள், குளங்கள் மற்றும் விவசாய நிலங்களை மீண்டும் நிறுவ முடியவில்லை.  

கொலனித்துவத்திற்கு முந்தைய விவசாயம் மூன்று முக்கிய கூறுகளைக் கொண்டிருந்தது. முதலாவது முக்கிய கூறு விவசாயத்தின் பன்முகத்தன்மை. ஆண்டு முழுவதும் நிலையான உற்பத்தித்திறனை உத்தரவாதம் செய்யும் கூறுகளுக்கிடையேயான பல்வேறு தொடர்புகள் இருந்தன. இயற்கையான தாவரங்கள் பயிரிடப்பட்ட பகுதியாக மாற்றியமைக்கப்பட்டது. இது இன்னும் அதிக பன்முகத்தன்மை கொண்ட இனங்கள் மற்றும் வாழ்க்கை வடிவங்களை பராமரிக்கிறது. குடும்பத்தால் பயன்படுத்தப்படும் தாவர இனங்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தன. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பல்வேறு தொடர்புகள் பாரம்பரிய அறிவின் ஆழமான அமைப்பாக வளர்ந்தன. உற்பத்தி அமைப்புகளின் பன்முகத்தன்மை, நிலைத்தன்மை மற்றும் குறைந்தபட்ச ஆபத்தையே விளைவிப்பதை உறுதிப்படுத்துவது என்பவை முக்கியமான அம்சங்களாகின. நெல் அறுவடை தோல்வியடையும் போது மாற்றுப் பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்டம் மூலம் அது ஈடுசெய்யப்படும். பயிர்களின் பன்முகத்தன்மை அமைப்பு பூச்சிகளின் பாதிப்பையும் நோய்த்தொற்றைக் குறைக்கிறது. சுழற்சிச் செயல்முறைகள் பல பயன்பாடுகளை சாத்தியமாக்குகின்றன. பலவிதமான சூழலியல் சார்புநிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 

இரண்டாவது கூறு, விவசாயத்தின் மீள்தன்மையும் நிலைத்தன்மையும். உயிரினங்களின் பன்முகத்தன்மை, கட்டமைப்பின் மாறுபாடு மற்றும் கூறுகளுக்கிடையேயான ஆற்றல்மிக்க தொடர்புகள் ஆகியவை மீள்தன்மையுடைய விவசாய – சுற்றுச்சூழல் அமைப்பில் விளைகின்றன. வறட்சி மற்றும் புயல் போன்ற வெளிப்புற அச்சுறுத்தல்களைத் தாங்கும் திறன் அதிகரிக்கிறது. வெப்பமண்டல சூழலுக்கு உணர்திறன் தழுவல், மண் வளத்தை பராமரிக்கிறது. அமைப்பின் பல்வேறு கூறுகளை பலமுறை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆபத்து மற்றும் நிலையான உற்பத்தி கிடைக்கும். பல்வேறு உற்பத்தி முறைகள் பூச்சிகள் மற்றும் நோய்களால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கின்றன. 

மூன்றாவது கூறு, சமூகத்தின் சுற்றுச்சூழல் நெறிமுறைகளாகும். விவசாய நடைமுறைகள் கிராம மக்களிடையே வலுவான ஒற்றுமையைக் கோரின. அனைத்துக் குடும்பங்களின் தலைவர்களைக் கொண்ட கிராம அமைப்பு ஒவ்வொரு கிராமத்திலும் இருந்தது. நீர் மற்றும் நில விநியோகம், சமூகப் பணிகள் மற்றும் விவசாய நாட்காட்டி ஆகியன அவ்வமைப்பாலேயே முடிவாகின. உழைப்பு பகிர்வால் மட்டுமே நெல் பயிர்ச்செய்கை செய்ய முடியும். எனவே பயிர்ச்செய்கைகையை வலுவான சமூக உறவுகளிலிருந்து பிரிக்க முடியாது. கிராம சமூகத்தில் அகிம்சை அல்லது உயிரைப் பறிக்காதிருத்தல் மனிதனுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே சுரண்டாத உறவை ஊக்குவித்தது. மனிதர்கள் மற்றும் பிற வாழ்க்கை வடிவங்களை வளர்க்கும் ஒரு விவசாய முறையை நிறுவுவது போற்றத்தக்க ஒரு பண்பாட்டுச் செயன்முறையாக இருந்தது.  

இவ்விடத்தில் பண்டைய விவசாய முறைகள் குறித்து அகழாய்வுக் குறிப்புகள் என்ன சொல்கின்றன என்பதை நோக்குவது முக்கியமானது. பல சுற்றுச்சூழல் மற்றும் சமூக – கலாச்சார குணாதிசயங்களை இந்திய தீபகற்பத்துடன் பகிர்ந்து கொண்டாலும், பல வழிகளில், இந்திய தீபகற்பத்தில் இருந்து பிரிந்து செல்லும் தொல்பொருள் மற்றும் வரலாற்றுப் பாதையை இலங்கை கொண்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதியாக இலங்கையானது பல்வேறு காலகட்டங்களிலும், இந்தியப் பெருங்கடலின் பரந்த கடல்சார் வர்த்தக வலையமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடனான வர்த்தகத்திற்கான நுழைவாயிலாக இலங்கை செயல்பட்டுள்ளதோடு கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் உலகங்களுடன் தொடர்பையும் கொண்டுள்ளது. தொல்பொருள் சான்றுகள் கிமு முதலாம் நூற்றாண்டில் இருந்து கடல் வர்த்தகம் அதிகரித்துள்ளமையைக் காட்டுகின்றன. இதே காலப்பகுதியில் நகர்ப்புற குடியேற்றங்கள், உள்நாட்டு வர்த்தக வலையமைப்புகள் தோன்றின. இலங்கையின் விவசாய, வாழ்வாதார, சுற்றுச்சூழல் தொடர்பில் மிகக்குறைவான அகழ்வாராய்ச்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது பண்டைய இலங்கையின் சுற்றுச்சூழல் சூழல் மற்றும் வாழ்வாதார உத்திகள் ஆகியவிரண்டையும் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாமைக்குக் காரணமாகியுள்ளன. 

இப்பின்புலத்தில் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வை நோக்குவது பொருத்தம். இரண்டு ஆரம்பகால வரலாற்றுத் தளங்களான கிரிந்த மற்றும் கந்தரோடையின் சமீபத்திய அகழ்வாராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட தொல்பொருள் விதைகள் மற்றும் வரலாற்றுக்கு முந்தைய தாவரப் பயன்பாடும் வளர்ப்பும் (phytolith assemblages) ஆகிய இரண்டையும் சுற்றுச்சூழல் அணுகுமுறையைப் பின்பற்றி ஆய்வு செய்வதன் மூலம் சில முக்கிய விடயங்களைத் தெளிவாக்கலாம். 

இந்த ஆய்வானது, ஆரம்பகால வரலாற்றுக் காலத்தில் இலங்கையின் விவசாய மற்றும் சூழலியல் கடந்த காலத்தைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகிறது. கந்தரோடை, பிற ஆரம்பகால இலங்கை நகர மையங்களுக்கு இணையான பொருளாதார மற்றும் நகரமயமாக்கப்பட்ட வளர்ச்சியைக் கொண்டுள்ளது. கந்தரோடையின் பைட்டோலித் சான்றுகள் தினை மற்றும் நெற்பயிர்கள் பதப்படுத்தப்பட்டிருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இங்கு இவை உற்பத்தி செய்யப்பட்டது மட்டுமன்றி பிற தேவைகளுக்காகப் பதப்படுத்தப்பட்டும் உள்ளன. இச்சான்றுகள் கந்தரோடையில் பாசன அரிசி இருந்ததாகக் கூறுகிறது. அதேசமயம், கிரிந்தவில் நெல் பதப்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. கிரிந்தவில் மானாவாரியில் பயிர்ச்செய்கை இடம்பெற்றிருக்கலாம் என்றும் இவ்வாய்வு கூறுகிறது. இலங்கையின் ஆரம்பகால வரலாற்றுக் காலத்தில், கிரிந்த மற்றும் கந்தரோடை ஆகிய இரண்டிலும் அரிசி, தினைகள் மற்றும் பலவகையிலான பருப்பு வகைகள் பயிரிடப்பட்டதைக் காணமுடிகிறது என்று இவ்வாய்வு சொல்கிறது. 

கொலனிய இலங்கையில் சூழலியல்

14 ஆம் நூற்றாண்டில் உலர் வலயத்தின் கடைசித் தலைநகரான பொலனறுவையின் சிதைவு, அதன் பின்னர் ஒருபோதும் மீளமைக்கப்படாத நீர்ப்பாசன முறையின் சிதைவாகியது. நீர்ப்பாசனத்தை அடிப்படையாகக் கொண்ட பிற நாகரிகங்களும் இதே காலகட்டத்தில் சரிந்தன என்பது வியக்கத்தக்கது. கம்போடியா, வடக்கு-தாய்லாந்து மற்றும் போர்னியோவில் உள்ள பாகன் ஆகியவை சில உதாரணங்களாகும். அந்த நாடுகளில் அதே காலப்பகுதியில் ஏற்பட்ட மலேரியாவின் பரவல் ஒரு இணையான நிகழ்வாகும். இது நீர்ப்பாசன முறைகளின் அலட்சியத்தால் மோசமாகியது. இந்த பண்டைய கலாசாரங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஒரு சிக்கலான செயல்முறையாகும். 

பாரம்பரிய மற்றும் மிகவும் வளர்ந்த விவசாய முறை ஏற்கனவே சிதைந்த பின்னரே கொலனியாதிக்கம் இலங்கையில் தங்கள் செல்வாக்கை செலுத்தியது என்பதை குறித்துக் கொள்வது முக்கியமானது. நாட்டின் தென்மேற்கு மற்றும் மலைப்பகுதிகளை நோக்கிய நகர்வானது அரசியல் உறுதியற்ற தன்மையையும் பொருளாதார மாற்றத்தையும் கொண்டு வந்தது. விவசாய நடவடிக்கைகளில் சரிவு ஏற்பட்டது. புதிய பொருளாதார திசைகளுக்கான வாய்ப்புகள் உருவாகின. 

உதாரணமாக, சிலுவைப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் வாசனைத் திரவியங்களுக்கான தேவை அதிகரித்ததால், தென்மேற்கு கடற்பகுதியில் உள்ள காடுகளில் செழிப்பாக வளர்ந்த கறுவா, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு முக்கிய பொருளாக மாறியது. வர்த்தகத்தின் முக்கியத்துவத்தின் ஒரு குறிப்பிடத்தக்க விளைவு வெளிநாட்டு வர்த்தகமும் பணப் பயன்பாட்டின் அதிகரிப்புமாகும். வெளிநாட்டு வர்த்தகம் முக்கியத்துவம் பெற்றதால், அரேபியர்கள் கடலோரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் குடியேறினர்.

1505 இல் போர்த்துகேயர்கள் தற்செயலாக இலங்கையின் மேற்கு கடற்கரையை அடைந்தனர். விரைவில் அவர்கள் கறுவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இலங்கையின் திறனை உணர்ந்தனர். அவர்களின் முக்கிய ஆர்வம் பிராந்தியத்தை வெற்றி கொள்வதல்ல, மாறாக வணிகத்தின் கட்டுப்பாடும் ஏகபோகமுமே. குறிப்பாக கறுவா வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்ற முயன்றனர். இது ஏற்றுமதியை பெருமளவில் கட்டுப்படுத்திய அராபிய வர்த்தகர்களுடனான மோதலைத் தூண்டியது. ஆனால் அவர்களின் கடல்வழி ஆற்றல் மற்றும் அவர்களின் தொழில்நுட்ப மேன்மை காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் போர்த்துகீசிய தலையீடு மற்றும் அரசியல் பங்கேற்பு ஆகியன நிரந்தர அம்சங்களாகின. இந்தச் செல்வாக்கு தென்னிலங்கையில் மட்டுமின்றி யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பரவியது. இதற்கு முத்துக்குளித்தல் முக்கிய காரணமாகும். 

coffee plantation

டச்சுக்காரரின் வருகையை அடுத்து 1722 இல் தோட்டப் பயிராக கோப்பி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் உற்பத்தி, ஆரம்பத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. கறுவாவின் முதல் தோட்டங்கள் 1769 இல் நிறுவப்பட்டன. 1771 வாக்கில் அவை பொருளாதார ரீதியாக வேலை செய்வதாகத் தோன்றியது. இதன் விளைவாக கரையோரத்தில் ஏனைய தோட்டங்கள் நிறுவப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட கறுவாவின் உலகளாவிய விநியோகம் தொடங்கியது. கோப்பி, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவை மக்களின் முக்கிய வருமானம் தரும் பயிர்களாக மாறின. டச்சு ஆட்சியின் ஆரம்ப கட்டத்தில், இயற்கை விவசாயம் மற்றும் நெற்பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அந்த நோக்கத்திற்காக நீர்ப்பாசன முறையின் மறுசீரமைப்பு அவசியமாக இருந்தது. ஆனால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனால் அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஏற்றுமதிக்கான பொருட்களை விரைவாக போக்குவரத்துச் செய்வதற்காக ஒல்லாந்தர் கால்வாய்களை அமைத்தார்கள். உண்மையில் கால்வாய் கட்டுமானத்தில் டச்சுக்காரர்களின் கணிசமான சாதனை நீர்ப்பாசனத்தில் அவர்களின் பணியை முற்றிலுமாக மறைத்தது. மேலும் இந்த கால்வாய்கள் தீவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும். ஆனால் இவை ஏற்படுத்திய சூழலியல் பாதிப்பு பெரிது. 

1850-1870 இற்கு இடையில் ஐரோப்பாவில் கோப்பிக்கான கேள்வி அதிகரித்தது. இதற்காக இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை அதிகரித்தது. காடுகள் அழிக்கப்பட்டு, தரிசுநிலங்கள் பதப்படுத்தப்பட்டு எல்லா இடங்களிலும் கோப்பி பயிரிடப்பட்டது. இந்த ‘கோப்பி வெறி’ திடீரென முடிவுக்கு வந்தது. ஒரு பூஞ்சையின் காரணமாக முழு உற்பத்தியும் சரிந்தது. ஏக்கர் கணக்கில் நோயுற்ற கோப்பி மரங்கள், காடுகள் அழிக்கப்பட்ட மலைகள், பண்டைய விவசாயத்தில் இருந்து திசை திருப்பப்பட்ட விவசாயிகள் ஆகியன எஞ்சின. இவை ஏற்படுத்திய சூழலியல் தாக்கம் மிகப்பெரியது. 

tea workers

1881 இல் கோப்பிக்கு பதிலாக தேயிலை அறிமுகப்படுத்தபட்டது. தேயிலைக்கு அதிக உழைப்பும் மூலதனமும் தேவைப்பட்டது. தேயிலையை உயரமான பகுதிகளில் பயிரிட வேண்டி இருந்தது. மிகவிரைவில் முந்தைய சேனைப் பயிர்ச்செய்கைப் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. தோட்டப் பகுதிகள் உயரமான பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன. மேலும் நீண்ட காலமாக தீண்டப்படாமல் இருந்த காடுகள் தோட்ட நிலங்களாக மாற்றப்பட்டன. தேயிலைச் செடியின் தட்பவெப்பத் தேவைகள் காரணமாக தென்மேற்கு சமவெளி மற்றும் மத்திய மலைப்பகுதிகளில் தேயிலை பயிரிடப்பட்டது. 

இக்காலப்பகுதியில் தென்னைப் பயிர்ச்செய்கையும் பரவலானது. தென்னந்தோப்புகள் சிறு உடமையாளர்களின் உள்ளூர் நிறுவனங்களாகவே இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இறப்பர் அறிமுகப்படுத்தப்பட்டது. இறப்பர் உற்பத்திக்கு கோப்பி அல்லது தேயிலை பயிரப்பட்ட நிலங்களை விட உயரம் குறைந்த நிலங்களே தேவைப்பட்டன. அந்நிலங்கள் தென்னை பயிர்செய்யும் நிலங்களை விட உயரமானவையாகவும் இருக்க வேண்டியிருந்தது. 

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் நிலப்பரப்பின் பொதுவான அம்சங்கள் முற்றிலும் மாறிவிட்டன. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் வரையிலும் தென்னந்தோப்புகளும், 800 மீட்டர் வரையிலான பகுதிகளில் இறப்பரும் பயிரிடப்பட்டன. தேயிலை 300 மீட்டர் முதல் 2200 மீட்டர் வரையிலான உயரத்தைக் கொண்ட பகுதிகளில் பயிரிடப்பட்டன. மலை உச்சிகளும் மலைப் பகுதிகளும் வனத் தோட்டங்களாக மாற்றப்பட்டன. இது மரம் மற்றும் எரிபொருள் தேவையை ஈடுசெய்யும் பொருட்டு 1890 இல் தொடங்கப்பட்டது. அதற்காக வேகமாக வளரும் மரங்களான யூகலிப்டஸ், பைன்ஸ் மற்றும் அகாசியாஸ் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. மொத்தத்தில் மலைநாட்டின் சூழலியலும் உயிர்ப்பல்வகைமையும் காவுகொடுக்கப்பட்டது. 

workers

மத்திய மலைநாட்டின் இயற்கையான வனப்பரப்பு விரைவாகவும் என்றென்றைக்குமானதாகக் குறைந்தது. இது காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மழை குறைந்து ஓடைகள் வறண்டுவிட்டன. மலைக்காடுகளில் முன்னர் காணப்பட்ட யானைகளின் பெரிய கூட்டங்கள் படுகொலை செய்யப்பட்டு காணாமல் போயின. பல காட்டுத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் விரைவான இழப்பு தொடர்ந்தது. பாரம்பரிய விவசாயம் புறக்கணிக்கப்பட்டு, அரிசியை அதிக அளவில் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. மலைப்பகுதிகளில் இருந்த பெரிய நிலப்பகுதிகள், மேல் மண்ணை இழக்கத் தொடங்கின. இதனால் வளமற்றவையாகி, தீயால் நிர்வகிக்கப்படும் புல் நிலங்களாக மாறத் தொடங்கின. கொலனித்துவ காலத்தின் முடிவில் நிலச் சீரழிவுகளின் படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்பட்டன. மேலும் நிலப்பரப்புகள், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மையின் சில கூறுகளையாவது தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அழிக்கப்பட்ட உயிர்ப்பல்வகைமையைத் மீட்டெடுக்க முடியவில்லை. 

குறிப்பாக தேயிலைப் பயிர்ச்செய்கையால் பாதிக்கப்பட்டது இலங்கையின் மழைக்காடுகளே. 1881 இல் இலங்கையில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட போது 84 வீதமான பகுதி அடர் காடுகளாக இருந்தது. 20 ஆண்டுகளில் இது 70 வீதமாகக் குறைவடைந்தது. இக்காலப்பகுதியில் அழிக்கப்பட்ட காடுகளில் பெரும்பான்மையானவை மழைக்காடுகளே. 

இலங்கையில் மழைக்காடுகளின் வாழ்விட இழப்பு இந்நாட்டின் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதன் தனித்துவமான புவியியல் இருப்பிடம் மற்றும் வளமான பல்லுயிர்த்தன்மையுடன், இலங்கையின் மழைக்காடுகள் 3,000 இற்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களுக்கு தாயகமாக உள்ளன. ஏராளமான உள்ளூர் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் வாழ்விடமாக இவை உள்ளன. ஆபத்தான காடழிப்பு இந்த விலைமதிப்பற்ற உயிரினங்களுக்கும் அவற்றின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. ஆபத்தில் உள்ள உயிரினமாகக் கருதப்படும் ‘இலங்கை சிறுத்தை’, பரவலாக மழைக்காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் வாழ்விட இழப்பு காரணமாக பாதிப்புக்குள்ளாகிறது. அதேபோல ஊதா நிற முகம் கொண்ட லாங்கூர், பாதிக்கப்படக்கூடிய மற்றொரு உயிரினம். இவை இரண்டும் இலங்கையின் மழைக்காடுகளில் பிரத்தியேகமாக காணப்படுகின்றன. மழைக்காடுகளின் அழிவு பிரித்தானியக் கொலனியாதிக்க காலத்திலேயே தொடங்கியது. 

நிறைவுக் குறிப்புகள்  

இலங்கையின் சூழலியல் வரலாறு சில முக்கியமான செய்திகளை எமக்குச் சொல்கிறது. பண்டைய இலங்கையின் வாழ்வியலானது இயற்கையோடு இயைந்ததாக இருந்தது. அது விவசாயத்தை மையமாகக் கொண்டிருந்தது. மிகை உற்பத்தியோ அதீத பேராசையோ அற்றதாக இருந்தது. இயற்கையின் மீது கரிசனையுடையதாக இருந்தது. பேண்தகைமை விவசாயத்தினதும் வாழ்வியலியனதும் மையமாக இருந்தது. கொலனியாதிக்கத்தின் வருகை இலங்கையின் இயற்கையில் மட்டுமன்றி உற்பத்தி உறவுகளிலும் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியது. இது இயற்கையின் மீதான கவனத்திலும் பார்க்க பொருளாதார நலன் சார் அபிவிருத்தியிலேயே கவனம் குவித்தது. 

பிரித்தானியக் கொலனியாதிக்கச் செயற்பாடுகள் ‘அபிவிருத்தி’ என்ற சட்டகத்துக்குள் முன்னேற்றமாகக் கருதப்பட்டன. அவை சீரழித்த இயற்கை பற்றியோ அல்லது உயிர்ப்பல்வகைமையின் இழப்பு பற்றியோ எதுவித கவனமும் கொள்ளப்படவில்லை. இது ஆச்சரியமானதல்ல. ஏனெனில் கொலனியாதிக்கச் சிந்தனைகள் இவ்வாறுதான் மூன்றாமுலக நாடுகளின் வளர்ச்சியை அடையாளங் காண்கின்றன. இலங்கையும் இதற்கு விதிவிலக்காகவில்லை. துன்பம் யாதெனில் கொலனியாதிக்க காலத்தில் இழந்த இயற்கையையும் உயிர்ப்பல்வகைமையையும் மீட்கப் போதுமான நடவடிக்கைகள் கொலனியாதிக்கத்துக்குப் பிந்தைய இலங்கை எடுக்கவில்லை. இலங்கைக்கு கிடைத்த சுதந்திரம் நாட்டின் இயற்கைக்கோ சூழலியலுக்கு கிடைத்த சுதந்திரமாக இருக்கவில்லை. 

உசாத்துணை

  1. https://news.mongabay.com/2023/01/updated-red-list-raises-red-flags-for-sri-lankas-birds-especially
  2.  https://www.nationalredlist.org/
  3. http://www.neic.cea.lk/assets/img/The%20National%20Red%20List%202020-The%20Conservation%20Status%20of%20the%20Flora%20of%20Sri%20Lanka.pdf 
  4. https://lk.chm-cbd.net/ecosystems/inland-wetlands
  5. https://news.mongabay.com/2022/06/report-sums-up-wealth-of-sri-lankas-biodiversity-and-the-threats-it-faces/
  6. Palm, O. (1988) Traditional Lowland Rice Agriculture in Sri Lanka: Nitrogen Cycling and Options for Biofertilizers. Linköping Studies in Arts and Science.
  7. Ryan, B. (1958) Sinhalese Village. Florida: University of Miami Press.
  8. Hausherr, K. (1971) Landscape ecological research on the island Ceylon. Germany: Wiesbaden Steiner.
  9. Murphy et al. (2018) Early agriculture in Sri Lanka: New Archaeobotanical analyses and radiocarbon dates from the early historic sites of Kirinda and Kantharodai. Archaeological Research in Asia. 16: 88-102.
  10. Marby, H. (1972) Tea in Ceylon: An Attempt at a Regional and Temporal Differentiation of the Tea growing Areas in Ceylon. Gernamy: Wiesbaden Steiner.
  11. Webb, J. L.A. (2002) Tropical Pioneers: Human Agency and Ecological Change in the Highlands of Sri Lanka. 1800-1900. Athens: Ohio University Press.
  12. https://waronwant.org/news-analysis/tea-trade-trouble-sri-lankas-crucial-rainforests
  13. https://groundviews.org/2023/08/01/saving-the-leopard-from-slipping-into-extinction/
  14. https://neprimateconservancy.org/purple-faced-langur/https://www.dilmahconservation.org/about-animals/mammals–f9925cffabdd604dfab150bbcb49f2a8/purple-facedlangur–4d3d8e2f9ff0f0b28e8715756f4da56f.html

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

15574 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)