வடக்குப் பிராந்தியத்தின் புவியியல் அமைவிடம் அதன் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றது. அந்த வகையில் பின்வரும் காரணிகள் வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன.
1. தீபகற்ப தோற்றப்பாடு : வடக்குப் பகுதி மூன்று பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் அரபிக் கடல் உள்ளது. வடக்கு எல்லை பாக்கு ஜலசந்தி, கிழக்கு எல்லை வங்காள விரிகுடாவாக உள்ளது. வடக்கு மாகாணத்தின் தீபகற்ப நிலவமைப்பு காரணமாக வடக்கு பிராந்தியத்தின் வளி வெப்பநிலை, கடல் நீரின் அருகாமையால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை காற்றின் திசைகள் மற்றும் வேகத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக நிலம் மற்றும் கடல் காற்று, அதிகூடிய-அதி குறைந்தபட்ச வெப்பநிலை, வெப்பவீச்சு மற்றும் வெப்பநிலையின் இடஞ்சார்ந்த மாறுபாடு, மழையின் பருவகால மற்றும் இடஞ்சார்ந்த முறைகள் கூடுதலாக தாக்கத்தை செலுத்துகின்றன. இரண்டாவது இடைப்பருவ கால மழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றின் போது, வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பில் நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் வளிமண்டல அமுக்க வேறுபாடு காரணமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடக்கு மாகாணம் கன மழையைப் பெறுகின்றது.
2. அகலக்கோடு மற்றும் நெடுங்கோடு : வடக்கு மாகணம், 5°54´ மற்றும் 9° 52´ இற்கு இடைப்பட்ட அகலக் கோட்டிலும் 79°39´ மற்றும் 81° 53´ கிழக்கு நெட்டாங்குக்கும் இடைப்பட்ட அயனப்பகுதியில் அமைவு பெற்றுள்ளதால் ஆண்டு முழுவதும் உயர்வான வெப்பநிலையையும் பருவ ரீதியான மழைவீழ்ச்சியையும் பெறுகிறது.
3. உள்ளக நீர்நிலைகள் மற்றும் கடநீரேரிகள் : வடக்கு பிராந்தியத்தில் உள்ள 54 பெரிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்கள் கிட்டத்தட்ட 2,39,176 ஏக்கர் அடி நீர் இருப்பு கொள்ளளவை ஆண்டின் 4 மாதங்களுக்கு மேல் கொண்டுள்ளது. வட மாகாணத்தில் 20 ஆற்றுப் படுகைகள் உள்ளன. இப்பகுதியில் 2,066 சிறு குளங்களும் உள்ளன. வடக்கு பிராந்தியம் ஐந்து கடநீரேரிகளைக் கொண்டுள்ளது. இந்த உள் நீர்நிலைகள் மற்றும் கடநீரேரிகள் மாகாணத்தின் காலநிலையை, குறிப்பாக உள்ளூர் வெப்பநிலைக் கட்டுப்பாட்டை பாதிக்கின்றன. இந்த நீர்நிலைகள், சம்பந்தப்பட்ட பகுதிகளின் ஈரப்பத விகிதத்தையும் பாதிக்கிறது.
4. சூரியனின் நிலை மற்றும் அதன் கதிர்களின் அளவு மாறுபாடு : பூமியின் சுற்றுப்பாதைகள் மற்றும் அதன் மாறும் நிலைகளும் வடக்கு பிராந்தியத்தின் காலநிலையைப் பாதிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் வடக்குப் பகுதியில் சூரியன் இரண்டு முறை செங்குத்தாக உச்சம் கொடுக்கின்றது. ஏப்ரல் மாதத்தின் 16-18 இற்கு இடையிலும் மற்றும் ஒக்டோபர் மாதத்தின் 12-14 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியிலும் இது நிகழும். இக்காலப்பகுதிகளில் வடமாகாணத்தில் சூரியனின் 90 பாகை கோண நிலை காரணமாக, அது அதிக வெப்பநிலையை அனுபவிக்கிறது. மன்னார் மாவட்டத்தில் சராசரியாக 34 பாகை செல்சியஸ்க்கு மேலாக வெப்பநிலை பதிவாகுகின்றது.
5. பருவமழைச் சுழற்சிகளின் தாக்கம் : இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தின் காலநிலையை பருவமழைச் சுழற்சி பாதிக்கிறது. இலங்கையின் வடக்குப் பகுதி வடகிழக்கு பருவக்காற்றுப் பாதையில் அமைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வங்காள விரிகுடாவில் இருந்து அதிக ஈரப்பதத்துடன் வீசுகிறது; குளிரான காலநிலையை உருவாக்குகிறது. மேலும் வடகிழக்கு பருவமழை காலங்கள், குறிப்பாக டிசம்பர் – ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், அதிகபட்ச மழைப்பொழிவிற்கு வழிவகுக்கிறது. மேலும், வடக்குப் பகுதி தென்மேற்குப் பருவக்காற்றுப் பாதைக்கு எதிர்திசையில் அமைந்துள்ளது. இதன் விளைவாக, தென்மேற்கு பருவக்காற்றுக் காலத்தில், இலங்கையின் மத்திய மற்றும் வடமத்திய பகுதிகளின் பரந்த நிலப்பரப்பில் காற்று பயணிப்பதால், வடக்கு மாகாணத்தின் மீது சிறிது வறண்ட காற்று வீசுகிறது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழைக் காலப்பகுதியில் வடக்கு மாகாணம் மிகக் குறைவான மழையைப் பெறுகின்றது. எவ்வாறாயினும், தென்மேற்கு பருவமழையின் போது, அரபிக்கடலில் பருவமழை கிடைப்பதால் மன்னார் மாவட்டத்தில் 50 மி.மீ. இற்கும் குறைவான மழைவீழ்ச்சி கிடைக்கும்.
6. அயனமண்டல குழப்பங்கள் : அயனமண்டல குழப்பங்கள் வடக்கு பிராந்தியத்தின் காலநிலையையும் பாதிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளின் பாதையின் குறுக்கே வடக்கு மாகாணம் அமைந்துள்ளது. தம்பையாப்பிள்ளையின் கூற்றுப்படி, 1860 முதல் 1960 வரை, 124 சூறாவளிகள் இலங்கை முழுவதும் கடந்து சென்றன (Alahakoon & Edirisinghe, 2021b). இதனால் இலங்கையின் வடக்குப் பகுதியானது இரண்டாவது இடைப் பருவ மழைக்காலம் மற்றும் வடகிழக்கு பருவக்காற்றுப் பருவங்களில் அதிக மழையைப் பெறுகிறது. இது வடக்கு மாகாணத்தின் காற்றின் திசையையும் காற்றின் வேகத்தையும் பாதிக்கிறது (படம் 4.1).
7. இந்தியத் துணைக்கண்டம் : இந்தியத் துணைக்கண்டம் இலங்கையின் வடக்குப் பகுதியின் காலநிலையை தீர்மானிக்கப் பங்களிக்கும் மற்றொரு பிரதான காரணியாகும். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய நிலப்பரப்பின் அளவு வடக்குப் பிராந்தியத்தின் வறண்ட காலநிலையை உருவாக்குகின்றது.
8. இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் : இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் இலங்கையினுடைய காலநிலையை தீர்மானிப்பதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வழங்குகின்றது. குறிப்பாக இந்த இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் நேர்ப் பெறுமானமாக இருக்கின்ற பொழுதும் மறைப்பெறுமானமாக இருக்கின்ற பொழுதும் அவற்றினால் உருவாக்கப்படுகின்ற கடல் மற்றும் தரை வெப்ப வேறுபாட்டுச் செல்வாக்குகளின் விளைவாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை கணிசமாக பாதிக்கப்படுகின்றது. சில சமயங்களில் இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சூழவுள்ள அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் வேறுபட்ட அளவிலான வெப்பச் சுட்டெண், அதாவது ஒரு பிரதேசத்தில் நேர்ப்பெறுமானமாகவும் இன்னொரு பிரதேசத்தில் மறைப் பெறுமானமாகவும், இருக்கின்ற பொழுது ஒரு கொந்தளிப்பான அல்லது ஒரு குழப்பமான வானிலைத் தோற்றப்பாடு உருவாகின்றது. அதனால் இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை நிலைமைகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.
9. ‘எல் நினோ மற்றும் லா-நினோ’வின் செல்வாக்கு : இந்து சமுத்திர வெப்பச் சுட்டெண் எவ்வாறு வடக்கு மாகாணத்தினுடைய காலநிலையைப் பாதிக்கின்றதோ அது போன்று ‘எல் நினோ மற்றும் லா-நினோ’வும் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலையைக் கட்டுப்படுத்துவதில் பங்களிக்கின்றன. இத் தோற்றப்பாடுகள் வடக்கு மாகாணத்தினுடைய வெப்பமான மற்றும் குளிரான காலநிலை நிலைமைகளை தோற்றுவிப்பதில் கணிசமான அளவு பங்களிப்புச் செய்கின்றன. எல் நினோ மற்றும் லா நினோவின் தெற்கு ஊசலாட்ட (El-Nino- Southern Oscillation) நிலைமைகளினால் வடக்கு மாகாணத்தினுடைய வெப்ப நிலையில் அதிகரிப்பு ஏற்படுவதுடன் மாகாணத்தை அண்மித்து சமுத்திர மேற்பரப்பின் வெப்பநிலையிலும் அவை கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இதனால் தொடர்ச்சியாக வளிமண்டல நிலைமைகளில் ஏற்படுகின்ற மாற்றம் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலையைக் கட்டுப்படுத்துவதில் எல்நினோ மற்றும் லா-நினோவின் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதாக காலநிலையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
10. ரோஸ்பி அலைகள் மற்றும் மேடன் யூலியன் அலைவுகள் : இந்து சமுத்திரத்திற்கு வருகின்ற ரோஸ்பி அலைகள் மற்றும் மேடன் யூலியன் அலைவுகள் ஆகியன வடக்கு மாகாணத்தினுடைய வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பூகோள ரீதியான காலநிலை தோற்றப்பாடுகளில் ஒன்றாக விளங்குகின்ற ரோஸ்பி அலைகளும், மேடன் யூலியன் அலைவுகளும் இந்து சமுத்திரத்திற்கு வருகின்ற போது சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலையில் கடுமையான மாற்றங்களைச் செய்கின்றன. இந்த மாற்றங்கள் வடக்கு மாகாணத்தின் காலநிலையைக் கட்டுப்படுத்துகின்றன. இவ்வலைவுகளின் வருகை காரணமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தினுடைய கடல் மேற்பரப்பு வெப்புநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் அதனைச் சுற்றியுள்ள நாடுகளின் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சிகளில் கணிசமான அளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் இந்து சமுத்திர வடக்குப் பகுதிக்கு வருகின்ற இந்த அலைவுகள் காரணமாக வடக்கு மாகாணத்தினுடைய காலநிலை மாற்றம் பெறுகின்றது.
11. காட்டுப் பரப்புகள் மற்றும் இயற்கைத் தாவரங்கள் : வடக்கு மாகாணத்தினுடைய காலநிலையைத் தீர்மானிப்பதில் வடக்கு மாகாணத்தில் பரந்துள்ள காட்டுப் பரப்புகள் மற்றும் இயற்கை தாவரங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பினை மேற்கொள்கின்றன. இலங்கையின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது அதிக அளவிலான காட்டுப் பரப்புகளை கொண்டிருக்கின்ற மாகாணங்களில் முதன்மையானதாக வடக்கு மாகாணம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் விதியின்படி ஒதுக்கப்பட்ட 25% என்ற காட்டுப் பரப்பை தாண்டி இலங்கையினுடைய வடக்கு மாகாணத்தில் 32% அளவுக்கு காட்டுப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தச் செறிவான காட்டுப்பரப்புகள் வடக்கு மாகாணத்தினுடைய காலநிலையை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்குகின்றன.
12. தரைத் தோற்ற மற்றும் தரை உயர வேறுபாடுகள் : வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அளவிற்கு தரைத்தோற்ற வேறுபாடுகள் காலநிலையைக் கட்டுப்படுத்தாது விட்டாலும் கூட வடக்கு மாகாணத்தினுடைய வெப்பநிலை மற்றும் ஈரப்பதனில் தரை உயர வேறுபாடுகள் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றன. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்தினுடைய மத்திய பகுதி ஒப்பீட்டளவில் உயர்வான தரை உயரத்தையும் கிழக்கு மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகள் குறைவான தரை உயரத்தையும் கொண்டிருக்கின்றன. இவை வடக்கு மாகாணத்தினுடைய காலநிலையைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்குகின்றன.
தொடரும்.