இலங்கையின் சிங்கள சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் - பகுதி 1
Arts
24 நிமிட வாசிப்பு

இலங்கையின் சிங்கள சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் – பகுதி 1

March 25, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா

பிரசன்ன டி சொய்சா சட்டத்தரணியாகத் தொழில் புரிபவர். B.A, L.L.B, M.A (அரசியல் விஞ்ஞானம்) ஆகிய பட்டங்களைப் பெற்றவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் கலாநிதிப் பட்ட ஆய்வை தற்போது மேற்கொண்டு வருகிறார். இலங்கையில் சாதி உறவுகளும் ஜனநாயக அரசியலும் என்னும் விடயம் பற்றி சிறந்த ஆய்வுகளை எழுதி வருகிறார். அவரின் ஆய்வுக் கட்டுரையொன்றின் தழுவலாக்கத்தை இங்கு தந்துள்ளோம். பல கருத்தாக்கங்களை (CONCEPTS) உள்ளடக்கிய இக் கட்டுரையின் ஆங்கிலத் தலைப்பு “DEMOCRACY IN THE SOCIAL MARGINS : CASTE, SOCIAL EXCLUSION AND THE LIMITS OF DEMOCRATIC CITIZENSHIP IN SRI LANKA” ஆகும். இக் கட்டுரைத் தலைப்பை எளிமைப்படுத்தி “இலங்கையின் சிங்கள சமூகத்தில் சாதியின் வகிபாகம்: ஜனநாயகமும் சாதியும் அரசியலும்” என்று தமிழில் தலைப்பிட்டுள்ளோம். ‘இலங்கையின் அரசியல் 1900-1981 : பன்முக நோக்கு’ கட்டுரைத் தொடரில் மூன்றாவதாக அமையும் இக்கட்டுரை சமகால இலங்கை அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான உள்ளொளி பாய்ச்சும் கருத்துக்களை முன் வைக்கிறது.

prasanna

அறிமுகம்

இலங்கையின் பிரித்தானிய ஆட்சியின் பிற்பகுதியில் ஜனநாயகம் அறிமுகமாயிற்று. இவ்வாறு அறிமுகமான ஜனநாயகம் காலனிய நவீனத்துவத்தின் (COLONIAL MODERNITY) ஒரு முக்கிய கூறாகும். 1920 களிலும் 1930 களிலும் ஐரோப்பிய ஜனநாயகம் நிறுவன வடிவிலும், நடைமுறையிலும் புகுந்த போது, இலங்கைச் சமூகம் வர்க்கம், சாதி, இனக்குழுமம் என்ற மூன்று அடிப்படைகளில் அடுக்கமைவுடையதாக உருவாக்கம் பெற்றுக் கொண்டிருந்தது. 1830 களில் தோட்டப் பொருளாதார உற்பத்தி முதலாளித்துவ முறையாக அமைந்தது. காலனியப் பின்னணியில் உருவான வர்க்க அடுக்கமைவு (CLASS STRATIFICATION) மேற்படி தோட்டப் பொருளாதாரத்தின் அடிப்படையில் உருவானது. இனக்குழும அடுக்கமைவும் (ETHNIC STRATIFICATION) இம் முதலாளித்துவ வர்க்க உருவாக்கத்தின் ஒரு விளைவேயாகும். சாதி அடுக்கமைவு காலனியத்தின் வரவுக்கு முன்பிருந்தே இருந்து வந்த ஒன்றாகும். அது காலனித்துவத்துக்கு முந்திய சமூக, பொருளாதார அரசியல் கட்டமைப்புக்களோடு வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டது. ஆகையால் காலனியத்துக்கு முந்திய காலம், காலனிய காலம், பின் காலனிய காலம் என்ற மூன்று கட்டங்களிலும் தொடரும் சமூகக் கட்டமைப்புக் கூறாக சாதி விளங்குகிறது. இது தனியாக ஆராயப்பட வேண்டியது. 

இக் கட்டுரையின் நோக்கம் ஒரு குறிப்பிட்ட விடயம் சார்ந்தது. சிங்கள சமூகத்தின் சாதியின் அடிப்படையிலான சமத்துவமின்மையில் அரசியல் ஜனநாயகத்தின் பாதிப்பு சமனற்றதாக இருத்தல் பற்றி நாம் இக் கட்டுரையில் ஆராய உள்ளோம். அரசியல் ஜனநாயகத்தின் சமனற்ற பாதிப்பு (THE UNEVEN IMPACT OF POLITICAL DEMOCRACY) என்னும் விடயம் பல ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. ஆயினும் வெளிப்படையாக அவதானிக்க முடியாத இந்த விடயம் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. வேறு வகையில் கூறுவதாயின் இலங்கையில் சிங்கள சமூகத்தில் பல்வேறு சாதிக் குழுமங்கள் இருந்து வந்தன. இவற்றுள் சில சாதிகள் அரசியல் ஜனநாயகத்தின் நன்மைகளைப் பெற்று சமூக நிலையில் உயர்ச்சி பெற்றன. வேறு சில சாதிகளால் அவ்விதம் அரசியல் ஜனநாயகத்தின் நன்மைகளைப் பெற முடியவில்லை. இதனையே சமனற்ற பாதிப்பு (UNEVEN IMPACT) என்கிறோம். இச் சமனற்ற பாதிப்புக்கான காரணங்கள் எவை என்பதே ஆராய்விற்குரிய பிரச்சினை. சில சாதிகள் தொடர்ச்சியாக ஜனநாயகத்தின் நன்மைகளைப் பெற முடியாமல் விலக்கப்படுவது ஏன் என்பதே விடை காண வேண்டிய வினாவாகும்.  

இலங்கைச் சமூகம் பல்வேறு அடிப்படைகளில் பிளவுபட்டு, அடுக்கமைவு பெற்றுள்ளது. வர்க்கம், சமயம், இனத்துவம் (ETHNICITY), பால்நிலை (GENDER), சாதி, பண்பாட்டு அடையாளங்கள் என்பன இப் பிளவுகளுக்கும் அடுக்கமைவுக்கும் அடிப்படையாக அமைகின்றன. அடுக்கமைவுடைய ஒரு சமூகத்தில் சமத்துவமின்மைகள் (INEQUALITIES) ஆழமாக வேரூன்றியிருக்கும். சமூக சமத்துவமின்மைகளை கட்டமைப்பனவாக சமூகக் கட்டமைப்புகளே விளங்குவதையும் காணலாம் (SHARMA 2006: vii). ஆகையால் சாதியின் அடிப்படையிலான அடுக்கமைவு எவ்வாறு பல்வேறு வகையான சமத்துவமின்மைகளை உருவாக்குகின்றது என்பதை ஆராய்வதற்கு எமக்கு ‘கருத்தாக்க வரை சட்டம்’ (CONCEPTUAL FRAMEWORK) தேவை. அத்தகைய வரைசட்டம் ஒன்றுதான் சமத்துவமின்மைகளின் அரசியல் விளைவுகளை கண்டுணர உதவ முடியும். இக்கட்டுரையில் நாம் சமூக விலக்குதல் (SOCIAL EXCLUSION) என்ற எண்ணக்கருவைப் பிரயோகித்து விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மீது அரசியல் ஜனநாயகம் எவ்வாறு இடைவினை செய்கிறது, எவ்வாறு ஜனநாயகக் குடிமையின் (DEMOCRATIC CITIZENSHIP) நன்மைகளைப் பெற முடியாத வகையில் மட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதை ஆராய உள்ளோம். ‘சமூக விலக்குதல்’ என்பதன் பொருள் ஜனநாயக உரிமைகளையும் சமூக உரிமைகளையும் (SOCIAL RIGHTS) சில சமூகக் குழுவினருக்கு கிடைக்காதவாறு தடுத்தல் அல்லது விலக்குதல் ஆகும். சமூக விலக்கல் என்ற செயல்முறை, விலக்கல் (EXCLUSION) என்ற நிலையை உருவாக்குகிறது. ‘THORAT’ சமூக விலக்கல் என்பதை பின்வருமாறு வரைவிலக்கணம் செய்கிறார். “SOCIAL EXCLUSION IS THE DENIAL OF OPPORTUNITIES IMPOSED BY CERTAIN GROUPS OF SOCIETY UPON OTHERS WHICH LEADS TO INABILITY OF AN INDIVIDUAL TO PARTICIPATE IN THE BASIC POLITICAL, ECONOMIC AND SOCIAL FUNCTIONING OF THE SOCIETY (THORAT, 2007:1)” இக் கூற்றைப் பின்வருமாறு மொழி பெயர்த்துக் கொள்ளலாம். “சமத்துவமான வாய்ப்புகளை சமூகத்தின் ஒரு பிரிவினர் சமூகத்தின் இன்னொரு பிரிவினருக்கு மறுப்பதையே சமூக விலக்கல் (SOCIAL EXCLUSION) என்று குறிப்பிடுவர். இச் சமூக விலக்கலின் விளைவால் தனிநபர்கள் அடிப்படையான அரசியல், பொருளாதார, சமூக செயற்பாடுகளில் பங்கேற்க முடியாத நிலைக்கு உள்ளாகின்றனர்.”

சாதி அடுக்கமைவுடைய சமூகமொன்றில் மேற்குறிப்பிட்ட சமூக விலக்கல் அரசியல் மட்டத்தில் சமத்துவமின்மையை உருவாக்குகிறது. இச் சமத்துவமின்மையை ‘அரசியல் விலக்கல்’ (POLITICAL EXCLUSION) என உயன் கொட குறிப்பிடுகின்றார். (UYANGODA 2012:36, 82-4) அரசியல் விலக்கலின் பிரதான விளைவு குடியுரிமைகளை மறுத்தல் (DENIAL OF CITIZENSHIP RIGHTS) ஆகும். இலங்கையின் அரசியல் யாப்பின் உறுப்புரை 12, யாவருக்கும் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பையும், பாரபட்சமின்றி நடத்தப்படுவதையும் (EQUAL PROTECTION AND NON DISCRIMINATION) உறுதி செய்கிறது. உறுப்புரை 17,126 என்பன அரச முகவரால் (STATE AGENCY) இவ்வுரிமை மீறப்படும் போது நிவாரணம் பெறுவதற்கான வழிமுறையை வகுத்துள்ளன. அத்துடன் இலங்கை அரசியல் யாப்பின் முகப்பு வாசகம் சமத்துவம் ஒரு அடிப்படைத் தத்துவம் (BASIC PRINCIPLE) எனக் கூறுகிறது. இவ்வாறான அரசியல் யாப்பு உத்தரவாதங்கள் இருந்த போதும், உண்மையான சமூக நடைமுறை வேறு விதமாக இருக்கிறது. சமூக இடையுறவுகளில் தனிநபர்களும், சமூகக் குழுக்களும் சமத்துவமாக நடத்தப்படுவதில்லை. சில நபர்களுக்கும், சில குழுக்களுக்கும் பிரஜைகளில் உரிமைகளில் சமத்துவம் மறுக்கப்படுகிறது. பெண்கள், வறியோர் ஆகியோரும், இனக்குழுமம், பண்பாடு, பால்நிலை, சமூகம் ஆகிய நிலைகளில் சிறுபான்மையினராக உள்ளோரும் சமத்துவம் மறுக்கப்படும் சமூகக் குழுக்களாகும். இக் குழுக்கள் சமூக விலக்கல், அரசியல் விலக்கல் ஆகிய விலக்கல்களின் பிரத்தியே வடிவங்களின் பாதிப்புக்கும் உள்ளாகின்றன. 

விளிம்பு நிலையாதல் வரைவிலக்கணம்

இக்கட்டுரை விளிம்பு நிலையாதல் (MARGINALISATION) என்பதை சமூக விலக்கல் (SOCIAL EXCLUSION), அரசியல் விலக்கல் (POLITICAL EXCLUSION) என்னும் செயல் முறைகளின் விளைவு என வரைவிலக்கணம் செய்கிறது. விளிம்பு நிலைச் சாதிச் சமூகங்கள் சமூகத்தில் எல்லைப் பகுதிகளில் கட்டாயப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. உயர் சாதிக் குழுக்கள் விளிம்பு நிலைச் சாதிகளை சமூகத்தின் பொது வாழ்க்கையில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. அச் சாதிகளை உயர் சாதியினர், தாழ்ந்தோர் என விலக்கி வைப்பதோடு, சமூகப் படி நிலையில் தாழ்ந்த இடத்தை அவர்களுக்கு வழங்கி உள்ளனர். இவ்வாறு தாழ்ந்தோர் என விலக்கி வைக்கப்பட்ட சாதிக்குழுக்கள் பெரும்பாலும் சேவைச் சாதிகளாக (SERVICE CASTES) இருப்பதைக் காணலாம். சேவைச் சாதிகள் சமூகப் படிநிலையில் தாழ்ந்தபடியில் இருப்பவர்களாகவும், ‘உயர்’ சாதியினருக்கு சேவைக் கடமைகளை ஒரு கடப்பாடாக செய்பவர்களாகவும் இருக்கின்றனர். சேவைச் சாதிகள் காணிகளை உடைமையாகக் கொண்டவர்களல்ல. உயர் சாதியினரின் காணிகளில் குத்தகைக்குப் பயிர் செய்பவர்கள் பலர் காணியற்றவர்களாய் கூலித் தொழில் செய்வதோடு மரபு வழிச் சேவைக் கடமைகளை பணக்கூலி பெற்றுச் செய்து வந்தனர். காலனிய ஆட்சிக் காலத்திலும், பின் காலனிய கட்டத்திலும் இவர்கள் காணியற்றவர்களாகவும் வறியவர்களாகவும் உயர் சாதிகளிலிருந்து சமூக நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்துள்ளனர். பெரும்பாலும் சேவைச் சாதிகள் ஒரு சாதிக் கிராமங்கள் என்ற வகை கிராமங்களில் வாழ்ந்தனர். குறிப்பிட்ட ஒரு சாதிக்குரிய இக் கிராமங்கள் உயர் சாதிக் கிராமங்களின் விளிம்பில் அல்லது எல்லையில் அமைந்திருக்கும். ‘தீண்டாமை’ என்னும் சமூக ஒழுக்க விதி இச் சமூகங்களை உயர்சாதிக் கிராமங்களில் இருந்து தனிமைப்படுத்தி வைத்தன. இச் சாதிகளின் சமூக விலக்கல் அவர்களின் விளிம்புநிலை இருப்பை உறுதி செய்கின்றது. சமூகக் கட்டமைப்பு, பொருளாதார உறவுகள், மேலாண்மையுடைய சமயம், மேலாண்மையுடைய பண்பாடு ஜனநாய அரசியல் என்பன ஒன்றிணைந்து இச் சமூகங்களின் விளிம்பு நிலையை மீள் உற்பத்தி (REPRODUCE THEIR MARGINALITY) செய்கின்றன. விளிம்பு நிலைச் சாதியினர் சிங்களத்தில் தம் நிலையை ‘அபிவ கொன் கறலா’ என்று கூறுவர். இதன் பொருள் ‘நாம் எல்லைப் புறத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்’ என்பதாகும். இலங்கையின் சமூக நல அரசும் (WELFARE STATE) பொருளாதாரம், கல்வி, பண்பாடு ஆகிய விடயங்களில் இப் பிரிவினர்களுக்கு முழுமையாக நன்மைகளை கிடைக்கச் செய்யவில்லை. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட இம் மக்களுக்கு விளிம்பு நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு அரசிடமிருந்து கிடைக்கவில்லை. ஆகையால் எல்லாம் தழுவியதான கட்டமைப்பு ஒன்றுக்குள், விளிம்பு நிலைக்குள் சிக்குண்டிருக்கும் இம் மக்களின் சமத்துவ உரிமைகள் (RIGHT TO EQUALITY), ஜனநாயக அரசின் பிரஜைகள் என்ற முறையிலான உரிமைகள் ஆகியன மறுக்கப்படுகின்றன. ஆகையால் சமூக விளிம்பு நிலை, சமூக விலக்கல் என்ற இரண்டும் பரஸ்பரம் இடைவினை செய்வதால் இம் மக்கள் சமூக அரசியல் வாழ் நிலையில் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இக் கட்டுரை இலங்கையில் சாதியும் ஜனநாயகமும் என்பதன் பரிமாணங்களை ஆராய்கிறது. சில சாதிக் குழுமங்கள் எவ்வாறு தமது விளிம்பு நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு காலனிய முதலாளித்துவம், காலனிய ஜனநாயகம், பின் காலனிய ஜனநாயகம் ஆகிய பின்புலங்களில், சமூக ஏணிப் படியில் முன்னேறின என்பதையும், ஏனைய சில சமூகங்கள் தொடர்ந்து ஜனநாயக சமூகத்தில் விளிம்பு நிலை இருப்பில் நிலை கொண்டுள்ளன என்பதையும் இக் கட்டுரையில் ஆராய உள்ளோம்.

இக் கட்டுரையின் அடிக்கருத்தை ஒரு ஆய்வு வினா வடிவில் கூறலாம். இலங்கையின் சிங்களச் சமூகத்தில் சாதி அடிப்படையிலான சமூக விலக்கலும் அரசியல் விலக்கலும் இன்று வரை எப்படி இருந்து வந்துள்ளது, அது எவ்வாறு செயற்படுகிறது? இப் பிரதான வினாவிற்கு துணையான பின்வரும் வினாக்களும் இக் கட்டுரையில் ஆராயப்படும். ஜனநாயகப்படுத்தல் செயல்முறையும், சாதியும் ஒன்றோடொன்று எவ்வாறு இடைவினை புரிகின்றன, ஜனநாயக சமூகத்தில் சமூக விலக்கல் எவ்வாறு அரசியல் விலக்கலுக்கு காரணமாகிறது, விகிதாசார விலக்கு முறை (PROPORTIONAL REPRESENTATION) அறிமுகம் செய்யப்பட்டதனால் தேர்தல் முறையில் ஏற்பட்ட தாக்கங்கள் எவை, விகிதாசார முறைக்கும் – சமூக விலக்கல் – அரசியல் விலக்கல் என்பனவற்றுக்கும் இடையிலான தொடர்புகள் யாவை, இலங்கையில் ஜனநாயகத்துடன் ஒருங்கே இருப்புக் கொண்டுள்ள சமூக விலக்கலின் பரிமாணங்கள் யாவை? போன்ற மேற்படி வினாக்களின் துணையுடன் சம காலத்தில் இலங்கையில் சமூக விலக்கலும், அரசியல் விலக்கலும் செயற்படும் பின்னணியை இக்கட்டுரை ஆராயவுள்ளது. அத்தோடு பிரதான அடிக்கருத்துடன் தொடர்புடைய பின்வரும் விடயங்களும் இக் கட்டுரையில் ஆராயப்படவுள்ளன. 

  1. சாதியப் பிரிவினைகளின் அடிப்படையில் ஆழமாகப் பிளவுபட்டிருந்த சிங்கள உயர்குழாம் (SINHALA ELITES) 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பத்தாண்டுகளில் நவீன பிரதிநிதித்துவ ஜனநாயகம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட போது, எவ்வாறு அதனை எதிர்கொண்டு செயற்பட்டது?
  2. சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் சாதி அரசியலும், ஜனநாயக அரசியலும் எவ்விதச் செயல் முறையில் உருவாக்கம் பெற்றன? 
  3. சமூக விலக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விளிம்பு நிலைச் சாதிக் குழுமங்கள் ஜனநாயக அரசியல் களத்தில் விலக்கலை எவ்வாறு எதிர் கொண்டன? 
  4. இலங்கையின் நவீனத்துவத்தின் வழியுரிமையாக நீடித்து வரும் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மைகளும், சமூக விலக்கல், அரசியல் விலக்கல் என்பனவும் அரசியல் ஜனநாயகத்துடன் ஒருங்கே தொடருதலை எவ்வாறு புரிந்து கொள்வது? 

இந்த ஆய்வுக்கான தரவுகளை நாம் இரு மூலங்களில் இருந்து பெற்றுக் கொண்டோம். முதலாவதாக ஜனநாயகமும் ஆளுகையும் (DEMOCRACY AND GOVERNANCE) என்னும் ஆய்வுத்திட்டம் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் (SSA) 2013 இல் செயல்படுத்தப்பட்ட போது, அத்திட்டத்தின் கீழ் கள ஆய்வில் (DE SOYSA 2014) இருந்து தகவல்கள் பெறப்பட்டன. இரண்டாவதாக ‘சாதியின் முக்கியத்துவம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் – 1978 அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்ததற்குப் பிந்திய காலத்து சிங்கள அரசியல் குறித்த விடய ஆய்வு (CASE STUDY)’ என்னும் தலைப்பில் இக் கட்டுரையாசிரியர் முதுகலைமாணிப் பட்டத்திற்காக சமர்ப்பித்த ஆய்வேட்டில் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். இந்த இரு ஆய்வுகளின் போதும் நேர்காணல்கள், களத்திற்கு அடிக்கடி சென்று அவதானித்தல், உரையாடல்கள் (தனிநபர்களும் குழுக்களும்) போன்ற பண்புத் தரவுகளைப் பெறும் உத்திகள் மூலம் தரவுகள் திரட்டப்பட்டன.

கள ஆய்வின் போது கிராமத்து மக்கள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார்கள் ஆகியவர்வளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. இக் கள ஆய்வு பகுதியளவு இன வரைவியல் பண்பு ஆய்வு முறைகளின் படி (SEMI – ETHNOGRAPHIC QUALITATIVE METHODS OF FIELD RESEARCH) நடத்தப்பட்டது. 

முதலாவது கள ஆய்வு களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவின் பல்பிட்டி கொட, குரான தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் நடத்தப்பட்டது. முதலாவது, இரண்டாவது ஆய்வுகளின் களங்கள் பொதுத்தன்மை உடையவை. இரு ஆய்வுப் பகுதிகளிலும் விளிம்பு நிலை சாதியாக ‘பத்கம’ சமூகப் பிரிவினரும், மேலாதிக்கச் சாதியான ‘கொவிகம’ சமூகப் பிரிவினரும் மக்கள் தொகையின் கணிசமான வீதாசாரத்தினராக இருந்தனர். முதலாவது கள ஆய்வுப் பகுதியில் மிகச் சிறு தொகையினரான தமிழர்கள் வாழ்ந்தனர். சிங்கள ‘நவண்டன’ (பஞ்ச கர்ம) சாதிக் குடும்பங்கள் சிலவும் இங்கு வாழ்ந்தன. இக் கிராமங்களின் பத்கம சாதியினர் 28% வீதத்தினராகவும் (பல்பிட்டி கொட) 38% வீதத்தினராகவும் (குரான தெற்கு) இருந்தனர்.

இரண்டாவது கள ஆய்வுக்காக அ) தெவிநுவர தேர்தல் தொகுதி, ஆ) அவிசாவலை தேர்தல் தொகுதி, இ) தலாவ பிரதேச சபைப் பகுதி (அனுராதபுர மாவட்டம்) என மூன்று வெவ்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தெவிநுவர தேர்தல் தொகுதி பல சாதிகள் ஒருங்கே வாழும் கிராமங்களைக் கொண்ட பகுதி. இக் காரணத்தினாலேயே இத் தேர்தல் தொகுதி கள ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டது. பெரவ, துராவ, கொவிகம, கராவ, கும்பல், நவண்டன, ரஜக்க, சலாகம, வகும்புர ஆகிய பல சாதிகள் தெவிநுவரவில் பரவிக் காணப்படுகின்றன. இவற்றுள் துராவ, கொவிகம, கராவ, சலாகம சாதிகள் சனத்தொகை எண்ணிக்கையில் பெரியன. ஆயினும் இந்த நான்கு சாதிகளில் எச்சாதியும் ‘பெரும்பான்மை’ என்று கூறத்தக்க அளவு எண்ணிக்கை உடையனவாக இல்லை. அவிசாவல தொகுதி வித்தியாசமான இயல்புகளை உடையது.  இங்கே ‘கொவிகம’ பெரும்பான்மை 43% வீதமாக இருந்த போதும், பத்கம சனத்தொகையில் 30% ஆகவும் வகும்புர 18% ஆகவும் உள்ளன. இவ்விரு சாதிகளும் செறிவாக குடியிருக்கும் பல நிலப்பகுதிகள் அவிசாவலையில் உள்ளன. தலாவ பிரதேச சபைப் பகுதி ‘கொவிகம’ பெரும்பான்மையாக வாழும்  பகுதியாக விளங்குகிறது. ஆயினும் இங்கு பத்கம, பெரவ, ரஜக்க சமூகப் பிரிவினர்கள் செறிவாக குடியிருக்கும் பகுதிகளும் உள்ளன. யூலை 2009 முதல் மார்ச் 2010 வரையான காலப் பகுதியில் தரவுகள் தொகுக்கப்பட்டன. சில இடங்களில் மார்ச் 2010 இற்கு பின்பும் தரவுகள் பெறும் வேலை நீடித்தது. 

இக் கட்டுரையின் இனிவரும் பகுதியில் இலங்கையின் சாதி உறவுகளிற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான தொடர்பு விளக்கங்கள் ஆராயப்படும். இது வரையான விளக்கங்கள் இவ்வாய்வுக்குத் தொடக்கமான அறிமுகமாக அமைந்தன. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காலனிய அரசாங்கம் மட்டுப்படுத்திய வாக்குரிமை அடிப்படையில் (ஆங்கிலம் படித்த இலங்கையர், சொத்துடையவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை) சட்ட சபைக்கு பிரதிநிதிகளை அனுப்பும் முறையை அறிமுகம் செய்தது. அப்போது அம் மாற்றத்தின் தாக்கத்தால் சாதி உறவுகள் புதிய திருப்பத்தைப் பெற்றன. 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் கரையோர மாகாணங்களில் கராவ, சலாகம, துராவ என்னும் மூன்று சாதிகள்  சமூக பொருளாதார மேல் நிலையைப் பெற்றன. இவற்றை நாம் விபரித்துக் கூறவுள்ளோம். இறுதிப் பகுதியில் சாதிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான முரண்பட்ட உறவு விளக்கப்படும். விகிதாசாரமுறைத் தேர்தல் (P.R) அறிமுகப்படுத்தப்பட்ட பின் சாதி உணர்வும், சாதி விசுவாசமும் வாக்களிப்பின் போது தூண்டப்படுவதையும் விளக்கிக் கூறவுள்ளோம். அதன் பின்னர் சாதி அடிப்படையிலான சமூக விலக்கல், விளிம்பு நிலைச் சாதிகளின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்குக் காரணமாக அமைவது விளக்கப்படும். கட்டுரையின் இறுதியில் சமூக விலக்கல் செயல்முறை எவ்வாறு அடிநிலைச் சாதிகளின் தாழ்நிலைக்குக் காரணமாக அமைகிறது என்பது விளக்கப்படுவதோடு ஜனநாயகத்தின் சமூகக் கூறுகள் விளக்கியுரைக்கப்படும். இவ் இறுதிப் பகுதியில் அடிநிலைச் சாதிகளின் சமூக விலக்கல் காரணமாக மனித உரிமைகளின் முக்கிய பாகமாக அமையும் பண்பாட்டு உரிமைகள் (CULTURAL RIGHTS) அவற்றிற்கு மறுக்கப்படுகின்றன என்பதும் விளக்கப்படும்.

இலங்கையில் ஜனநாயகமும் சாதியும்

இலங்கையில் ஜனநாயக அரசியல், பிரித்தானிய காலனி ஆட்சியின் பிற்பகுதியில் 1920 களிலும், 1930 களிலும் அறிமுகமானது. 

ஜனநாயக அரசியல் உருவான தொடக்க காலத்தில் இருந்தே இலங்கையில் சாதிக்கும் அரசியலுக்கும் இடையே நெருங்கிய பிணைப்பு இருந்து வந்தது. 1920 களில் தேர்தல்கள் மூலம் சட்ட சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் தேர்தல் ஜனநாயகம் (ELECTORAL DEMOCRACY) அறிமுகமான போது தேர்தல் போட்டி சாதி, இனக் குழுமங்கள் என்ற பிரிவினைகளின் அடிப்படையிலான போட்டியாக அமைந்து விட்டது. இவ் விதமாக சாதியை அடிப்படையாகக் கொண்ட அடையாள அரசியல் (IDENTITY POLITICS) இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயக முறையின் பிரிக்க முடியாத ஓர் அம்சமாக நிலை பெற்றது. இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயக முறை சாதியும், இனத்துவமும் (CASTE AND ETHNICITY) என்ற இரண்டு சமூகப் பிரிவினைகளோடு நெருங்கிய உறவுடையதாக இருந்து வருகிறது என்று கூறினால் அது மிகைக் கூற்றன்று.

பிரதிநிதித்துவ ஜனநாயக முறை அறிமுகம் செய்யப்பட்ட போது இலங்கையில் கட்சிமுறை வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. கட்சிமுறை வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அரசியலில் தனிநபர்களாகவே வாக்காளர்களிடம் வாக்குக் கேட்டனர். ஆகையால் தேர்தல் அணி திரளல் (ELECTORAL MOBILISATION) சாதி அடையாளம், இனக்குழும அடையாளம் என்ற இரு அடிப்படைகளில் நடைபெற்றது. வேட்பாளர்கள் தமது சாதியாட்களிடம் வாக்கைத் திரட்டுதல், இனக்குழும அடையாள அடிப்படையில் வாக்கைத் திரட்டுதல் என்பது வழமையாயிற்று. சிங்களச் சமூகத்தில் கொவிகம, கராவ, சலாகம, துராவ என்னும் நான்கு பெரும் சாதிக் குழுக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயக அரசியலின் நன்மைகளைத் தமதாக்கிக் கொண்டன. காலனிய ஆட்சிக் காலத்தில் மேற் குறித்த நான்கு சாதிக் குழுமங்களின், சட்டசபை ஆசனங்களைப் பிடிப்பதற்குப் போட்டியிடும் அரசியல் ஆரம்பமாயிற்று. இப் போட்டி அரசியல், இலங்கையில் சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது. சுதந்திரத்திற்குப் பிந்திய காலத்தில் பாராளுமன்றத்திலும், அமைச்சரவைகளிலும் பிரதான சாதிகளின் ஆட்களின் பிரதிநிதித்துவம் பற்றிய போட்டி வெளிப்பட்டது. ஆயினும் இப் போட்டி உயர் குழாம் மட்டத்திலும் (ELITES), இடைத்தரச் சாதிகள் நிலையிலும் இருந்து வந்ததும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதனால், உயர் இடைத்தரச் சாதிக் குழுக்களின் உயர் குழாங்களின் உறுப்பினர்கள் அரசியலை ஒரு தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிகளாக (PROFESSIONAL POLITICIANS) இலங்கையின் ஜனநாயக முறையில் செயற்படலாயினர். 

சாதி பற்றிய ஆய்வுகள் 

இலங்கையில் அரசியலுக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பல புலமையாளர்கள் ஆய்வு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்கள். இவர்களுள் ஜிஜின்ஸ் (1974 மற்றும் 1979) ஜயந்த (1992) றொபர்ட்ஸ் (1995) குமாரசுவாமி (1988) டி சொய்சா (2012) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. ஜிஜின்ஸ் ஆய்வு இலங்கையின் சமூகக் கட்டமைப்பிற்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவை ஆராய்கிறது. அவர் சிங்கள சமூகத்தில் சாதி அடையாளமும், குடும்ப உறவுகளும் எவ்வாறு தேர்தல் அரசியலில் வெளிப்பட்டன என்பதை ஆராய்கிறார் (ஜிஜின்ஸ் 1979:150). ஜயந்த கரை நாட்டு சிங்கள சமூகத்தில் அரசியல் சார்பும் விசுவாசமும் எவ்விதம் பொருளாதார, சமூக நிலை சார்ந்து ஏற்படுகிறது என்பதை ஆராய்கிறார். அவர் தமது ஆய்வில் ஜிஜின்ஸ் கருத்துக்களை கேள்விக்கு உட்படுத்துகிறார் (ஜயந்த 1992 :5, 199). றொபர்ட்ஸ் ஆய்வின் பிரதான அடிக் கரு (THEME) சாதி இடையூட்டாட்டத்தின் அமைப்பு (STRUCTURE OF CASTE INTERACTION) ஆகும். அவர் குறிப்பாக கராவ சாதியில் இருந்து 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் விகிதாசார அடிப்படையில் பெரும் பங்கினரான சிங்கள உயர் குழுக்களும், முதலாளி வகுப்பினரும் தோன்றினர் என்பதை ஆராய்கிறார் (றொபர்ட்ஸ் 1995 :1,4). அவரது ஆய்வு சாதியும் அரசியலும் பற்றி, குறிப்பாக கொவிகம சாதிக்கும் கரையோரப் பகுதிகளின் சாதிகளுக்கும் இடையிலான அரசியல் போட்டி பற்றி ஆராய்கிறது. தரா குமாரசுவாமி (TARA COOMARASWAMY) சட்ட சபைப் பிரதிநிதித்துவத்தின் மாறுதல்களின் தன்மை, போக்கு என்பனவற்றை ஆராய்கிறார் (1988:10). தமது ஆய்வில் பிரதிநிதித்துவத்தின் தன்மையையும் கீழ்ப்பட்ட நிலையில் இருந்த சாதிகளின் பங்கேற்பு பற்றியும் கவனம் செலுத்தியுள்ளார். ஆனால் அவர் தனது ஆய்வின் நோக்கு எல்லையை சுருக்கிக் கொண்டதால் கீழ்நிலையில் இருந்த சாதிகளின் ஜனநாயக அரசியல் உரிமைகள் பற்றிய விரிவான விளக்கம் சாத்தியமற்றதாகி விட்டது. டி சொய்சா இலங்கையின் நீண்டகால ஜனநாயக அரசியல் செயல்முறையில் சாதி ஏன் இன்னும் தொடர்ந்து நிலைத்துள்ளது என்பதை ஆராய்கிறார். டி சொய்சா குறிப்பிடும் இந்த விடயம் அண்மைக் காலத்தில் தான் சில ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறுகிறார் உயன் கொட (2012,2013,2015). சில்வாவும் பிறரும் (2009a, 2010b), டி சொய்சா (2014) ஆகிய ஆய்வுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்விடயம் பற்றிய பல்வேறு கூறுகள் இனிமேல் ஆராயப்பட வேண்டியனவாய் உள்ளன.

குறிப்பாக அ) சில சாதிகள் அரசியலில் உள்ளீர்க்கப்பட்டிருப்பதும், சில சாதிகள் அரசியலில் விலக்கப்பட்டிருப்பதும் (POLITICAL EXCLUSION) எவ்வாறு நிகழ்ந்தது என்பதும் ஆ) ஜனநாயக முறையில் விலக்குதலின் (EXCLUSION) விளைவு என்ன, அதன் அர்த்தம் யாது என்பனவும் ஆராய்விற்குரியன. 

நவீன காலத்தில் இலங்கையில் நவீன ஜனநாயகத்தின் சமூகத் தாக்கம் ஒரு முரண் நிலையைக் கொண்டுள்ளது. காலனிய முதலாளித்துவத்தின் கீழும், காலனிய ஆட்சியின் கீழும் சில சாதிகள் பல நன்மைகைளைப் பெற்று மேலுயர்ச்சி பெற்றன. இச் சாதிகள் ஜனநாயகத்தின் நன்மைகளையும் பெற்றுக் கொண்டன. ஆயின் விளம்பு நிலைச் சாதிகள் காலனிய முதலாளித்துவம், காலனிய ஆட்சி, ஜனநாயகம் என்பனவற்றால் உயர்வு பெறவில்லை. பிரதிநிதித்துவ ஜனநாயகம் அறிமுகம் செய்யப்பட்டு 100 ஆண்டுகள் கடந்து விட்டன. வயது வந்தவர் யாவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு 90 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆயினும் விளிம்பு நிலைச் சாதிகள் ‘சமூக அரசியல் விலக்கி வைத்தல்’ (SOCIAL AND POLITICAL EXCLUSION) காரணமாக இன்றும் போராடிக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது. இவ் விளிம்பு நிலைச் சாதிகளுக்குப் பொதுவான இயல்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். 

அ) இச்சாதிகள் முதலாளித்துவத்தால் பெரு நன்மைகள் எதனையும் பெறவோ, மேல் நோக்கிய நகர்வைப் (UPWARD SOCIAL MOBILITY) பெறவோ முடியவில்லை.

ஆ) இச்சாதிகள் முதலாளித்துவப் பொருளாதாரத்திலும் (AGRARIAN ECONOMY) மிகவும் தீவிரமான பின்னடைவிலும் விளிம்பு நிலையிலும் உள்ளன. 

இ) சமூக நல அரசு (WELFARE STATE) இம்மக்களுக்கு பிற சாதிகளுக்கு வழங்கிய நன்மைகள் போன்று நன்மைகளை வழங்கவில்லை. இம் மக்களால் நன்மைகளைப் பெற முடியவில்லை.

ஈ) மைய நீரோட்ட அரசியல் கட்சி அணி திரட்டலுக்கும் (PARTY MOBILISATION) தேர்தல் அணி திரட்டலுக்கும் அப்பால் இச் சாதிகள் வெளியே இருந்து வந்துள்ளன. 

உ) இம் மக்கள் ஜனநாயகத்தின் நன்மைகளை முழுமையாகப் பெறவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட  அளவிலேயே பெற்றுள்ளனர். 

ஊ) பிரஜைகள் என்ற வகையிலும், சமத்துவமற்ற பிரஜைகளாகவும் பிரஜா உரிமைகளை முழுமையாக அனுபவிக்காதவர்களாகவும் இம்மக்கள் உள்ளனர்.

காலனிய கால மாற்றங்களும் சாதிகளின் நவீனத்துவமும்

இலங்கையின் நவீனமயமாதல் (MODERNISATION) செயல் முறையில் சாதியும் ஜனநாயகமும் ஒருங்கே இயங்கின. இது ஒரு முரண்பாடு ஆகும். ஏனெனில் சாதியும் ஜனநாயகமும் ஒன்றிற்கொன்று முரணானவை. சாதி பிறப்பால் அமையும் சமத்துவமின்மையாகும். அப் பிறப்பிலேயே குறித்த சாதியைச் சேர்ந்த நபரின் அந்தஸ்தும், தகுதியும் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. அந் நபர் சமூக அடுக்கமைவின் படி கீழ்ப்படியிலே வைக்கப்படுகின்றார். ஜனநாயகம் இதற்கு நேர் மாறானது. ஒரு நபர் பிறப்பில் இருந்தே பிற மனிதரோடு சமத்துவமானவராகவே உள்ளார் என்ற சமத்துவக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது ஜனநாயகம். இக் காரணத்தினாலேயே இலங்கையில் சாதியும் ஜனநாயகமும் ஒருங்கே இருப்புக் கொண்டன (CO-EXISTED) என்பது ஒரு முரண்பாடு எனக் குறிப்பிட்டோம். காலனிய இலங்கையில் சாதி முறைக்கும் தொழிலுக்கும் இடையிலான தொடர்பு மறைந்து வந்தது. இது சாதியின் பொருண்மியக்கூறு (MATERIAL ELEMENT) மாற்றம் அடைந்தமையைக் காட்டுகிறது. ஆயினும் கருத்தியல் நிலையில் சமத்துவமின்மை மறையவில்லை (DE SOYSA 2012:96-7). இதனால் தான் தென்னாசியாவின் சாதி பற்றி கடந்த காலத்திலும், அண்மையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட புலமையாளர்கள் சாதிகளிடையே சமத்துவமின்மை தொடருவதை எடுத்துக் காட்டியுள்ளனர். சாதி பற்றிய சமூகவியல் வரைவிலக்கணங்கள் சாதியின் சமத்துவமின்மை என்னும் இயல்பைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியச் சமூகம் பற்றி ஆராய்ந்த BOUGLE (1971:8-9) அ) செய்யும் தொழில், ஆ) அடுக்கமைவுப் படிநிலை (HIERARCHY), இ) உணவு உண்ணுதலிலும் சமூக இடையுறவுகளிலும் ஒதுக்கி வைத்தல் என்னும் மூன்று விடயங்கள் சாதியின் அடிப்படையாக இருப்பதை எடுத்தக் காட்டினார். குர்யே (GHURYE) சாதி முறையின் ஆறு இயல்புகளைக் குறிப்பிடுகிறார். 

  1. சமூகம் கூறாக்கப்பட்டு பிரிபட்டிருத்தல்
  2. அடுக்கமைவுப் படிநிலை
  3. உணவு உண்ணுதலிலும், சமூக இடையுறவுகளிலும் கட்டுப்பாடுகள் 
  4. குடியியல், சமயம் என்ற இரண்டு நிலையிலும் பாரபட்சமும் சில பிரிவினருக்கு சலுகைகளை கொடுத்தலும்
  5. தாம் விரும்பிய தொழிலை ஒருவர் தேடிக் கொள்ளவும், செய்வதற்கும் இயலாத நிலை
  6. திருமண உறவுகளில் கட்டுப்பாடுகள் (GHURYE 1932:2-20)

சிறினிவாஸ் பின்வரும் இயல்புகளின் படி சாதியை வரையறை செய்கிறார். 

  1. அகமணம்
  2. ஒருங்கேயிருந்து உணவு உண்பதற்குத் தடை
  3. தொழில்களில் சிறப்புத் தேர்ச்சி 
  4. வெவ்வேறு பண்பாட்டு மரபுகள்
  5. தனியான சாதி நீதிமன்றுகள் 
  6. துடக்கு என்னும் கருத்து – கர்மாவும் தர்மமும் (SRINIVAS 2010:73) 

மேற்குறித்த  மூன்று வரைவிலக்கணங்களிலும் காணப்படும் பொதுமையான கூறு சமத்துவமின்மை (INEQUALITY) ஆகும். 

சாதி பற்றிய அண்மைக்கால வரைவிலக்கணங்களைப் பார்ப்போம். 

தமரா குணசேகர சாதிகளை ‘GROUPS POSSESSING DIFFERENTIAL DEGREES OF SOCIAL HONOUR AND PRESTIGE’ என்று வரைவிலக்கணப்படுத்துகிறார். அவரது வரைவிலக்கணத்தில் குறிப்பிடப்படும் ‘HONOUR’ என்ற சொல் நற்பெயர், நன்மதிப்பு, தகுதி என்பனவாகப் பொருள் தரும் சொல். இதனோடு ஒத்த கருத்துள்ள சொல்லான ‘PRESTIGE’ என்பதும் செல்வாக்கு, நன்மதிப்பு என்ற பொருளுடையது. சாதிகள் நற்பெயர், செல்வாக்கு என்பனவற்றில் வெவ்வேறு அளவுகளில் வேறுபாடுடைய சமூகக் குழுக்கள் என அவர் வரைவிலக்கணம் அமைகிறது. பிரசன்ன டி சொய்சாவின் (கட்டுரையாசிரியர்) வரைவிலக்கணம் ஆங்கிலத்தில் பின்வருமாறு உள்ளது : ‘A SOCIALLY IMAGINED COMMUNITY, THAT IS, A SOCIAL CATEGORY WHICH IS DECIDED BY THE DEGREE OF SOCIAL HONOUR AND PRESTIGE’ 

பிரசன்ன டி சொய்சாவின் வரைவிலக்கணம் ஏறக்குறைய முன்னைய வரைவிலக்கணம் போல் இருப்பினும் ‘A SOCIALLY IMAGINED COMMUNITY’ என்ற மேலதிக கூற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. இவ் வரைவிலக்கணத்தை “சாதிகள் நற்பெயர், செல்வாக்கு என்பனவற்றில் வெவ்வேறு அளவுகளில் வேறுபாடுகள் உடைய கற்பனை செய்யப்பட்ட சமுதாயக் குழுக்கள்” என்று மொழிபெயர்த்துக் கொள்ளலாம். 

மேற்குறித்த இரு வரைவிலக்கணங்களும் நற்பெயர், செல்வாக்கு என்பவற்றிற்கு அழுத்தம் கொடுப்பதால் முற்கூறிய வரைவிலக்கணங்களில் இருந்து வேறுபடுகின்றன. இந்த வேறுபாட்டிற்குரிய காரணம் யாதெனில் குணசேகரவும், டி சொய்சாவும் காலனிய ஆட்சிக் காலத்தில் முதலாளித்துவ வளர்ச்சியின் பயனால் ஏற்பட்ட வர்க்க உருவாக்கம் (CLASS FORMATION) காரணமாக சாதிகள் அடைந்த மாற்றங்களால் நற்பெயர், செல்வாக்கு என்பனவற்றை தேடிக் கொண்டமையால் எழும் வித்தியாசத்தைக் கருத்திற் கொண்டு வரைவிலைக்கணம் வகுப்பது ஆகும். இவ்விரு வரைவிலக்கணங்களிலும் காணப்படும் பொதுத்தன்மையும் கவனிப்புக்குரியது. இரண்டு வரைவிலக்கணங்களிலும் சமத்துவமின்மை (INEQUALITY) தீர்மான காரணியாக உள்ளதைக் காணலாம். ஆகையால் சூழ்நிலை, காலம் என்பன மாறினாலும் சாதியின் அடிப்படையாகச் சமத்துவமின்மை (INEQUALITY) விளங்குகிறது. சமத்துவமின்மை மாறாத காரணியாக விளங்குவதைக் காணலாம்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

16822 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)