இலங்கையின் சிங்கள சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் - பகுதி 2
Arts
25 நிமிட வாசிப்பு

இலங்கையின் சிங்கள சமூகத்தில் சாதியின் வகிபாகம் : ஜனநாயகமும் சாதியும் அரசியலும் – பகுதி 2

March 28, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பிரசன்ன டி சொய்சா

இலங்கையில் காலனிய காலத்தில் முதலாளித்துவம் மேலாண்மையுடைய முறையாக வளர்ச்சியுற்ற போதும் நிலமானிய உறவுகளை அது முற்றாக அழிக்கவில்லை. முதலாளித்துவத்திற்கு முந்திய நிலமானிய சமூக உறவுகளின் இயல்புகள் (PRE-CAPITALIST CHARACTERISTICS) தொடர்ந்து நீடித்தன. நிலமானிய சமூகம் சாதியை அடிப்படையாகக் கொண்டது. முதலாளித்துவ வளர்ச்சியுடன் வர்க்கங்கள் தோற்றம் பெற்றன. இலங்கையில் சிங்கள சமூகத்தில் சாதியும் வர்க்கமும் ஒரு சேரக் கலப்புற்று இருப்பதைக் காண முடிகிறது. 

“குறித்த ஒரு சமூகத்தில் சாதியடிப்படையிலான பாரபட்சம் குறைந்துள்ளது. சாதி முறை வலுக் குன்றுகின்றது, வர்க்க முரண்பாடுகள் அதிகரிக்கின்றன என்பனவற்றைக் கொண்டு சாதிமுறை அழிந்து விட்டது என அனுமானிக்க முடியாது. சாதி அடுக்கமைவு நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனிடத்தில் வர்க்க உணர்வு வளர்ச்சியடைந்துள்ளது என்று முடிவு செய்தல் இயலாது (GUNASEKARA;1994:2).” மேற்குறித்தவாறு கூறும் தமரா குணசேகர “சாதி இந் நாட்டில் இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறுதான் இன்றும் உள்ளது“ என்றும் குறிப்பிட்டார் (GUNASEKARA 1994:99).

நிமால் ரஞ்சித் தேவசிறி, காலனித்துவத் தலையீடு மரபு வழிச் சாதிக் கட்டமைப்பைத் தகர்க்கவில்லை; சாதி செயற்படும் முறைகளை மாற்றியமைத்துக் கொண்டது (DEWASIRI,2008:219) என்று கூறுகிறார். இந்தியாவின் நிலமைகளை ஆராய்ந்த சர்மா, சாதியின் இடத்தை வர்க்கம் பிடித்துள்ளது என்று கூறுவது தவறு என்றார் (SHARMA,2006:50). ஆகையால் தென்னாசிய சமூகங்களில் முதலாளித்துவ நவீனத்துவம் (COLONIAL MODERNITY) சாதியை முற்றாக அழிக்கவில்லை என்பதும், சாதி-வர்க்கம் என்ற இரண்டினதும் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு உருவாகியுள்ளதென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகும். 

காலனித்துவ காலத்தின் நவீனத்துவம் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கியமானவை. ஆயினும் காலனித்துவத்திற்கு முந்தியதான சாதி முறை காலனிய காலத்தில் முக்கிய பங்கை வகித்ததை கவனிக்கத் தவறக்கூடாது. சாதி அடிப்படையிலான வேலைப்பிரிப்பு, சாதி அடிப்படையிலான சேவைகளிற்கு பணமாகவோ பொருளாகவோ கொடுப்பனவு செய்தல், என்பன பொருண்மிய நிலையில் தொடர்ந்தன. சாதி அடுக்கமைவு, சாதி அடையாளமும் அடையாள உணர்வும் சாதியின் கருத்தியல்களாக நிலைத்திருந்தன. ஆயினும் சில மாற்றங்களும் ஏற்பட்டன. காலனித்துவ முதலாளித்துவம் விரைவாக வளர்ச்சியுற்ற போது தொழில்களிலும் பொருளாதாரத்திலும் பன்முகமாக்கல் (DIVERSIFICATION) இடம்பெற்றது. நில உரிமை முறையில் மாற்றம் ஏற்பட்டது. அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. நிலமானியச் சமூகப் பொருளாதார உறவுகளில் முக்கிய இடம்பெற்ற சாதி வலுவிழந்தது. ஆயினும் சாதியின் கருத்தியல் கூறுகள் (IDEOLOGICAL ASPECTS) நீடித்திருந்தன. இக் காரணத்தால் பின்காலனிய கட்டத்தில் சாதியின் கருத்தியல் வகிபாகம் தொடர்ந்து வருகின்றது.

சாதியென்னும் வகைமை நற்பெயர் (HONOUR), நன்மதிப்பு (PRESTIGE) என்னும் கருத்தியல் கூறுகளை முதன்மைப்படுத்தும் வகைமையாக உள்ளது. ஆயினும் அக் கருத்தியல் கூறுகள் குறித்த சாதியினரைச் சேர்ந்தவர்களை ஒரு சமுதாயமாக (COMMUNITY) உணர்வு நிலையில் ஒன்றுபடுத்துகிறது. சமுதாய உணர்வு (COMMUNITY FEELING) என்பது நேருக்கு நேரான முன்பே தெரிந்தவர்களிடை உண்டாகும் ‘நம்மவர்‘ என்ற உணர்வு. ஆனால் இன்றைய சூழலில் தூர இடங்களில் வாழும் முகம் தெரியாத, பெயர் தெரியாத, பழக்கம் இல்லாத தமது சாதியைச் சார்ந்த மனிதர்களையும் ‘நம்மவர்‘ என்று உணரும் அடையாள உணர்வு ‘கற்பனை‘ அல்லது ‘கற்பிதம்’ செய்யப்பட்ட தன்மை உடையதாய் இருப்பதைக் காணலாம். இக் காரணத்தால் இலங்கையில் இன்று சிங்களவர்களிடையே காணப்படும் சாதி அடையாள உணர்வை பெனடிக்ற் அன்டர்சன் உபயோகித்த ‘கற்பனை செய்யப்பட்ட (IMAGINED)’ என்ற சொல்லைப் பயன்படுத்தி சாதி ‘கற்பனை செய்யப்பட்ட சமுதாயம்’ என்று கூறுதல் பொருத்தமுடையது. கற்பனை செய்யப்பட்டது என்பதனால் பொய்யானது, நிஜ உலகில் யதார்த்தத்தில் இல்லாதது என்பது பொருளன்று. சாதி யதார்த்தத்தில் உள்ளது. அது பொய்மை அன்று. பெனடிக்ற் அன்டர்சன் ‘தேசிய இனம்‘ (NATION) என்பதைக் கூறிய போது அதனை கற்பிதம் செய்யப்பட்ட அரசியல் சமுதாயம் (POLITICAL COMMUNITY) என்றார். மிகச் சிறிய ஒரு தேசிய இனத்தில் கூட, அதன் உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்களாக இருப்பர் என்பதை அவர் சுட்டிக் காட்டினர். சமுதாயம் (COMMUNITY) என்பது முகத்துக்கு முகம் நேரில் அறிந்தவர்களிடையிலான ‘நம்மவர்‘ என்ற அடையாள உணர்வு ஆகும். ‘தேசிய இனம்‘ என்பது நேருக்கு நேர் (FACE TO FACE) உறவு இல்லாதவர்களையும், ‘நம்மவர்‘ என்று உணரும் சமுதாய உணர்வு ஆகும். இதனாலேயே அன்டர்சன் தேசிய இனம் என்பதை ‘கற்பனை செய்யப்பட்ட சமுதாயம்‘ என்றார். இவ்வாறே சாதியும் ஓர் கற்பனை செய்யப்பட்ட சமுதாயம் ஆகும். அச் சமுதாய உணர்வு அதன் உறுப்பினர்களுக்கு ஒரு அடையாள உணர்வையும், பரந்து வாழும் அதன் உறுப்பினர்களுக்கு ‘எமது ஆட்கள்‘ என்ற உணர்வையும் வழங்குகிறது. இவ்வுணர்வு அவ்வுறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் அறியாத போதும் அகநிலையிலும் பண்பாட்டு நிலையிலும் (SUBJECTIVE AND CULTURAL LEVEL) ஒருமித்த உணர்வை வழங்குகிறது. அன்டர்சன் உபயோகிக்கும் ‘தேசிய இனம்’, ‘அரசியல்’ (POLITICAL) என்ற இரண்டிற்கும் பதிலீடுகளாக முறையே ‘சாதி’, ‘சமூகம்’ (SOCIAL) என்னும் சொற்களை இக் கட்டுரையில் உபயோகிக்கின்றோம். 

இந்தியப் பின்புலத்தில் சாதியின் சமத்துவமின்மை சமயக் கருத்துக்களால் நியாயப்படுத்தப்பட்டது. இலங்கையில் சாதி, சமயச் சார்பற்றதாக அமைந்துள்ளது. இந்தியாவைப் போல் அல்லாமல் இலங்கையில் சாதி, சமயம் சாராத சமூக அடிப்படையைக் கொண்டது. மடாலயங்களின் ஒழுங்கமைப்பும் நடைமுறைகளும் இலங்கையில் சாதியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஆயினும் பௌத்த சமயம் சாதியை நியாயப்படுத்தும் தத்துவத்தைக் கொண்டதல்ல. நம் முன்னர் குறிப்பிட்டது போல் இலங்கையில் ஜனநாயகச் செயல்முறை சாதியை ஒழிக்கவில்லை. சாதி இன்னமும் நீடித்துள்ளது. அது நவீன வடிவத்தைப் பெற்றுள்ளது. சாதியும், ஜனநாயகமும் ஒருங்கே இருப்புக் கொண்டுள்ளமை முரண்பாடான நிலையைத் தோற்றுவித்துள்ளது. சாதி சமத்துவமின்மையையும், ஜனநாயகம் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதே இம் முரண்பாட்டிற்கான காரணமாகும். சாதி சிங்கள சமூகத்தின் அன்றாட வாழ்வில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது எந்த வேளையிலும் வெளிப்பட்டு மேல் நிலைகளுக்கு ஊடுருவிக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது. (SPENCER 1990:7)

கராவ, சலாகம துராவ சாதிகளின் மேல் நோக்கிய உயர்ச்சி

தென்னிலங்கையின் கராவ, சலாகம, துராவ என்னும் மூன்று சாதிகள் காலனிய ஆட்சிக் காலத்தில் மேல் நோக்கி உயர்ச்சி பெற்றன. இவற்றுள் கராவ சமூகத்தின் எழுச்சி சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டுவது. இலங்கையில் ஜனநாயகச் செயல்முறையின் ஊடாக இச் சாதிகள் எவ்விதம் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றன, அவ் அரசியல் பிரதிநிதித்துவம் எத்தகைய நிலைகளின் கீழ் உருவானது என்பதை ஆராய்தல் அவசியம். காலனிய காலத்தில் சாதி முறையில் அமைப்பியல் மாற்றங்கள் (STRUCTURAL CHANGES) ஏற்படவில்லை. அக்காலத்தில் சாதிகளின் படிநிலை ஒழுங்கில் மாற்றம் ஏற்பட்டது. ‘சாதிகள் செய்யும் தொழில்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் சாதிகள், காலனிய ஆட்சிக்காலத்தில் சாதி அடுக்கமைவில் பெற்றிருந்த இடம் மாறத் தொடங்கியது‘ (ஜயவர்த்தன 2007:164) கராவ, சலாகம, துராவ ஆகிய சாதிகள் தமக்கு மேல் நிலையில் இருந்த சாதிகளுக்கு சேவைக் கடமைகைளைச் செய்யும் கடப்பாடு உடையனவாய் இருக்கவில்லை. இது சாதிப் படிநிலையில் இச்சாதிகள் உயர்வதற்குத் துணை செய்தது. 

கராவ, சலாகம, துராவ ஆகிய சாதிகள் போத்துக்கேயர் இலங்கையில் காலனிய ஆட்சியை ஆரம்பிப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்ந்து வந்தன. அவற்றின் வரலாறு ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தை உடையது. இதனால் இச் சாதிகள் முழுமையாக மரபுவழிச் சாதி முறைமையில் உள்ளீர்க்கப்படாமல் விலகி நிற்கின்றன (றொபர்ட்ஸ், 1973:280). சிங்களச் சாதியமைப்பின் பகுதியாக இம் மூன்று சாதிகளும் உள்ளீர்க்கப்பட்ட போதும் இச் சாதிகளுக்கு சேவைகளை செய்யும் கடப்பாடு இருக்கவில்லை. இச் சாதிகளுக்கு சமூக அசைவியக்கத்தில் பிற சாதிகளை விடக் கூடிய சுதந்திரமும் தெரிவும் இருந்தது (MORE MOBILITY AND FREEDOM OF CHOICE) என ஜயவர்த்தன கூறுகிறார் (ஜயவர்த்தன 2007:168). சலாகம சாதியினருக்கு தென்னிலங்கையின் சாதி முறையில் சேவைக் கடமைகள் என எவையும் இருக்கவில்லை (கொத்தலாவல, 1988:75). கறுவா உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் சலாகமவிற்கு முக்கிய பங்கு இருந்தபடியால் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் சலாகம சாதியினர் முன்னேறக்கூடிய வாய்ப்புக்களைப் பெற்றனர். சலாகம சாதியினருக்கு கிராமத் தலைமைக்காரர் பதவிகள் வழங்கப்பட்டன. கொவிகம சாதியினருக்கு மட்டுமே உரியதாக இருந்த இம் மதிப்புமிக்க பதவிகளில் சலாகம சாதியினர் அமர்த்தப்பட்டனர். 1708 ஆம் ஆண்டில் முதன் முதலாக சலாகம சாதி நபர் ஒருவருக்கு முதலியார் பதவி வழங்கப்பட்டது. இதன் விளைவாக சலாகம உயர் குழாம் உருவானது. இச் சலாகம உயர் குழாம் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் முதல் தென் மேற்கு இலங்கையில் சாதிப் படிநிலையில் உயர் நிலையைப் பெற்றது. சலாகம சாதியினர் அந்நியர் ஆட்சியில் இரு வகையில் நன்மை பெற்றனர். காலனிய அரசாங்கம் அச் சாதியினருக்கு காலனிகளை வழங்கியது. அவர்களுக்குப் பதவிகளும் வழங்கப்பட்டன. இதனால் சாதிப்படி நிலையில் சலாகமவால் உயர முடிந்தது. 

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கராவ சாதி, பொருளாதாரத் துறையில் ஈட்டிய முன்னேற்றம் காரணமாக பணம் படைத்தவர்களைக் கொண்ட சமூகமாக மாறிச் சமூக அந்தஸ்திலும் உயர்ந்தது (றொபர்ட்ஸ் 1995:10). 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் சலாகம சாதி சாதித்தவற்றை கராவ சாதி சாதிக்கத் தொடங்கியது (டி சில்வா 2005:424). கராவ சாதியினர் மாட்டு வண்டிகளில் கோப்பி, தேயிலை போன்ற உற்பத்திப் பண்டங்களை ஏற்றியிறக்கும் போக்குவரத்துச் சேவையில் பெரும் தொகையினர் ஈடுபட்டனர். அவர்கள் தச்சுத் தொழிலில் ஈடுபட்டு தொழில் துறை முயற்சியாளர்களாயினர். அவர்களின் கைவினைத் திறன்கள் டச்சுக்காரர்களால் கூட பயன்படுத்தப்பட்டன. ஆகையால் பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கத்தில் அவர்களிடம் குறிப்பிடத்தக்க அளவில் மூலதனத் திரட்சி (ACCUMULATION OF CAPITAL) காணப்பட்டது. அவர்கள் கரை நாட்டுப் பகுதிகளில் இருந்து கண்டியை நோக்கித் தமது பொருளாதார நடவடிக்கைகளை விஸ்தரித்தனர். சாராய உற்பத்தியும் விற்பனையும், தோட்டப் பொருளாதாரம் என்னும் இரண்டு துறைகளின் வளர்ச்சி, கராவ சமூகத்தின் உயர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாயிற்று. 

காலனிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதாரப் பன்முகப்படுத்தல் (ECONOMIC DIVERSIFICATION) பல வாய்ப்புக்களை வழங்கியது. இவ்வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்திக் கொண்ட தென்மேற்கு, தெற்குக் கரையோரப் பகுதிகளின் கராவ, சலாகம, துராவ ஆகிய சாதிச் சமூகப் பிரிவினர் பொளாதார மூலதனத்தைத் திரட்டிக் கொண்டனர். அவர்கள் கையில் திரண்ட பொருளாதார மூலதனம், தமது இளம் தலைமுறையினருக்கு உயர்தரமான கல்வியைப் பெற்றுக் கொடுக்க உதவியது. இதன் பயனாக இச் சாதிப் பிரிவினர் மத்தியில் இருந்து மருத்துவம், சட்டம் ஆகிய உயர் தொழில்களைச் செய்வோரான உயர் தொழிலர் வகுப்பு (PROFESSIONAL CLASSES) உருவானது. இவ்வாறு உயர் கல்வி கற்ற உயர் தொழிலர் பலர் இச்சாதியினர் மத்தியில் உருவான காரணத்தால் இச் சமூகப் பிரிவினரிற்கு நற்பெயரும், கீர்த்தியும் கிடைத்தன. இவை சமூக அந்தஸ்தையும் தேடிக் கொடுத்தன. இக் காரணத்தால் காலனித்துவத்திற்கு முந்திய காலத்தில் இல்லாத சமூக அந்தஸ்து காலனிய காலத்தில் கராவ, சலாகம, துராவ சாதியினருக்குக் கிடைத்தது. இம் மாற்றங்களின் விளைவுகளை மைக்கல் றொபர்ட்ஸ் பின்வருமாறு விபரித்துக் கூறியுள்ளார்.

“கோப்பி, தென்னை ஆகிய இரு தோட்டத் துறைகளும் வேகமாக வளர்ச்சியுற்றன. இதனால் அடுத்தடுத்த பத்தாண்டுகளில் இவற்றால் புரட்சிகர மாற்றங்கள் நிகழ்ந்தன. கராவ, சலாகம, துராவ சாதி உயர் குழுக்கள் பழைய சமூகத் தடைகளை உடைத்தெறிந்தனர். புதிய எல்லைகளைக் கடந்து முன் சென்றனர் (றொபர்ட்ஸ் 1995:97).” 

சாதியும் தேர்தல் அரசியலும் 

1830 தொடக்கம் சட்டசபைப் பிரதிநிதித்துவம் கொவிகம சாதியனரின் ஏகபோக உரிமை ஆயிற்று. அதுவும் அவ்வுரிமை முதற் தர கொவிகமவின் (FIRST CLASS GOVIGAMA) உரிமையாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. இம் முதற் தர கொவிகம ஆங்கில மயப்பட்டதாகவும் இருந்தது. இந்த ஏகபோக உரிமையை 1870 களின் பின்னர் கராவ, சலாகம, துராவ சமூகப் பிரிவினர் முறியடிக்க முயற்சி செய்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இச் சாதிப் பிரிவினர்களின் முயற்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது. அவர்களின் பிரதிநிதி ஒருவருக்குச் சட்ட சபைப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. 

பிரதிநிதிகளை நியமனம் செய்வதோடு, தேர்தல் மூலம் தெரிவு செய்யும் முறை இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட காலம் முதல் தேர்தலில் சாதிகளின் போட்டி மிகவும் வெளிப்படையான விடயமாக அமைந்தது. உதாரணமாக 1900 ஆம் ஆண்டில் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக ‘கொட்டஹேன’ வட்டாரத்தில் சப்மன் டயஸ் என்பவரும் சொலமன் பெர்ணாண்டோ என்பவரும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சப்மன் டயஸ் ‘முதற் தர கொவிகம‘ குடும்பத்தில் தோன்றியவர். சொலமன் பெர்ணாண்டோ கராவ சமூகத்தவர். வேட்புமனுத் தாக்கல் செய்த சப்மன் டயஸ் பின்னர் அதனை மீளப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அக் காலத்தில் கல்வித் தகைமைகள் உடையவர்களுக்கே வாக்குரிமை இருந்தது. கொட்டஹேன வட்டாரத்தில் படித்தவர்களான கராவ சாதியினர் கொவிகம சாதியின் படித்தவர்களை விட அதிகமானவர்களாக இருந்தபடியால் தாம் தோல்வி அடைவது நிச்சயம் என உணர்ந்த சப்மன் டயஸ் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். தேர்தல் முறையோடு சாதியடிப்படையிலான போட்டி தோன்றி விட்டது என்பதற்கு இது சிறந்த எடுத்துக் காட்டாகும்.

சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துக் காட்டும் முக்கியமான நிகழ்வு அடுத்து இடம்பெற்றது. முதன் முதலாக தேர்தல் மூலம் சட்ட சபைக்கு ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் 1911 இல் இடம்பெற்ற போது டாக்டர். மார்க்கஸ் பெர்ணாண்டோ என்னும் கராவ சமூகத்தவர் தேர்தலில் போட்டியிட்டார். அக்காலத்தில் ஆங்கிலம் கற்றவர்களுக்கே வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்டிருந்தபடியால் கொவிகம சாதியினரை விட கராவ சமூகத்தவர்களில் வாக்குரிமை பெற்றோர் அதிக அளவினராக இருந்தனர். இதனை நன்குணர்ந்த கொவிகம சாதி அரசியல்வாதிகள் போட்டியிடுவதை தவிர்த்துக் கொண்டு தமிழரான பொன்னம்பலம் இராமநாதனை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.

கொவிகம வாக்காளர்கள், தமிழ் வாக்காளர்கள் என்ற இரு பிரிவு வாக்காளர்களின் ஒன்று சேர்ந்த பலத்தால் டாக்டர். மார்க்கஸ் பெர்ணாண்டோ தோல்வியுற்றார். கொவிகம சாதியினர் இச் சந்தர்ப்பத்தில் தமிழரான பொன்னம்பலம் இராமநாதனைத் தெரிந்து அவரைத் தூண்டி தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெற வைத்தனர். சிங்களவர் வாழும் பகுதிகளில் இந்தப் போட்டி ‘கரா-கொவி‘ (கராவ சாதி எதிர் கொவிகம சாதி) போட்டியாகவே அமைந்தது என றொபர்ட்ஸ் குறிப்பிடுகிறார். கொவிகம சாதிக்கும், கராவ சாதிக்கும் இடையிலான போட்டி தேர்தலில் மிக வெளிப்படையாகவே வெளிப்பட்டது என ஆர்.ஏ. ஆரியரட்ண குறிப்பிட்டுள்ளார் (ஆரியரட்ண, 1981:27).

டொனமூர் ஆணைக்குழுவிற்கும், பின்னர் சோல்பரி ஆணைக்குழுவிற்கும், காலனிய அரசாங்கத்திற்கும் தேர்தல் அரசியலில் சாதியென்னும் காரணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1920 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சாதி அடிப்படையிலான குழு அடையாளம் தேர்தல் அரசியலில் முக்கிய வகிபாகத்தைப் பெற்றது.

சனத்தொகையில் பெரும்பான்மையினரான கொவிகம சாதியினரின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் பிற சாதியினர் தமக்கு விசேட பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். கராவ சாதியினரான முக்கிய தலைவர் ஒருவர் விகிதாசார முறையைக் கூட அவ் வேளை சிபார்சு செய்தார். அவர் வாக்குரிமையைப் பரவலாக்கி வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் காலனித்துவ கால சட்ட சபையில் கொவிகம அல்லாத சாதிகளுக்கு நியாயமான பிரதிநிதித்துவத்தை வழங்குவதையும் சிபார்சு செய்தார் (உயன் கொட 2000:15).

அரசாங்கம் தேர்தல் தொகுதி நிர்ணயம் செய்வதற்கான ஆணைக்குழுக்களை நியமித்த பொழுது, தொகுதிகளின் எல்லைகளை வரையறை செய்வதில் சாதி முக்கியமான ஒரு விடயமாகக் கவனம் பெற்றது. 1945 இல் முதலாவது தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு (THE DELIMITATION COMMISSION) நியமிக்கப்பட்டது. அப்போது நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் இருந்து சிறுபான்மை சாதிகள் கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்தனர். தாம் செறிவாக வாழும் புவியியற் பகுதிகளை தனித் தொகுதிகளாக எல்லை வகுத்துக் கொடுப்பதன் மூலம் தமக்கு பாதுகாப்பு தரும்படி இச் சாதிகள் கோரிக்கை விடுத்தன. 1945 இல் நியமிக்கப்பட்ட தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு ‘அரசியல் பிளவு சாதியின் அடிப்படையில் அமையப் போகிறது என்னும் தவிர்க்க முடியாத உண்மையை தயக்கத்தோடு ஏற்றுக் கொண்டது’ (றையன் 2004:279). அக் காலம் முதல் தேர்தல் நிர்ணய ஆணைக்குழுக்களுக்கு சாதியடிப்படையில் தொகுதிகளை எல்லையிட்டு சிறுபான்மைச் சாதிகளின் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழுக்களும் இக் கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு சிறுபான்மை சாதிகள் சிலவற்றிற்குப் பிரதிநிதித்துவ வாய்ப்புக்களை வழங்கின. (ஜிஜின்ஸ் 1979:40)

இலங்கையின் தேர்தல் அரசியல் வரலாற்றின் தொடக்க காலத்தில் நடைபெற்ற டெடிகமத் தொகுதித் தேர்தல், சாதி என்ற காரணியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். 

டெடிகம கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் இடம். 1936 இல் நடைபெற்ற சட்ட சபைத் தேர்தலில் டெடிகம தொகுதியில் டட்லி சேனநாயக்கவும் (கொவிகம) என்.எச். கீர்த்தி ரட்ணவும் (பத்கம) போட்டியிட்டனர். தேர்தல் தினத்தன்று டட்லி சேனநாயக்கவின் ஆதரவாளரும் உயர்நிலை அரசியல்வாதியுமான யோன் கொத்தலாவல தனது ஆதரவாளர்களைக் கொண்டு பத்கம சாதி வாக்காளர்களை வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல விடமால் தடுத்தார். அவ்வாறு அவர்களைத் தடுத்திராவிட்டால் என்.எச். கீர்த்தி ரட்ணவிற்கு அவர்களது வாக்குகள் கிடைத்திருக்கும். கொத்தலாவலவின் செயலின் பாதக விளைவுகளை டட்லி சேனநாயக்க பின்னர் அனுபவிக்க வேண்டி ஏற்பட்டது. இத் தொகுதியில் 1936 இன் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் பத்கம வாக்காளர்கள் டட்லி சேனநாயக்கவிற்கு எதிராக வாக்களித்தனர். 

dudley

1950 களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, தேர்தல்களின் போது கீழ்நிலை/அடிநிலை சாதிகளின் வேட்பாளர்களுக்கு ஓரளவு இடம் கொடுத்தது. ஆனால் 1967 களிலும், 1970 களிலும் நிலைமை மாறியது. ஐக்கிய தேசியக் கட்சியும் தனது அரசியல் செயல் திட்டத்தில் கீழ்நிலைச் சாதிகளுக்கும் இடம் கொடுத்து அவர்களின் வாக்குகளைக் கவர்ந்தது. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் அரசியல் திட்டத்தில் கீழ்நிலைச் சாதிகள் பற்றிய ஓரளவு கவலையும் அனுதாபமும் வெளிப்பட்டது. அவரது 1956 தேர்தல் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகும். ‘பண்டாரநாயக்க மரபுவழி அடையாளங்களையும், உறவுகளையும் சமகால அரசியல் சட்டகத்திற்குள் தந்திரமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை பெற முயன்றார்’ (ஜிஜின்ஸ்:1979:14).

பண்டாரநாயக்க மட்டுமல்லாமல் பிறரும் இத் தந்திரத்தைக் கையாண்டனர். மார்க்சிஸ்டுகளும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தல்களின் போது இத் தந்திரத்தை கையாண்ட போதும் இரு தரப்பாருக்கும் இடையிலான அணுகுமுறையில் ஒரு வேறுபாடு இருந்தது. தாழ் நிலையில் இருந்த குழுமங்களின் நபர்களிற்கு சமூக அசைவியக்கம் (SOCIAL MOBILITY) மூலம் உயர்ச்சியடைய விரும்பியவர்களிற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போகத் தேவையில்லை தம் கட்சியில் சேரலாம் என ஒரு மாற்று வழியைக் காட்டியது. மார்க்சிஸ்டுகள், இருந்து வரும் சமூக முறைமையை  அடியோடு மாற்றியமைப்போம் என்ற உறுதி மொழியை வழங்கினர் (தாரா குமாரசுவாமி 1988;224:245).

bandaranaike

1959 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க இறந்த பின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கொவிகம மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 1964 டிசம்பர் கொள்கை விளக்கம் கொவிகம மேலாதிக்கத்தின் விளைவாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்த ஒரு குழு அக் கட்சிக்கு எதிராக வாக்களித்து அரசாங்கத்தை பதவியழக்கச் செய்தது. அக் குழுவினர் கொவிகம அல்லாத சாதியினராக இருந்தனர். சி.பி. டி சில்வா (சலாகம) இக் குழுவுக்கு தலைமை தாங்கி கட்சியில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். சி.பி. டி சில்வாவுடன் வெளியேறிய மகாநாம சமரவீர (துராவ), அசோக கருணாரத்தின (பத்கம) என்போர் அக்குழுவின் முக்கிய ஆளுமைகளாவார். 1970 களில் ஐக்கிய தேசியக் கட்சி கொவிகம அல்லாத சாதிகளுக்கு ஓரளவு இடம் கொடுத்தது. இவ்வாறான உள்ளீர்க்கும் கொள்கை (INCLUSIVE POLICY) கொவிகமவிற்குள் கீழ் நிலையில் இருந்த சாதிகளின் வாக்குகளையும் ஆதரவையும் அணி திரட்ட அக் கட்சிக்கு உதவியது. மரபு வழியாக உயர்சாதி கொவிகமவினதும், அச் சாதியின் உயர் குழுவினதும் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவுச் சமூகத் தளத்தை விரிவாக்கிக் கொண்டது. இதனால் 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் எப்போதும் இல்லாத அளவு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.

c p de silva

விகிதாசார முறைப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டதற்கு முன்பிருந்த தேர்தல் முறையையும், அதற்குப் பிந்திய காலத்தின் இன்றைய விகிதாசாரத் தேர்தல் முறையையும் ஒப்பிட்டு இரண்டிலும் சாதியும் ஜனநாயக அரசியலும் எவ்வாறு இடைவினை புரிந்தன என்பதை ஆராய்ந்து பார்த்தல் அவசியமானது. சில சாதிச் சமூகங்கள் பிரதிநிதித்துவத்தை பெற முடியாமல் உள்ள போதிலும் வேறு சில சாதிச் சமூகங்கள் குறிப்பிட்ட பிரதேசங்களில் செறிந்து வாழ்வதால் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்துள்ளது. உதாரணமாக அம்பலாங்கொட கராவ சாதிக்கும், பலப்பிட்டிய சலாகம சாதிக்கும், மாத்தறை துராவ சாதிக்கும் உரிய தேர்தல் தொகுதிகள் என்ற கருத்து பரவலாக அறியப்பட்ட விடயமாகும். ஆனால் இவ்விதமாக ஒரு சாதித் தொகுதி என உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையை விகிதாசார பிரிதிநிதித்துவமுறை குழப்பிவிட்டது. இதனால் விகிதாசாரமுறை சாதி உணர்வை அதிகரித்துள்ளது. விருப்பத் தெரிவு வாக்களிப்பு முறை, வாக்காளருக்கு தான் விரும்பும் கட்சியின் வேட்பாளர் பட்டியிலில் இருந்து வேட்பாளர்களைத் தெரிவு செய்து மூன்று வாக்குகளை வழங்கும் சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. மாவட்டம் முழுமையையும் ஒரு தேர்தல் தொகுதியாகக் கொள்ளப்படுவதால், பல்வேறு பகுதிகளிலும் சிதறிக் கிடக்கும் வாக்குகளை ஒன்று சேர்த்து தமது வாக்காளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு வாக்காளர்களிடம் காணப்படுகிறது. இதனால் சாதி என்னும் காரணி விகிதாசார முறையில் முக்கியம் பெற்றுள்ளது. இதனால் சாதி உணர்வு மீண்டும் கிளறப்பட்டு சாதி அடையாளங்களும், சாதி விசுவாசமும் மேற்கொள்ளப்படுவதைக் காணமுடிகிறது (டி சொய்சா 2012:156-157). இவ்விடயம் அடுத்து வரும் பகுதியில் விரிவாக ஆராயப்படும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

12246 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)