தமிழில் : த. சிவதாசன்
தொழில் முனைவோர் தமது எண்ணங்களை வணிகப்படுத்தி பணம் பண்ணுகிறார்கள். அள்ளப்படும் குப்பைகள் பெறுமதிமிக்க கட்டிடப் பொருட்களாகவும் எரிபொருட்களாகவும் மாற்றப்படுகின்றன. மைக்குறோவேவ் உலைகளும், தீக்குச்சிகளும் இன்னோரன்ன தற்செயலான கண்டுபிடிப்புகளும் மிகப்பெரிய தொழிற்கூடங்களை உருவாக்கிவிட்டன. உபத்திரவமெனக் கருதப்பட்ட பசையை யாரோ ‘சுப்பர் குளூ’ (superglue) என விற்கத் தொடங்கிவிட்டார்கள். ஒட்டவில்லை என விலக்கிவைத்த பசையை இன்னொருவர் ‘போஸ்ற் இற்’ (Post-It) குறிப்புக் கட்டுகளாக விற்கிறார். தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட அன்டிபயோட்டிக்ஸ், இன்சுலின் போன்ற மருந்துகள் இன்று பல மில்லியன்களை ஈட்டித்தரும் வணிகப் பொருட்களாகிவிட்டன.
இங்கு பணம் மட்டுமல்ல பேசு பொருள், புகழும் கூடவே. நீங்கள் திருவாளர் லவுட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது திருவாளர் பைறோ பற்றி? ‘பைறோ’ போல்பொயிண்ட் (ballpoint) பேனாவினால் புகழ் பெற்ற பெயர் அது. 1888 இல் திரு. லவுட் போல்பொயிண்ட் பேனாவுக்கான உரிமத்தைப் (patent) பதிவு செய்தார். முறையான வணிகச் சந்தைப்படுத்தல் இல்லாமையால் லவுட்டின் முயற்சி தோற்றுப் போனதுடன் அவரது உரிமமும் கைகழன்று போனது. முறையான தொழில் முனைவோருடன் அவர் தன்னை இணைத்துக் கொண்டிந்தாரேயானால் இப்போது நாம் இப்போது ‘லவுட்’ பேனாக்களைத் தொலைத்துக்கொண்டோ அல்லது இரவல் வாங்கிக்கொண்டோ இருந்திருப்போம். ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, 1938 இல், பைறோவுக்கு ‘போல்பொயிண்ட்’ உரிமம் வழங்கப்பட்டது. அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு ‘பைறோ’ பேனாக்களுக்கு பெரும் கிராக்கி இருந்தது. 1950 இல் மார்செல் பிச் (Bich) என்ற இன்னுமொரு தொழில் முனைவர் புதிய பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தைப் பாவித்து, பாவனை முடிந்ததும் குப்பைக்குள் வீசக்கூடிய, மிகவும் மலிவாக பைறோக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். மை முடிந்ததும் அதை வீசிவிட்டுப் புதிய பேனாவை வாங்கிவிடலாம். இதற்குப் பெயர் தான் ‘பிக்’ (Bic). இன்று அநேகமான அலுவலகங்களிலும், வீடுகளிலும், பெரும்பாலானாரின் பைகளிலும் புழக்கத்திலிருப்பது இந்த ‘பிக்’ பேனா தான். 2006 இல் அது 56 வருடங்களைப் பூர்த்தி செய்தபோது 100 பில்லியன் பேனாக்களை விற்றுத் தீர்த்திருந்தது.
உத்வேகம் (inspiration), கற்பனை (invention), புதுமை (innovation), செயலாக்கம் (execution), வணிகப்படுத்தல் (commercialization) ஆகியனவே இங்குள்ள மந்திரம். வியாபாரங்களை, வேலைகளை, சம்பளத்தை, இலாபத்தை உற்பத்தி செய்து தருவது இந்த மந்திரம் தான். பாடசாலைகளையும், மருத்துவமனைகளையும் நிர்மாணிப்பதற்கான வரியை ஈட்டித் தருவதும் இதுதான். இந்த உத்வேகத்தை முதலீட்டாளர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் கொண்டு செல்வது முதல், கற்பனைகளை வடிவமைக்கத் தூண்டுவது, விற்பனைக்கான பாதைகளை சந்தைகளாக மாற்றுவது, புதுமைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்வது, பணியாட்களுக்கு ஊதியத்தைப் பெற்றுக்கொடுப்பது, முதலீட்டாளர்களுக்கு இலாபம் பெற்றுக்கொடுப்பது என இம்மந்திரம் நீட்சி பெறும்.
ஸ்ரான்ஃபோர்ட், ஹார்வார்ட், ஒக்ஸ்ஃபோர்ட், கேம்பிரிட்ஜ், இம்பீரியல், யூ.சீ.எல் போன்ற பிரபல பல்கலைக்கழகங்கள் முதல் ஐ.ஐ.ரீ போன்ற பெருந்தொகையான இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகள் வரை செய்யும் மந்திரம் கல்விமான்களையும் தொழில்முனைவர்களையும் இணைத்துவிடுவது தான். பல பில்லியன் டாலர்கள் முதலீடுகளை இந்நிறுவனங்கள் இலகுவாகக் கறந்துவிடுகின்றன. பெருங் கட்டணங்களை வசூலிக்கும் சட்ட வல்லுனர்களைப் பணிக்கமர்த்தி இப் பல்கலைக்கழகங்கள் அதேயளவு கூர்மதி கொண்ட சட்ட நிபுணர்களைக் கொண்ட தொழில் முனைவோருடன் பேரம் பேசித் தமது இணைப்புகளை நிர்மாணித்துக் கொள்கின்றன. இப் பேரத்தின் மூலம் இக் கல்வி நிறுவனங்கள் குறைந்த பட்சம் தொழிலில் பங்குதாரராகவோ (equity share) அல்லது பாவனை உரிமைக்காரராகவோ (royalty) தம்மை இணைத்துக் கொள்கின்றன. பேராசிரியர்களும் மாணவர்களும் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகுவதற்குக் காரணகர்த்தாக்களாகின்றனர். இவற்றில் சில உலகின் இராட்சத நிறுவனங்களாகவும் பரிணமிக்கின்றன.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களும் உயர் கல்வி நிறுவனங்களும் இதையே தான் செய்யவேண்டும். பல்கலைக்கழக வணிக இணைப்பு (University Business Link -UBL) என்னும் அமைப்பு இலங்கையில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இப்படியான முயற்சியை எடுத்து வருகிறது. பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் பிரசுரத்தின் பிரகாரம் பல்கலைக்கழக – வணிக இணைப்புகளை அபிவிருத்தி செய்யப் பல்கலைக்கழகங்கள் உள்ளடக்க வேண்டியவை எனப் பரிந்துரைக்கப்படும் விடயங்கள்:
- வணிகத்தை அடிப்படையாகக்கொண்ட மாணவர் வேலைத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை அபிவிருத்தி செய்தல்.
- வணிக நிறுவனங்களுக்கு பயிற்சிகளை அளித்தல்.
- வணிக நிறுவனங்களுக்கு (தொழில்நுட்ப) ஆலோசனைகளை வழங்கும் சேவைகளை நடைமுறைப்படுத்தல்.
- பல்கலைக்கழகங்களில் அறிசார் சொத்து (Intellectual Property – IP) பற்றிய செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தல்.
- பல்கலைக்கழக உப தொழில்முனைப்புகளை முன்னெடுத்தல்.
- வணிக நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்குமிடையே கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்தல்.
- தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பல்கலைக்கழகங்களில் ஆய்வுகூடங்களை நிர்மாணித்தல்.
யாழ் பல்கலைக்கழக – வணிக இணைப்பு
யாழ். பல்கலைக்கழக – வணிக இணைப்பு அலுவகத்துக்கு வரும்படி அதன் பணிப்பாளரும் யாழ். பல்கலைக்கழக விலங்கியல் பேராசிரியருமான ரீ. ஈஸ்வரமோகன் என்னை அழைத்திருந்தார். யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரியான அனு ராகவன் தலைமையிலான குழுவினரை நான் இங்கு சந்திக்க முடிந்தது. ராகவனை நான் இதற்கு முன்னரும் சந்தித்திருக்கிறேன். சூழலியல் திட்டங்களுட்படப் பல திட்டங்களில் அவர் பணிபுரிந்திருக்கிறார். அவரது குழுவில் இரண்டு அண்மைக்கால பட்டதாரிகளும் யாழ்ப்பாணத்தில் முன்னணியிலிருக்கும் பாடசாலையான ஹார்ட்லி கல்லூரி முன்னாள் மாணவர் ஒருவரும் இருக்கிறார்கள். இப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை உரிமங்களாக்கும் (patent) முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இது இன்னும் ஆரம்ப நிலையிலேதான் இருக்கிறது. 14 உரிமக் கோரிக்கைகளில் 3 தான் இதுவரை பதிவு பெற்றிருக்கின்றன. யாழ். பல்கலைக்கழகத்தின் 48 வருட வரலாற்றில் இந்த மூன்று பதிவுகள் தான் பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமானவை.
இவ்வுரிமங்களில் ஒன்று இலங்கை உரிம அலுவலகத்திற்குச் சொந்தமானது. நீர்க்குழாயில் நீரோட்டம் (water tap) மற்றும் கழுவல் திரவ ஓட்டம் (soap dispensing) ஆகியவற்றின் அளவைத் தேவைக்கேற்றபடி தானியக்க முறையில் கட்டுப்படுத்தும் ஒரு வகையான ‘ஸ்மார்ட் ராப்’ இன் உருவாக்கத்துக்கான கண்டுபிடிப்புக்கு இவ்வுரிமம் சொந்தமானது. ஒரு மருத்துவமனையில் நீர், சவர்க்காரத்திற்கான பாவனை, பாடசாலை அல்லது உணவகத்திலுள்ளதை விட சற்று அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் நீர், சவர்க்காரத்தின் வீணடிப்பைக் குறைப்பதுவே இதன் நோக்கம். ஏனைய உரிமப் பதிவுகளில் ஒன்று முகக் கவசங்களை முப்பரிமாண அச்சுயந்திரங்களில் (3D Printers) வார்த்தெடுப்பதற்கான கண்டுபிடிப்புக்கானது. இன்னுமொரு பெருந்தொற்று வந்தால் மருத்துவமனைப் பணியாளர்களும், சக மனிதரும் இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் இம் முகக்கவசங்கள் வடிவமைக்கப்படும்.
தற்போது யாழ். குடாநாட்டில் பிரபலமாக வந்திருக்கும் பணமீட்டும் தொழிலாகிய கடலட்டைப் பண்ணைகளில் தோன்றியிருக்கும் ஒரு பிரச்சினை அட்டைகளின் தோல்களில் சுண்ணாம்புப் படிவு ஏற்படுவது. இவ்வட்டைகளைச் சுத்தப்படுத்த தற்போது பணியாளர்கள் அவற்றின் தோல்களை கைகளால் உரஞ்சிக் கழுவுகிறார்கள். இது சில வேளைகளில் அட்டைகளைப் பாவனைக்குதவாமலாக்கி விடுகின்றது. இவ்வட்டைக் கழிவுகளை வீணாக்காதிருப்பதற்காக யாழ். பல்கலைக்கழகம் உருவாக்கிய திட்டம் கழிவுகளாக்கப்பட்ட அட்டைகளை இலகுவாகவும் விரைவாகவும் விலங்குத் தீனியாக்குவது. இதற்கு அவர்கள் ஒருவகை கரும் இலையான்களின் நுண்புழுக்களைப் (Black Soldier Fly Larvae) பெருமளவில் உற்பத்தி செய்து அவற்றின் மூலம் கழிவுகளைத் தீனியாக்குகிறார்கள். மீன்கள், பன்றிகள், கோழிகள் போன்றனவற்றிற்கு இவ்வுணவு சிறந்த தீனியாகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாயத் திணைக்களம் கண்டுபிடித்திருக்கும் இன்னுமொரு புதுமை வில்வம் பழத்திலிருந்து பாகு தயாரித்தல். இலங்கையில் சாதாரணமாக விளையும் இப்பழம் பல வைட்டமின்களைக் கொண்டதுடன் ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. முல்லைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ‘முல்லை மில்க் புறொடக்ட்ஸ்’ (Mullai Milk Products) ஸ்தாபனத்துடன் இணைந்து 2022 இல் யாழ். பல்கலைக்கழகம் இப் பாகுவிற்கான உரிமத்தைப் பதிவுசெய்திருக்கிறது. மிகவும் ருசியானதும் ஊட்டமுள்ளதுமான தயிர்ப்பாகுவாக இது தற்போது இலங்கையில் விற்பனையாகிறது.
இன்னுமொரு மிகவும் சுவாரசியமான ஆராய்ச்சி பனங்காயிலிருந்து (நுங்கு) வளர்ப்பு மீன்களுக்குத் தேவையான உணவாக பாகு தயாரிப்பது பற்றியது. தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்களின் நிறங்களை அழகாக்கும் திறமை இவ்வுணவுக்கு உண்டு என்கிறார் ராகவன்.
பல்கலைக்கழக – வணிக இணைப்பு வேறு பல ஆதார சேவைகளையும் செய்கிறது. உரிமப் பதிவுகளைச் செய்வது (Patent Filing), வர்த்தக முத்திரைகளை (Trade Marks) பதிவு செய்வது, பதிப்புரிமை மற்றும் தொழில் வடிவமைப்பு, வர்த்தகப் பங்காளிகளைத் தேடிக் கொடுப்பது, ஒப்பந்தங்களைப் பேரம் பேசுவது, புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கிக் கொடுப்பது போன்ற துறைகளிலும் அது தனது சேவைகளை வழங்கி வருகிறது.
மக்களே உற்பத்திகள்
கண்டுபிடிப்புக்களுக்கும், சிறந்த சிந்தனைகளுக்கும் அப்பால் ஒரு பல்கலைக்கழகத்தின் சிறந்த உற்பத்தியாக இருப்பது அதன் மாணவர்களும் பட்டதாரிகளுமேயாவர். சிந்தனைகளை மீன்களாக உருவகித்தால் பட்டதாரிகள்தான் மீனவர்கள். பல்கலைக்கழக – வணிக இணைப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் உத்தியாக யாழ். பல்கலைக்கழகம் மாணவர்களிடையே சில போட்டிகளை வைக்கிறது. இதில் வடக்கிலிருக்கும் சில நிறுவனங்களுடன் மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக ஊடாடுகிறார்கள். இரு தரப்பினரும் இணைந்து வணிக நெறிகள் சிலவற்றைப் பரீட்சிக்கிறார்கள். அனுபவம் மிக்க தொழில் முனைவோருக்கும் மாணவர்களுக்குமிடையே போட்டிகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் இப்படியான நிகழ்வொன்று பிரித்தானியாவைச் சேர்ந்த பேராசிரியர் கணேஸ் கே. ராஜா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக – வணிக இணைப்பின் ஆலோசகர் குழுவில் ஒருவரான பேராசிரியர் கணேஸ், பிரித்தானியாவிலுள்ள றோயல் விவசாயக் கல்லூரியில் வணிக நடத்தையும் புதுமையும் என்ற துறையில் பேராசிரியராகக் கடமையாற்றியவர். இப்போது நிர்வாகம் மற்றும் தொழில்முறை மேம்பாட்டு மையத்தில் நிர்வாகப் பணிப்பாளராகப் பணிபுரிகிறார்.
இணைப்பு என்பது இருவழிப் பாதை போன்றது. பல்கலைக்கழகங்கள் சாதகமான பிரதிபலன் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையோடு தமது ஆராய்ச்சியை தொழில்துறைகளுக்கு பரிந்துரைக்கலாம். ஆனால் உண்மையில் தொழில்துறைகளிடம் என்ன இருக்கிறது, என்ன தேவை, எது இலாபகரமானது என்பது பற்றிய அறிவு பல கல்விமான்களுக்கு இருப்பதில்லை. ஆனால் சந்தை எதை எதிர்பார்க்கிறது, எது விற்பனையாகக் கூடியது, எது வருவாயைத் தரக்கூடியது என்பதை தொழில்துறை நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. இதனால், தொழில்துறைகள் தான் தமக்குத் தேவையான துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களைத் தூண்ட வேண்டும்.
தமது வணிக ஆற்றல் வளம் பற்றி பல பல்கலைக்கழகங்கள் அறிந்திருப்பதில்லை. ஆனால் பல்கலைக்கழகங்களில் என்ன ஆய்வுகள் நடைபெறுகின்றன என்பதை வணிகத் தரப்பு நன்றாக அறிந்து வைத்திருக்கிறது. பல்கலைக்கழக – வணிக இணைப்பு தங்கக் கோபுரங்களிலிருக்கும் கல்விமான்களையும் உலகம் முழுவதிலிருக்கும் கடைகளையும் சந்தைகளையும் இணைக்கும் ஏணியாகத் தொழிற்படுகிறது. எமது பொருளாதாரத்தின் இரண்டு முனைகளையும் இணைப்பது இந்த ஏணிதான்.
நன்றி : மறுமொழி, Lanka Business Online (www.lankabusinessonline.com)
தொடரும்.