வாழ்வாதாரத் தொழில் முனைவுகளில் பெரிதும் விரும்பப்படுவதும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக் கூடியதுமான தொழிற்துறையாக கைத்தொழிற்துறை இருந்து வருகிறது. வளர்ச்சியடைய விரும்பும் எந்தப் பொருளாதாரமும் கைத்தொழிற்துறையின் மீது வளர்ச்சியை ஏற்படுத்தினால் தான் அது நிலைபேறுடைய பொருளாதார வளர்ச்சியாக அமையும். இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கையிலும், முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான 7 பிரதான பகுதிகளில், நான்கு துறைகள் கைத்தொழிற் துறை சார்ந்தே காணப்படுகின்றன. பின்வருவன அந்த 07 பிரதான பகுதிகள் :
- உணவுப் பாதுகாப்பு (Food Security)
- வருமான அதிகரிப்பு (Income Generation)
- வாழ்வாதார அபிவிருத்தி (Livelihood Development)
- அரசு, தனியார் கூட்டு முதலீடுகளினூடாக முதலீட்டுச் சந்தர்ப்பங்களை உயர்த்திக் கொள்ளுதல் (Promoting Investment Opportunity through PPP Model)
- சர்வதேசச் சந்தைத் தேவைப்பாடுகளை நிறைவு செய்யக் கூடிய தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குதல் (Generating Techno crops to cater International Labor Market)
- மீள் புதுப்பிக்க, சக்தி வளப் பயன்பாட்டினை வலுப்படுத்தல் (Enhancing renewable share in the energy mix)
- நுண் தொழிலிருந்து சிறிய அளவிலான தொழில் முயற்சியாண்மையை அறிமுகம் செய்வதன் மூலம் பிராந்திய மட்டத்திலான குறித்த உற்பத்தியை வளர்ச்சியடையச் செய்தல் (Introducing Micro to small entrepreneurship based on regional specific product the specific basis)
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கைத்தொழில் துறையினை நிர்ணயம் செய்யும் வளங்களாக இப் பகுதியில் காணப்படும் இயற்கை வளங்களும், கனிய வளங்களின் இருப்பும் இருந்து வருகிறது. கிழக்கு மாகாணத்தில் சிறிய தொகையில் காணப்படும் பாரிய கைத்தொழில்களாக ‘பிறீமா’ மா ஆலை, ‘பிறீமா’ உணவு வசதிகள், மிட்சுபிசி டோக்கியோ சீமெந்து, ‘Fuji’ சீமெந்து, இயற்கை உயிர் வாயுச் சக்தி ஆலை, இந்திய எண்ணெய், திருமலைக் கப்பல் துறை, கைத்தொழிற் பேட்டை, அம்பாறை நவுகம் புற் கைத்தொழிற் பேட்டைக் கம்பனி ஆகியன இருந்து வருகின்றன. வடக்கு மாகாணத்தில் திக்கம் வடிசாலை, ஆணையிறவு உப்பளம், வடகடல் நிறுவனம், அச்சுவேலிக் கைத்தொழில் பேட்டை, ‘Mass Intimate’ ஆடைத் தொழிற்சாலைகள், அல்லிப்பளைக் காற்றாலை ஆகிய பாரிய கைத்தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன.
வட மாகாணத்தில் 5,344 நுண் மற்றும் சிறிய கைத்தொழில்கள் காணப்படுகின்றன. இதில் 11,177 பேர் நேரடியாக ஈடுபட்டிருக்கின்றனர். நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழிலாக 260 கைத்தொழில்கள் காணப்படுவதுடன், இதில் 13,791 பேர் நேரடியாகப் பயன்பெற்று வருகின்றனர். இந்த வகையில், வட மாகாணத்தில் மொத்தமாக 5,604 கைத்தொழில் மையங்களிலிருந்து 24,968 பேர் நேரடியாக நன்மை பெற்று வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் 114 சிறிய கைத்தொழில்களில் 114 பேரும், 32 நடுத்தரக் கைத்தொழில்களில் 896 பேரும், 50 பாரியளவிலான கைத்தொழில்களில் 15,904 பேருமாக, மொத்தமாக 196 கைத்தொழில் சாலைகளில் 16,914 பேர் நேரடியாகத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனை மாவட்ட அடிப்படையில் பிரித்து நோக்கின், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய தொழில் முனைவில், 2,238 மையங்களில் 3,854 பேர் பங்கு பற்றுவதுடன், நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழில் சார்ந்த 65 நிலையங்களில் 1,744 பேர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில், 949 தொழில்கள் சிறிய அளவில் செயல்படுவதுடன், 1,708 பேர் இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இங்கு 18 நடுத்தர மற்றும் பாரிய தொழில் முயற்சிகள் இயங்குவதுடன், இதில் 3,721 பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 221 சிறிய தொழில் முயற்சிகள் இயங்கி வருவதுடன், இதில் நேரடியாக 1,269 பேர் ஈடுபட்டுள்ளனர். இங்கு 17 நடுத்தர மற்றும் பாரிய தொழில்கள் இயங்கி வருவதுடன், இதில் 2,420 பேர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் வவுனியா மாவட்டத்தில் 615 சிறிய தொழில் முயற்சிகளில் 1,640 பேர் ஈடுபட்டிருப்பதுடன், 07 பாரிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் 4,011 பேர் ஈடுபட்டுள்ளனர். இதே போல் மன்னார் மாவட்டத்தில் 1,301 சிறிய தொழில் முயற்சிகளில் 2,706 பேர் நேரடியாக ஈடுபட்டுள்ளதுடன், பாரிய மற்றும் நடுத்தரத் தொழில் முனைவுகளில் 1,895 பேர் நேரடியாகப் பயன்பெற்று வருகின்றனர்.
மாகாணத் திட்டமிடல் செயலகத்தின் புள்ளிவிபரத் தகவல்களின்படி, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 25 சிறிய கைத்தொழில்களில் 28 பேரும், 8 நடுத்தரக் கைத்தொழில் மையங்களில் 851 முயற்சியாளர்களும், 20 பாரிய கைத்தொழிற் சாலைகளில் 4,994 பேரும் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 55 சிறிய கைத்தொழில் மையங்களில் 45 பேரும், 07 நடுத்தரக் கைத்தொழில் மையங்களில் 285 பேரும், 17 பாரிய கைத்தொழிற் சாலைகளில் 6,442 பேரும் தொழிலில் ஈடுபடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் 34 சிறிய கைத்தொழில் மையங்களில் 41 பேரும், 7 நடுத்தரக் கைத்தொழில் மையங்களில் 145 பேரும், 13 பாரிய கைத்தொழிற் சாலைகளில் 4,468 பேரும் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உணவு – குடிபானங்களின் உற்பத்தி, புடவை – ஆடைகள் உற்பத்தி, தோற் பொருட்களின் உற்பத்தி, சுரங்கத் தொழில், மரம் சார்ந்த உற்பத்திகள், காகிதாதிகள் சார்ந்த உற்பத்திகள், இராசாயன உற்பத்திகள், இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் சார்ந்த உற்பத்திகள், இரும்பு சார் உற்பத்திகள், அட்டவணைப்படுத்தப்படாத ஏனைய பொருட்கள், சீமெந்து சார்ந்த உற்பத்திகள், அழகுக்கலை தொழில்நுட்பம், தும்புசார் கைத்தொழில்கள், பனை சார் கைத்தொழில்கள், மட்பாண்டக் கைத்தொழில்கள் போன்ற தொழில்கள் ஓரளவு தகமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறன.
கைத்தொழிற் பேட்டைகள்
அரசின் ஒதுக்கீட்டுக் காணிகளில், கைத்தொழிற் துறையின் விருத்தியினை மையமாகக் கொண்டு தனித்தனியாக தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு, அவற்றுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகள், நீர் – கழிவகற்றல் வசதிகள், மின்சார வசதிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து, ஆர்வமுடைய பல்வேறு முயற்சியாளர்களை ஒரே மையத்தில் செயல்பட வைத்து, குறைந்த செலவில் தொழிலை முன்னெடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட கொள்கையே கைத்தொழிற் பேட்டைகள் ஆகும். இக் கைத்தொழிற் பேட்டைகள் வடக்கு கிழக்கு மாகாணத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் கப்பல் துறையில் 50 ஏக்கர் விஸ்தீரணக் கைத்தொழிற் பேட்டையில் 08 நிறுவனங்கள் செயற்படுகின்றன. இங்கு 851 பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதே போல் மட்டக்களப்பில் திராய்மடு கைத்தொழில் பேட்டை 24 ஏக்கர் நிலத்தில் செயற்படுகிறது. இங்கு 07 நிறுவனங்கள் செயற்படுவதுடன் 300 வரையான பணியாளர்கள் வேலை பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் நவகம்புர கைத்தொழிற் பேட்டை 20 ஏக்கர் விஸ்தீரணத்தில் செயற்படுகிறது. இங்கு 07 நிறுவனங்கள் செயற்படுவதுடன் 45 பேர் நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதே போல் யாழ்ப்பாணம், அச்சுவேலியில் 40 ஏக்கர் விஸ்தீரணத்தில் கைத்தொழிற் பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200 பேர் வரையிலானோர் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 87 நிறுவனங்கள் இங்கு செயற்பட்டு வருகின்றன. வவுனியா, பம்பைமடுவில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கைத்தொழிற் பேட்டை நிறுவப்பட்டுள்ளது. இங்கும் 34 வரையிலான நிறுவனங்கள் செயற்படுவதுடன் 140 பேர் நேரடி வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். இதே போல் கிளிநொச்சி மாவட்டத்தை மையப்படுத்தி ஒரு கைத்தொழிற் பேட்டையொன்றை அமைக்க வேண்டுமென முன்மொழியப்பட்ட திட்டத்துக்கமைய பரந்தன் பகுதியில் 50 ஏக்கர் நிலம், முன்னர் பரந்தன் கெமிக்கல் கூட்டுத்தாபனம் இயங்கிய காணியில் ஒதுக்கப்பட்டிருந்த போதும் இதுவரை அது அமுலாக்கம் செய்யப்படவில்லை.
எது எவ்வாறாயினும் கைத்தொழில் முயற்சிகளின் ஆரம்பம் என்பது எப்போதும் சவாலான ஒன்றாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஆரம்ப நிலைக் கைத்தொழில்களில் இருந்து உருவாக்கப்படும் வெளியீடுகள் உற்பத்திச் செலவு கூடியதாகவும் தரம் குறைந்ததாகவுமே முதலில் வெளிவரும். இதனால் இவ் உற்பத்திகளின் சந்தைப் போட்டி என்பது கடினமாகக் காணப்படும். ஏலவே வளர்ச்சியடைந்த கைத்தொழிற் சாலைகளில் இருந்து சந்தைக்கு வரும் பொருட்கள், விலை குறைந்ததாகவும் தரம் உயர்வானதாகவும் காணப்படும் என்பதால் இந்தப் பொருட்களுடன் போட்டியிடுவது என்பது குழந்தைக் கைத்தொழில்களுக்கு (Infant Industries) சவாலாகவே காணப்படும். இதனால் இப் பிரச்சனையை ஆராய்ந்த பொருளியலாளர்கள் குழந்தைக் கைத்தொழில்களை பாதுகாப்பதற்கான பாதுகாக்கப்பட்ட சந்தைகளை (Protected Market) அரசாங்கங்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை 1960 களில் முன்மொழிந்திருந்தன. இதன் அடிப்படையில் போட்டிப் பொருட்களை மட்டுப்படுத்த, இறக்குமதித் தடைகளை நாடுகள் கடைப்பிடித்தன. அதனூடாக உள்நாட்டுத் தொழிற்துறை மிக வேகமாக வளர, தொழிற் பிரிப்பும் சிறப்புத் தேர்ச்சியும் முன்னேறி, அவை வளர்ந்த தொழில்களின் பொருட்களுடன் போட்டி போடும் நிலைக்கு உயர்ந்து வந்தன. இந்த அனுபவம் இந்தியாவின் கைத்தொழில் வளர்ச்சியில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட ஒரு பொருளாதாரமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் இக் கொள்கையை அடியொற்றி இறக்குமதித் தடைகள் விதிக்கப்பட்டதாயினும் அது 1980 களில் கைவிடப்பட்டு, ஒரு தோல்வியடைந்த அனுபவமாக மாறியது. இந்த நிலையில் ‘குழந்தைக் கைத்தொழில்களின்’ பாதுகாப்புக்கென முன்மொழியப்பட்ட கைத்தொழிற் பேட்டைகள், உற்பத்திச் செலவைக் குறைத்து, புதிய தொழில் முயற்சியாளர்களை கைத்தொழிற் துறை நோக்கி எடுத்து வருவதற்கான தந்திரோபாயத்தை முன்னெடுத்துள்ளது. எனினும் குடும்ப மட்டத்தில் தொடங்கப்பட்ட சிறிய அளவிலான தொழிற்துறைகளை, இயந்திரத் தொழில்நுட்பத்துடன் இணைத்து, உலகச் சந்தையின் தரம் வாய்ந்த பொருட்களுடன் போட்டி போடும் வகையில் முயற்சியாளர்களை வழிப்படுத்திச் செல்வதில் அரசு கவனம் செலுத்தவில்லை. உணவு பதனிடலும் பொதியிடலும், மரம் சார்ந்த கைத்தொழில்கள், ஆடைத் தயாரிப்புகள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, பனைசார் உற்பத்தி, சேவைக் கைத்தொழில்கள், தென்னைசார் கைத்தொழில்கள், கடலுணவு பதனிடல் போன்ற தொழில்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் இயங்குகின்ற குடிசைக் கைத்தொழில்களாகக் காணப்படுகின்றன. இவை வேலை வழங்கும் தொழிற்துறைகளாக அன்றி வீட்டு மட்டத்திலான தொழில்களாகவே இயங்கி வருகின்றன. பின்வருவன இந்தத் தொழில்களை தரமுயர்த்துவது தொடர்பில் எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளாகும் :
- தர ரீதியான குறைபாடுகளும் சந்தை வாய்ப்பின்மையும்.
- பொதியிடலில் காணப்படும் குறைபாடுகள்.
- நியமங்களைப் பேணுவதிலுள்ள குறைபாடுகள்.
- சட்டக்கட்டுப்பாட்டு நெருக்குவாரங்கள்
உணவுப் பதனிடல் – பொதியிடல் மற்றும் பனை, தென்னைசார் உற்பத்திகளே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கைத்தொழில் முனைவுகளில் பெரிதும் வளர்ந்து வரும் கைத்தொழில் முனைவுகளாகும். இத் தொழிற்துறைகளில் தர ரீதியாக முன்னேற்றத்தைக் கொண்டு வருவதில் பாரிய பிரச்சினைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தென்னை சார்ந்து, பெருமளவு இயந்திரத் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு உற்பத்திகள் நடைபெறும் போதும், தும்பு மட்டுமே வெளியீடாக தென்னிலங்கைக்கு ஏற்றப்பட்டு வருகிறது. இதே போலவே உணவுப் பதனிடலின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பெருமளவிலான அரிசி, அரிசி மா, பலகார வகைகள், தானிய வகைகள், பருப்பு வகைகளின் பொதியிடல், தரம் – கவர்ச்சி போன்றன காரணமாக சந்தைப் போட்டியிலும் தரப் பாதுகாப்பிலும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. பெருமளவில் தரம் கூடிய பொருட்களைத் தாராளமாக இறக்குமதி செய்யும் எம் நாட்டில், முதலாம் நிலைக் கைத்தொழில் பொருட்களை போட்டியிட்டு விற்பனை செய்தல் கடினமான செயலாகவே காணப்படுகின்றது. இதன் காரணமாக தொழில் தொடங்கப்பட்ட சிறு கைத்தொழில்கள் சிறிது காலத்திலேயே கைவிடப்பட்டு விடுகின்றன. இதனால் இளம் தொழில் முயற்சியாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். நிறுவன ரீதியான வலைப்பின்னலுக்கு ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட சந்தை வசதிகள் கொண்ட தொழில்கள் மட்டுமே நிலைத்திருக்கக் கூடியதாகவுள்ளது.
கைத்தொழிற் பொருட்களின் உற்பத்தியின் மீது நியமங்களை அடிப்படையாக வைத்தே இலாப – நட்டப் பகுப்பாய்வை மேற்கொள்ள முடியும். பொருட் கொள்வனவு, மறு கட்டளையிடும் மட்டம் போன்ற மிக முக்கிய தீர்மானங்களும் ஆக்கப் பொருட் செலவீனமும் நியமங்களின் அளவினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நியமங்களைப் பராமரிப்பது தொடர்பில் போதிய அறிவின்மை காரணமாக, அதிக உற்பத்தியானது நட்டத்தை ஏற்படுத்தி விடுவதால், தொழிலிலிருந்து ஒதுங்கும் தன்மை கைத்தொழில் உற்பத்தியில் பரவலாக ஏற்படுகிறது. நியமங்களை முறையாக நிர்ணயிப்பது, அதன்படி வெளியீடு இடம் பெறுவதை உறுதி செய்து பதிவு ஏடுகளைப் பராமரிப்பது போன்ற எந்த முறைகளுமின்றி குடிசைக் கைத்தொழில்கள் செயற்படுவதனால் அவை விரைவில் நட்டமடைந்து போகின்றன. மாறாக, நியம வெளியீடு மாறுபடும் போது ஆலோசனையாளர்களின் சேவையைப் பெறுதல், சாத்திய வள ஆய்வை மீள் பரிசீலனை செய்தல் என்பன இடம்பெற்றால், தொழிற்சாலைகள் மூடப்படுவதனையும் தொழில் நட்டம் ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ளலாம்.
தொடரும்.