பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : பயனுள்ள சர்வதேச அனுபவங்கள் சில
Arts
18 நிமிட வாசிப்பு

பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களிற்குப் பொருத்தமான அரசியல் யாப்புக்களை வரைதல் : பயனுள்ள சர்வதேச அனுபவங்கள் சில

April 21, 2024 | Ezhuna

இனக் குழுமம், சமயம், மொழி, பண்பாடு ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்ட பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் (MULTI – CULTURAL SOCIETIES) சமாதான வழிகளில் தீர்க்க முடியாதனவான சிக்கலான அரசியல் பிரச்சினைகள் தீவிரமடைந்து உள்நாட்டுக் குழப்பங்களிற்கும், உள்நாட்டு யுத்தங்களிற்கும் வழிவகுத்துள்ளன. இதனை மூன்றாம் உலக நாடுகளின் சமகால வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ்வரசியல் பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் சமாதான வழியில் தீர்த்தல், சம்மந்தப்பட்ட நாடுகளின் அமைதிக்கும், சமூக – பொருளாதார – அரசியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக அமைகிறது. அமைதி வழியான தீர்வை அரசியல் தீர்வாக (POLITICAL SOLUTION) அமைப்பதோடு அதிகாரப் பகிர்வு (POWER SHARING), சுயாட்சி (SELF RULE) ஆகியவற்றுக்கான ஆட்சிக் கட்டமைப்புக்களை, அரசியல் யாப்புச் சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்குவதும் இன்றியமையாத முன் தேவையாக உள்ளது. அந்த வகையில், ‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்’ என்னும் இப்புதிய தொடரில் மூன்றாம் உலக நாடுகளான இலங்கை, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியா, சூடான், மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் அனுபவங்களை விளக்கியுரைக்கும் கட்டுரைகளின் தமிழாக்கம் வெளியிடப்படும். பல்வேறு தீர்வு மாதிரிகள், அத்தீர்வு மாதிரிகளின் பின்னால் உள்ள அரசியல் கோட்பாடுகள் (POLITICAL THEORIES), அரசியல் யாப்புத் தத்துவங்கள் (CONSTITUTIONAL PRINCIPLES) என்பனவும் விளக்கிக் கூறப்படும்.

ஆங்கில மூலம்: ஜயம்பதி விக்கிரமரட்ண

அரசியல் யாப்பு அறிஞரும், முன்னாள் அமைச்சருமான ஜயம்பதி விக்கிரமரட்ண அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை “CONSTITUTION MAKING IN MULTI – CULTURAL SOCIETIES : SOME INTERNATIONAL EXPERIENCES” ஒரு சிறு நூலின் அளவுடையது. 74 பக்கங்களைக் கொண்ட இந் நீண்ட கட்டுரையின் முதல் 9 பக்கங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைத் தழுவி இத் தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. 

wicramaratna

‘அதிகாரப் பகிர்வும் சுயாட்சியும் : மூன்றாம் உலக அனுபவம்‘ என்னும் இப் புதிய கட்டுரைத் தொடரின் முதலாவது கட்டுரையாக இவ்வாக்கத்தை வழங்குகிறோம்.

பண்பாட்டுப் பன்மைத்துவம் (CULTURAL DIVERSITY) ஒரு தேசத்திற்கு அழகையும் பொலிவையும் வழங்குகிறது. அதேவேளை அது குறித்த தேசத்திற்குள் முரண்பாடுகளையும் மோதல்களையும் உருவாக்குகிறது. பல்வேறு பண்பாட்டுச் சமூகங்களும் தத்தமது அடையாளங்களைப் பேணுவதுடன் ஒன்றுபட்ட ஒரு தேசமாக, ஒருமையுணர்வை வளர்த்து முன்னேற்றப் பாதையில் செல்வதில் பல இடர்பாடுகள் எழுகின்றன. மோதல்களையும், முரண்பாடுகளையும் சட்டங்களால் மட்டும் முகாமை செய்து தீர்வு செய்ய முடியாது. ஆயினும் சட்டங்கள் தேவையற்றவை என அவற்றை நிராகரிப்பதும் தவறு. பண்பாட்டுப் பன்மைத்துவத்தோடு தொடர்புடைய பிரச்சினைகள் யாவும் அரசு அதிகாரம் (STATE POWER) என்பதுடன் தொடர்புடையன. பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களில் அரசு அதிகாரத்தைப் பகிர்தல், வரையறை செய்தல் ஆகிய அரசியல் யாப்புப் பிரச்சினைகள் சிக்கலானவையாக உள்ளன. பன்மைத்துவத்துடன் இணைந்ததாக, தாம் அல்லாத பிற குழுக்கள் மீது அச்சம் – குரோதம் – தப்பெண்ணம் – ஆதிக்கம் செய்யும் மனப்பான்மை என்பனவும், விட்டுக் கொடுத்தலும் இணங்கிப் போதலும் ஆகிய பண்புகள் இன்மையும் செயற்படுகின்றன. இவை பிரச்சினைகளைச் சிக்கலாக்குகின்றன. 

மேற்கூறிய சிக்கல்கள் இருந்த போதும், பன்மைப் பண்பாட்டுச் சமூகங்கள் பல, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் வெற்றி கண்டுள்ளன. வேறு சில பிரச்சினைகளைத் தீர்வு செய்வதில் தோல்வி கண்டுள்ளன. இலங்கை, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் தோல்வியைத் தழுவிய நாடுகளின் பட்டியலில் இன்று சேர்ந்துள்ளது வருத்தத்தைத் தருவது. 

அரசியல் யாப்புச் சட்டம் பொது இணக்கப்பாட்டோடு ஏற்கப்பட வேண்டிய சாசனம். அரசியல் யாப்புச் சட்டத்தை இயற்றும் செயல்முறை சமூக ஏற்புடமையைப் பெறத்தக்கதாக இருத்தல் வேண்டும். ஐக்கிய அமெரிக்காவில் 13 அரசுகள் (STATES) ஒன்று கூடி தமக்கென ஒரு அரசியல் யாப்பை ஏற்று அங்கீகரித்தன. இந்தியாவின் அரசியல் யாப்புச் சபை (CONSTITUENT ASSEMBLY) அரசியல் யாப்பை வரைந்தது. இச் சபையில் நாட்டின் பல்வேறு பகுதிகளின் மக்களின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர். மூன்று ஆண்டுகள் இச் சபை அரசியல் யாப்புப் பற்றி விவாதித்தது. பொது மக்கள் தங்கள் கருத்துக்களைக் கூறச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 7,635 திருத்தங்கள் பிரேரிக்கப்பட்டன. 2,473 திருத்தங்கள் பற்றி சபையில் விவாதம் நடைபெற்றது. 1949 நவம்பர் 26 ஆம் திகதி இந்திய அரசியல் யாப்பு ஒரு மனதாக ஏற்கப்பட்டது. பிலாடெல்பியா மாநாட்டில் ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்பட்ட நிகழ்வின் பின்னர் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு 1949 இல் இந்தியாவின் அரசியல் யாப்பு ஏற்கப்பட்டமையாகும். இந்தியாவின் ஐக்கியத்தின் குறியீடாக, பெரும் தொகையான மக்களால் ஏற்கப்பட்டதாக இந்திய அரசியல் சாசனம் விளங்குகிறது. 

இலங்கையின் இன்றைய அரசியல் யாப்பு 1978 இல் உருவாக்கப்பட்ட போது, அது இலங்கையின் எல்லாப் பகுதி மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்கவில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற் தடவையாக ஐக்கிய தேசியக் கட்சி 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘தமிழ் மக்களுக்கு நியாயமான மனக்குறைகள் உள்ளன. அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதபடியால் தான் பிரிந்து தனி நாடாகப் போக வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்களிடம் தோன்றியது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. அக் கட்சி தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு செய்வதற்காக வட்ட மேசை மாநாடு கூட்டப்படும் எனவும் வாக்குறுதி அளித்தது. 

1977 தேர்தலில் தழிழர் விடுதலைக் கூட்டணி (TULF) பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்து தமிழர் வாழ் பகுதிகளில் போட்டியிட்டது. பெரும்பான்மை இடங்களை அக் கட்சி வென்றது. வடக்குக் கிழக்கிற்கு வெளியே வாழ்ந்த தமிழர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தனர். அதே போல் முஸ்லீம்களும், இந்தியத் தமிழர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களித்தனர். ஐக்கிய தேசியக் கட்சி தனி அங்கத்தவர் தேர்தல் முறையான ‘FIRST-PAST-THE POST’ தேர்தலில் 5/6 பெரும்பான்மையைப் பெற்று வெற்றியடைந்தது. ஆயினும் மொத்த வாக்குகளில் 51 வீதத்திற்கும் சிறிது குறைவாகவே பெற்றது. வாக்குறுதி கொடுத்ததற்கு அமைய வட்ட மேசை மாநாட்டைக் கூட்டுவதற்குப் பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி ஒரு புதிய அரசியல் யாப்பை வரைந்து அதனைச் செயற்படுத்தியது. தமிழர்கள் புதிய அரசியல் யாப்பினை வரைவதில் பங்குபற்றுவதை நிராகரித்தனர். தென்பகுதியின் எதிர்க்கட்சி பலவீனமுற்றிருந்தது. அதன் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அரசியல் யாப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

1978 அரசியல் யாப்பு இலங்கையை ஒற்றையாட்சி அரசாகப் பிரகடனப்படுத்தியது. பௌத்த சமயத்திற்கு முதன்மையிடத்தை வழங்கியது. நிறைவேற்று அதிகாரம் உடைய பலம் கொண்ட ஜனாதிபதி முறையை உருவாக்கியது. அரசியல் யாப்பின் சில முக்கிய பிரிவுகளைத் திருத்துவதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் சர்வசன வாக்குரிமை மூலம் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனவும் விதிக்கப்பட்டது. விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை எந்தக் கட்சியும் பெற முடியாது என்பதால் எதிர்காலத்தில் அரசியல் யாப்பை திருத்துவதென்பதே இயலாத விடயமாக்கப்பட்டது. 1978 அரசியல் யாப்பு மக்களின் ஏற்புடமையைப் பெறத் தவறி விட்டது. 

சிறுபான்மை இனங்களின் தலைவிதி

காலனிய ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்கள் தமது விருப்பத்தின்படி நாடுகளின் எல்லைக் கோடுகளை வரைந்தார்கள். இதனால் வரலாற்றுத் தேசிய இனங்களின் வாழ்விடங்கள் பிரிக்கப்பட்டு எழுந்தமானமாக எல்லையிடப்பட்டன. பல்வேறுபட்ட பண்பாடுகளை உடையனவும் சமயம், மொழி முதலியவற்றால் வேறுபட்ட அடையாளங்களை உடையனவுமான பண்பாட்டுச் சமூகங்கள் அவற்றின் விருப்பத்திற்கு மாறாக ஒன்றிணைக்கப்பட்டன. சில சமூகங்கள் வரலாற்று ரீதியாகத் தாம் அனுபவித்து வந்த சுயாதீனத்தை இழந்தன. 

maasai

ஆபிரிக்காவில் மாசை (MAASAI) தேசிய இனத்தவர்கள் கென்யா (62%), தன்சானியா (38%) எனப் பிளவுபடுத்தப்பட்டு இரு வேறு நாடுகளுக்குள் உள்ளடக்கப்பட்டனர். அனியி (ANYI) என்ற தேசிய இனத்தவர்கள் கானா (58%), அய்வரிகோஸ்ட் (42%) என இரு நாடுகளுக்கிடையே பிளவுபட்டு கிடந்தனர். சிவா (CHEWA) இனம் மொசாம்பிக் (50%), மாலாவி (34%), சிம்பாவே (16%) என பிரிபட்டுக் கிடந்தது. நெம்பு (NDEMBU) இனத்தவர் அங்கோலா, சயர் (ZAIRE), சாம்பியா ஆகிய மூன்று நாடுகளுக்குள்ளும், நுக்வே (NUKWE) இனத்தவர் அங்கோலா, நமிபியா, சாம்பியா, பொட்ஸ்வான என்ற நான்கு நாடுகளுக்குள் சிதறிக் கிடந்தனர். மன்டிங்கோ (MANDINKO) இனம் மேற்கு ஆபிரிக்காவில் காம்பியா, செனகல், மாலி, பேர்கினோ ப(F)சோ, கினியா பிசோ, சியராலியோன் என்னும் ஆறு நாடுகளில் சிதறுண்டு உள்ளது. மலிங்கே (MALINKE), மான்டிங்ஹோ (MANDINGO) என்ற வேறு இரு பெயர்களாலும் அழைக்கப்படும் இந்த இனம் 11 மில்லியன் சனத்தொகையை உடைய பெரிய இனமுமாகும். ஒரு காலத்தில் மாலியில் இவ்வினத்தவர் தாம் மிகப்பெரிய இனமாகத் திகழ்ந்தனர். இன்றும் காம்பியாவில் மன்டிங்கோ மிகப்பெரும் இனமாக விளங்குகிறது. கீழே தரப்பட்டுள்ள நில வரைப்படம் மன்டிங்கோ இனத்தவர் செறிந்து வாழ்ந்த பகுதியை விளக்குவதாக உள்ளது. 

mandingo

எரிட்றியா (ERITREA), சர்வதேச சமூகத்தால் அரசு அங்கீகாரம் மறுக்கப்பட்ட தேசிய இனத்திற்குச் சிறந்த உதாரணமாகும். இத்தாலியின் காலனியாகவிருந்த எரிட்றியா இரண்டாம் உலக யுத்தத்தில் இத்தாலி தோற்கடிக்கப்பட்ட பின்னர் பிரித்தானியாவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. எரிட்றியாவின் மக்களைக் கலந்தாலோசியாமலே எரிட்றியாகளின் தலைவிதியை உலகின் பிற நாடுகள் பல தீர்மானித்தன என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். பிரித்தானியர்கள் அந் நாட்டைச் சமய அடிப்படையில் கூறுபோடும் ஆலோசனையை முன்வைத்தனர். சூடான் நாட்டிற்கு கையளிக்கப்பட்ட பகுதியில் முஸ்லீம்களும், எதியோப்பியாவுக்குக் கையளிக்கப்பட்ட பகுதியில் கிறிஸ்தவர்களும் ஆதிக்கம் செலுத்தினர். உலக யுத்தத்தின் பின்னர் இத்தாலியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்கள் என எதிர்பார்த்த சோவியத் ரஷ்யா எரிட்றியாவை முதலில் இத்தாலிக்கே நம்பிக்கைப் பொறுப்பாகவோ அல்லது காலனியாகவோ கொடுக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தது. அராபிய நாடுகள் எரிட்றியா சுதந்திர நாடாவதை விரும்பின. அந் நாட்டில் முஸ்லீம்களே பெரும்பான்மையினராதலால், தமக்கு அந் நாடு ஆதரவாக இருக்கும் எனக் கருதிய அராபிய நாடுகள் அதற்கு சுதந்திரம் வேண்டும் எனக் கேட்டனர். 

எத்தியோப்பியாவின் அரசுத் தலைவரான பேரரசர் ஹெய்லி செலஸ்சிக் (EMPEROR HAILE SELASSIE) இத்தாலிய சோமாலிலாந்து, எரிட்றியா என்ற இரு தேசங்களையும் எத்தியோப்பியாவிற்கே தந்துவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை அவர் பாரிஸ் நகரில் இடம்பெற்ற சமாதான மாநாட்டிலும் முன்வைத்தார். ஐ.நா சபையின் அமர்விலும் இதனைத் தெரிவித்தார். இரண்டாம் உலக யுத்தத்தில் பேரரசர் செலஸ்சிக் தமக்கு உதவி செய்த நன்றிக் கடனாக, அவரின் கோரிக்கையை ஆதரிப்பதென பிரித்தானியாவும் ஐக்கிய அமெரிக்காவும் முடிவு செய்தன. ஐக்கிய நாடுகள் மன்றத்தில் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவரான யோன் பொஸ்டர் டல்லஸ் பேசும் போது பின்வருமாறு குறிப்பிட்டார். 

“நீதியின்படி எரிட்றியன் மக்களின் கருத்துக்களிற்குச் செவி சாய்க்க வேண்டும். ஆயினும், ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர நலன்களையும், செங்கடல் பிராந்தியத்தில் எமக்குள்ள பாதுகாப்புத் தேவைகளையும் உலக அமைதியையும் கருத்திற் கொண்டு எறிட்றியாவை எதியோப்பியாவுடன் இணைத்து விட வேண்டியுள்ளது.”

ஐக்கிய நாடுகள் சபையின் ஆணைக்குழு ஒன்று எதியோப்பியாவுடன் எரிட்றியாவை ஒரு இறுக்கமற்ற கூட்டிணைவில் சேர்த்து விடலாம் என்று குறிப்பிட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தச் சிபார்சை ஏற்றது. பிரித்தானியா, எரிட்றியா மக்கள் எதியோப்பியாவுடன் இணைய விரும்புகிறார்களா என்பது குறித்து சர்வசன வாக்கெடுப்பு (REFERENDUM) நடத்தியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக எரிட்றியாவின் சட்ட சபைக்கான தேர்தலை நடத்தியது. இச் சட்ட சபையில் முஸ்லீம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமத்துவமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. கட்சிகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா. ஆணைக்குழு சமர்ப்பித்த அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டது. எரிட்றியாவின் மக்களில் 75% வீதத்தினர் பூரண சுதந்திரத்தையே கோருகின்றனர் என்பதை ஒரு இரகசிய அறிக்கையில் ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் அமெரிக்க இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பி வைத்தார். இறுக்கமற்ற கூட்டிணைவு (CONFEDERATION) என்னும் உறுதியுரையும் பின்னர் கவனிக்கப்படவில்லை. பேரரசர் செலஸ்சிக் கொடுத்த அழுத்தம் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட பிரதம நிர்வாகி, பதவியில் இருந்து விலகினார். எரிட்றிய மக்களின் சுதேச மொழிகள் அராபியும், ரிகிரினியாவும் (TIGRINYA) ஆகும். ஆனால் எதியோப்பிய அரசு ‘AMHARIC’ மொழியை உத்தியோக மொழியாக அறிவித்து எரிட்றிய மக்கள் மீது திணித்தது. சமஷ்டி முறையை ஒழித்து விட்டு எதியோப்பியாவுடன் ஐக்கியமாகும்படி பேரரசர் செலஸ்சிக் அழுத்தம் பிரயோகித்தார். எதியோப்பியாவுடன் எரிட்றியா இணைக்கப்பட்டது. 1958 இல் ஆரம்பித்த எரிட்றிய மக்களின் விடுதலைப் போராட்டம் 1993 வரை நீடித்தது. 99.79% மக்கள், யுத்தத்தின் முடிவில், எரிட்றியாவின் விடுதலைக்காக வாக்களித்தனர். அவ் வாக்கெடுப்பு ஐ.நா வின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. வேறு வழியில்லாமல் எதியோப்பியா எரிட்றியாவின் சுதந்திரத்தை ஏற்றது.

Eritrea

பன்மைச் சமூகங்களை இவ்வாறு எழுந்தமானமாகக் கூறு போட்டு அவற்றின் சுயநிர்ணய உரிமையை மறுப்பது, முன்னாள் காலனிகளில் மட்டும் நடைபெற்ற விடயம் என்று கூற முடியாது. ஆக்கிரமிப்பு மூலம் நாடுகளைக் கைப்பற்றல், இனக் குழுமங்களை அவற்றின் விருப்பத்திற்கு மாறாக பேரரசுகள் இணைத்துக் கொள்ளுதல், எழுந்தமானமாக நாடுகளின் புவியியல் எல்லைகளை வகுத்தல் என்பன வரலாறு முழுவதும் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பும் எதிர்பாராத விபத்துக்களும் நிறைந்தது தான் ஐக்கிய இராச்சியம் (U.K), ஸ்பானியா, பெல்ஜியம் ஆகிய பன்மைத் தேசியங்கள் வாழும் நாடுகளின் வரலாறு. மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளும் காலனிகளை பிடித்து பன்மைப் பண்பாட்டுச் சமூகங்களைக் கூறுபோட்டுப் பிரித்து ஆட்சி செய்த வரலாற்றை உடையவை. 

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் 100 வரையான தேசிய இனங்கள் இருந்தன. ஆனால் இத் தேசிய இனங்கள் பெரும்பான்மைத் தேசிய இனம் ஒன்றின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட அரசுகளுக்குள் உள்ளடக்கப்பட்டன. சோவியத் யூனியனின் அரசுகளின் அரசியல் எல்லைகளும் இனக் குழுமப் புவிப்பரம்பல் எல்லைகளும் ஒன்றோடொன்று இணைந்திருக்கவில்லை. மக்களின் இடப்பெயர்வும், இனக் குழுமங்களின் புவியியற் பரம்பலை மாற்றியமைத்தது. இறுதியில் சோவியத் யூனியன் உடைந்து தனித்தனி நாடுகள் உருவாகின. அப்போது 43 மில்லியன் மக்கள் தமது இனக் குழுமங்களில் இருந்து பிரிக்கப்பட்டு வேறு அரசியல் எல்லைக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலை காணப்பட்டது. உதாரணமாக 33.4% வீதம் ஆர்மீனியர்கள் ஆர்மீனியாவிற்கு வெளியே வாழ்கிறார்கள். 

இவ்வாறு வாழும் தேசிய இனங்கள் பற்றிய புள்ளி விபரம் வருமாறு :

  • தாஜிக்குகள் (TAJIKS) – 24.7%
  • பைலோ ரஷ்சியர்கள் (BELO RUSSIANS) – 21.3%
  • கசாக்கியர் (KAZAKHS) – 19.7%
  • ரஷ்யர்கள் (RUSSIANS) – 17.4%
  • மொல்டோவியன்கள் (MOLDOVANS) – 16.7%

இதனை விட முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற பின்வரும் நாடுகளுக்குள் ரஷ்யர்கள் பெருந் தொகையில் வாழ்ந்து வரும் நிலை பெரும் சிக்கல்களுக்கு காரணமாக உள்ளது. 

  • லாட்யாவில் – 27.8% ரஷ்யர்கள்
  • எஸ்டோனியாவில் – 24.8% ரஷ்யர்கள்
  • உக்கிரெயினில் – 17.3% ரஷ்யர்கள்

என ரஷ்ய இனக் குழுமம் (புட்டினின்) ரஷ்யாவிற்கு வெளியே வாழ்ந்து வருகின்றது. 

  • ஆர்மினியா எதிர் அஜர் பைஜான்
  • ஜோர்ஜியா எதிர் ஒசற்றியா (OSSETIA)
  • ஜோர்ஜியா எதிர் ஆப்காசியா (ABKHAZIA)
  • ஜோர்ஜியா எதிர் இங்குஸ் (INGUSH)
  • மொல்டோவியா எதிர் PRINDENESTROVJE

ஆகிய முரண்பாடுகள் ஒரே புவியியல் எல்லைக்குள் திணிக்கப்பட்டுள்ள இனக் குழுமங்களின் பிரச்சினைகளே என்பது கவனிக்கத்தக்கது. 

kurdistan

குர்தியர்கள் (KURDS) என்னும் தேசிய இனத்தின் பிரச்சினை இன்னொரு சிறந்த உதாரணமாகும். துருக்கி, ஈராக், ஈரான், ஆர்மீனியா, சிரியா என்னும் ஐந்து நாடுகளின் எல்லைகளுக்குள் குர்தியர்கள் பிளவுபட்டுச் சிதறியுள்ளனர். அவர்கள் வாழும் இந்தப் பகுதி குர்திஸ்தான் (KURDISTAN) என அழைக்கப்படுகிறது. ஈராக்கிற்குள் அமைந்த குர்திஸ்தான் பகுதிக்கு 2005 இன் ஈராக் அரசியல் யாப்பு சமஷ்டி அலகு என்னும் அந்தஸ்தை வழங்கியுள்ளது.

நாடுகளின் எல்லைகளுக்குள் அகப்பட்டுள்ள சிறுபான்மை இனங்கள்

பண்பாடு, சமயம், மொழி என்பவற்றால் வேறுபட்ட இனக் குழுமங்கள் (ETHNIC COMMUNITIES) ஒரு நாட்டின் எல்லைக்குள் சேர்ந்து வாழும் நிலை இருக்கும் போது இனக் குழுமங்களின் உரிமைகள் தொடர்பான சிக்கலான பிரச்சினைகள் எழுகின்றன. சட்டசபை போன்ற அரசாங்க நிறுவனங்களில் வெவ்வேறு இனக் குழுமங்களிற்குப் பிரதிநிதித்துவம் வழங்குதலும் அதிகாரத்தில் அவற்றின் பங்கும் (SHARE OF STATE POWER) மிக முக்கியமான பிரச்சினையாகும். சிறிய இனக் குழுமங்களும் சமூகக் குழுமங்களும் ஒரு நாட்டிற்குள் சிதறிப் பரவியிருக்கும் நிலையில் அவ் இனக் குழுமங்களுக்கு தேவைப்படுவது சமத்துவம் (EQUALITY) ஆகும். சட்ட சபைகளிலும் நிர்வாகத் துறையிலும் தமது சனத் தொகை வீதாசாரத்திற்கு ஏற்ற அளவு பிரதிநிதித்துவத்தை அவ் இனக் குழுமங்கள் எதிர்பார்க்கின்றன. இதுவே அவை கேட்கும் சமத்துவ உரிமை. அத்தோடு இச் சிறுபான்மை இனக் குழுமங்களுக்குப் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்பதற்கான அரசியல் யாப்பு உத்தரவாதமும் (CONSTITUTIONAL GUARANTEES OF EQUALITY AND NON-DISCRIMINATION) வழங்கப்பட வேண்டும் என அவை எதிர்பார்க்கின்றன. வேலை வாய்ப்புகளில் சம உரிமை, கல்வி வசதிகள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்களிற்கு அனுமதி என்பன போன்ற பிரச்சினைகளும் எழுகின்றன. அச் சமூகங்களின் பண்பாட்டைப் பாதுகாப்பதும், அவற்றை வளர்ப்பதும் மிக முக்கியமான விடயமாகும். சிறுபான்மை இனக் குழுமங்களின் மொழியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும். அரசாங்கத்துடன் தமது சொந்த மொழிலேயே கருமங்களை ஆற்றுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் உரிமை வேண்டும். சிறிய சமூகங்கள் தம்மை ‘சிறுபான்மை’ (MINORITY) என்ற சொல்லால் அழைப்பதையே வெறுக்கின்றன. அவை தம்மை ஒரு தேசிய இனம் (NATION) அல்லது மக்கள் (A PEOPLE) என அழைப்பதையே விரும்புகின்றன. 

‘சிறுபான்மை’ என்ற சொல் சிறிய இனக் குழுமங்களை இழிவுபடுத்தும் சொல்லாகக் கருதப்படுகின்றது. 

தாயகம் அல்லது வாழிடம் 

சிறிய இனம் ஒன்று ஒரு நாட்டின் குறித்த ஒரு பகுதியில் செறிந்து வாழுமிடத்து அது ஒரு புவியியல் பகுதியைத் தனது தாயகமாக அல்லது வாழிடமாகக் கொண்டதாக அமைகிறது. அவ்வாறான வாழிடத்தைக் கொண்ட சமூகங்கள் வெறுமனே ‘சமத்துவம்’ (EQUALITY) என்பதுடன் திருப்தியடைவதில்லை. அச் சமூகங்கள் தாம் வாழும் பகுதியிலே தமது அலுவல்களைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் அரசியல் அதிகாரத்தையும் வேண்டி நிற்கின்றன. ஒருங்கே ஓரிடத்தில் ஒரு சமூகம் வாழும் போது தனது பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்தவும், அரசியல் தளத்தில் அரசு அதிகாரத்தில் (STATE POWER) பங்கேற்பு செய்யவும் விரும்புகிறது. இதனை சுய ஆட்சி (AUTONOMY) என்பர். சுயாட்சிக்கான கோரிக்கையை இச் சமூகம் முன்வைக்கக் காரணமாக அமைவது ஒன்றாக ஓரிடத்தில் வாழ்தல் (BEING TOGETHER) என்னும் பண்புக் கூறாகும். பிரதேச சுயாட்சிக்கான கோரிக்கை ஒரு குறித்த சமூகம் ஓரிடத்தில் செறிந்து வாழ்வதால் இயல்பாகவே தோன்றுவது. அது குறைபாடுகள், மனக்குறைகள் என்பன இருப்பதன் காரணமாகத் தோன்றுவதில்லை. குறைகள் என எவையும் இல்லாதவிடத்தும் சுயாட்சிக் கோரிக்கை தோன்றலாம். அக் கோரிக்கை பண்பாட்டு அடையாளம் காரணமாகவே எழுகிறது. குறைகள் இருந்தால் அக் கோரிக்கை மேலும் வலுப்பெறும் என்பதே உண்மையாகும். 

பெரும்பான்மைவாதம் பேசுவோர் புரிந்து கொள்ளத் தவறும் ஒரு உண்மையை ரொப்பர்வீன் (TOPPERWEIN) பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார். 

“சிறு இனக் குழுக்கள் தனிநபர்களின் சமத்துவ உரிமைகளைக் (EQUAL RIGHTS) கோரவில்லை. அவை ஒரு சமூகக் குழு என்ற முறையில் குழுவிற்கான சமத்துவத்தையே கோருகின்றன (THEY DO NOT DEMAND EQUAL RIGHTS BUT THE RIGHT TO BE EQUAL AS GROUPS). பிரஜைகள், தனிநபர்கள் என்ற முறையில் அரசியலில் செல்வாக்கைச் செலுத்துவது மட்டுமல்லாமல் தமது இனக் குழுவின் உறுப்பினர்கள் என்ற முறையில் செல்வாக்கைச் செலுத்துவதையும் விரும்புகின்றன. அவை பெரும்பான்மை ஆட்சியை விரும்புவதில்லை. காரணம், பெரும்பான்மை சிறுபான்மையின் நலன்களைக் கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை. சிறுபான்மையினர் தொடர்ச்சியாக தமது நலன்கள் பெரும்பான்மைப் பலத்தால் புறந்தள்ளப்படுவதையும், தாம் தொடர்ந்து தோல்வியடைபவர்களாகும் ஆபத்தையும் உணருகிறார்கள்.”

“பெரும்பான்மைச் சமூகங்கள், சிறுபான்மைச் சமூகக் குழுக்களை அரவணைத்து அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வதால் நாட்டின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் அறை கூவலாக அமையும் வகையில் சிறுபான்மைக் குழுக்கள் பலாத்கார வழிகளில் இறங்குவதில்லை” என்பதையும் ரொப்பர்வீன் குறிப்பிட்டுள்ளார். 

அரசியல் முடிவுகளை எடுக்கும் செயல் முறையில் சிறுபான்மைக் குழுக்கள் பங்கேற்பதற்கு உத்தரவாதம் அளிப்பதால், அக் குழுக்கள் அரசுக்கு விசுவாசம் உடையனவாகவும், அரசுடன் தம்மை இணைத்து அடையாளப்படுத்தி நடந்து கொள்வனவாகவும் இருப்பதற்கு முன் வருகின்றன. தாம் நிரந்தரமாகவே இழப்புகளை ஏற்பவர்கள், தோல்வியைச் சுமப்பவர்கள் என்ற உணர்வு எழாமல் தடுப்பதற்கும் சிறுபான்மைக் குழுக்கள் அரசியலில் இருந்து அந்நியப்படுவதைத் தடுப்பதற்கும் இது உதவுகிறது. தம்மைப் பற்றிய அடையாள உணர்வு கொண்ட சிறு குழுக்களை உள்ளீர்த்தல் (INCLUSION) அரசியல் செயல்முறையில் அவர்களின் பங்கேற்பை அதிகரிக்கும். அதனால் பிளவுகளும், பலாத்கார மோதல்களும் தவிர்க்கப்படும். சிறுபான்மைக் குழுக்கள் அரசியல் செயல் முறையில் பங்கேற்பதன் ஊடாகத் தமது நலன்களைப் பெறலாம் என்பதை உணரும் போது அரசியலுக்கு அப்பாற்பட்ட வழிகளில் (EXTRA-POLITICAL MEANS) நம்பிக்கை கொள்வதில்லை. பங்கேற்பு உரிமைகளை வழங்குவதால் அரசியல் பொறுப்புகளைச் சிறுபான்மைக் குழுக்கள் பகிர்ந்து கொள்ள முன் வருகின்றன. அது அரசின் ஐக்கியத்திற்கு உதவுகிறது.

பன்மைச் சமூகங்கள் எதிர்நோக்கும் அறைகூவல் சிறிய இனக் குழுமங்களின் நலன்களையும், தேவைகளையும் அறிந்து அவற்றிற்கு இடம் கொடுத்து உதவுதல் ஆகும். ஆகவே முதற்படியாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம் சிறிய சமூகங்கள் சிதறிப் பரவியுள்ளனவா (DISPERSED) அல்லது ஒரு புவியியல் பிரதேசத்தில் செறிந்து உள்ளனவா என்பதாகும். இதனைப் பொறுத்தே அச் சமூகங்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யலாம். இனக் குழும அரசியல் முரண்பாடுகள் (ETHNO POLITICAL CONFLICTS) ‘சாராம்சத்தில் அரசு அதிகாரம்’ (STATE POWER) பற்றிய பிரச்சினையாகும். பெரும்பான்மைவாதம் பேசுவோரில் பலர் புரிந்து கொள்ளத் தவறும் அல்லது ஏற்றுக் கொள்ளத் தவறும் அரசியல் அரிச்சுவடி இதுவாகும். அரசு அதிகாரத்தை மையப்படுத்தி அமையும் இத்தகைய பிரச்சினைகள் அரசு அதிகாரப் பகிர்வு (SHARING OF STATE POWER) மூலமே சாத்தியமாகும். 

‘CONSTITUTION MAKING IN MULTI ETHNIC SOCIETIES SOME INTERNATIONAL EXPERIENCES’ என்னும் தலைப்பில் அமைந்த 74 பக்கங்கள் வரை நீளும் நீண்ட கட்டுரையின் 1 முதல் 9 ஆம் பக்கம் வரை உள்ள கருத்துக்களைத் தழுவியும் சுருக்கியும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அரசியல் யாப்புச் சட்ட அறிஞர் ஜயம்பதி விக்கிரமரட்ண எழுதிய ‘TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRI LANKA A CONSTITUTIONAL MISCELLANY’ என்னும் நூலின் முதலாவது அத்தியாயமாக இக்கட்டுரை அமைந்துள்ளது. 

வெளியீடு : INSTITUTE FOR CONSTITUTIONAL STUDIES RAJAGIRIYA, SRI LANKA (2014)

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10322 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)