ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை - ஓர் அறிமுகம்
Arts
10 நிமிட வாசிப்பு

ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை – ஓர் அறிமுகம்

June 17, 2022 | Ezhuna

இலங்கையில் பண்பாட்டுத் தனித்துவம் கொண்ட பல்வேறு நிலப்பரப்புகளுள் கிழக்கு மாகாணத்தின் கீழைக்கரை எனும் நிலப்பரப்பும் ஒன்றாகும். இந்நிலப்பரப்பு ஒரு நெடிய பாரம்பரியத்தையும், ஆதிவேரான பழங்குடிகளின் தொல்மரபையும் கொண்டமைந்துள்ளது. அவ் வரலாற்றை  சிங்கள வரலாற்றாதாரங்களுடன் ஒப்பிட்டு, நவீன ஆய்வுப்பார்வையில் எழுதும் முயற்சியே ‘ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடராகும். இதன்படி, இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் இது ஆராய்கிறது. கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறும் தொடராக இது அமைகிறது.

மனிதன் கதைசொல்லி விலங்கு”. அன்றாடம் என்பது மனிதனுக்குக் கதைகள் இல்லாமல் நகர்வதில்லை. சோறுண்ண அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு அன்னையர் நிலாச்சோறு ஊட்டும் போது ஆரம்பிக்கும் கதையிலிருந்து, இறுதிமூச்சு பிரியும் வரை, மனிதவாழ்வு கதைகளின் பெருக்கு மீது தான் அலை பாய்ந்தபடி செல்கிறது. சாதாரணமாகப் பேசுவதையே, ‘கதைத்தல்’ என்று புழங்கும் ஈழத்தமிழர் மத்தியிலோ கதைகளுக்கு என்றுமே குறைவிருந்ததில்லை.

இப்போதெல்லாம் அரசியல் செயற்பாடு, அடையாள முன்னிறுத்துகை, கருத்தியல் செயற்பாடு என்றெல்லாம்  கதை வேறொரு பரிணாமம் எடுத்திருக்கிறது.  அந்தக் கதைக்கு ‘வரலாறு’ என்று பெயர். பழைய சம்பவங்களைக் கூறுதல், அந்தச் சம்பவங்களைத் தொகுத்தல், நினைவுமீட்டல், கண்டுபிடித்தல், ஆவணப்படுத்தல் முதலிய விடயங்கள் உள்ளடங்கிய அத்தனையுமே வரலாறு தான். ஆனால் வரலாறு இன்று ஒரு அறிவியல் துறை. பழைய நிகழ்வுகளுக்கான மூலகாரணிகளையும் அந்நிகழ்வுகளின் விளைவுகளையும் விஞ்ஞானக் கருவிகள், ஆய்வுக் கருதுகோள்கள் கொண்டு கேள்விக்குள்ளாக்குவதும், பகுப்பாய்வு செய்வதும், விளக்குவதும் கூட வரலாற்றின் பணி தான்.

வேதனை என்னவென்றால், கதைகளைக் கேட்டு வளரும் நாம், வரலாறும் கதைகள் போலவே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். வரலாறு நமக்குப் பிடித்தாற்போல் இருக்கவேண்டும், ஒரு இராசகுமாரனும் ஒரு மந்திரவாதியும் அதில் கட்டாயம் இருக்கவேண்டும். நமக்குப் பிடித்த தரப்பே வெல்லவேண்டும். எதிர்த்தரப்பு தோற்கவேண்டும். என்றெல்லாம் நாம் இன்று வரலாற்றுக்கு வரையறைகள் விதிக்கிறோம். பிடிக்காத கதையைக் கேட்கும் குழந்தை அந்தக் கதையைக் கேட்பதை நிறுத்தி வேறு கதை கேட்டு அடம்பிடிப்பது போல், பிடிக்காத வரலாற்றை பொய் என்று முத்திரை குத்தி, அதற்கு மாற்றாக நமக்குப் பிடித்தாற்போல் இன்னொரு ‘வரலாற்றை’ கட்டியெழுப்புகிறோம். அதை உண்மை என்று நிறுவ படாதபாடு படுகிறோம்.

கசப்பான உண்மையை நாம் முதலில் உணர்ந்துகொள்ள வேண்டும். கதையும் வரலாறும் முற்றிலும் வேறுவேறானவை. கதைகளை யாரும் உருவாக்கிக் கொள்ளலாம். அதை நம்புவதும் மறுப்பதும் எவருக்குமுள்ள சுதந்திரம். ஆனால், வரலாறு கதைகளை விட மெய்யானது. பக்கச்சார்பாலோ, நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பாலோ என்றோ நிகழ்ந்த வரலாறு மாறாது, மாறவும் கூடாது. விஞ்ஞானத்தால் அங்கீகரிக்கப்பட்ட கருவிகளின் மூலம் நிரூபிக்கப்படுவதால், வரலாறு திருத்தமானது. எவர் மீதும் ஓரம் சாராது வெளிப்படுவதால் அது இரக்கமற்றது. இரக்கமற்றது என்பதாலேயே அது தூய்மையானது.

மீமாந்தத் தன்மையுள்ள (supernatural) புராணக்கதைகளை உண்மையாக நடந்தவை என்று நம்புவதற்கும், அற்புதங்கள் உண்மையிலேயே நிகழ்ந்தன என்று உறுதியாகச் சொல்வதற்கும், சமயரீதியாக எவருக்கும் பூரண உரிமை உண்டு.  இந்த மாய மந்திரங்களுக்கோ, அதிசயங்களுக்கோ வரலாற்றில் இடமில்லை. ஒருவேளை, ஒருவர் வரலாற்றுப்பாத்திரம் என்பது நிரூபிக்கப்பட்டு, அவருடைய வரலாற்றில் அற்புதச் சம்பவங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை குறியீடாக (symbolic) புரிந்துகொண்டு, அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான விதத்தில் விவரிக்க முயன்றபடி  தான், ஓர் வரலாற்றாய்வாளன் தன் ஊகத்தை முன்வைக்கவேண்டும். சொந்த சமய நம்பிக்கைகளையோ, மீமாந்த அற்புதங்களையோ அப்படியே ஏற்றுக்கொண்டு அவன் ஒரு வரலாற்றைச் சொல்ல முற்படுவான் என்றால், அது வரலாறே அல்ல, கதையே தான். ஏனென்றால், வரலாறு கறாரானது. யதார்த்தத்தில் தீவிரமாகத் தங்கியிருப்பது.

ஆனால் வரலாற்றுக்கு ஒரு குறைபாடு இருக்கிறது. எழுத்தாவணங்கள், வாய்மொழி மரபுரைகள், தொல்லியல் சின்னங்கள், என்பவற்றில் கிடைக்கும் தரவுகளை அடிப்படையாக வைத்துத் தான் வரலாறு கட்டியெழுப்பப்படுகிறது. தரவுகள் கிடைக்காத இடங்கள் வரலாற்றில் இடைவெளிகளை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த இடைவெளிகளை நிரப்புபவை அந்த வரலாற்றைக் கட்டியெழுப்பும் ஆசிரியனின் ஊகங்கள் தான். கிடைக்கும் சான்றுகளில் தனக்குப் பொருத்தமானதென ஆசிரியன் கருதும் சான்றொன்றின் மூலம் உருவாக்கப்படும் ஊகமே அவ்விடைவெளியை நிரப்புகிறது. இங்கு தான் வரலாறு தூய்மையிழக்கின்றது.

எவ்வாறு, வரலாற்றின் வாசகர்கள் தமக்குப் பிடித்த ‘கதை’களை  வரலாற்றில் எதிர்பார்க்கக் கூடாதோ, அவ்வாறே வரலாற்று ஆசிரியனும், தனக்குப் பிடித்த ‘கதை’யை வரலாறு என்ற பெயரில் எழுதிவிடுபவனாக இருக்கக்கூடாது. வரலாறை எழுதும் போது அவன் தன் தரப்பு –  பிற தரப்பு என்ற பேதமின்றி நடுநிலை நின்று ஆராய்ந்தே பொருத்தமான சான்றுகளை ஊகத்துக்கு எடுக்க வேண்டும். அது முடியாதவிடத்தில் சாத்தியமான அத்தனை சான்றுகளையும் சுட்டிக்காட்டி, “இவற்றில் என் ஊகம் இது” என்று தெளிவாகச் சுட்டிக்காட்டி, அந்த வரலாற்று இடைவெளியை அப்படியே பேணலாம். அவனை அடுத்து வரும் இன்னொரு வரலாற்றாசிரியன் பின்பொருநாள் திருத்தமான துருப்பைக் கண்டடையும் போது அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அவனுக்குச் சௌகரியமாக இருக்கும்.

எனவே, ஊகங்கள் நம்பகத்தன்மை கொண்டதாக – முக்கியமாக நடுநிலை வாய்ந்தவையாக இருக்கவேண்டும். ஒருவேளை வரலாற்றாய்வாளன் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவனாக இருந்து, தன் தரப்பின் உரிமைக்குக் குரல் கொடுப்பதற்காக  வரலாற்றாய்வு செய்கின்றான் என்றால் கூட, அவன் செய்யவேண்டியது, குறித்த சிக்கலை நடுநிலையோடு ஆராய்ந்து, அதன் நிறை – குறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தன் தரப்புக்கு ஏன் நியாயம் கிடைக்கவேண்டும் என்பதற்கான உறுதியான ஆதாரங்களைப் பொதுவெளியில் முன்வைப்பது தான்.

ஆனால் இது பெரும்பாலும் நிகழ்வதில்லை. ஒவ்வொரு வரலாற்றாசிரியனும் தனக்கென ஒரு கருத்தியல் வைத்திருக்கிறான். அதை நிறுவுவதற்கே அவன் வரலாற்றை ஆயுதமாக எடுக்கிறான். எனவே தன் கருத்தியலையே ஊகமாக்கி வரலாற்றை நிரவிவிடுகின்றான். அவனது பக்கச்சார்பான ஒரு ஊகம் வரலாறாக மாறிவிடுகின்றது. இப்படி, வரலாற்றாசிரியன் ஒருவனுக்கு இருக்கக்கூடாத முன்முடிவு, பக்கச்சார்பு, கருத்துத்திணித்தல் முதலிய இயல்புகளுடன் தான் தமிழிலே பல வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. மார்க்சிய, திராவிட, தமிழ்த்தேசிய இந்துத்துவக் கருத்தியல்களைக் கொண்ட வரலாற்றாசிரியர்களின் சொந்தக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட பல ஊகங்கள், மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரலாறு என்றே நம்பப்பட்டு இன்று தமிழர் வரலாறாகத் தரமுயர்ந்து விட்டிருக்கின்றன.  களப்பிரர் காலம் இருண்ட காலம், இலங்கையை ஆண்ட அத்தனை சிங்கள அரசர்களும் தமிழ் ஆக்கிரமிப்புக்களை எதிர்த்த பௌத்த தேசியவாதிகள், எண்ணாயிரம் சமணர்கள் சம்பந்தரால் கழுவேற்றிப் படுகொலை செய்யப்பட்டனர் என்றெல்லாம் இப்படிப் பிரபலமடைந்த வரலாற்று ஊகங்கள் ஏராளம்.  இன்னும் சாதிய, மத, பிரதேச, இனரீதியாக வகுப்புவாத சிந்தனை கொண்ட வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்ட பல வரலாற்று ஊகங்களால்  தமிழ் அறிவுத்துறைக்கு விளைந்த – விளைந்துகொண்டிருக்கும் இழப்பு கொஞ்சநஞ்சமல்ல.

இப்படிச் சொல்வதை வாசகர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. குறுங்குழுக்கள் சார்ந்த வரலாறு எழுதப்படவே கூடாது என்றோ,  இன்றுவரை தமிழில் நல்ல வரலாறு எழுதப்படவே இல்லை என்றோ இக்கட்டுரை கூற வரவில்லை. இது சொல்லவருவதெல்லாம், வரலாறு வரலாறாகவே எழுதப்பட, பொருத்தமான சான்றுகள் கிடைக்காதவிடத்து, அந்த இடைவெளிகள் இடைவெளிகளாகவே பேணப்படவேண்டும் என்பதைத் தான். குறுங்குழுக்கள் சார்ந்த நுண்வரலாறுகளே இன்று மானுடப்பெருவரலாற்றைத் தெளிவாக எழுத ஏராளமான சான்றுகளைத் தந்திருக்கின்றன. சாதிய, பிரதேச, மத, இனத்துவ நுண்வரலாறுகள் எழுதப்படத்தான் வேண்டும். ஆனால், நுண்வரலாற்று ஆசிரியன் தன் கருத்தியலை இயன்றவரை அதில் புகுத்தாது தவிர்க்கவேண்டும்.

அல்லது இப்படிச் சொல்லலாம். குறித்த கருத்தியலை வரித்துக் கொண்ட ஆசிரியன் எழுதும் ஒரு வரலாறு, எதிர்க்கருத்தியல்களைக் கொண்ட வாசகர்களால் வாசிக்கப்படும் போதும், மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கவேண்டும். அதில் எதிர்க்கப்படும் விமர்சிக்கப்படும் விடயங்கள் இருக்கலாம். ஆனால் புலமைசார் துறையினர் முற்றுமுழுதாகப் புறக்கணிக்கும் படி, இட்டுக்கட்டிய பொய்களையோ, பக்கச்சார்பான முன்முடிவுக் கருத்துக்களையோ அவன் வரலாறாக எழுதிவிடக்கூடாது. தனக்குரிய கருத்தியலை வரலாற்றுக்குள் அவன் நுழைக்கும் போது அந்த வரலாற்றைப் புலமைசார் உலகம் முழுமையான அங்கீகரிக்காது. அவ்வாறு அங்கீகாரம் பெறத்தக்க வரலாறுகளே தமிழ் கூறு நல்லுலகுக்கு சமகாலத்தில் அதிகம் தேவைப்படுபவையாக இருக்கின்றன. ஆக, வரலாற்றை எழுதப்புகும் வரலாற்றாசிரியன் சற்று அப்பால் தன்னை தள்ளி நிறுத்தியபின்பே வரலாற்றை எழுதவேண்டும்.

இனி தலைப்புக்கு வருவோம். “ஈழத்துக் கீழைக்கரை: ஒரு வரலாற்றுப் பார்வை” எனும் இத்தொடர், இலங்கையின் கிழக்கு மாகாணம் எனும் அரசியல் நிர்வாக அலகின் பெரும்பகுதியையும் அப்பகுதியைத் தாயகமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டையும் வரலாற்று ரீதியில் ஆராயப்போகும் ஒரு தொடராகும். கிழக்கிலங்கையின் புவியியல் ரீதியான பண்பாட்டு வளர்ச்சியையும், அங்கு தோன்றி நிலைத்திருக்கும் தமிழர், சோனகர், சிங்களவர், ஏனைய குடிகள் போன்றோரின் வரலாற்றையும், இன்றுவரை கிடைத்துள்ள சான்றுகளை வைத்துத் தொகுத்துக் கூறப்போகும் தொடர் இது.

eastern Sri Lanka

இப்போது இக்கட்டுரையாசிரியனுக்கு மிகப்பெரிய சவால் ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஒரு வரலாறு எப்படி எழுதப்படக்கூடாது என்பதையும், ஒரு வரலாறு எப்படி பக்கச்சார்பற்றதாக, விஞ்ஞான அளவீடுகளின் அடிப்படையில் எழுதப்படவேண்டும் என்ற நிபந்தனையையும் அவன் தன் வாசகருக்கு தெளிவாக வரையறுத்துக் கூறியிருப்பதால், அவன், தான் கூறிய வரையறைக்கேற்பவே சரியாக வரலாறு எழுதுகின்றானா என்பதை நோட்டம் விட்டு விமர்சிக்கும் உரிமையை அவனது வாசகர்கள் இப்போது பெற்றிருக்கிறார்கள். எனவே வாசகர்கள் எதிர்மறையாக விமர்சிக்காதவாறு வரலாற்றை திருத்தமாக எழுதவேண்டிய கட்டாயத்தில் அவன் இருக்கிறான். சவாலில் அவன் வெல்கிறானா, தோற்கிறானா என்பது இரண்டாம் பட்சம். இலங்கையின் தமிழ் பேசும் ஒரு தனித்துவமான பண்பாட்டுக் கொத்தணிக்கு (Cultural Cluster) ஓரளவு திருத்தமான வரலாறு கிடைக்கின்றதா என்பதே தற்போதைக்கு முக்கியம்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

10101 பார்வைகள்

About the Author

விவேகானந்தராஜா துலாஞ்சனன்

விவேகானந்தராஜா துலாஞ்சனன் அவர்கள் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் மூலக்கூற்று உயிரியலும் உயிர் இரசாயனவியலும் கற்கைநெறியில் இளமாணிப் பட்டம் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தின் பட்டக்கற்கைகள் பீடத்தில் பொது நிர்வாகமும் முகாமைத்துவமும் துறையில் முதுமாணிக் கற்கையைத் தொடர்கிறார்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகக் கடமையாற்றும் இவர் தற்போது மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராகப் பணி புரிகிறார்.

இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018), தனது திருமண சிறப்புமலராக ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலையும் (2021) வெளியிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்