இலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றுவதற்கு, மலையகத் தமிழ் மக்களின் உழைப்பைச் சுரண்டியதில், கிழக்கிந்தியக் கம்பெனியினரே முதற் பங்கு வகித்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிகளின் ஆதிக்கமானது இலங்கையில் அவர்கள் தடம் பதிப்பதற்கு முன்னரே இந்திய நாட்டில் ஆரம்பித்துவிட்டது.
உடல் உழைப்பை மாத்திரம் மூலதனமாகக் கொண்ட இந்திய விவசாயச் சமூகத்தில், 17 ஆம் நூற்றாண்டானது பழமையும் முதுமையுமாக செயற்பட முடியாமல் இருந்த காலமாகக் கணிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தமிழர்களை ஆட்சி செய்த வேற்று மொழி மன்னர்கள் பற்றற்றவர்களாகவும் தமிழ் பேசும் மக்களை மதிக்காதவர்களாகவும் இருந்தனர். ஏழை மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி வசூலிப்பது மட்டுமே அரசின் கடமை என்ற எண்ணத்துடன், அரசாங்கங்கள் மந்த கதியில் ஆட்சி செய்து வந்த காலமது. இந்தக் காலகட்டத்திலேயே மேல் நாட்டினர் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தனர். வியாபாரத்திற்காக வந்தவர்கள் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்தியாவில் ஆதிக்கம் கொண்ட பிரிட்டிஷ் பேரரசு ஆசியாவின் பல நாடுகளிலும் தமது அதிகார ஆட்சியைப் பலப்படுத்தியது. இந்தியாவை மையமாகக் கொண்டு ஆசிய நாடுகளை நிர்வகிப்பதற்காக, பல்வேறு சுதேச அரசுகளை இணைத்து, இந்தியாவை பிரிட்டிஷ் அரசு ஆட்சி செய்யத் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளுக்கு மக்கள் செல்ல, வீசா – பாஸ்போர்ட் போன்ற தடைகள் இல்லாமல் இருந்ததுடன், இந்த நாடுகளை நிர்வகிக்க கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஏதுவான சூழ்நிலைகளை பிரித்தானிய அரசு செய்து கொடுத்தது.
கிழக்கிந்தியக் கம்பெனிகள்
16 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் உலகின் உற்பத்திப் பொருட்களில் நான்கில் ஒரு பங்கு ஆசியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டது. ஆசியாவின் செழிப்பில் மயங்கிய பிரிட்டிஷ் தொழிலதிபர் ‘ராஜ் சீசப் சா பீச்’ இந்தியப் பெருங்கடல், மொசபத்தேமியா, பாரசீக வளைகுடா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு வணிகப் பயணங்களை மேற்கொண்டர். இந்தியாவின் செழிப்பில் ஈர்க்கப்பட்ட அவர், ஜேம்ஸ் லேண்ட் காஸ்டர் எனும் மற்றுமோர் தொழிலதிபரோடு இந்தியாவிற்குள் வந்தனர். 1600 டிசம்பர் 31 ஆம் திகதி, கிழக்கு ஆசியாவின் வளங்களைச் சூறையாடுவதற்கு, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பிரிட்டிஷ் ராணியிடமிருந்து ஒப்புதல் கிடைத்தது.
இந்திய ஆட்சிப் பீடத்தில் இருந்த முகலாயப் பேரரசுடன் பல ஆலோசனைகளையும், முன்மொழிவுகளையும், முயற்சிகளையும் முன்னெடுத்த பிரிட்டன் கிழக்கிந்தியக் கம்பெனி, பல ஆண்டுகளுக்குப் பிறகு, முகலாய அரசுடன் ‘சர் தாமஸ் ரோ’ என்ற பிரிட்டிஷ் இராஜதந்திரியின் சாமர்த்தியத்தால் வணிக ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த நிறுவனம் இந்திய அரசை ஏமாற்றியதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. அந்தக் கிழக்கிந்தியக் கம்பெனி ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடிமைகளை விற்பனை செய்து பெரும் பொருளீட்டிய கம்பெனி என்பது முக்கிய விடயமாகும்.
இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை, காலனித்துவ ஆட்சி நாடுகளுக்கு மிக இலகுவாகக் கடத்திச் செல்வதற்கான தந்திரத்தை இக் கம்பெனிகள் மேற்கொண்டன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக கொண்டுவரப்பட்ட இந்திய விவசாயிகள், இந்தக் கிழக்கிந்தியக் கம்பெனிகளின் தந்திரத்தாலேயே அழைத்துவரப்பட்டனர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களாகவே இலங்கைக்கு ஓடி வந்தார்கள் என்ற கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை இதனோடு தொடர்புபடுத்தி ஆராய வேண்டும்.
இந்தக் கம்பெனி மனிதத் துயரங்களை தனது வியாபாரத்திற்கு ஏதுவாக்கிக் கொண்டது. வங்காளப் பஞ்சகாலத்தில் அரிசி விலை 40 மடங்காய் அதிகரித்த அந்த நிறுவனம் 60 ஆயிரம் பவுண்ட் இலாபம் ஈட்டியமையை இதற்குச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். கிழக்கிந்தியக் கம்பெனியின் 120 ஆண்டுகால ஆட்சியில், 34 முறை பஞ்சம் ஏற்பட்டது. இந்திய மக்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனிகளின் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது. முகலாய ஆட்சியில் பஞ்சகாலத்தில் வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் கிழக்கிந்தியக் கம்பெனியோ, பஞ்ச காலத்தில் வரியை அதிகரித்து மனித நேயமற்ற அதன் வியாபாரத் தந்திரங்களைச் செயற்படுத்தியது. இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்கள் செயற்கையாகவே மக்கள் மத்தியில் திணிக்கப்பட்டது எனலாம்.
கிழக்கிந்தியக் கம்பெனிகளின் வியாபாரமும் அடக்குமுறைகளும்
சீனாவிற்குத் தேவையான பொருட்களை வழங்க முடியாததன் காரணத்தினாலும் சீனாவிடமிருந்து பட்டு மற்றும் பீங்கான் பொருட்களை கிழக்கிந்தியக் கம்பெனி வாங்கிக் கொண்டிருந்ததனாலும், பொப்பி விதைகளையும் அபின் போன்ற போதைப் பொருட்களையும் கிழக்கிந்தியக் கம்பெனிகள் சீனாவிற்கு வியாபாரம் செய்ய ஆரம்பித்தன. அபின் தயாரிப்பிற்காக பீகாரில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அவை கிழக்கிந்திய கம்பெனிகள் மூலமாக சீனாவிற்கு கடத்தப்பட்டன. சீனாவில் மக்களிடையே மிகக் குறைவாகக் காணப்பட்ட அபின் பயன்பாட்டை கிழக்கிந்தியக் கம்பெனி சீன முகவர்கள் மூலம் ஊக்குவித்தது. வரலாற்றாசிரியரும் விமர்சகரும் பத்திரிகையாளருமான ‘பாரி அலிக்’ தனது ‘கம்பெனி அதிகாரம்’ என்ற புத்தகத்தில் இதனோடு சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களையும் பதிவு செய்துள்ளார்.
கிழக்கிந்தியக் கம்பெனி, 2.5 இலட்சம் இராணுவ வீரர்களைக் கொண்ட ஒரு பலம் வாய்ந்த கம்பெனியாகவும் காணப்பட்டது. வர்த்தகத்தில் மட்டுமன்றி அது இராணுவத்தின் மூலமும் இலாபம் ஈட்டியது. இந்த இராணுவம் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்ததால் இந்தியாவின் தலை எழுத்தே மாறியது.
வில்லியம் டெலிட் ட்ரிம்பில் என்பவர், தனது ‘ரிலையன்ஸ் ஆப் த ஈஸ்ட் இந்தியா கம்பெனி’ என்னும் புத்தகத்தில், பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் 20 கோடி மக்களை தனது இராணுவம் அடிமைப்படுத்திய வரலாறு பற்றிக் கூறியுள்ளார்.
1935 ஆம் ஆண்டில், ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தினை மேம்படுத்த கம்பெனிகள் நிதியை ஒதுக்கியமை இந்தியாவின் கலை, கலாசாரம், பண்பாடு, அரசியல், இலக்கியம் என்பவற்றைச் சிதைத்தது. சுதேசக் கலாசாரத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் கலாசார ரீதியிலும் தமது ஆதிக்கத்தைச் செலுத்த வேண்டிய தேவை கம்பெனிகளுக்கு இருந்தது. போதைப் பொருட்களால் சீனாவைச் சிதைத்த கம்பெனிகள், இந்தியக் கலாசாரத்தைச் சிதைக்க அதிக பணத்தைச் செலவு செய்தது.
சுதேச மொழிகளுக்குப் பதிலாக ஆங்கிலத்தை இந்தியாவில் பரப்புதல் அவர்களின் அரசியல் காய் நகர்த்தல்களில் பிரதான பாத்திரத்தை வகித்தது. ஒரு சமூகத்தை அழிப்பதற்கு அல்லது அடிமையாக்குவதற்கு, அந்தச் சமூகத்தின் கலாசார, பண்பாட்டு அம்சங்களைச் சிதைக்க வேண்டியிருந்தது.
இன்று இலங்கையில், இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படக் கூடாது என்ற தந்திரத்துடன், தமிழர் தாயகப் பிரதேசங்களில் போதைக் கலாசாரமும் சினிமாக் கலாசாரமும் பிற்போக்கு அரசியல் சிந்தனைகளும் ஏனைய களியாட்ட நிகழ்வுகளும் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இதே விடயத்தை அன்று கிழக்கிந்தியக் கம்பெனிகள் தமிழ்நாட்டில் செய்ய முயற்சித்த போது, அவை பெரிதளவில் வெற்றியை அளிக்கவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
1857 ஆம் ஆண்டு சுதந்திரப் போரின் போது, கம்பெனிகள் ஆயிரக்கணக்கான பொது மக்களை தெருக்களிலும், சந்தைகளிலும், பொது இடங்களிலும் கொலை செய்தது. கம்பெனிகளின் இந்தக் கொடூரக் கொலைகள் காரணமாக பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இந்த அவப்பெயரானது சர்வதேச ரீதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் காட்டி வந்து வலதுசாரி ஜனநாயக முகத்திரையைக் கிழித்தெறிய வைத்தது. இதனால், 1858 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் நாள், பிரிட்டன் மகாராணி கம்பெனிகளின் உரிமைகளை ரத்துச் செய்தார்.
‘உலகம் கடவுளுடையது; நாடு அரசனுடையது; ஆட்சி அதிகாரம் கம்பெனியினுடையது.’ என்று மக்களை நம்பச்செய்து மிக மோசமான சித்தாந்தத்திற்கு மக்களை நகர்த்திய கம்பெனிகள் அன்று பின்வாங்கிவிட்டன. ஆனால், முதலாளித்துவச் சிந்தனையோடு தொழிலாளர்களின் நலன் சார்ந்த செயற்பாடுகளைக் காட்டிக்கொடுக்கும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்காத தோட்டக் கம்பெனிகள், மலையக மக்களின் உரிமைகளை வழங்கத் தயங்கும் அரசாங்கங்கள், மலையக மக்களின் தியாகத்தை ஏற்க மறுக்கும் ஏனைய தேசிய இனங்கள் ஆகியன கிழக்கிந்தியக் கம்பெனிகளின் பாதையிலேயே இன்று பயணிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அன்றும் இன்றும் மக்களைச் சுரண்டி ஏமாற்றும் கோர முகத்தின் வண்ணங்கள் மாறிக்கொண்டு வருகின்றதே ஒழிய மக்களின் நிலை இன்னும் மாறவில்லை.
தொடரும்.