இவ் ஆண்டுடன், மலையக மக்கள் இலங்கையில் காலடி வைத்து கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மலையத்தின் கட்சிகள் அல்லது தொழிற்சங்கங்கள் ஏதாவதொன்றுக்கு நூறு வருட வரலாறாவது இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை என்றே பதில் கிடைக்கும். இதனை அரசியல் ரீதியான நோக்கோடு ஆராய்வது அவசியமாகிறது.
19 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் சுதந்திரதாகம் பேரெழுச்சி பெற்று காந்தியடிகளின் சத்தியாக்கிரகப் போராட்டங்கள் வெள்ளையர்களின் அதிகாரத்தை உலுக்கிக்கொண்டிருந்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்ற சுதந்திர வீரர்களின் வீரங்கள் பூகம்பங்களாகப் பொங்கியெழுந்தன. ஆனால் வெள்ளையர்களை வெளியேற்ற அவர்கள் காட்டிய முனைப்பில் சிறு பங்கு கூட, தாயகத்தில் இருந்து தொழில் அகதிகளாக வெளியேற்றப்பட்டுக்கொண்டிருந்த நாட்டு மக்களின் பக்கம் திரும்பவில்லை. வெள்ளையர்களினால் அவர்களின் குடியேற்றப் பிரதேசங்களுக்கு சடப்பொருட்களைப் போல ஏற்றுமதி செய்யப்பட்ட ஏழைத் தொழிலாளர்களின் சரிதம் சுதந்திர இந்தியாவின் கறைபடிந்த வரலாறாகும்.
இலங்கையில் 1609களில் சிறிய எண்ணிக்கையிலான இந்தியத் தொழிலாளர் இடப்பெயர்வு ஆரம்பித்தது. பின்னர், 1824 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கோப்பிச் செய்கைக்காக தொழிலாளர் இறக்குமதி செய்யப்பட்டனர். அதற்குப் பின், தேயிலை – இறப்பர் போன்ற பெருந்தோட்டத் தொழில்துறையில் ஈடுபடுத்தவென பெருந்தொகையான தொழிலாளர் இறக்குமதி செய்யப்பட்டனர். இது, 1939 ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தொழிலாளர்கள் செல்வது முழுமையாகத் தடைசெய்யப்படும் வரை நீண்டது.
19 ஆம் நூற்றாண்டில் சிலோன் தேசத்திற்கு வருகை தந்த இந்தியத் தமிழ் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகையாகக் காணப்பட்ட போதும், ஆரம்பத்தில் அவர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவில்லை. துரைமார்களும் கங்காணிகளும் கொடுத்த துன்பங்களுடனே அவர்களது வாழ்க்கை கழிந்துகொண்டிருந்தது. கூலி அகதிகளாக நாட்டினைத் துறந்து, கால்நடையாகவும் பாதுகாப்பற்ற படகுகளின் மூலமாகவும் தலைமன்னார் துறையை வந்தடைந்து, அங்கிருந்து மாத்தளை வழியாக மலைநாட்டுத் தோட்டங்களுக்குச் சென்ற மக்கள் அனுபவித்த துயரங்கள், தோட்டங்களில் குடியேறிய பின்பும் தொடரவே செய்தன. அந்த நேரத்தில் அவர்களது தேவையாகக் காணப்பட்டது உணவும் சொற்பப் பணமும் மட்டுமே. இதனைக் கூட முழுமையாகப் பெறமுடியாது, அலைக்கழிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, கொடூரத் தண்டணைகளால் மண்ணாகிப் போனதிலேயே அவர்களது காலம் கடந்ததெனலாம்.
அரசியல் அதிகாரத்திலிருந்த தமிழ் அரசியல்வாதிகளின் பார்வையில் கூட மலையகத் தொழிலாளர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாகவே தெரிந்தார்கள். 1845 ஆம் ஆண்டின் தொடக்கக் காலப்பகுதிகளில், ஆங்கிலேய அரசு மலையக மக்களுக்கென பிரத்தியேகமாகத் தயார் செய்த தொழிலாளர் சட்டங்களையே மலையக மக்களுக்கு அரசியல் ரீதியாகக் கிடைத்த இடமெனக் குறிப்பிட முடியும். அவற்றைச் சட்டங்கள் என்பதை விட அடிமைச் சாசனங்கள் என குறிப்பிடுவதே மிகப் பொருத்தமானதாக இருக்கும். அதுவரை மலையக தமிழர்கள் அரசியல் அரங்கில் கண்மூடி மௌனிகளாகவே இருந்தார்கள். கோப்பியுகத்தை அடுத்து வந்த தேயிலை யுகத்தில் தான் ஓரளவு மலையக மக்களின் அரசியல் பங்கேற்பு நிகழ்ந்தது.
சட்டசபையில் இலங்கையர்
இலங்கையின் அரசியல் யாப்புச் சீர்திருத்தங்களுக்கு அமைய சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் சட்டசபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இலங்கை அரசியலில் சேர்.பொன். இராமநாதன், குணசிங்க, டி.எஸ். சேனநாயக்க போன்றவர்களின் பங்குபற்றல் மிகையாகக் காணப்பட்டது. குறூ மக்கலம் மற்றும் தற்காலிக மனிங் யாப்பு போன்ற சீர்திருத்தங்கள் மூலமாக இலங்கையர்கள் அரசியல் பங்களிப்பைப் பெற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் மலையக மக்களை, இலங்கை பூர்வீக மக்களுக்கு ஆபத்து விளைக்கும் ஒரு பிரிவினர்களாகவே கருதினர். இதனால் இலங்கை வாழ் இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன. இத்தகைய நிலமைக்கு, இலங்கைவாழ் அரசியல் உறுப்பினர்களாக இருந்த அரசியல் தலைவர்களும் மறைமுகக் காரணமாக இருந்தனர்.
தோட்டத்திற்குள் அடக்குமுறைகள்
அன்றைய காலத்தில் தேயிலைத் தோட்டப் பகுதிகளுக்குள் இலகுவாக நுழைய இயலாத சூழலே காணப்பட்டது. தேயிலை தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதும் இலகுவான காரியமாக இருக்கவில்லை. தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தாலும் கங்காணி மற்றும் துரைமார்களாலும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களின் லயத்து காம்பராக்களில் ஜன்னல் ஒன்றை மாற்றிவைக்க வேண்டுமென்றாலும் கூட நிர்வாகத்திடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. அவர்களின் செயற்பாடுகள் அடக்கப்பட்டிருந்தன. ‘பற்றுச்சீட்டுத் துண்டு’ முறை மூலமாக திறந்த வெளியில் அவர்களைச் சிறை வைத்திருந்தது அன்றைய ஆங்கிலேய அரசு.
வீட்டுக்கு தேவையான அரிசி, தேங்காய், கள்ளுக்கடை வசதிகள் போன்றன அருகில் இருந்த பெட்டிக்கடைகளில் கிடைத்ததால் அவர்களுக்கு வெளியில் செல்லும் தேவையும் ஏற்படவில்லை. அரசும் அதை விரும்பவில்லை. இந்தச் சிறைவைப்புக் கூட அவர்களை புரட்சியின்பால் செல்லத் தூண்டவில்லை. அவர்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர்களாக கங்காணிகளும் துரைகளும் காணப்பட்டார்கள். கங்காணி சொல்வதே நீதியாக இருந்தது. சில பிரச்சினைகள் துரை வரை போனாலும், துரை பெரும்பாலும் கங்காணியைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இதனால் அத்துமீறல்களும் அடக்குமுறையும் உச்சத்தில் இருந்தன.
கோதண்டராம நடேசய்யர்
இருண்டு கிடந்த அன்றைய தேயிலைக்காட்டுப் பகுதியில் விடிவெள்ளியாய் வீரத்தோடு எழுந்து வந்தார் நடேசய்யர். இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்திலே பிறந்து கணக்கியலிலும், பத்திரிகை மற்றும் பதிப்பியல் துறையிலும், தமிழ் – ஆங்கிலப் புலமையிலும் சிறந்து விளங்கிய நடேசய்யர், ஆங்கிலேயர்கள் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்திய அந்தக் காலப்பகுதியில் தமிழரும் அதில் சிறந்திட வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் கண்டார். வியாபார நோக்கில், நெல் மற்றும் புடவை வியாபார அமைப்புகளை இந்தியாவில் நிறுவி, அதில் ஒரு கிளையை கொழும்பில் ஸ்தாபிக்க வேண்டும் என்று, 1910 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் காலெடுத்து வைத்தார் நடேசய்யர்.
இக் காலப்பகுதியிலேயே இலங்கையில் தேயிலைச் செடிகளிடையே அடிமைகளாய் இருக்கும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய நிலவரம் தெரிய வருகிறது. இந்திய மக்கள் நாடு கடந்து உழைப்பாளர்களாய் அடிமைப்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து கரிசனை கொண்டு அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்க ஆயத்தமானார்.
தோட்டத் தொழிலாளர்களின் அத்தனை தேவைகளும் தோட்டங்களுக்குள்ளேயே சுருக்கி வைக்கப்பட்டிருப்பதை தோட்ட நிர்வாகம் அவ்வப்போது உறுதி செய்து கொண்டே இருந்தது. அதனையும் தாண்டி தோட்டங்களுக்குள் உள் நுழைபவர்களாக வியாபாரிகளே இருந்தனர். இதனை ஒரு கருவியாகக் கொண்டு நடேசய்யர், புடவை வியாபாரி வேடமிட்டு மலையகத் தோட்டப் பகுதிகளுக்குள் நுழைந்தார்.
அன்றிலிருந்து அவர்களின் வேதனைகளில் அக்கறை கொண்டு அவர்களின் சுக துக்கங்களை பகிரங்கப்படுத்த ஆரம்பித்தார். அதற்கு அவர் கையிலெடுத்த மிகப்பெரும் அஹிம்சை ஆயுதமாக பத்திரிகைத்துறை காணப்பட்டது. ‘தேசநேசன்’ என்ற பத்திரிகையை கொழும்பில் தொடங்கி தோட்டத்தொழிலாளர்கள் படும் துன்பதுயரங்களை விளக்கி எழுதியதோடு பரப்பவும் செய்தார்.
தேயிலைச் செடிகளைத் தாண்டி, தோட்டத் தொழிலாளர்களின் அத்தனை தேவைகளும் பிரச்சினைகளும் பகிரங்கப்படுத்தப்பட்டது நடேசய்யர் என்ற தனிமனித சக்தியால்தான் என்றால் அது மிகையல்ல. ‘தேசநேசன்’ மூலமாக சொல்லப்படாத தொழிலாளர் குறித்த செய்திகளை உலகுகிற்குக் காண்பித்தார். பாரதியாரின் கருத்துகளில், கவிதைகளில் ஈர்க்கப்பெற்ற நடேசய்யர் அவரது பாடல்களினூடாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மலையகத் தொழிலாளர்களின் உள்ளத்தில் சுதந்திர உணர்வும் அரசியல் எண்ணங்களும் ஊற்றெடுக்க நடேசய்யர் காரணமாக விளங்கினார். இவரது எழுச்சியைக் கண்டு ஆங்கிலேய அரசு இவரை நாடு கடத்தக் கூட எண்ணியது. அதற்கெல்லாம் இவரது வீரமான பேச்சும் எழுத்தாற்றலும் அச்சம் கொள்ளவில்லை.
முதன் முதலில் மலையக மக்கள் சார்பில் அரசாங்க சபையில் அங்கத்தவரானவர் நடேசய்யர் அவர்களே. இதற்குப் பின்னரே மலையகத்தில் உரிமைகள் குறித்துப் பேசப்பட்டன. முல்லோயா கோவிந்தன் அவர்கள் அரசியல் உரிமைக்காக மலையகத்தின் முதல் தியாகியானார். தொடர்ந்து வந்த காலப்பகுதிகளில், இலங்கை – இந்தியக் காங்கிரஸின் உதயம் மேலும் மக்கள் அரசியலில் ஈடுபடக் காரணமாகியது. அதனைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உதயமாகி பல தலைவர்கள் உருவாகினார்கள். தொண்டமான் என்ற நாமம் மக்கள் மத்தியில் அறிமுகம் பெற்று அழிக்க முடியாத அம்சமாகி அரசியலில் ஓங்கி நின்றது. பின்பு, ஓரவஞ்சனைகளும் பிரிவினைகளும் அதிகரித்து பல கட்சிகள் தொழிற்சங்கங்கள் உருவாகின. இதில் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன எழுச்சிப்பாதையை நோக்கிச் செல்லலாயின. எழுத்தாளர்களும் சமூக சிந்தனைவாதிகளும் அரசியலில் உட்சென்று மலையக அரசியலை வேறு ஒரு திசைக்கு கொண்டு சென்றனர்.
நடேசய்யரைப் போன்று ஒரு அரசியல் ஆளுமையை, சமூக சிந்தனையாளரை இன்று வரை மலையகம் காணவில்லை என்பது கசப்பான உண்மை. அவரது அரசியல் நோக்கம் இன்று தவிடுபொடியாகிவிட்டது. மக்களுக்காக அரசியல் என்ற நிலைமாறி, பிழைப்பிற்காக அரசியல் என்ற நிலையே மலையக அரசியல் இன்று காணப்படுகிறது.
தேசிய அரசியல் நீரோட்டத்தில் மலையகம்
தேயிலை யுகம் பிறந்த பின், குறிப்பாக சுமார் 1907 களில் தான், இவர்கள் மத்தியில் அரசியல் உரிமைகளை துணிவுடன் கேட்கும் எண்ணம் பிறந்தது. அதுவரையில் இவர்கள் அடிமைத்தன விலங்கோடு பிணைக்கப்பட்டிருந்தனர். கங்காணிமார்களாலும் துரைகளாலும் வஞ்சனை செய்யப்பட்டு, உழைப்புச் சுரண்டல் இடம்பெற்றாலும் அவ்வப்போது அவர்களால் கிடைக்கும் சொற்பச் சலுகைகளுக்காக மயங்கிப் போகவும் செய்தனர். இவர்களின் கண்களுக்கு, முதலாளித்துவம் ஒரு பக்கம் கொடூர அரக்கனாக தென்பட்ட அதே சமயத்தில், மறுபுறத்தில் சலுகைகள் வழங்கி தங்களைக் காக்கும் இரட்சகனாகவும் தோன்றியது. இது, மக்களின் அறியாமையேயன்றி வேறொன்றும் இல்லை.
இலங்கை அரசியலில் சோல்பரி யாப்பின் பின்னரான, பகுதியளவு சுதந்திரத்திலும் கூட மலையக மக்கள் கண்டுகொள்ளப்படாதவர்களாகவே காணப்பட்டனர். அன்றைய சட்டவாக்க மன்றத்தில் படித்த இலங்கையர் சார்பில் உறுப்பினராக இருந்த சேர்.பொன். இராமநாதன் அவர்கள் ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ என மலையக மக்களைக் குறிப்பிட்டமையே இதற்குச் சிறந்த உதாரணம். சுதந்திரக் காலப்பகுதியில் மலையக மக்களின் அடிமைச் சாசனம் துரைமார்களில் இருந்து படிப்படியாக அரசியல்வாதிகளின் கெடுபிடிமிக்க கைகளுக்கு மாற்றப்பட்டது. மக்களின் பிரச்சினைகள் தீர்ந்தால் இங்கு அரசியல் செய்வது கடினம் என்ற தீர்க்கதரிசனம் இலங்கை இந்த அரசியல்வாதிகளிடம் உண்டு. சொந்தப் பிரச்சினைகள் சூழ்ந்திருக்கும் போது தேசியப் பிரச்சினை தொடர்பாகப் பேசுவது சவாலான ஒன்று. தொழிற்சங்கம், சம்பளம், கொழுந்து, தேயிலை, லயம் என்று இவர்களின் பிரச்சினைகள் அனைத்தும் சுருக்கப்பட்டு கிடக்கிறன.
இரு நூற்றாண்டுகளுக்கு முன், இங்கு வந்து குடியேறியபோது இருந்த, ‘தானுண்டு தன் வீடுண்டு’ எனும் மனநிலை இன்றும் மலையக மக்களிடம் உண்டு. இந்த மனப்போக்கே தேசிய நீரோட்டத்தில் இவர்கள் இன்னமும் இணையாமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கிறது. இன்றும் கூட, படித்த இளைஞர்களால் போராட்டங்கள், அரசியல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதும், தொடர்ந்தும் பசப்பு வார்த்தைகளை நம்பி வாக்களிக்கும் நிலையே காணப்படுகின்றது. இதற்குத் தீர்வு வேண்டுமெனில் சுயசிந்தனை வளர்க்கப்பட வேண்டும். சலுகைகளைப் புறக்கணித்து எதிர்காலத்திற்காகச் சிந்தனை செய்யும் போக்கு வலியுறுத்தப்பட வேண்டும்.
தேசிய ரீதியான சிந்தனைகள் வலுப்பெறுதல் அவசியம். உழைப்பிற்கான கூலியை, ஒப்பந்தங்கள் தீர்மானம் செய்யும் அவலம் மாற வேண்டும். தேசிய அரசியலில் மலையகம் சங்கமிக்க, ஒவ்வொருவரும் மனதளவில் உணர்சியோடு கிளர்ந்தெழ வேண்டும். மக்களின் புரட்சியால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறு இல்லையெனில், நூற்றாண்டு கடந்து சகாப்தம் பிறந்தாலும், நம் நிலை மாறப்போவதில்லை. புத்தெழுச்சியும் புதிய சிந்தனையும் மலையக மக்கள் ஒவ்வொருவரின் மத்தியிலும் எழ வேண்டியது காலத்தின் தேவையாகும்.
தொடரும்.