ஆங்கில மூலம் : சரத் அமுனுகம
சமூகவியலாளர் கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் ‘WIJEWEERA AND THE LEADERSHIP OF THE J.V.P: A SOCIOLOGICAL PERSPECTIVE’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘DREAMS OF CHANGE – LAND LABOUR AND CONFLICT IN SRI LANKA’ என்ற இவரது கட்டுரைத் தொகுப்பு நூலின் ஆறாவது அத்தியாயமாக (பக். 184 – 242) அமைந்துள்ள இக்கட்டுரையின் கருத்துகளைச் சுருக்கியும் தழுவியும் தமிழில் தந்து, விமர்சன நோக்கில் அறிமுகம் செய்வதே இத் தமிழாக்கத்தின் நோக்கமாகும்.
விஜயவீரவின் கவர்ச்சி, ஆளுமை, அவரின் பலமும் பலவீனமும், அவருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பிற தலைவர்களுக்கும் இடையிலான உள் முரண்பாடுகளும் மோதல்களும் ஆகியவற்றை சமூகவியல் நோக்கில் இக்கட்டுரை பகுப்பாய்வு செய்கின்றது.
1971 கிளர்ச்சி பற்றி வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள், விபரத்தொகுப்புகள் ஆகியன பற்றிய நூற்பட்டியலான ‘THE APRIL 1971 INSURRECTION IN CEYLON : A BIBLIOGRAPHICAL COMMENTARY’ என்ற நூலை நூலகவியலாளர் எச்.ஏ.ஐ. குணதிலக (H.A.I.GOONETILEKE) 1975 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூற்பட்டியலில் 440 வெளியீடுகள் பற்றிய தகவல்கள் தரப்பட்டன. கிளர்ச்சி நடைபெற்று நான்கு ஆண்டுகள் கடந்த பின் வெளியிடப்பட்ட இந்நூலில் குறிப்பிடப்படும் நூல்களும் கட்டுரைகளும் ஜே.வி.பி கிளர்ச்சியின் தோற்றத்திற்கான வரலாற்றுப் பின்புலம், அக் கிளர்ச்சியின் நியாயப்பாடு (JUSTIFICATION) என்பனவற்றுக்கு முதன்மையளிப்பனவாக இருந்தனவென்றும், ஜே.வி.பி இயக்கத் தலைவர்களுக்கும் விஜயவீரவிற்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றிய தகவல்கள் போதியளவு அவற்றில் கூறப்படவில்லை என்றும் சரத் அமுனுகம தெரிவிக்கின்றார். மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகள்/கிளர்ச்சிகள் பற்றி அக்கறை கொண்டிருந்த மேற்குலகிற்கு 1971 கிளர்ச்சி பற்றி அறிமுகம் செய்யும் கட்டுரையை, 1971 இல் பிரட் ஹலிடே (FRED HALLIDAY) ‘நியு லெவ்ட் ரிவியு’ (NEW LEFT REVIEW) இதழில் எழுதினார். இதே இதழில் தமரா டொய்ஸ்ரர் (TAMARA DEUTSCHER) 1972 இல் இரு கட்டுரைகளை எழுதினார். இக்கட்டுரைகளும் கிளர்ச்சியின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் பற்றி ஆராய்வன என்றும் சரத் அமுனுகம குறிப்பிடுகிறார்.
ஜே.வி.பி இன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும் ‘பொடி அத்துல’ என்ற பெயரால் அழைக்கப்பட்டவருமான ‘விக்டர் ஐவன்’ (VICTOR IVAN) 1979 இல் ‘THE INSURRECTION OF 1971 (சிங்களம்)’ என்ற நூலை வெளியிட்டார். இன்னொரு உயர் மட்டத் தலைவரான ‘லயனல் போப்பகே’ ‘THE LIONEL BOPAGE STORY’ என்ற நூலை 2011 இல் வெளியிட்டார். இவ்விரு நூல்களும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் பலவற்றை விரிவாகக் குறிப்பிடும் நூல்களாக அமைந்தன. நினைவுக்குறிப்பு/ வாழ்க்கை வரலாறு என்ற வகையில் அமைந்த இவ்விரு ஆக்கங்களும் உள்ளாள் பார்வையை (INSIDER VIEW) வழங்குவனவாக அமைந்தன. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் போது பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் ஊடாகவும் உள்ளகத் தகவல்கள் வெளிவரலாயின. ஜே.வி.பி கிளர்ச்சி பற்றிய முதனிலைத் தரவுகள், இரண்டாம் நிலைத்தரவுகள் பற்றிய சுருக்கமான நல்ல அறிமுகத்தை முதலிரு பக்கங்களில் கட்டுரையாளர் வழங்கியுள்ளார்.
விஜயவீரவும் லயனல் போப்பகேயும்
நீதி விசாரணை, அதன் பின் தண்டனையும் சிறை வாழ்க்கையும் எனப் பல ஆண்டுகளைக் கழித்த போது ஜே.வி.பி தலைவர்கள் சிலர் தமது கிளர்ச்சியின் தோல்வி பற்றி ஆழ்ந்து சிந்தித்துத் தம் அனுபவப் பதிவுகளை நூல்கள், கட்டுரைகள் வடிவில் எழுதினார்கள். அவ்வாறு எழுதப்பட்ட நூல்களில் சிறந்து விளங்கும் பகுப்பாய்வுகளாகவும் தகவல் களஞ்சியங்களாகவும் விக்டர் ஐவன், லயனல் போப்பகே ஆகிய இருவரதும் நூல்கள் விளங்குகின்றன என சரத் அமுனுகம குறிப்பிடுகிறார். விக்டர் ஐவன் கிளர்ச்சிக் கால நிகழ்வுகளை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். இவ்வாறே லயனல் போப்பகேயும் கிளர்ச்சியின் உள்ளகத் தகவல்களை நன்கு விபரிக்கிறார். அவரது நூல், வாழ்க்கை வரலாறு என்ற முறையில் சிறந்து நிற்கிறது. லயனல் போப்பகே, பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவு மாணவனாக இருந்தே போது இன்னொரு விஞ்ஞானப் பட்டதாரி மாணவனான விஜயவீரவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். போப்பகே மற்றும் விஜயவீர இருவருக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் தென்னிலங்கையின் கொவிகம அல்லாத சாதிப் பின்புலத்தை உடையவர்கள். இருவருடைய தந்தையரும் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களாக இருந்தனர். அதிகாரப் பலம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகளால் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என்பதற்காக இவர்கள் பழிவாங்கப்பட்டனர். விஜயவீர அம்பலாங்கொடவிலும், போப்பகே மாத்தறையிலும் கிராமத்துப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். அவர்களுக்கு விஞ்ஞானப் பட்டதாரிப் படிப்பு என்பது அக்காலத்தில் எட்டாக் கனியாகவே இருந்தது. அம்பலாங்கொட தர்மாசோக கல்லூரியில் விஜயவீரவும், மாத்தறை ராகுல கல்லூரியில் போப்பகேயும் சேர்ந்து உயர் வகுப்புகளில் கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்கள் இருவரும் திறமையின் அடிப்படையில் பல்கலைக்கழக விஞ்ஞானப் பிரிவிற்குத் தெரிவாயினர்.
நீதி விசாரணையின் போது பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களிலும் இத் தலைவர்களது இளமைக்கால வாழ்க்கை பற்றிய செய்திகள் பல பதிவிடப்பட்டன. தர்ம விக்ரமரட்ண என்பவர் எழுதிய ‘THE SECOND INSURRECTION OF THE JVP’ என்ற நூலும் பல தகவல்களைத் தருவதாக உள்ளது என சரத் அமுனுகம குறிப்பிடுகிறார்.
விஜயவீரவின் கல்வி இடை நடுவில் நிறுத்தப்படுதல்
ரஷ்யாவின் லுமும்பா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்விக்காக சென்ற விஜயவீர, ஒரு தடவை கொழும்புக்குத் திரும்பி வந்தபோது, மீண்டும் அங்கு செல்வதற்கு விசா மறுக்கப்பட்டது. இவ்வாறு விசா மறுக்கப்பட்டதன் காரணம், கம்யூனிஸ்ட் கட்சியின் (மொஸ்கோ பிரிவு) தலைவர்கள் சிலர் கொழும்பு ரஷ்யத் தூதரகத்திற்கு விஜயவீரவின் பீகிங் பிரிவு கட்சி சார்பு நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைக் கொடுத்து, விசாவை நிராகரிக்கும்படி ஆலோசனை கூறியது தான் என்று விஜயவீர குறிப்பிட்டிருக்கிறார். தெற்கு இலங்கையின் கம்யூனிஸ்ட் அரசியல்வாதியான எஸ்.ஏ. விக்கிரமசிங்கவின் உதவியாளராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய பிரேமலால் குமாரசிறி, அவரது கட்சியில் இருந்து வெளியேறி நா. சண்முகதாசனின் பீகிங் ஆதரவுக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். பிரேமலால் குமாரசிறியுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டு படிப்படியாக சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்குள்ள ஒருவராக விஜயவீர மாறினார். அவரது ஆதரவுத் தளம் விரிவாகியது. சீன – சோவியத் விவாதம் (SINO – SOVIET-DEBATE) அப்போது உச்சக் கட்டத்தில் இருந்தது. விஜயவீர ரஷ்ய மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தபடியால் ரஷ்யாவில் வெளியான நூல்கள், ஆவணங்கள் பற்றிய நேரடியான அறிவு அவருக்கு இருந்தது. இதனால் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அவருக்கு அதிகாரபூர்வமாகப் பேசக்கூடிய கோட்பாட்டாளர் என்ற மதிப்பு கிடைத்தது. சீனசார்பு கட்சியின் தலைவர் நா. சண்முகதாசனின் தலைமைத்துவத்திற்கு அறைகூவலாக அமையும் முறையில் விஜயவீரவின் நடவடிக்கைகள் அமைந்தன. அக்கட்சியைச் சார்ந்த இளைஞர்களைத் தன் பக்கம் வசியப்படுத்தி, கட்சியைப் பிளவுபடுத்தி வெளியேற அவர் தயாரிப்புகளைச் செய்து கொண்டிருந்தார்.
சேகுவேரா
கியுபா புரட்சித் தலைவர் சேகுவேரா 1960 களில் உலகப் புகழ்பெற்ற புரட்சியாளராக விளங்கினார். கியுபா புரட்சியின் பின் அந்நாட்டில் அமைச்சுப் பதவி போன்ற உயர் பதவிகளைப் பெற்று சுகவாழ்வைத் தொடர்வதைத் துறந்து, லத்தின் அமெரிக்காவிற்குப் புரட்சியை எடுத்துச் செல்ல விரும்பிய ‘சே’ பொலிவியாவின் மலைக் காடுகளுள் கரந்துறை வாழ்க்கையை மேற்கொண்டார். சி.ஐ.ஏ உளவாளிகளால் கொலை செய்யப்பட்டு தன்னுயிரைத் தியாகம் செய்த அவர், உலகெங்கும் இளைஞர் புரட்சிக் குழுக்களால் போற்றப்பட்ட வீரபுருசனாகத் திகழ்ந்தார். விஜயவீர தலைமையில் இலங்கையில் சேகுவேரா குழு (CHE GROUP) பிரபலம் பெற்றது. விஜயவீர தனக்கு போட்டியான தலைவர்களை திட்டமிட்டு ஓரம் கட்டுவதிலும் வேரறுப்பதிலும் வல்லவராக விளங்கினார். இக்காலத்தில் ஹொரண பகுதியைச் சேர்ந்த தர்மசிறி என்பவருடன் விஜயவீர போட்டியையும் பகைமையையும் வளர்த்துக் கொண்டார். சேகுவேரா, சுயநலமற்ற கொள்கைப்பற்று, தியாகம், நீதியும் சமத்துவமும் என்பனவற்றின் குறியீடாக விளங்கினார். ‘சே’யின் ஆளுமையை தன் பிரச்சாரத்திற்கு நன்கு பயன்படுத்திய விஜயவீர, இலங்கையின் மரபுவழி இடதுசாரிகளின் மேட்டிமைக் குழுவாதம் (ELITISM) மீது வெறுப்புக் கொண்டிருந்த தென்பகுதி இளைஞர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துக் கொண்டார்.
சேகுவேரா பற்றிப் பலரும் அறியாத தகவல் ஒன்றையும் சரத் அமுனுகம தருகிறார். சேகுவேரா ஒரு தடவை இலங்கைக்கு வருகை தந்தார். அவர் மேற்கு மாகாணத்தின் ஹொரண என்ற இடத்துக்கு அப்போது சென்றார். இந்த முற்போக்காளர்களின் நகரத்தில் (PROGRESSIVE TOWN) தம் வருகையின் நினைவாக ‘சே’ ஒரு மரத்தை நட்டார். அந்த மரம் இன்று விஜயவீரவின் பின் வந்தோரின் வழிபாட்டுக்குரியதாக இருப்பதாக சரத் அமுனுகம குறிப்பிடுகிறார் (பக். 187). ஹொரண பகுதியே ஜே.வி.பியின் முக்கிய ஆதரவுத்தளமாக இருந்ததைக் குறிப்பிடுவதோடு, விஜயவீரவின் பரம வைரியான தர்மசிறி, ஹொரணவைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடுகிறார் (பக். 187). உலகம் முழுவதிலும் அக்காலத்தில் இலட்சியவாத இளைஞர்கள் சேகுவராவின் கவர்ச்சி ஆளுமைக்கு ஆட்பட்டிருந்தனர் (பக். 187). இலங்கையின் ஜே.வி.பி இளைஞர்களும் ‘சே’ என்ற மந்திரச் சொல்லால் கவரப்பட்டதில் ஆச்சரியமில்லை. விஜயவீர ‘சே’யின் கவர்ச்சி ஆளுமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
சண்முகதாசன், பிரேமலால் குமாரசிறி என்ற இருவரதும் தலைமையில் இயங்கிய சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில், உட்கட்சி பிரச்சினைகள் தலைதூக்கின. சண்முகதாசன் ஒரு தமிழர். அவரது தமிழ் அடையாளம் புரட்சிக்கு தலைமை தாங்கும் தகுதியை அவருக்கு இல்லாமல் செய்திருந்தது. சண்முகதாசன் கோட்பாட்டாளர் என்ற முறையில் சிறந்து விளங்கினார். அவர் தொழிற்சங்க போராட்டங்களில் கூடிய கவனம் செலுத்தினார். மாத்தறைப் பகுதி தலைவரான பிரேமலால் குமாரசிறியின் தொடர்பால் கட்சிக்குள் புகுந்த விஜயவீர தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.
சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர்களில் ஒருவரான விஜயசேன விதான என்பவரை விஜயவீர தன்னுடன் சேர்த்துக் கொண்டார். விஜயசேன விதானவின் இயக்கப் பெயர் ‘சனத் பொறலு ஹெட்டிய’ என்பதாகும். இவர் அனுராதபுரத்தில் ஆசிரியராக வேலை செய்ததோடு அம்மாவட்டத்தின் சீனச்சார்பு கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். ‘சனத் பொறலு ஹெட்டிய’ விஜயவீரவின் அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்தவர். அத்தோடு அவர் விஜயவீர போன்று ‘கராவ’ சமூகப் பிரிவைச் சேர்ந்தவராகவும் இருந்தார். சீனச்சார்பு கம்யூனிஸ்ட் குழுவில் இருந்த வேறு பலரும் விஜயவீரவுடன் இணைந்து கொண்டனர் எனக் குறிப்பிடும் சரத் அமுனுகம அத்தகைய 14 நபர்களின் பட்டியலைத் தருகிறார். சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளிருந்து பல முக்கிய புள்ளிகளை விஜயவீர கவர்ந்திழுத்தமையை இப்பட்டியல் காட்டுகிறது. அதனை முழுமையாகக் கீழே தந்துள்ளோம்:
- டபிள்யு.ரி. கருணாரத்தின (சீனச்சார்புக் கட்சியின் வத்தளைக் கிளைச் செயலாளர்)
- எஸ். பியதிலக (வத்தளைக் கிளை உறுப்பினர்)
- எச். மில்டன் (வேலையற்ற இளைஞர், கொழும்பு வடக்கில் பிரபலமான செயற்பாட்டாளர்)
- டெல்கொட ராஜா பெரேரா (துறைமுக அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்)
- சிறிபால அபய குணவர்த்தன (இ.பொ.ச வின் பஸ் சாரதி)
- டி.பி. விமலகுண (தொழிற்சங்கவாதி, கொலட்ஸ் லிமிட்டட் கம்பனி ஊழியர்)
- ரி.ஜி. வால்டர் (மோட்டார் வாகனத் திருத்துனர்)
- ஏ.ஈ. யமிஸ் (எலக்ரிக்கல் தொழில்நுட்பவியலாளர்)
- பியசிரி குணரத்தின (எழுது வினைஞர்)
- நிகால் டயஸ் (பல்கலைக்கழக மாணவன், சீனச் சார்புக் கட்சியின் பாணந்துறைக் கிளைச் செயலாளர்)
- மகிந்த பாலிகவாதன (வங்கி எழுதுநர்)
- பியதாச யலகல (வேலையற்ற இளைஞர்)
- முத்துபால (எழுது வினைஞர்)
- ரி.பி.சி. பெர்ணாண்டோ (வேலையற்ற இளைஞர்)
சண்முகதாசனின் கட்சியில் இருந்து தன்பக்கம் சேர்த்துக் கொண்ட குழுவில் முக்கியமானவர்களின் மேற்படி பட்டியல் அக்கட்சியில் விஜயவீர எந்தளவுக்கு ஊடுருவியிருந்தார் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. 1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் நா. சண்முகதாசன் சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் கொழும்பு, தெற்குத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கொழும்பு, தெற்குத் தொகுதி தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி (வெள்ளவத்தையை உள்ளடக்கியது). சண்முகதாசன் தேர்தலில் கட்டுப் பணத்தையும் இழந்து தோல்வியுற்றார் என்பதைக் காட்டி, விஜயவீர குழுவினர் சண்முகதாசனுக்கு எதிரான பிரச்சாரத்தை கட்சிக்குள் முன்னெடுத்தனர். கட்சியின் ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்களை அவதானித்து வந்த சண்முகதாசன், விஜயவீரவின் இனவாத நடவடிக்கைகளை ஏற்க முடியாதவராய் விஜயவீரவைக் கட்சியில் இருந்து நீக்கினார். இது விஜயவீரவுக்குப் புதிய கட்சியை ஆரம்பிக்க வாய்ப்பான தருணம் ஆயிற்று. ‘ஜனதா விமுக்தி பெரமுன (மக்கள் விடுதலை முன்னணி)’ என்ற பெயரில் புதிய கட்சியை விஜயவீர ஆரம்பித்தார். உலக அளவில் இடதுசாரி சார்புள்ள இளைஞர்களைக் கவர்ந்த ‘மக்கள் (PEOPLE)’, ‘விடுதலை (LIBERATION)’ என்ற இரு சொற்களையும் சேர்த்த கவர்ச்சியானதொரு பெயரை விஜயவீர தன் கட்சிக்கு வைத்துக்கொண்டார் (பக். 190).
புதிய கட்சியை ஆரம்பித்த தொடக்கத்தில் விஜயவீர, இடதுசாரி சார்புடையவர்களான இரண்டு இளைஞர்களைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். இவர்களில் ஒருவர் களனியைச் சேர்ந்த நிமலசிறி ஜயசிங்க என்பவராவர் (இவர் பின்னர், லொக்கு அத்துல என்றும் பெயரைப் பெற்றார்). மற்றவர் சிறில் திசாயக்க (டினோரிஸ்) என்பவர். இவர்கள் இருவரும் கட்சியில் முக்கிய வகிபாகம் பெற்றனர்.
களனி – மகர பகுதி, வகும்புற (பத்கம) என்னும் சாதியினர் அதிகம் வாழும் பகுதியாகும். நிமலசிறி ஜயசிங்க இப்பகுதியைச் சேர்ந்தவர். இச்சமூகப் பிரிவினரின் ஆதரவுப் பலத்தை புதிய கட்சிக்கு பெற்றுக் கொள்ள இவர் உதவினார். ஒழுங்கமைப்பு வேலைகளில் திறமை மிக்க ‘லொக்கு அத்துல’ கட்சியின் அதிகாரப் படிநிலையில் உயர்ந்து சென்றார். சிறில் திசநாயக்க காணி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழிற்சங்கத்தில் இருந்தார். அத்திணைக்களத்தின் வாகனங்களைப் பெற்றுப் பயன்படுத்தல், காணித் திணைக்களத்தின் கட்டிடங்களில் கட்சியின் இரகசியக் கூட்டங்களை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு உதவினார்.
நா. சண்முகதாசனின் கட்சிக்குள் இருந்து கொண்டே அவரின் தலைமையை விமர்சித்துக் கொண்டிருப்பதும், அக்கட்சியில் இருந்து வெளியேறி தனியாக ஒரு கட்சியை அமைப்பதும் வெவ்வேறான விடயங்கள். தனிக்கட்சியை அமைப்பது சவால் மிகுந்த விடயம் என்று குறிப்பிடும் சரத் அமுனுகம, விஜயவீர தலமைத்துவப் பண்புகள் மிக்க திறமைசாலி எனவும், புத்தாக்கமான தந்திரங்களைக் கையாண்டு மக்கள் விடுதலை முன்னணியை ஒரு பலம்மிக்க கட்சியாக வளர்த்தார் என்றும் குறிப்பிடுகிறார். சண்முகதாசனின் கட்சியில் இருக்கும் வரை அவர் இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் விளிம்பு நிலை வகிபாகத்தை (PERIPHERAL ROLE) வகித்தார் என்றும், விஜயவீர போன்ற இளம் தலைவர்களையும் கட்சித் தொண்டர்களையும் எல்லா இடதுசாரிக் கட்சிகளும் அலட்சியம் செய்து வந்தன என்றும் சரத் அமுனுகம கூறுகிறார். இதற்குக் காரணம், கட்சிகளின் உயர் பீடங்களில் அமர்ந்திருந்தவர்கள் மத்தியதர வர்க்கத்தினராக இருந்தமையும், அவர்களது மேட்டிமையான போக்குமாகும். கட்சிகளின் உட்குழுக்களுக்குள் மத்திய தர வர்க்கத்தினர் அல்லாதவர்களைத் தலைவர்கள் உட்புக அனுமதிக்கவில்லை. லங்கா சமசமஜாக்கட்சி, இரண்டாம் உலகப் போருக்கு முந்திய காலத்தில், கீழ் மட்டங்களில் இறங்கி வேலை செய்தவர்களான பிலிப் குணவர்த்தன, என்.எம். பெரேரா போன்ற தலைவர்களைக் கொண்டிருந்தது. ஆனால் பிற்காலத்தில் இடதுசாரித் தலைவர்களின் பாராளுமன்றவாதமும் (PARLIAMENTARISM), தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றிய உயர் வர்க்கப் பண்பாடும் கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களை அந்நியப்படுத்துவதாக அமைந்தன. இப்பின்னணியில் விஜயவீர இடதுசாரித் தலைவர்கள் மீது விரக்தி கொண்டிருந்த இளைஞர்களைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் ஒழுங்கமைப்பு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். பின்வரும் தலைப்புகளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணியின் ஒழுங்கமைப்பு வேலைகளையும் விஜயவீரவின் தலைமைத்துவத்தின் நிறை குறைகளையும் சரத் அமுனுகம பகுப்பாய்வு செய்கிறார்:
- காணித் திணைக்களத்தின் தொழிற்சங்கம்
- பல்கலைக்கழகங்கள்
- கட்சியின் கட்டமைப்பு (பொலிட் பீரோ, மாவட்டம், கிளைகள்)
- பிராந்தியக் குழுக்கள்
- இளம் புத்ததுறவிகள்
- இலக்கிய, கலை, கலாசாரக் குழுக்கள்
காணித் திணைக்களத்தின் தொழிற்சங்கம்
தொடக்கத்தில் இருந்தே காணித் திணைக்களத்தின் தொழிற்சங்கம் மக்கள் விடுதலை முன்னணிக்கு வளங்களைக் கொடுத்துதவிய ஒன்றாக இருந்து வந்தது. இத்தொழிற்சங்கத்தின் தலைவர்களாக தகநாயக்க (டையோனிஸ்) மல்கொன்ட, எஸ்.ஜே. பீற்றர் ஆகியோர் இருந்தனர். மிக விரைவிலேயே மக்கள் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் தலைவர் டையானிஸ், செயலாளர் எஸ்.ஜி. சமரசேன, நிர்வாகக்குழு உறுப்பினர்களான தனபால, ரூபன் ஆகியோரைத் தனது உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டது. இவர்கள் காணித் திணைக்களத்தின் தொழிற்சங்கத்தை மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளுக்கான பலமான களமாக மாற்றினர். அத்தொழிற்சங்கத்தின் செய்திப் பத்திரிகையான ‘அபிவிருத்தியின் குரல்’ தொழிற்சங்க உறுப்பினர்களின் சந்தாப் பணத்தைக் கொண்டு நடத்தப்பட்டு வந்தது. அப்பத்திரிகை, விஜயவீரவின் பிரச்சார வேலைக்கான கருவியாக ஆகியது. காணித் திணைக்களத்தின் தொழிற்சங்கம் பொலநறுவ மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஒரு அமைப்பாகவும், மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் தன் இருப்பை வெளிப்படுத்திய ஒன்றாகவும் இருந்தது. முன்னாள் சிவில் சேவை உத்தியோகத்தராகவும், பொலநறுவ பாராளுமன்ற உறுப்பினராகவும், காணி அமைச்சராகவும் இருந்த சி.பி.டி. சில்வா கட்டமைத்த நிறுவனமே காணித் திணைக்களமாகும். அத்திணைக்களத்தின் உத்தியாகத்தர்களும் தொழிலாளர்களும் அப்பகுதியில் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளையும், காடழிப்பு, வீடமைப்பு, வீதியமைப்பு போன்ற கட்டுமான வேலைகளையும் செய்து முடிப்பவர்களாக இருந்தன. சி.பி.டி சில்வா பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்கடிக்கப்பட முடியாத ஒருவர் என்றே கருதப்பட்டு வந்தார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமறைவுப் பிரச்சார வேலைகள் காரணமாக 1970 பொதுத் தேர்தலில் மின்னேரியாத் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட சி.பி.டி. சில்வா தோற்கடிக்கப்பட்டார். பொலநறுவவிற்கு வெளியே இருந்து கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்ட ஒரு வேட்பாளர் சி.பி.டி. சில்வாவைத் தோல்வியுறச் செய்தார். அத்தோல்வியின் பின் சில மாதங்கள் கழித்து சில்வா காலமானார்.
ரோஹண விஜயவீரவின் கட்சியின் கொள்கைகளின் இனத்துவப் பரிணாமம் (ETHNIC DIMENSION) மிக முக்கியமான ஒரு விடயம். தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கட்சியின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் பொலநறுவவும், காணித் திணைக்களத் தொழிற்சங்கமும் முக்கிய இடத்தைப் பெற்றன. 1958 ஆம் ஆண்டு இனக் கலவரம் நடைபெற்ற போது, காணித் திணைக்களத்தின் தொழிலாளர்கள் பெரும் அழிவு வேலைகளைச் செய்தனர். கொழும்பில் நடந்த சம்பவங்கள், கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பன பற்றிய பொய் வதந்திகள் பரவிய போது, பொலநறுவ காணித் திணைக்களத் தொழிலாளர்கள் அப்பகுதியில் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாகவிருந்த தமிழர்களைத் தாக்கினர். பொலநறுவையில் தமது அழிவு வேலைகளை முடித்த பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான இயந்திரங்களையும் வாகனங்களையும் எடுத்துக் கொண்டு ‘தமிழர்களைக் கொல்வோம்’ என்ற கோஷத்தோடு பதுளை நோக்கிச் சென்றனர். அப்போது, அரசாங்க அதிபரும் ஆயுதப் படைகளும் பலாத்காரத்தை உபயாகித்து காணித் திணைக்கள தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தினர். இத்தொழிலாளர்களே ‘சண்டியர்கள்’ எனப் பிரசித்தம் பெற்றவர்கள். தென்இலங்கையின் பலப்பிட்டிய போன்ற பகுதிகளில் இருந்து கடுமையான உடலுழைப்பு வேலைகளுக்காக கொண்டுவரப்பட்டவர்களான இத் தென்பகுதித் தொழிலாளர்கள் சோசலிஸ்டுகளாகவும் அதிதீவிரத் தேசியவாதிகளாகவும் விளங்கினர். விஜயவீரவின் கோட்பாடுகள், தோட்டத் தொழிலாளர்களையும் நகரம் சார் இடதுசாரிக் கட்சிகளையும் எதிரிகளாக விளக்கம் கொடுத்தன. இதனால் விஜயவீரவின் ‘சிங்களச் சோசலிசம்’ இத் தொழிலாளர்களுக்கு கவர்ச்சி மிக்கதாக இருந்தது. விஜயவீரவின் இனவாத அடிப்படையிலான ‘சிங்களச் சோசலிசம் காணித் திணைக்களத் தொழிலாளர்களை மட்டுமல்லாது ஏனைய அடிநிலை இடதுசாரித் தொழிலாளர்களையும் கவர்ந்திழுத்தது. சி.பி.டி. சில்வா பற்றிய அடிக்குறிப்பில், சில்வா தென்பகுதியின் பலப்பிட்டியைச் சேர்ந்தவர் என்பதையும் பலப்பிட்டியின் அயற்பகுதியான அம்பலாங்கொடவைச் சேர்ந்த விஜயவீரவிற்கும் அவருக்கும் இடையிலான கருத்தியல் ஒற்றுமைகளைப் பற்றியும் சரத் அமுனுகம விபரித்துள்ளார்.
பல்கலைக் கழகங்கள்
சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, பொலநறுவ காணித் திணைக்களம் என்பனவற்றில் இருந்தும் பிற இடதுசாரிச் சார்புடைய தொழிலாளர்களில் இருந்தும் ஒரு சிறு குழுவை விஜயவீர தனக்குச் சார்பானவர்களாக மாற்றிக் கொண்டார். அத்தோடு பல்கலைக்கழகங்களில் தனக்கு ஓர் ஆதரவுத் தளத்தை உருவாக்கினார்.
1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மூன்று பல்கலைக்கழகங்கள் இருந்தன. இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பேராதனை வளாகத்தில் சரத் விஜயசிங்க, நிகால் டயஸ், லயனல் போப்பகே ஆகிய மாணவத் தலைவர்கள் முக்கிய செயற்பாட்டாளர்களாக விளங்கினர். விதியோதயப் பல்கலைக்கழகத்தின் மகிந்த விஜயசேகர, தர்மசேகர ஆகியோர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளான நுகேகொட, களனி ஆகிய இடங்களில் தம் செயற்பாடுகளை மேற்கொண்டனர். இத் தலைவர்களோடு விஜயவீர கொண்டிருந்த முரண்பாடுகள் பற்றி சரத் அமுனுகம விளக்கிக் கூறுகிறார்.
கட்சியின் கட்டமைப்பு
நூலின் பக்கம் 198 இல் மக்கள் விடுதலை முன்னணியின் 9 பொலிட் பீரோ உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவ்வுறுப்பினர்கள் பலரதும் பதவிப் பொறுப்பு, அவர்கள் எம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆகிய விபரங்களும் தரப்பட்டுள்ளன. மாவட்டத் தலைவர்கள் என்ற தலைப்பில் பக்கம் 198-199 இல், 18 இடங்களின் பெயர்களோடு, கிளைகளுக்குப் பொறுப்பான தலைவர்களின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை இயக்கத்தின் முக்கிய தலைவர்கள், அவர்களது சமூகப் பின்புலம், அத்தலைவர்களின் செயற்பாடுகளின் மையங்களாக அமைந்த நகரப் பகுதிகள் போன்ற தரவுகள் நூலின் இப்பகுதியில் தரப்பட்டுள்ளன. முழுமையும் சிங்கள இளைஞர்களைக் கொண்டதாக அமைந்த 17 நகரங்களின் பெயர்களும் நூலின் 198 – 199 பக்கங்களில் தரப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, வவுனியா என்னும் இரு தமிழ்ப் பகுதிகளின் நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்விரு நகரங்களின் தலைவர்களும் சிங்கள இளைஞர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1971 ஜே.வி.பி கிளர்ச்சி, முழுமையாக சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியாகவே இருந்ததைக் காணமுடிகிறது. கேகாலை மாவட்டத்தின் தலைவராக விளங்கிய சரத் விஜயசிங்க, ஆளுமைமிக்க மாணவத் தலைவரராக இருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக விளங்கிய இவர் கேகாலைப் பகுதியின் பத்கம சமூகப் பிரிவினரின் மத்தியில் செல்வாக்குள்ளவராகத் திகழ்ந்தார். இராணுவம் இப்பகுதியில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. இராணவத்துடனான சண்டையில் சரத் விஜயசிங்க மரணத்தைத் தழுவினார்.
சிங்களச் சோசலிசம்
விஜயவீரவினதும் ஏனைய ஜே.வி.பி. தலைவர்களினதும் சமூகப் பின்புலம் பற்றிய சரத் அமுனுகம அவர்களின் ஆய்வு, நிலம், உழைப்பு ( LAND, LABOUR) என்ற இரண்டு திறவுச் சொற்களை (KEYWORDS) மையமாகக் கொண்ட சிறப்பான ஆய்வாகும். நிலம், உழைப்பு என்ற முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே 1948 இற்குப் பிந்திய அரசியல் வரலாற்றின் இயக்கம் அமைந்துள்ளது. ஜே.வி.பியின் அரசியல் கருத்தியலை ‘சிங்களச் சோசலிசம்’ என மிகப் பொருத்தமான தொடரால் சரத் அமுனுகம குறிப்பிடுகின்றார் (பக்.193). நகரத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டம், மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டின் அடிப்படையில் எழுவது. இலங்கையின் கிழக்கு மாகாணத்துடன் எல்லையை உடையதான பொலநறுவை மாவட்டம், விஜயவீரவின் முக்கிய ஆதரவுத் தளமாக இருந்தது. பொலநறுவ மாவட்டத்தில் ஜே.வி.பி, இன முரண்பாடுகளை முதன்மைப்படுத்தும் வகையில் தனது செயற்பாடுகளை அமைத்தது. அங்கு காணி அபிவிருத்தித் திணைக்களத்தின் தொழிற்சங்கத்தில், விஜயவீரவிற்கு ஆதரவான தொழிற்சங்கத் தலைவர்களிடம் வேரூன்றியிருந்த கருத்தியல் இனவாதக் கலப்புடையது.
‘இத் தொழிற்சங்கத்தினர் சோசலிஸ்டுகளாகவும் தீவிர சிங்களத் தேசியவாதிகளாகவும் இருப்பதை விரும்பினார்கள் (THEY WANTED TO BE BOTH SOCIALISTS AND EXTREME SINHALA NATIONALISTS – பக்.192-193)’ என சரத் அமுனுகம குறிப்பிடுகின்றார். இத் தொழிற்சங்கத்தின் தலைவர்கள் மட்டுமல்லாது, அடிநிலை இடதுசாரித் தொழிலாளர் பிரிவினரிடமும் (GRASS ROOT LEVEL LEFTIST WORKERS) சிங்களச் சோசலிசம் ஆதரவைப் பெற்றது. இவ்வாதரவு பொலநறுவ, மின்னேரியா பகுதிகளுக்கு மட்டுப்பட்டதாக இருக்கவில்லை. பிற மாவட்டங்களின் கிராமப்புற இடதுசாரித் தொழிலாளர்களிடமும் அது பரவியிருந்தது.
தொடரும்.