தமிழ்ப் பௌத்த மீட்டுருவாக்கம்
Arts
18 நிமிட வாசிப்பு

தமிழ்ப் பௌத்த மீட்டுருவாக்கம் 

May 24, 2024 | Ezhuna

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வர்க்க அரசியலை மேவியதாக அடையாள அரசியல் மேலெழுந்து வந்துள்ளது. இனத்தேசியம், மதபேதம் என்பவற்றுக்கு அப்பால் சாதியுணர்வுடன் இணைந்த அடையாள அரசியல் முதன்மை இடம்பெற்றுள்ள இன்றைய சூழலில் எமது சமூக கட்டமைப்பில் வர்க்கமும் சாதியும் பின்னிப்பிணைந்துள்ளன எனும் விடயம் பேசுபொருளாகியுள்ளது. எமது சமூக உருவாக்கம் வர்க்க அடித்தளம் உடையதல்ல. சாதிகளின் கட்டமைப்பு சார்ந்து இயங்கும் எமக்கான அரசியல் செல்நெறி வர்க்க அமைப்பின் வரலாற்றுச் செல்நெறிக்குரியதினின்றும் வேறுபட்டது என்ற விடயத்தினை தமிழர் வரலாற்றுத் தொடக்கமாக அமைந்த திணை வாழ்வியலை மையமாக கொண்டு ஆய்வு செய்வதாக ‘தமிழ்ப் பண்பாடு: ஊற்றுகளும் ஓட்டங்களும்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இதுவரை நிலவி வந்த உலக ஒழுங்கு பாரிய மாற்றத்தை கண்டு வரும் செயலொழுங்குகள் முனைப்புடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தமிழ்ப் பண்பாட்டு உருவாக்கத்தையும் அதன் விருத்திகளையும் பார்த்து வருகிறோம். ஏகாதிபத்திய நாடுகளும் அதன் தலைமைக் கேந்திரமான ஐக்கிய அமெரிக்காவும் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து,மீண்டெழுவதன் பொருட்டு ஆறேழு வருடங்களாக எடுத்து வரும் எத்தனங்கள் பற்றிப் பல தளங்களிலும் பேசப்படுகின்றன. தம்மை முந்திவிடக் கூடும் என முன்னாள் சோசலிச நாடான ருஷ்யாவைக் கருதி, அதனைப் பந்தாட நினைத்த உக்ரேன்-ருஷ்ய யுத்தகளம் பாதகமான சமிக்ஞைகளுடன் இழுபட்டவாறுள்ளது; காலனித்துவப்படுத்தியவாறு உலகைத் தாம் கட்டியாளத் தொடங்குவதற்கு முன்னர் ஒட்டோமான் பேரரசு எனத் துருக்கியை மையமாகக் கொண்ட முஸ்லிம் சமூகம்  திகழ்ந்த காரணத்தால் அரபுத்தேசம் பல நாடுகளாக சிதறடிக்கப்பட்டிருந்தது. போதாக்குறைக்கு இஸ்ரேல் எனும் நச்சு விதையையும் ஊன்றியிருந்தனர். எரிபொருள் வளக் கண்டுபிடிப்பின் பின்னர் ‘முஸ்லிம் தேச’ ஒன்றிணைவு சாத்தியப்படாத வகையில் மத்திய கிழக்கு நாடுகளைத் தமது இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொருட்டு இஸ்ரேலின் தொடர்ந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை ஏகாதிபத்தியத் திணை உற்சாகமூட்டி வளர்த்து வந்தது. ‘இஸ்ரேல்’ என இல்லாதிருந்த தேசம் ஒன்றுக்குத் தமது மண்ணில் இரக்க மேலீட்டால் இடமளித்த தவறை உணர்ந்து கொண்ட பின்னர், பலஸ்தீன மக்கள் விட்டுக்கொடுப்பற்ற விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதன் பேரிலும் ஏகாதிபத்தியத் திணை மூச்சுத் திணறலுக்கு ஆட்பட்டவாறுள்ளது.

ஏகாதிபத்திய முகாம் மிகப் பெரும் சவாலை எதிர்கொண்டிருப்பது மக்கள் சீனத்திடம். அவர்கள் பொருளாதார முடக்கத்தில் திக்குமுக்காடிய போது சீனா தள்ளாட்டம் ஏதுமின்றி தொடர்ந்தும் விருத்திப் பாதையில் முன்னேறியவாறேதான் உள்ளது. இடையிட்டு ஏதும் நெருக்கடிகள் ஏற்பட்ட போதிலும் முதலாளித்துவ நாடுகள் சுதாகரித்து அடுத்த அடியெடுத்து வைப்பதை விடவும் மிக வேகமாகத் தனது தவறுகளைத் திருத்திக் கொண்டு மீண்டும் சீரான கதியில் முன்னேற்றத் திசையை நாடுகின்ற வேகம் மக்கள் சீனாவிடம் அதிகமாக உள்ளது. சோவியத் யூனியனை சிதறடிக்க வைத்ததைப் போல சீனாவின் சோசலிச முன்னெடுப்பையும் தகர்த்து விட இயலும் என்ற ஏகாதிபத்தியத் திணையின் எந்தவொரு முயற்சியும் பலிதமாகவில்லை.

குறிப்பாக, எல்லைப்புற நாடுகளுடன் மோதலை ஏற்படுத்துவதற்கு முழு அளவிலான  முயற்சியை மேற்கொள்கின்றனர். முன்னதாக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு அதன் இராணுவ முனைப்பும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட ஏதாவதொரு நாட்டுடன் சீனாவையும்  யுத்தத்தில் இறங்க வைத்து விட்டால் தங்களுக்கான இராணுவத் தளபாட விற்பனையும் அமோகமாக நடக்கும் யுத்தச் செலவில் சீனாவும் பின்னடையும் என ஏகாதிபத்தியத் திணை கருதுகிறது. அத்தகைய யுத்தம் சீனாவை மட்டுமன்றி ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாகக் கள மிறங்கும் அவர்களது நேச நாட்டையும் கூடப் பாதிக்கவே செய்யும்; இருப்பினும் உக்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் உதவிகள் புரிந்து அவற்றைத் தூக்கி விடுவது போல உங்களையும் துவண்டு போகாமல் காவாந்து பண்ணக் காத்திருக்கிறோம் என்ற நம்பிக்கையை அவர்கள் நேச நாடுகளுக்கு வழங்கிய படியே உள்ளனர். என்னதான் உதவிகள் முட்டுக் கொடுப்பினும் உக்ரேனும் இஸ்ரேலும் இலகுவில் மீட்சி காண இயலாது என்பதை நேச நாடுகள் உணராமல் இல்லை. அதைவிட மக்கள் சீனம் ஒவ்வொரு முரண் கூர்மைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களிலும் “எவரோ ஆதாயம் பெற நாங்கள் மோதி நாசப்பட வேண்டுமா? அதையும் மீறி யுத்தம் ஒன்றே வழியென்றால் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தாமல் அடங்க மாட்டோம்; எல்லை  பிரச்சினையை உடனே தீர்க்க இயலாமல் போயினும் பொறுமையாக இரு தரப்புப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதன் வாயிலாக எங்களது இரு நாடுகளும் வெற்றியீட்டும் சந்தர்ப்பத்தை உருவாக்குவோம். யுத்தம் நிரந்தர வெற்றியைத் தரப் போவதில்லை” என்று தனது அயல்நாடுகளுக்கு வலியுறுத்துவதனை மற்றைய தரப்பும் ஏற்க வேண்டியுள்ள நிர்ப்பந்தம் காரணமாக யுத்தம் தவிர்க்கப்பட்டு வருகிறது.  

தவிர்க்கவியலாத ஒரு யுத்தகளம் பற்றிய நம்பிக்கையுடன் ஐக்கிய அமெரிக்கா தீவிரமான முயற்சியில் இறங்கி இருப்பது தைவானில். சீனா முழுமையிலும் அதிகாரம் செலுத்திய கோமிங்தாங் கட்சி அப்போதும் ஐக்கிய அமெரிக்கச் சார்புடன் இயங்கியது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட புரட்சி மக்கள் சீனத்தைப் பூரண விடுதலைக்குரியதாக 1949 ஒக்டோபர் 1 ஆம் திகதி பிரகடனப்படுத்திய போது சீனாவின் ஒரு தீவான தைவானுக்குள்  கோமிங்தாங் கட்சி ஒதுங்கிக் கொண்டது. பிரித்தானிய, போர்த்துக்கல் போன்ற நாடுகளது காலனிகளாக இருந்த ஹொங்கொங், மக்காவோ போன்ற தீவுகளைச் சமாதானமாகத் தாயகத்துடன் இணைத்ததைப் போல ஐக்கிய அமெரிக்காவின் காலனித் தீவாக உள்ள தைவானையும் யுத்தமின்றித் தாயகப் பெரு நிலப்பரப்புடன் ஒன்று சேர்க்க இயலும் என்ற நம்பிக்கை சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது; தைவான் மக்களிடமும் அத்தகைய விருப்பம் வளர்ந்து வருகிறது.

“தைவான் தன்னையொரு தனிநாடாக அறிவிக்காதவரை அதன் மீது யுத்தம் தொடுத்து அதனை இணைக்க மக்கள் சீனம் விரும்பவில்லை; அவசியமற்ற யுத்தத்தில் இறங்குவதற்கு நாங்கள் சோவியத் யூனியன் அல்ல. அதேவேளை, தனிநாடகப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் தைவான் இறங்கும் பட்சத்தில் யுத்தம் புரிவதில் இருந்து பின்வாங்கவும் மாட்டோம்” என்ற எச்சரிக்கையை மக்கள் சீனம் மீண்டும் மீண்டும் முன்வைத்து வருகிறது. யுத்தத்தைத் தவிர்த்தல் என்பது தனியே சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் இருந்து கற்றுக் கொண்ட விடயம் மட்டுமா? காலனித்துவ ஒடுக்குமுறையைத் தகர்த்து மக்கள் சீனம் விடுதலை பெற்ற மார்க்கத்துக்கும் இன்றைய நடைமுறைக்கும் தொடர்பில்லையா? இவற்றிலான திணை அரசியல் செயலொழுங்கு மிகுந்த கவனிப்புக்குரியது! 

சாதியமும் காலனித்துவமும் இணைந்து உருப்பெற்ற நிலப்பிரபுத்துவ முதலாளித்துவம்    

ஐரோப்பா மத்திய காலத்தின் இருண்ட யுகத்தில் விஞ்ஞான நோக்குக்கு விரோதமாகவும் வணிக மறுப்போடும் முடங்கிப்போய் இருந்த வேளையில் ஆசிய நாடுகளுக்குரிய அரபு-இந்திய-சீன வணிகர்கள் உலக ஊடாட்டத்துடன் தத்தமது பிராந்தியங்களின் அறிவு வீச்சுகளைப் பரிமாறிக் கொள்பவர்களாக இருந்தார்கள். அரபின் இரசாயனவியல், இந்தியாவின் பூச்சியம்-தசமதானம்-அட்சர கணிதம், சீனாவின் திசையறி கருவி-வெடிமருந்து-காகிதம் என்பன உள்ளிட்ட பல்வகை விஞ்ஞானக் கருவூலங்கள் தேச எல்லைகள் கடந்து ஆசிய மக்களின் வாழ்வியல் விருத்தியை வளமூட்டியவாறு இருந்தன.

அதேவேளை,அவற்றின் மீதான நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான எல்லைப்படுத்தல்களும் இஸ்லாம்,இந்து,பௌத்தம் என்ற மதங்கள் ஏற்படுத்தியிருந்த வரையறைகளும் காரணமாக வாழ்வியல் நெறியாக விஞ்ஞான நோக்கு இணக்கம் பெறவில்லை. அதன் காரணமாக நிலப்பிரபுத்துவத் தளையிடல்களைத் தகர்த்துக் கொண்டு விரிந்த தளத்துக்கு விஞ்ஞான-தொழில்நுட்ப விருத்தியை எடுத்துச் செல்ல இயலாமல் போனது. தனது இருப்புக்கு அச்சுறுத்தலாக அமையாத அளவில் விஞ்ஞானத்தை மதம் அனுமதித்தது என்ற வாய்ப்பே மதச் சிந்தனை எல்லைகளைத் தகர்த்துக் கொண்டு முழுமைப்பட்ட விஞ்ஞானப் பிரயோகங்களுக்குள் செல்ல இயலாத தடையாக ஆசிய நாடுகளுக்கு அமைந்தது.

விஞ்ஞானத் தேடல்களில் நாட்டம் கொள்ளும் அவசியம் ஐரோப்பியர்கள் வணிகத்தின் மீது ஆர்வம் கொண்ட போது தான் அவர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு மதம் தடைவிதித்த போது அரசு,கல்வி என்பவற்றில் தலையிடாத வண்ணம் ‘மதசார்பின்மை’ என்பதனைச் செயலாக்க வேண்டும் என்ற போராட்டங்களை ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் முன்னெடுத்தனர். மதத்திலிருந்து பூரணமாக விடுவிக்கப்பட்ட விஞ்ஞான-தொழிநுட்ப-கல்வி என்பவற்றின் மீதான ஆர்வமானது புதிய உலகம் படைக்கும் உத்வேகத்தை ஐரோப்பாவுக்கு வழங்கியிருந்தது. நிலத்துடன் பிணைக்கப்பட்ட பிராந்திய வரையறைக்குரிய நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்துக் கொண்டு உலகெங்கும் வியாபித்த மூலதனத்தை முதன்மை உடையதாக்கிய முதலாளித்துவ அமைப்பு ஐரோப்பாவைப் புதிதாய்ப் புனைந்தது!

அதே வீச்சுடன் பொதுவுடமைப் புத்துலகம் படைப்பதற்கான சோசலிசச் சமூக அமைப்பையும் ஐரோப்பா முன்னதாக உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு நூற்றெழுபத்தைந்து வருடங்களின் முன்னர் மார்க்ஸ்,ஏங்கெல்ஸ் போன்றோரால் விஞ்ஞான பூர்வமாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது. அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை அந்த நம்பிக்கை பலரிடமும் தளராமல் இருந்தது. மாறாக, முதலாளித்துவ மாற்றியமைத்தலில் பின்னடைந்திருந்த சீனா சோசலிசக் கட்டமைப்பில் துரித கதியிலான முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

சீன நிலப்பிரபுத்துவ அமைப்புக்கான மதமாக இயங்கிய பௌத்தம் இந்தியச் சமூகத்தால் வழங்கப்பட்டிருந்தது.சீனாவில் நிலவிய  திணை மேலாதிக்கப் பேறான சீனத்தின் ஆதிக்கச் சாதி பிராமணரைக் கொண்டிராத இந்து மதப் பிரிவாகப் பரிணமித்திருந்த பௌத்தத்தைக் கையேற்றுத் தனது திணை அரசியலுக்கு உரிய மேலாதிக்கக் கடமையை முன்னெடுத்திருந்தது. திணை அரசியல் என்பது பேசுபொருளாக ஆகியிருக்கவில்லை என்ற போதிலும் மார்க்சியச் சிந்தனை வழிகாட்டலில் விடுதலைத் தேசியச் செயலொழுங்குகள் முன்னெடுக்கப்பட்டன; அந்த அனுபவத் தொகுப்பான மா ஒ சேதுங் சிந்தனை எனும் புத்தாக்கம் வர்க்க அரசியலினின்றும் வேறுபட்ட முழுச் சமூக சக்திக்கானது. மேலாதிக்கத் திணை அரசியலின் இயங்கு முறைமையைத் தமிழக வரலாற்றின் வாயிலாகப் பார்த்து வந்திருக்கிறோம். விடுதலைத் திணை அரசியலின் வடிவமாக மா ஓ சேதுங் சிந்தனை எவ்வகையில் புரிந்து கொள்ளத் தக்கது என்பது பற்றிப் பின்னர் (இறுதிப் பகுதியில்) பார்க்க இயலும்!

தமிழ் அனுபவமான திணை அரசியல் பற்றிய எந்தவொரு அருட்டுணர்வும் இல்லாத போதிலும் தமக்கான சொந்த அனுபவங்களை வடிவமைக்கின்ற போராட்டங்கள் அவர்களைத் திணை அரசியல் செயலொழுங்கின் பிரகாரம் இயங்க வழிப்படுத்துகின்றது. ‘எதிரியை அழித்தொழிப்பது’ என்ற நடைமுறையைக் கைவிட்டு திணை அரசியலுக்கான ‘அதிகாரத்தில் இருந்து வீழ்த்தப்பட வேண்டிய சமூக சக்தியின் மேலாதிக்கத்தைச் செயலிழக்கச் செய்தல்’ என்ற செயற்பாட்டையே இன்றைய சீனா கையாள்கிறது. முழுமைப்பட்ட மேலாதிக்கத்துக்கான கருத்தியலைப் பௌத்தத்தின் வடிவில் சீனா இந்தியாவிடமிருந்து கையேற்பதற்கு முன்னர் கன்பூசியஸ், தாஒ மார்க்கங்கள் அங்கே செயற்பட்டு வந்தன. தமிழுக்குரிய ஆசீவகம் போல முழுமைப்பட்ட சமத்துவத்தை அவை பேசவில்லையெனினும் சாதிய வர்க்க மேலாதிக்கத்தை அவை வலியுறுத்தியனவல்ல; அதனாலேயே நிலப்பிரபுத்துவ அமைப்பில் பின்னடைந்திருந்தன. வலுக்குன்றிய குரலாகத் தொடர்ந்த அந்தச் சிந்தனை முறைமையும் சீனாவின் விடுதலை மார்க்கத்தில் சிறியளவான பங்களிப்பை நல்கியிருக்க இயலும்.

அதற்கப்பால், சீனா முழுமையாக ஒரே ஏகாதிபத்திய நாட்டால் காலனித்துவப் படுத்தப்பட்டிருக்கவில்லை என்ற வேறுபாடு பிரதானமான அம்சமாகும். இந்தியாவின் மிகப்பெரும் பகுதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்தது. சில சமஸ்தானங்கள் நீடித்திருக்க அனுமதிக்கப்பட்ட போதிலும் அவையனைத்தும் பிரித்தானியாவின் ஏவலுக்குப் பணிந்து இயங்கியவையே, மிக மிகச் சிறிய நிலப்பகுதிகள் மட்டும் பிரான்ஸ், போத்துக்கல் ஆகியவற்றின் காலனித்துவத்துக்கு ஆட்பட்டிருந்தன.

book

மிகுந்த வளப்பெருக்கம் எட்டப்பட்டிருந்த போதிலும் நிலப்பிரபுத்துவ ஊளைச் சதையாகச் செயலிழப்புக்கு உள்ளாகியிருந்த இந்தியா பல சிற்றரசுகளாக சிதறிக்கிடந்த போது வணிகத்துக்கு வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சிறிது சிறிதாக ஆளும் நிலைக்கு மாறியது. ஒரு பேரரசாக முகலாய ஆட்சிப்பரப்பின் கடைசி மன்னருடன் மிகப் பவ்வியமாகவே கம்பனி நிர்வாகிகள் ஊடாட்டம் கொண்டிருந்தார்கள் என்பதனை ‘’கடைசி முகலாயன்: ஓர் அரச குலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857’’ எனும் நூலில் வில்லியம் டேல் ரிம்பிள் எடுத்துக் காட்டியுள்ளார். முன்னர் வெளிவராத பல ஆவணங்களைப் பல இடங்களிலும் தேடிச் சென்று தொகுத்து வழங்கியிருக்கும் இந்த நூல் காலனித்துவப்படுத்தலின் அடிப்படைகளை வெளிப்படுத்தும் அரிய பணியைச் செய்துள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஐம்பதாம் ஆண்டுகள் வரை மன்னருக்குப் பணிந்தவர்களாக மூத்த பிரித்தானிய அதிகாரிகள் இருந்துள்ளனர். இந்திய உயர் பண்பாட்டில், இஸ்லாம் – இந்து ஒற்றுமையின்பால் ஈடுபாடு கொண்டு வெள்ளை இஸ்லாமியர், வெள்ளை இந்துக்கள் என இங்கேயே மணமுடித்தும் வாழ்ந்தனர். ஆயினும் தொழிற்புரட்சியின் வீறுடன் மாற்றம் பெற்று வந்த இளம் அதிகாரிகள் மன்னரை அவமதிக்கும் நிலைக்கு வளந்திருந்தனர். அதன் காரணமாக புரட்சிக்குத் தலைமை ஏற்கும் படி சிப்பாய்கள் கோரிய போது மன்னர் அதனை ஏற்க வேண்டியவரானார். மனிதத் தனமற்ற கொடூரங்களுடன் அந்தப் புரட்சி அடக்கப்பட்டதுடன்  கடைசி முகலாய மன்னரான ஜாஃபரும் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் முழுமையான காலனித்துவ மயப்படலுக்கு முன்னர் இருந்த மத ஒற்றுமை, பன்மைத்துவம் என்பன காணாமல் போனது பற்றி கூறும் மேற்படி நூலின் வாசகங்கள் மனங்கொள்ளத்தக்கவை: “காலம் சென்ற முகலாயர்களின் பன்மைத்துவ மற்றும் தத்துவார்த்தக் கலப்பு நாகரிகத்தை துடைத்தெறிந்துவிட்டு, அதனை வேருடன் பிடுங்கிச் சென்ற பிரிட்டிஷாரின் வழிமுறைகளால் அதிகம் வருத்தப்படவும் வேண்டியிருக்கிறது” (வில்லியம் டேல்ரிம்பிள், 2017. “கடைசி முகலாயன்: ஓர் அரச குலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857’’ தமிழில்: இரா.செந்தில், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி .ப .655).

ஒன்று கலந்து வாழ்ந்த இஸ்லாமிய – இந்து மக்களைப் பரம வைரிகள் போல பிளவுபடுத்தி எதிரெதிர் முகாம்களாக ஆக்கியதைப் போன்றே கிராமங்களில் கொண்டும் கொடுத்தும் ஊடாடிய பல வேறு சாதிப் பிரிவுகளைக் கூட எதிரிகளாக உணர வைக்கும் நடைமுறைகளைப் பிரித்தானியர் ஆட்சி கையாண்டது. வேறுபட்ட சாதிகள் என்ற வாழ்வியல் ஊடாக பொருளுற்பத்தி உறவு சார்ந்த ஊடாட்டம் முதலாளித்துவ மாற்றத்தில் சிக்கலான வடிவ மாற்றத்தைப் பெறத்தக்கது. இயல்பாக அந்த மாற்றம் இங்கு ஏற்படாமல் பிறர் தலையீடு ‘சாதிகளைக் கையாள முற்பட்ட போது’ மேலும் சிக்கலான தன்மையைப் பெற்றது. நிலப்பிரபுத்துவ முறைமையை முற்றாகத் தகர்க்காமல் ஊடறுத்து வந்த முதலாளித்துவம் தொடர்ந்த விடுதலைப் பாதைக்கு பலவேறு தடைகளை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பெற்று உலகின் இறுதி ஏகாதிபத்தியமாக இந்தியாவை இயங்கு வகை செய்துள்ளது.

ஆதித் தமிழர் மதம் 

முதலாளித்துவ மாற்றம் பெறும் வாய்ப்புள்ளோரில் ஒரு தரப்பு ஏகாதிபத்தியத்துடன் கூட்டமைத்து இயங்கியது. தாமே ஆட்சியாளராக  விரும்பிய பிரிவினர் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினர். அது தோற்றம் பெற்ற 1885 ஆம் ஆண்டிலேயே பிராமணர்கள் மீண்டும் மேலாதிக்கத்தைப் பெறுவதற்காகவே சுதந்திரம் கோருகின்றனர் எனும் எதிர் தேசியக் குரலை தமிழகத்தில் அயோத்திதாசரும் மராட்டியத்தில் ஜோதிராவ்புலேயும் முன்வைத்தனர். தலித் அரசியலுக்கு உரிய முதல் ஆளுமையாக அயோத்திதாசர் திகழ்ந்த போதிலும் தமிழின் தலித் அரசியல் எழுச்சி இருபதாம் நூற்றாண்டின் கடைக் கூறிலேயே சாத்தியப்பட்டது. சாதியத்துக்கு எதிரான போர்க்குரலாக இருந்த, இடைச் சாதியினரான ஜோதிராவ்புலே தொடக்கி வைத்த எதிர் தேசிய இயக்கப் பரிணமிப்பாக முப்பதாம் ஆண்டுகளிலேயே மராட்டியத்தில் தலித் அரசியல் எழுச்சி வீறுகொண்டு எழுவதற்கான ஆளுமையாக அம்பேத்கர் தோற்றம் பெற்று இயங்கி வந்தார். முப்பதாம் ஆண்டின் நடுக்கூறில் “இந்துவாகப் பிறந்தது எனது குற்றமல்ல,ஒரு இந்துவாக நான் சாக மாட்டேன்” என்று பிரகடனப்படுத்திய அம்பேத்கர் இரண்டு தசாப்தங்களின் பின்னர் (இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், 1956 ஆம் ஆண்டில்)  இலட்சக் கணக்கான ஆதரவாளர்களுடன் பௌத்த மதத்தைத் தழுவினார்.

jothirav pule

பிரமாண்டமான இந்த நிகழ்வு நடந்தேறுவதற்கு உந்துதலைத் தமிழகம் அரை நூற்றாண்டின் முன்னரே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. கொழும்புக்கு வந்து அயோத்திதாசர் பௌத்தத்தைத் தழுவுவதற்கு ஒல்கொட் உதவியுள்ளார். இருப்பினும், ஒல்கொட்டின் பிரசாரங்களால் தான் அயோத்திதாசர் பௌத்தத்தைத் தேந்தெடுத்தார் என்பதற்கில்லை. அவரது கற்றலூடாகப் பெற்ற அறிவும் தான் இயங்கிய மக்களின் வழக்காறுகளில் புதைந்திருந்த பௌத்த மதக் கூறுகளும் பௌத்த மதத்தைத் தழுவுவதற்கு அயோத்திதாசரைத் தூண்டியுள்ளன.

ayothitaasar

சாதி ஒடுக்கு முறையில் இருந்து விடுதலைக்கான மார்க்கத்தைத் தேடியவருக்கு இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சிக்குப் பேரியக்கத்தை முன்னெடுத்த ஒல்கொட் ஆதர்சமாக அமைந்தார். வைதிகமதம் சாதிய வக்கிரங்களை இறுகப் பற்றிப் பரப்புரை செய்த போது அதற்கு எதிரான போர்க்குரலாக அப்போது பௌத்தம் உயிர்த் துடிப்புடன் இயங்கியது. அத்தகைய இயக்க வலு சமணத்துக்கு அமைந்திருப்பின் அவர் தழுவிக் கொண்ட மதமாக சமணம் அமைந்திருக்கும். இந்து மதத்தை ஒழித்துக் கட்டுவதற்கு எந்த மதத்தைத் தழுவுவது சாலச் சிறந்தது என இரண்டு தசாப்தங்களாகத் தேடலை மேற்கொண்டவர் அம்பேத்கர். தமிழகத்தில் பேசுபொருளாக இருந்த பௌத்தம் கூடுதல் பொருத்தமுடையது எனக் கண்ட போது அதனை ஆழமாகக் கற்று புத்தரின் மூலக் கோட்பாடுகளில் ஆழ்ந்த தேடுதலை மேற்கொண்டார். இடையிட்டு இலங்கை,பர்மா,சியாம் (தாய்லாந்து) போன்ற நாடுகளில் பௌத்த மதம் பெற்றிருந்த ‘திரிபுகளை’ அவர் நிராகரித்தார். புத்தரின் உணர்வு நிலைக்கு உரிய ‘நவ பெளத்த’ சிந்தனை முறைமையை அம்பேத்கருடையது!

இதனின்றும் வேறுபட்டது அயோத்திதாசருக்குரிய பௌத்தத்தின் மீதான நாட்டம். சடங்காசாரங்களுக்கு அப்பாற்பட்ட தூய பௌத்தக் கோட்பாடுகளின் மீது அம்பேத்கரின் நாட்டம்  இருந்ததென்றால் மக்களிடமிருந்த வழக்காறுகளின் ஊடாகவே அயோத்திதாசர் பௌத்தத்தை மீட்டுருவாக்கம் செய்தார். இடைக்காலத்தில் பேசுபொருளாக இருந்த (தமிழர் மத்தியில் வணிகர்களின் ஒரு தரப்பினர் தொடர்ந்து பின்பற்றிய) சமணத்தையும் கூட அயோத்திதாசர் பௌத்தம் என்பதாகவே அணுகினார். பௌத்தர்கள், சமணர்கள் ஆகியோரிடம் காணப்பட்ட வழக்காறுகளில் இருந்து இந்துக்களால் கையேற்கப்பட்ட கார்த்திகை விளக்கீடு, தீபாவளிப் பண்டிகை போன்றவற்றின் மூல மத உள்ளடக்கத்தை வலியுறுத்துகிறவராக அவர் இருந்தார்.

பௌத்த மதமானது சைவ மதத்தால் ஒடுக்கப்பட்ட போது அதனைப் பின்பற்றிய மக்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக ஆக்கப்பட்டனர் என்பது அவர் கருத்து. அந்த மக்கள் பிரிவினரே ‘ஆதி திராவிடர்கள்’ என்றவர், அந்த வகையில் பூர்வத் தமிழர் மதம் பௌத்தமே எனவும் வலியுறுத்தினார். பௌத்த மூல நூலான திரிபிடகத்தின் தமிழாக்கப்பட்ட  வடிவமே திருக்குறள் என்ற கருத்தை அயோத்திதாசர் கொண்டிருந்தார்.உண்மையில் ‘திரிக்குறள்’ என்பதே மருவித் ‘திருக்குறள்’ என அழைக்கப்படுவதாகக் கூறுவார் அயோத்திதாசர். அயோத்திதாசரின் (20.5.1845-5.5.1914) காலத்தில் தமிழரின் பூர்வ மதமான ஆசீவகம் மீள் கண்டுபிடிப்புச் செய்யப்படவில்லை. சமணம், பௌத்தம் போல சமகாலத்தில் இயங்கிய ஆசீவகம் அவை இரண்டை விடவும் சில வருடங்களால் முற்பட்டது. வேகமாக தனது கோட்பாடுகளைப் பரப்புரை செய்து புத்தர் முன்னேறி வந்த போது மிகுந்த கவர்ச்சியுடன் பலராலும் ஏற்கப்பட்ட மதமாக ஆசீவகம் இருந்தது பற்றி சற்று எரிச்சலுற்றார் என்ற பதிவு உள்ள அளவில் கி.மு.6 ஆம் நூற்றாண்டில் வீச்சுள்ள மதமாக அது இருந்துள்ளது. அதனை மீள்கண்டுபிடிப்புச் செய்து வெளிப்படுத்திய ஏ.எல். பசாம் தமிழின் ஊடாகவே பெரும்பாலும் கண்டறிந்தார் என்ற வகையில் தமிழகத்தில் கள ஆய்வில் ஆசீவகத்தின் உயிர்த் துடிப்புக்குரிய மிச்சம் மீதிகளைத் தேடினார் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் (15.6.1944-4.11.2022).

நெடுஞ்செழியனின் வெளிப்பாடுகள் உணர்த்தும் ஒரு பிரதான அம்சம், ஆசீவகம் தொடர்ந்து இன்றுவரை மாற்றுவடிவத்துடன் இயக்கம் கொண்டுள்ளது என்பதாகும். அவற்றை உள்வாங்கியபடி அயோத்திதாசரை மீள்வாசிப்புக்கு உள்ளாக்குவோமாயின் தமிழரின் பூர்வ மதம் (பௌத்தம்-ஆசீவகம்) குறித்த பல புதிர்கள் மேலும் மேற்கிளம்பி வர இடமேற்படலாம்!

பௌத்தத்தில் இருந்து விடுதலைத் தேசியத்திற்கு 

வேர்களைத் தேடிப் புதிய தடங்களை அவற்றின் ஊடாகக் கண்டடையும் முயற்சி ஒரே தளத்திலே தான் இயக்கம் பெறும்  என்பதற்கில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வேர்களைத் தேடும் முயற்சியில் அயோத்திதாசர் கண்டடைந்த பௌத்தம் இன்னொரு தேவை சார்ந்தும் நாட்டங்கொள்ளப்பட்டது. அவரது சமகாலத்தில் அவருடன் இணைந்தும் தனித்தும் பௌத்த சங்கத்தை உருவாக்கி லட்சுமி நரசு, சிங்கார வேலர் போன்றோர் பொதுநெறியாக விடுதலை மார்க்கத்தை கண்டடைய முயன்றனர். இந்த முயற்சியின் ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் சிங்கார வேலர் நிதர்சன உலகை மாற்றியமைக்கும் விடுதலை மார்க்கமாக மார்க்சியத்தை வரித்துக் கொண்டார்.

லட்சுமி நரசு பௌத்தம் குறித்து ஆழமான ஆய்வுகளை வெளிப்படுத்தினார். அவரது ஆக்கங்களே பௌத்தத்தை நாடுவதற்கான முழுமைப்பட்ட உந்துதலைத் தனக்கு வழங்கியதாக அம்பேத்கர் கூறியிருந்தார். சாதியத் தகர்ப்புக்கான மார்க்கத்தை வழங்கிய பௌத்தம் காலனித்துவத் தகர்ப்புக்கான  வழிகாட்டலையும் சாத்தியப்படுத்தியது என்பதும் இந்து மதத்தை ஒழித்துக்கட்டுவதற்காகப் பௌத்தத்தைத் தழுவிய அம்பேக்தர் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த அணியினரிடமிருந்து அதற்கான உந்துதலைப் பெற்றிருந்தார் என்பதும் ஆழ்ந்த தேடலுக்கு உரியன.

சாதியம், காலனித்துவம் தொடர்பான விவாதங்களை மேலும் மூன்று இயல்களினூடாகத் தொடர வேண்டிய அவசியம் உள்ளது. தேடலைத் தொடர்வோம்!  

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

5720 பார்வைகள்

About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்