மாத்தளை மாவட்டத்தில் மொத்தமாக 62 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், 6 பிற்கால பிராமிக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. இவற்றில் 3 கல்வெட்டுகளில் மட்டுமே நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்.
கரடித காமத்தில் வாழ்ந்த வீம நாகன் பற்றிய பிதுரங்கல கல்வெட்டு
மாத்தளை மாவட்டத்தின் வடபகுதியில் பிரசித்தி பெற்ற சிகிரியா மலைக்குன்று அமைந்துள்ளது. இம்மலைக்குன்று பண்டைய காலத்தில் சிவகிரி, சிம்மகிரி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இது சிகிரியா எனத் திரிபடைந்துள்ளது. சிம்மகிரி மலையின் உச்சியில் இருந்து பார்க்கும் பொழுது வடக்குப் பக்கத்தில் சுமார் 600 மீற்றர் தூரத்தில் ஓர் மலையைக் காணலாம். இதுவே பிதுரகல மலையாகும். தற்போது இம்மலை பிதுரங்கல என அழைக்கப்படுகிறது. இம்மலையில் காசியப்பன் தன் தந்தையான தாது சேனனுக்கு பிதுர்க்கடன் செய்தான் எனக் கூறப்படுகிறது. இதனால் இம்மலை பிதுர்மலை எனப் பெயர் பெற்று, அதுவே சிங்கள மொழியில் பிதுரகல என அழைக்கப்பட்டது. பின்பு முகலனும் இம்மலை அடிவாரத்தில் தன் அண்ணன் காசியப்பனின் உடலை எரித்து, தனது கடமைகளை நிறைவேற்றி, இவ்விடத்தில் காசியப்பனுக்கு ஓர் சமாதியை அமைத்தான் எனக் கூறப்படுகிறது.
இம்மலையின் வடக்கு மற்றும் மேற்குப் பக்க அடிவாரத்தில் 14 இயற்கையான கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு குகைகளில் பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், நாகன், கண்ணன், சுவாமி, பூசகன் ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் சிவவழிபாடு, நாகவழிபாடு, கண்ணன் அல்லது கணேசன் வழிபாடு ஆகியவை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதற்கு இக்கல்வெட்டுகள் முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன.
பிதுரங்கல மலைக்கு ஏறுவதற்கு உள்ள வழியில், மலையின் அடிவாரத்தில் பெளத்த விகாரையும், தூபியும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்து படிகள் வழியாக மலைக்கு ஏறும்போது ஒரு பெரிய கற்குகை காணப்படுகிறது. இக்கற்குகையின் உட் பகுதியில் சுவர்களால் அறைகள் கட்டப்பட்டு, அதில் தெய்வச் சிலைகளை ஸ்தாபித்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக உள்ள சிறிய அறையில் விஷ்ணு பகவானின் சிலையும், மத்தியில் உள்ள பெரிய அறையில் புத்த பகவானின் சிலையும், மூன்றாவதாக உள்ள அறையில் இன்னுமோர் தெய்வத்தின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இக்குகையின் மேற்பகுதியில் கற்புருவம் வெட்டப்பட்டு அதன் கீழே இரண்டு பிராமிக் கல்வெட்டுகளும் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவதாக பெரிய எழுத்துக்களில் சிவன் பற்றிய கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் கீழே சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு நாகன் பற்றிய கல்வெட்டாகும்.
சிகிரியாவின் அருகில் இருந்த கரடித காமம் என்னுமிடத்தில் வீம நாகன் என்பவன் வாழ்ந்துள்ளமை பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது. இவனின் மனைவியின் கற்குகையில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இவன் நாகவழிபாடு செய்தவனாக இருக்க வேண்டும் என எண்ணக் கூடிய வகையில் இக்கல்வெட்டில் உள்ள வாசகங்கள் காணப்படுகின்றன. அக்கல்வெட்டு பின்வருமாறு:
“திச தேவிய சதா மதன கரதிதஹம வீம நாக பரிய”
இதன் பொருள் ஆங்கிலத்தில் பின்வருமாறு: “The co donor with Tissadevi is Mandana, wife of Vima Naga of Garadidagama”. இது தமிழில்: “திஸ்ஸதேவியுடன் சேர்ந்து தானம் செய்பவர் கரடித காமத்தைச் சேர்ந்த வீம நாகனின் மனைவி மந்தனா” என்பதாகும்.
இக்கல்வெட்டு கூறும் செய்தியின் மூலம், இக்குகையின் சொந்தக்காரியும், சிவனின் பேத்தியுமான திஸ்ஸாதேவியுடன் இணைந்து வீமநாகனின் மனைவியான மந்தனாவும் தானதர்மங்கள் செய்துள்ளாள் எனத் தெரிகிறது. இக்கல்வெட்டுகள் இரண்டையும் பேராசிரியர் பரணவிதான தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
பாமரப் பெண் பக்தை நாக தத்தவைப் பற்றிய அம்புலம்பே கல்வெட்டு
மாத்தளை நகரில் இருந்து தம்புள்ளைக்குச் செல்லும் வீதியில் உள்ள லென்தொர என்னுமிடத்தின் மேற்குப்பக்கத்தில் சுமார் 5 கி.மீ தூரத்தில் அம்புலம்பே எனும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள மலைப் பகுதியில் உள்ள கற்குகையில் 4 முற்கால பிராமிக் கல்வெட்டுகளும், ஒரு பிற்கால பிராமிக் கல்வெட்டும் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு முற்காலக் கல்வெட்டில் நாகர் பற்றி எழுதப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,
“உபசிக நாகததய லேனே அகட்ட [அனகட்ட சடு தி] ச சகச”
இதன் பொருள்: “பாமர பெண் பக்தையான நாகதத்தவின் குகை நான்கு திசைகளிலும் இருந்து வரும் சங்கத்தார்க்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும்..”. ஆங்கிலத்தில் இது, The cave of the female lay devotee Nagadatta, [is given] to the sangha of the four directions present and absent” எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதத்த என்பது நாகத்தால் வழங்கப்பட்டவர் எனும் அர்த்தத்தைக் கொண்டதாகும்.
நாக தத்தவைப் பற்றிய தம்புள்ளை கல்வெட்டு
இலங்கையின் மத்தியில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை நகரம் அமைந்துள்ளது. இந்நகரின் தெற்குப் பக்கத்தில் ஒரு பெரிய மலைப்பாறை ஒன்று உள்ளது. 900 மீற்றர் நீளமும், 700 மீற்றர் அகலமும் கொண்ட இம்மலைப் பாறையின் தெற்குப் பக்கத்தில் இயற்கையான பல கற்குகைகள் காணப்படுகின்றன.
இக்கற்குகைகளில் பலவற்றில் கற்புருவம் வெட்டப்பட்டுள்ளது. இக் கற்குகைகளில் மொத்தமாக 25 பிராமிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றில் நாகர் பற்றியும், இரண்டு கல்வெட்டுகளில் சிவன் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
நாகர் பற்றிய கல்வெட்டில் மொத்தமாக 5 எழுத்துகள் காணப்படுகின்றன. இதில் “நாகதத்த..” எனும் ஒரே ஒரு சொல் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இது நாகத்தால் வழங்கப்பட்டவர் எனப் பொருள்படும். இதன் மூலம் 2300 ஆண்டுகளுக்கு முன்பு நாகத்தை வழிபட்டவர்கள் தம்புள்ளை பகுதியில் வாழ்ந்துள்ளனர் எனத் தெரிகிறது.