இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு - பகுதி 1
Arts
18 நிமிட வாசிப்பு

இலங்கையின் கண்டிப் பிராந்தியக் கிராமம் ஒன்றில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் பின்புலத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் குறித்த ஓர் ஆய்வு – பகுதி 1

June 15, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம் : பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா

இலங்கையில் சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் (Caste and Democratic Politics)  இடையிலான உறவைக் குறித்து ஆய்வு ஒன்றினைப் பேராசிரியர் கலிங்க ரியுடர் சில்வா அவர்கள் எழுதியுள்ளார். ‘CASTE DEMOCRACY AND POST INDEPENDENCE SOCIAL TRANSFORMATION IN A KANDYAN VILLAGE – 2023’ என்னும் தலைப்பில் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்தது. அதனை மேற்குறித்தவாறு தமிழில் தந்துள்ளேன். இவ்வாய்வுக்காக ரியுடர் சில்வா அவர்கள் இலங்கையின் கண்டிப் பிராந்தியம் (Kandyan Region) என்னும் ஒரு பிராந்தியத்தைத் தேர்ந்து கொண்டதுடன், அப்பிராந்தியத்தின் மையப் பகுதியான கண்டிக்கு அண்மையில் அமைந்துள்ள ‘வெலிவிற்ற’ என்னும் ஒரு கிராமத்தையும் தேர்வு செய்து கொண்டார். இவ்வாறு ஒரு பிராந்தியம், அப்பிராந்தியத்தினுள் ஒரு குறிப்பிட்ட கிராமம் என தனது ஆய்வின் எல்லையைப் பேராசிரியர் வகுத்துக் கொண்டார். இதன் மூலம் சாதியும் ஜனநாயக அரசியலும் என்ற விடயம் பற்றிய பொத்தாம் பொதுவான ஆய்வாக அல்லாது, ஒரு குறிப்பிட்ட பிரதேசம்/ கிராமம் என்னும் சூழமைவில் சாதிக் கட்டமைப்பிற்கும் ஜனநாயக அரசியலுக்குமான உறவுகளை ஆராய்வதாக  அவரது கட்டுரை அமைந்துள்ளது. குறித்த ஒரு சூழமைவு (Context) அல்லது பின்னணியில் ஒரு பிரச்சினையைக் குவியப்படுத்தி ஆராய்கிறது. அத்தோடு ஒரு பிராந்தியத்தினதும் இலங்கையினதும் பருநிலை அரசியலுடன் (Macro – Politics) இணைந்ததாக, சாதியும் ஜனநாயக அரசியலும் என்ற விடயம் இக் கட்டுரையில் ஆராயப்படுகிறது.

கட்டுரையின் அமைப்பு

ஆங்கில மூலத்தில் இக்கட்டுரையின் உள்ளடக்கம் நான்கு பகுதிகளைக் கொண்ட அமைப்புடையதாக இருப்பதைக் காணலாம்.

  1. ஆய்வுப் பொருளை அறிமுகம் செய்தல்

தாம் தேர்வு செய்து கொண்ட ஆய்வுப் பிரச்சினை (Research Question) யாது என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறல், தமது ஆய்வு முறையியல் எதுவெனவும், தமது நோக்குமுறை யாது எனவும் எடுத்துக் கூறல், தாம் எடுத்துக் கொண்ட விடயப் பொருள் குறித்து தமக்கு முன்னர் ஆய்வைச் செய்தவர்கள் யார், அவர்களின் ஆய்வு முடிவகள் என்ன, அவர்களின் நோக்கு முறை யாது எனபன பற்றிய நூல்களின் ஆய்வு (Literature Survey) ஒன்றைத் தருதல் என்பனவற்றை உள்ளடக்கியதாக இக்கட்டுரையின் முற்பகுதி அமைகிறது. ஒரு ஆய்வுக் கட்டுரையின் அறிமுகப் பகுதி எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமையும் இம்முதலாம் பகுதி இளம் ஆய்வாளர்களுக்கு ஓர் வழிகாட்டியாக அமைந்துள்ளது.

  1. வெலிவிற்ற கிராமம்

வெலிவிற்ற கிராமம் பற்றிய சமூக, பொருளாதார, பண்பாட்டு, வரலாற்றினையும் மாற்றங்களையும் விளக்கிக் கூறுவதாக அமையும் இப்பகுதி கண்டிய நிலமானியம் (Kandyan Feudalism) என்ற வரலாற்றுப் பின்புலத்தில் வெலிவிற்ற கிராம் பற்றிய சித்திரிப்பைத் தருகிறது. வெலிவிற்ற மேளமடிக்கும் சாதியினர் பெரும்பான்மையினராக வாழும் தாழ்நிலைச் சாதிக் கிராம் என்பது இப்பகுதியில் அறிமுகமாகிறது. இக் கிராமத்தின் சாதிக் கட்டமைப்பும் பொருளாதாரக் கட்டமைப்பும் விளக்கப்படுகிறது. 

  1. ஜனநாயக அரசியலின் ஊடுருவல்

வெலிவிற்ற கிராமத்திற்குள் இருபதாம் நூற்றாண்டில் ஜனநாயக அரசியல் ஊடுருவிய போது, அக்கிராமத்தின் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து ‘மெம்பர’ என்ற அரசியல்வாதி தோன்றுகிறார். அவரின் தோற்றத்துடன், சமாந்தரமாக கண்டியப் பிராந்தியத்தின் அடிநிலைச் சாதிகளை அணிதிரட்டி தனது தலைமையின் கீழ் வழிநடத்திய இன்னோர் தலைவராக ஜோர்ஜ் ஈ.டி. சில்வா தோன்றுகிறார். ஜோர்ஜ் ஈ.டி. சில்வா சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் உயர்ச்சி பெற்று அடிநிலைச் சாதிகளால் ‘அப்பே ஜோர்ஜ்’ (எங்கள் ஜோர்ஜ்) என்று போற்றப்பட்ட ஒருவராகிறார். ‘மெம்பரவும்’ வெலிவிற்றவின் எல்லைகளுக்கு அப்பாலும் அறியப்பட்ட உள்ளூர் அரசியல்வாதியாகிறார்.

  1. வெலிவிற்றவின் சமூக மாறுதல்கள்

நான்காம் பகுதியில் வெலிவிற்றவின் சமூக மாறுதல்கள் (Social  Transformation in Welivita) என்னும் விடயத்திற்கு மீண்டு வரும் ஆய்வாளர், வெலிவிற்றவும் அது அமைந்துள்ள கண்டியப் பிராந்தியமும் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் அடைந்த மாற்றங்களை பொருளியல், அரசியல், பண்பாடு, கருத்தியல் (Ideology) என்ற பல்வேறு கோணங்களில் அலசும் தொகுப்புரையைத் தருகிறார். கட்டுரையின் இறுதிப்பகுதியில் அமைந்துள்ள பிரஜை அந்தஸ்தும் அடையாளமும் (Citizenship and Identity), சுருக்கமும் முடிவுரையும் (Summary and Conclusion) என்ற தலைப்புகளில் கூறப்பட்ட விடயங்களும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை. மெம்பர போன்ற அடிநிலைச்சாதித் தலைவர்களையும், ஜோர்ஜ் ஈ.டி. சில்வா போன்ற தேசியமட்ட தலைவர்களையும் உருவாக்கி அடிநிலைச் சாதிகளுக்கு ஜனநாயக அரசியல் வெளியைத் திறந்துவிடுதல் நிலமானியத்தின் கோட்டையான கண்டியின் இதயப்பகுதியில் நிகழ்ந்தமை இக்கட்டுரையில் அழகாகச் சித்தரிக்கப்படுகிறது. ஆயினும், சிங்கள பௌத்த தேசியவாதம் (Sinhala Buddhist Nationalism) என்னும் கருத்தியல், பெருந்தேசிய வாதம் என்ற இனவாதச் சகதிக்குள் ஒட்டுமொத்த சிங்களச் சமூகத்தையும் சிக்கவைத்துள்ளதை பேராசிரியர் கட்டுரையின் இறுதிப் பகுதியில் சுருக்கமாக எடுத்துக் கூறுகிறார்.

‘DEMOCRACY AND DEMOCRATISATION IN SRI LANKA : PATHS, TRENDS AND IMAGINATIONS’ என்னும் தலைப்பில் அமைந்த தொகுப்பு நூலின் முதலாம் தொகுதியில் (Volume I) ரியுடர் சில்வா அவர்களின் கட்டுரை பதினொராவது அத்தியாயமாக (பக். 449 – 485) அமைந்துள்ளது. இக்கட்டுரையின் உள்ளடக்கத்தை மேலே அறிமுகம் செய்தோம்.

ஆய்வுப் பொருளின் அறிமுகம்

சாதியும் ஜனநாயக அரசியலும் என்னும் விடயப்பொருளைக் கண்டியப் பிராந்தியத்தினதும், வெலிவிற்ற கிராமத்தினதும் பின்புலத்தில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தென்னாசியாவில் சாதிக்கும் ஜனநாயக அரசியலிற்கும் உள்ள உறவு குறித்துப் பல விவாதங்கள் நடந்துள்ளன. ஜனநாயகத்திற்கு முற்றிலும் வேறுபட்டது சாதி, ஜனநாயகம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி பரம்பரை பரம்பரையாகத் தொடரும் சமத்துவமின்மையை ஆதாரமாகக் கொண்ட சமூக முறையை நியாயப்படுத்துவது, இதனால் சாதிக் கட்டமைப்பின் அடிநிலையில் இருப்போரின் குடியுரிமைகளை சாதி மறுக்கிறது. ஜனநாயகம் வழங்கும் குடியுரிமைச் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்பதை உறுதி செய்கிறது. சாதி சமத்துவத்தை ஏற்பதில்லை. இதனால் அது ஜனநாயகத்திற்கு முரணானது; எதிரானது. ஆயினும் ஜனநாயக அரசியல் செயல்முறையில் சாதியடிப்படையிலான சங்கங்களும் அமைப்புகளும் அரசியல் கூட்டணிகளை அமைத்துச் செயற்படுவதையும் பங்கேற்பதையும் காண்கிறோம். பேரளவு சமூக பொருளாதார மாற்றங்கள் சாதிச் சங்கங்களையும் சாதியடிப்படையிலான கட்சிகளையும் தோற்றுவித்துள்ளன. இவ்வமைப்புகளும், கட்சிகளும் அடிநிலைச் சாதிகளின் உரிமைகளிற்கான போராட்டத்தை முன்னெடுப்பனவாகவும் உள்ளன. ஆகையால், சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்குமான உறவு ஒரு புதிராகவே உள்ளது. இந்த விடயம் ஆயுவுக்குரியது என்றும் புலமையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிடும் கலிங்க ரியுடர் சில்வா அவர்கள் இந்தியச் சூழலில்  சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் இடையிலான உறவை ஆராயும் முக்கியமான பல ஆய்வுக் கட்டுரைகளை உதாரணம் காட்டுகிறார். தமது ஆய்வு சாதிக்கும் ஜனநாயக அரசியலுக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஆய்வு என்பதைக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

வெலிவிற்ற கிராமம் பற்றிய ஆய்வு

கண்டிப் பிராந்தியத்தின் வெலிவிற்ற என்ற கிராமத்தைத் தேர்வு செய்து அங்கு விரிவான கள ஆய்வு ஒன்றைப் பேராசிரியர் ரியுடர் சில்வா நிகழ்த்தினார். இவ்வாய்வு 1970 களின் பிற்பகுதியில் நடத்தப்பட்டது. இவ்வாய்வை அடிப்படையாக வைத்து ‘CASTE CLASS AND CAPITALIST TRANSFORMATION IN HIGHLAND SRI LANKA’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வேட்டை எழுதி 1982 ஆம் ஆண்டில் மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு அவர் சமர்ப்பித்தார். இவ்வாய்வேட்டினை ஏற்றுக் கொண்ட அப் பல்கலைக்கழகம் அவருக்குக் கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. தாம் நடத்திய கள ஆய்வினை ‘இனவரைவியல் ஆய்வு (Ethnographic Research)’ எனக் குறிப்பிடும் ரியுடர் சில்வா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

எனது இனவரைவியல் ஆய்வு ‘வெலிவிற்ற’ சமூகத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றியது. முக்கியமாக சாதி, பொருளாதார மாற்றம், அரசியல் என்பன பற்றிக் கவனம் குவிப்பதாக இவ்வாய்வு அமைந்தது. எனது ஆய்வேட்டை அடிப்படையாக வைத்து 1979, 1982, 1986, 1992, 2006 ஆகிய ஆண்டுகளில் நான் ஆய்வுக் கட்டுரைகள் ஐந்தை வெளியிட்டேன். இக்கட்டுரையும் அவ்வாய்வேட்டில் உள்ள அடிப்படைத் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. இக்கட்டுரையில் நான் வெலிவிற்றவில் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களின் (Social Transformation) பின்னணியில் சாதிக்கும், ஜனநாயகத்திற்கும் இடையிலான உறவு பற்றி ஆராய்ந்துள்ளேன் (பக். 460). ரியுடர் சில்வாவின் ஆங்கில மூலக் கட்டுரையில் இரு வாக்கியங்களில் கூறப்பட்டிருப்பவற்றை நான் மேல் விரிவாக்கி விளக்கமாக எனது வார்த்தைகளில் கூறியுள்ளேன்.   

வெலிவிற்ற என்ற கிராமம் பற்றிய அறிமுகத்தையும் இவ்விடத்தில் சுருக்கமாகக் கூறி விடுகிறேன். ‘வெலிவிற்ற’ என்பது ஒரு கற்பனைப் பெயர். இக்கிராமம் கண்டி நகரில் இருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் அந் நகருக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. கண்டி மாவட்டம் கண்டி இராச்சியத்தின் மையப் பகுதியமாக இருந்த பகுதி என்பதை நாம் அறிவோம். நிலமானியத்தின் கோட்டையாக விளங்கிய இப்பகுதி 1815ஆம் ஆண்டில் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கண்டியின் நிலமானியச் சமூகம் காலனியம் புகுத்திய முதலாளித்துவ உற்பத்தி முறையின் தாக்கத்திற்கு உள்ளாகியது. ரியுடர் சில்வா அவர்கள் நிலமானியம், முதலாளித்துவ மாற்றம் ஆகிய இரண்டினையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய கிராமமான வெலிவிற்றவை, கண்டியின் இருதயப் பகுதியின் கிராமத்தை, கள ஆய்வுக்காகத் தேர்ந்து கொண்டார். வெலிவிற்ற சிங்களச் சமூகத்தின் அடிநிலைச் சாதிகளில் ஒன்றான மேளமடிப்போர் சாதியினர் பெரும்பான்மையினராக வாழும் கிராமம் ஆகும். ‘A Drummer Caste Village’ எனக் குறிப்பிடப்படும் இக்கிராமத்தில் அவர் நிகழ்த்திய கள ஆய்வு விஸ்தாரமானது. அக்கிராமத்தின் குடும்பங்கள் (Household) அல்லது வீட்டுடைமையாளர்கள் பற்றிய தகவல் திரட்டு ‘Community Mapping’ எனப்படும் அளவுமுறைத் தரவுகள் (Quantitative Data) இக்கள ஆய்வு மூலம் பெறப்பட்டது. இதனை விட முக்கிய தகவலாளிகளின் நேர்காணல், வெலிவிற்றவின் முக்கியமான தனிநபர்கள் பற்றிய விடய ஆய்வு (Case Study) பங்கேற்பு அவதானம் (Participant Observation) முறையிலான குறிப்புகள் என்பனவும் கள ஆய்வின் போது பெறப்பட்டன. அதாவது அளவு முறைத் தரவுகள் மட்டுமல்லாது பண்புத் தரவுகளும் (Quantitative Data) பெறப்பட்டன.

வெலிவிற்ற கிராமம் பற்றிய மேலதிக தரவுகள் பல இத்தமிழ் கட்டுரையில் தரப்படவுள்ளன. ரியுடர் சில்வா அவர்கள் 1986 ஆம் ஆண்டில் ‘CAPITALIST DEVELOPMENT RURAL POLITICS AND PEASANT AGRICULTURE IN HIGHLAND SRI LANKA : STRUCTURAL CHANGE IN A LOW CASTE VILLAGE’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். மேற்படி கட்டுரையில் ‘A Low Caste Village’ எனக் குறிப்பிடுவது மேளமடிப்போர் பெரும்பான்மையினராக வாழும் வெலிவிற்ற கிராமத்தையே ஆகும். குறிப்பிட்ட அக்கட்டுரையில் முதலாளித்துவ வளர்ச்சி, கிராமத்து அரசியல், குடியான் விவசாயம் ஆகியன அக்கிராமத்தில் ஏற்பட்டு வந்த அமைப்பியல் மாறுதல்களின் (Structural Change) பின்னணியில் ஆராயப்பட்டன. இக்கட்டுரையின் தழுவலாக்கமாக அமையும் கட்டுரை கண்டிய நிலமானியமும் சாதியும் (க. சண்முகலிங்கம் 2020) என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வாசகர்கள் மேற்படி நூலில் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரையையும் (2020-1-20) படித்து வெலிவிற்ற பற்றி அறிந்து கொள்ளலாம்.

நூல்களின் ஆய்வு

ரியுடர் சில்வா அவர்களின் கட்டுரையின் சிறப்பான பகுதிகளில் ஒன்று “நூல்களின் ஆய்வு” (LITERATURE REVIEW) என்னும் பகுதியாகும் (பக். 455 – 459). ‘REVIEW OF LITERATURE ON CASTE  AND DEMOCRACY IN  SRI LANKA’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள இப்பகுதியில் கண்டி மாவட்டத்தினதும் இலங்கையினதும் சமூகத்தில் சாதியும் ஜனநாயக அரசியலும் என்னும் விடயத்தோடு தொடர்புடைய ஆய்வு நூல்களை விமர்சன நோக்கில் மீளாய்வு செய்கிறார்.

சாதிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான  தொடர்பை இலங்கையின் பின்னணியில் ஆராயும் ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இவ்வாய்வுகள் அரசியல், சமூக, வரலாற்று நோக்கில் சாதிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான தொடர்பை ஆராய்ந்துள்ளன. உதாரணமாக, குமாரி ஜயவர்த்தன எழுதிய ‘NOBODIES TO SOMEBODIES’ – 2000 நூல், காலனிய காலத்துப் பொருளாதார மாற்றங்கள் புதிய வாய்ப்புக்களை உயர்சாதியினருக்கும், அடிநிலைச் சாதியினர்களுக்கும் திறந்து விட்டதையும், அதனால் உயர் சாதியினர் மட்டுமல்லாது தாழ்நிலைச் சாதியினரும் சமூகப் படியில் உயர்ந்து முதலாளித்துவ வகுப்பினராக உயர்ச்சி பெற்றததையும் விளக்கிக் கூறுகின்றது. 1931 இற்கு முற்பட்ட காலத்தில் சட்டசபைகளில் சிறுபான்மை இனத்தவர்களுக்கும், ‘கராவ’ போன்ற சாதியினருக்கும் கூடியளவு பிரதிநிதித்துவம் கிடைத்தது.  சிங்களச் சமூகத்தில் சனத்தொகையில் பெரும்பான்மை சாதியாக விளங்கிய கொவிகம சாதியை விட சிறுபான்மை சாதிகளில்  ஒன்றான ‘கராவ’ வர்த்தகத் தொழில்துறைகளில் ஒப்பீட்டளவில் கூடிய அளவு முன்னேற்றத்தைப் பெற்றிருந்தது. இதனால்  சட்டசபையிலும் கராவ சாதியினரால் ஒப்பீட்டளவில் கூடிய பிரதிநிதித்துவத்தைப் பெறமுடிந்தது. 1931 இல் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வசன வாக்குரிமை அறிமுகமாயிற்று. ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட இந்த மாற்றம் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரான கொவிகம சாதியினர் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள உதவியது. P.D. கன்னங்கர (2011), ரொபர்ட்ஸ் (1982) ஆகியோரும் சிங்கள-பௌத்த கொவிகம தமது மேலாண்மையை நிறுவியமையை தமது ஆய்வுகள் மூலம் எடுத்துகாட்டியுள்ளனர் (பக். 455).

1950 களில் இலங்கையின் சாதிமுறை பற்றி முக்கியமான சில ஆய்வுகள் வெளிவந்தன. அக்கால ஆய்வுகள் சாதிமுறையை இனவரைவியல் ஆய்வு (Ethnographic Research) நோக்கில் பகுப்பாய்வு செய்தன. இவ்வினவரைவியல் ஆய்வுகள், கிராமிய நிலைப்பட்ட ஆய்வுகளாகவும், இரத்த உறவுமுறை (Kinship), காணிகளில் உடைமையும் உரித்தும் (Land Tenure), சமய நிறுவனங்களின் ஒழுங்கமைப்பு (Religious Organization) என்பவற்றில் சாதியின் வகிபாகம் பற்றி ஆராய்வனவாகவும் அமைந்தன. இவ்வாய்வுகளின் தொடர்ச்சியாக, 1970 களில் பல இனவரைவியல் ஆய்வுகள் வெளிவந்தன. தம்பையா (1958), லீச் (1960,1961), யல்மன் (1960) என்போரும் ஒபயசேகர (1967) செனிவிரத்தின (1978) என்போரும் இனவரைவியல் நோக்கிலான ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கவர்கள் (பக். 455). சாதிக்கும் ஜனநாயகமாக்கலின் செயல்முறைக்கும் (Democratization Process) இடையேயான தொடர்பை மேற்குறித்த ஆய்வாளர்கள் எவ்வாறு விளக்கம் கொடுத்தனர் என்பதே நூல்களின் மீளாய்வில் கவனம் பெறும் முக்கிய விடயமாகும். இனவரைவியல் நோக்கிலான ஆய்வுகளை எழுதியவர்கள் சாதி ஜனநாயகமயப்படுத்தல் தொடர்பை  மூன்று கோணங்களில் அணுகியுள்ளார்.

  1. கண்டி இராச்சியத்தில் சாதி அடிப்படையிலான ‘இராஜகாரிய முறை’ இருந்து வந்தது. கண்டி இராச்சியம் வீழ்ச்சியுற்ற பின் இராஜகாரிய முறை 1833 இல் நீக்கப்பட்டது. காலனிய ஆட்சி பொருளாதார மாற்றங்களையும் நிர்வாக மாற்றங்களையும் ஏற்படுத்தியது. இவற்றின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டில் சமூகநல அரசு (Welfare State) உருவானது. இந்த மாற்றங்கள் சாதிமுறையை பலமிழக்கச் செய்தது. ஜனநாயகப்படுத்தல்  செயல்முறை சாதியைத் தளர்ச்சியுறச் செய்தது என்றவாறு முதலாவது வகை வாதம் அமைந்துள்ளது.
  2. ஜனநாயகக் கட்சி அரசியல் (Democratic Party Politics) சாதி விசுவாசத்திற்கும், சாதியடிப்படையில் மக்களை அணி திரட்டுவதற்குமான வெளியைத் திறந்துவிட்டது. இதனால் கட்சி அரசியல் ஊடாக சாதி விசுவாசம் அண்மைக் காலம் வரை தொடர்கிறது. ஜே.வி.பி இயக்கமும்  விடுதலைப்புலிகள் இயக்கமும் அரசு எதிர்ப்பு கிளர்ச்சிகளை (Anti – State Uprising) நடத்தின. இக்கிளர்ச்சிகளில் சாதி முக்கிய காரணியாக அமைந்தது என்றும் இரண்டாவது வகை விளக்கம் அமைந்துள்ளது.
  3. ஜனநாயகமாதல் செயல்முறையும் அடையாள அரசியலும் (Identity Politics) சாதியை மீளுருவாக்கம் செய்கின்றன என்பது மிக அண்மைக் காலத்தில் சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படும் மூன்றாம் வகை விளக்கமாகும் (பக். 456).

சாதிக்கும், ஜனநாயக அரசியலுக்கும் இடையிலான உறவுகளை விளங்கிக் கொள்வதற்கு உதவக்கூடிய ஆய்வுகளை எழுதியவர்களாக பின்வருவோரை “ரியுடர் சில்வா” குறிப்பிடுகின்றார்.

1.     நியுடன் குணசிங்க

2.     S.T ஹெட்டிகே

3.     தமரா குணசேகர

4.     ஜனிஸ் ஜிஜின்ஸ்(James Jiggins)

5.     அய்மி டக்ளஸ் (Aimee Douglas)

இவர்களில் நியுடன் குணசிங்க , S.T. ஹெட்டிகே, தமரா குணசேகர ஆகிய மூவரும் கிராமிய வாழ்வில் சாதியின் முக்கியத்துவம் குறைந்து செல்வதையும், ஜனநாயக அரசியல், நவீனமயமாதல் ஆகிய செயல்முறைகள் அடிநிலைச் சாதிகளின் உயர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். உதாரணமாக, தமரா குணசேகரவின் ஆய்வினை எடுத்துக்காட்டலாம். இவர் 1970 களில் கேகாலை மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் களஆய்வு செய்தார்.

‘DEMOCRACY, PARTY COMPETITION AND LEADERSHIP; THE CHANGING POWER STRUCTURE’  என்பது அவர் 1992 இல் எழுதிய கட்டுரையின் தலைப்பு ஆகும். இக்கட்டுரைத் தலைப்பை தமிழில் ‘ஜனநாயகம், அரசியல் கட்சிகளின் போட்டி, அரசியல் தலைமைத்துவம் – சிங்களக் கிராமம் ஒன்றில் அதிகாரக் கட்டமைப்பு மாற்றம்’ என மொழிபெயர்க்கலாம்.

தமரா குணசேகர அவர்களின் கட்டுரையின் தலைப்பே ரியுடர் சில்வா ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விடயப் பொருளோடு நேரடித் தொடர்பு உள்ளதென்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. கேகாலை மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமத்தின் களஆய்வுச்  சான்றுகளின்படி ஜனநாயக அரசியலின் ஊடுருவல் அதிகாரக் கட்டமைப்பை (Power Structure) மாற்றியுள்ளது எனத் தமரா குணசேகர குறிப்பிடுகின்றார். தாழ்நிலைச் சாதிகளின் தாழ்ந்து பணிந்து ஒழுகும் (subservience) நடைமுறைகள் இப்போது வழக்கில் இல்லை எனவும் அ) அணியும் உடையில் சமத்துவமின்மை, ஆ) உயர்நிலை சாதியினருக்கும் தாழ்நிலைச் சாதியினராக இருந்தோருக்கும் இடையிலான உரையாடல் மொழியில்  மாற்றம், இ) தாழ்நிலையில்  இருந்தோர் தமது சேவைக் கடமைகளை செய்யாது விடுதல் என்பன சாதியடிப்படையிலான சமத்துவமின்மையை நீக்கி தாழ்நிலையினரை அதிகாரமிக்கவர்களாக நிமிர்ந்து செல்ல வைத்துள்ளது என்ற கருத்துப்பட குணசேகர எழுதியிருப்பதை ரியுடர் சில்வா மேற்கோள் காட்டுகின்றார் (பக். 457). கிராமத்தில் முன்பு சாதியில் தாழ்நிலையில் இருந்தோர் அரசாங்க நிர்வாகப் பதவிகளில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டிருப்பதும் கிராமத்தின் அதிகாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கியிருப்பதையும் தமரா குணசேகர குறிப்பிடுகின்றார் (பக்.457).

பொலநறுவை மாவட்டத்தின் ‘நிலந்தன’ என்ற கிராமத்தில் கள ஆய்வு செய்த S.T. ஹெட்டிகே 1984 இல் சொத்துடமை, அதிகாரம், கௌரவம் (Wealth, Power and Prestige)  என்னும் தலைப்பில் நூலொன்றை வெளியிட்டார். ஹெட்டிகே அவர்கள் கூற்று எளிமைப்படுத்திய வடிவில் கீழே தரப்படுகிறது.

‘நிலந்தன’ கிராமத்தில் பணம் படைத்த நில உடைமையாளர்கள் யாவரும் கொவிகம உயர்சாதியினர் என்று கூற முடியாது. அவ்வாறே  அங்குள்ள விவசாயக் கூலிகள் யாவரும் தாழ்ந்த சாதியினர் என்று கூற முடியாது. அங்கு ஒருவரின் சாதி அடையாளத்தை வைத்து அவர் நில உடைமையாளரா அல்லது விவசாயக் கூலியாளா அல்லது ஏழைக் குடியானா என்று கூறி விட முடியாது. அதேபோன்று ஒருவரின் வர்க்க நிலையை அடையாளம் கண்டு கொண்டாலும் அவர் எந்தச் சாதியாக இருப்பார் என்பதை நிச்சயிக்க முடியாது. நிலந்தனவில் சாதிக்கும் வர்க்கத்திற்கும் தொடர்பே கிடையாது என்ற நிலை தோன்றிவிட்டது (பக். 456).

நிலந்தனவின் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு பொலநறுவ தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருடன் தொடர்புகள் உள்ளன. முன்பு கிராமத்தின் விதானையும், வேல் விதானையும் அதிகாரம் உடையவர்களாக இருந்தார்கள். இப்பதவிகள் முன்பு கொவிகம சாதியின் பரம்பரை  உரிமையாக இருந்தது. இன்று இப்பதவிகளில் உள்ளவர்களை விட பாராளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் முகவர்கள் அதிகாரமிக்கவர்களாய் உள்ளனர். உள்ளூர் அரசியல் தலைமைத்துவ அதிகாரம் மாறியுள்ளது (பக். 456-457). ஆயினும், சாதி உணர்வு மாறாமல் உள்ளது என்பதை S.T. ஹெட்டிகே போன்ற ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். குமாரி ஜயவர்த்தன குறிப்பிட்டது போல் சாதி, வீடு – குடும்பம் என்ற எல்லைக்குள் சுருங்கிக் கொண்டு திருமண உறவுகள் மூலம் நிலை பெற்றுள்ளது. (2000-161)

மேலே குறிப்பிட்ட ஆய்வாளர்களில் ஜனிஸ் ஜிஜின்ஸ் எழுதிய ‘CASTE AND FAMILY IN THE POLITICS OF THE SINHALESE – 1979’ என்ற நூல் சாதியும் அரசியலும் பற்றிய ஆய்வுகளுள் முக்கியமானது.

சாதிவாக்குகள், தேர்தல் அரசியலில் முக்கியம் பெற்றிருப்பதை ஜனிஸ் ஜிஜின்ஸ் புள்ளி விபரச் சான்றுகளுடன் எடுத்துக்காட்டினார். தனிநபர்களான அரசியல் வாதிகள் சிலர், தமது சாதியினரின் வாக்குகளை ‘Block Votes’ ஆக தம்பக்கம் கவர்ந்து கொள்ளும் போக்கை அவர் எடுத்துக்காட்டினார்.

சிங்களச் சமூகத்தில் சாதிகளின் புவியியல் பரம்பல், கொவிகம அல்லாத சாதிகள் சிலவற்றிற்கு  வாக்குப்பலத்தின் அடிப்படையில் சாதிச் சார்புள்ள செல்வாக்குக் குழுக்களை உருவாக்க முடிந்தது.

‘Caste Lobby’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செல்வாக்குக் குழுக்கள் சிங்களச்  சமூகத்தில் செயற்படுகின்றன. துராவ, கராவ, வகும்புர என்பன (Durawa Lobby, Karawa Lobby, Wahumpura Lobby ETC.) பிரதான கட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்துவனவாய் இயங்குகின்றன. வறுமை, இளைஞர் வேலையின்மை, அரசியல் அதிகாரத்தில் பங்கேற்பின்மை ஆகிய காரணிகள் சில சாதிகளைச் சேர்ந்த  இளைஞர்களை 1971 இல் பங்கு பெறத் தூண்டின என்பதை ஜனிஸ் ஜிஜின்ஸ்  எடுத்துக்காட்டியுள்ளார்.

அய்மி டக்ளஸ் (Aimee Douglas) எனும் ஆய்வாளர் கண்டியின்  கைவினைச் சாதிக் கிராமங்கள் இரண்டினைத் தெரிவு செய்து கலாநிதிப் பட்டப் படிப்புக்கான  ஆய்வு ஒன்றினைச் செய்தார். ‘CASTE IN THE SAME MOLD AGAIN : CASTE AND INDIGNITIES OF INHERITANCE IN SRI LANKA’ எனும் அவ் ஆய்வினை ‘பிறப்பால் அமைவது சாதி (Inheritance), ‘பிறப்பால் அமையும் சாதியின் கொடுமைகள் (Indignities) மீண்டும் பழைய வடிவங்களில் தொடர்கின்றன’ என்றவாறு தமிழில் பொருள் விளக்கி உரைக்கலாம். அய்மி டக்ளஸ் அவர்களின் ஆய்வு புதுமையானது. அது புதிய நோக்கில் சாதியின் இயங்கியலை விளக்குகின்றது. கண்டியக் கிராமங்களில் சாதி அடையாளம் பேசாப் பொருளாக மௌனிக்கப்படுவதை (Silencing) காணமுடிகின்றது. அவ்வடையாளத்தோடு வேறுசில சமூக அடையாளங்கள் (Social Identities) முதன்மை பெறுகின்றன என அய்மி டக்ளஸ் குறிப்பிடுகின்றார். ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்தினை உடைய ஒருவர், சிங்கள இனத்தவராய் இருக்கின்றார் என இனத்துவத்தை (Ethnicity) முக்கியப்படுத்துதல், குறித்த நபரின் வர்க்க அடையாளத்தை (Class Identity) முதன்மைப்படுத்தல் என்பன ஏனைய சமூக அடையாளங்களாகும். ஆயினும். ஏனைய அடையாளங்களோடு சாதியும் கண்டிய சமூகத்தில் தொடருகிறது என்பதே அய்மி டக்ளஸ் அவர்களின் ஆய்வு  உணர்த்தும் செய்தியாகும்.

கைவினைச் சாதிகளின் வாழ்வில் சுற்றுலாத் தொழில்துறை

சுற்றுலாத் தொழில்துறை (Tourism), தேசியவாதம் (Nationalism) என்ற இரண்டும் ஏற்படுத்தியிருக்கும்  விளைவுகளை அய்மி டக்ளஸ் எடுத்துக் காட்டுகின்றார். தாழ்ந்த சாதியினரான கைவினைச் சமூகங்கள் சிலவற்றின் கலைப் பொருட்கள், வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை கண்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குச் சந்தைப்படுத்தப்படுகின்றது. கைப்பணிப் பொருள்  உற்பத்தியும் விற்பனையும் கைவினைச் சாதிகளின் வருமானத்தை உயர்த்துகிறது. அச்சாதியினரிடையே சிற்றளவு முதலாளிகளும் வர்த்தகர்களும் தோன்றுகின்றனர். சிங்களத் தேசியவாதம், சிங்கள மரபுரிமைக்கு பெருமைகளைத் தேடித்தரும் தாழ்நிலைச் சாதிகளுக்கு, புதிய கௌரவத்தைத் தேடித் தருகின்றது. இவ்வகையில் சாதியின் மறு உற்பத்தி (Reproduction of Caste) சுற்றுலாவுடனும், தேசியவாதத்துடனும் இணைக்கப்படுகிறது. இழிவாகக் கருதப்பட்ட கைவினைத் தொழிலுக்கு புதிய கௌரவம் ஒன்று கிடைக்கின்றது. ரியுடர் சில்வா இதனை பின்வருமாறு விளக்குகின்றார். மரபுரிமை என்ற கருத்து (Notion of Heritage) இக்கைவினைச் சாதிகளின் உற்பத்திகளை சுற்றுலாப் பயணிகளுக்கு சந்தைப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றது. ஜனநாயகத்தின் பிரஜா அந்தஸ்திலும் நவதாராளவாத பொருளாதாரச் செயல்முறைகளிலும் சாதிக்கு எவ்வித வகிபாகமும் இல்லை எனினும், மரபுரிமை என்னும் கருத்து இக்கைவினைச் சாதிகளுக்கு அடையாளம், பிரஜா அந்தஸ்து, கௌரவம் (Identity, Citizenship and Dignity) ஆகியவற்றைத் தேடித் தந்துள்ளன என அய்மி டக்ளஸ் குறிப்பிடுகின்றார்.

சாதியின் மறு உற்பத்தியின் நுண் அரசியல் (Micro Politics of Caste Reproduction) என கைவினைக் கிராமங்களில் சாதி-சமூக உற்பத்தி உறவை விளக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வுற்பத்தி துறைகளுக்கு போட்டியாளர்கள் வேறு சமூகங்களில் இருந்து வருவதைத் தடுக்கும் வகையில், சாதி அடிப்படையிலான எல்லை வகுத்தல் (Boundary Making) இடம்பெறுவதையும் கண்டி இராச்சியக் காலத்திலிருந்தே வரும் பரம்பரை (பரம்பராவ) மரபுரிமை என்ற கருத்து அழுத்தப்படுவதையும் அய்மி டக்ளஸ் குறிப்பிடுகின்றார்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

6929 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்