சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு
Arts
10 நிமிட வாசிப்பு

சூழ்ச்சிகளையும் சதிகளையும் கடந்த வரலாறு

June 23, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1823 ஆம் ஆண்டுடன் இலங்கையில் மலையக மக்களின் வரலாறு ஆரம்பிக்கப்பட்டு சரியாக 200 வருடங்கள் பூர்த்தியாகின்றன. பிரித்தானிய காலனித்துவ காலத்தில் இலங்கையில் வர்த்தகரீதியாக கோப்பிப் பயிர்ச்செய்கையை உருவாக்கும் முயற்சியில் அப்போதைய ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் (Edward Barns) என்பவருடன் இணைந்து இம்முயற்சியில் அக்கறை கொண்டிருந்த ஹென்றிபேர்ட் (Hendry Bird) ஆகியோர் கம்பளைக்கு அருகாமையில் சின்னப்பிட்டி (பின்னர் சின்ஹா பிட்டியானது) என்ற இடத்தில் 1823 ஆம் ஆண்டு 80 ஏக்கரில் கோப்பி தோட்டம் ஒன்றை உருவாக்கினர். இதற்கென 150 கூலித்தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து தருவித்தனர். இதன் பின்னர் இலங்கையில் படிப்படியாக கோப்பிப் பயிர்ச்செய்கை பலரால் ஆரம்பிக்கப்பட்டு 1830ஆம்ஆண்டளவில் அது பெரிய அளவில் வெற்றி அடைந்து இந்திய தொழிலாளர் இலங்கை நோக்கிய வரவு ஆரம்பமாகியது என்றபோதும் மேற்படி 1823 ஆம் ஆண்டு ஹென்றி பேர்டினின் முயற்சியும் அவரது கோப்பித் தோட்டமுமே மலையக மக்களின் பாரிய அளவிலான இலங்கை வருகைக்கு “கால் கோளாக” அமைகின்றது என்ற வகையில் அதனை இலங்கையில் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் வரலாற்றின் ஆரம்ப வருடமாக கொள்ளலாம்.

இலங்கை முழுவதையும் பிரித்தானிய அரசாங்கம் 1815 ஆம் ஆண்டு கைப்பற்றிய பின்பு முழு அரசு நிர்வாகத்தையும் தன் கையில் எடுத்துக் கொண்ட போது அரச செலவினங்களை ஈடுகட்டும் அளவுக்கு உள்நாட்டு வருமானமும் அந்நிய செலாவணி வருமானமும் போதாமல் இருந்தது. பண்டுதொட்டு அரசர் காலங்கள் முதல் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக வியாபாரப் பொருட்களாக இரத்தினக் கற்கள், யானைத்தந்தம், வாசனைத் திரவியங்களான கறுவா, ஏலம், கிராம்பு மற்றும் உப்பு என்பன இருந்து வந்துள்ளன. போர்த்துக்கேயர் காலத்தில் மன்னாருக்கு சற்று தெற்கே அரிப்பு என்ற இடத்தில் மிகப்பெரிய அளவில் முத்து வர்த்தக துறைமுகம் ஒன்று அமைக்கப்பட்டு அது 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளது என்பதனை இலங்கை வரலாற்று ஆசிரியர்கள் அறிவர்.

இந்திய தோட்டத் தொழிலாளர்களின் குடும்பம்

ஆனால் இலங்கையை ஆட்சி செய்த மன்னர்களின் ஆட்சியானது கொழும்பு, கோட்டை, சீதாவாக்கை, செங்கடகல, கண்டி, கம்பளை என பின்னடைந்து சென்றபோது மேற்படி வர்த்தகங்கள் எல்லாம் அருகிப் போய் விட்டன. மன்னாருக்கு அருகில் இயங்கி வந்த மிகப்பெரிய முத்துக்குளிக்கும் துறைமுகமும் பாரிய அளவில் பரவிய கொலரா நோய் காரணமாக இலட்சக்கணக்கான அளவில் மக்கள் இறந்து போனதால் செயலற்றுப் போனது. எஞ்சி இருந்தவர்கள் கற்பிட்டி, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, மொரட்டுவ, பாணந்துறை, மற்றும் காலி, களுத்துறை, மாத்தறை வரை சென்று குடியேறினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழரும் முஸ்லிம்களும் ஆவர். அவர்களே பின்னர் தமது தமிழ் இன இந்துமத அடையாளங்களை இழந்து கரையோரச் சிங்களவர்கள் ஆனார்கள். இவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி பின்னர் சில்வா, பெரேரா, டி சொய்சா, செதோறினா, கரோலைன், றொசலின், கிரிகோரிஸ், மேதிரிஸ், அல்ஃபோன்சோ முதலான சிங்களப் பரம்பரையினர் உருவாக்கினர். இவர்கள் மத்தியில் அகம்படியர், சென்னைக்கு அருகில் உள்ள சாளி கிராமத்தை சேர்ந்த சாளியர்கள், சலாவ, துராவ, பரத, கரையர் முதலிய இந்தியச் சாதிகள் இருந்தன. இவர்கள் ஒருபோதும் தாம் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தை மீளப்பெற முயற்சிக்கவில்லை. இவர்கள் மத்தியில் இருந்துதான் பின்னர் இந்நாட்டின் ஆரம்ப அரசியல் தலைவர்களான கொல்வின் ஆர். டி. சில்வா, Dr. என் எம். பெரேரா, ஸ்டீவன்ஸ்பேட்டர் சேனாநாயக, மெரில் பெர்ணாந்து, அந்ராதி, பிலிப் குணவர்த்தன போன்ற அரசியல் தலைவர்கள் உருவாகினர் என்றபோதும் அதனை ஆராய்ந்து உறுதிப்படுத்தும் ஆய்வாளர்கள் நம்மத்தியில் இல்லை.

கொழுந்து பறிக்கும் பெண்

மத்திய மலைநாட்டில் மலையகத் தமிழர்களின் வருகையுடன் மலைகள், பள்ளத்தாக்குகள் மட்டம் தட்டப்பட்டு கோப்பிக் கன்றுகள் நாற்று நடப்பட்டன. முதலில் நூற்றுக்கணக்காக நடப்பட்ட கன்றுகள் பின்னர் ஆயிரமாக, லட்சமாக வளர்ந்து, பூத்துக்குலுங்கி, காய்த்து கோப்பிக் கொட்டைகளாகி பெரும் வர்த்தகப் பொருளாக உருவாகின. அவை சிந்தாமல் சிதறாமல் பிடுங்கி, தோலுரித்து, காயவைத்து, தூளாக்கி பெட்டிகளில் அடைத்து கொழும்புக்கும் பின்னர் லண்டனுக்கும் அனுப்பப்பட்டன. அதிலிருந்துதான் கோப்பித்தோட்ட சொந்தக்காரர்களான வெள்ளையர்கள் லட்சம் லட்சமாக பணத்தை சம்பாதித்தனர். 1815 ஆம் ஆண்டிலிருந்து 1830 ஆம் ஆண்டு வரை காற்றடித்து வெற்றுப் பெட்டியாக இருந்த குடியேற்ற நாட்டு வெள்ளைக்கார ஆட்சியினரின் கஜானா தங்கம், வெள்ளிக்காசுகளாலும் ஸ்டெர்லிங் பவுண்ட்களாளும் நிறைந்து வழிய ஆரம்பித்தது. அதன்பின்னர்தான் இந்த நாடு செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றமடைந்தது. அதனைத்தொடர்ந்து ஆளும் வர்க்கத்தினரும் ஆடம்பரத்தில் மிதக்கத் தொடங்கினர். இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்தவர்கள் இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் தான் என்பதை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் மிக வசதியாக மறந்து போய்விட்டனர்.

அதன் பின்னர் பல பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுள் தேயிலை, றப்பர், கொக்கோ கரும்பு, பருத்தி, சிங்கோனா முதலியனவும் போஸ்ட் பெய்ட் சுரங்கத்தொழில் என்பனவும் தொழில் துறைகளாக வளர்ச்சியடைந்தன. மூடை மூடையாக பணத்தை கட்டி தன் நாட்டுக்கு கோப்பி பெட்டிகளுடன் கப்பலேறினர். ஆனால் அவ்விதம் செல்வம் கொழிக்கச் செய்து நாட்டை பொன்னாலாக்கிய கூலிகள் என்று அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளி தொழிலாளர்களுக்கு வெள்ளையர்கள் என்ன கைமாறு செய்தனரென்றால், ஒரு பவுணை ஆயிரமாக பிரித்து அதில் 5 சதத்தை பிச்சையாக வீசி எறிந்தார்கள். 5 சதக் கூலியை பங்குபோட தான் எத்தனை காக்கைகள்? பெரிய கங்காணி, சின்னக் கங்காணி, சில்லறைக் கங்காணி, கணக்கப்பிள்ளை, கிளாக், டிமே கற்றவர், மேற்பார்வையாளர் வீட்டுக்காரன், கள்ளுக்கடைக் காரன், சாராயக்கடைக் காரன், சில்லறைக் கடைக்காரன், உத்தரவுக் கடைக்காரன், புடவைக் கடைக்காரன், மதுரைக்காரன் இப்படி இத்யாதிப்பேர் கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு காத்திருந்தனர்.

திரைகடல் ஓடி திரவியம் தேடு என்று ஒருவன் சொன்னான். இல்லை இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்று இன்னொருவன் சொன்னான். உண்மைதான் இவர்கள் ஒருபோதும் திரவியம் தேட வந்தவர்கள் அல்ல. எப்போதும் பஞ்சத்திலும், பட்டினியிலும் அடிபட்டு கொண்டே இருந்தார்கள். இன்றுவரையும் அப்படியேதான் இருக்கிறார்கள். அன்று அந்த வெள்ளைக்காரன் விட்டு வீசிய 5 காசுகளும் இன்றைய பெறுமதி தான், இன்று கூட நம்மால் போராடிப் பெற முடியாது இருக்கும் ஆயிரம் ரூபாய் நாள் கூலி. ஒரு திருப்திகரமான மாதச் சம்பளத்தை பெற்று நாட்டின் ஏனைய மக்களைப் போல் மலையக மக்களும் தலை நிமிரும் போதுதான் அவர்கள் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஏற்படும்.

இந்த நாட்டின் ஏனைய குடிமக்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வீட்டில் அது ஒரு குடிசை என்றாலும்கூட சுதந்திரமாக வாழ்ந்த போது மலையகத் தமிழ் மக்களை வெறும் கூலிகள் என்ற வார்த்தையால் கொச்சைப்படுத்தி இருண்ட குகைகளான லயம் என்ற வரிசையான அறைகளுக்குள் அடைத்து வைத்திருந்தனர். கடந்த இருநூறு வருடங்களாக இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அநியாயங்களும் அட்டூழியங்களும் கொஞ்சநஞ்சமல்ல. இவர்கள் எந்த விதத்திலும் கல்விகற்று வேறு துறைகளுக்கு போய் முன்னேறிவிடக் கூடாது என்பதில் இவர்களது தலைவர்களே மிகவும் கவனம் எடுத்துக் கொண்டனர். இலவசக் கல்வியின் பிதா என்று போற்றப்படும் டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா கூட இத்தகைய குறுகிய மனம் கொண்டவராக இம்மக்களின் பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியை வழங்க மறுத்தார்.

இந்த மக்கள் ஏனைய மக்களுடன் சேர்ந்து விடக்கூடாது என்ற கொள்கையை வகுத்து காவல் கண்காணிப்புகளை கடுமையாக போட்டு தேயிலைத் தோட்டத்துக்குள்ளேயே காலம் காலமாக கட்டி வைத்திருந்தனர். அந்த கட்டுக்காவல்கள் எல்லாவற்றையும் மீறி அவர்களில் 7 பேர் நாடாளுமன்றம் சென்று விட்டார்களே என்ற ஆதங்கத்தால் அடுத்த வருடமே அந்த மக்களின் ஒட்டுமொத்த பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்துக் கொண்டார்கள். அதன் பின்னரும் இந்த நாட்டில் இவர்களை விட்டு வைப்பது ஆபத்து என்று கூறி 1964ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து ஒட்டுமொத்தச் சனத்தையும் இந்தியாவுக்கு ஓட்டிவிட பார்த்தார்கள். ஆனால் அந்த எல்லா சதிகளையும் சூழ்ச்சிகளையும் வென்று இன்று இந்த மக்கள் இந்த நாட்டின் நான்காவது தேசிய இனமாக வீறு கொண்டு எழுச்சி பெற்றுள்ளார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இதில் கேவலமான மற்றுமொரு கசப்பான உண்மையும் சேறுபடிந்ததாக இன்னும் இருந்து வருகிறது. அது இந்த மக்களின் தலைமைகளே இம்மக்களை வஞ்சகமாக ஏமாற்றி மீண்டும் மீண்டும் படுகுழியில் தள்ளி வந்துள்ளனர் என்பதாகும். வரலாற்றின் ஆரம்பத்திலேயே ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு வெள்ளைக்காரனை விட அவனுடன் கூட இருந்தே இம்மக்களுக்கு குழி பறித்தவர்கள் கங்காணிகளாகவும் கணக்கு பிள்ளைகளாகவுமே இருந்துள்ளனர். இந்தக் கங்காணிகள் பரம்பரையினரின் தொடர்ச்சியாகவே பின்னால் இவர்கள் மத்தியில் உருவான தொழிற்சங்கத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் இருந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர்.

நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் மக்களின் நலனே தனது கொள்கையாகவும் கொண்டு செயற்பட்ட கோதண்டராமர் நடேசய்யரின் வெற்றியை படிப்படியாக தோல்வியுறச் செய்து அவரை தம் பாதையில் இருந்து அகற்றும் கைங்கரியத்தை இந்த கங்காணிக் கும்பலும் தொழிற்சங்கமும் மிக சூட்சுமமாக செய்து முடித்தனர். இவர்கள் செய்த மாபெரும் வரலாற்றுத் தவறு 1948 ஆம் ஆண்டு தமது மக்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறித்தபோது அதனை எதிர்த்து தமது ஆதரவுசக்திகளை இணைத்துக் கொண்டு உரிய போராட்டங்களை முன்னெடுக்காததாகும். இரண்டாவது தவறு மேற்படி பிரஜா உரிமை சட்டத்தால் ஏற்பட்ட தவறை திருத்துவதற்காக கொண்டுவரப்பட்ட இந்திய – பாகிஸ்தானியர் பிரஜா உரிமை சட்டத்தின் போது பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என இம் மக்களை தடுத்து தவறான வழியில் திசைதிருப்பியமையாகும். இந்த வரலாற்றுத் தவறுகளால் நாம் முப்பத்தைந்து ஆண்டுகளாக நடுரோட்டில் விடப்பட்டிருந்தோம்.

மற்றுமொரு வரலாற்றுத் தவறு தொழிற்சங்க தலைமையையும் அரசியல் தலைமையையும் ஒருவரின் கையில் எடுத்து கொண்டமையாகும். இதன்காரணமாக அற்ப சலுகைகளுக்காக நமது தொழிற்சங்க வலிமையையும் பேரம்பேசும் சக்தியையும் மாறிமாறி இந்த நாட்டை ஆட்சி செய்த அரசியல் தலைமைகளிடம் அடகு வைத்து விட்டமையாகும். பதிலுக்கு நமது தொழிற்சங்கத் தலைவர்கள் அரசியல் தலைவர்களாகவும் அமைச்சர்களாகவும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நாம் சகித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த அவலம் இன்றுவரை தொடர்கின்றது. இங்கே எழுகின்ற பூதாகரமான கேள்வி நமது எதிர்காலமும் இப்படித்தான் இருக்கப்போகின்றதா என்பதுதான்.

இதற்கு முன் நான் எழுதிய “கண்டிச் சீமையிலே” என்ற நூலை உங்களில் சிலராவது படித்திருக்கக் கூடும். அந்நூலில் நமது பாட்டன்களும்முப்பாட்டன்களும் பட்ட துயரங்களின் வரலாற்றை பட்டவர்த்தனமாக கூறியிருந்தேன். அது கோப்பிக் கால வரலாற்றுடன் முற்றுப்பெற்றது. இந்த இரண்டாவது பாகம் நான் எனது முதல் நூலில் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இந்தத் தொடருக்கும் உங்கள் ஆதரவு என்றும் இருக்கும் என நம்புகிறேன்.

( தொடரும் )


ஒலிவடிவில் கேட்க

11427 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)