ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கான காரணிகள்
Arts
15 நிமிட வாசிப்பு

ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சிக்கான காரணிகள்

July 6, 2024 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

கடந்த தொடரிலே, வரலாற்றில் நீண்டகாலம் அபிவிருத்தியில் முன்னிலை வகித்த ஆசியாவையும்,  அதற்கடுத்த ஆபிரிக்காவையும் முந்திக்கொண்டு பிற்காலத்தில் ஐரோப்பா முன்னேறியதற்கு அங்கு ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியும் கைத்தொழில் புரட்சியும் காரணமானது என்பதைப் பார்த்தோம். இதற்கு ஆதாரமான விஞ்ஞான வளர்ச்சிக்கு, ஏனைய கண்டங்களை விட ஐரோப்பாவில் வளங்கள் குறைவாக இருந்ததும், அவற்றைத்   தேடிப் பிறகண்டங்களுக்குச் செல்லவேண்டிய தேவையின் நிர்ப்பந்தமும் ஒரு பிரதான காரணமானது என்பதனையும் பார்த்தோம். அதைவிட இன்னும் இரண்டு காரணங்கள் அவர்களது விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணமானது. ஒன்று, அவர்கள் ஏனைய எந்தக் கண்டங்களிலும் வாழ்ந்த மக்களையும் விட இயற்கையுடன் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியிருந்தது. ஆகவே அவர்களது அறிவும் அவர்கள் பாவித்த  கருவிகளும்  செம்மை பெற்றன. இரண்டு, ஏனைய கண்டங்களை விட இங்கு வாழ்ந்த மக்கள் மிகக் கூடுதலான யுத்தங்களில் ஈடுபட்டனர். இதனால் சில வரலாற்று ஆசிரியர்கள் ஐரோப்பியர்களை யுத்தப் பிரியர்கள் என வர்ணிக்கிறார்கள். பிரபல (Britannica.com) பிரித்தானிக்கா இணையத்தளம் (Although uniquely favoured by fertile soils and temperate climates, they have long proved themselves warlike.) “வளமான மண், மிதமான காலநிலை ஆகியவற்றால் தனித்துவமான சாதகங்களைப் பெற்றிருந்தபோதும் நீண்ட காலமாக (ஐரோப்பியர்கள்) தங்களை போரை விரும்புவோர் என நிரூபித்து வந்துள்ளனர்” எனக் கூறுகிறது. ஆயினும் ஐரோப்பாவின்  போர்க் கலாச்சாரம்  விஞ்ஞான வளர்ச்சியில் வகித்த மறைமுகப் பாத்திரம் பற்றி ஆய்வாளர்கள் அதிகம் கவனம் கொள்ளவில்லை.

ஐரோப்பா ஏனைய கண்டங்களை விஞ்சிக்கொண்டு வளர்ந்தமைக்கு அவர்கள் விஞ்ஞானத்தில் வளர்ந்தமையே காரணமாகும். அவர்கள் யுத்த விஞ்ஞானத்தில் பாய்ச்சல் கண்டனர். ஐரோப்பாவின் போர்க் கலாசாரம் பற்றியும், அதன் ஒரு பக்கவிளைவாக  உருவான நவீன அரசுகளின் தோற்றம் பற்றியும், இவை அனைத்தும் ஐரோப்பாவை வல்லரசராக நிலைநிறுத்தியதையும் இத்தொடரில் பார்க்கலாம்.

இது ‘ஐரோப்பியர்கள் செய்வதெல்லாம் எமக்கு நாகரீகம், அவர்கள் சொல்வதெல்லாம் எமக்கு வேதம்’ என்ற மேற்கத்தேய மோகத்திலிருந்து  விடுபட்டு, அவர்களுக்குத் துதிபாடும் வகையில் எழுதப்படும் வரலாற்றுத் திரிபுகளை ஒதுக்கிவிட்டு, புது வெளிச்சத்தில் எமது வரலாறை விமர்சனரீதியாக பார்க்க உதவும். கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் ஒரு மைல்கல் தான். ஆனால் அந்த கல்நெஞ்சம் படைத்த கடலோடி செய்த குரூரமான படுகொலைகளையும் கொள்ளைகளையும் மறந்துவிட்டு அவனை மாபெரும் வீரனாக மாத்திரம் சித்தரிக்கும் தவறை நாம் செய்யக்கூடாது. பிரித்தானியன்  எமக்கு ஆங்கிலம் கற்பித்தான், கால்சட்டை அணிவித்தான், ரயில் பாதைகள் போட்டான் என்பதற்காக அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடாத்தேவையில்லை. அவனது காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் நாம் இழந்த எமது பண்பாட்டு விழுமியங்கள், கலைகள், எமது மண்ணுக்குரிய பாரம்பரியத் தொழில்நுட்பங்கள் ஆகிவற்றை  மீட்டு, நவீன உலகம் படைத்துள்ள உயர்ந்தவை – சிறந்தவை அனைத்தோடும் இணைத்து, அவர்கள் விட்டுச்சென்ற  காலனித்துவ ஆட்சி – நிர்வாக முறையிலே எம் நாட்டுக்குப் பொருந்தாத அம்சங்களை நீக்கிக்கொண்டு, புதிய வெற்றிப்பாதையில் பயணிப்பதையும், அவர்கள் விரித்த பிரித்தாளும் தந்திர வலையிலிருந்தும், காலனித்துவ மனோபாவத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இது அவசியம்.

பின்தங்கிய ஐரோப்பாவின் பிற்கால எழுச்சி

ஐரோப்பா ஏனைய கணடங்களை விடச் சிறியது; குளிர் மிகுந்தது. பல கோடி வருடங்கள் இதன் பெரும் பகுதி பனிப்படலத்தால் மூடப்பட்டிருந்தது. கடந்த 750,000 ஆண்டுகளில் எட்டுப் பெரிய காலநிலை மாற்றச் சுழற்சிகள் இங்கு இடம்பெற்றதாக இதுவரையிலான ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்கள் வாழக்கூடிய அளவுக்கு வெப்பநிலை படிப்படியாக மாற்றமடைந்தபோதுதான் மெல்லமெல்ல மனிதக் குடியேற்றங்கள் உருவாகின. அதிலும் குறிப்பாக மத்தியத்தரைக் கடலைச் சுற்றியுள்ள – இன்று மிதவெப்பம் கொண்ட – நாடுகளில்தான், முதன் முதலில் நிலையான மனிதக் குடியேற்றங்கள் உருவாகின. இன்று முன்னேறிய நாடுகளாக கருதப்படும் மேற்கு நாடுகளில், பனிப்படலம் மிகத் தாமதமாகவே மனிதர் வாழ்வதற்கு வழிவிட்டது. ஆர்டிக் பகுதிகளில் இன்னும் மனிதரால் நிரந்தரமாகக் குடியேறமுடியவில்லை.

அன்றைய ஐரோப்பிய மக்களுக்கு குளிர்காலப் பனியில் உறைந்து மடியாமல் உயிரைக்  காத்துக்கொள்வதே பெரும் சவாலாக இருந்தது. கடும் குளிரைத் தாங்குவதற்கு, முதலில் மிருகத்தின் தோல்களினாலும், பின்னர் நாராலும், பருத்தியாலும் ஆடைகள் தயாரிக்கத் தொடங்கினர். துணி தயாரிக்கும் கலையும் ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் இருந்தே ஐரோப்பாவுக்கு வந்தது. அது அங்கு ஏற்கெனவே அரும்புவிட்டிருந்த துணி தயாரிக்கும் விஞ்ஞானக் கலைக்கு புத்துயிரளித்தது. 

ஆசிய – ஆபிரிக்க நாடுகளைவிட வெகு நீண்டகாலம் வேட்டையாடுவதும் இயற்கையில் விளையும் தாவர உணவுகளைத் திரட்டுவதும் இவர்களது வாழ்க்கையின் ஆதாரமாக இருந்தது. காலநிலை மாற்றங்கள் இங்கு துலக்கமாக இருந்தன. கோடைகால வெயிலின் போது ஓரளவுக்கு சுதந்திரமாக நடமாட முடிந்தது. ஆனால்மிருகங்களை  வேட்டையாடுவதற்கும் அவற்றால் வேட்டையாடப்படாமல்  இருப்பதற்கும் போராடவேண்டியிருந்தது. இதனால் எகிப்து, பாரசீகம், இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் உருவான பெரும் நதிக்கரைகளை மையம் கொண்ட விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட பழம்பெரும் நாகரிகங்கள் ஐரோப்பாவில் உருவாகவில்லை. ஆசிய – ஆபிரிக்க  நாடுகளில் உருவான பழம்பெரும் இலக்கியங்கள், கிரேக்க காலத்தின் பின்னர் இங்கு உருவாகவில்லை. பல கோடி ஆண்டுகள் பனியால் மூடப்பட்டு இறுகிப்போன மண்ணைத்தோண்டி விவசாயம் செய்வது பிற்காலத்தில் கூட கடினமாகவே இருந்தது. அதற்கு, கூர்மையான புதியவகைக் கருவிகள் தேவைப்பட்டன. அவற்றை உருவாக்கும் முயற்சியில் சளைக்காமல் உழைத்ததால் இவர்களது விஞ்ஞான அறிவு மேலும் வளர்ந்தது. காலநிலைக்கேற்ற உணவு, வைன் போன்ற மதுவகைகளைத் தயாரிப்பது, கோதுமை வளர்த்துப் பாண் தயாரிப்பது, நீடிக்காலம் நீடித்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பது போன்ற வாழ்க்கைப் போராட்டங்களும் இவர்களது விஞ்ஞான அறிவு மேலும் வளர்வதற்குக் காரணமானது.

உதாரணமாக 1347 – 1352 காலப்பகுதியில் ஐரோப்பாவில் கோரத் தாண்டவமாடிய எலி – பிளேக் நோய் பெரிய அளவில் மனித உயிர்களைக் காவுகொண்டது. இதனால் மக்கள் தொகை மேலும் குறைந்தது. இது ‘கறுப்பு மரணம்’ (Black Death) என வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. எனினும் இதனால் ஒரு நல்ல விளைவும் ஏற்பட்டது. பிளேக்கை முடிவுக்குக் கொண்டுவர தேவாலயங்களால் முடியவில்லை. இதற்கு முன்னர் ஐரோப்பாவுக்கு பேரழிவைக் கொண்டவந்த சுமார் 175 வருட சிலுவை யுத்தங்களின் (1095 – 1270) விளைவை அது ஏற்கெனவே அனுபவித்துவிட்டது. சிலுவைப் போர்களும், ‘கறுப்பு மரணமும்’ செல்லரித்துப்போன நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பையும் ‘போப் ஆண்டவரின்’ தலைமையிலான கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தையும் கேள்விக்கு உட்படுத்த மக்களை ஊக்குவித்தன. பண்டைய பொருள்முதல்வாதக் கிரேக்க இலக்கியமும்  ரோமானிய நூல்களும் மறு கண்டுபிடிப்புச் செய்யப்பட்டன. இது மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது. மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காகக் காத்திருப்பதை விட பூமியில் வாழும் போது சந்திக்கின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இதுவே மார்ட்டின் லூதர் தலைமையிலான ‘புராட்டஸ்டன்ட்’ சீர்திருத்தம்  (1517 – 1648) ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இதற்கு 1450 இல் ஏற்பட்ட  அச்சுப் புரட்சி பெரிதும் உதவியது (அச்சுத் தொழில் கண்டுபிடிக்கப்பட்டது ஐரோப்பவில் அல்ல; சீனாவில் தான்).

போர்ப் பிரியர்களின் கையில் சிக்கிய விஞ்ஞானம்

நாளடைவில் ஐரோப்பாவிலே சனத்தொகை படிப்படியாக அதிகரித்து இயற்கையில் கிடைக்கும் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, தாம் வாழும் பகுதிகளுக்கு அருகில் வாழும் மக்கள் கூட்டங்களோடு போர் புரிய நேர்ந்தது. இச்சிறிய கண்டத்தில் அருகருகே பல்வேறு குழுமங்கள் செறிவாக வாழத் தொடங்கியபோது, குழுமங்களிடையே நிகழும் போரானது, ஐரோப்பிய வாழ்வின் ஒரு தவிர்க்கமுடியாத அம்சமானது. இதனால் இவர்களது போர்க் கருவிகள் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தன. ஐரோப்பாவில், பல ஆசிய ஆபிரிக்க நாடுகளில் இருப்பதைப் போன்று யானைப்படைகள் இருக்கவில்லை. விரைந்து ஓடித் தாக்கும் குதிரைப்படைகள் இருந்தன. இவற்றின் மீதேறி அமர்வதற்கு இசைவான  ஆசனமும் கடிவாளமும் தேவை. இவ்வாறு போர்க் கருவிகளையும், போர்க் கருவிகளை ஏற்றிச்செல்லும் சாதனங்களையும் தயாரிக்கும் போர் விஞ்ஞானம் முளைவிட்டு வளரத்தொடங்கியது. 

இங்கு போர், போற்றப்படும் ஒரு கலையாகப் பேணி வளர்க்கப்பட்டது. உலகம் முழுவதும் எதிரியைக் கொல்வது வீரமாகக் கொண்டாடப்பட்ட வரலாறு உண்டு. ஒரு தலைவனுக்கோ, ஒரு மன்னனுக்கோ, ஒரு மதத்துக்கோ விசுவாசமாக இருப்பதும் அதற்கு இணங்கமறுப்போர் அனைவரையும் எதிரிகளாகக் கருதி அவர்களோடு போரிடுவதும் முதலாளித்துவத்துக்கு முந்திய காலத்தின் தர்மமாக இருந்தது. சிலம்பம், கராத்தே போன்ற சண்டைக் கலைகள் இங்கு உருவாகவில்லை. பொழுதுபோக்குக்கான மல்யுத்தமும் குத்துச்சண்டையும்  உருவாகின. குதிரையேற்றம், வாள்வீச்சு, அம்பு எய்யும் திறன் கொண்ட நாடுகளைக் கொள்ளையடிக்கவல்ல மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர் போன்ற  வீரர்கள் இங்கு உருவாகினர். காளை மாடுகளோடு சண்டையிட்டு அவற்றைக் குரூரமாகக் கொல்வதில் மகிழ்ச்சி காணும் ஐரோப்பியக் கேளிக்கைளுக்கும், காளை மாடுகளோடு நிராயுதபாணியாக மல்லுக்கட்டி அடக்கும் தமிழர்களின் கருணை கலந்த வீரத்துக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.

போர்க்கலைத் துறையில் ஐரோப்பாவுக்கும் ஆசிய நாடுகளுக்கும் இடையே அப்போதிருந்த  ஒரு பெரும் வேறுபாடு என்னவென்றால், ஐரோப்பாவில்  வாள்ச் சண்டை ஒரு பெரும் கலையாக வளர்ச்சிபெற்று வாள் வீச்சாளர்கள் (gladiators) போற்றப்பட்டனர். இதனால் வாள்கள் நுட்பம் பெற்றன. ஆசியாவில் பயன்படுத்தப்பட்ட வளைவான, எடை  கூடிய வாள்களைவிட, இருபுறமும் கூர்மையான ஐரோப்பியர்களின் வாள்கள் கூர்மையும்  உறுதியும்மிக்கதாக, சுழற்றுவதற்கு எளிதானவையாக இருந்தன. இவ்வாறுதான் ஐரோப்பியர்களின் போர்க்கலை – விஞ்ஞானம் ஆயுதங்களை நுட்பம் பெறச் செய்தது. கடலோர  ஐரோப்பிய – மேற்கு ஐரோப்பிய நாடுகள், கடற் கொள்ளையில் முன்னணி வகிப்பதற்குத் தேவையான கப்பல்கள் கட்டுவதற்கும் போர்க்கலையின் வளர்ச்சி காரணமானது. ‘வைகிங் வாரியர்ஸ்’ (VIKING WARRIORS) போன்ற கடற் கொள்ளையர்கள் பல நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சிசெய்யும் அளவுக்கு பலம்பெற்றுத் திகழ்ந்தனர். ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கொன்ஸ்தாந்துநோபிள் துருக்கியர் வசமானதை அடுத்து, கடல்வழியே நாடுகாண் பயணங்கள் அதிகரித்து, பிற நாடுகளை ஆக்கிரமித்து, காலனித்துவ அரசுகளை நிறுவத் தொடங்கியதற்கும், முதலாளித்துவப் புரட்சிக்கான ஆரம்பமூலதனத் திரட்சிக்கும், மேற்கத்தேயப் போர்க்கலையானது விஞ்ஞானத்துடன் கைகோர்த்தது ஒரு பிரதான  காரணம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், வெடிமருந்தும் துப்பாக்கியும் பீரங்கியும் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல; அவை சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஆயினும் போர்க்கருவிகளின் வளர்ச்சி ஐரோப்பாவிலே வேகம் பெற்றமைக்கும் – மேன்மை பெற்றமைக்கும், ஐரோப்பிய ஆட்சியர்கள் ஏனைய அனைவரைவிடவும் மக்களின் அழிவைப் பற்றியோ, வளங்களின் அழிவைப் பற்றியோ கவலைப்படாமல், மிகக்கூடுதலான யுத்தங்களில் ஈடுபட்டதே காரணமாகும். கொடூர மனம் படைத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தமது மக்களின் சாவின் மீதுதான் தனது  முதலாவது அரசை நிறுவியது. அதன் பின்னரே பிற கண்டங்களுக்குப் படையெடுத்தது. அதன் பேராசையின் முன்னால் மனித உயிர்களுக்கு விலை கிடையாது. இலாபமீட்டுவதற்கு விற்பனைச் சந்தை ஒன்று தேவை. இவர்களுக்கு மனித குலத்தின் அழிவைப் பற்றி கவலையே இருக்கவில்லை. இவர்கள் முதலில் தமக்கிடையே மூர்க்கமாகப் போராடினர். மத்திய காலத்திலும், முதலாளித்துவத்தின் ஆரம்ப காலத்திலும் இப் போர்கள் மிக நீண்டவையாக இருந்தன.

முதலாளித்துவமும் போர்களும்

முதலளித்துவ கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர், போர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்ட பேரழிவு யுத்தங்களாகப் பரிணாமம் அடைந்தன. டாங்கிகள், கவச வாகனங்கள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் கொண்ட முதலாம் – இரண்டாம் உலக மகா யுத்தங்கள் நாளடைவில் உருவாகின. இவ்விரு உலக மகா யுத்தங்களும் ஐரோப்பாவில்தான் வெடித்தன.

பிரித்தானியர் இலங்கையைக் கைப்பற்றிய காலப்பகுதியில், ஐரோப்பாவின் போர் நிலைமைகளை பின்வரும் புள்ளிவிபரம் தெளிவாகப் புலப்படுத்துகிறது. 1792 மற்றும் 1815 இற்கு இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பியப் போர்கள் இயல்பிலும் தீவிரத்திலும் வியக்கத்தக்க மாற்றத்தைக் கண்டது. 1490 ஆம் ஆண்டுக்கும் 1815 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஐரோப்பாவிலே நடந்த அனைத்து முக்கியப் போர்களில் ஐந்தில் ஒரு பங்கு, 1790 இற்குப் பிறகு இருபத்தைந்து ஆண்டுகளில் நடந்தது. 1790 இற்கு முன்னர், ஒரு சில போர்களில் மாத்திரமே 100,000 இற்கும் அதிகமான படைவீரர்கள்  ஈடுபட்டுள்ளனர். 1809 இல் நடைபெற்ற – அதுவரை கண்டிராத –  மிகப் பெரிய  ‘வக்ரம் போரில்’ (Battle of Wagram) ஐரோப்பாவில் 300,000 படைவீரர்கள் கலந்துகொண்டனர். அதற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் நடைபெற்ற ‘லேப்ஜிக் போரில்’ (Battle of Leipzig) 500,000 படையினர் ஈடுபட்டனர். அவர்களில் 150,000 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். இப் போர்களின் போது, பிரான்ஸ் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளைச்  சந்தித்தது. இதில், முதலாவது உலகப் போரில் இறந்ததை விட கூடுதலான இளைஞர்கள் இறந்தனர் என யுத்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 1812 ஆம் ஆண்டளவில், முதலாளித்துவ இயந்திரக் கைத்தொழில் புரட்சிக்குப் பின்னர், முந்தைய காலகட்டத்திலிருந்த போரின்தன்மை அடியோடு மாறிவிட்டது என இத்துறையில் நிபுணரான கிளாஸேவிட்ஸ் (Clausewitz) கூறுகிறார். இவ் யுத்தங்களை ‘முழுமையான யுத்தங்கள்’ (absolute wars) என அவர் அழைக்கிறார்.

ஐரோப்பாவில் நடைபெற்ற மாபெரும் சமூக மாற்றம் அங்கு ஏற்பட்ட முதலாளித்துவப் புரட்சியாகும். இது தேசங்களினதும் நவீன முதலாளித்துவ அரசுகளினதும் தோற்றத்தோடு கைகோர்த்துச் சென்றது. நிலபிரபுத்துவத்தால் பிளவுபட்டிருந்த மக்கள் கூட்டங்களை ஒன்றிணைத்து நிலையான தேசங்களை உருவாக்கும் போக்கு 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது. இது தேசியவாதம் என்ற முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இணைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து தேசங்களுக்கிடையிலான பேரழிவு யுத்தங்கள் உருவாகத் தொடங்கின. அப்போது முப்பது ஆண்டுகாலப் போர், எண்பது ஆண்டுகாலப் போர் ஆகிய இரண்டு போர்களாலும் ஐரோப்பா பெரும் இழப்பைச் சந்தித்துக் கொண்டிருந்தது. எண்பது ஆண்டுகாலப் போர் என்பது புராட்டஸ்டன்ட் மதத்தை பெரும்பான்மையாகக்கொண்ட டச்சுக் குடியரசின் (நவீன நெதர்லாந்து) சுதந்திரத்திற்கான நீடித்த போராட்டமாகும். இது இங்கிலாந்தின் ஆதரவுடன், கத்தோலிக்க ஆதிக்கமுள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு எதிராக நடைபெற்ற மூர்க்கமான யுத்தமாகும். முப்பது வருடப் போர்,புனித ரோமானியப் பேரரசை மையமாகக் கொண்ட ஐரோப்பிய மதப் போர்களில் மிகவும் கொடியதாகும். இதில் மாத்திரம் 4.5 மில்லியன் முதல் 8 மில்லியன் பேர் வரை இறந்துள்ளனர்.

வெஸ்ட்பாலியா அமைதி (The Peace of Westphalia)

பல தசாப்தங்களாக தொடர்ந்த இக்கொடிய போர்கள் அமைதிக்கான தேவையை வெகுவாக உணர்த்தின. இதனால் உலக வரலாற்றில் முக்கியமான இரு அமைதி ஒப்பந்தங்கள், வெஸ்ட்பாலியன் நகரங்களான ஓஸ்னாப்ரூக் மற்றும் மன்ஸ்டர் (Westphalian cities of Osnabrück and Münster) ஆகிய இடங்களில் அக்டோபர் 1648 இல் கையெழுத்திடப்பட்டன. இவ் இரண்டு சமாதான ஒப்பந்தங்களின் கூட்டுப் பெயர்  வெஸ்ட்பாலியா அமைதி (The Peace of Westphalia) எனப்படுகின்றது. பல அறிஞர்கள் வெஸ்ட்பாலியாவின் அமைதியை, நவீனச் சர்வதேச உறவுகளுக்கான கொள்கைகளின் தொடக்கப் புள்ளியாகக் கருதுகிறார்கள். ஏனெனில் இவ் ஒப்பந்தத்தில் தான் தேசங்களின் இறைமை (Sovereignty) முதன் முதலில் அங்கீகரிக்கப்பட்டது. இவ்வாறு இறைமை கொண்ட, மத்தியப்படுத்தப்பட்ட நிலையான எல்லைகளைக் கொண்ட, பலம் பொருந்திய நவீன முதலாளித்துவ அரசுகள் ஐரோப்பாவிலே முதன் முதலில் உருவானமை அதன் வளர்ச்சிக்கு மேலும் உறுதுணையானது.

உசாத்துணை

  1. Baker K.M (1992), Enlightenment and the Institution of society: notes for a conceptual history, in W.Melching and W.Velema (eds), main trends in cultural history, Amsterdam.
  2. Clausewitz Carl von (1976) On War, ed. And trans. M Howard and P.Paret, Princeton.
  3. Croxton, Derek (2013). Westphalia: The Last Christian Peace. Palgrave. ISBN 978-1-137-33332-2.
  4. Elliott, J.H. (2009). Spain, Europe & the Wider World, 1500–1800. Yale University Press. ISBN 978-0300145373.
  5. Gates D (1997) The Napoleonic Wars, 1803 – 1815, London.
  6. Henry Kissinger (2014). “Introduction and Chapter 1”. World Order: Reflections on the Character of Nations and the Course of History. Allen Lane. ISBN 978-0-241-00426-5.
  7. Rothenberg G.E. (1978) The art of  warfare in the age of Napolean, Bloomington.
  8. Schroceder, P.W, ( 1994) The transformation of European politics, 1763 – 1848, Oxford.
  9. Sutherland, D.M.G, (2003) The French Revolution and Empire: the quest for civic order, Malden MA.
  10. Wilson, Peter H. (2009). Europe’s Tragedy: A History of the Thirty Years War. Allen Lane.. ISBN 978-0-7139-9592-3.
  11. https://www.britannica.com/topic/history-of-Europe/The-late-Neolithic-Period Europe, World History Encyclopaedia, 09.06.2023
  12. https://www.worldhistory.org/europe/gad_source=1&gclid=EAIaIQobChMIsbzL5N2DhwMVW5RQBh3YJguxEAMYASAAEgKCovD_BwE

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

8593 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)