நூலக நிறுவனம் : எதிர்காலத்திற்கான டிஜிட்டல் ஆவணகம்
Arts
17 நிமிட வாசிப்பு

நூலக நிறுவனம் : எதிர்காலத்திற்கான டிஜிட்டல் ஆவணகம்

July 11, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

தமிழில்: த. சிவதாசன்

புதுமையின் பிரகாசத்தால் குருடாக்கப்பட்டு சில வேளைகளில் நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத்தவறிவிடுவதுண்டு. பிரகாசமான எதிர்காலம் கொண்டுவந்து குவிக்கப்போகிறது எனக் கருதி புதையல்களையும் செல்வத்தையும் நம்பி காலக்குழிகளில் மங்கிக்கிடக்கும் எமது ஆபரணங்களை மறந்துவிடுகிறோம். எல்லோரும் இத்தவறுகளை இழைக்கிறார்கள் என நான் கூறவரவில்லை. 1990 களில் பல அமெரிக்க நிறுவனங்கள் நமது வேம்பினதும் மஞ்சளினதும் மகிமைகளை அறிந்து அவற்றினால் கொள்ளை இலாபமீட்டுவதற்காக அவற்றின் மீது காப்புரிமைகளைப் (Patent Rights) பதிந்துகொண்டன. இவ்வகையான மூலிகைகள் பல தென்னாசியாவில் பல்லாயிரமாண்டுகளாக பாரம்பரிய உணவுகளாகப் பவிக்கப்பட்டு வருபவை எனக் கூறி, இந்தியா நீதிமன்றம் சென்று அவற்றை மீட்டுக்கொண்டு வந்தது. 1995 இல் அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்ட காப்புரிமை பற்றி, 2004 இல் பி.பி.சி. இன் செய்தித் தலைப்பு இப்படியிருந்தது:

“பூஞ்சணத் தொற்றின் நிவாரணியான வேம்பிலிருந்து தயாரிக்கப்பட்ட பதார்த்தம் தொடர்பாக ஐரோப்பியக் காப்புரிமை அலுவலகத்தின் மீது பதியப்பட்ட வழக்கில் பத்தாண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.”

இப்படியான பொருட்களும் பாவனைகளும் எமது மூதாதையர்களின் பாரம்பரிய, மரபுவழி உரிமைகள் என நிரூபிக்க எம்மிடம் ஆவணங்கள் இருக்கவேண்டும். இதைவிடவும் எத்தனையோ செல்வங்கள் இவ்வரலாற்றுப் புதையல்களில் சிக்குண்டு கிடக்கலாம். பாரம்பரியச் சமையல் முறைகள், மூலிகை மருத்துவம், சிகிச்சை முறைகள் மட்டுமல்லாது இன்னும்பல எண்ணற்ற எத்தனையோ விடயங்கள் துப்பறிபவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தொழில்முனைவோர்களால் இலாபமீட்டப்படக் காத்திருக்கின்றனவோ தெரியாது. சுன் சூவின் ‘போர்க் கலை’, கெளதில்யரின் ‘அர்த்த சாஸ்திரம்’ மற்றும் சமீப காலத்து மக்கியாவெல்லியின் ‘இளவரசர்’ போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்தியம்ப நமது நவீன முகாமைத்துவ ஞானிகள் விரும்புவார்கள். புராதன ஞானம் இன்னும் இன்றைய அதி நவீன நிறுவனங்களின் பிரயோகத்தில் இருக்கிறது. பழைமை இன்னும் காலாவதியாகவில்லை.

ஆவணங்களும், ஊடகங்களும் இழக்கப்படும் ஆபத்து கலாசாரம், பாரம்பரியத்திற்கு மட்டுமான அச்சுறுத்தலல்ல; வர்த்தக, சட்ட மற்றும் பட்டறிவுகளையும் சேர்த்தே இழக்கப்போகும் ஆபத்து அது.

துர்ப்பாக்கியமாக இந்த ஆபத்து இலங்கையில் 1981 இல் நிறைவேறியது. இலங்கையின் இனப்போர் ஆரம்பமாகிய காலத்தில் 97,000 அரிய நூல்களையும், ஆசியாவிலேயே அதிக மூலப்பிரதிகளையும் தேட்டமாகக் கொண்டிருந்த யாழ்ப்பாண பொதுசன நூலகம் தென்னிலங்கைச் சக்திகளால் எரிக்கப்பட்டது.

போரினால் துரத்தப்பட்ட மக்கள் மேலும் பல அரிய தேட்டங்களைக் விட்டு விட்டுத் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு ஓடினார்கள். நூல்களும், ஏடுகளும், மூலப்பிரதிகளுமென பல நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான தேட்டங்கள் போருக்கு இரையாகின. இடிபாடுகளில் சிக்கிக் கைவிடப்பட்ட சில இன்னமும் கறையான்களுக்குத் தீனியாகிக்கொண்டிருக்கலாம்.

போர்கள் தொடங்குவதும் நிறுத்தப்படுவதும் வழமை. ஆனால் சில இதர நடைமுறைகள் பல்லாண்டுகாலமாக நடைபெற்றவண்ணமிருக்கின்றன; புழுக்கள், பூச்சிகள், எலிகள், ஈரம், வெள்ளம், கவனமற்ற பராமரிப்பு, கவனமற்ற தேட்டக்காரர் என அவை பல. பரம்பரை பரம்பரையாகக் கைமாறப்பட்டு வந்த பல அரிய தேட்டங்கள் இடப்போதாமையாலோ அல்லது நாட்டமின்மையினாலோ புதிய பரம்பரையினரால் கைவிடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பெட்டிகளில் அடைக்கப்பட்ட இத் தேட்டங்கள் மிக அமைதியாக குப்பை கூடங்களிலோ அல்லது எரிகூளங்களிலோ வீசப்படுகின்றன. சிலவிடங்களில் அரிய பொக்கிசங்கள் மேசை விரிப்புகளாகவோ அல்லது தூசி விரிப்புக்களாகவோ கோப்பி, தேநீர் சாயங்களால் கறைபட்டுக் கெளரவமிழக்கின்றன. இன்னும் சில, அரியதெனக் கெளரவம் பெறும் நவீன கண்ணாடிக் குவளைகளுக்கிடையே உரசாமல் பாதுகாக்கும் காவலர்களாக இருக்கின்றன.

யாழ். பொதுசன நூலகப் பேரழிவைப் போல் இன்னுமொன்று நடந்துவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு சில இலங்கைத் தமிழர்களால் 2005 இல் ஆரம்பிக்கப்பட்டது நூலக நிறுவனம். ஆரம்பத்தில் டிஜிட்டல் கமெராக்களையும் ஸ்கானர்களையும் கொண்டு ஆவணங்களைப் பிரதி எடுத்துப் பதிவுகளாக்கிக் கொண்டனர். சில ஆவணங்கள் வாசிக்கப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டு கணனியில் சேமிக்கப்பட்டன. இப்போது, இக்கட்டுரை எழுதப்படும் தருணத்தில், 2.25 மில்லியன் பக்கங்களைப் பதிவுகளாகக் கொண்டு ‘நூலக நிறுவனம் (The Noolaham Foundation)’ என்ற பெயருடன் அது மிளிர்ந்து நிற்கிறது.

இலங்கைத் தமிழரின் கலாசார, வரலாற்று, அரசியல் ஆவணங்கள் மற்றும் இதர ஊடகப் பதிவுகளை எண்ணிமத் தேட்டத்தில் (digital archive) சேகரிப்பதற்கான முயற்சிகளை நூலகம் செய்து வருகிறது. அது மட்டுமல்லாது இத் தேட்டம் உலகம் முழுவதும் வாழும் மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே அதன் குறிக்கோள். இதுபற்றிப் பேசும்போது கனடாவைச் சேர்ந்த நூலக நிறுவனத்தின் தொழில்நுட்ப இணைப்பாளர் நற்கீரன் எல். காந்தன் “எதை நாங்கள் ஆவணப்படுத்தினாலும் அவற்றின் காப்புரிமைகளை அனுசரித்து, அவற்றை மிகவும் குறைந்த காலத்தில் பயனாளிகளை அடையச்செய்ய வேண்டுமென்பதே எமது இலக்காகும். எண்ணிம இனம்காணலும், சென்றடைவும் நூலக நிறுவனத்தின் தலையாய விழுமியங்கள் எனவே கருதுகிறோம். ஆவணகம் என்ற நவீனத் தொழில்நுட்பத்தளம் உலகின் பல பல்கலைக்கழகங்களாலும் அமைப்புக்களாலும் பரவலாகப் பாவிக்கப்படும் ஒன்று. ஆராய்ச்சி மற்றும் தனிப்பட்ட கற்கைகளுக்குத் தேவையான அனைத்து வாசிப்பு வளங்களையும் நாங்கள் இலவசமாக வழங்குகிறோம்” என்கிறார்.

யாழ்ப்பாணத்திலுள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நான் சென்றபோது அங்கு அதன் முதன்மை இயக்கு அலுவலர் (Chief Operating Officer) திரு. சோமராஜ் குலசிங்கத்தைச் சந்தித்தேன். நூலகத்துடன் இணைவதற்கு முன்னரே சோமராஜ் நூலகத்தின் தரவுத் தேட்டங்களை, குறிப்பாக தமிழ் சட்ட நூல்களை, தன் கற்கைத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தவர். ஒக்ஸ்ஃபாம், யூனிசெஃப் போன்ற சர்வதேச அமைப்புகளில் பணியாற்றிய பல வருட அனுபவங்களுடன் இருந்த அவர் ஒரு நாள் “நூலக நிறுவனம் ஒரு முகாமையாளரைத் தேடுகிறது” என்ற விளம்பரத்தைப் பத்திரிகைகளில் பார்த்தார். அதற்கு விண்ணப்பித்ததன் பலனாக கடந்த ஒன்றரை வருடங்களாக அவர் இங்கு பணிபுரிந்து வருகிறார்.

பேசுவதற்காக அமர்வதற்கு முன்னர் சோமராஜ் நூலக அலுவலகத்தை ஒரு தடவை சுற்றிக் காட்டினார். யாழ். நகரத்தின் கொக்குவில் வடக்குப் பகுதியில் ஒரு பழைய வீட்டில் நூலக நிறுவனம் இருக்கிறது. மாட்டுத் தாள்களில் சுற்றப்பட்டு கவனமாகப் பராமரிக்கப்படும் பழைய செய்தித் தாள்கள் உட்பட பல அச்சுப் பதிவுகள் ஸ்கான் செய்வதற்காகத் தட்டுகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. கணனிகள், கமெராக்கள், ஸ்கானர்களுடன் சம்பளப் பணியாளர்களும் தொண்டர்களும் இங்கு பணிபுரிகின்றனர். பெரும்பாலான எண்ணிம வேலைகள் இங்கு நடைபெற்றாலும் சில ஆவணங்களை, ஒரு சிறு ஆவணக்குழு,  அவற்றின் உரிமையாளர்களது இடங்களுக்கு நேரில் சென்று ஆங்காங்கு வைத்தே ஸ்கான் மற்றும் ஒளிப்பதிவுகளைச் செய்கின்றது. தமது அரிய பொக்கிசங்களை இழந்துவிடக்கூடாது என அவற்றின் உரிமையாளர்கள் நினைப்பதனாலோ அல்லது போக்குவரத்து, கையாள்தல் காரணமாக அவை சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காகவோ இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது.

சிலவேளைகளில் இக்குழுவிடம் கிடைத்தற்கரிய பொக்கிசத் தேட்டங்கள் சிக்குகின்றன. பலாலியிலுள்ள ஒரு நாட்டு வைத்தியர் தனது மருத்துவ ஏட்டோலைத் தேட்டத்தை ஸ்கான் செய்வதற்கென முழுமையாக ஒப்படைத்தார். இப்படியான பல அருமையான தேட்டங்கள் அவற்றின் உரிமையாளர்களின் மறைவிற்குப் பின் அக்கறையற்ற அவர்களின் பரம்பரையினரால் குப்பைகளென ஒதுக்கப்படவும் கூடும்.

யாழ். பல்கலைக்கழக நூலகத்தில் நூலக நிறுவனத்திற்கென ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைக்கக்கூடிய அரிய நூல்கள் அவ்வலுவலகத்தில் பணிபுரியும் குழுவினால் ஸ்கான் செய்து பதிவேற்றப்படுகின்றன. வெளிநாடுகளிலும் நூலகத்தின் தொண்டர்கள் தாம் ஸ்கான் செய்யும் ஆவணங்களை நூலகத்தின் தேட்டத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.

மீள்சுழற்சி நிலையங்கள், நூலகங்கள்  மற்றும் தனிப்பட்டவர்களின் தேட்டங்களிலிருந்து நூலகம் நூல்களைப் பெறுகிறது. சிலர் உரிமையாளர்கள் தமது தேட்டங்களை  நூலகத்திற்குக் கடனாகக் கொடுத்து ஸ்கான் செய்தபின் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். சில வேளைகளில் அவர்கள் தாமாகவே தமது தேட்டங்களை ஸ்கான் செய்து மின்னஞ்சல் மூலம் நூலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். உலகம் முழுவதிலும் பரந்து வாழும் மக்களால் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை நூலகம் வரவேற்கிறது. முடிந்தால் அவற்றை ‘400 dpi’ நியமத்தில் ஸ்கான் செய்து ‘noolahamfoundation@gmail.com’ என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். இப்படியாகக் கிடைக்கும் ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை எனக் கருதப்படும் பட்சத்தில் அவற்றை நூலகத்தின் நியமக் கட்டுப்பாடுகளுக்கேற்றவாறு எண்ணிமம் (digitize) செய்து பெற்றுக்கொள்ளும் வசதியை நூலகம் ஏற்படுத்திக் கொள்ளும்.

இதுவரை சேமிக்கப்பட்ட ஆவணங்களின் தொகை, அதிர்ச்சி தரும் வகையில், மிகப் பெரிது என்கிறார் சோமராஜ். இதுவரை 30,000 ஏட்டோலைகளே தமது தேட்டத்தில் இருக்குமென நூலகம் எதிர்பார்த்திருந்தது எனவும் ஆனால் அதன் இரண்டு மடங்கை விடவும் அதிகமான ஓலைகள் இப்போது தம்வசம் இருக்கின்றன எனவும் கூறுகிறார் சோமராஜ். பல நூற்றுக்கணக்கான வருடங்கள் தொன்மையான இவ்வோலைகள் சித்த மருத்துவம், சோதிடவியல், புராணங்கள் மற்றும் மாந்திரீகம் ஆகிய விடயங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. ‘மாந்திரீகம்’ என்ற சொல்லை நான் விக்கிபீடியாவில் பார்த்தபோது “மாந்திரீகம், 1985 இல் தயாரிக்கப்பட்ட மலையாள மொழி நகைச்சுவைப் படம்” என்ற ஒரு விளக்கமே அங்கு பதிவாகி இருந்தது. மாந்திரீகம் பற்றிப் பதிவிடக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க விக்கிபீடியாவினால் கூட முடியாமலிருக்கிறது என்பது ஆச்சரியம் தான். ஸ்கான் செய்யப்பட்ட சில ஏட்டோலைகள், எந்த ரகம் என்பதைக் கண்டுபிடிக்கவல்ல நிபுணர்கள் கிடைக்காமையால், இன்னும் அட்டவணைப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

தொன்மையான ஆவணங்களை மட்டுமல்லாது நவீன ஆவணங்களையும் நூலகம் சேகரித்து வருகிறது. அவை அச்சு, ஒளி, ஒலிப் பதிவுகள் அல்லது படங்களாகக்கூட இருக்கலாம். அத்தோடு பாரம்பரியக் கைத்தொழில், கைவினையாளர்களின் செயல்முறைகளை வலையொளியாகப் பதிவாக்கும் தனது சொந்த ஆவணத் தயாரிப்பு முயற்சிகளிலும் நூலகம் இப்போது இறங்கியிருக்கிறது.

சுருட்டுத் தொழில், சுண்ணாம்புத் தொழில், நெசவுத் தொழில் போன்ற பல பாரம்பரியக் கைத்தொழில்கள் பற்றிய படங்களையும் வலையொளிகளையும் பார்க்க விரும்பினால் :

https://commons.wikimedia.org/wiki/User:Noolaham_TamilWiki/Crafts_Documentatin

என்ற தொடுப்பைப் பாவிக்கவும். என்னைப்போன்ற சாதாரண, நுனிப்புல் மேய்பவர்களுக்கு மட்டுமல்ல தொழில் முனைவோர், கல்வியாளர்கள் பலருக்கும் இவை உத்வேகத்தைத் தரும்.

நூலகத்தின் இன்னுமொரு முக்கியமான செயற்பாடு, வாய்வழிக் கதைகளைப் பதிவுசெய்தல். இவர்களில் சிலர் புகழ் படைத்தவர்கள், சிலர் வயதில் முதியவர்கள், சிலர் அழிந்துவரும் கலைகள் மற்றும் பண்பாடுகள் பற்றிக் கூறுபவர்கள். இப்படியானவர்கள் பரிந்துரைக்கபடும் பட்சத்தில் நூலகம் அவர்களை அணுகி அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்கிறது. சில வேளைகளில் இப்படியான சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போய்விடுவதுமுண்டு. ஒரு தடவை 90 வயதைத் தாண்டிய ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞரைச் சந்தித்து உரையாட சோமராஜின் குழு முயற்சித்தது. அன்றைய நாள் அம் முதியவரால் பேச முடியாமற் போய்விட்டது. இன்னுமொரு நாள் அவர்கள் திரும்புவதற்கு முன் அம்முதியவர் காலமாகிவிட்டார். இருப்பினும் இப்படியான மேலும் பலரது ஒலி, ஒளிப்பதிவுகள் சேமிக்கப்பட்டுள்ளன. 

யாழ். பொதுசன நூலக எரிப்பு போன்ற பேரழிவு மீண்டுமொரு தடவை நிகழாதிருக்க நூலகம் நான்கு காப்புப் பிரதிகளைப் (back-up copies) பாதுகாப்பான இடங்களில் வைத்துப் பராமரிக்கிறது. நூலக அலுவலகம், யாழ்ப்பாண வங்கியொன்றிலுள்ள பாதுகாப்பறை, மற்றைய இரண்டும் வெளிநாடுகளில் என நான்கு வெவ்வேறு இடங்களில் அதன் தேட்டம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. ஏட்டோலைகளைக் ஸ்கான் செய்வதற்கான செலவை, இலண்டனிலுள்ள பிரித்தானிய நூலகம் பொறுப்பேற்றிருக்கிறது. இவ்வோலைகளின் பதிவுகளை பிரித்தானிய நூலகமே பாதுகாப்பாக வைத்திருக்கிறது. இது நொக்ஸ் கோட்டையில் தங்கத்தைச் சேமித்து வைப்பதற்குச் சமமானது. விரைவில் ‘ஆகாயச் சேமக்கலத்தில்’ (The Cloud Server) தமது தேட்டங்களைச் உடனடிச் சேமிப்பாக (real-time) சேமித்து வைக்க நூலகம் தயாராகி வருகிறது. இப்படியான பல் தளச் சேமிப்புக்கள் மூலம், இத் தேட்டங்கள் நிரந்தரமாக இழக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களைக் குறைக்கலாமென்பது நம்பிக்கை.

இக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது நூலகம், ஏட்டோலைகள் – பத்திரிகைகள் – புத்தகங்கள் என 2.25 மில்லியன் பக்கங்களைக் ஸ்கான் செய்து முடித்துள்ளது. 8,000 பல்லூடகப் பதிவுகள் மற்றும் 300 இற்கும் மேலான வாய்வழிக் கதைகளின் பதிவுகள் என அதன் தேட்டம் விரிகின்றது. அதன் பல வருடச் செயற்பாடுகளில் 250 இற்கும் மேலான தொண்டர்கள் பணியாற்றி வந்திருக்கிறார்கள். 500 இற்கும் மேற்பட்ட புரவலர்களும் அமைப்புகளும் பண உதவி செய்திருக்கிறார்கள். 1,000 இற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் இலக்கியம் மற்றும் இதர தமது தேட்டங்களைத் தானம் செய்திருக்கிறார்கள்.

நூலகத்திற்கான நிதி பல தளங்களிலிருந்தும் கிடைக்கிறது.  தமிழ் அமைப்புகள், தனிப்பட்டவர்கள், பிரித்தானிய நூலகம் போன்ற ஸ்தாபனங்களும் பிரதான புரவலர்களாக இருந்து வருகின்றனர். நூலகத் திட்டத்திற்கு தமது நேரத்தைக் காணிக்கையாக்கும் பல நூற்றுக்கணக்கான தொண்டர்களின் உதவி அதன் செலவை வெகுவாகக் குறைத்து வைத்திருக்கிறது. இருந்தும் நூலகத்திற்கு மேலும் பண உதவி தேவையாகவிருக்கிறது. எண்ணிம மாற்றம், எண்ணிமத் தேட்டம், வாய்வழிக் கதைப் பதிவுகள், நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் எனப் பல சேவைகளை நற்கீரன் பரிந்துரைத்துள்ளார். அவரது பட்டியல் இன்னும் நீண்டது. அவரின் கூற்று:

“பெரும்பாலான நூலகத்தின் பங்களிப்புகள் சிறிய தொகைகளாக (10 பவுண்ட்டுகள் / 10 டொலர்கள்) ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கின்றன. இப்போது நாம் உருவாக்கியுள்ள நூலகம் சமூக ஆதரவுடனானது. ஆனால் நிரந்தர நன்கொடையுடன் கூடிய ஒரு நிதிய அமைப்பாக நிறுவனப்படுத்தப்படுவதன் மூலமே நூலகம் பலப்படுத்தப்பட முடியும். நிலையான நிறுவனமாக நூலகம் தக்கவைக்கப்படுவதற்கு பின்வரும் தேவைகள் அவசியம்:

  1. நிதி
  2. சமூகம் (தொண்டர்கள், விடயதானம் செய்பவர்கள், ஆதரவாளர்கள், பணியாளர்கள்)
  3. நிபுணத்துவம், தொழில்நுட்பம்”

நூலகத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்னவாகவிருக்குமென நான் சோமராஜ், நற்கீரன் இருவரிடமும் கேட்டேன். அவர்களது பதில்கள் இப்படியிருந்தன:

“தற்போது மாதமொன்றிற்கு 40,000 பக்கங்கள் அல்லது 1,500 ஆவணங்களையே எம்மால் எண்ணிமப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. இதை மூன்று மடங்காக அதிகரிக்க விரும்புகிறோம். இதைச் சாதிக்க மேலதிக நிதி, பணியாளர் மற்றும் சாதனங்கள் தேவை.

‘ஆகாயச் சேமக்கல’ த்திலிருந்து (cloud storage stack) சுய இணைப்புத் தரவாட்சித் (linked data discovery) தளத்திற்கு ஆவணங்களும் பல்லூடகப் பதிவுகளும் மாற்றீடு செய்யப்பட ஏதுவான தொழிநுட்ப முன்னேற்றம் அவசியம்.

கிழக்கிலும் மலையகத்திலும் நூலகத்தின் நிரந்தரக் கிளைகள் அமைக்கப்படவேண்டும்.

எமது பல்லூடகக் களப் பிரிவு (வாய்வழிக் கதைகள், ஒளிப்படம், வலையொளிப் பதிவுகள்) எழுத்துரு தவிர்த்த, வாய்வழி, காட்சி மற்றும் மறைமுக அறிவுத் தளங்களையும் (non-textual, oral, visual and tacit knowledge bases) உள்ளடக்கும் வகையில் விரிவாக்கம் பெறவேண்டும்.”

நூலகம் தனது சேவைகளை விஸ்தரிக்க இதர திட்டங்களையும் வைத்திருக்கிறது. தமது தேட்டங்களைப் பயன்படுத்தி பல கற்கையியல் ஆய்வுத் திட்டங்களை முன்னெடுக்கவும் அது தீர்மானித்துள்ளது. இரண்டு இணையத் தளங்கள் மூலம் நூலகம் தற்போது தனது சேவைகளை வழங்கி வருகிறது. இரண்டிலுமாக மாதமொன்றிற்கு 33,000 பயனாளர்களையும் 375,000 பார்வைகளையும் அது தம்வசம் ஈர்த்து வருகிறது.

அவற்றுக்கான இணைப்புகள்:

  1. http://aavanaham.org/  (படங்கள், பல்லூடகப் பதிவுகள், வாய்வழி உரையாடல் பதிவுகள்)
  2. http://www.noolaham.org/ (எழுத்துரு சார்ந்த பதிவுகள்)

நூலகம் ஒரு வர்த்தக நிறுவனமல்ல ஆனால் அதுவும் சாத்தியப்படலாம். புலம்பெயர் தமிழர்களுக்கும் அவர்களது தாயகத்திற்குமிடையேயான தொடர்புகள் பரம்பரை விரிவாக்கத்தினால் நலிவடைந்து போகும் காலத்தில், பாரம்பரியத்துடன் ஒரு நிரந்தர இணைப்பை ஏற்படுத்துவதில் பலர் விருப்பம் காட்டலாம். தமது பெற்றோர்களின், தாத்தா பாட்டிகளின் கிராமிய வரலாறுகளை வாய்வழிக் கதைகளாகவும் வலையொளிகளாகவும் கேட்டு, பார்த்து மகிழ புலம்பெயர்ந்தோருக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் நூலகம் பெரு வருமானத்தையும் ஈட்ட முடியும்.

நூலகம் ஒரு தகவல் மலையையே உருவாக்கி வருகிறது. தமிழரது கலாசார, பாரம்பரியப் பொக்கிசங்களைத் தேடிச் சேர்த்து பொதுமக்களுக்கு இலவசமாகக் காட்சிப்படுத்துகிறது. இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து பணம் பண்ணக்கூடிய திறமை உள்ளவர்களுக்கு நிறைய வியாபாரச் சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன. நூலகத்தின் 2.5 மில்லியன் பக்கங்கள் மற்றும் வளரும் ஆவணப்பதிவுகள், பல்லூடகங்கள் எனப் பலவற்றில் மறைந்து கிடக்கும் விடயங்களைப் பணமாக்கும் உத்திகளைத் தெரிந்தவர்கள் பயன்பெறுவார்கள். மற்றவர்களுக்கு பல மணித்தியால வாசிப்பு, காட்சி என விரிந்துறையும் உலகத்தின் ஆனந்த அனுபவம் விருந்தாக அமையலாம். என்னைப்போல, தமிழ் விளங்காத ஒருவருக்கே, படங்களையும் வலையொளிகளையும் பார்ப்பது ஆனந்தமான அனுபவமாக இருக்கிறது.

நூலகத்துடன் தொடர்புகொள்ள : திரு. சோமராஜ் அவர்களுடன் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ள முடியும்

மேலதிக தகவல்களை http://noolahamfoundation.org என்ற நூலகத்தின் இணையத்தளம் மூலமும் பெற்றுக்கொள்ளலாம்.

இக் கட்டுரை 27 செப்டெம்பர் 2019 அன்று ‘லங்கா பிஸ்னஸ் ஒன்லைன்’ இல் வெளியானது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4667 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)