1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் ‘அரகலயவும்’ : சிங்களப் போராட்டக் கட்டமைப்பில் சாதியப் பின்னணி
Arts
17 நிமிட வாசிப்பு

1971 ஜே.வி.பி கிளர்ச்சியும் ‘அரகலயவும்’ : சிங்களப் போராட்டக் கட்டமைப்பில் சாதியப் பின்னணி

July 12, 2024 | Ezhuna

இலங்கையின் சிங்களக் கிராமிய வாழ்வியலுடனும், அரச ஆட்சி முறைமையுடனும், அரச உயர் பதவிகளுடனும் வர்க்க, சாதிய, கல்வித் தராதர, இனக் கட்டமைப்பு முறைமைகள் பின்னிப் பிணைந்துள்ளன. பண்பாடு ரீதியான தொழில்சார் குடியேற்றங்கள் காரணமாக சாதியக் கட்டமைப்பானது ஏற்பட்டது என சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றார்கள்.

தந்தையின் சாதி பிள்ளைக்குக் கடத்தப்பட்டதுடன் தந்தை செய்த குலத் தொழிலை மகனும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதனைக் காணலாம். இதற்கமைய, மக்களின் குடியேற்றக் கிராமங்களும் தொழில்சார் குடியேற்றங்களாகவே காணப்பட்டன. அந்தக் கிராமங்களின் பெயர்களும் தொழில்சார் அடையாளங்களுடன் காணப்பட்டதனைக் காணலாம். உதாரணமாக கும்பல், கமுவ, வடுகம போன்றவை.

இவற்றுடன், வர்க்க ரீதியான கட்டமைப்பு மக்களிடையே ஆதிகாலம் தொட்டு நிலவி வருகிறது. அதனைத் தொடர்ந்து கல்வி வளர்ச்சியுடன் கல்வி ரீதியான பாகுபாடுகளும் வளர்ச்சியடையத் தொடங்கியது. ஆதியில், அரசன் – அரண்மனை – சேவைகள் என்பதன் அடிப்படையிலேயே தொழில்சார் பாகுபாடுகள் காணப்பட்டுள்ளன. 

தமிழ் – சிங்கள அரசியல் நகர்வுகளில் சாதியப் பிரிவினைவாதம் பெரும் பங்கு வகித்தது. மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் சாதிய எச்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

இந்திய தேசத்தில், நேரடியாகவே சாதியச் சுலோகங்களுடன் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் நிலைமை காணப்படுகிறது. இலங்கையில் ஒடுக்கப்பட்ட சாதியினர் சாதி, சமூக, இன, மத, மொழி, வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக தங்களின் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்களே அன்றி, நேரடியாகச்வ்சாதியச் சுலோகங்களுடன் சாதியப் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் கோவில் உள் நுழையும் போராட்டங்கள், தேநீர்க் கடை உட்பிரவேசிப்புப் போராட்டங்கள், மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் சுடுகாடுகள் அமைப்பதற்கு எதிரான போராட்டங்கள்  போன்றன சாதியத்துக்கு எதிரான அல்லது சாதியக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களாக அமைந்தன. இந்தப் போராட்டங்கள் முற்றும் முழுதும் முற்போக்கு அரசியற் சிந்தனையாளர்களால் முன்னெடுக்கப்பட்டன. விசேடமாக, இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளால் வழிநடத்தப்பட்டன. இவை புதிய ஜனநாயக மார்க்ஸிய லெனினிஸக் கட்சியினரின் தலைமையில் நடைபெற்றன என்றால் மிகையாகாது.

அந்தவகையில், 1971 ஆம் ஆண்டின் ஜே.வி.பி கிளர்ச்சியைப் பற்றிய ஆய்வினை மேற்கொள்ளல் இங்கு அவசியமானதாகின்றது. அவர்கள் அந்தப் பாதையைத் தெரிவு செய்யக் காரணம் யாது, இவ்வாறான போராட்டங்கள் எம் நாட்டில் ஏற்படக் காரணம் யாது?

1971 கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் வயது அடிப்படையில், 17 – 26 வயதிற்கு இடைப்பட்டவர்கள் 77% ஆகவும், 32 வயதிற்கு அதிகமானோர் 8% ஆகவும், மிகுதியானவர்கள் 26 – 32 வயது இளைஞர்களாகவும் இருந்தனர்.

கல்வி அடிப்படையில் பகுப்பாய்ந்து பார்க்கும் போது, கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில் பாடசாலைக் கல்வியைப் பெறாதவர்கள் 2.5% ஆகவும், பாலர் வகுப்பு முதல் தரம் 4 வரை கற்றவர்கள் 17% ஆகவும், தரம் 5 தொடக்கம் 8 வரை கற்றவர்கள் 42.3% ஆகவும், க.பொ.த சாதாரண தரம் கற்றவர்கள் 32.2% ஆகவும், க.பொ.த உயர் தரம் கற்றவர்கள் 4.1% ஆகவும், பட்டதாரிகள் 1.6% ஆகவும் இருந்தனர். மகா வித்தியாலயங்களில் கல்வி கற்றவர்களின் வீதம் 79.3% ஆகவும், மத்திய மகா வித்தியாலங்களில் கல்வி கற்றவர்கள் 6.4% ஆகவும், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்கள் 1.29% ஆகவும் இருந்தனர் எனத் தரவுகள் கூறுகின்றன.

தொழில் ரீதியாக நோக்கும் இடத்தில், பிரபு வர்க்கத் தொழில்களில் ஈடுபட்டவர்கள் 0.2% ஆகவும், மத்திய தர வர்க்கத் தொழில்களில் ஈடுபட்டவர்கள் 6.1% ஆகவும், விவசாய மற்றும் கீழ்நிலைத் தொழில்களில் ஈடுபட்டவர்கள் 56% ஆகவும் இருந்தனர்.

தந்தையின் தொழிலைச் செய்தவர்கள் தொடர்பாக நோக்கும் போது, பிரபு வர்க்கத்தினர் 0.4% ஆகவும், மத்திய தர வர்க்கத்தினர் 5.4%, கீழ் மத்திய தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 68% ஆகவும் காணப்பட்டனர். தொழில் இல்லாதவர்களின் விகிதம் 2.5% ஆகும். மேற்படி போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் அநேகமாகக் கிராமப்புற இளைஞர் யுவதிகளாகத்தான் காணப்பட்டனர்.

‘அரகலய’ போராட்ட இளைஞர் – யுவதிகளின் வாழ்வியல் மட்டத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அதிகமான விகிதத்தினர் முன்பு போலவே கீழ் மத்தியதர வர்க்கத்தினராகவே காணப்பட்டனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவு காரணமாக, மத்திய தர வர்க்கம் என்ற ஒரு வர்க்கத்தையோ அல்லது உயர் மத்திய தர வர்க்கம் என்ற ஒரு வர்க்கத்தையோ பிரித்தறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சகலரையும் கீழ் மத்தியதர வர்க்க மக்களாகவும், ஏழைகளாகவும் இனம் காண வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தலைமை தாங்கிய போராட்டக்காரர்கள் சற்று மேல்நிலையில் இருந்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது.

1971 கிளர்ச்சியுடன் இன்றைய ‘அரகலய’ போராட்டத்தினை ஒப்பு நோக்கும் இடத்து, அன்று அதிக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்பதை இனங்காணலாம். ஆனாலும் தலைமை வகித்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாகவே காணப்பட்டனர். இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமாகப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியதையும், போராட்டத்தில் பங்கெடுத்திருந்தமையையும் காண முடிந்தது.

அன்று ரோகண விஜேவீர, லயனல் போபகே, உயங்கொட, சோமசிரி சுமனநாயக்க, நயனாநந்த விஜய் குலதிலக்க, சரத் விஜேசிங்க, ஜே. சமரதுங்க போன்ற பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையை கிராமப்புற இளைஞர்கள் ஏற்றுக் கொண்டதன் காரணத்தினால் 71 இன் கிளர்ச்சி ஏற்பட்டது.

லயனல் போபகே மற்றும் ரோகண விஜேவீர போன்றோர் மட்டுமே விஞ்ஞானப் பீட மாணவர்களாகக் காணப்பட்டனர். ஏனைய சகல மாணவர்களும் கலைப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ‘அரகலய’ போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர் பற்றிய தரவுகள் துல்லியமாக எங்கும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் சகல பீடங்களின் மாணவர்களும் ஒரே குரலாக ஒரே உணர்வோடு போராட்டங்களில் பங்கெடுத்தமையை அவதானிக்க முடிந்தது.

இலங்கை வரலாற்றில் கண்டிய ராச்சியக் காலத்தில் சாதியக் கட்டமைப்பானது ஆழமாக புரையோடி இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிங்களச் சாதியக் கட்டமைப்பானது கீழ் காணும் வகையில் காணப்படுகின்றது.

கொவிகம 

விவசாயிகளைக் கொண்ட சமூகம் கொவிகம எனப்படுகிறது. அரசு காலத்தில் ‘ரதல’ உயர் குலத்தினர் கொவிகம என்னும் சாதியில் பிரதான இடத்தை வகித்தனர். இவர்களே அரசவையில் பிரபுக்களாகவும் காணப்பட்டுள்ளனர். இவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களாக இருந்ததுடன் பட்டி, வேடுவர் ஆகிய பிரிவுகளும் இந்தக் கொவிகம சாதியின் இரண்டு பிரிவுகளாகும்.

கராவ

ஆரம்ப காலம் முதல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இவர்கள் கரையோரப் பிரதேசங்களை சேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். 13 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இந்த மீன்பிடிச் சமூகமானது தங்காலையில் இருந்து நீர் கொழும்பு வரையாகவும், நீர் கொழும்பிலிருந்து புத்தளம் வரையாகவும், வடக்கு – கிழக்கு கடற்கரைகளில் வாழும் மீனவர்களாகவும் மூன்று கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். சிங்களம் பேசும் கராவ, சிங்களம் – தமிழ் பேசும் கராவ மற்றும் பரவர்கள், தமிழ் பேசும் கரையார்கள் என்று இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.

தங்காலை முதல் நீர் கொழும்பு வரையான கரையோரப் பிரதேசத்தில் கராவ சமூகத்தினர் அதிகமாக வாழ்கின்றனர். இந்தச் சாதியினர், அதிலும் மொரட்டுவ தொடக்கம் நீர் கொழும்பு வரையானவர்கள், அதிகமாகக் கத்தோலிக்கர்களாகக் காணப்படுகின்றனர். பாணந்துறை தொடக்கம் தங்காலை வரையான கராவ சமூகத்தினர் பௌத்தர்களாகக் காணப்படுகின்றனர்.

சலாகம

இவர்களும் கடற்கரையோரத்து மக்கள் கூட்டத்தினராவர். ஆனால் இவர்கள் யாவரும் பௌத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் அதிகமானவர்கள் காலி மாவட்டத்தில் வாழ்வதுடன், பலபிட்டிய – ராஜகம போன்ற தேர்தல் தொகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் கண்டி ராச்சியத்தில் இருந்து அரசனுடனான சர்ச்சைகள் காரணமாக கரையோரப் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பதுடன், அரசனின் ஆணைப்படி கருவாப்பட்டை உரிக்கும் தொழிலில் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்று ஆனந்த குமாரசுவாமி அவரது ஆய்வுகளில் கூறியுள்ளார். இந்தக் கூற்றை சலாகம சாதியினர் ஏற்க மறுக்கின்றனர்; தாங்கள் அவ்வப்போது இந்தியாவில் இருந்து வந்த பிராமணர்கள் என்று கூறுகின்றனர். ஆனாலும் பிரைன் ராயன், பி.எச். பாமர் ஆகிய ஆய்வாளர்கள் சலாகம சாதியினர், காலங்களில் வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று நிரூபித்துள்ளனர்.

நவண்டன

விவசாய ஆயுதங்கள், இரும்பு, உருக்கு, தங்க ஆபரணங்கள், வெண்கலப் பொருட்கள், பலகையிலான கலைப் பொருட்கள், சிற்பங்கள் போன்றவற்றைச் செதுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களாக இவர்கள் காணப்படுகின்றனர். தமிழ் – சிங்கள ஆசாரிகள் என இனங் காணப்பட்ட இந்தச் சாதியினர், சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்தாலும், இவர்களின் பெயர்கள் ராஜேஸ்வர, தேவ, சுரேந்திர என்று காணப்படுவதுடன், இந்து சமயச் சடங்குகளுடனும் வழிபாட்டு முறைகளுடனும் இவர்களுக்கு ஆழமான தொடர்பு உண்டு. இவர்களின் கலைப் படைப்புகளிலும் இந்திய அழகியலின் தாக்கம் காணப்படுகின்றது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நவண்டன சாதியினர் மத்தியில் கட்டடக் கலைஞர்கள், தங்க – வெள்ளி வேலை செய்பவர்கள், யானைத் தந்ததால் கலைப் படைப்புகளைச் செய்பவர்கள் என்போர் உயர் சாதியினராகக் கணிக்கப்படுகின்றனர். மரவேலை, மரச் சிற்பம் செய்பவர்கள் சாதியில் கீழ்ப்பட்டவர்களாகக் கணிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு நூல்கள் கூறுகின்றன.

துராவ

இவர்களின் குலத்தொழில் கள்ளு இறக்குதலாகும். அநேகமானவர்கள் மாத்தறைப் பிரதேசத்தில் வாழ்ந்து வருவதுடன், இவர்களும் வட இந்தியாவில் இருந்து வந்த திராவிட இனமென்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

வகும்புர

பிரதானமாக மலைநாட்டுப் பிரதேசங்களில் இருந்து நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபித்து சென்ற இந்தச் சாதியினர், வகும்புர என அழைக்கப்படுகின்றனர். இலங்கைக்குப் போதி மரத்தைக் கொண்டு வரும் போது, இந்தியாவில் இருந்து வந்த சாதியினர்களில் இவர்களும் காணப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு வந்தவர்களை 18 சாதியினர் அல்லது 18 குலத்தினர் என்று அழைப்பர். விசேடமாக, மலைநாட்டுப் பிரதேசங்களில் வாழ்வதனால் இவர்களை கந்தேயத்தோ என்றும் அழைப்பர். இவர்கள் அரச மாளிகைகளில் உணவு தயாரிப்பது, கருப்பட்டிப் பாணி தயாரிப்பது, அரச மாளிகையின் வீட்டு வேலைகளைச் செய்வது, சமயச் சடங்குகளின் போது நாதஸ்வரம் போன்ற இசைக்கருவியை இசைப்பது போன்ற கடமைகளைச் செய்து வந்தனர். சகுரு, சக ஆரன்ய, வன்ச பூர்ண, வகும்புர, சுதுகரா, சகரம்மு, கந்தேயத்தோ போன்ற சாதிகளாகப் பிரிக்கப்பட்ட போதும், இவர்கள் யாவரும் வகுபம்புர சாதியினராகவே அடையாளப்படுத்தப்படுவர்.

கும்பல் 

சமையல் மட்பாண்டங்களுடன், கூரை செய்ய மண் – ஓடு – செங்கல் போன்றவற்றைத் தயாரிக்கும் இவர்கள், எங்கெல்லாம் மட் பாண்டங்கள் தயாரிப்பதற்கு ஏதுவான மண்வளம் இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்று குடியேறியுள்ளார்கள்.

ரஜக 

துணிச் சலவை, துணிப் பந்தல் அமைத்தல், கம்பளம் – பாவாடை விரித்தல் போன்ற தொழில்களைச் செய்வதற்காகப் பணிக்கப்பட்டவர்களே இச் சாதியினர். கும்பல் சாதியினரிலும் குறைவான சாதியினரின் துணிகளை இவர்கள் சலவை செய்யக் கூடாது என்பதனால் கீழ் சாதியினர் என்று கூறப்படுவோரின் துணிகளைச் சுத்திகரிக்க ‘பலி’ என்ற சாதியினர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

பெரவ 

நெசவுத் தொழில் இவர்களின் விசேட தொழிலாகும். இத்தோடு பெர என்னும் தோல் வாத்திய இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்களாகவும் மற்றும் ஹொரன என்ற இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்களாகவும் இவர்கள் காணப்படுகின்றனர். மேலும் கபு என்னும் பருத்திப் பஞ்சு மரங்களை வளர்ப்பதில் நிபுணர்களாகவும், அந்தப் பருத்தியைச் சேகரிக்கும் வியாபாரிகளாகவும் காணப்படுகின்றனர்.

பத்கம 

சிங்களச் சாதியக் கட்டமைப்பில் அடிமட்ட சாதியினராக இவர்களை அடையாளப்படுத்துவர். மலையகப் பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படும் இவர்கள், கூலி வேலை செய்பவர்களாக – வீட்டு வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். அரச ஊர்வலங்களில் பல்லக்குத் தூக்குபவர்களாகவும், பீரங்கி இயக்குநர்களாகவும் விளங்கினர். இச் சாதியினர் இயக்கர்களின் வழித் தோன்றல்கள் என்றும், ஆரியர்களின் வருகைக்குப் பின் ஆரியர்களுக்கு அடிமையாக இருக்க விரும்பாதவர்கள் காட்டுக்குள் சென்று வேடுவர்களாக வாழத் தொடங்கினார்கள் என்றும், ஆரியர்களின் கீழ் அடிமைப்பட்டவர்கள் ‘பது’ அல்லது ‘பத்கம’ என்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டமாக மாறினர் என்றும் கூறப்படுகின்றது. சில ஆய்வாளர்கள் இந்தச் சாதியினர் சோழ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கைதிகள் என்றும் கூறுகின்றனர்.

இலங்கையின் ஏனைய ஒடுக்கப்பட்ட சாதியினரில், ஒழி சாதியினர் தொயிலாட்டம் – பலி ஆட்டம் என்பவற்றில் ஈடுபடுகின்றனர். கின்னற சாதியினர் பாய் மற்றும் கயிறு பின்னுபவர்களாகக் காணப்படுகின்றனர். ஹுனு சாதியினர் சுண்ணாம்பு அடிப்பவர்களாகக் காணப்படுகின்றனர். யவன்னோ சாதியினர் இரும்பு, உருக்கு வேலை செய்கின்றனர். கருணாவென் சாதியினர் சவரத்தொழில் செய்து வருகின்றனர். மேலும், ரொடியா சாதியினர் யாசகர்களாகக் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1971 கிளர்ச்சியில் மத்திய வழக்கில் மொத்தம் 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், 

  1. கராவ 14
  2. கொவிகம 11
  3. வகும்புர 4
  4. பத்கம 1 

பிரதான வழக்கில் 42 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில்,

  1. கொவிகம 15
  2. கராவ 11 
  3. வகும்புர 5
  4. சலாகம 3 
  5. ரஜக 2 
  6. கும்பல் 1 
  7. துராவ 1

1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை பீட அங்கத்தவர்களில்,

  1. கொவிகம 11 
  2. வகும்புர 10 
  3. கராவ 8 
  4. சலாகம 6 
  5. ரஜக 2 
  6. பத்கம1 
  7. கும்பல் 1

‘அரகலய’ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில்,

  1. சாதிய அடையாளம் இல்லாதோர் 520 
  2. கொவிகம 5962 
  3. கராவ 636
  4. சலாகம193
  5. வகும்புர 1038
  6. ரஜக 204
  7. ஹுனு 35
  8. பத்கம 944 
  9. நவண்டன 159 
  10. ரொடியா 2
  11. பெரவ 156
  12. துராவ 267
  13. கும்பல் 27
  14. தமிழர் 49

இதில் பலர் எந்தவிதப் புரட்சி நடவடிக்கையிலும் ஈடுபடாமல், பொய்யான குற்றச்சாட்டுக்கள் – தனிநபர் பழிவாங்கல்கள் மூலம் கைது செய்யப்பட்டனர். தங்களின் சாதி அடையாளத்தை காட்ட மனம் இல்லாதவர்களும் இருந்திருக்கலாம். அப்படியாயின், உயர் சாதியினர் தங்களின் சாதியை அடையாளப்படுத்துவதில் பெருமை கொண்டு வந்தனர் எனலாம். இந்தச் சாதிய அடையாளம் இல்லாத 520 பேரில் அதிகமானவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மற்றும் சிலர் அவர்களின் பெயர்களை உயர் சாதியினருக்கு வழங்கப்படும் பெயர்களாக மாற்றிக் கொண்டும் இருக்கலாம். 1971 கிளர்ச்சியில் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 முதல் 5000 வரையாகக் காணப்படுகிறது. இவர்கள் தொடர்பான சாதிய விபரங்கள் எங்கும் காணப்படவில்லை.

1970 ஆம் ஆண்டின் அரசியல்வாதிகளில், 

  1. கொவிகம 76% 
  2. கராவ 9.62%
  3. சலாகம 4.01%
  4. துராவ1.58%
  5. வகும்புர 3.14%
  6. பத்கம 1.58% 

எனும் வீதத்தில் காணப்பட்டனர்.

இதன் அடிப்படையில் 1971 கிளர்ச்சியில் சாதி, வர்க்கம் ஆகிய இரண்டும் செல்வாக்குச் செலுத்தின எனலாம். ஒரு புறத்தில் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்படும் மக்களின் ஏகாதிபத்திய எதேச்சதிகாரம் படைத்த தனவந்தர்களுக்கு எதிரான போராட்டமாகவும், மறுபுறத்தில் ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் விடுதலைக்கான போராட்டமாகவும் அது எழுச்சி கண்டது. ஆனாலும் இப் போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மட்டும் கண்ட அரசாங்கம், பணக்கார வர்க்கத்தினருக்கு எதிரான ஒரு சில சட்டங்களை மாத்திரம் மீட்டுருவாக்கம் உருவாக்கம் செய்து நடைமுறைப்படுத்தியது. ஆனால் அதனுள் பொதிந்திருந்த சாதிய அம்சம் பற்றிய சிந்தனை அரசாங்கத்திற்கு இல்லாமல் போனது. அடக்குமுறைக்கு உள்ளான மக்கள் கூட்டத்தினருக்கு அரசியல் அந்தஸ்தினை வழங்குவதற்குத் தவறியது. 

2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டம், இலங்கையின் ஒடுக்கப்பட்ட மக்களையும், விவசாய – மீன்பிடி – பெருந்தோட்டத் தொழிலாளர்களையும், அன்றாட உழைப்பாளர்களையும் சிந்திக்கச் செய்தது. இப் போராட்டம் இன – மத – வர்க்க – சாதிய –  பிரதேசவாத அடையாளங்கள் எதுவும் இன்றி, கல்வியறிவு – தொழில் ரீதியான பிரிவினை எதுவும் இன்றி முன்னெடுக்கப்பட்டது என்றால் மிகையாகாது.

மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசின் கொள்கைகள் காரணமாக வீதிக்கு இறங்கிய இளையோர்களுடன் இணைந்து முதியோரும் வீதிக்கு வந்த போராட்ட முறைமையானது சிறப்பானது. மேலும் பௌத்த மத போதகர்கள், கிறிஸ்தவ – கத்தோலிக்க மத குருமார்கள், கன்னியர்கள், இந்து மத குருக்கள், இஸ்லாம் மதத் தலைவர்கள் ஆகியோர் ஒன்றாக இப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், அரச சேவையாளர்கள், செய்தியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் என்போரும் தொழில் வேற்றுமை இன்றி இப் போராட்டத்தில் இணைந்திருந்தனர். மின்சாரம், எரிபொருள், எரிசக்தி போன்றவற்றின் வழங்கல் தடைப்பட்டமை காரணமாக மத்திய தர வர்க்கத்தினரையும், உயர் வர்க்கத்தினரையும் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.

‘அரகலய’ போராட்டமானது, 1971 கிளர்ச்சி போல குறித்த ஒரு அரசியல் கட்சியை அடையாளப்படுத்திச் செய்யப்பட்ட போராட்டமாக இல்லாமல் மக்கள் மையப்படுத்திய போராட்டமாக அமைந்தது. இவ்வாறான மக்கள் போராட்டங்கள் ஐக்கியப்பட்ட அமைப்பு அடிப்படையிலும், சுயநலமற்ற – ஒருங்கிணைந்த வேலைத்திட்டமாகவும் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்கப்படுவது, மக்கள் நலன் சார்ந்த அரச உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். 


ஒலிவடிவில் கேட்க

6890 பார்வைகள்

About the Author

சை. கிங்ஸ்லி கோமஸ்

அரச உத்தியோகத்தராகப் பணியாற்றும் சை. கிங்ஸ்லி கோமஸ் வீரகேசரி, தினக்குரல், தாயகம் (யாழ்பாணம்), புது வசந்தம் (யாழ்ப்பாணம்) ஆகிய பத்திரிகைகளின் கொட்டகலைக்கான மேலதிக நிருபருமாவார். கட்டுரையாளர், விமர்சகர், சிறுகதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், குறும்பட இயக்குனர் என பன்முக ஆளுமை கொண்டவர். ‘The Dark Nest’ எனும் இவரது குறுந்திரைப்படத்திற்கு பெண்கள் ஊடக மைய்யத்தின் (இலங்கை) 2023 ஆம் ஆண்டிற்கான விஷேட விருது கிடைத்திருக்கின்றது. ஊடறு, பெண்ணியா, காக்கைச் சிறகினிலே (தமிழ்நாடு), ஜித்தன் (தமிழ் நாடு) போன்ற பிற நாட்டுப் பத்திரிகைகளிலும் எழுதி வருகிறார். மலையக வரலாறு, சமூகவியல், அரசியல் சார்ந்த இவரது எழுத்துகள் குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)