கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு
Arts
16 நிமிட வாசிப்பு

கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

July 13, 2024 | Ezhuna

கால்நடை வளர்ப்பு என்பது இலங்கையின் முக்கியமான ஒரு பொருளாதாரக் கூறு. மனிதனின் புராதன தொழில்களில் கால்நடை வளர்ப்பு மிகமுக்கியமானது. பால், முட்டை, இறைச்சி, எரு, வேலைவாய்ப்பு என பல வழிகளிலும் கால்நடை வளர்ப்பு மக்களுக்கு வருவாயை ஏற்படுத்தும் துறையாகும். அத்துடன் நுகர்வோரின் புரத மற்றும் முக்கியமான  ஊட்டச் சத்துகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் கால்நடை வளர்ப்பு அமைகிறது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை தள்ளாடும் சூழ்நிலையில், கால்நடை வளர்ப்பினூடாக கிராமிய மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் போசணைமட்டத்தை உயர்த்துவதோடு, இதனை மேம்படுத்துவதனூடாக இலங்கையின் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான வழிமுறைகளை அனுபவரீதியாகவும், ஆய்வியல் ரீதியாகவும் முன்வைப்பதாக ‘இலங்கையின் கால்நடை வளர்ப்பு பொருளாதாரம்’ என்ற இத்தொடர் அமைகிறது.

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு நுழையாத இடமே இல்லை எனலாம். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் முன்னைய காலத்தில் மனிதனால் செய்யவே முடியாது எனக் கருதப்பட்ட பல காரியங்களைச் செய்ய முடிகிறது. அதீத உழைப்புடன் செய்யப்பட்ட பல காரியங்களையும் இலகுவாகச் செய்ய முடிகிறது. இந்தக் கட்டுரை  கறவை மாடு வளர்ப்பில் செயற்கை நுண்ணறிவின் (Artificial intelligence – AI) இன்றைய பயன்பாட்டையும், நாளைய எதிர்பார்ப்பையும் ஆராய்கிறது. அதிகரித்துவரும் மனிதச் சனத்தொகை காரணமாக ஏற்பட்டுள்ள உணவுத் தேவை அதிகரிப்பு, கால்நடை வளர்ப்பையும் வினைத்திறன் மிக்கதாக மாற்றவேண்டிய தேவையைத் ஏற்படுத்தியுள்ளது. ஏனைய துறைகளைப் போல இங்கும், வினைத்திறனான உற்பத்திச் செயன்முறைக்கு செயற்கை துண்ணறிவு பயன்படத் தொடங்கியுள்ளது.

பொதுவாக மாடு வளர்ப்பு, மேய்ச்சலை நம்பிய ஒரு பாரம்பரியமான தொழிலாகும். மாடுகளின் உணவுக்குத் தேவையான புற்கள் காணப்படும் இடங்களை நோக்கி மாடுகளை ஓட்டிச் செல்லும் மேய்ச்சல் முறையாகவே மாடு வளர்ப்பு அமைந்திருந்தது. பிற்காலத்தில் மாடுகளை ஓரிடத்தில் வளர்த்து அவற்றுக்கு தேவையான புற்களை பயிரிட்டும், தேவையான அடர்வுத் தீவனத்தை வழங்கியும் வளர்க்க முடிந்தது. இன்று நவீன செயற்கை நுண்ணறிவு மூலம் ஒவ்வொரு மாடாகக் கவனித்து அவற்றுக்கு வேண்டிய விடயங்கள் கணிக்கப்பட்டு உணவாக வழங்கப்படுகின்றன. கறவை மாட்டுப் பண்ணைகளிலும், ஏனைய கால்நடை வளர்ப்புச் செயன்முறைகளிலும் ஆரம்ப கட்டத்திலேதான் செயற்கை நுண்ணறிவின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. வளர்ந்த நாடுகளில் செயற்கை நுண்ணறிவின் செயற்பாடுகள் ஓரளவு பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை வளர்முக நாடுகளில் மிக மிகக் குறைவாகவே அவற்றின் வகிபாகத்தைக் குறிப்பிட முடியும். நான் சில மாதங்களுக்கு முன் எழுதியிருந்த இஸ்ரேலின் கால்நடை வளர்ப்புத் தொடர்பான கட்டுரையில், இஸ்ரேலில் கால்நடை வளர்ப்புத் தொடர்பான செயற்கை நுண்ணறிவின் வகிபாகத்தை எழுதியிருக்கிறேன். இஸ்ரேல் கால்நடை வளர்பில் செயற்கை நுண்ணறிவை உச்ச அளவில் பயன்படுத்தும் நாடாகும். இலங்கையைப் பொறுத்தவரை ஓரளவு பெரிய பண்ணைகளைத் தவிர ஏனைய இடங்களில் அவற்றின் அரிச்சுவட்டைக் கூட காணமுடியாது. பெரிய பண்ணைகளிலும் பால் கறத்தல், உணவுக் கலவை மற்றும் ஓரிரு முகாமைத்துவச் செயற்பாடுகளில் மாத்திரமே செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.

இந்தக் கட்டுரையில் வளர்முக நாடுகளில் எவ்வாறெல்லாம் செயற்கை நுண்ணறிவு கறவை மாட்டுப் பண்ணைகளில் செயற்படுகிறது என்பதையும், இலங்கையில் எவ்வாறு அதனைப் பயன்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்ட முயல்கிறேன்.

கறவை மாட்டுப் பண்ணைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படும் இடங்கள்

1. சுகாதார மேம்பாட்டுச் செயற்பாடு : மாடுகளில் பொருத்தப்படும் கழுத்துப் பட்டிகள் (Collars with sensors), காதுச் சுட்டிகள் (ear tags), கால்களில் பொருத்தப்பட்டுள்ள ‘pedometer’ உபகரணம், வீடியோ கமராக்கள், சென்சார்கள் மூலம் அவற்றின் செயற்பாடுகள் அவதானிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் உடலின் வெப்பநிலை, சுவாச வீதம், இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு, அவை நடக்கும் விதம், எழும்பியிருக்கும் – படுத்திருக்கும் விதம், அசையூண் இரப்பை அசைவு, ஓமோன்கள், பால் மற்றும் ஏனைய உடற் திரவங்களின் மாற்றங்கள் என்பவற்றை அறிந்து கால்நடைகளின் நிலையை அவதானிக்க முடியும். நோய் நிலையை முன்கூட்டியே அறிந்து சிகிச்சையை ஆரம்பித்து, நோய்நிலை முற்றுவதைத் தவிர்த்து, உயிரிழப்பைத் தவிர்க்க முடியும். இதனால் மருத்துவச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும். தேவையற்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துப் பாவனையைத் தவிர்க்க முடியும். இது மனிதச் சுகாதாரத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது.

2. உணவூட்டல் மேம்பாடு : ஒவ்வொரு விலங்குகளின் உணவுத் தேவைகள் கணிப்பிடப்படுகின்றன. உணவுகளிலுள்ள கூறுகளின் போசணைப் பெறுமதி அறியப்பட்டு விலங்குகளின் அன்றாடத் தேவைக்கேற்ப வழங்கப்படுகின்றன (சமச்சீரான தீவனம்). இதன்போது வளர்ச்சி வீதம், உணவு மாற்றுத்திறன் போன்றனவும் அவதானிக்கப்பட்டு, குறைபாடுகள் களையப்பட்டு, தேவையான தீவனங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. உணவின் தரம் சோதிக்கப்படுகின்றன. தற்காலத்தில் பல நாடுகளில் கால்நடைத் தீவன உருவாக்கம் (Feed formulation), TMR போன்ற நவீன உணவூட்டல் முறைகள் செயற்கை நுண்ணறிவினாலேயே கலவை செய்யப்படுகின்றன.

தீவனப் புற்கள் வளர்க்கப்படும் மண்ணின் ஊட்டச்சத்துக்கள், ஈரப்பதன் போன்றன கணிக்கப்படுகின்றன. பயிர் நோய்கள் அவதானிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதற்கு நவீன சென்சர்களும், ட்ரோன்களும் பயன்படுகின்றன. களை கொல்லிகளும் உரங்களும் மண்ணின் அளவுக்கும் தேவைக்குமேற்ப தானியங்கி முறையிலேயே விசிறப்படுகின்றன. உச்சபட்ச ஊட்டம் உள்ளபோதே கணிக்கப்பட்டு பயிர்களின் அறுவடையும் நிகழ்கிறது; சேமிக்கப்படுகிறது. தீவனப் பயிர்ச் செய்கைக்கு வேண்டிய தண்ணீர் அளவு கணிப்பிடப்படுகிறது. பயிர்ச் செய்கைக்கு ஏற்ற காலநிலை எதிர்வுகூறல் சரியாக இடம்பெறுகிறது.

3. இனப்பெருக்கச் செயற்பாடுகள் : கறவை மாடு வளர்ப்பில் சினைப்பருவ அறிகுறிகளை தெளிவாக அடையாளம் கண்டு சினைப்படுத்த வேண்டியுள்ளது. உடலிலுள்ள ஓமோன் மாற்றங்கள, கால்நடைகளின் இயல்பு மாற்றங்கள் (pedometer, வீடியோ மூலம்) அவதானிக்கப்பட்டு அதற்கேற்ப சினைப்படுத்தல் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. சில நாடுகளில் சினைப்படுத்துநர்கள், கால்நடை வைத்தியர்களுடன் ஆகியோருடன் மேற்படி விடயங்கள் நேரடியாக இணைக்கப்பட்டு அவர்களே மாற்றங்களை உணர்ந்து சினைப்படுத்த வேண்டிய தருணங்களுக்கேற்ப செயற்பட முடிகிறது (இஸ்ரேல்). இதனால் சினைப்பருவம் தவறும் நிலை தவிர்க்கப்படுகிறது.

மாடுகள் கன்றீனும் தருணங்களில், உடலியல் திரவங்களிலும் நடத்தையிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனைச் சரிவர அறிந்து கொள்வதால், அந்தந்த மாடுகள் மீது அதீத கவனத்தைச் செலுத்தி கன்றீனலை இலகுவாக்க முடிகிறது. கன்றீனும் போது ஏற்படத்தக்க பல பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது.

மேலும், சிறந்த சந்ததிகளைப் பெறவேண்டி, சிறப்பான காளைகளின் விந்தணுக்களைப் பெறக்கூடிய வகையில் அவற்றின் தரவுகள், செயலிகளில் தரவேற்றப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி வளமான தேவையான சந்ததிகளை உருவாக்க முடிகிறது. இது பல நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

4. பாலின் தரம் : பாலின் கட்டமைப்புக் கூறுகளின் மாற்றம் அவதானிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, மடியழற்சி நோயின் போது பாலின் கலங்கள் மற்றும் நுண்ணங்கிகளின் அளவு அதிகரிக்கிறது. இவற்றை அறிவதன் மூலம் முன்கூட்டிய சிகிச்சை செய்யப்பட்டு, பால் பழுதடைதல் தவிர்க்கப்படுகிறது. மடியழற்சி நோயும் ஆரம்ப நிலையிலேயே குணமாக்கப்படுகிறது.

5. நடத்தை இயல்புகளை அவதானித்தல் : மாடுகளின் வழமையான நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் அதேவேளை, அசாதாரண நடத்தைகள் உடனுக்குடன் அவதானிக்கப்பட்டு சீர்செய்யப்படுகின்றன. உதாரணமாக சினைப்பருவ வேட்கையை காட்டும் மாடுகள், அதிகம் நடக்கின்றன. மாடுகள் ஒன்றையொன்று தாவும். இவை துல்லியமாக அவதானிக்கப்படுகின்றன.

GPS தொழில்நுட்பம் மூலம் மேய்ச்சல் தரைகளில் மேயும் கால்நடைகள் அவதானிக்கப்படுகின்றன. இதனால் அவை பொருத்தமற்ற இடத்துக்கு செல்லாமலும் தொலைந்து போகாமலும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தத் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி யானைகளின் நடத்தைகளும் அவதானிக்கப்படுகின்றன. நாய்களுக்கு மைக்ரோசிப் செலுத்தி விடுவது மூலம், அவை தொலைந்து போகாமல் பாதுகாக்கப்படுகின்றன.

6. சூழலியல் மற்றும் காலநிலையை வினைத்திறனாகப் பயன்படுத்தல் : முன்னரே விளக்கியது போல சாதகமற்ற காலநிலைகள் கணிக்கப்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிகை நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. தண்ணீர் வினைத்திறனாக பாவிக்கப்படுகிறது. சூழலுக்கு விடுவிக்கப்படும் பண்ணைக் கழிவுகள் பொருத்தமாக நிர்வகிக்கப்படுகின்றன. அண்மைக்காலத்தில் பண்ணைகளிலிருந்து வெளியேறும் மெதேன் எனும் பச்சை வீட்டு வாயுவையும் கணிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மெதேனின் அளவைக் குறைக்கும் விதமான முகாமைத்துவத்தை இதன் மூலம் சீர்செய்ய முடிகிறது. பண்ணையின் சாரீரப்பதன், வெப்பநிலை மற்றும் ஏனைய சூழலியல் காரணிகளில் ஏற்படும் மாற்றங்கள் உணரப்பட்டு தானியங்கி இயந்திரங்கள் செயற்பட்டு (மின் விசிறி, fogging) சூழல் சரி செய்யப்படுகிறது. இது மாடுகளின் நலனுக்கு உகந்ததாகும்.

7. விநியோகம் கட்டமைப்பைச் சிறப்பாகச் செயற்படுத்தல் : பால் மற்றும் பால் உற்பத்திகளை விநியோகம் செய்யும் தானியங்கி முறைகள் செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. பாற் கறவை இயந்திரங்களால் கறக்கப்படும் பால் நேரடியாகவே பால் பதனிடல் நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு மனிதத் தலையீடு குறைக்கப்பட்டு, பால் பழுதடைதல் கணிசமாகத் தவிர்க்கப்படுகிறது. பாலுற்பத்திகளும் விநியோக வாகனங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்படுகின்றன.

8. பண்ணைச் செயற்பாடுகள் : பண்ணைகளின் கொள்வனவு, விற்பனைக் கணக்கு விடயங்கள், இருப்பு விபரங்கள், மாடுகளின் விபரங்கள், சக்தி வழங்கல் விபரங்கள், தொழிலாளர் விடயங்கள், உணவு வழங்கல் மற்றும் கழிவகற்றல் விடயங்கள், பண்ணையின் வெப்பநிலை – சாரீரப்பதன் அவதானிப்பு என சகல விடயங்களும் செயற்கை நுண்ணறிவால் நிர்வகிக்கப்படுகின்றன. இதன் மூலம் தேவையற்ற சக்தி விரயம் தவிர்க்கப்படுகிறது. செலவு குறைக்கப்படுகிறது. ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதனால் மொத்தப் பண்ணைச் செயன்முறையும் வினைத்திறனாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

9. விலங்குக் கொள்வனவு : நடைமுறையில் வயதான மற்றும் உற்பத்தி குறைந்த மாடுகளை வெளித்தோற்றத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்யும் பண்ணையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். வயது, பாலுற்பத்தி, பெற்றோர் – பிள்ளைகள் விபரங்கள், சிகிச்சை விபரங்கள் என சகல விடயங்களும் தரவேற்றப்பட்ட மாடுகளைக் கொள்வனவு செய்யும் போது ஏமாற்றம் தவிர்க்கப்படுகிறது. விற்பனையும் இலகுவாகிறது.

இப்படியாக, பல வழிகளில் செயற்கை நுண்ணறிவானது கறவை மாட்டுப் பண்ணைகளில் செயற்படுகிறது. எனினும் இவை அனைத்தும் ஆரம்ப நிலையிலேயே உள்ளன. அதுவும் இலங்கை போன்ற நாடுகளில் மிகவும் குறைந்த பாவனையிலேயே உள்ளன. சகல இடங்களிலும் இணைய மற்றும் ஏனைய தொழில்நுட்ப வசதிகள் ஏற்படவில்லை. அதற்குரிய கருவிகள் விலை அதிகமாகவும், கிடைப்பது அரிதாகவும் உள்ளது. பலருக்கு அவற்றை இயக்கும் நுட்பம் தெரியாது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்திலேயே விழிப்புணர்வு கிடையாது. மேலும் இலங்கையிலுள்ள பண்ணைகள் தொடர்பான விபரங்களின் பதிவுகள் சரிவரப் பேணப்படுவதில்லை; மேம்படுத்தப்படுவதில்லை. இலங்கையில் இது தொடர்பாக, துறை சார்ந்தவர்கள் ஆராய வேண்டும். வினைத்திறனான கால்நடைவ ளர்ப்புக்கு, செயற்கை நுண்ணறிவு அவசியமானதாகும். இதனைப் பயன்படுத்தி கறவை மாட்டுப் பண்ணைகளை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்ல முடியும்.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

6188 பார்வைகள்

About the Author

சிவபாத சுந்தரலிங்கம் கிருபானந்தகுமரன்

கால்நடை மருத்துவரான சி. கிருபானந்தகுமரன் அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது கால்நடை மருத்துவ பட்டப்படிப்பினை மேற்கொண்டார் (BVSc, MVS). தமிழக, இலங்கை ஊடகங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கியல் நடத்தைகள் தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்