‘வேட்கை கொள்வது அரசியல்’ (நோர்வேஜிய மொழியில் : Politikk er å ville) எனும் தலைப்பிலான நூல் எரிக் சூல்ஹைம் எழுதி 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. அவர் தனது அரசியல் அனுபவங்களை முழுமையாக இந்நூலில் விபரிக்கின்றார். ஒரு வகையில் அவருடைய அரசியற் செயற்பாடுகள் குறித்த ஒரு சுயசரிதை நூல் இது.
நோர்வே அரசியலில் ஈடுபட்ட நீண்ட கால அரசியற் செயற்பாட்டு அனுபவம் கொண்டவர் எரிக் சூல்ஹைம். 1970 களின் நடுப்பகுதியிலிருந்து இன்றுவரை அரைநூற்றாண்டுகளாக அவருடைய அரசியற் பயணம் நீடிக்கின்றது. நோர்வேயின் சோசலிச இடதுசாரிக் கட்சி இளைஞர் அணியின் தலைவராகத் தொடங்கிய அவரது அரசியற் பயணம் அக்கட்சியின் தலைவர், கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சர், சர்வதேச உறவுகளில் நோர்வேயின் பிரதிநிதி, இலங்கை சமாதான முன்னெடுப்புகளின் சிறப்புத் தூதுவர் எனவாகப் பல பரிமாணங்களைக் கொண்டவை.
வேட்கை கொள்வது அரசியல் : சுயசரிதை நூல்
தன்னை அரசியலுக்குள் ஈடுபட உந்தித்தள்ளிய புறநிலைகளிலிருந்து, நோர்வேயின் உள்ளக அரசியல், சர்வதேச உறவுகள், நோர்வேயின் அரசியற் கட்சிகள், அவற்றின் தலைவர்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எரிக் சூல்ஹைம் சர்வதேச ரீதியாக அரசியற் தலைவர்கள், இராஜதந்திரிகள் உட்பட்ட இன்னபிற அதிகார உயர் மட்டங்களுடன் தொடர்பாடல்களைக் கொண்டிருந்தவர். அந்த ஊடாட்ட அநுபவங்களும் இந்நூலில் உள்ளன. 7 ஆண்டுகள் (2005 – 2012) அரசாங்கத்தில் சர்வதேச அபிவிருத்திகளுக்கான அமைச்சராகவும் சூழலியல் அமைச்சராகவும் பொறுப்பு வகித்த போதான அரசியல் நிகழ்வுகளும் அனுபவங்களும் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந் நூலில் நோர்வேயின் சூழலியல் சார் அரசியல், உலகளாவிய வறுமை குறித்த பதிவுகள் உள்ளன. சீனா, இந்தியா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகள் சர்வதேச அரசியலில் தமது வகிபாகத்தினையும் செல்வாக்கினையும் அதிகரித்து வருகின்ற சூழலில் நோர்வேயின் இடம் எதுவென்பது குறித்த பார்வையையும் இந்நூல் பிரதிபலிக்கின்றது.
நோர்வேயின் அனைத்துச் சமாதான முன்னெடுப்புகள் சார்ந்த தனித்தனி அத்தியாயங்களும் இந் நூலில் உள்ளன. போரும் சமாதானமும் என்ற அத்தியாயத்தில் நோர்வேயின் சமாதான முன்னெடுப்புகள், சர்வாதிகாரிகளுடன் பேசுதல், தென்-சூடான் : ஒரு புதிய தேசத்தின் பிறப்பு, மியன்மார் : ஒரு ஜனநாயக அதிசயம், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மத்தியில், ஆப்கானிஸ்தான் – நன்கு நியாயப்படுத்தப்பட்ட தோல்வி, லிபியா : வெற்றியளித்த போரா?, இலங்கை : சுதந்திர தினத்தில் ஒரு வெள்ளைக் கொடி போன்ற தலைப்புகளின் கீழ் பதிவுகள் உள்ளன.
இலங்கையின் சமாதான முன்னெடுப்பின் சிறப்புத் தூதுவராக உலகத் தமிழர்கள் மத்தியில் அறியப்பட்ட எரிக் சூல்ஹைமின் அனுபவங்கள் ‘திக்குகள் எட்டும்’ கட்டுரைத் தொடருக்குப் பொருத்தமுடையவை. அந்த வகையில் சூல்ஹைம் எழுதிய ‘வேட்கை கொள்வது அரசியல்’ நூலின் ஒரு அத்தியாயம் மட்டும் இங்கு எடுத்து நோக்கப்படுகின்றது. ‘சுந்திர தினத்தில் ஒரு வெள்ளைக் கொடி’ எனும் தலைப்பிலான அத்தியாயத்தில் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளில் தனது நேரடி அனுபவங்களையும் அவற்றோடு தொடர்புடைய சம்பவங்களையும், சமாதான முன்னெடுப்பில் நோர்வே அரசினதும் வெளியுறவுத்துறையினதும் நிலைப்பாடுகளையும் விபரித்திருக்கின்றார்.
புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவனிடமிருந்து நோர்வேக்குத் தொலைபேசி அழைப்பு வந்தபோது, ஏற்கனவே புலிகள் முற்றுமுழுதாக இராணுவத்தின் முற்றுகைக்கு உட்பட்டுவிட்டனர் என அந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் எழுதுகின்றார்.
ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் போரை முடிவிற்குக் கொண்டுவருதல்?
போரினை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முடிவிற்குக் கொண்டுவருவது தொடர்பான கோரிக்கையைப் பல்வேறு தடவைகள் விடுதலைப் புலிகளிடமும் அரசாங்கத்திடமும் தாம் விடுத்திருந்ததாகவும், புலிகள் ஒவ்வொரு முறையும் அக்கோரிக்கையை நிராகரித்ததாகவும் சிறிலங்கா அரசாங்கம் முற்றுமுழுதாகப் புலிகளை அழித்தொழிப்பதை இலக்காகக் கொண்டிருந்ததாகவும் பதிவுசெய்கின்றார். இறுதிக் கட்டத்தில் தம்மாற் கொடுக்க முடிந்த ஒரே ஆலோசனை ‘வெள்ளைக் கொடி ஏந்தி, சமாதானத்திற்கான விருப்பத்தினை ஒலிபெருக்கியில் அறிவித்தபடி சரணடைவதே’ என்கிறார்.
வெள்ளைக் கொடியோடு சரணடைந்த புலிகளின் அரசியற் துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் உட்பட்ட சரணடைந்த போராளிகள் படுகொலை செய்யப்பட்டதும், புனர்வாழ்வுக்கென அனுப்பப்பட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதும் யாவரும் அறிந்ததே. வெள்ளைக் கொடியோடு சரணடையச் சொல்லி நோர்வேயே அறிவுறுத்தியது குறித்து சூல்ஹைம் இப்படிச் சொல்கின்றார்:
“இறுதிக் கட்டத்திற் புலிகள் சரணடைய விரும்புகின்ற தகவலைச் சிறிலங்கா அரசாங்கத்திற்குத் தெரிவித்தோம். அது சீரான முறையில் நடைபெறுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தினைக் கேட்டுக்கெண்டோம். அதற்குப் பின் சிறிலங்கா அரசிடமிருந்து எதுவித பதிலும் எமக்குக் கிடைக்கப்பெறவில்லை.”
இலங்கைத் தீவின் தமிழ் – சிங்கள இன, மொழி, அரசியல் வரலாற்றுப் பின்னணி குறித்த சிறு விபரிப்பினை வழங்கி, பிரித்தானிய வெளியேற்றத்திற்குப் பின்னர் முரண்பாடுகள் கூர்மையடைந்து, போர் வன்முறையாக வெடித்தமை பற்றியும் இந் நூலில் குறிப்பிடப்படுகின்றது.
சமாதானத்திற்காக தமிழர் நோர்வேயினை அணுகுதல்
சமாதான முன்னெடுப்புத் தொடர்பாகப் புலிகள் தரப்பிலிருந்து நோர்வேயை எவ்வாறு அணுகினர் – நோர்வே எப்படி அனுசரணை நாடாக உள்வந்தது – சமாதானப் பேச்சுவார்த்தைகள் எப்படித் தொடங்கப்பட்டு, நகர்த்தப்பட்டன என்பதைப் பதிவு செய்கின்றார்:
1998 இல் நோர்வேயில் இருந்த புலிகளின் பிரதிநிதிகள் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்பாகத் என்னைச் சந்தித்து, சமாதான முன்னெடுப்பினைத் தொடங்குவதற்கான ஒரு ஆலோசனையினை வெளியுறவு அமைச்சகத்திற்குத் தாம் கையளித்திருப்பதாகக் கூறினர்.
பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஏதுவாக, நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த புலிகளின் தலைமை ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் அவர்களை, நாட்டிலிருந்து (வன்னியிலிருந்து) வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்வதற்கு நோர்வேயின் உதவியை நாடியிருந்தனர்.
அதுவே அவர்கள் வெளியுறவு அமைச்சகத்திற்கு கையளித்த ஆலோசனை. சிறிலங்கா அரசின் அனுமதியின்றி பாலசிங்கத்தை நாம் நாட்டிலிருந்து வெளியேற்றுவது சாத்தியமில்லை. ஆனால் தாம் மிக இரகசியமாக சிறிலங்கா அரசாங்கத்துடனும் புலிகளுடனும் தொடர்புகளைப் பேணி ஒரு பொறிமுறையை உருவாக்க முனைந்ததாகக் கூறப்படுகின்றது. பாலசிங்கம் இலங்கையை விட்டு வெளியேறுவதற்குரிய பல்வேறு திட்டங்கள் தம்மால் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அவற்றை நிராகரித்துவிட்டது. இறுதியில் புலிகள் தமது சொந்த ஏற்பாடுகள் மூலம் பாலசிங்கத்தை வெளிநாட்டுக்கு அனுப்பினர். பின்னர் இலண்டனில் வசித்துவந்த அவருடன் தாம் தொடர்புகளைப் பேணியதாகப் பதிவுசெய்கின்றார்.
அமெரிக்கா மற்றும் இந்தியாவை அனுசரணை நாடாக அழைப்பது சாத்தியமற்றிருந்தது. இரு தரப்பும் தம்மைத் தொந்தரவு செய்யமுடியாத நோர்வே போன்ற ஒரு சிறிய நாட்டை விரும்பின. தாம் பயன்படுத்த விரும்பாத தருணத்தில் தூக்கியெறிவதுவும் அவர்களுக்கு இலகு என்பது இவ்விருப்பத்திற்குரிய காரணி என்ற பார்வையைச் சூல்ஹைம் வெளிப்படுத்துகின்றார்.
இலங்கையைப் பற்றித் தமக்கு மட்டுப்படுத்தப்பட்ட அறிதல் இருந்தமையால், அதன் அரசியல், வரலாறு மற்றும் கலாசாரம் சார்ந்த கற்றலுக்குத் தம்மை உட்படுத்தியுள்ளது நோர்வேத் தரப்பு. இரு தரப்பினையும் செவிமடுப்பதை முக்கிய அணுகுமுறையாக வரித்துக்கொண்டதோடு, இலங்கையைப் பற்றி தம்மைவிடக் கூடுதல் அறிவினைக் கொண்டிருந்த இந்தியா, அமெரிக்காவுடன் சமாதான முன்னெடுப்புகளில் தாம் தொடர்புகளைக் கொண்டிருந்தமையைக் குறிப்பிடுகின்றார். அமெரிக்காவையும் இந்தியாவையும் நாம் கருத்திலெடுக்கவும், பதிலளிக்கவும் வேண்டிய முக்கிய தரப்புகளாகக் கொண்டிருந்ததாக எழுதுவதோடு குறிப்பிட்ட சில நிகழ்வுகளையும் விபரிக்கின்றார்.
இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ஆசீர்வாதம்
இந்தியாவினதும் அமெரிக்காவினதும் ஆசீர்வாதம் இல்லாமல் நோர்வே சமாதான முயற்சிகளில் இறங்கவில்லை; மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தை நகர்வு குறித்த ஒவ்வொரு விடயங்களையும் இரு தரப்பிற்கும் அறிக்கையிட்டு வந்துள்ளது என்பது சர்வதேச அரசியல் தெரிந்த அனைவரும் அறிந்த விடயம். இதிலும் அதனை உறுதிப்படுத்துகின்ற சம்பவங்களை சூல்ஹைம் பதிவுசெய்துள்ளார்.
சமாதான முன்னெடுப்பில் நோர்வே ஈடுபடுகின்றது என்பதை அறிந்தவுடன் இலங்கைக்கான அன்றைய தூதுவர் யூன் வெஸ்த்பொர்க் மற்றும் சூல்ஹைம் ஆகியோர் நியூ – டெல்லிக்கு அழைக்கப்பட்டு அங்கு உயர்மட்டத் தலைமை இவர்களை விசாரணை செய்தமை விபரிக்கப்படுகின்றது. இம்முன்னெடுப்பில் இவர்களை அனுமதிக்கலாமா, கையிலெடுத்துள்ள பணிக்கு இவர்கள் தகுதியானவர்களா? என்பதற்கான ஒருவகை நேர்முகத் தேர்வு அச்சந்திப்பு எனத் தாம் உணர்ந்ததாகக் குறிப்பிடுகின்றார். தனக்கு என்றும் மறக்கமுடியாத ஒரு பாடம் அச்சந்திப்பு என்கிறார்.
அப்போதைய வெளியுறவுத்துறை ஆலோசகர் லலித் மன்சிங்கிடம் தாங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவரால் தாம் கிட்டத்தட்ட கிரிமினல் குற்றவாளி போன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறுகின்றார்.
“லலித் மன்சிங் சம்பிரதாயத்திற்காகக் கூடத் எம்மை வரவேற்கவில்லை. எம்மை இருக்கைகளில் அமரவைத்துவிட்டு, குற்றவாளிகள் போல் விசாரணையைத் தொடங்கினார். இலங்கையில் நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கின்றீர்கள்? அங்குள்ள நிலைமைகள் தொடர்பான புரிதல் ஏதும் உங்களுக்கு இருக்கின்றதா? இலங்கையில் நோர்வேயின் நலன்கள் என்ன? ஐரோப்பிய முட்டாள்களான உங்களால் அங்கு என்ன மாதிரியாகப் பங்களிக்க முடியும் என்று நினைத்தீர்கள்?”
அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சற்று நாகரீகமானவை, ஆனால் இதுதான் சாராம்சம். மரியாதைக்குரியவையாக இருக்கவில்லை. சிறு அளவிலான அறிமுக உரை கூட இருக்கவில்லை.
ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந் சிங்கிடம் அனுப்பப்பட்டதாகவும், அவர் இறுக்கம் தளர்ந்த ஒரு சகஜமான உரையாடல் மூலம் தமக்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் சூல்ஹைம் விபரிக்கின்றார்.
பிரபாகரனுடனான சந்திப்பு
10 ஆண்டு இடைவெளிக்குப் பின் அதாவது 1990 இற்குப் பின் பிரபாகரன் சந்தித்த முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி எரிக் சூல்ஹைம். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான முதலாவது சந்திப்பினையும் அதனைத் தொடர்ந்து அவருடன் இடம்பெற்ற சந்திப்புகளும் விபரிக்கப்படுகின்றன.
பிரபாகரனுடனான முதற்சந்திப்பு பத்தாண்டுகள் தொடர்ந்த சமாதான முயற்சிக்கு வித்திட்டதாகக் குறிப்பிடுகின்றார். பாரிய கொடூரங்களுக்கும் இராணுவ மேதமைக்கு ஊடாகவும் உலகிலேயே கூடுதல் சீரொழுங்குடைய எதிர்ப்பியக்கத்தினைக் கட்டமைத்த பிரபாகரனின் போராட்ட வாழ்வு, யாழ் மேயர் மீதான கொலையோடு தொடங்கியது எனக் குறிப்பிடும் சூல்ஹைம், பிரபாகரன் தொடர்பான தமது அபிப்பிராயத்தை இவ்வாறு வருணிக்கின்றார்:
“அவர் ஒரு தீவிரமான மனிதர். சமாதான முன்னெடுப்பினைத் தொடங்க விரும்பினார். பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு ஒத்துழைக்கக்கூடிய மனிதர் என்பது எமது அபிப்பிராயமாக இருந்தது. அவர் ஒரு புத்திஜீவி அல்ல, பெரிய தரிசனங்கள் அல்லது தூரப்பார்வை கொண்டவருமல்ல. ஆனால் உறுதியான பெறுபேறுகளை விரும்பிய ஒரு யதார்த்த மனிதர். கண்டிப்பான ஒரு ஆசிரியருடன் ஒப்பிடப்படக்கூடியவர்.”
பிரபாகரனுடனான பல்வேறு சந்திப்புகள் குறித்தும் அவருடைய இயல்புகள் குறித்தும் சில விடயங்கள் பகிரப்படுகின்றன.
சந்திப்புகளுக்குப் பின்னர் ஒன்றாக உணவருந்தும் வழக்கம் பற்றிக் குறிப்பிடும் சூல்ஹைம், பிரபாகரன் ஒரு திறைமையான பொழுதுபோக்குச் சமையற்காரர். போராளிகள் பரிமாறிய கறி வகைகள் மற்றும் மட்டி மீன் உணவு வகைகள் குறித்து அவரிடம் பெருமிதம் இருந்தது. குடும்பத்தைப் பற்றி அவர் அதிகம் பேசியதில்லை; திரைப்படங்கள் குறித்துப் பேசுவதில் அவருக்கு விருப்பம் அதிகம் என்கிறார்.
பிரபாகரனிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால், அவர் நோர்வேக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினார். போர் நடவடிக்கைகள் மற்றும் கொலைகளை நிறுத்துவதாக அவர் உறுதியளித்திருந்தார். அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆனால் எங்களுடைய உரையாடல்களுக்கும் கற்பனைக்கு எட்டாத போரின் கொடூரத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு வியக்கவைக்கவில்லை.
பாலசிங்கமும் சூல்ஹைமும்
இலங்கை அரசாங்கத்துடனும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனுமான நோர்வேயின் தொடர்பாடல்கள் வளர்ந்த விதம் மற்றும் தனக்கும் அன்ரன் பாலசிங்கத்திற்குமிடையிலான சந்திப்புகள், நட்புக் குறித்தும் சூல்ஹைம் பதிவு செய்கின்றார். பாலசிங்கத்துடனான நெருங்கிய உறவும் உரையாடல்களும் புலிகள் குறித்த நுண்ணறிதலுக்கு வழிவகுத்தது. “பாலசிங்கம் ஒரு போதும் தம்மிடம் பொய்யுரைத்ததில்லை. புலிகள் எவரையாவது கொலை செய்திருந்தால், புலிகளின் ஏனைய தலைவர்கள் எனின், அரசாங்கத்தில் பழிபோடுவர். ஆனால் பாலசிங்கம் ஒருபோதும் அப்படிச் செய்வதில்லை. மாறாக அக்கொலைகளுக்கான புலிகளின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும் என்பதை விளக்க முயற்சிப்பார். அது ஒரு யதார்த்த நோக்குநிலைசார் புரிதலுக்கு எமக்கு உதவின” என்கிறார்.
புலிகளின் அதிகப்படியான இராணுவ வலிமை 2000 – 2001 காலப்பகுதியில் நிலவியது. புலிகள் இராணுவ ரீதியில் பலவீனமான நிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்ததான ஒரு தவறான கருதுகோள் நிலவியது. பேச்சுவார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தித் தம்மைப் பலப்படுத்தும் நோக்கில் அவர்கள் பேச இணங்கியதான கருதுகோள் அது. ஆனால் உண்மை எதிர்மாறானது. 2001 காலப்பகுதியைப் போல் வேறெந்தக் காலத்திலும் புலிகள் அதிகபட்ச இராணுவ பலத்தினைக் கொண்டிருக்கவில்லை. 2000 ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து அரச படைகளை முற்றாக வெளியேற்றக்கூடிய விளிம்பில் புலிகள் நின்றனர். அடுத்த ஆண்டு இராணுவம் பாரிய படைநகர்வு நடவடிக்கையைத் தொடங்கியது. அது படு தோல்வியில் முடிந்தது. 2001 கோடையில் புலிகள் கொழும்பு விமானநிலையத்தை அதிசயிக்கத் தக்கவகையில் தாக்கி, 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அழிவினை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பங்குச் சந்தை வீழ்ச்சியும், பொருளாதாரம் சரிவும் ஏற்பட்டது.
இவற்றின் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கான ஒரு அழுத்தம் மக்கள் மத்தியிலிருந்தும் எழத்தொடங்கியது. 2001 இல் ரணில் விக்ரமசிங்க ‘புலிகளுடன் பேச்சுவார்த்தை, உடனடிப் போர்நிறுத்தம்’ என்பனவற்றைத் தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைத்துப் பிரதமரானார்.
நம்பிக்கையை ஏற்படுத்திய போர்நிறுத்த உடன்படிக்கை
நோர்வேயின் அப்போதைய வெளியுறவுச் செயலர் விதார் ஹெல்கசன் தலைமையிலான குழுவுடன் இரு தரப்புடனுமான நெருக்கமான தொடர்பாடல்கள் மூலம், போர் நிறுத்த உடன்படிக்கைக்கான வரைபினை, தான் எழுதியதாகக் குறிப்பிடுகின்றார் சூல்ஹைம். உடன்படிக்கை கைச்சாத்தானமை பெரும் நம்பிக்கையைத் தந்ததாகவும் குறிப்பிடுகின்றார். மேலும் பாதைத் திறப்பு, பாதுகாப்புத் தொடர்பான அச்சங்களின்றி மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யக்கூடிய புறநிலை தோற்றுவிக்கப்பட்டமை, இயல்பு வாழ்வு ஏற்பட்டமை போன்றன போர்நிறுத்த உடன்படிக்கையின் உடனடி விளைவுகள் என்கிறார். போர் நடவடிக்கைகள், கொலைகள், புலிகள் தரப்பில் பயங்கரவாதத் தாக்குதல்கள், அரசாங்கத்தரப்பில் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் என்பன போர் நிறுத்த உடன்பாட்டுக்குப் பின்னான ஒரு வருட காலத்திற்கு இடம்பெறவில்லை. பொருளாதாரத்தில் விரைவான வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தர உயர்வு என்பனவும் குறுகிய கால விளைவுகளாக அமைந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்குத் (Sri Lanka Monitoring Mission – SLMM) தலைமை தாங்குவதில் நோர்வேக்கு விருப்பம் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு சிறிய நாடு போர்நிறுத்தக் கண்காணிப்புத் தொழிற்பாட்டில் இருப்பதை விரும்பின. ஆதலால், தாம் ஸ்கன்டிநேவிய நாடுகளை உள்ளடக்கி அப்பொறுப்பினை ஏற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஆரம்பக்கட்டத்தில், குறிப்பாக போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான போதும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நகர்வுகளிலும், ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கா – பிரதமர் ரணில் விக்ரமசிங்க இடையிலான அதிகாரப்போட்டி காரணமாக, பேச்சுவார்த்தைச் செயற்பாடுகளிலிருந்து தான் புறக்கணிக்கப்பட்டதாகச் சந்திரிக்கா உணர்ந்ததாகவும், சமாதான முன்னெடுப்புகளின் ஆரம்பத்திலிருந்து சந்திரிக்கா அதற்குள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைத் தாமும் பின்னர் உணர்ந்து கொண்டதாகச் சூல்ஹைம் குறிப்பிடுகின்றார்.
உடனடி விளைவுகள் – தேக்கம்
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மனித உரிமைகள், குழந்தைப் போராளிகள் இணைப்பு நிறுத்தம், இராணுவத்தைத் திரும்பப் பொறுதல் (குறித்த சில தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து), பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு வழிவகுத்தது. போர்நிறுத்த உடன்படிக்கை, கடல் சார் நிலைமைகளை வரையறுக்கவில்லை. கடல் சார் வரையறைகள் தெளிவாக உள்ளடக்கப்படாமை உடன்படிக்கையின் பெரும் பலவீனமாக அமைந்தது. இலங்கை அரசாங்கம் புதிய ஆயுதக் கொள்வனவுக்கும் நவீனமயப்படுத்தலுக்குமான உரிமையைக் கோரியது. படைச்சமநிலையைப் பேணுவதற்காக அதே உரிமையைப் புலிகளும் கோரினர். ஆயுதக் கொள்வனவு, ஆயுதக் கடத்தல் சார்ந்து, பேச்சுவார்த்தைக் காலங்களில் கடற்பரப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூடு, மோதல்கள் பற்றிக் குறிப்பிடப்படுகின்றது.
கனடா, ஸ்பெயின் அல்லது இந்தியாவில் உள்ளது போன்ற அதிகப்படியான பிராந்திய சுயாட்சி அடிப்படையிலான தீர்வுக்கான வாய்ப்புக் குறித்து ஆராய்வதென்ற திருப்புமுனையான தீர்மானம் ஒஸ்லோவில் 2001 இல் எட்டப்பட்டது. இதுவே பேச்சுவார்ததைக்கூடாக எட்டக்கூடிய ஒரேயொரு தீர்வு என்பதைத் தொடர்புபட்ட அனைத்துத் தரப்புகளும் அறிந்திருந்தனர். புலிகளின் முற்றுமுழுதான இராணுவ வெற்றியினூடாகவே தனிநாடு சாத்தியப்படக்கூடியது. அரசாங்கத்தின் இராணுவ வெற்றியினூடாகவே கொழும்பின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட நாடு சாத்தியமாகும் வாய்ப்பிருந்தது.
சமாதான முயற்சிகள் தேக்கமடைந்து தோல்வியைத் தழுவிய வேறுபல காரணிகளைத் சூல்ஹைம் இந் நூலில் தொட்டுச் செல்கின்றார். பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப வருடங்கள் வெற்றிகரமாக நகர்ந்தன. 2003 இன் பிற்பகுதியில் அதிகம் கடலிலும் பின்னர் தரையிலுமாகப் பல தாக்குதல் சம்பவங்கள் நிகழத் தொடங்கின. 2003 இல் சந்திரிக்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தைத் திரும்பத் தன்வசப்படுத்தியமை, 2004 இல் கருணா – பிரபாகரன் பிளவு, அதனால் புலிகளின் பலம் கணிசமாக வீழ்ச்சியடைந்தமை எனவான சம்பவங்கள் பட்டியலிடப்படுகின்றன.
சுனாமி – மீள்கட்டமைப்பு உடன்படிக்கை – உச்ச நீதிமன்றத் தடை
சுனாமிப் பேரிடரின் பின்னான களநிலை சமாதானத்தை உருவாக்குவதற்கான ஒரு இறுதி வாய்ப்பினை வழங்கியிருந்தது. மீட்புப் பணிகளில் புலிகள் சிங்கள இராணுவத்தினருக்கு, முஸ்லீம் மக்களுக்கு உதவினர். சிங்கள இராணுவம் தமிழ் மக்களுக்கு உதவியது. 2005 பெப்ரவரியில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட சுனாமிக்குப் பின்னான மீள் கட்டமைப்புச் சார்ந்த உடன்படிக்கை (Post – Tsunami Operational Management Structure : P – TOMS) எட்டப்பட்டது. அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கான முற்றிலும் மாறுபட்ட புதிய சூழல் உருவாகியிருக்கும். இலங்கையின் தேசிய கட்டமைப்புகளுடன் இணைந்து பணியாற்றப் புலிகள் உடன்பட்டிருந்தமை இவ்வுடன்படிக்கையின் ஓர் அம்சம். ஆனால் அரசாங்கமும் ஜனாதிபதியும் தயங்கினர். பெப்ரவரியில் பெரும் ஆதரவைப் பெற்ற அந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது கடினமாகியது. மேலும், அந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இது சமாதான முன்னெடுப்புகளுக்கு எதிரான சிங்களத் தேசியவாதத்தின் ஓர் காய்நகர்த்தல். அதே கோடையில் புலிகள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைக் கொன்றனர். சூல்ஹைமின் வாதப்படி, சுனாமி உடன்படிக்கையில் அரசாங்கத்தின் தடுமாற்றமும், அதனைத் தொடர்ந்து கதிர்காமர் மீதான புலிகளின் கொலையும் நிரந்தரச் சமாதானத் தீர்வுக்கான இறுதி வாய்ப்பையும் வீணடித்த காரணிகளாகும்.
பின் – சுனாமி மீள்கட்டமைப்பு உடன்படிக்கை என்பது அடிப்படையில் மனிதாபிமான – மக்கள் நலன் சார் வாழ்வாதார, மறுவாழ்வு சார்ந்த உடன்படிக்கை. அத்தகைய உடன்படிக்கையையே உச்சநீதிமன்ற வழக்கு மூலம் செயலிழக்கச் செய்த சிங்களப் பெருந்தேசியவாதம் தமிழர்களுக்கான நிரந்தர அரசியற் தீர்வினை வழங்குமா என்ற கேள்வி அன்றைய காலகட்டங்களில் பரவலான விவாதத்தை உண்டு பண்ணியது. சிறிலங்கா அரசும் அதன் நீதித்துறையும் மனிதாபிமான உதவிகளையே தடுக்கும் போக்கினைக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு கவனிக்க வேண்டியது.
2005 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதைப் புலிகள் தடுத்திருக்காவிடில், ரணில் மீண்டும் நிச்சயமாகப் பதவிக்கு வந்திப்பார். தமிழர்கள் வாக்களிக்காத நிலையே மகிந்தவை வெல்ல வழிகோலியது. பேச்சுவார்த்தைகள் முறிந்துபோனதற்கும் மீண்டும் போர் கூர்மையடைந்ததற்கும் அது காரணியாகச் சுட்டப்படுகின்றது. இருதரப்பும் போரை விரும்பிய நிலையில் தாம் எதனையும் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கவில்லை என்று சமாதானத் தோல்விக்கான சூல்ஹைமின் முடிவுரை அமைந்துள்ளது.
புலிகளின் அணுகுமுறையும் தோல்வியும்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2006 இல் இறந்த பாலசிங்கம் சமாதான முன்னெடுப்பு வெற்றியளிக்காததையிட்டு ஏமாற்றமடைந்திருந்தார். பேச்சுவார்த்தைகளின் இயக்கியாகவும் அதன் முதன்மைக் கதாநாயகனாகவும் அவர் விளங்கினார். பாலசிங்கத்தின் மரணத்திற்குப் பின் புலிகள் தமது கடினமான சூழலிலிருந்து வெளிவருவதற்குரிய விளைவுத்தாக்கம் (அர்த்தபூர்வம்) மிக்க எந்தவொரு இராணுவ அல்லது அரசியற் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. நாளுக்கு நாள் பலம் இழக்கும் நிலைக்கே சென்றனர். அவர்களது ஆயுதக் கொள்வனது கடினமாகியது. கொழும்பில் தாக்குதல் நடாத்துவதற்குரிய இராணுவ பலம் குறைந்தது. இராணுவ ரீதியில் பலமிழந்தனர். புலிகளின் அரசியல் சிந்தனை பாலசிங்கத்திடமிருந்து வந்தவை. பாலசிங்கத்தின் மரணத்தின் பின் அவர்கள் முற்றுமுழுதான மரபுவழி இராணுவச் சிந்தனைக்குள் சென்றனர். எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு இராணுவப் பதில் இருந்ததாக நம்பினர். அது தோல்விக்கான தீர்ப்பினை எழுதியது.
மோசமான சிங்களத் தலைமையும் போர்க்குற்றங்களும்
முன்னரைவிட மிக மோசமான ஒரு சிங்களத் தலைமையையும் புலிகள் எதிர்கொள்ள நேர்ந்தது. மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் தம்மைக் கட்டுப்படுத்துவதை அனுமதிக்காமல் போரை நடத்திமுடித்தனர். சீனா, பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து பெருமளவு ஆயுதக் கொள்வனவுகளைச் செய்ததோடு இராணுவத்தை நவீனமயப்படுத்தினர். உலகின் ஏனைய பலம்மிக்க சக்திகளிடமிருந்து போருக்கான புலனாய்வு உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.
2008 மற்றும் 2009 இன் முற்பகுதி முழுவதும் விடுதலைப் புலிகளோடு நல்ல தொடர்பில் இருந்ததாகவும் புலித்தேவன் மற்றும் குமரன் பத்மநாதன் (கே.பி) ஆகியோருடன் நேரடித் தொலைபேசித் தொடர்பில் இருந்ததாகவும் குறிப்பிடும் சூல்ஹைம், போரை முறைப்படுத்தப்பட்ட வழியில் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாகத் தாம் இடையறாது முயற்சித்ததாகவும் கோடிட்டுக் காட்டுகின்றார். அமெரிக்கா, இந்தியா அல்லது ஐ.நா சார்பாகக் கப்பல்களை வன்னிக் கரையோரங்களுக்கு அனுப்பி மக்களையும் போராளிகளையும் மீட்கும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டமையும், போராளிகள் ஆயுதங்களைக் கையளித்து செஞ்சிலுவைச் சங்கம் அல்லது வேறு தரப்பிடம் முறையான பதிவுகளை மேற்கொள்வது குறித்தும் பேசப்பட்டது. அவ்வாறு செய்திருந்தால், சிறிலங்கா அரசாங்கத்தால் கொல்லப்படுவதைச் சாத்தியமற்றதாக்கியிருக்கலாம். பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகிய இருவரைத் தவிர ஏனைய அனைவரின் உயிர்களுக்கும் உத்தரவாதம் வழங்கலாம் என உறுதியாகத் தாம் நம்பியதாகவும் சூல்ஹைம் கூறுகின்றார்.
மகிந்த ஆட்சிபீடத்தின் வெள்ளைவான் கடத்தல்கள், அரசியல் எதிரிகள் – ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், இறுதிப்போரில் பொதுமக்கள் மீதான படுகொலைகள், போர்க்குற்றங்கள் பற்றியும் இந்நூலிற் குறிப்பிடப்படுகின்றது. போர்க்குற்றங்கள் ஏதோவொரு காலத்திலேனும் சட்டத்திற்கு முன் கொண்டுசெல்லப்படும் என்றும் பதிவுசெய்கின்றார்.
சிறிலங்கா அரசாங்கம் தனது இராணுவ வெற்றியை நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்குப் பயன்படுத்தவே இல்லை. நிரந்தரத் தீர்வினை எட்டுவதற்குத் தமிழர்களை நோக்கித் தன் கரங்களை நீட்டவில்லை. அதற்கு எதிர்மாறாகவே மகிந்த அரசு செயற்பட்டது. தமிழர்கள் தமது சொந்தத் தாயகத்தில் இரண்டதாம் தரப் பிரஜைகளாக வாழச் சம்மதிக்கமாட்டார்கள் என்கிறார் எரிக் சூல்ஹைம்.
சமாதானத் தோல்விக்கான காரணங்கள்
சமாதானத் தீர்வு வெற்றியளிக்காமைக்கு இரண்டு காரணங்களை முன்வைக்கின்றார். ஒன்று : பிரபாகரனுடன் நேரடியான தொடர்பாடல்களுக்குத் தாம் குறைந்தளவே அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடும் சூல்ஹைம், அதனாற் கூட்டாட்சி தொடர்பாகத் தாம் அவருக்குப் புரியவைக்க வாய்க்கவில்லை என்கிறார். பாலசிங்கத்தின் மரணத்திற்குப் பின்னர், பிரபாகரனுடன் இருந்தவர்கள் அவர் எவற்றைச் செவிமடுக்க விரும்பினாரோ அவற்றையே எடுத்துக்கூறினர். இரண்டு : சிங்கள உயரடுக்கு பல்கலாசார, பல்மத (இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டதொரு) அரசினை உருவாக்குவதற்குரிய பரந்த பார்வையைக் கொண்டிருக்கவில்லை. நாட்டின் இரண்டு கட்சிகளுக்கும் அதிகாரப் போட்டி மட்டுமே குறியாகவிருந்தன. அவை மேலும் புரிதலுடன் செயற்பட்டிருப்பின் நாடு வேறொரு நல்ல சூழலுக்குள் சென்றிருக்கும்.
இலங்கைத் தீவின் முரண்பாட்டுத் தரப்புகளுக்கிடையிலான நோர்வேயின் சமாதான முயற்சி குறித்த சூல்ஹைமின் இந்த அனுபவப் பதிவில் தனது அணுகுமுறைகள் குறித்தோ, நோர்வே மீதான சுயவிமர்சனங்கள் குறித்தோ எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. சமாதானத் தோல்விக்கான முற்றுமுழுதான பொறுப்பினை முரண்பாட்டுத் தரப்புகள் மீது மட்டுமே நோர்வே சுட்டிவந்துள்ளது. தாம் வெறுமனே அனுசரணையாளர்கள். தீர்வைக் கண்டடைந்திருக்க வேண்டியவர்கள் முரண்பாட்டில் நேரடியாகத் தொடர்புபட்ட இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளுமே எனவாக நோர்வேயினதும் சூல்ஹைமினதும் வாதங்கள் வெளிப்பட்டுள்ளன. நோர்வேஜிய ஊடக, ஆய்வு மட்டங்களிலும் நோர்வேயின் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான ஆழமானதும் விமர்சனபூர்வமானதுமான மீள்மதிப்பீடுகள் வெளிவரவில்லை.
மீளாய்வு அறிக்கை
2011 இல் அபிவிருத்திகளுக்கான நோர்வே திணைக்களமான நூறாட் (NORAD) இற்காக கிறிஸ்ரியான் மிக்கல்சன் ஆய்வகம் (Christian Michelsen Institute – CMI) மற்றும் School of oriental and African studies in London (SOAS) ஆகியன இணைந்து முன்னெடுத்த மீளாய்வு அறிக்கை வெளிவந்தது. இக் கட்டுரைக்கான ஒருவகை முடிவுரையாக அம்மீளாய்வு அறிக்கை குறித்த சில விடயங்களைப் பகிர்ந்து கொள்வது பொருத்தமெனக் கருதுகின்றேன். இலங்கைச் சமாதான முன்னெடுப்பில் நோர்வே மேற்கொண்ட தெரிவுகளை விவாதிப்பதும் மீளாய்வு செய்வதும் அவ்வாய்வின் பேசுபொருள். சமாதானத் தீர்வுக்குத் தடையாகப் பல்வேறு காரணிகளும் சூழல்களும் இருந்தன. நோர்வேயைத் தனியாக அதன் தோல்விக்குப் பொறுப்பாளியாக்க முடியாது என்பது அவ்வாய்வின் முடிவாக வெளிப்பட்டது. முரண்பாட்டில் தொடர்புபட்ட இருதரப்பும் சமசரத்திற்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இருக்கவில்லை என்பதோடு, இலங்கைத் தீவின் அரசியல் கலாசாரம் மற்றும் எதிர்பாராத பல்வேறு நிகழ்வுகளாலும் சமாதான முன்னெடுப்புச் சிதைந்ததாக அம்மீளாய்வு அறிக்கையில் சுட்டப்படுகிறது.
மதிப்பீட்டு அறிக்கையின்படி, இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றிற்கும், விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவியது. சர்வதேச நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களும் (பயங்கரவாதத்திற்கு எதிரான போர் உட்பட) இதில் ஒரு பங்கைக் கொண்டிருந்தன. பெரும்பாலான மேற்கத்தேய நாடுகள் புலிகளைக் கையாள்வதை, சர்வதேச நிலைமைகள் கடினமாக்கின.
விடுதலைப் புலிகள் பிளவுபட்டமையும், சர்வதேச ஆதரவை இழந்தமையும் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதகமாக இராணுவ அதிகாரச் சமநிலையை மாற்றியது. மகிந்த அரசாங்கம் (2005 முதல்) சீனா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் ஆதரவைத் திரட்ட முடிந்தமை, இராணுவ ரீதியில் இறுதித் தீர்வைக் காண அரசாங்கத்திற்கு உதவியது.
நோர்வே, ஒரு அனுசரணையாளராக மேற்குறிப்பிட்ட நகர்வுகளை எதிர்க்கவோ அன்றி மாற்றவோ கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒரு மூலோபாய ‘வழிவரைபடம்’ அல்லது சர்வதேசத் தரப்புகளின் வலுவான வலைப்பின்னல் இல்லாததால், சமாதான முன்னெடுப்பானது இரு தரப்பினரையும் விட்டுக்கொடுப்புகள் மற்றும் பொறுப்புக்கூறல்களுக்குள் நிர்ப்பந்திப்பதில் தோல்வியடைந்தது எனவும் அம்மீளாய்வு அறிக்கை வலியுறுத்தியிருந்தது.
அவ்வறிக்கையின் அடிப்படைகள் குறித்த சில விடயங்களும் கவனத்திற்குரியவை. அது முழுமையானதொரு பரிமாணத்தைக் கொண்ட அல்லது நடுநிலையான அறிக்கையாக எடுத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகளுடனேயே அது வாசிக்கப்பட வேண்டும். மதிப்பீட்டுக் குழுவிற்கு நோர்வே வெளியுறவு அமைச்சகம், நூறாட் ஆகியவற்றின் அனைத்து ஆவணங்களையும் மற்றும் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்ட நோர்வேத் தரப்பில் உள்ள அனைத்து நபர்களையும் முமுமையாக அணுக முடிந்துள்ளது.
ஆனால் இலங்கையின் முக்கிய நபர்களை ஆய்வுக் குழுவினால் அணுக முடிந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தலைவர்கள் பலர் உயிருடன் இல்லை அல்லது சிறையில் உள்ளனர். இலங்கை அரசாங்கத் தரப்பு நபர்களுடன் நேர்காணல்களை மேற்கொள்வதற்கான அனுமதி குழுவிற்கு வழங்கப்படவில்லை. எனவே ஆய்வுச் செயல்முறையில் ஏற்பட்ட இத்தகு முதன்மை ஆதாரங்களின் இழப்பை ஈடுசெய்ய, இரண்டாம் நிலை ஆதாரங்களை ஆய்வுக்குழு பயன்படுத்தியுள்ளது. ஊடகம், வெளிவந்த ஆய்வுகள், வெளியிடப்படாத அறிக்கைகள் போன்ற பல்வேறு இரண்டாம்நிலை ஆதாரங்களே அவையாகும். மேலும், சர்வதேச மற்றும் உள்ளகத் தரப்புகள், இலங்கை சார் நிபுணர்கள் மற்றும் அவதானிகளுடனும் அக்குழு நேர்காணல்களை மேற்கொண்டுள்ளது.
தொடரும்.