அறிமுகம்
கொவிட் – 19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, மற்றும் அரசியல் நெருக்கடிகளால் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார நெருக்கடி, கல்விச் செயற்பாடுகளை நேரடியாகப் பாதித்துள்ளது. பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பாடசாலைக் கல்வியைப் பொறுத்தவரை, 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட புதிய கல்விச்சீர்திருத்த அமுலாக்கம் தாமதமடைந்து செல்கிறது. பொதுப்பரீட்சைகள் பிந்திக்கொண்டு செல்கின்றன. பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது. பாடசாலைக் கல்வியாண்டு பிந்திக்கொண்டு செல்கிறது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களின் செலவீனம் அதிகரித்துச் செல்கின்றது. தனியார் வகுப்புக்களிற்கான (Private Tuitions) கட்டணம் உயர்வாகக் காணப்படுகிறது. பல மாணவர்கள், காலை உணவு உண்ணாமல் பாடசாலைகளுக்கு வருகிறார்கள். வாழ்க்கைச் செலவு மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்த போதும், மக்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை.
வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களின் வேதனத்தின் பெரும்பகுதி, அவர்களது போக்குவரத்திற்கே செலவாகி விடுகிறது. தற்காலத்தில், ஆசிரியப் பணி என்பது, பல்வேறு சவால்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பின்னணியில் கல்வி நெருக்கடி, கல்வி நெருக்கடியின் உலகளாவிய போக்கு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி கல்வியில் ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் நெருக்கடிகளைத் தாங்கக்கூடிய கல்வி முறைமைகளை உருவாக்குதல் ஆகிய விடயங்களை இந்த கட்டுரை ஆராய்கின்றது.
கல்வியில் நெருக்கடி (Crisis in Education)
உலகளாவிய கற்றல் நெருக்கடி என்பது, பாடசாலைக் கல்விக்கான அணுகலில் பாரிய அதிகரிப்பு காணப்பட்டபோதிலும், கற்றல் வெளியீடுகள் (Learning Outcomes) தாழ்ந்த மட்டத்தில் காணப்படுதலாகும். குறிப்பாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளில் இந்நிலைமை உயர்வாகக் காணப்படுகின்றது.
தற்காலத்தில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைவடைந்துள்ளது. குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் தங்கள் குடும்பத்தை பொருளாதார ரீதியாக ஆதரிப்பதற்காக, பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்றனர். பொருளாதார நெருக்கடியானது சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட பின்னணிகளைக்கொண்ட பிள்ளைகளை அதிகளவில் பாதிக்கிறது. ஏழை மாணவர்கள் பணக்கார மாணவர்களை விட 57 சதவீதம் அதிகமான கற்றல் இழப்பைச் (Learning loss) சந்திப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ள கல்வி
உலகளாவிய ரீதியில் கல்வியானது பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. அகதிகள் இடப்பெயர்வு, சுகாதாரம் மற்றும் காலநிலையால் ஏற்படும் பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை உயர்வாகக் காணப்படுகின்றது. 222 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கவீனமான குழந்தைகள் மற்றும் பெண்கள், பழங்குடிச் சமூகங்கள், இன மற்றும் மத ரீதியான சிறுபான்மையினர் ஆகியோர் நெருக்கடியான சூழல்களினால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 2022 ஆம் ஆண்டில் மட்டும், கட்டாய இடப்பெயர்வினால், 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தரமான கல்வி தேவைப்படும் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோராவர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்புகள்
இலங்கையின் வடமாகாணத்தில் வாழும் மக்கள், பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினைகள், காணி அபகரிப்பு, யுத்தப் பாதிப்புகள். யுத்தத்திற்குப் பின்னரான மனவடு, சமூகச்சீர்கேடுகள், அதிகரித்த மது மற்றும் போதைப்பொருள் பாவனை, அதிகரித்த வீதி விபத்துகள் மற்றும் மத ரீதியான முரண்பாடுகள் என்பவை அவற்றுள் முக்கியமானவையாகும்.
கொவிட் – 19 பெருந்தொற்று மற்றும் தொடர்ந்துவந்த பொருளாதார நெருக்கடி காரணமாக பல சவால்களை சமகாலத்தில் நாம் எதிர்கொள்கிறோம். எரிபொருட்களுக்கான நெருக்கடியை தொடர்ச்சியாக எதிர்கொண்டுள்ளோம். இதன் விளைவாக பல பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை விலைவாசி உயர்வு ஆகும். ஆனால் பலரின் வருமானம் மாறாமல் உள்ளது. இதன் விளைவாக, 2021 ஆம் ஆண்டு 13% ஆக இருந்த வறுமை வீதம் 25% ஆக (இரு மடங்காக) அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலைகள் நாள்தோறும் கிடுகிடுவென உயர்கின்றன. உணவுப் பணவீக்கம் 80 சதவீதமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தின் ஒருமாத வாழ்க்கைச் செலவீனம் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் என பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறையினர் தமது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். அரிசி, மா, சீனி, பருப்பு, பால்மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் என்றும் கண்டிராதவாறு உயர்வடைந்துள்ளன. மரக்கறிகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளன. கடலுணவுகள், முட்டை மற்றும் இறைச்சி என்பனவற்றின் விலைகளின் அதிகரிப்பால், சாமானிய மக்களால் அவற்றை வாங்கி உண்ண முடியாதவாறு உள்ளது. பெரும்பாலான இலங்கை மக்கள், தமது உணவைச் சுருக்கிக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொருளாதார நெருக்கடியால் பெரும் எண்ணிக்கையானவர்கள் தமது தொழில்களை இழந்துள்ளனர். அரசாங்க உத்தியோகத்தர்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. போக்குவரத்துச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதார நெருக்கடியால் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. புற்றுநோய்க்கான மருந்துகளைக்கூட நோயாளிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பிள்ளைகள் போசாக்கின்மையால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். போக்குவரத்துக் கட்டணங்களும் சடுதியாக உயர்ந்துள்ளன. ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக நோக்கின் ஒவ்வொரு பொருளின் விலையும் சராசரியாக மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மக்களின் அன்றாட வாழ்க்கையை அதிகளவில் பாதித்துள்ளது; மக்களில் ஒரு பகுதியினருக்கு உணவை வாங்க முடியாததாக ஆக்கியுள்ளது. குறிப்பாக பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கின்மை அதிகரித்துச் செல்கின்றது.
சமூக குற்றச்செயல்கள் அதிகரித்துச் செல்கின்றன. குடும்ப வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. பலர் நெருக்கடியின் விளைவுகளிலிருந்து தப்பிக்க ஏற்கனவே இந்தியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கியுள்ளனர். மேலும் சிலர் கடல்மார்க்கமான ஆபத்தான பிரயாணங்களை மேற்கொண்டு வெளிநாடு செல்கின்றனர்; கைதாகித் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இலங்கையில் பல்பரிமாண வறுமையில் (Multidimensional poverty) வாழும் பல குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர்.
பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கல்விக்கான அச்சுறுத்தல்
கல்விக்கான மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை (Millennium Development Goals) அடைந்ததாகக் கருதப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிந்தைய வெற்றிக் கதையாகக் கருதப்படும் இலங்கையின் இலவசக் கல்வி முறை, தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தாளின் விலை (Paper Cost) வேகமாக அதிகரித்து வருவதால், மாணவர்கள், குறிப்புகள் எடுக்கவும் வகுப்புப் பயிற்சிகளைச் செய்யவும் பயன்படுத்தும் பயிற்சிப் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்க முடியாது இடர்படுகின்றனர்.
பிள்ளைகள், பாடசாலைக்குச் செல்லும்போது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உடையணிந்து செல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிசமான இலங்கைப் பிள்ளைகள் காலணி பழுதடைந்ததால் தினமும் அழுது கொண்டே பாடசாலைக்கு சென்று வருகின்றனர். பாடசாலை எழுதுபொருட்களின் விலை அதிகரிப்பால் பெற்றோர்கள் தவிக்கின்றனர். இலங்கையின் தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் ஏழைப் பெற்றோர்களுக்கு பெருமளவு பணத்தை பிள்ளைகளின் கல்விக்காக ஒதுக்குவது என்பது பெரும் சவாலாக உள்ளது. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாமா, வேண்டாமா? என்று வேதனையுடன் சிந்திக்கின்றனர்.
சமகாலத்தில் இலங்கையின் பொதுக்கல்வியில் மேலும் பல கல்விசார் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன. பொதுப்பரீட்சைகள் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே காணப்படும் தேவையற்ற போட்டி மனப்பாங்குகளால், அவர்கள், அதிகளவில் மனவுளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழுமியக் குறைபாடுகளும் வன்முறைக் கலாசாரமும் அதிகரித்துச் செல்கின்றன. பிள்ளைகளின் ஆன்மீக நாட்டம், விளையாட்டு மற்றும் அழகியல் செயற்பாடுகளில் ஈடுபாடு என்பன குறைவடைந்து செல்கின்றன.
வடமாகாணத்தின் கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் பதின்மூன்று கல்வி வலயங்களும் முப்பத்தைந்து கல்விக்கோட்டங்களும் அமைந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்து பதினான்கு ஆண்டுகள் சென்றபோதும் 87 பாடசாலைகள் இன்னும் மீளத்திறக்கப்படவில்லை. அதேநேரம், மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக பல சிறிய பாடசாலைகள் மூடப்படும் ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளன. வலிகாமம் மற்றும் வவுனியா தெற்கு ஆகிய கல்விவலயங்கள் அதிக பாடசாலைகளைக் கொண்டு இயங்குவதன் காரணமாக அவற்றினை நிர்வகிப்பதும், பாடசாலைகளின் வெளியக மேற்பார்வையும் கடினமாகி உள்ளன.
பாடசாலைகளுக்கிடையில் மாணவர் பரம்பல் என்பது முக்கிய கல்விப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. பிரபல பாடசாலைகளில் அளவுக்கதிகமாக மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். இது தொடர்பான விரிவான ஆய்வு தேவைப்படுகின்றது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஆசிரியர் – மாணவர் விகிதம் திருப்திகரமாக காணப்படுகின்ற போதும் பாடரீதியான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தொடர்ச்சியாகக் கற்பிப்பதற்கான கல்விசார் மற்றும் தொழில்சார் தகைமையற்ற தொண்டர் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.
அதிகரித்துச் செல்லும் வேலைவாய்ப்பின்மை
தொழிற் கல்வியானது, தொழில்வாய்ப்பு, சுயதொழில், மற்றும் பொருளாதார உற்பத்தியை வளப்படுத்துகின்றது’ வறுமையை ஒழிப்பதற்கான முக்கியமான கருவியாகவுள்ளதுடன் தனியாள் உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது. வேலை உலகின் தேவைகளுடன் பாடசாலைக்கல்வி கலைத்திட்டத்தின் பொருத்தப்பாடு குறைவாகக் காணப்படுகிறது. பெரும்பாலான மாணவர்களும் பெற்றோரும் தொழில் வாய்ப்புகள் தொடர்பான விபரங்களை அறிந்திருக்கவில்லை; சுயதொழில், மாற்றீடான திறன்விருத்தி, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் வேலை உலகில் உள்ள பல்வேறுபட்ட தொழில்களின் விபரங்களை அறிந்திருக்கவில்லை.
இலங்கையின் வடபுலத்திலுள்ள திருமணக் கட்டமைப்பு மற்றும் சீதனம் வழங்கும் முறைமை என்பன அரசாங்க உத்தியோகத்தில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கால இளைஞர்கள் மற்றும் யுவதிகள், முப்படைகள் மற்றும் தாதியியல் போன்ற தொழில்களில் குறைவான ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். அல்லது முற்றாகப் புறக்கணிக்கின்றனர். இவை போன்ற காரணிகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துச் செல்கின்றது.
வாழ்க்கைத் தேர்ச்சிக் கல்வியின் போதாமை
வாழ்க்கைத் தேர்ச்சிக் கல்வி மற்றும் குடியுரிமைக் கல்வி ஆகிய பெயர்களால் பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இப்பாடங்கள் அன்றாட வாழ்க்கையின் தேவைகளையும் சவால்களையும் திறம்பட சமாளிக்க உதவுவதுடன் தகவமைப்பு, நேரான நடத்தைக்கான திறன்கள், சுயபிரதிபலிப்பு, திறனாய்வுச் சிந்தனை, பிரச்சனை விடுவித்தல், ஆளிடைத் தொடர்புகள், நம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய திறன்களை விருத்திசெய்யவும் உதவி புரிவன.
உயர் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் புலமையாளர்கள் தொடர்ச்சியாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்; நீதியற்ற வரி அறவீடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தரமான உயர் கல்வியை வழங்குவதற்கான நிதி வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாகக் காணப்படுகின்றன.
மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு (Learning Loss)
மாணவர்கள் நீண்டகாலம் கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டுடன் தொடர்பில்லாமல் இருந்தமையால், அவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகும் ஆபத்து அதிகமாகக் காணப்படுகின்றது. நிகழ்நிலைக் கல்வி மூலம் தேர்ச்சி அடைந்த மாணவர்கள், விடுபட்ட மாணவர்கள், கிராம வாழ்க்கைக்கு மீண்ட மாணவர்கள் மற்றும் நெறிபிறழ்வான மாணவர்கள் ஆகிய நான்கு வகையான மாணவர்களை கொவிட் – 19 பெருந்தொற்று உருவாக்கியுள்ளது.
கொவிட் – 19 பெருந்தொற்றால் கல்வியில் நாம் இழந்தவை
ஆரம்ப பிள்ளைக் கல்வி (Early Childhood Education) மற்றும் ஆரம்பக்கல்வி (Primary Education) மாணவர்களின் படிமுறையான எழுத்து மற்றும் வாசிப்புத் திறன்கள் குறைவடைந்து காணப்படுகின்றன. மாணவர்களின் கணிதத் திறன்கள் (Mathematical Skills) குறைவடைந்து காணப்படுகின்றன. மாணவர்களின் ஒழுக்கம் வீழ்ச்சிக்கு உட்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன்கள் (Learning skills) குறைவடைந்து காணப்படுகின்றது. மாணவர்களின், நீண்டநேரம் பாடசாலைகளில் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து கற்கும் ஆற்றல் குறைவடைந்து கொண்டு செல்கிறது. பரீட்சைகளில் மாணவர்களின் அடைவு மட்டம் குறைவடைந்து கொண்டு செல்கிறது. மாணவர்களின் சமூகத் திறன்கள் (Social skills) வீழ்ச்சியடைந்து செல்கின்றன. இணைப்பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடாமையால், உடல் மற்றும் உளப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வடமாகாண பொதுப் பரீட்சைப் பெறுபேறுகளில் காணப்படும் தளம்பல் நிலை
பொதுப் பரீட்சைகளின் பெறுபேறுகளில் தளம்பல் நிலையில் அல்லது வீழ்ச்சி நிலையில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன.
- நீண்டகால யுத்தம் ஏற்படுத்திய பாதிப்புகளும் யுத்தத்திற்கு பின்னரான சூழல் ஏற்படுத்திய பாதிப்புகளும் – உடல் மற்றும் உளப் பாதிப்புகள், பாடசாலைகள் மற்றும் பௌதீக வளங்களின் அழிவு, இடப்பெயர்வு.
- வடமாகாண முன்பள்ளிக்கல்வி வழங்கலில் காணப்படும் குறைபாடுகள் – முறையான முன்பள்ளிக் கொள்கை மற்றும் கலைத்திட்டமின்மை, பயிற்சியற்ற ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்குப் போதிய வேதனம் வழங்கப்படுவதில்லை. மற்றும் முன்பள்ளிகளின் மேற்பார்வையிலுள்ள குறைபாடுகள்.
- மாணவர்கள் தொடர்பான காரணிகள் – விழுமியக்குறைவு, அதிகரித்த சமூக ஊடகப் பாவனை மற்றும் வன்முறைக் கலாசாரம்.
- ஆசிரியர்கள் தொடர்பான காரணிகள் – அர்ப்பணிப்புக் குறைவு, தூரப் பணியிடங்களில் பணியாற்றத் தயங்குதல், பாடஅறிவு மற்றும் கற்பித்தல் அறிவுக்குறைவு மற்றும் இற்றைப்படுத்தல் குறைவு.
- பாடசாலை தொடர்பான காரணிகள் – மனித மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறை.
- கல்வி நிர்வாகம் தொடர்பான காரணிகள் – நிர்வாகத்திறன் குறைவு மற்றும் தொடர் வாண்மைத்துவமின்மை.
- குடும்பம் தொடர்பான காரணிகள் – பிள்ளைகளின் கல்வியில் அக்கறையற்ற பெற்றோர்கள், அதிகரித்த பொழுது போக்குகள் மற்றும் தென்னிந்தியச் சினிமா மற்றும் தொடர் நாடகங்கள்.
- சமூகம் தொடர்பான காரணிகள் – மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாசாரம்.
- அரசியல் மற்றும் திட்டமிட்ட புறக்கணிப்புகள் – கல்வியில் இன ரீதியான, மத ரீதியான, மொழி ரீதியான மற்றும் அரசியல் ரீதியான புறக்கணிப்புகள்.
கொவிட் – 19 பெருந்தொற்று, முன்பள்ளிச் சிறார்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள்
முன்பள்ளிச் சிறார்களிடத்தில், கற்றல் இழப்பு (Learning loss) ஏற்பட்டுள்ளது. அண்ணளவாக இரண்டு வருடங்கள் முன்பள்ளிகள் எதுவும் நடைபெறவில்லை. முன்பள்ளிப் பிள்ளைகளின் கணிதத்திறன் மற்றும் மொழித்திறன் விருத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் சகமாணவர்கள் மற்றும் ஆசிரியருடனான இடைத் தொடர்புகள் குறைவாகக் காணப்பட்டன. வீட்டில் அதிகளவிலான தொலைக்காட்சிப் பாவனை மற்றும் கைத்தொலைபேசிப் பாவனை காரணமாக பிள்ளைகள் பல்வேறுவிதமான பாதிப்புகளுக்கு உட்பட்டனர். வாசிப்பு மற்றும் எழுத்துத் திறன்கள் குறைவடைந்து சென்றன. பிள்ளைகள் பல்வேறுவிதமான உடல் மற்றும் உளப் பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.
கொவிட் – 19 பெருந்தொற்றுக் காரணமாக, உலகளாவிய அளவில் மக்களின் உளநலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாக, குடும்ப மற்றும் சமூக வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்கின்றது. இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
பாடசாலைகளில் இருந்து மாணவர் இடைவிலகல்
பல காரணங்களால் மாணவர்கள் பாடசாலையை விட்டு இடைவிலகுகின்றனர். தாழ்கல்வி அடைவுகள், நிதிசார் பிரச்சினைகள், வீட்டில் சகோதரர்களைப் பராமரித்தல் மற்றும் வீட்டு வேலைகளைச் செய்தல், கொவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, வறுமை மற்றும் கல்வியின் அணுகலும் கிடைப்பனவும், தொழில்களில் ஈடுபடுதல், பாடசாலைகளில் கேலி மற்றும் கிண்டலுக்கு உட்படுதல், மன அழுத்தத்திற்கு உட்படுதல், எதிர்பாராத வகையில் கருவுறுதல், சுதந்திரமின்மை மற்றும் பாடசாலை வரவின்மை ஆகியவற்றை மாணவர்கள் பாடசாலையைவிட்டு இடைவிலகுவதற்கான முக்கியமாக காரணங்களாகக் குறிப்பிட முடியும்.
இங்கு தரம் ஒன்றிலிருந்து தரம் ஒன்பதுவரை வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகள் பல இயங்குகின்றன. இவற்றிலிருந்து தரம் ஆறுக்காக ஒரு பகுதி மாணவர்கள், பிற பாடசாலைகளில் தம்மை இணைத்துக்கொள்கின்ற போதும் எஞ்சியவர்களில் ஐம்பது சதவீதமான மாணவர்கள், எந்தவொரு பாடசாலையிலும் தம்மை இணைத்துக்கொள்ளாத நிலைமை காணப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவினையுறவு குறைவடைந்துள்ளமையால், மாணவர்களுடன் அதிபர், ஆசிரியர்கள் நெருக்கமற்ற நிலையில் இருக்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக தாழ் அடைவுகளை பெற்றுக்கொண்டு கல்வி மீதான வெறுப்பில் உள்ள மாணவர்களை தொடர்ந்தும் கற்றல் செயற்பாடுகளில் உள்ளீர்க்க முடியாத கையறு நிலைமை காணப்படுகின்றது.
மாணவர்களாக இருக்கும் போதே வருமானமீட்டுவதற்கு கிராமங்களில் பல்வேறு தொழில்கள் காணப்படுகின்றன. இவ்வாறான தொழில்களில் மாணவர்கள் ஈடுபடுகின்றபோது பெற்றோரும் அதற்கு ஆதரவளிக்கின்றமை கல்வி மீதான நாட்டத்தை குறைப்பதற்குக் காரணமாகின்றது. க.பொ.த சாதாரணதரத்தில் மூன்றிலொரு சதவீதமானவர்கள் சித்தியடையாவிட்டாலும், அவர்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுவதால் மாணவர் இடைவிலகலை சாதகமாகப் பார்க்கின்ற தரப்பினரும் உள்ளனர். இவ்வாறு பாடசாலையை விட்டு இடைவிலகுபவர்கள், சமூகக் கற்றவாளிகளாக மாறக்கூடிய ஏதுநிலையும் காணப்படுகின்றது. பாடசாலை இடைவிலகல்களினால் வேலைவாய்ப்பின்மைச் சதவீதம் அதிகரிக்கிறது. தாழ் வருமானமட்டநிலை ஏற்படும்.
பாடசாலை மாணவர்களின் இடைவிலகலைத் தடுப்பதற்காக காணப்படுகின்ற அரசப் பொறிமுறைகள் நடைமுறையில் தோல்விகண்டு விட்டன. பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இடைவிலகினால் அவர்களை மீளிணைப்பதற்காக வலயக்கல்வி அலுவலகத்திலும் பிரதேச செயலகத்திலும் தலா ஒவ்வொரு அலுவலர்கள் உள்ளனர். ஆனால் இந்த அலுவலர்களின் செயற்பாடுகள் வெறுமனே சம்பிரதாயபூர்வமாக இருக்கிறது.
கட்டாயக் கல்விக் குழு உள்ளிட்ட கட்டமைப்புகள் காணப்பட்டாலும், கொவிட் – 19 இன் பின்னரான காலத்தில் ஏற்பட்டுள்ள சடுதியான மாணவர் இடைவிலகல் நிலைமைகளை அவதானித்து, அதற்கான விசேட நிலைமைகளின் கீழான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.
இடைவிலகும் மாணவர்கள் தொடர்பில் பாராமுகமான நிலைமைகள் நீடிக்குமாக இருந்தால் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சமூகவிரோதச் சக்திகள் இடைவிலகிய மாணவர்களைக் கருவியாகப் பயன்படுத்துவதற்கான அதிகளவிலான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இவ்வாறானவர்களை வன்முறைக் குழுக்கள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் முகவர்கள் இலகுவாக கையாள்வதால் அவர்கள் நாளடைவில் சமூகத்திற்குப் பேராபத்தானவர்களாக மாறிவிடுவார்கள்.
அதிகரித்து வருகின்ற போதைப்பழக்கம்
தற்கால ஆய்வுகளின்படி இலங்கையில் 2.7 சதவீதமான கட்டிளமைப் பருவத்தினர் போதைக்கு அடிமையானவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கான காரணிகளாக புகைப்பிடித்தல், மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை, தாழ்வான பாடசாலை அடைவுகள், பெற்றோரின் புறக்கணிப்பு, குடும்பத்தின் தொழிற்பாடற்ற நிலை, துஸ்பிரயோகத்திற்கு உட்படல், பெற்றோரின் குறைவான அல்லது அளவுக்கு அதிகமான கட்டுப்பாடு மற்றும் பெற்றோரின் விவாகரத்து என்பன காணப்படுகின்றன.
சவால்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலை
இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தமது எதிர்காலத் தொழில் மற்றும் கல்விக்கான தயார்படுத்தல்களிலும் தமது வாழ்க்கையை அனுபவிப்பதிலும் ஈடுபாட்டுடனுள்ளனர். சமூகப் பிரச்சனைகள் மற்றும் குடும்ப விவகாரங்களில் குறைந்த கவனம் செலுத்துகின்றனர். முதியோர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றனர். கணிசமான அளவிலான இளையோர், தமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். உளத் தாக்கங்கள் அல்லது நெருக்கீடுகளுக்கு இலகுவில் உள்ளாகின்றனர். தற்கொலை மற்றும் தொடர்பாடல் குறைபாடுகள் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர்.
நெருக்கடியான சூழலில் சுய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வழிமுறைகள்
நாம் இந்தக் கஷ்டமான சூழலில் இருப்பதைக்கொண்டு மாற்றீட்டுப் பொருட்களை தயாரித்து வாழவேண்டும். வருமானம் தரக்கூடிய மாற்று வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். கடந்த யுத்த காலத்தில் வெற்றிகரமாக வாழ்ந்த அனுபவம் எமக்கு உண்டு. ஆனால் எமது பிள்ளைகள் அந்த வாழ்க்கை முறைக்குத் தயாராக இல்லை. எமது மாற்றமடைந்த நுகர்வுக் கலாசாரம், பொருளாதாரத் தடைகளை வெற்றிகொள்ளத் தடையாக உள்ளது.
வீடுகள் தோறும் வீட்டுத்தோட்டங்களை அமைப்பதை ஒரு சம்பிரதாயமாக அல்லாமல் ஒரு புரட்சியாகவே முன்னெடுக்க வேண்டும். தரிசு நிலங்கள் அனைத்திலும் விதைக்க வேண்டும்; பயிரிட வேண்டும். கோழிவளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் அனைவரும் ஆர்வம்காட்ட வேண்டும். எமது பிரதேச வளங்களைப் பயன்படுத்தி உள்ளுர் உற்பத்திகளைப் பெருக்க வேண்டும்.
கடற்கரையில் கொட்டப்படும் கடல் உணவுக்கழிவுகளைப் பயன்படுத்தி விலங்குணவு (மாஸ்) உற்பத்திகளை மேற்கொள்ளமுடியும். திண்மக்கழிவுகளை திறம்பட முகாமைசெய்து சேதன உரங்களைத் தயாரித்து வீட்டுத்தோட்டங்களுக்குப் பயன்படுத்த முடியும். பெருமளவிலான உணவுப்பொருட்கள் வீடுகளிலும் விழாக்களிலும் வீணடிக்கப்படுகின்றன. அவற்றினைச் சிறந்த முறையில் முகாமை செய்ய வேண்டும். பனம் உற்பத்திப் பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும்.
நெருக்கடியைத் தாங்கக்கூடிய கல்வி முறைகளை உருவாக்குதல் (Build crisis – resilient education systems)
பிள்ளைகள் மற்றும் இளையோரின் உரிமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நெருக்கடியைத் தாங்கக்கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க வேண்டும். அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து, நல்வாழ்வு, போசணை, சுத்தமான குடிநீர், மற்றும் சுகாதாரம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். வன்முறை, பாலியற் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிலிருந்து பிள்ளைகள் மற்றும் இளையோர் பாதுகாப்புப் பெற வேண்டும்; கற்பவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.
இலங்கையில் காலத்தின் தேவையாகவுள்ள பெற்றோருக்கான கல்வி
சமகாலச் சவால்கள் நிறைந்த சூழலில், பிள்ளைகளை பூரண வளர்ச்சியுடன் மற்றும் சமநிலை ஆளுமையுடன் வளர்த்தெடுப்பதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆங்காங்கே தமக்குள் கதைத்துக்கொண்டிருந்தாலும், பொது வெளியில் ஆரோக்கியமான உரையாடல்கள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. கல்வியில் முன்னேறிய நாடுகளில் பெற்றோருக்கான கல்விக்கு அதிக முக்கியத்துவமளிக்கப்படுகின்றது. இலங்கையிலும் சில பாடசாலைகள் இதனைச் சிறப்பாக முன்னெடுக்கின்றன.
பெற்றோருக்கான கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வழிமுறைகள்
பாடசாலைகளில் வாரத்தில் ஒருநாள், மாலை வேளையில் பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இணைந்த கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டை வகுப்பாசிரியர் முன்னெடுத்தல் வேண்டும். தமது பிள்ளைகளின் வளர்ப்புத் தொடர்பாக ஒரே வகையான சவால்களை எதிர்கொள்கின்ற பெற்றோர்களை ஒன்றாக வைத்து வழிகாட்டல் வழங்கப்படலாம்.
பிள்ளைகளின் வளர்ப்புத் தொடர்பாக பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெற்றோருக்கு சீர்மியம் வழங்க வேண்டும். மேலும் பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இணைந்த வழிகாட்டலை வழங்க வேண்டும். பெற்றோர் மற்றும் அவர்களின் பிள்ளைகள் இணைந்து இலக்கு நிர்ணயம் (Goal setting) செய்ய வேண்டும். சிறார்கள் மற்றும் கட்டிளமைப் பிள்ளைகளுக்கான விளையாட்டு, அழகியல் மற்றும் ஆன்மீகச் செயற்பாடுகளை பாடசாலையில் மட்டுமல்லாது சமூக மட்டத்திலும் முன்னெடுக்க வேண்டும். பிள்ளை வளர்ச்சி மற்றும் கட்டிளைமைப் பருவ விருத்தி தொடர்பான துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல்களை பாடசாலைகளிலும் சமூக மட்டத்திலும் ஒழுங்கமைக்க வேண்டும்.
பெற்றோருக்கான கல்வியை ஒழுங்கமைத்து வழங்கக்கூடிய ஆற்றலுள்ள நிறுவனங்களாக பாடசாலைகள், பழயை மாணவர் சங்கங்கள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கல்வி நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், சனசமூக நிலையங்கள், மாதர் சங்கங்கள் மற்றும் விளையாட்டுக்கழகங்கள் என்பன காணப்படுகின்றன.
பெற்றோருக்கான கல்வியை ஒழுங்கமைத்து வழங்குவதிலும் பல சவால்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பால் பெற்றோர்களை ஈர்ப்பதிலுள்ள சிரமங்கள், பெற்றோர் கல்வி தொடர்பான விழிப்புணர்வின்மை, பங்குதாரர்களிடையே ஒற்றுமையுணர்வின்மை, எல்லாப் பெற்றோருக்கும் இதில் பங்குகொள்ள நேரமின்மை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களை இணைத்துப் பணியாற்றுவதிலுள்ள சவால்கள் என்பன காணப்படுகின்றன. எமது கல்விசார் பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதில் பெற்றேர்கள் முக்கியமான பங்குதாரர்களாவர். பெற்றோர்களை வளப்படுத்துனூடாக அவர்களின் பிள்ளைகளை வளப்படுத்தலாம். இதன்மூலம் ஒட்டுமொத்த சமூகமும் நன்மையடையும்.
பிள்ளைகளின் உளநல மேம்பாட்டுக்கான வழிமுறைகள்
பிள்ளைகளின் மனவெழுச்சி ஆரோக்கிய நிலை, அவர்களின் உடல்நலத்தை பேணுவதற்கும் அவசியமாகும். பிள்ளைகள் தெளிவாகச் சிந்திக்கவும், சமூகத் திறன்களை விருத்தி செய்யவும் மற்றும் புதிய திறன்களை கற்றுக்கொள்ளவும் சிறந்த உளநலம் அவசியமானதாகும். பெரும்பாலான பிள்ளைகள், சிறந்த உள நலத்தைக் கொண்டிருக்கின்றனர்.
பரிகார நடவடிக்கைகளை நாம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும். உளவள ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகளை பரவலாக முன்னெடுக்க வேண்டும். ஆன்மீகச் செயற்பாடுகள், தியானம் மற்றும் பஜனைச் செயற்பாடுகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன. உள்ளக மற்றும் வெளியக விளையாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபடுவதன் மூலம் உள ஆரோக்கியத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம். இசை, நடனம், நாடகம் மற்றும் ஓவியம் போன்ற அழகியற் செயற்பாடுகள் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி கொண்டவை. வீட்டுத்தோட்டம் அமைத்தல், வாசிப்பு மற்றும் எழுத்தாக முயற்சிகள் போன்றவை எமது உள நலனை மேம்படுத்தும். நல்ல நண்பர்கள், வளர்ந்தோரிடமிருந்து கிடைக்கக்கூடிய ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் என்பன பிள்ளைகளிடம் தன்னம்பிக்கை, உயர்ந்த சுயகணிப்பு மற்றும் ஆரோக்கியமான மனவெழுச்சி நிலை என்பவற்றை ஏற்படுத்துகின்றன. உள ஆரோக்கியமான பிள்ளையின் வாழ்க்கை நேர்மயமானதாகவும் தரமானதாகவும் அமையும். மேலும் அவர்கள் வீட்டில், பாடசாலையில் மற்றும் சமூகத்தில் சிறப்பாகத் தொழிற்படுவர்.
அன்பு, நல்லிணக்கம் மற்றும் தேர்ச்சிகளை பிள்ளைகளிடையே விருத்தி செய்தல் வேண்டும். நேர்மயமான மற்றும் பாதுகாப்பான பாடசாலைச் சூழலை உறுதிசெய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு நேர்மயமான நடத்தைகளையும் தீர்மானமெடுத்தலையும் கற்பிக்க வேண்டும். பிள்ளைகளிடையே மற்றையவர்களுக்கு உதவும் பண்பை ஊக்கப்படுத்த வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்படும் உளச் சுகாதாரப் பிரச்சனைகள் மற்றும் அதன் அறிகுறிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வூட்ட வேண்டும்.
கிராமப்புறப் பாடசாலைகளை வளப்படுத்தல்
நாம் மற்றயவர்களைப் பார்த்து போட்டி, பொறாமை கொள்ளக்கூடாது. எமது கிராமங்களில் இருக்கும் பாடசாலைகள் மிகவும் முக்கியமானவை. தமது வீட்டிற்கு அருகே இருக்கும் பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதன் மூலம், உடல் அசதி உள்ளிட்டவற்றைத் தவிர்த்து கற்றலில் ஈடுபாடு கொள்ள முடியும். அத்துடன் தற்காலத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் முடியும். ஒவ்வொரு பாடசாலைகளும் சிட்டுக்குருவிகள் வாழுகின்ற அருமையான கூடுகளே. ஒவ்வொரு பிரதேச மக்களும் தனித்துவமான பண்பாட்டை மற்றும் சமய விழுமியங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றைக் கட்டிக்காத்து கல்வியை மேம்பாடடையச் செய்வதில், பிரதேசப் பாடசாலைகள் அதிகளவில் பங்காற்ற முடியும்.
வடமாகாணப் பொதுக்கல்வி மேம்பாட்டுக்கான சிபாரிசுகள்
பாடசாலைகளுக்கிடையில் மாணவர் பரம்பல் சீர்செய்யப்படல் வேண்டும். பரீட்சை அடைவுகளுக்கு அப்பால், மாணவரின் அறிவு, திறன் மனப்பாங்கு மற்றும் ஆளுமை விருத்திக்கு பங்களிக்கும் செயற்பாடுகளுக்கு பாடசாலைகளும் பெற்றோர்களும் முக்கியத்துவமளிக்க வேண்டும். பெற்றோர்களும் சமூகமும் ‘பிரபல பாடசாலை’ (Popular School) என்ற போலி மாஜையிலிருந்து விடுபட வேண்டும். தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர் பரம்பலைச் சீராக்க வேண்டும். அதே போன்று கல்வி வலயங்களுக்கிடையில் ஆசிரிய வளம் சமமாகப் பகிரப்பட வேண்டும். திறமைமிக்க கல்வி நிருவாகிகள், அதிபர்களை பொருத்தமாக இடப்படுத்தல் செய்ய வேண்டும். பெற்றோர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகம் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் ஆன்மீகக் கல்விக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்
இந்த இடர் காலத்தில், கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாடு எம் அனைவருக்கும் உள்ளது. இதில் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகம் கூடிய அக்கறை எடுக்க வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தமது கிராம மாணவர்களின் கல்விக்கு, இச் சந்தர்ப்பத்தில் அதிகளவில் உதவ வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன். பின்வரும் சவால்கள் வெற்றி கொள்ளப்பட வேண்டும்:
- பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட பிள்ளைக்கும் கல்வியில் சமவாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- கிராமப்புற மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் கல்வியை நோக்கி ஈர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும்.
மாற்ற முகவர்களின் வகிபாகம் (Role of Change Agents)
இந்தக் கல்விக்கான போராட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்தான் முன்களப் பணியாளர்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது உடல் மற்றும் உள ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். கல்வி அதிகாரிகளும் சமூகமும் வழிகாட்ட வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும். சில வகுப்புக்களை பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்கள் முன்மாதிரியாக, எடுத்துக்காட்ட வேண்டும். அப்போது, ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தாமாக முன்வந்து செயற்படுவார்கள். நெருக்கடியான சூழ்நிலைகளில் கற்றல் – கற்பித்தலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லல் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு முறையான வழிகாட்டல் மற்றும் பயிற்சி வழங்க வேண்டும்.
எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள்
தற்போதைய இடர்கால நெருக்கடியில் எங்களிடம், விடைகளைக் காட்டிலும் வினாக்களே அதிகமாக உள்ளன. இங்கே ‘கண்டுபிடிக்கப்படவில்லை’ என்ற வார்த்தைக்கு இடமில்லை. நெருக்கடியில் நாங்கள் அனைவரும் கற்போராக இருக்க வேண்டும். எமது வரலாற்றை எடுத்துப் பார்த்தால், நாம் எதிர்நோக்கிய சவால்கள் அதிகம்; நெருக்கடிகள் அதிகம். அத்தனையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டவர்கள் நாம்; அவற்றிலிருந்து மீண்டவர்கள் நாம்.