இலங்கையின் உயர்கல்வியில் வட்டுக்கோட்டைக் குருமடம்
இலங்கையில் உயர்கல்விக்குரிய வரலாறு மிக நீண்டது. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இயங்கிய கிறிஸ்தவ திருச்சபைகளும், உள்நாட்டு சமய மறுமலர்ச்சி இயக்கங்களும், அரசினால் முன்னெடுக்கப்பட்ட கல்விசார்ந்த நடவடிக்கைகள் பலவும் பொதுக்கல்வியின் தேவையை உணரச் செய்திருந்தன. கிறிஸ்தவ மிஷனரிகள் ஏற்கெனவே தமது சமயப் போதனையுடன் விரிவான கல்வி மேம்பாட்டுக்கான அத்திவாரத்தையும் இட்டுவந்தன.
வட்டுக்கோட்டைக் குருமடம் (Batitcotta Seminary : 1823 – 1850) இலங்கையில் இருந்த கிறிஸ்தவக் கல்வி நிறுவனமாகும். வட்டுக்கோட்டைக் குருமடம் அமெரிக்க இலங்கை மிஷன் அமைப்பால் (American Board of Commissioners for Foreign Missions – ABCFM) யாழ்ப்பாணக் குடாநாட்டில் வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் ஜூலை 2, 1823 இல் தொடங்கப்பட்டது. 1846 இல் உலகைத் தாக்கிய கொலோரா பெருந்தொற்றுக் காரணமாக இது 1855 ஆம் ஆண்டில் மூடப்பட்டது. பின்னர் 1867 இல் மீண்டும் திறக்கப்பட்டு, ‘யாழ்ப்பாணக் கல்லூரி’ என பெயர் வழங்கப்பட்டது.
மதப்பிரசாரகரும் மருத்துவருமான ஜான் ஸ்கட்டர் (John Scudder Sr.) அவர்களின் அமைப்புக்குத் துணையமைப்பாக இது முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர்களில் டேனியல் பூர் முதன்மையாவர். அவரே இதன் முதல் தலைவராகவும் இருந்தார். அந்நிறுவனமும் அதனோடு இணைந்த மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிரீன் (Samuel Fisk Green : 1822 – 1884) மேற்கொண்ட மருத்துவக் கல்லூரி முயற்சிகளும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் உயர்கல்வி வரலாற்றின் அடித்தளமாயின.
அமெரிக்காவில் இருந்த கிறிஸ்தவர்கள், ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு பத்து டொலர் வீதம் அனுப்ப ஒப்புக்கொண்டு, 200 பேர் வரையில் பணம் அனுப்பினர். அந்த நிதிப் பின்புலத்திலேயே வட்டுக்கோட்டைக் குருமடம் உருவாக்கப்பட்டது. வெவ்வேறு மிஷன் பள்ளிகளில் படித்த 120 மாணவர்களில் சிறந்த 40 பேர் இதில் சேர்க்கப்பட்டார்கள். மாவட்ட நீதிபதி மோயார்ட் (Moyart) என்பவரின் இல்லம் 1500 டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்டு இந்த செமினரி (குருமடம்) தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது அமெரிக்க மிஷன் செமினரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் ஹென்றி ஹொய்சிங்டன் தலைவராக இருந்தபோது 1846 இல் தான் ‘பட்டிக்கோட்டா செமினரி’ (வட்டுக்கோட்டைக் குருமடம்) எனப் பெயரிடப்பட்டது. 1823 மார்ச் மாதம் 22 ஆம் தேதி டேனியல் பூர் வட்டுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்து அங்கே ஆண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். அதை உயர் கல்விக்கான பட்டம் அளிக்கும் ஒரு கல்லூரியாக வளர்த்தெடுக்க டேனியல் பூர் விரும்பினார்.
ஆனால், 1827 இல் அமெரிக்க மிஷனரிகளுக்கு ஆதரவாக இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் ரொபர்ட் பிரவுன்டிரிக் பதவி விலகியதும், அவருக்குப் பதிலாக ஆட்சிக்கு வந்த எட்வர்ட் பான்ஸ், அமெரிக்கர்கள் மீது கொண்டிருந்த தனிப்பட்ட விரோத மனப்பான்மையினால், வட்டுக்கோட்டை செமினரி மேலும் விரிவடையலாகாது என்றும், புதிய அமெரிக்க மிஷனரிகள் நாட்டுக்குள் வரக்கூடாது என்றும் தடையுத்தரவு பிறப்பித்தார். வட்டுக்கோட்டை செமினரியை ஓர் உயர்கல்வி நிறுவனமாக ஆக்க டேனியல் பூர் விரும்பி விண்ணப்பித்தபோது, இலண்டன் மிஷன் சார்பில், அப்படி உயர்கல்வி நிறுவனம் அமைக்க எண்ணம் இருப்பதாகவும், அமெரிக்க மிஷனின் சேவை தமக்குத் தேவையில்லை என்றும் அவருக்குப் பதிலளிக்கப்பட்டது. 1827 இல் தென்பகுதியில் கோட்டை என்னுமிடத்தில் சி.எம்.எஸ் சபையினர் ஓர் உயர்கல்வி நிறுவனத்தை தொடங்கினர். அதில் எட்வர்ட் பான்ஸ் கலந்துகொண்டார். ஆங்கில அரசு, ‘கல்லூரி’ தொடங்க அனுமதி மறுத்ததால் கல்லூரி என்னும் பெயருக்கு பதிலாக ‘செமினரி’ என்னும் பெயருடன் இக்கல்வி நிலையம் தொடங்கப்பட்டது.
வட்டுக்கோட்டை குருமடம் ஆசியாவில் உருவாக்கப்பட்ட முதல் கிறிஸ்தவ உயர்கல்வி அமைப்பாகும். இதற்குப் பின்னரே கோட்டையில் சேர்ச் மிஷன் செமினரி 1827 இல் தொடங்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பின் வெஸ்லியன் செமினரியும் (பின்னர் மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது), 18 ஆண்டுகளுக்குப் பின் சுண்டுக்குளி செமினரியும் (இப்போது செயின்ட் ஜோன்ஸ் கல்லூரி) தொடங்கப்பெற்றன. இவை யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட காலத்தில் அளவிலும் செயலிலும் கல்கத்தாவின் கேரி கல்லூரிக்கு (Carey College in Serampore) அடுத்தபடியாக இருந்தது என ஆய்வாளர் கலாநிதி சீலன் கதிர்காமர் குறிப்பிடுகிறார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆறுமுக நாவலரின் புலமைச் செயற்பாடுகளும், சேர். பொன் இராமநாதனது கல்வி முயற்சிகளும், சி.வை. தாமோதரம்பிள்ளை, கரோல் விஸ்வநாதபிள்ளை போன்றோரின் கல்வி சார்ந்த முயற்சிகளும் உயர்கல்வியில் தமிழ் மொழியின் இருப்பை நிலைகொள்ளச் செய்யும் ஏற்றங்களை இயக்கின. “தமிழ்ச் சூழலில் இடம்பெற்று வந்த பண்டிதர் புலமை மரபானது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் சார்ந்த உயர்கல்வி நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து இயக்கிவந்தது” என்று பேராசிரியர் சபா. ஜெயராசா தனது நூலில் குறிப்பிடுகிறார். (ஜெயராஜா, சபா., ‘பல்கலைக்கழகக் கல்வியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளர்ச்சியும்”, அல்வாய் : ஜீவநதி வெளியீடு, 2024).
தென்னிலங்கையில் சமகால உயர்கல்வி முயற்சிகள்
மேலைத்தேச உயர் கல்வித்துறையைப் பின்பற்றி உயர் கல்விக்கான ‘கொழும்பு அக்கடமி’ என்ற நிறுவனம் 1835 இல் உருவாக்கப்பட்டது. அதுவே பின்னர் 1881 இல் ‘கொழும்பு ரோயல் கல்லூரி’ ஆக பரிமாணம் பெற்றது. 1870 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மருத்துவக் கல்லூரியும் இலங்கை சட்டக் கல்லூரியும் இயங்கத் தொடங்கின. இலங்கை கல்வித் திணைக்களத்தினால் 1893 இல் உருவாக்கப்பட்ட அரச தொழில்நுட்பப் பாடசாலை 1906 ஆம் ஆண்டு இலங்கை தொழில்நுட்பக் கல்லூரி என்று பெயர்மாற்றம் பெற்றது.
இலங்கையில் 1939 இல் நிறுவப்பெற்ற கன்னங்கரா சிறப்புக்குழு, அவ்வேளையில் இலங்கைக்கான கல்வி விரிவாக்கல் பணிகளில் ஈடுபட்டது. இலங்கைப் பல்கலைக்கழகம் தொடர்பான 1942 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க சட்டவாக்கத்தின் அடிப்படையில் சுயாதீனமான இலங்கைப் பல்கலைக்கழகமானது கொழும்பில், இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியையும், மருத்துவக் கல்லூரியையும் ஒன்றிணைத்து 942 மாணவர்களுடன் உருவாக்கப்பட்டது. 1952 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்ட வேளை, பேராதனை – கொழும்பு ஆகிய இரு வளாகங்களைக் கொண்டதாக இலங்கைப் பல்கலைக்கழகம் இயங்கத் தலைப்பட்டது.
1956 இல் தனிச்சிங்களச் சட்டம் அமுலாக்கப்பட்ட வேளை தமது அரசியல் வெற்றிக்கு தோள்கொடுத்து வந்த பௌத்த பிக்குகளை திருப்திப்படுத்தும் நோக்கில் அப்போதைய பிரதம மந்திரியாகவிருந்த S.W.R.D பண்டாரநாயக்க, வித்தியோதய மற்றும் வித்தியாலங்கார பிரிவினாக்களுக்கு பல்கலைக்கழக அந்தஸ்தைக் கொடுக்கும் வகையிலான சட்டமொன்றினை 1958 இல் நிறைவேற்றினார்.
தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம்
தனிச்சிங்களச் சட்டத்துடன் 1956 இல் எழுந்த பௌத்த சிங்கள மேலாதிக்க எழுச்சி, தமிழர்களுக்கு எதிரான இன வன்முறையாக மடைமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் கல்வித் தரத்தின் மூலம் தமிழர்கள் தமது அடையாளத்தை பாதுகாப்பதற்கும் சமூக மேலுயர்ச்சியை காண்பதற்கும் என ‘தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம்’ ஆனி 1956 இல் செயலாற்றத் தொடங்கியது. தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் செயலாற்றத் தொடங்கிய சமகாலத்தில் ‘தேசிய மொழிகளின் மூலம் உயர்தர கல்வி புகட்டுவது’ பற்றி ஆராய அரசாங்கம் ஒரு குழுவை நியமித்திருந்தது. அக்குழுவின் முடிவுகளில் ஒன்று தமிழர்களின் உயர்கல்விக்கான தலையெழுத்தை மாற்றிப்போட்டதென்பது இன்று வரலாறாகி விட்டது. இலங்கையில் உயர்தரக் கல்வி வசதிகளை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அவற்றை யார் யாருக்கெல்லாம் வழங்கவேண்டும் என்றும் அக்குழுவினர் அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். மாணவரின் திறமையை நோக்காது, சனத்தொகையை அடிப்படையாக வைத்தே இலங்கையில் உயர்கல்வி வழங்கப்படுதல் வேண்டுமென்று அக்குழு பரிந்துரைத்திருந்தது. இப்பரிந்துரை மேற்படி அறிக்கையில் கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது.
“மேலும் சமூகங்களின் சிறப்புகளுக்கு ஏற்ப உயர்தரக் கல்வி அளிப்பது உகந்ததாகையால், சிங்களப் பல்கலைக்கழகங்களும் தமிழ்ப் பல்கலைக்கழகங்களும் அமைதல் தேவையாகின்றது. அப்பொழுதுதான் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒவ்வொரு தமிழ் மாணவனுக்கும் ஆறு சிங்கள மாணவர் பயில்தல் முடியும்”.
குழுவினர் இம் முடிவை எட்டுவதற்குப் பின்புலமாக அமைந்திருந்தது சமகாலத்தில் பல்கலைக்கழகக் கல்வி பெற்றுவந்த தமிழ் – சிங்கள மாணவர்களின் விகிதாசாரமாகும். 1954 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் பயில அனுமதிபெற்ற 2434 மாணவர்களில் சிங்கள மாணவர்கள் 1461 பேரும், தமிழ் மாணவர் 872 பேரும், பிற சமூகத்தவர் 101 பேரும் இருந்துள்ளனர்.
இலங்கையின் முன்னோடிக் கல்வியாளரான வித்யாஜோதி ஆ.வி. மயில்வாகனம் (1906-1987) அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறிவியற் பீடத்தின் தலைவராகப் பணியாற்றியவர். ‘இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் 1957 இல் இவர் சிறு பிரசுரம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கிய வரலாற்றுத் தகவல்களில் சிலவற்றை இங்கு மீள்பதிவாக்க வேண்டியுள்ளது (குறிப்பு: அமரர் ஆ.வி. மயில்வாகனம் தனது நூலை வெளியிட்ட காலகட்டம் 1957 என்பதை வாசகர் கவனத்திற்கொள்ள வேண்டும்).
1. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதற்கு தமிழ் மாணவர் பெரும்பாடு படுகின்றனர். இடம் கிடைப்பது வெகு கடினம். இதனால் உயர் கல்விக்காக இந்தியப் பல்கலைக்கழகங்களை தமிழர்கள் நாடுகின்றனர். இன்று 1500 இற்கு மேற்பட்ட தமிழ் மாணவர்கள் இந்தியாவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்துக்கொண்டிருக்கின்றனர். அங்கும் அவர்களுக்கு இடம் கிடைப்பது கடினமாகவுள்ளது. இதனால் பல இலங்கைத் தமிழ் மாணவர்கள் தகுதி இருந்தும் உயர் கல்வியைக் கற்கத் திண்டாடுகின்றனர். இதனால் நமக்கென தமிழ்ப் பல்கலைக்கழகமொன்று தேவையாகின்றது.
2. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் மாணவர்களின் வாழ்க்கை, தமக்குப் புறம்பான பண்பாட்டுச் சூழலில் ஏதோ வெறுக்கப்பட்டவர்கள் போல, அமைந்துள்ளது. இந்நிலை மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரிய வகுப்பையும் பாதித்துள்ளது. நமது சமுதாயத்தின் எதிர்காலத் தலைவர்களாக வரக்கூடிய இளஞ் சந்ததியினர் தமது கல்வியை ஐதீகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்ற சூழலில் பெறுதல் மிக மிக அவசியம்.
3. அரசாங்கப் பதவிகளில் தமிழரின் திறமை பலியாகின்றது. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைப் போக்கைத் திருத்தியமைக்க உதவுவதுடன், அவர்களது உள்ளத்துக்குப் புத்துயிரூட்டும் ஆற்றல் வாய்ந்த நிலையமாக எமது தமிழ்ப் பல்கலைக்கழகம் அமையவேண்டும். வெகு காலமாக நம்மவர்கள் அரச உத்தியோகங்களை நம்பி வாழ்ந்துவிட்டனர். ஐரோப்பியரின் வருகைக்கு முன்னர் எம்மவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்புற்றிருந்தனர். ஆயர்வேத வைத்தியம், வங்கியமைப்பு, உழவுத்தொழில், வணிகம், கலைப்பணிகள், கப்பலோட்டத் தொழில், கடற் தொழில் முதலிய பல துறைகளில் வெற்றிகரமாக இயங்கினர். இன்று எமது ஆற்றலையும் புத்திக் கூர்மையையும் திறமையையும் முற்றிலும் அரசாங்க சேவையில் செலவுசெய்கிறோம். இப் படுகுழியிலிருந்து எமது சமூகத்தை மீட்கத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உதவிசெய்ய வேண்டும்.
4. மனித குலத்தை உய்விக்கும் பல அரிய உளப்பண்புகளை எம் முன்னோர் வளர்த்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக எமது ஒழுக்கத்தை வகுத்துவந்த திருக்குறள், நாலடியார் முதலிய நூல்கள் அவ்வுண்மைகளைக் கொண்டுள்ளன. இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் இவற்றையெல்லாம் கவனியாமல் வாழ்கின்றனர். இன்று எமது இளைஞர்களுக்குத் தேவையான பண்புகள் யாவை? நன்றும் தீதும் கண்டறியும் ஆற்றல், செயலாற்றவல்ல திடசித்தம், மலைபோல வரும் துன்பங்களைக் கண்டஞ்சாமை, ஒழுக்க உயர்வு முதலிய உயர்ந்த பண்புகளை நமது சமூகத்தில் வளர்த்தல் வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் பண்புகள் எமது இளைஞர்களுக்கு உறுதுணையாக நிற்கவல்லன. வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப அமைந்த ஒரு பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய பண்புகளைப் பேணி வளர்த்தல் இயலும்.
தனது நூலில், வித்யாஜோதி ஆ.வி. மயில்வாகனம் அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அமைவிடம் வடக்கு அல்லது கிழக்கில் இருக்க வேண்டும் என்கின்றார். அத்துடன் அது பேராதனைப் பல்கலைக்கழகம் போல தனித்தியங்கும் பல்கலைக்கழகமாகவா அல்லது, இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களைப் போல பல உறுப்புக் கல்லூரிகளைக் கொண்ட பல்கலைக்கழகமாகவா அல்லது, இணைக்கப்பெற்ற பல கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகமாகவா அமைய வேண்டும் போன்ற கேள்விகளை எழுப்புகிறார். அதற்கான தீர்வாக, “சில கல்லூரிகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகமே எமக்கேற்றது. இவ்வுறுப்புக் கல்லூரிகள், யாழ்ப்பாணம், வவுனியா, திருக்கோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமையப் பெறுதல் வேண்டும். பொறியியற் கல்லூரி திருக்கோணமலையிலும், விவசாயம் – மிருக வைத்தியம் பயிற்றும் கல்லூரி வவுனியாவிலும், கலைப்பகுதி – பொது விஞ்ஞானத்துறை பயிற்றும் கல்லூரி மட்டக்களப்புப் பகுதியிலுள்ள வந்தாறுமூலையிலும், தமிழ்ப் பிரதேசத்தின் மிகப்பெரிய வைத்தியசாலையை யாழ்ப்பாணம் பெற்றுள்ளதால் வைத்தியக் கல்லூரியை யாழ்ப்பாணத்திலும் அமைத்தல் நலமெனத் தோன்றுகிறது” என்ற தனது கருத்தை முன்வைக்கின்றார்.
மேலும் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக தேவைப்படும் பெருநிதியை தமிழ்ச் சமூகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சிகள், அரசாங்கம் இம்முயற்சிக்கு ஏதும் வகையில் தடைவிதித்தால் அடுத்த கட்ட நடவடிக்கை, தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டங்களை இலங்கை அரசு அங்கீகரிக்காவிட்டால் என்ன செய்வது, பல்கலைக்கழகத்தின் முக்கிய இலட்சியம், தமிழர் வரலாற்று நூல் ஒன்றின் தேவைக்கு முன்னுரிமை வழங்கல், பல்கலைக்கழகத்தின் போதனாமொழி என்ன? போன்ற இன்னோரன்ன விடயங்களையும் தனது நூலில் இவர் விபரித்துச் செல்கின்றார். (மயில்வாகனம், ஆ.வி., ‘இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்’, கொழும்பு 10: வீரகேசரி பிரஸ், 1957).
தமிழ் பல்கலைக்கழக இயக்கம் தொடங்கப்பட்டு அது திருக்கோணமலையிலேயே அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக தமிழ் பல்கலைக்கழகம் அமையாமலேயே இழுபட்டு முடிந்து போன கதையானது. தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தின் அரசியற் பின்புல வரலாறு பற்றி பி. இரயாகரன் (தமிழரங்கம் 3.3.2001) தனது இணையத்தளத்தில் விரிவான பதிவொன்றை எழுதியுள்ளார். அவர் குறிப்பிட்ட சில கருத்துகளை சுருக்கமாகக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.
“தமிழ்ப் பல்கலைக்கழகம் இயங்குவதற்கு அரசு ஆதரவு வேண்டும், எனவே தமிழரின் ஆட்சியதிகாரமான ‘சுயாட்சிக்காக’ தமிழர் வாக்குப் போட வேண்டும் என்றனர். சுயாட்சிக் கோரிக்கையை இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் பல்கலைக்கழகம் மூலமும், மக்கள் மத்தியில் கொண்டு சென்றது. தமிழ் பல்கலைக்கழகம் என்பதை இனவாதக் கோரிக்கையாகவும், தங்கள் இனவாதத் தேர்தல் அரசியலில் தமிழ் மொழி வாக்குகளைப் பெறும் குறுகிய இனவாத அரசியலுக்காகவுமே முன்வைத்தனர். 1950 இல் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உணர்ச்சிகரமான இன அரசியலுக்காக முன்னிறுத்தியது. இப்படி இலங்கைத் தமிழரசுக் கட்சி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழை முன்னிறுத்திய போது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தனக்கான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள, 1959 இல் ‘இந்துப் பல்கலைக்கழகத்தை’ முன்னிறுத்தத் தொடங்கியது. இவ்விரு கட்சிகளினதும் அரசியல் முரண்பாடானது, 1972 வரை கூர்மையடைந்தே வந்தது.”
1950 களில் கருவாகி வளர்ந்த தமிழ் இனவாதம் முன்வைத்த தமிழ்ப் பல்கலைக்கழகம், 1956 இல் சிங்கள ஆட்சிமொழிச் சட்டத்துடன் அரசியல் ரீதியாக வீரியம் பெற்றது. தொடர்ச்சியாக தமிழினவாதப் பிரச்சாரத்தை முன்னெடுக்க, தமிழ்ப் பல்கலைக்கழக கோசத்தை முடுக்கிவிட்டது. 17.03.1957 இல் சுதந்திரன் பத்திரிகை, ‘இஸ்லாமிய இலக்கிய நூல்கள் பெருமை பெற தமிழ்ப் பல்கலைக்கழகம் அவசியம்’ என்ற தலைப்பில் ‘தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்படுமாயின் சிறப்புமிக்க இஸ்லாமிய நூல்கள் பன்மடங்கு மதிப்பைப் பெறும்’ எனப் பொருள்படும் கட்டுரையைப் பிரசுரித்து, முஸ்லிம் மக்களை இனரீதியாக – மதரீதியாக தமிழினவாதம் மூலம், தன்னுடன் அடையாளப்படுத்தி வாக்குகளைப் பெற முனைந்தது.
1960 களில் இனரீதியான தமிழ்ப் பல்கலைக்கழகத்தை திருக்கோணமலையில் கட்டத் தொடங்கினர். தமிழினத்தின் பெயரில் நிதியைத் திரட்டினர். இப்படிக் கட்டத் தொடங்கிய தமிழ் பல்கலைக்கழகம், வரலாறு கடந்து காணாமல் போயிருக்கின்றது. 10.06.1962 திகதியிடப்பட்ட சுதந்திரனில் ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது.
“திருமலைப் பிரதேசத்தில், உப்புவெளியில் 70 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, கட்டிட அலுவல்கள் தொடக்க ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றது. திருமலைப் பட்டின எல்லைக்குள் 5.5 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளது. விவசாயக் கல்லூரியின் ஒரு பகுதிக்கான கட்டிடம் முடிவடைந்த நிலையில் உள்ளது.”
இதே நிலையில் 1959 ஏப்ரலில் திருமலையில் துறைமுக வீதியில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க காணியொன்று வாங்கப்பட்டதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன. 1959 மே மாதத்தில் தங்கள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அமைக்க, தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தினர், பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் அவர்களின் தலைமையில் திருக்கோணமலையில் அடிக்கல் நாட்டினர். கட்டிட நிதிக்கு நிதிச் சேகரிப்பும் தொடங்கப்பட்டது. அதே வேளை 1959 ஜூலையில் கல்வி மந்திரியைச் சந்தித்து யாழ்ப்பாணத்தில் ஒரு வைத்தியக் கல்லூரி நிறுவும்படியும் அவர்கள் வேண்டியிருந்தனர்.
இரயாகரன் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிடுகையில், “இன – மத அடிப்படையில் 1950 களில் பல்கலைக்கழகத்தை கோரிய அரசியல்வாதிகள் 1960 களில் தாம் கட்டத் தொடங்கிய தமிழ் பல்கலைக்கழகத்துடன், தங்கள் இனவாத கோஷத்தை முன்வைக்க முடியாது கைவிட்டனர் என்கிறார். 1965 இல் அரசுடன் இணைந்து ஆட்சியமைத்த காலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது, மீளவும் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கையை முன்வைத்தனர். இதன் மூலம் அரசுடன் முரண்பட்டு வெளியேறும் அரசியல் நாடகத்தை தொடங்கிய போது, 1960 இல் கட்டி, பின்னர் காணாமற் போன ‘தமிழ் பல்கலைக்கழகம்’ குறித்து இவர்கள் மூச்சே விடவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழகம் குறித்து தங்கள் கடந்தகாலம் எதையும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் 1947 முதல் வெளியிட்டு வந்த சுதந்திரனே, தமிழ் இனவாதத்தையும் – தமிழரசுக்கட்சி அரசியலையும் பிரச்சாரம் செய்து வந்தது. இப் பத்திரிகையிலிருந்து, இவர்கள் உருவாக்கிய இனவாத தமிழ்ப் பல்கலைக்கழகக் குறிப்புகளையும் – ஆதாரங்களையும் பெருமளவில் பெற முடிகின்றது”.
மற்றுமொரு சுதந்திரன் (09.10.1960) இதழில் ‘தமிழ்ப் பல்கலைக்கழகம் நமது காலத்தில் நிச்சயம் வந்தே தீரும்’ என்ற தலையங்கத்தின் கீழ், காணாமற் போன தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று இருந்ததற்கான பல தரவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவென புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் சின்னத்தம்பி, தனக்கு முன்பாக பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம் முன்னெடுத்த முயற்சிகள் குறித்த தகவல்களைப் பட்டியலிட்டுள்ளார்.
இதன் சாரம், “1956 யூன் 6 இல் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வேண்டும் என்ற கோரிக்கைகளை இல்லாதாக்கினர். திருக்கோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கத்தைத் தோற்றுவித்து, அது பற்றிய பிரச்சாரம் தமிழ் பேசும் மக்கள் வாழ் பிரதேசங்கள் எங்கும் பரப்பப்பட்டு, அதனை அமைக்க பிரதேச குழுக்கள் உருவாக்கப்பட்டன.” என்பதாகும். இதே நாளில் தான் (6.6.1956) இலங்கையின் ஆட்சிமொழியாக சிங்களம் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம் 11.10.1956 இல் தாங்கள் அமைக்கும் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு அரசாங்க உதவியைப் பெறும் முகமாக, பிரதமரைச் சந்திக்க முடிவு செய்து, 14.01.1957 அன்று, அன்றைய பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கவைச் சந்தித்தது. தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை, இன அடிப்படையில் அமைப்பதற்கு மறுப்பு தெரிவித்த பண்டாரநாயக்க, இனவாதம் அல்லாத பல்கலைக்கழகத்தில் கலாச்சார, மத, மொழி பட்டப்படிப்பிற்கான முயற்சிகளுக்கு ஆதரவு தரமுடியும் என்றார். தமது முயற்சிக்கு ஆதரவு பெறும் வண்ணம் மீண்டும் 18.10.1957 இல் பிரதமரைச் சந்தித்தனர். இதையடுத்து பிரதமர் பண்டாரநாயக்கா ஆணைக்குழு ஒன்றை அமைப்பதாக அறிவித்தார். அதன்படி கவர்னர் ஜெனரல் சேர். ஒலிவர் குணதிலக்கா அவர்கள் பெப்ரவரி 1958 இல் கலாநிதி ஜோசப் நீட்ஹாம் அவர்களது தலைமையில் ஆணைக்குழு (Needham Commission) ஒன்றை நியமித்தார். மார்ச் 1958 இல் இவ்வாணைக்குழு தனது விசாரணையைத் தொடங்கியது. ‘Colombo Telegraph’ பத்திரிகையில் (28.7.2013) எஸ். ரட்ணஜீவன் எச்.ஹூல் அவர்களும் ‘Needham Commission’ அறிக்கை பற்றி விபரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி தமிழ் அரசியல்வாதிகள் திருகோணமலையில் (கிழக்கில்) தமிழ் மக்களிடம் தமக்கு ஆதரவைத் திரட்டிக்கொள்ளும் நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை அமைக்கும் முன்னோடி நடவடிக்கைகளைத் தொடங்கினர். மறுபக்கத்தில் யாழ்ப்பாணத்தவரைத் திருப்தி செய்ய, யாழ்ப்பாணத்தில் மருத்துவப் பல்கலைக்கழகத்தைக் கோரினர். தமிழ் காங்கிரஸ் இதற்குப் போட்டியாக, 1959 நவம்பரில், இனரீதியான தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் பதில் இந்துப் பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் அமைக்கக் கோரினர். தத்தமது வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்வதிலேயே அரசியல்வாதிகள் குறியாக இருந்தனர்.
30.11.1959 அன்று மக்களை இனரீதியாகத் திரட்ட திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று கோரி பிரமுகர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையை நாவலர் கழகம் தொடங்கியது. 1959 டிசம்பரில் அரசு அமைத்த பல்கலைக்கழக நீட்ஹாம் ஆணைக்குழு அறிக்கை வெளியாகியது. சமகாலத்தில், தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பெற்று 40 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டும் இருந்தது. இன்னும் 40 ஏக்கர் வாங்கப்பட உள்ளதாக நவம்பர் 1960 இல் அறிவித்தவர்கள், பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்புவதற்கான பணத்தைத் திரட்டும் சீட்டுகளை அச்சிட்டு, 10 இலட்சம் ரூபா இலக்கை நிர்ணயித்து, அதற்கான நிதியைத் திரட்டத் தொடங்கினர்.
‘தமிழ்ப் பல்கலைக்கழக இயக்கம்’ தனக்கென்றொரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. இலங்கை அரசாங்க சபையின் (State Council) முன்னாள் சபாநாயகர் சேர். வைத்திலிங்கம் துரைசாமி அவ்வியக்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், சட்டக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு சீ.சீ.ஏ. பிறிட்டோ முத்துநாயகம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் பேராசிரியர் பி.கே. சண்முகம், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் திரு ஆர்.ஆர். குரொசெட் தம்பையா, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறைப் பேராசிரியர் சீ.ஜே. எலியசர், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, குருநாகலை மாவட்ட நீதிபதி திரு எம்.எம்.ஐ. காரியப்பர், தெனனிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணப் பேராயர் சபாபதி குலேந்திரன், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பேராசிரியர் ஆ.வி. மயில்வாகனம், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் எ. சின்னத்தம்பி, யாழ்ப்பாண மாவட்ட நீதிபதி பி. சிறீஸ்கந்தராஜா, முன்னாள் மாகாண சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவக் கலாநிதி எஸ். சுப்பிரமணியம், வண.பிதா. தனிநாயகம், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திரு எம். திருச்செல்வம், சட்டத்தரணி ஜெ. தியாகராஜா, திரு எஸ்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
பொதுச் செயலாளராக சட்டத்தரணி ரி. இராஜதுரையும், உதவிச் செயலாளராக திருவாளர்கள் ஆர். இராஜரட்ணம், எம். இராமசாமி ஆகியோரும், பொருளாளராக இலங்கை வங்கி முகாமையாளர் ரி.எஸ். முத்துலிங்கசாமியும், உதவிப் பொருளாளராக திருவாளர்கள் ஈ.எஸ். தேவசகாயம், பொறியாளர் சீ. கந்தசாமி ஆகியோரும், கணக்காய்வாளராக திரு கே. சச்சிதானந்தாவும் பணியாற்றியுள்ளனர்.
இவர்களுடன் கலாநிதி சு. வித்தியானந்தன், சேர். கந்தையா வைத்தியநாதன், மீன்பிடித்துறை இயக்குநர் கலாநிதி சி. அமிர்தலிங்கம், புரக்டர் சி. ஐயாத்துரை, திரு எஸ். ஆறுமுகம், கலாநிதி வி. அப்பாபிள்ளை, சட்டத்தரணி திரு சி.எஸ். பார்-குமாரகுலசிங்கம், மாவட்ட நீதிபதி வீ. மாணிக்கவாசகர், திரு என். மாணிக்க இடைக்காடர் உள்ளிட்ட 38 பேர் பொதுச்சபை உறுப்பினராகவும் இருந்துள்ளனர்.
கன்னங்கரா சிறப்புக் குழு
இந்நிலையில் இலங்கையில் 1939 இல் நிறுவப்பெற்ற கன்னங்கரா சிறப்புக்குழு, கல்வி விரிவாக்கல் பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டது. இது தொடர்பாக பேராசிரியர் சபா ஜெயராசா ‘பல்கலைக்கழகக் கல்வியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளர்ச்சியும்’ என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“கன்னங்கராவின் கல்விச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து தாய்மொழிக் கல்வி படிப்படியாக முன்னேற்றம் பெறத் தொடங்கி, பல்கலைக்கழகத்தை அடைந்தது. தாய்மொழிக் கல்வியால் சமூகத்தின் விளிம்பு நிலையினரும் உயர்கல்வியை நோக்கி நகரலாயினர். 1960 ஆம் ஆண்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவரின் எண்ணிக்கையில் திடீர்ப் பெருக்கம் நிகழலாயிற்று.
யாழ்ப்பாணத்தில் உயர்தர விஞ்ஞான வகுப்புகள் உரிய முறையிலே கட்டமைப்புச் செய்யப்பட்டிருந்தமையாலும், சிறந்த ஆசிரிய அணியினர் இயங்கிக் கொண்டிருந்தமையாலும் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் பல்கலைக்கழக அனுமதியை அதிகமான தமிழ் மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடிந்தது. இதற்கெதிராகவே ‘தரப்படுத்தல்’ என்ற பொறிமுறையை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
இதேவேளை தாய்மொழிக் கல்வியின் விரிவாக்கமும் எழுச்சியும், பல்கலைக்கழக நுழைவை வேண்டுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தவேளை, 1978 ஆம் ஆண்டு ‘பல்கலைக்கழகச் சட்டம்’ அந்த அதிகரிப்பை உள்வாங்கும் ஏற்பாடாக உருவாக்கப்பட்டது.
இலங்கைப் பல்கலைக்கழக அமைப்பில் கொழும்பு, பேராதனை, மொரட்டுவை, யாழ்ப்பாண வளாகங்கள் நிறுவப்பட்டிருந்தன. 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தன்னாதிக்கமுள்ள ஒரு பல்கலைக்கழகமான அங்கீகாரத்தைப் பெற்றது.”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தைப் பற்றியும் அதன் நூலகத்தின் கட்டமைப்புப் பற்றியும் அடுத்த இதழில் ஆராய்வோம்.
தொடரும்.