யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முகநோக்கு - பகுதி 1
Arts
22 நிமிட வாசிப்பு

யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பும் சமூக உறவுகளும் : பன்முகநோக்கு – பகுதி 1

August 2, 2024 | Ezhuna

‘யாழ்ப்பாணத்துச் சாதியம் – ஆய்வுகள்’ என்ற இத்தொடர் யாழ்ப்பாணத்தில் 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தில் சாதியக் கட்டமைப்பின் இருப்பியலையும், சாதிமுறையின் இறுக்கமான பின்பற்றுகைகளையும்  பற்றிய ஆங்கில ஆய்வுக்கட்டுரைகளை மொழி பெயர்த்து வழங்குவதாக அமைகின்றது. இதன்படி, பட்டறிவுசார் அனுபவப்பதிவுகள், அரசியல் மேடைப்பேச்சுகளின் உணர்ச்சி வெளிப்பாடுகள் போன்றவற்றுக்கு அழுத்தம் கொடுக்காத புறநிலைத் தன்மையுடைய நேரிய பகுப்பாய்வு தன்மைகளாக அமையும் ஆய்வுக்கட்டுரைகளின் ஊடாக யாழ்ப்பாணத்தின் சமூக கட்டமைப்பு, சாதியும் வர்க்கமும் சமயமும், சமய சடங்குகளும் சாதியமும், குடும்பம் திருமணம் ஆகிய சமூக நிறுவனங்களும் சாதியமும் ஆகியன இந்தத் தொடரில் வரலாற்று நோக்கில் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. சாதியத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிகள், கிளர்ச்சிகள் போராட்டங்கள் என்பவற்றை வரலாற்று நோக்கில் விபரிப்பதாகவும் இந்தத்தொடர் அமைகிறது.

(‘எழுநா’ பதிப்பகத்தின் பிரசுரமாக 2024 – நவம்பர் மாதம் வெளிவரவிருக்கும் கந்தையா சண்முகலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகமாக அமையும் கட்டுரை இங்கே தரப்பட்டுள்ளது.)

இந்நூலில் 9 ஆய்வுக் கட்டுரைகளின் தமிழாக்கம் இடம்பெறுகிறது. இக்கட்டுரைகள் யாழ்ப்பாணத்தின் சாதிக் கட்டமைப்பினையும் சமூக உறவுகளையும் பன்முக நோக்கில் ஆராய்வனவாக உள்ளன. இவை யாவும் போருக்கு முந்திய கால யாழ்ப்பாணத்தின் சமூகம், பண்பாடு, பொருளாதாரம் அரசியல் என்பன பற்றிய நுண்ணாய்வுகளாக அமைந்துள்ளன. போருக்கு முந்திய காலம் என நாம் குறிப்பிடுவது ஏறக்குறைய 1981 க்கு முற்பட்ட யாழ்ப்பாணம் எனலாம். 1952 ஆம் ஆண்டு மைக்கல் பாங்ஸ் (Michael Banks) என்னும் சமூகவியலாளர் யாழ்ப்பாணத்தின் சிறுப்பிட்டிக் கிராமத்தில் ஒரு வருட காலம் தங்கியிருந்து கள ஆய்வு செய்து யாழ்ப்பாணத்தின் சாதி முறைமையைப் பற்றிய அரியதொரு ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து 1960 களின் பிற்பகுதியில் கென்னத் டேவிட் (Kenneth David) என்னும் மானிடவியலாளர் மயலிட்டிக் கிராமத்தில் தங்கியிருந்து கள ஆய்வினைச் செய்தார். இவரின் ஆய்வின் பெறுபேறாக மயிலிட்டி வடக்கு மீன்பிடித் தொழிலாளர் கிராமம், மயிலிட்டி தெற்கு விவசாயக் கிராமம் என்பன பற்றிய உயர் தரமான ஆய்வுகள் வெளியாயின.

யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதிகள், குடா நாட்டின் சிறு நகரங்கள் என்பன தொடர்பான ஆய்வுகளையும் நிகழ்த்திய கென்னத் டேவிட் தமது ஆய்வு முடிவுகளையும் அவதானங்களையும் தமது ஆக்கங்களில் பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தவர் பிறையன் பவ்வன்பேர்ஜர் (Bryan Pfaffenberger). சாவகச்சேரியில் தங்கியிருந்து கள ஆய்வு நிகழ்த்திய இவரது ஆய்வு நூல் 1982 இல் வெளியானது.

இம்மூன்று ஆய்வாளர்களும் அன்றைய யாழ்ப்பாணத்தை உலகின் புகழ்பெற்ற சமூகவியல் / மானிடவியல் அறிவாளிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். உலக அளவில் இம்மூன்று ஆய்வாளர்கள் பற்றிய கவனம் திரும்பிய வேளையில், தமிழ் அறிவுலகம் இந்த ஆய்வுகளைக் கண்டு கொள்ளாமல் கடந்து சென்றது. இடையிலே போர் குறுக்கிட்டபடியால் மேற்குலகின் மானிடவியலாளர்கள் வடக்கு நோக்கி வருவதைத் தவிர்த்துக் கொண்டனர். குறிப்பாக கென்னத் டேவிட், பிறையன் பவ்வன்பேர்ஜர் ஆகிய இருவரும் தமது கவனத்தை வேறு திசையில் திருப்பினர். பவ்வன்பேர்ஜர் தொடக்கிய ஆய்வுத் திட்டம் ஒன்று 1983 கறுப்பு ஜீலை நிகழ்வுகளின் பின் கைவிடப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

வெளிநாட்டவர்களான சமூகவியலாளர்களும் மானிடவியலாளர்களும் தொடக்கிய ஆய்வுப் பணிகளை இட்டு நிரப்பிய மானிடவியலாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் றொபர்ட் சித்தார்த்தன் பேரின்பநாயகம் ஆவர். இவர் மானிப்பாயில் பிறந்து வளர்ந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் H.S.C வகுப்பு வரை கற்றபின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்றார். யாழ்ப்பாணத்தின் சமூகக் கட்டமைப்பு, சாதி உறவுகள், சமயம், கருத்தியல் என்பன பற்றி ஆராய்ந்து அரியதொரு நூலை இவர் எழுதியுள்ளார். நவாலிக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும், இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் கற்றவருமான சின்னப்பா அரசரத்தினம் யாழ்ப்பாணத்தின் சமூக – பொருளாதார வரலாறு, சாதி முறையின் வரலாறு என்பன குறித்த கருத்தாழம் மிக்க ஆய்வுகளை எழுதி வெளியிட்டுள்ளார். வரலாற்றுப் பேராசியரியரான பேர்ட்ரம் பஸ்தியாம்பிள்ளை 19 ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றைப் பற்றி ஆழமாக ஆய்வு செய்து பல கட்டுரைகளை எழுதியவர். வரலாற்று ஆய்வாளரான க. அருமைநாயகம் யாழ்ப்பாணத்தின் சாதி முறையின் வரலாறு பற்றி பெறுமதிமிக்க ஆய்வினை எழுதினார். அரசியல் விஞ்ஞானத் துறைப் பேராசிரியர் ஏ.ஜே. வில்சன் அவர்களும் இலங்கைத் தமிழர்களின் சாதிமுறை பற்றிய பெறுமதிமிக்க ஆய்வுரையை தமது நூல் ஒன்றில் ஓர் அத்தியாயமாகச் சேர்த்துள்ளார்.

மேற்குறித்த வெளிநாட்டவர்களான மூவரும், இலங்கையர்களும் – தமிழர்களுமான ஐவரும் ஆங்கிலத்தில் எழுதிய ஆக்கங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது. ‘யாழ்ப்பாணத்துச் சாதியம்’ பற்றிய புரிதல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகள் (Theoretical Issues) குறித்து மேற்குறிப்பிட்ட எட்டு ஆய்வாளர்களினதும் பங்களிப்பை மதிப்பீடு செய்யும் முறையில் இவ் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது.

வேளாளர் சாதியின் வரலாறு

யாழ்ப்பாணத்தின் வேளாளர் சாதியின் வரலாற்றைக் கூறும் சி. அரசரத்தினம் அவர்களின் கட்டுரை ‘18 ஆம் நூற்றாண்டில் வட இலங்கையின் வேளாளர்கள் : மேலாதிக்கச் சாதியொன்றின் சமூக வரலாறு’ என்னும் தலைப்பில் அமைந்துள்ளது. இக்கட்டுரையின் முக்கியமான கருதுகோளை (Hypothesis) எடுத்துரைக்கும் கூற்றினை இங்கு மேற்கோளாகத் தந்துள்ளோம்.

“யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றினை எடுத்து நோக்கும் போது, அதன் பொருளாதாரத்தின் மூன்று துறைகளோடு சம்பந்தப்பட்ட மூன்று சாதிகள் இருந்தன என்பது தெரிகிறது.

·       விவசாயத்தோடு தொடர்புடைய சாதிகள்

·       கைவினைத் தொழில்களுடன் தொடர்புடைய சாதிகள்

·       கரையோரத் தொழில்களுடன் தொடர்புடைய சாதிகள்

மேற்குறித்த உற்பத்தித் துறைகள் சார்ந்த மூவகைச் சாதிகளிடையேயும் ஒரு அதிகாரச் சமநிலை (Balance of Power) இருந்தது. ஆயினும் ஆரம்பம் முதலே வேளாளர் சாதி அதன் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பலப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு பிற சாதிகளைப் பின்னிலைக்குத் தள்ளியது என்பதற்கு ஆதாரம் உள்ளது. வேளாளரின் உயர்ச்சிக்கு அரசியல் மாற்றங்களும் அதன் பயனாக பொருளாதார அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் துணையாக அமைந்தன எனலாம்.”

மேல் தரப்பட்டுள்ள கூற்றில் உள்ளடங்கியுள்ள முக்கியமான கருத்துக்கள் பின்வருவன:

  1. யாழ்ப்பாணச் சமூகம் மூன்று உற்பத்தித் துறைகள் சார்ந்த மூன்று சாதிக் குழுமங்களைக் கொண்டிருந்தது.
  2. அம்மூன்று சாதிக் குழுமங்களும் ஆரம்பத்தில் தனித்துவமாகவும் சுதந்திரமாகவும் இயங்கி வந்தன. இச்சாதிகளிடையே ஓர் அதிகாரச் சமநிலை (Balance of Power) இருந்தது.
  3. பின்னர் இச் சமநிலை குலைவுற்றது. வேளாளர் சாதி மேலாதிக்கச் சாதியாகப் (Dominant Caste) பலம் பெற்றது. அது தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்திப் பிற சாதிகளைப் பின்னிலைக்குத் தள்ளியது.

இக்கருத்துக்களை சுருக்கமாக ஒரு தனிவாக்கியமாகப் பின்வருமாறு வரையறை செய்து கொள்ளலாம்:

விவசாய உற்பத்தித்துறையோடு தொடர்புடைய வேளாளர் சாதி, விவசாய உற்பத்தியுடன் தொடர்புடைய ஏனைய சாதிகளைத் தனது மேலாதிக்கத்திற்கு உட்படுத்தியதோடு, கைவினைத் தொழில் உற்பத்தியோடும் கரையோரத் தொழிற்துறைகளோடும் தொடர்புடைய சாதிகளையும் பின்னிலைக்குத் தள்ளி, யாழ்ப்பாணத்தின் மேலாதிக்கச் சாதியாக உயர்ச்சி பெற்றது.

800 ஆண்டுகளின் சமூக வரலாறு

மூன்று உற்பத்தித் துறைகளையும், அவ் உற்பத்தித் துறைகள் சார்ந்த யாழ்ப்பாணத்தின் சாதிகளையும் அடையாளம் காட்டும் சி. அரசரத்தினம், ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட யாழ்ப்பாணச் சமூக வரலாற்றைப் பற்றிய விரிகாட்சியை எம் மனக் கண் முன் நிறுத்துகிறார். நான்கு கட்டங்களாக இவ் வரலாறு முன்னோக்கிச் செல்வதையும் அவர் சான்றாதாரங்களுடன் விபரித்துக் கூறுகிறார்.

  1. ஆரம்ப காலம் –  13 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய நூற்றாண்டுகள்.
  2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் – 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1619 இல் யாழ்ப்பாண இராச்சியம் வீழ்ச்சியடைவது வரையான காலம்.
  3. காலனிய ஆட்சிக்காலம் – 1619 தொடக்கம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகிய மூன்று ஐரோப்பிய வல்லரசுகளின் காலனியாக இலங்கையின் வடபகுதி விளங்கிய காலம்.
  4. சுதந்திரத்தின் பின்னரான காலம் – 1945 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்து வட இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் ஏற்பட்ட சமூக உருவாக்கம்.

மேற்குறிப்பிட்ட நான்கு கட்டங்களுள் ஆரம்ப காலம் என்னும் காலத்தில் மத்தியப்படுத்தப்பட்ட அரசு ஒன்று நல்லூரைத் தலைநகராக் கொண்டு உருவாகியிருக்கவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அரசவம்சம் ஒன்றின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாணச் சமூக உருவாக்கம்

ஆரியச் சக்கரவர்த்திகள் என்ற அரச வம்சம் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட மத்தியப்படுத்தப்பட்ட ஆட்சியை வட இலங்கையில் நிறுவியது. உறுதியான அரசுருவாக்கம், சமூக உருவாக்கத்திற்கும், பொருளாதார – வர்த்தக விருத்திக்கும் வழிவகுத்தது. ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தின் சமூக வளர்ச்சிப் போக்குகளை அரசரத்தினம் விபரித்துக் கூறுகிறார். அவர் கூறியிருப்பவற்றைக் கீழ்க் கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம்:

  1. ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்காலத்தில் பாண்டி நாட்டில் இருந்து விவசாயிகளான வீரர் குலங்களைச் சேர்ந்த குடும்பங்கள், தமது உறவுக் குடும்பங்கள் – பணியாட்கள் என்போருடன் யாழ்ப்பாணத்தில் குடியேறினர். இவ்வீரர் குலங்கள், மழவர் – காங்கேயர் ஆகிய பெயர்களைப் பெற்றிருந்தன. இவ்வீரர் குலத் தலைவர்களை போர் வீரர்களான தலையாரிகள் (Warrior Chieftains) எனவும், நிலமானியத் தலையாரிகள் (Feudal Chieftains) என்றும் அழைத்தல் பொருத்தமானது.
  2. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் குடியேறிய வீரர் குலத்தவர்கள் வேளாண்மைத் தொழிலை செய்வோராக இருந்தனர். இக் குடியேறிகளிடையே பல உப பிரிவுகள் இருந்தன. தென்னிந்தியாவில் இவர்களது பூர்வீக இடம் யாது, அவர்களின் குடி (Clan) யாது என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு இக்குலங்களிடையே பிரிவுகள் இருந்தன. அப்பிரிவுகள் யாழ்ப்பாணத்தில் குடியேறிய பின்பும் தொடர்ந்தன.
  3. தலையாரிக் குடும்பங்களுக்கு (Chieftain Families) யாழ்ப்பாண அரசனால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. அத்தோடு அக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்டங்களின் வருமான அதிகாரப் பதவிகளும் வழங்கப்பட்டன. இவ்வாறான பதவி நியமனங்களைப் பெற்றோர் பேரளவான நிலங்களையும் மானியமாகப் பெற்றனர்.
  4. மக்களிடம் வரிகளை அறவிடும் அதிகாரம் இவ் வீரர் குலத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ் அதிகாரிகள் முதலியார்கள் என அழைக்கப்பட்டனர். முதலியார் என்ற பெயர் அவர்களது சமூகத் தகுதியை (Social Status) அடையாளப்படுத்தும் குறியீடாக இருந்தது.
  5. இம் முதலியார்களின் கீழ் அதிகாரப் படிமுறையில் (Hierarchical Order) அமைந்த பல பதிவி நிலையினரும் இருந்தனர். மணியக்காரர், தலைவர் (Head Man), விதானை ஆகிய பெயர்களால் இப்பதவி நிலையினர் அழைக்கப்பட்டனர். இப்பதவி நிலையினர் கிராம மட்டத்தில் அதிகாரம் உடையவர்களாய் இருந்தனர். அரசனால் இவர்களிற்கும் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன.
  6. மேற்குறித்த வளர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் விவசாயம் அல்லாத வேறு தொழில்களைச் செய்பவர்களான சமூகப் பிரிவினர்களின் குடியிருப்புகளும் யாழ்ப்பாணக் குடா நாட்டில் விருத்தி பெற்றன. இச்சமூகப் பிரிவுகளில் முக்குவர் சாதி, அரசியல் அதிகாரமும் சடங்கியல் அதிகாரமும் உடையதாய் இருந்தது. முக்குவர்கள் போன்றே கரையார் சாதியும் அரசியல் அதிகாரமும், இராணுவ அதிகாரமும் (Military Power) உடையதாகவும் இருந்தது. கரையாரிடம் சைத்திரிய அந்தஸ்தைக் கோரும் மரபுகள் இருந்துள்ளன.

மேலாதிக்கச் சாதி என்னும் எண்ணக்கரு

வேளாளர் மேலாதிக்கத்தின் படிப்படியான பரிணாமம் பற்றிய விபரிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு, அரசரத்தினம் அவர்களின் கட்டுரையை ஒரு கோட்பாட்டு ஆய்வும் அலசலும் என்ற நிலைக்கு உயர்த்துவதாக அமையும் மேலாதிக்கச் சாதி (Dominant Caste) என்னும் எண்ணக்கருவைப் பற்றிய அவரது விளக்கத்தை எடுத்துக் கூறுவோம். மேலாதிக்கச் சாதி என்னும் எண்ணக்கரு தென்னிந்தியப் பின்னணியில் நில உடமைச் சாதிகளின் சமூக மேலாதிக்கத்தை விளக்குவதற்கு எம்.என். சிறினிவாஸ் அவர்களால் முன்மொழியப்பட்டது. அதனை இரவல் பெற்றுக் கொள்ளும் அரசரத்தினம் நுட்பமான முறையில் யாழ்ப்பாணச் சமூகத்தின் உருவாக்கத்தில் வேளாளர் சாதியின் வகிபாகத்தை விளக்குகிறார்.

மேலாதிக்கச் சாதி என்றால் என்ன? ஒரு கிராமத்தில் அல்லது சில கிராமங்கள் சேர்ந்த ஒரு வட்டாரத்தில், ஒரு குறிப்பிட்ட சாதி மேலாதிக்கம் உடையதாக இருக்கலாம். ஆயினும் ஒரு குறுகிய புவியியல் எல்லைக்குள் மேலாதிக்கம் செலுத்துவது, குறித்த சாதியை மேலாதிக்கச் சாதி என்ற நிலைக்கு உயர்த்திவிட முடியாது. கிராமம், வட்டாரம், பிரிவு, மாவட்டம் என்ற விரிந்த நிலையில் யாழ் குடாநாடு முழுமையிலும் மேலாதிக்கமுடைய சாதியாக ஒரு சாதி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டதா என்பதே முதன்மையான அளவுகோல் ஆகும். தமிழரசர்களின் ஆட்சிக் காலத்தில் கூட யாழ்ப்பாணத்தில் வேளாளர் அல்லாத பிற சமூகக் குழுக்கள் பல ஆதிக்கம் உடையனவாய் இருந்து வந்தன. சமூகக் குழுக்களுக்கிடையே அதிகாரச் சமநிலை (Balance of Power) நிலவியது. மேலாதிக்கச் சாதி என்பதன் பண்புக் கூறுகள் சிலவற்றை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்:

அ). குறிப்பிட்டதொரு சாதி ஒரு பிராந்தியம் முழுமையிலும் சனத்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும் போது, அச்சாதிக்குப் பிறசாதிகளை விடச் சாதகமான நிலை இருக்கும்.

ஆ). யாழ்ப்பாணம், விவசாயச் சமூகமாக (Agrarian Society) உருவாகிக் கொண்டிருந்தது. விவசாயச் சமூகமொன்றில் நில உடமையும், விவசாய வளங்களைக் கையகப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் முக்கியமானதாகும்.

இ). விவசாயச் சமூகங்களில் மிகவும் அருந்தலான வளம், பணம் அல்லது பண மூலதனம் ஆகும். நிதி வளங்களையும் குறித்த சாதி தனது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும்.

ஈ). வர்த்தகம், பொருட்களின் பரிவர்த்தனை, சேவைத் தொழில்கள் ஆகியவற்றினைக் கட்டுப்பாட்டில் வைத்திருத்தலும் அவசியமானது.

உ). உழைப்பையும், உழைப்புக்குக் கொடுக்கப்படும் ஊதியத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையதாக மேலாதிக்கச் சாதி இருத்தல் வேண்டும். தனது சுரண்டலை பொருளாதாரமல்லாத அதிகாரம் மூலம் (Non-Economic Coercion) தொடரக் கூடிய ஆற்றலுடையதாக மேலாதிக்கச் சாதி இருத்தல் வேண்டும்.

 ஊ). மேற்குறிப்பிட்டவை யாவற்றிலும் முக்கியமானது நிர்வாகப் பதவிகளையும் உத்தியோகப் பதவிகளையும் தனது தனியுரிமையாக்கி, பிற சமூகக் குழுக்களை அதிகாரத்தில் பங்குகொள்ள விடாது தடுத்துவிடுதல் ஆகும்.

 எ). மேற்சொன்னவை உலகியல் சார் அதிகாரங்கள் ஆகும். இவை மட்டும் போதியனவல்ல. சமய நிறுவனங்களைக் கட்டுப்படுத்தலும், சடங்கியல் மேலாண்மையை (Ritual Superiority) உறுதி செய்து கொள்வதும் முக்கியமானது. மேலாதிக்கச் சாதியின் சடங்கியல் மேலாண்மை, அதன் சாதிய மேலாண்மைக்கு நியாயத்தையும் வலிதுடமையையும் வழங்குவதாக இருக்கும்.

மேலாதிக்கச் சாதி மாதிரியின் (Dominant Caste Model) முக்கியமான பண்புக் கூறுகள் மேலே விபரித்துக் கூறப்பட்டன. அடுத்து யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் பின்னர் வேளாளர் சாதி தனது மேலாதிக்கத்தை நிறுவுவதில் எந்தளவிற்கு வெற்றி கண்டது, வேளாளர்களை ‘மேலாதிக்கச் சாதி’ என்றழைப்பது கோட்பாட்டு நிலையில் வலிதுடமையுடையதா? ஆகிய வினாக்களை மனதில் இருத்திய வண்ணம், யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குப் பின்னருள்ள வரலாற்றுப் போக்குகளைப் பற்றிய அரசரத்தினத்தின் எடுத்துரைப்பை (Narration) நோக்குவோம்

யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சி

யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியும் அதற்குப் பிந்திய காலத்தில் காலனி ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும், யாழ்ப்பாணத்தின் சாதிகளுக்கிடையிலான உறவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தின.

  1. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் பொருளாதார முறையில் சில மாற்றங்களைப் புகுத்தினர். சமூகத்திலும் புதிய கூறுகளை அவ் ஆட்சியாளர்கள் புகுத்தினர். இதன் விளைவாகச் சில சமூகக் குழுக்கள் மேல்நிலைக்கு உயர்ந்தன. வேறு சில உயர் நிலையில் இருந்து தாழ்வுற்றன.
  2. 17 ஆம் நூற்றாண்டின் முக்கிய வளர்ச்சிகளில் ஒன்றான இந்து சமுத்திர வர்த்தகத்தின் விரிவாக்கமும், புதிய பொருளாதார முறைமையும் யாழ்ப்பாணத்தவர்களுக்குத் வாய்ப்புகளைத் திறந்து விட்டது. இதனால் பல சமூகக் குழுக்கள் உயர்ச்சி பெற்றன.
  3. வேளாளர்கள் அல்லாத சாதிப் பிரிவினர்களுக்கு காலனிய ஆட்சியாளர்கள் நிர்வாகப் பதவி நியமனங்களை வழங்கியதால், சாதி உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
  4. போர்த்துக்கேயர் ஒப்பீட்டளவில் குறுகிய காலமே (1619-1658) யாழ்ப்பாணத்தில் ஆட்சி செய்தனர். இக்குறுகிய கால ஆட்சியில் கத்தோலிக்க மதம் வேகமாகப் பரவியது. அம்மதத்தை ஏற்றுக் கொண்ட சமூகப் பிரிவினர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. கரையார் சாதியினரில் பெருந்தொகையானோர் கிறிஸ்தவத்திற்கு மாறினர். இவ்வாறு மதம் மாறியவர்கள் போர்த்துக்கேய அரசு அதிகாரத்திற்கு மிக நெருக்கமானவர்களாக ஆயினர்.
  5. யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சியின் போது அரண்மனைச் சேவகர்களாகவும், போர் வீரர்களாகவும் அரசனிற்குச் சேவை செய்தோர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் குடியேறி நிலவுடமையாளர்களாக ஆயினர். இவ்வாறு புதிய நில உடமையாளர்களாக உருவாக்கம் பெற்ற மடப்பள்ளி, அகம்படியர், தனக்காரர் ஆகிய சாதியினரின் பொருளாதார – சமூக உயர்ச்சி பற்றி அரசரத்தினம் விபரித்துக் கூறுகிறார். மடப்பள்ளி, அகம்படியர், தனக்காரர், செட்டி, மலையாளி என்னும் பல சமூகப் பிரிவுகள் வேளாளர்களுடன் ஒன்றிணைந்தன எனவும், இச் சாதிகள் சில அடையாளம் தெரியாது மறைந்து விட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் சமூக வரலாற்றில் 18 ஆம் நூற்றாண்டின் முக்கியத்துவம்

ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் 18 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் சாதி உறவுகளில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தின.

  1. 18 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் அரிசி விலை தொடர்ச்சியாக உயர்ந்தது.  தென்னிந்தியாவில்  நிலவிய அரசியல் குழப்ப நிலை காரணமாக அரிசி இறக்குமதி தடைப்பட்டதால் அரிசி விலை இருமடங்காக அதிகரித்தது. இதன் பயனாக தமது நுகர்வுத் தேவைக்கு மேலதிகமான நெல்லை உற்பத்தி செய்யக் கூடிய நில உடைமையாளர்களான விவசாயிகள், திறந்த சந்தையில் நெல்லை விற்பனை செய்வது மூலம் இலாபம் ஈட்டினர். நெற்காணிகளின் விலைகள் உயர்ந்தன. நிலவுடமையாளர்களான வேளாளர்கள் நெற்காணிகளின் விலை உயர்வால் நன்மை பெற்றனர்.
  2. காசுப்பயிரான புகையிலையின் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. புகையிலை, சிற்றுடமையாளர்களின் பயிராக இருந்தது. இதனைப் பயிரிட்டோர் சிற்றுடமைக் குடியான் விவசாயிகள் (Peasants) ஆவர். அதுவரை காலமும் பிழைப்பூதிய நிலையில் (Subsistence Level)  வாழ்ந்த விவசாயிகளுக்கு, காசுப்பயிரான புகையிலையின் உற்பத்தி காரணமாக, குறிப்பிடத்தக்க அளவு பண வருமானம் கிடைத்தது.
  3. பண வருவாயைப் பெற்றுக் கொள்வதற்கான இன்னொரு வழியாகப் பனம் பொருள் உற்பத்தியும் வர்த்தகமும் அமைந்தது. பனந் தோட்டங்களின்  உடைமையாளர்களாக இருந்த வேளாளர்கள் இதனால் நன்மை பெற்றனர். சிறுதுண்டு நிலங்களை உடைமையாக வைத்திருந்த சிற்றுடமையாளர்களும் நன்மை பெற்றனர்.
  4. ஒல்லாந்தர் ஆட்சியில் தென்னிந்தியாவில் இருந்து அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டனர். 1694 – 96 ஆண்டு காலத்தில் சோழ மண்டலக் கடற்கரையில் இருந்து 3589 அடிமைகள் தனி நபர்களால் கொள்வனவு செய்யப்பட்டனர் என்பதை ஆவணச் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.  அடிமை வியாபாரம் யாழ்ப்பாணச் சமூகத்தில் கேடான விளைவுகளை ஏற்படுத்தியதோடு 20 ஆம் நூற்றாண்டு வரை சமூக உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  5. மரவேலை செய்வோர், கட்டிட – சிற்ப வேலை செய்வோர், இரும்பு வேலை செய்வோர், பொன் – வெள்ளி ஆபரணங்களைச் செய்வோர் ஆகிய கைவினைத் தொழிலாளர்களின் உழைப்பு, உடல் உழைப்பை விடக் கூடிய பெறுமதி உடையதாக இருந்தது. இக் கைவினைஞர்கள் சுதந்திரமானவர்களாக இருந்தனர். மர வேலை, இரும்பு வேலை, கட்டட வேலை ஆகிய தொழில்களுக்கான கேள்வி அதிகரித்தது. இத் தொழில்களில் ஈடுபடுவோரது கூலி, கிராமத்து உத்தியோகத்தர்கள் பதவிகளில் இருந்தோரது கூலிக்குச் சமமாக இருந்தது.
  6. வர்த்தகம், பண்டங்களின் தரகு வேலை, இந்தியாவுடனான வர்த்தகம், யானை வர்த்தகம் ஆகிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்ட சமூகப் பிரிவினர்கள் பொருளாதார நன்மைகளைப் பெற்றனர். குறிப்பாக செட்டிகள் சமூகப் பிரிவினர் பணம் படைத்த செல்வந்தர்களாகவும் சமூகத்தில் செல்வாக்குள்ளவர்களாகவும் விளங்கினர்.

கட்டுரையின் இறுதிப் பகுதியில் 1796 இல் ஒல்லாந்தரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பிரித்தானியர் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் சுருக்கமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

க. அருமைநாயகம்

அரசரத்தினம் அவர்களின் கட்டுரை இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலம் வரையான 800 ஆண்டுகளின் சமூக வரலாற்றை கூறுவதாக அமைந்துள்ளது. ஆயினும் அக் கட்டுரை ஆரியச் சக்கரவர்த்திகள் ஆட்சிக் காலம், ஒல்லாந்தர் ஆட்சிக்காலம் என்ற இரு காலப் பகுதிகள் பற்றிய ஆய்வைக் குவிமையப்படுத்துவதாக அமைந்தது. குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ், வேளாளர் மேலாதிக்கச் சாதியாக மேலாண்மை பெற்றமை குறித்து அவர் விளக்கியிருப்பதை குறித்துக் காட்டினோம்.

க. அருமைநாயகம் அவர்களின் ‘யாழ்ப்பாணத்தில் சாதி : 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள்’ என்னும் கட்டுரை அரசரத்தினம் விட்ட இடத்தில் இருந்து தொடருவதாக அமைகிறது. அவரது கட்டுரையில் கூறப்பட்ட கருத்துகளை பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலம் (1796 – 1844), 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20 ஆம் நூற்றாண்டின் கலகங்களும் பிற நிகழ்வுகளும் என்னும் மூன்று தலைப்புகளில் சுருக்கமாகக் குறிப்பிடுவோம்.

1. பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலம் (1796 – 1844)

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில், பிரித்தானியரின் சாதி பற்றிய கொள்கைகளும் நடைமுறைகளும், 1619 முதலாகத் தொடர்ந்த போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் ஆகிய இரு காலனிய ஆட்சியாளர்களின் கொள்கைகள் நடைமுறைகளில் இருந்து அதிகம் வேறுபடவில்லை என்பதை க. அருமைநாயகம் கட்டுரையின் முற்பகுதியில் தெரிவிக்கின்றார்.

அ. போர்த்துகேயரும்  ஒல்லாந்தரும் சாதிமுறையை ஏற்றுக் கொண்டு அதனைத் தம் சுரண்டல் தேவைகளுக்கு ஏற்ற முறையில் பயன்படுத்தினர். இதனால் சாதிமுறை இறுக்கமடைந்தது. டச்சுக்காரர் தேசவழமைச் சட்டத்தைத் தொகுத்தனர். இச் சட்டக்கோவை சாதிகளுக்கிடையிலான உறவுகள் தொடபான வழமைக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கியது.

ஆ. பிரித்தானியரும் உயர் சாதியினரின் நலன்களைப் பாதுகாக்கும் முறையிலான சட்டங்களை இயற்றினர். 1800 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க கட்டளைச் சட்டம், ‘உயர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் இடையிலான பிணக்குகள் யாழ்ப்பாணத்தில் இருந்துவந்த வழக்கங்கள், நடைமுறைகள் என்பனவற்றுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படும்’ என விதித்தது .

இ. இக் காலப்பகுதியில் நீதிமன்றங்கள் சாதியின் இருப்பை ஏற்று அதற்கு அங்கீகாரம் அளிக்கும் முறையில் தீர்ப்புகளை வழங்கின.

ஈ. 1844 இல் அடிமைமுறை ஒழிக்கப்பட்டது. ஆயினும் உடனடியாக அது பெருமாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை.

2. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி

 அ. இக்காலத்தில் நீதிமன்றங்கள் சாதி அடிப்படையிலான கடப்பாடுகளை கேள்விக்கு உட்படுத்தின. ‘தவசி கந்தன் எதிர் வயிரவன் கந்தனும் பிறரும்’ எனும் வழக்கின் தீர்ப்பு ஆங்கிலேய அரசாங்கத்தினதும் நீதித்துறையினதும் கொள்கை மாற்றத்தை எடுத்துக் காட்டுவதாகும். சாதிக் கடப்பாடுகள் பற்றிய பிணக்குகளை நீதிமன்றுகள், ஒப்பந்தம் என்ற சட்ட எண்ணக்கருவின் அடிப்படையில் அணுகின.

ஆ. தொடக்க காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மிசனரிகள் உயர்சாதிகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து, சாதிபேதம் காட்டும் நடைமுறைகளைத் தொடர்ந்தன. காலப்போக்கில் மிசனரிகள் சாதிமுறையை நிராகரித்தன. மிசனரிகளின் பாடசாலைகளில் உயர்சாதிப் பிள்ளைகளும் தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளும் சமமாக நடத்தப்பட்டமை அக்காலத்தில் புரட்சிகரமான நடவடிக்கையாக இருந்தது. ஆங்கிலக் கல்வியைப் பெறுவதற்கு வேறு வழிகள் இல்லாத காரணத்தால், உயர் சாதியினரின் பிள்ளைகள் மிசனரிப் பாடசாலைகளின் சமத்துவ நடைமுறைகளை ஏற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டனர்.

இ. 19 ஆம் நூற்றாண்டின் முடிவில் தாழ்த்தப்பட்ட சாதிப்பிள்ளைகளுக்கும் இந்துப் பாடசாலைகளில் அனுமதி பெற முடிந்த போதும், 1930 கள் வரை சம ஆசனம் வழங்குவதற்கு இந்துப் பாடசாலைகள் முன்வரவில்லை.

3. இருபதாம் நூற்றாணண்டின் கலகங்களும் பிற நிகழ்வுகளும்

அ. சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கலகங்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டன. ஒடுக்கப்பட்டோர் சமத்துவ உரிமைகளையும் சலுகைகளையும் கோரி நின்றனர். 1914, 1922, 1932, 1933 ஆகிய ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் வன்முறைக் கலகங்கள் ஏற்பட்டன.

ஆ. இச் சாதிக்கலவரங்கள் நடைபெற்ற காலத்தில் கத்தோலிக்கப் பாதிரியாரான சுவாமி ஞானப்பிரகாசர், பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்களை கத்தோலிக்க சமயத்திற்கு மதமாற்றம் செய்வித்தார். 3000 பேர் வரை இவ்வாறு கத்தோலிக்கத்தை தழுவினர் என்று குறிப்பிடப்பட்டது. ஞானப்பிரகாசர் 37 கத்தோலிக்கத் தேவாலயங்களை புதிதாக இக்காலத்தில் நிறுவினார்.

இ. 1880 க்கும் 1920 க்கும் இடைப்பட்ட 40 ஆண்டு காலத்தில் பல தமிழ்ப் பாடசாலைகளும் இந்துக்களால் அமைக்கப்பட்டன. ஆயினும் இப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் பிள்ளைகள் அனுமதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட சாதிப் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கிய பாடசாலைகளில் கூட அப் பிள்ளைகளுக்கு சம ஆசனம் வழங்கப்படவில்லை.

ஈ. அரசாங்கப் பாடசாலைகளிலும், உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளிலும் சாதி பேதம் காட்டக் கூடாது; சம ஆசனம் வழங்க வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டின் சுற்றறிக்கை மூலம் கல்வித் திணைக்களம் அறிவுறுத்தியது. உயர்சாதி இந்துக்கள் இதனை எதிர்த்தனர். அரசாங்கம், அழுத்தங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பணியாது உறுதியாக நின்றது. உயர்சாதி இந்துக்கள், பாடசாலைகளுக்குத் தீ வைத்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபட்டனர். 1929 – 1932 காலம் யாழ்ப்பாணத்தின் சமூக, அரசியல் கொந்தளிப்பின் உச்சக்கட்டமாக அமைந்தது.

உ. யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ், சாதி ஒழிப்புக்கான இயக்கத்தில் இளைஞர்களை ஒன்றிணைத்துத் தலைமைத்துவம் வழங்கியது. இந்து அற நிலையங்களின் நிர்வாகம், மிருகபலி, வழிபாட்டுச் சுதந்திரம், பற்றிய விசாரணைக்குழு 1949 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அக் குழுவின் அறிக்கை 1951 இல் பிரசுரிக்கப்பட்டது. வழிபாட்டுச் சுதந்திரம் பற்றி (தாழ்த்தப்பட்டோர் ஆலயங்களுக்குள்  சென்று வழிபடுவதற்கான சுதந்திரம்) இவ் விசாரணைக் குழுவின் அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊ. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியை எட்டும் போது யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்துக் கோவில்களின் நிர்வாகம், ஆலயப் பிரவேசம் என்பன பற்றிய சர்ச்சைகள் 1930 களிலும் 1940 களிலும் இடம்பெற்றன. 1946 ஆம் ஆண்டில், தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு, யாழ்ப்பாணத்தில் பல் அங்கத்தவர் தொகுதிகளை உருவாக்கி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்க முடியுமா என்பதைப் பரிசீலித்தது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பரவலாகச் சிதறி வாழ்வதால், அவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக் கூடிய பல அங்கத்தவர் தொகுதி எதனையும் அமைக்க முடியாது என ஆணைக்குழு முடிவு செய்தது.

1796 முதல் 1950 வரையான காலத்தின் முக்கியமான மாற்றங்களை க. அருமைநாயகம் பகுப்பாய்வு முறையில் விபரித்துள்ளார். அவரது விபரிப்பு,  யாழ்ப்பாணத்தின் சாதிமுறை நெகிழ்ந்து கொடுத்தல் (Flexibility) செயல்முறை மூலம் முன்னேற்றப் பாதையில் செல்வதை எடுத்துக் காட்டுவதாய் உள்ளது. சமூக அமைப்பில் மாற்றம் எதனையும் அனுமதிக்காத பழமைவாதப் போக்கு, பிரித்தானியர் ஆட்சியின் தொடக்கத்தில் வலுப்பெற்றிருந்தது. பின்னர் படிப்படியாக சாதியத் தளைகள் உடைக்கப்பட்டு, யாழ்ப்பாணச் சமூகம் நவீனத்துவத்தை நோக்கி முன்னேறுவதை  அவரின் கட்டுரை விபரித்துக் கூறுகிறது. அவரது கட்டுரையின் பிரதான அடிக்கருத்தாக (Theme), இறுக்கமும் நெகிழ்ச்சியும் (Rigidity and Flexibility) என்னும் எதிர்முரணான செயல்முறைகளின் இயங்கியல் அமைந்துள்ளது.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

9425 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)