அறிமுகம்
தற்கால உலகளாவிய அபிவிருத்திப் போக்கானது பேண்தகைமையுடையதாக இல்லை என்பதை சூழல், பொருளாதாரம் மற்றும் சமூகக் குறிகாட்டிகள் எடுத்தியம்புவதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிடுகின்றது. மேலும், வளங்கள் வரையறுக்கப்பட்டவையாக இருப்பதுடன், அதிகரித்த சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் இருப்பதால், பேண்தகு அபிவிருத்தியே இதற்கு ஒரே தீர்வாகும் எனவும் ஐ.நா வலியுறுத்துகின்றது. தமக்கான பேண்தகு அபிவிருத்திக்கான பயணத்தில் ஒவ்வோரு நாடும், பல்வேறு சவால்களினை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இச்சவால்களில் பல, எல்லா நாடுகளுக்கும் பொதுவானவையாகவும், வேறுசில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் தனித்துவமானவையாகவும் காணப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் மக்கள் தற்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக அதிகரித்த வறுமை, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சக்தி வளங்களின் வினைத்திறனற்ற பாவனை, நீர்ப் பாதுகாப்பின்மை, அதிகரித்த சூழல் மாசடைதல், மனித உரிமை துஸ்பிரயோகம், சுய போக்குவரத்தின் மிதமிஞ்சிய பாவனை, சுற்றாடல் தரம் குன்றல், உலகமயமாக்கல் போன்றவை காணப்படுகின்றன.
‘நிலைபேண்தகு அபிவிருத்தி’ அல்லது ‘நிலைத்து நீடித்திருக்கும் அபிவிருத்தி’
ஆரம்பகாலங்களில் ‘அபிவிருத்தி’ என்று பேசப்பட்டுவந்த எண்ணக்கருத்தானது, பிற்காலத்தில் ‘நிலைபேண்தகு அபிவிருத்தி (Sustainable Development)’ என்ற மேம்பட்ட பதத்தினால் அழைக்கப்படுகின்றது. இது அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான எண்ணக்கருவாகும். இதனை வரைவிலக்கணப்படுத்துவது கடினமானதாகும். ஏனெனில் இது தொடர்ச்சியாக விருத்தியடைந்து (Evolving) செல்லும் ஒரு எண்ணக்கருவாகக் காணப்படுகின்றது.
“எதிர்காலச் சந்ததியினருக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் மக்களின் இன்றைய தேவையினை பூர்த்திசெய்வது மற்றும் வறுமையினை குறைப்பதற்குமான ஓர் நடவடிக்கை” என பேண்தகு அபிவிருத்தயை பிரெண்லாண்ட் ஆணைக்குழு முதன்முதலாக 1987 ஆம் ஆண்டு வரைவிலக்கணப்படுத்தியுள்ளது. இது பொருளாதாரம், சமூகம், மற்றும் சூழல் என்கின்ற மூன்று தளத்திலே கட்டியெழுப்பப்படுகின்றது. கலாசாரம் மற்றும் தனிமனிதன் என்பனவும் இதன் கூறுகளாக தற்காலத்தில் கருதப்படுகின்றன.
பேண்தகு அபிவிருத்தியானது சுற்றாடல் வரையறைக்குள் வாழ்தல், உறுதியானதும் ஆரோக்கியமானதுமான சமூகத்தை உறுதிப்படுத்தல், பேண்தகு பொருளாதாரத்தை அடைதல், நல்ல ஆளுகையை உறுதிப்படுத்தல் மற்றும் விஞ்ஞான அறிவை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தல் என்ற ஐந்து வழிகாட்டல் தத்துவங்களினால் இயக்கப்படுகின்றது.
இலங்கையின் வடமாகாணம் எதிர்கொள்ளும் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான சவால்கள்
இலங்கையில் நடைபெற்ற முப்பது வருடகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முழுநாடும் அபிவிருத்திப் பாதையில் பயணிக்கின்றபோதும், அதிகளவிலான பாதிப்புகளுக்கு உட்பட்ட வடக்கு மாகாணம், அதன் நிலைபேண்தகு அபிவிருத்தியில், பல்வேறு பொருளாதாரம்சார், சூழல்சார், சமூகம்சார் மற்றும் கலாசாரம்சார் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.
பொருளாதாரம்சார் சவால்கள்
உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் எற்கனவே காணப்பட்ட, மக்களின் பொருளாதார மூலங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. உயிரிழப்புகள், உடமை இழப்புகள் மற்றும் அங்கவீனங்கள் காரணமாக குடும்பங்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவர்கள் காணாமற்போனமை அல்லது நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால், வடக்கில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது.
யுத்தத்திற்குப் பின்னர் மீள்கட்டமைப்புச் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற போதும், மக்களின் வாழ்க்கைத் தரம் பெருமளவில் மேம்படவில்லை. மாகாணத்தின் வறுமை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்து செல்கின்ற போதும், இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. நகரம், கிராமங்களிடையில் வறுமையின் பரம்பல் இன்றும் சமனற்றுக் காணப்படுகின்றது.
யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் இயங்கிவந்த பாரிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் மீள இயங்க ஆரம்பிக்கவில்லை. விவசாயத்திற்கேற்ற வளமான மண்ணைக் கொண்ட பிரதேசங்களில் மக்கள் விவசாயம் செய்ய இன்னும் அனுமதிக்கப்படவில்லை.
தற்காலத்தில் வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குத் தேவையான தொழிலாளர்கள், தென்னிலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கொண்டுவரப்படுகின்றார்கள். உள்ளூரில் உள்ள தொழிலாளர்களைப் பயிற்றுவித்து தொழில் வழங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நடுத்தரத் தொழிலாளர்களை பயிற்றுவிக்கும் தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் பெரிய நிறுவனங்கள் வடக்கு – கிழக்கில் கிளைகளைத் திறந்து தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுப்பதால், உள்ளூர் மக்களின் வர்த்தக நிறுவனங்கள் அவற்றுடன் போட்டி போட்டுச் செயற்பட முடியாது நட்டமடைகின்றன. இதனால் உள்ளூர் வர்த்தகர்கள் பலர் விரக்திடைந்துள்ளனர்.
அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், உலகளாவிய நிதி நெருக்கடியால் (Global Financial Crisis) பாதிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அதேபோல தற்காலத்தில் வடக்கு, கிழக்கில் கிராமம் – நகரம், படித்தவர் – படிக்காதவர் என்ற வேறுபாடின்றி மக்கள் பல்வேறுவிதமாக நிதி நெருக்கடிக்கு (Financial Crisis among the Local People) ஆளாகி வருகின்றனர்.
முன்னைய காலத்தில் ‘சீட்டுப்போடுதல்’ மூலமாக சிறுகச் சிறுகச் சேமித்து, எமது மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தினர். ஆனால் தற்காலத்தில் சீட்டுப்போட்ட பலரும் ஏமாந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டனர். சொந்தக்காரர் மற்றும் நெருங்கிய நண்பர்களாலேயே ஏமாற்றப்படுகின்றனர். இவை தொடர்பான பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்துள்ளன. இணக்க சபைகளிலும், நீதிமன்றங்களிலும் இவை தொடர்பான பலவழக்குகள் நடைபெற்று வருகின்றன. ‘காசோலை மோசடிகள்’ தொடர்பான செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருகின்றன. ‘வட்டிக்குப் பணம் கொடுத்தல்’ எமது சமூகத்தில் ஒரு பாவச் செயலாகப் பார்க்கப்படுகின்றது. பலர் இன்றும் அதனைச் செய்து வருகின்றனர். பணம் பெற்றவர்களால் ஏமாற்றப்பட்டும் வருகின்றனர். இவை தொடர்பாக எமது மக்கள் விழிப்பூட்டப்பட வேண்டும். அரசியல்வாதிகள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் கிராமங்களில் மற்றும் நகரங்களில் இறங்கி இதற்காகப் பணியாற்ற வேண்டும்.
தற்காலத்தில் எமது பிரதேசங்களில், கட்டுப்பாடுகள் மற்றும் வரையறையின்றி அதிகரித்துச் செல்லும் வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளிடம் அதிகரித்த வட்டிக்கு கடன்களைப் பெற்ற மக்கள், மீளவும் அவற்றைச் செலுத்த முடியாது, விரக்தியடைந்து மன நோயாளிகளாக மாறி வருகின்றனர். வாடகைகக் குத்தகைக்கு (Leasing) வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள், மாதா மாதம் தவணைக் கட்ணங்களைச் செலுத்த முடியாது உள்ளனர். மீளவும், அக் கம்பனிகளால் அவ் வாகனங்கள் கையகப்படுத்தப்படுகின்ற நிலையே அதிகமாகக் காணப்படுகின்றது.
நீண்டகாலமாக பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வடக்கு – கிழக்கில் இயங்கி வந்ததனால், அவற்றிடமிருந்தும் புலம்பெயர் ஈழத் தமிழ் உறவுகளிடமிருந்தும் உதவிகளைப் பெற்று வந்த மக்கள், எதையும் இலவசமாகப் பெறும் மனநிலைக்கு மாற்றமடைந்ததனால், தாம் சுயமாக உழைத்து வாழ்வதில் சோம்பலடையும் நிலைக்கு பழக்கப்பட்டு வருவதும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான தடையாகவுள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
காலநிலை மாற்றமும் பொருளாதாரப் பாதிப்புகளும்
தற்காலத்தில், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு, வனத்துறை, மீன்பிடித்துறை, சுகாதாரம், கரையோரச்சூழல், உயிர்ப் பல்வகைமை மற்றும் மனித வாழிடங்கள் போன்றன கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத் துறைகளைச் சார்ந்த மக்களின் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.
கணிசமான எண்ணிக்கையான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில், கடுமையான காற்றின் அதிகரிப்பு, வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றம் ஆகியவை அவர்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்படுகின்றது.
விவசாய நிலங்கள் கைவிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறும் அவல நிலையும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில், நாட்டின் பரந்துபட்ட கரையோரப் பிரதேசங்களில் மீன்பிடிக்கு கணிசமான பாதிப்பு ஏற்படுவதுடன் கடுமையான அலைகள், நீர்மட்டம் உயர்தல் ஆகியவற்றால் கரையோர உயிர்த்தொகுதியும் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூல வளங்களில் ஏற்படும் சேதம் இந்த நூற்றாண்டின் இறுதியளவில் நாட்டின் பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த பிந்திய அறிக்கை எச்சரித்துள்ளது.
காலநிலை மாற்றத்தின் சமகால அனுபவங்கள்
அண்மைக்கால பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தினம், தினம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி பற்றியே பேசுகின்றன. அவை வெளியிடும் புகைப்படங்களும், காட்டூன் சித்திரங்களும் வறட்சி நிலத்தின் வெடிப்புகளையும், தண்ணீருக்காய் காத்திருக்கும் மக்களையும், நீருக்காய் அலையும் ஐந்தறிவு ஜீவன்களையும் காட்டுகின்றன. வீடுகளின் கிணற்றில் தண்ணீர் இல்லை. குளங்களில், ஆறுகளில் தண்ணீர் இல்லை. குடிநீருக்காக மக்கள் அலைகிறார்கள். கால்நடைகள் குடிக்கத் தண்ணீரில்லாமல் இறக்கின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டோமா? மழைக் காலத்தில் மிதமிஞ்சிய மழை நீரைச் சேமித்தோமா? ஊர்க் குளங்களையும், கோயிற் கேணிகளையும் தூர்வாரினோமா? சில இடங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இவ்வாறான நல்ல செயற்பாடுகளினை (Good Practices), நாம் எதிர்காலத்தில் அனைத்துப் பிரதேசங்களிலும் முன்னெடுக்க வேண்டும்.
மழைக் காலத்தில் கடலைச் சென்றடையும் நல்ல தண்ணீரை, வீடுகளில், பாடசாலைகளில், சனசமூக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் சேமிப்பதற்கான முயற்சிகளை இனியாவது முன்னெடுக்க வேண்டும். பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில் கோட்பாட்டு ரீதியில் கற்றதை, நடைமுறையில் பிரயோகிக்க வேண்டும். இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும். கிராமத்து, நகரத்து இளைஞர்கள் இதில் கூடிய பங்காற்ற முடியும். எமது நிலத்தில், நன்நீரை நீண்ட காலத்துக்கு நிலைநிறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல்வாதிகள், நீர்வளங்களின் பங்கீட்டில் அரசியல் செய்ய முனையக் கூடாது. பொது நோக்கில் அனைத்து மக்களும் பயனடையும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வடமாகாணத்தில் ‘பேண்தகு விவசாயம்’
பேண்தகு விவசாயம் (Sustainable Agriculture) தொடர்பாக எமது விவசாயிகள் அறிவூட்டப்பட வேண்டும். இலங்கையில் விவசாய நடவடிக்கைகளில் இரசாயன வளமாக்கிகள் மற்றும் இரசாயன கிருமி நாசினிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதனால், குறுகிய காலத்தில் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதும், இவ் உணவுகளை உண்ணும் மக்கள் அதிகளவில் சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.
இலங்கையில் இரசாயன வளமாக்கிகளின் பாவனை உயர்ந்த அளவிலுள்ள மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாண மாவட்டம் காணப்படுகின்றது. இதன் விளைவாக நிலத்தடி நீர் அதிகளவில் மாசடைகின்றது. மக்கள் அதிகளவில் புற்றுநோய்த் தாக்கத்திற்கு உட்பட்டு வருகின்றனர்.
வெள்ளப் பாதிப்பை எதிர்த்து நிற்கக் கூடிய பயிரினங்களை தெற்காசியாவில் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. அத்துடன் கரையோர வலய முகாமைத்துவம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும். நோய்க் கண்காணிப்பு, தரைநீர்ப் பாதுகாப்பு, நீர்ச் சுற்றுவட்டப் பயன்பாடு என்பனவற்றில் அதிகளவுக்கு கவனம் செலுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
சேதன விவசாயம், நீரைச் சிக்கனமாக பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாய முறைகள், மண் பரிசோதனைகள், பயிர்ச் சிகிச்சை முறைகள், அறுவடைக்கு பின்னரான தொழில்நுட்பம் என்பன தொடர்பான அறிவும் செயன்முறை விளக்கமும் எல்லா விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சந்தைகளில், மருந்தடிக்காத புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளையே விற்பனை செய்யும் மனப்பாங்கை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விருத்தி செய்ய வேண்டும். எமது தேசிய மற்றும் சமூக உணர்வுகளை இவற்றின் மூலமும் நாம் வெளிக்காட்ட முடியும்.
வடக்கு மாகாணத்தில் ‘பேண்தகு மீன்பிடி’ (Sustainable Fisheries)
எமது பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மூலங்களில் ஒன்றாக விளங்குவது மீன் பிடியாகும். ஆனால் தற்காலத்தில் அதிக பிரச்சினைகளை எமது பிரதேச மீனவர்கள் எதிர்கொண்டு வருகின்றார்கள். தமிழ்நாடு மற்றும் தென்னிலங்கை மீனவர்கள் அத்து மீறி எமது பிராந்தியக் கடற்பரப்பில் மீன் பிடித்தல், சட்டவிரோத மீன்பிடி முறைகளை கையாளல், ஆழ்கடல் மீன் பிடிக்கான தொழில்நுட்பங்களும் சாதனங்களுமின்மை, கடற் பரப்பில் மீன் வளங்கள் குறைவடைந்து செல்லல், மயிலிட்டி போன்ற மீன்பிடித் துறைமுகங்கள் மீனவர்கள் பாவனைக்காக விடுவிக்கப்படாமை மற்றும் கடுமையான காலநிலை மாற்றத்தால் உள்ளூர் மீன்பிடி நீர் நிலைகள் வற்றிப் போனமை போன்ற பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்றார்கள். நிலைத்து நீடித்திருக்கக் கூடிய மீன்பிடி தொடர்பாக தற்போதே நாம் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இல்லையெனில் எமது முக்கியமான பொருளாதார மூலங்களில் ஒன்றான மீன்பிடியை, எதிர்காலத்தில் முற்றாகக் கைவிட வேண்டிய சூழல் ஏற்படலாம். தமிழ்நாடு மற்றும் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி எமது பிராந்தியக் கடற்பரப்பில் மீன்பிடித்தலை முற்றாகத் தடை செய்ய வேண்டும். நாமும் எமது பக்கமுள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும். சட்டவிரோத மீன்பிடி முறைகளான சிறகுவலை பயன்படுத்தல், மடி வலைகளைப் பயன்படுத்தல், தங்கூசி வலைகளைப் பயன்படுத்தல், குழை போட்டு கணவாய் பிடித்தல் மற்றும் டைனமற்றுக்களை பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்றவற்றைக் கைவிட வேண்டும்.
தினமும் மீன்பிடித் துறைமுகங்களில் மற்றும் கடற்கரை நீரில் கொட்டப்பட்டுக் கிடக்கும் பயன்பாடற்ற கடலுணவுக் கழிவுகளில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களின் குஞ்சுகளைப் பார்க்கும் போது, நெஞ்சு பதைபதைக்கின்றது. எவ்வளவு கடல் உயிரின வளம், ஒவ்வொரு மீனவராலும் வீணாக்கப்படுகின்றது. இவற்றைத் தடுப்பது தொடர்பாக மீனவர்கள் விழிப்பூட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டில் அமுலிலுள்ளதைப் போன்று, மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் மீன்பிடிப்பதைக் கைவிடவேண்டும். பேண்தகு மீன்பிடி தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்பூட்டப்பட வேண்டும். பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இதில் கூடிய பங்காற்ற முடியும்.
பிராந்தியத்தின் சூழல்சார் சவால்கள்
எமது பிராந்தியம் பல்வேறுபட்ட சூழல்சார் சவால்களை, தற்காலத்தில் எதிர்நோக்கி வருகின்றது. தரை, வளி, நிலத்தடி நீர், நன்னீர் நீர் நிலைகள் மற்றும் கடற் கரைகள் என்பன வேகமாக மாசடைந்து வருகின்றன. முற்காலத்தில் ஒவ்வொரு வீட்டுக் காணியும் பெரிதாக இருந்ததனால், எமது வீடுகளில் சேரும் திண்மக் கழிவுகளை எமது காணியின் ஓர் மூலையில் எரித்தோ அல்லது புதைத்தோ, சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படா வண்ணம் அவற்றைச் சிறப்பாக கழிவு முகாமைத்துவம் செய்யக் கூடியதாக இருந்தது. ஆனால் தற்காலத்தில் கிராமப் புறங்களில் கூட திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்ய முடியாதுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் வாகனங்கள் கிரமப்படி குப்பைகளை அகற்றாது விடின் எமது தெருக்கள் துர்நாற்றமெடுக்கும் நிலையே இன்று காணப்படுகின்றது. பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் கழிவுகளை முறையாக முகாமை செய்வதில்லை. பிரதேச எல்லையில் கொண்டுபோய்க் கொட்டி தீவைத்து விடுகிறார்கள்; அல்லது புதைத்து விடுகிறார்கள்.
திண்மக் கழிவுகளை முகாமை செய்வதற்கான தொழில்நுட்பங்களோ, அது தொடர்பான பயிற்சி பெற்ற ஆளணியினரோ எம்மிடம் இல்லை. திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பாக, பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் விழிப்பூட்டப்பட வேண்டும். ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களும் தமக்கான திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையங்களை அமைத்து, தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் கழிவுகளை முறையாக முகாமை செய்ய வேண்டும். இதன் மூலம் பிரதேச இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புகளும் ஏற்படும்.
மேலும் பல சூழல்சார் பிரச்சினைகளை நாம் சம காலத்தில் எதிர்நோக்கி வருகின்றோம். சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்கள் வெட்டப்படுகின்றன. கடலரிப்பு மற்றும் மண்ணரிப்பைத் தடுப்பதற்காக வடமராட்சி கிழக்கில் நாட்டப்பட்ட சவுக்கு மரங்கள் விறகுக்காக அழிக்கப்படுகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் சட்டவிரோதமான முறையில் காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன. இயற்கை வளங்களான, மணல் மண் மற்றும் கருங்கற்கள் களவாடப்படுகின்றன. இவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், ஊடகங்கள் விழிப்புணர்வூட்டிய போதும், அரசியல்வாதிகள் – அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் இவ் முறையற்ற செயல்கள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இவற்றைச் செய்பவர்களின் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்பட்டாலன்றி இவற்றை நிறுத்த முடியாது. பொது மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் இவை தொடர்பான சமுதாயக் கல்வி மூலம் மாற்றங்களைக் காண நாம் முயற்சிக்க வேண்டும்.
இலங்கையில் மனிதர்களிடையிலான முரண்பாட்டுக்கு அடுத்ததாக, பெரிய பிரச்சினையாக இருப்பது, மனிதனுக்கும் யானைகளுக்குமுள்ள முரண்பாடாகும் (Human – Elephant Conflict). காட்டு யானைகளின் தாக்குதலில் பல மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சொத்துடமைகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பயிர்கள் சேதமாக்கப்பட்டிருக்கின்றன. யானைகள் பயணிக்கும் பாதைகளை இடைமறித்து மக்கள் தமது வீடுகளையும், வீதிகளையும் மற்றும் உட்கட்டுமானங்களையும் அமைத்ததாலேயே இந் நிலை ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
அண்மைக் காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் விசர் நாய்க்கடி மற்றும் குளவிக் கடிக்கு ஆளாகி வருகின்றனர். வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் என்றாலே, குளவிப் பாதிப்புதான் ஞாபகத்திற்கு வருகின்றது. சிகிரியாவில் அடிக்கடி உல்லாசப் பயணிகள் குளவிக் கடிக்கு உள்ளாகும் செய்திகளை நாம் பத்திரிகைகளில் படிக்கின்றோம். மலைநாட்டிலும் குளவிகளின் தொல்லை அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த ஆபத்தை தடுப்பதற்கான வழிமுறைகளை நாம் இன்னும் கண்டறியவில்லை. இப்படியான பிரச்சினைகளை தீர்க்க்கூடிய கல்வியே இன்று எமக்குத் தேவையாகவுள்ளது.
பிராந்தியத்தின் சமூகம்சார் சவால்கள்
யுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பல்வேறு சமூகம்சார் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தற்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு எமது பிரதேசங்களில் சமூகச் சீர்கேடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. எமது இளைஞர்கள் மத்தியில், மதுப்பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுகின்றது. இலங்கையில் புகையிலைப் பாவனையைக் குறைத்தல் என்ற பொதுநலனை அடிப்படையாகக் கொண்டு, கடந்த வருடங்களில் புகையிலைக்கு மாற்றீடான பயிர்ச் செய்கையை மேற்கொள்வது தொடர்பாக, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதாரப் பணிமனையால் விவசாயிகள் விழிப்பூட்டப்பட்டனர். இது போன்ற நன்முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மைக்காலத்தில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. அதனைப் பின்பற்றி எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிர்வாகங்களும் செயற்படலாம். ‘தமது வர்த்தக நிலையங்களில் புகைத்தல் பொருட்கள் விற்பதில்லை’ என்று முன்மாதிரியாகச் செயற்படும் வர்த்தகர்களைப் பின்பற்றி ஏனைய வர்த்தகர்களும் செயற்பட வேண்டும்.
தற்காலத்தில் எமது சமூகத்தில் கொலை, கொள்ளை மற்றும் குழு மோதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் இவற்றை ஊக்குவிக்கின்றன. இக் குற்றச்செயல்களின் பின்னால் மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று உள்ளதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மையாயின் அதன் தோற்றுவாய் கண்டறியப்பட்டு உடனடியாகக் களையப்பட வேண்டும். மக்கள் நலம்சார்ந்த அரசியல்வாதிகள் இதில் முனைப்புடன் செயற்பட வேண்டும்.
பாலியல் துஸ்பிரயோகங்கள், சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் இள வயதுத் திருமணங்கள் தொடர்பான செய்திகள் அடிக்கடி ஊடகங்களில் வெளிவருகின்றன. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துச் செல்கின்றன. முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களின் தவறான பாவனை காரணமாக அவை சார்ந்த குற்றங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இணையம் சார்ந்த குற்றங்களைத் தடுக்க முறையான பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
யுத்தத்தினால் விதவையாக்கப்பட்ட பெண்களிற்கான மறுவாழ்வு, மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஒதுக்கப்படாது, சமூகத்தோடு இணைக்கப்பட்டு வாழ்தல் என்பன சமூகத்தில் ஏற்படும் புரட்சிகரமான மாற்றங்கள் மூலமே சாத்தியப்படக் கூடியதாகும். இது தொடர்பாக அனைவரது மனங்களிலும், சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். எமது சமூக மட்டங்களிடையில் புரையோடிக் காணப்படும் சமூக வேறுபாடுகள் களையப்பட வேண்டும். இதற்கு நாம் கற்கும் கல்வி பயன்பட வேண்டும்.
நாம் எதிர்கொள்ளும் சமூகம்சார் சவால்களை தீர்ப்பதற்கான முயற்சிகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் செயற்படும் வகையில் பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், நல் விழுமியங்கள் போதிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் இனியும் செயற்படாது, வாளாவிருக்கக் கூடாது. இளைஞர்கள் மற்றும் யுவதிகளை நல்வழிப்படுத்துவதில், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து காத்திரமாகப் பணியாற்ற முடியும். வழிபாட்டுத் தலங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சனசமூக நிலையங்கள் தமது தார்மீகக் கடமையில் இருந்து ஒரு போதும் தவறிவிடக் கூடாது.
நிலைபேண்தகு அபிவிருத்திக்கும், கல்விக்கும் இடையிலான தொடர்பு
சவால்களை எதிர்கொண்டு பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கான முக்கியமான வழிமுறையாக கல்வி மற்றும் முறையான பயிற்சி என்பன விளங்குகின்றன. கல்வியானது சந்தேகத்திற்கு இடமின்றி, நெடுங்காலம் நீடித்திருக்கத்தக்க சமூக, பொருளாதார மாற்றத்துக்கான முக்கியமான கருவியாகவுள்ளது. தனியே தொழில்நுட்பத் தீர்வுகளாலோ, அரசியற் சீராக்கங்களாலோ அல்லது நிதிசார் கருவிகளாலோ பேண்தகு அபிவிருத்தியை அடைந்துவிட முடியாது. மாறாக, எமது சிந்தனை மற்றும் செயற்பாட்டுப் பாதையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. கல்வி, பயிற்சி மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு என்பவற்றால் சமூகத்தை பேண்தகுநிலை நோக்கி நகர்த்த முடியும் என உலகளாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதுள்ள இலங்கையின் கல்வி நடவடிக்கைகளும் அவற்றின் பயன்படு தன்மையும்
இலங்கையில் அறுபது வருடங்களுக்கு மேலாக, ஆரம்பக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகக் கல்வி வரையில் அரசினால் கல்வி இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. எழுத்தறிவு வீதம் ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. இருந்த போதிலும் எமது நாட்டின் கல்வியின் பயன்படு தன்மை தொடர்பான விமர்சனங்கள் அனைத்து மட்டங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.
‘பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்படுகின்ற திறன்களுக்கும் தொழிற்தலங்களின் தேவைகளுக்கும் இடையில் பொருத்தப்பாடின்மை காணப்படுகின்றது’ என்பதே கல்வியைப் பற்றிய பொதுவான விமர்சனமாகவுள்ளது. இலங்கையின் கல்வி பற்றி தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னை நாள் பணிப்பாளர் நாயகம் உபாலி சேதர அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“எமது நாட்டில் தற்போது காணப்படும் முறையான கல்வி மற்றும் பயிற்சி என்பன உற்பத்தித் திறன், தேசிய போட்டித் திறன் மற்றும் நல்லாட்சி என்பவற்றை மேம்படுத்தி வரவில்லை. மேலும், மிக உயர்ந்த கல்வித் தகைமைகளைப் பெற்றிருந்த நபர்களை ஏனைய நாடுகளில் வாழ்ந்து வரும் அவர்களது சகாக்களுடன் ஒப்பிடும் பொழுது தேசிய பொருளாதாரத்துக்கும் சமூக அபிவிருத்திக்கும் கணிசமான அளவிலான பங்களிப்பை அவர்கள் வழங்கி வந்திருக்கவில்லை” எனக் குறிப்பிடுகின்றார்.
நிலைபேண்தகு அபிவிருத்திக் கல்வி (Education For Sustainable Development – ESD)
நிலைபேண்தகு அபிவிருத்திக்கு தடையாக உள்ள பிரச்சினைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் இணைத்தல் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி எனப்படும். நிலைபேண்தகு அபிவிருத்தியின் தத்துவங்களையும், எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்ட கற்றல் – கற்பித்தல் அணுகுமுறை எனவும் இது அழைக்கப்படுகின்றது.
‘நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி’ 1950 ஆம் ஆண்டில் இயற்கை பற்றிய கல்வி (Nature Education) எனவும், 1980 ஆம் ஆண்டில் சூழல்சார் கல்வி (Environmental Education) எனவும் அழைக்கப்பட்டது. சூழல்சார் கல்வியின் மிகப் பிந்திய பரிணாமமாகவே இது தற்போது கருதப்படுகின்றது. ‘நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி’ என்ற பதமானது 2000 ஆம் ஆண்டளவில் உருவாக்கம் பெற்ற எண்ணக்கருவாக காணப்படுகின்றது.
நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வியானது, நிலைபேண்தகு எதிர்காலத்துக்கு தேவையான அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் விழுமியங்களைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றது. மேலும் இது ஒவ்வோர் நாட்டுடனும், சமூகத்துடனும் தொடர்புடையதாகவும், அவர்களின் கலாசாரத்துக்கு பொருத்தமானதாகவும் இருப்பதுடன் சுதேச அறிவையும், சுதேச மொழிகளையும் கல்வியில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றது. மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான ஒர் பொறிமுறையாகவும் இது கருதப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் 2005 – 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியை நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்விக்குரிய பத்தாண்டாக (Decade of Education for Sustainable Development – DESD) பிரகடனப்படுத்தியிருந்தது. பெரும்பாலான உலக நாடுகள் முறைசார் கல்வியில், இதற்கான கொள்கை, கலைத்திட்ட விருத்தி, உத்திகள், மற்றும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கையேடுகளின் விருத்தி என்பனவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி வாய்ப்புகளினை, முறைசார் கல்வியின் ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரையிலான கலைத்திட்டத்தில் பொருத்தமாக உள்ளடக்குவதுடன், முறைசாரக் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டிலும் பயன்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் இலங்கையில் 2012 டிசம்பரில் தான் சமாதானம் மற்றும் பேண்தகு அபிவிருத்தி கல்விக்கான கொள்கையொன்று யுனஸ்கோவின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை உணர முடியும்.
இலங்கையின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில், நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி வாய்ப்புகள் ஆங்காங்கே உள்ள போதும், உலகளாவிய ரீதியில் அபிவருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இதன் அமுலாக்கத்தில் நாம் பின்தங்கியே உள்ளோம். நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வியினை இலங்கையில் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுலாக்குவது தொடர்பாக தீவிரமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது.
பேண்தகுஅபிவிருத்திக்கான கல்வியின் கற்றல் – கற்பித்தல் அணுகுமுறைகள்
நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வியின் கற்றல் – கற்பித்தல் அணுகுமுறைகளாக அனுபவம்சார் கற்றல் (Experiential learning), விசாரணையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (Inquiry based learning), கூட்டாகக் கற்றல் (Collaborative learning), செயற்றிட்டங்களை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (Project – based learning), தகவற் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பொருத்தமாக ஒன்றிணைத்தல் (Integration of ICT), வகுப்பறைக்கு வெளியிலான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுதல் (Learning outside the classroom), மற்றும் சமூகம்சார் பிரச்சினைகளைத் தீர்த்தல் (Community problem solving) என்பன இனங்காணப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் முன்னெடுக்க வேண்டிய பேண்தகு அபிவிருத்திக்கான கல்விச் செயற்பாடுகள்
பெரும்பாலான பாடசாலைகள், பாடசாலைச் சூழலை அழகுபடுத்தலை மாத்திரம் நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன. ஆனால் இது மட்டும் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்விக்கு உதவப் போவதில்லை. மாறாக மாணவர்களை பயனுள்ள செயற்றிட்டங்களில் ஈடுபடுத்தல், பாடசாலைக் கட்டடங்களை சூரியப் படல்களுடன் கூடிய பசுமைமிக்க கட்டடங்களாக்குதல், மீழ்சுழற்சி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல், நீர்ப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றல், பாடசாலையைச் சூழ மரங்களை நாட்டுதல், பாடசாலையில் காய்கறித் தோட்டத்தையும் மூலிகைத் தோட்டத்தையும் அமைத்தல், கலைத் திட்டத்தின் எல்லா விடயங்களிலும் பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி வாய்ப்புகளிருப்பதை உறுதிப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள், நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்விச் செயற்பாடுகளாக உலகளாவிய ரீதியில் இனங் காணப்பட்டுள்ளன.
நிலைபேண்தகு பாடசாலை (Sustainable School) ஒன்றில் பாடசாலைக் கொள்கைகள், பாடசாலை நாட்காட்டி, மாணவர் கழகங்கள், அறிவுப் பரவலாக்கம் மற்றும் விழுமியப் பரவலாக்கம், ஜனநாயகச் செயற்பாடுகள், பாடசாலை மைதானம், கற்றல் – கற்பித்தல் முறைகள், வளங்களின் பயன்பாடு, குழுச் செயற்றிட்டங்கள், செயல்நிலை ஆய்வுச் செயற்றிட்டங்கள், சமூகத்திற்கான அறிவுப் பகிர்வு மற்றும் பல்துறைகளுக்கிடையிலான கற்றல் செயற்பாடுகள் ஆகிய விடயங்களில் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி வாய்ப்புகள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின்வரும் விளக்கப்படம் இதனை விளக்குகின்றது:
பிராந்தியத்தில் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி அமுலாக்கத்துக்கான சவால்கள்
பிராந்தியத்தில் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி அமுலாக்கத்தில் பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி அமுலாக்கம் தொடர்பான முறையான கொள்கைகள் மற்றும் தூர நேக்குகள் எங்களிடம் போதியளவில் காணப்படவில்லை. கல்விசார் ஆளணியினர் மற்றும் பொதுமக்களிடம் நிலை பேண்தகு அபிவிருத்திக்கான கல்வி தொடர்பான போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கலைத் திட்டத்தில், நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி வாய்ப்புகளை பொருத்தமாக உட்புகுத்துவதில் சிரமப்பாடுகள் உள்ளன. சமூகத்துடன் ஒருங்கிணைந்து நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்விச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகள் காணப்படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இது தொடர்பான பயிற்சி வழங்குவதில் இடர்பாடுகளை எதிர்கொள்ளல் போன்ற சவால்கள் காணப்படுகின்றன.
வடக்கு மாகாணத்தில் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வியை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள்
கல்விசார் ஆளணியினர் மற்றும் பொது மக்களிடம் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி தொடர்பான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கலைத் திட்டத்தில் பொருத்தமான இடத்தில், பொருத்தமான கட்டமைப்பில் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான கல்வி விடயதானங்களை உட்புகுத்த வேண்டும். எமது சுதேச மற்றும் பாரம்பரிய அறிவையும், தொழில்நுட்பங்களையும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். பொறுப்புகளைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும். மனித ஆற்றலைக் கட்டியெழுப்ப வேண்டும். நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களை விருத்திசெய்ய வேண்டும்.
முடிவுரை
உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடும் தமது நாட்டின் நிலைபேண்தகு அபிவிருத்திக்கு பொருத்தமான கல்வி முறையை, கலைத்திட்டத்தை, கற்றல் – கற்பித்தல் செயற்பாட்டை வடிவமைத்துக் கொண்டிருக்கும், செயற்படுத்தி வரும் நிலையில், நாம் எமது நாட்டின் கல்வி பற்றி, குறிப்பாக எமது வடக்கு மாகாணத்தின் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான சவால்கள் பற்றியும், அவற்றினை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு தற்போதுள்ள கல்விச் செயற்பாடுகளின் இயலுமை மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பது பொருத்தமானதாகும்.
வடமாகாணத்தின் நிலைபேண்தகு அபிவிருத்திக்கான சவால்களை தீர்ப்பதற்கான வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும். வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள், யாழ்பாணப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள், கரிசனையுடன் கருமமாற்ற வேண்டும். பொருத்தமான முறையில் சமுதாயக் கல்வி வழங்கப்பட வேண்டும். பொதுமக்கள் அறிவூட்டப்பட வேண்டும். புதிதாகச் சிந்திப்போம்; எமக்கான கல்வியைக் கண்டறிவோம்; நடைமுறை மற்றும் எதிர்காலச் சவால்களைத் தகர்த்தெறிவோம்.
உசாத்துணைகள்
- UNESCO World Conference on Education for Sustainable Development, Learning Today for a Sustainable Future, 10-12 November 2014, Aichi-Nagoya, Japan, Available at http://unesdoc.unesco.org/images/0021/002173/217373E.pdf, Retrieved on 03-03-2014.
- UNESCO(2014), Green Schools Asia, http://www.unescogreenschools.org/pages/about_esd
- UNESCO(2013), http://www.unescogreenschools.org/pages/about_esd
- UNESCO (2012), From Green Economies to Green societies.
- McKeown,R.(2002) Education for Sustainable Development Toolkit, Energy, Environment and Resources Center University of Tennessee,USA, http://www.esdtoolkit.org
- Sedera,M(2010), Knowledge economy and general education, Economic Review, People Bank.
- John Woollard, http://www.pgce.soton.ac.uk/IT/Curriculum/ICTAC/ESD
- UNESCO(2010), Teaching and Learning for a Sustainable Future, A multimedia teacher education programme, http://www.unesco.org/education/tlsf/