யாழ். மூளாய் மருத்துவமனை : பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு
Arts
15 நிமிட வாசிப்பு

யாழ். மூளாய் மருத்துவமனை : பிறப்பு – இறப்பு – மறுபிறப்பு

August 15, 2024 | Ezhuna

நீண்டகால யுத்தத்தின் முடிவிற்கு பின்னர், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகாத நிலையில், மீள்கட்டுமானத்திற்கும் அபிவிருத்திக்கும் அரசிடமிருந்து போதுமான ஆதரவு கிடைக்காத சூழலே யதார்த்தமாகியிருக்கிறது. இந்நிலையில், வடக்கில் முனைப்படைந்து வரும் தொழில் முயற்சிகளையும் முயற்சியாளர்களையும் பலரதும் கவனத்திற்கு கொண்டுவருவதே ‘வளரும் வடக்கு’ எனும் இத் தொடரின் நோக்கமாகும். வடக்குப் பிரதேசத்தில் புலம்பெயர் சமூகத்தின் முதலீடு, புத்தாக்க தொழில் முனைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எத்தனிப்புகள், தொழில் முனைவோரின் அனுபவப் பகிர்வு, முயற்சிகளின் தோல்விகளில் இருந்து கற்ற பாடம், வடக்கு பிரதேசத்தில் தனித்துவமாகக் காணப்படக்கூடிய பிரச்சனைகள், உலகளாவிய சமூகத்துடன் இணைந்து முயற்சிகளை வெற்றிகரமாக மாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இத்தொடர் அமையும். இத் தொடர் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக, பொருளாதார முயற்சிகளை விபரிப்பதோடு மட்டுமே நின்றுவிடாது, அதன் தொடர்ச்சியான அசைவிற்குத் தேவையான முன்னெடுப்புகளின் சாத்தியம் குறித்தும் இலங்கையின் பொருளாதாரப் பின்னணியில் தரவுகளோடு ஆராய்கிறது. இது புதிய முயற்சியாளர்களுக்கு பாடமாக அமைவதோடு மேலும் பல முயற்சியாளர்களை வடக்கை நோக்கி வரவழைக்கும்.

காரைநகர் தீவை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் இணைப்புத் தெருவின் வடமேற்கு மூலையில் இருக்கிறது மூளாய் என்னும் ஒரு சிறு கிராமம். பிரபலமான கசூரினா கடற்கரை மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி அமைந்திருக்கும் வட்டுக்கோட்டை ஆகியவற்றை யாழ்ப்பாணத்துடன் இணைக்கும் முக்கிய கிராமமும் இதுவே. மூளாய் கூட்டுறவு மருத்துவமனை இல்லாவிட்டால் இக்கிராமம் இவ்வளவு பிரபலமாகியிருக்க முடியாது.

moolai

பிரித்தானிய மலாயாவிலிருந்து தாயகம் திரும்பும் தமிழரது சேமிப்பையும் ஓய்வூதியத்தையும் மூலதனமாகக் கொண்டு 1935 இல் ஆரம்பிக்கப்படது இந்த மருத்துவமனை. தென்னாசியாவிற்கு முதன் முதலாக அறிமுகமான, கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களுக்கே சொந்தமான, இலாப நோக்கமற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்ட இம்மருத்துவமனை, அதன் அங்கத்தவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்பிராந்தியத்தில் வேறுபல மருத்துவமனைகளும் ஆரம்பிக்கப்பட்டன என்பது வரலாறு. சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கா 1939 இல் இங்கு வருகை தந்தபோது, “இன்று நான் (மூளாய்) மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பெருமைப்பட்டுக் கூறக்கூடிய வகையில் மிகவும் தனித்துவமான வகையில் நிறுவப்பட்டிருக்கும் இந்நிறுவனம் இலங்கைக்கே முதன்மையானது. கூட்டுறவு முறையில் சமூக முன்னேற்றத்தை முன்னெடுப்பதன் மூலம் முன்னுதாரணமாகத் திகழும் இந்நிறுவனம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. அதன் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வேண்டுமென நான் விரும்புகிறேன்” எனக்கூறியிருந்தார்.

மூளாய் மருத்துவமனை

ஒரேயொரு மருத்துவருடனும் இரண்டு அப்போதிக்கரிகளுடனும் (மருந்தாளர்கள்) 1935 இல் இம்மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. மலாயாவிலிருந்து திரும்பிய இம்மூன்று ‘பென்சனியர்களும்’ தமது சேவைகளை இலவசமாகவே வழங்கினர். 1949 இல் 3 மருத்துவர்கள், 8 மருந்தாளர்களுட்பட 59 பணியாளர்களைக் கொண்டதாக இது பரிணமித்தது. 1970 இல் 5 மருத்துவர்களும் 10 மருந்தாளர்களும் 42 தாதிகளுமுட்பட 122 முழுநேரச் சம்பளம் பெறும் பணியாளர்களுடன் இம்மருத்துவமனை வளர்ச்சியுற்றிருந்தது. 2009 இல் போர் முடிவுக்கு வந்தபோது இங்கு 2 நிரந்தர மருத்துவர்களும் ஒரு மருந்தாளரும் 12 தாதிகளுமே பணி புரிந்தனர். அத்தோடு கண், தோல், பல், இருதய வியாதிகளுக்கான விசேட மருத்துவர்கள் யாழ். மருத்துவமனையில் கடமையை முடித்துக்கொண்டு மாலையில் இங்கு வந்து நோயாளிகளைப் பார்த்தார்கள். நிதி நிலைமை ஒத்துழைக்குமானால் இவ்விசேட மருத்துவர்களில் சிலர் மூளாய் மருத்துவமனையில் நிரந்தரமாகவே கடமையில் ஈடுபட்டிருக்க முடியும். 45 பேருக்கு நிரந்தர ஊதியம் வழங்கும் ஒரு நிறுவனமாக இம் மருத்துவமனை உள்ளூர் பொருளாதாரத்துக்கு பங்களிப்பதாக உள்ளது. எளிமையான ஒரு சமூகத்திற்கு மிகவும் பயன் தரும் சேவைகளை வழங்கும் ஒரு ஒளிகாட்டியாக விளங்குவது பெருமைக்குரியது.

moolai name board

இலங்கையின் இனப்போரின் இன்னுமொரு பலியாக, 1995 இல் இம்மருத்துவமனை சிதைக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது. இதன் சிதைவுக்கான காரணத்தை நான் வினவியபோது இம் மருத்துவமனை ஒருபோதும் இலக்கு வைத்துத் தாக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. போராடும் ஒரு தரப்பினரின் இராணுவ நிலைகளுக்கு அருகாமையில் இருந்த காரணத்தால் மறு தரப்பின் குண்டுத் தாக்குதல்களுக்கு இரையாகி, இப் பேரிடரில் அது சிக்க நேரிட்டது. 1995 இல் போர் உக்கிரமடைந்த காலத்தில் இது கைவிடப்பட்டது. மூளாய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் திரு ரெட்ணசிங்கம் இது பற்றிக் கூறுகையில் “1996 இல் எங்களில் சிலர் இம் மருத்துவமனையைப் பார்வையிட வந்தபோது குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி அது மிக மோசமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த உபகரணங்களும், தளபாடங்களும் ஏறத்தாழ முற்றாகக் களவாடப்பட்டிருந்தன” என்றார். இப் பேரழிவையும் பொருட்படுத்தாது ஜூலை 1996 இல், இம் மருத்துவமனை, தின வெளிநோயாளர்  சிகிச்சை நிலையமாக மீண்டும் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து தேவையானபோது மருத்துவ ஆலோசகர்கள் இங்கு வந்து போனார்கள்.

abandoned

2002 – 2007 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் ஒப்பந்தமான போர் நிறுத்த இடைவெளியைப் பாவித்து 2003 இல் மூளாய் மருத்துவமனையின் மீள்கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் இலங்கை மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்து பெருந்தொகையான பணம் வந்து குவிந்தது. பிரித்தானிய, டச்சு, அமெரிக்க அரசுகளும் இணையாகப் பணத்தை வாரி வழங்கின. இலங்கை அரசும் தம் பங்கிற்கு பெருந்தொகையான பணத்தை வழங்கியது. இதன் பலனாக இருதய, கண், நீரழிவு, குழந்தை மற்றும் மகப்பேறுச் சிகிச்சைகள் இங்கு ஆரம்பமாகின. இதைத் தொடர்ந்து மருத்துவ ஆய்வுகூடம் (clinical laboratory), எக்ஸ்-றே கூடம், அறுவைச்சிகிச்சை கூடம் மற்றும் அம்புலன்ஸ் சேவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன. 2007 இல் போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது முதல் 2009 இல் அது முடிவுக்குக் கொண்டுவரப்படும் வரை இம்மருத்துவமனையின் மீள் கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது.

civil war

போர் முடிந்த கையோடு இலங்கையிலும் புலம்பெயர்ந்த தேசங்களிலுமிருந்து தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் இம் மருத்துவமனையின் மீளுருவாக்கத்திற்கென நிதியை வாரி வழங்க ஆரம்பித்தனர். இப்படியானவர்களில் ஒருவரும், பிரித்தானியாவில் கென்ற் என்னும் நகரில் பொதுவைத்தியராகக் கடமையாற்றிவந்தவருமான மருத்துவர் எஸ். ராஜசுந்தரம் அவர்கள் 2016 இல் மூளாய் மருத்துவமனைக்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகள் பற்றி மீளாய்வொன்றைச் செய்தார். அவரது ஆய்வின்படி, மூளாய் மருத்துவமனை முழு அளவில் செயற்படுமேயாகில் சுமார் 180,000 மக்களுக்கு முதன்மை மருத்துவ சேவைகளை வழங்க முடியுமெனவும், இதன் மூலம் நோயாளிகள் 10 மைல்கள் பயணம் செய்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் செல்லத் தேவையில்லை; இதன் மூலம் மூளாய் மருத்துவமனையிலேயே சிறப்பான சேவைகளைப் பெறுவதுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் நெருக்கடி நிலையைத் தவிர்த்துக்கொள்ள முடியும். யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் இடநெருக்கடி காரணமாக, மூளாயிலிருந்து பெருந்தொகை பணச்செலவில் அங்கு செல்லும் நோயாளர்கள் தமது நோய்களுக்கு சிகிச்சைகளைப் பெறுவார்கள் என்ற உத்தரவாதமற்ற நிலையில் நோய்கள் முற்றி உயிராபத்து ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களுமுண்டு எனக் கூறுகிறார் மருத்துவர் ராஜசுந்தரம்.

“மூளாயிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பயணம் அண்ணளவாக ரூ.2,000 ஆகிறது. அதே வேளை ஒருவரின் நாளாந்த வருமானம் ரூ.1,000. செப்பனிடப்படாத தெருக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய ஒருவருக்கு 60-90 நிமிடங்கள் வரை பிடிக்கும். குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் போன்ற சில நோயாளிகள், உதாரணமாக, முற்-பிரசவ தயாரிப்புகள், கட்டுப்பாடற்ற நீரழிவு தொடர்பான கீற்றோஅசிடியோஸிஸ், மெலிற்ரஸ், CHD, CVA போன்ற நோய்கள், தலையில் ஏற்படும் காயங்கள், பாம்புக்கடி போன்ற அவசர சிகிச்சைகளுக்கான நிவாரணங்கள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறாமையால் வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. நவீன அம்புலன்ஸ் வண்டிகள் இருக்குமானால் பயண நேரங்கள் குறைக்கப்பட்டு உரிய நேரத்தில் முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு தேவையற்ற மரணங்களைத் தவிர்க்கக்கூடியதாக இருக்கும்” என மருத்துவர் ராஜசுந்தரம் மேலும் தெரிவித்தார்.

elder care

சிகிச்சை சேவைகளை வழங்குவதோடல்லாமல் 20 வயோதிபர்களுக்கான நீண்டகால பராமரிப்பு உட்பட முதியோர் பராமரிப்புச் சேவைகளையும் மூளாய் மருத்துவமனை வழங்குகிறது. மாதமொன்றுக்கு ரூ.50,000 (வெளிநாட்டுப் பணமாயின் ரூ. 55,000) கட்டணத்திற்கு தனியான கழிப்பறையுடன் கூடிய அறை, உணவு, மருத்துவப் பராமரிப்பு ஆகிய முழுமையான சேவைகளை உள்ளூர் முதியோருக்கு வழங்குகிறது இந்த மருத்துவமனை. மேலும் அதிகமாக முதியோரை உள்வாங்குவதற்காக தனியார் மற்றும் தர்ம ஸ்தாபனங்களின் உதவியுடன் இப்பராமரிப்பு நிலையம் மேலும் விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. மூளாய் மருத்துவமனையை புனர்நிர்மாணம் செய்வதற்காக மூன்று கட்ட நடவடிக்கை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டமாக, சுமார் US$ 1,000,000 செலவில், தற்போதுள்ள பிரதான கட்டிடம் பெண் நோயியல் (Gynaecology), கருத்தரிப்பு ஆலோசனை, பராமரிப்பு (Antenatal), குழந்தைச் சிகிச்சைகள் (Paediatric clinics) ஆகியவற்றுக்காக மாற்றியமைக்கப்பட்டு ஜனவரி 19, 2018 இல் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக US$ 1,000,000 செலவில் அறுவைச்சிகிச்சை பிரிவு ஒன்றை நிர்மாணிக்கும் திட்டமுள்ளது. இக்கூடத்தில் அறுவைச்சிகிச்சை கூடங்கள் மற்றும் சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் நோயாளிகளைப் பராமரிக்கும் அறைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு (Intensive Care Unit) ஆகியன அடங்கும். மூன்றாவது கட்டமாக பணியாளர் தங்குமிடம், வாகனத் தரிப்பிடம் மற்றும் மருத்துவமனை வளாகத்தின் நடைபாதைகள் ஆகியவை நிர்மாணிக்கப்படும்.  

இம்மூன்று கட்ட மீள்கட்டுமானத்துக்கு அப்பாலும் இம்மருத்துவமனைக்கான அபிவிருத்திப் பணிகள் நிறைய இருக்கின்றன. ஆய்வுகூட மெருகூட்டல், புனர்வாழ்வு மற்றும் அந்திமகாலப் பராமரிப்பு சேவைகள் (palliative care), கருவூட்டல் சிகிச்சை (sub-fertility clinic) ஆகிய சேவைகளுக்கான தேவைகளும் உண்டு. இவையெல்லாவற்றையும் வழங்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சேரும். எனினும் பணத் தட்டுப்பாடு, அரசியல் அழுத்தங்கள் என அது எதிர்நோக்கும் சவால்கள் இச்சேவைகளை வழங்க முடியாமல் செய்துவிடுகின்றன. சமூக ஆரோக்கியத்தில் தனது பணியை மேம்படுத்திக்கொள்வதற்கு இம்மருத்துவமனை, சூழவுள்ள கிராமங்களில் உப சிகிச்சை நிலையங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். நோய்களின் ஆரம்பத்திலேயே சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் அவை சமூகத்தில் பரம்பலடையாது பாதுகாத்துக் கொள்ளலாம்.

பழமையின் பெருமைகளை மீளுருவாக்கம் செய்வதில் மட்டும் மூளாய் மருத்துவமனை குறியாக இருக்கிறதென்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தையும் அது வரவேற்கக் காத்திருக்கின்றது. இதன் மூலம் அது வடக்கின் தொழில் நிறுவனங்களை ஆதரிக்கின்றது. யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட ஆரோக்யா லைஃப் (Arogya.life) என்னும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த மருத்துவமனை நிர்வகிப்பு மென்பொருள் மூளாய் மருத்துவமனை நிர்வாகத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. இந் நிர்வகிப்பு மென்பொருள் ஏற்கெனவே கொழும்பிலுள்ள முன்னணி மருத்துவமனைகளிலொன்றான ஹேமா மருத்துவமனையில் வெற்றிகரமாகப் பாவிக்கப்படுகின்றது. தலைநகரிலுள்ள பலம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் போட்டி போடுமளவுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆரோக்யா இருக்கிறது என்பது பெருமை தருவது.

பயன்படு முறையிற் செலவிடப்பட்டாலேயொழிய இலங்கையர் நாம் எமது பணத்தையும் நேரத்தையும் தேவையற்ற விடயங்களில் செலவிடத் தயங்குகிறோம். இக் கட்டுரையை எழுதும் எனக்கும் இது பொருந்தும். 2015 இல் நான் யாழ்ப்பாணம் வந்ததிலிருந்து மூளாய் மருத்துவமனை இயக்குநர் சபைத் தலைவர் திரு ஞானேஸ்வரனுடனான எனது நட்பு ஆரம்பித்தது. அவரை எனக்குத் தெரியாமல் இருந்தால் கூட பேரறிவுள்ள மருத்துவர் அமைப்புகள் உட்பட, இம்மருத்துவமனையின் மீளுருவாக்கத்திற்கென நன்கொடைகள வழங்கியவர்களின் பட்டியல் பிரமிக்க வைக்கிறது. அமைப்புகள் தவிர்த்து, பல தனியார்கள் சில ஆயிரங்களிலிருந்து மில்லியனுக்கும் மேலான ரூபாய்களை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள். இம்மருத்துவமனையின் நிர்வாகத்தில் நம்பிக்கை கொண்டு வாரி வழங்கியவர்கள்:

அரசாங்கங்கள் / அமைப்புகள்

  1. யூ.எஸ்.எயிட் – US Aid (USA)
  2. பிரித்தானியத் தூதரகம் – British High Commission (UK)
  3. நெதெர்லாந்துத் தூதரகம் – Embassy of The Netherlands (Holland)
  4. ஜீ.ஐ.செட் – GIZ (Germany)
  5. யூ.என்.டி.பி. – UNDP (United Nations)
  6. ஆசிய அபிவிருத்தி வங்கி – Asian Development Bank (ADB)
  7. பொதுநலத் தொடரமைப்புகள்
  8. ரட்ணம் அறக் கட்டளை – பிரித்தானியா Ratnam Foundation (UK)
  9. The Refugees Rehabilitation Organization Ltd
  10. அனைத்துலக மருத்துவ நல அமைப்பு (அமெரிக்கா) – International Medical Health Organisation (USA)
  11. North-East Emergency Reconstruction Programme
  12. தமிழர் மருத்துவ அமைப்பு (பிரித்தானியா) – Medical Institute of Tamils (UK)
  13. அனைத்துலக மனித நேயம் அறக்கட்டளை – Manitha Neyam Trust (International)
  14. அவுஸ்திரேலிய மருத்துவ அமைப்பு – Australian Medical Aid Foundation (Australia)
  15. சிறீ கனகதுர்க்கை அம்மன் கோவில் (பிரித்தானியா) – Sri Kanaga Thurkkai Amman Temple (UK)
  16. தமிழர் மருத்துவ அமைப்பு (கனடா) – Medical Institute of Tamils (Canada)
  17. மஹாராஜா நிறுவனம் (இலங்கை) – Maharajah Organization’s CSR (Sri Lanka)
  18. தமிழர் நிலைகொள் குழு (பிரித்தானியா) – Standing Committee of Tamils (UK)
  19. ஹார்ஃபொர்ட்சயர் தமிழர் ஒன்றியம் (பிரித்தானியா) – Tamil Union of Herts (UK)
  20. காரை நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) – Karai Welfare Society (UK)

மூளாய் மருத்துவமனை அதிர்ச்சிகரமான பயணமொன்றை மேற்கொண்டு வந்திருக்கிறது. 1936 இல் அதன் பரோபகாரமான பிறப்பு முதல் இலங்கை இனப்போரின் அழிவுகளையும் தாங்கி இப்போது அது மறுபிறப்பெடுத்திருக்கிறது. வேலணையிலிருந்த தனது நெல் வயல்களைப் பார்வையிட எனது பாட்டி கொழும்புத்துறையிலிருந்து வருடமொரு தடவை மாட்டு வண்டிலில் குதூகலமாகப் பயணம் செய்வது பற்றி அப்போது 6 வயதாகவிருந்த எனது தந்தையார் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். மூளாய் மருத்துவமனையும் இப்படித்தான் சில மைல்கள் தூரமுள்ள அயற் கிராமங்களிலுள்ள மக்களுக்கு வசதியாகவிருந்திருக்கும். இப்போது கார்கள், பஸ்கள், ஸ்கூட்டர்கள், முச்சக்கரவண்டிகள் என மிருதுவான தெருக்களில் பயணம் செய்வதனால் யாழ். குடாநாட்டு மக்கள் அனைவருக்கும் மூளாய் மருத்துவமனை பலன் தருகிறது. வடக்கின் சிறப்புக்கு நடுநாயகமாக விளங்கும் மூளாய் மருத்துவமனை நாட்டின் மிகவும் பின்தங்கிய பிரதேச மக்களுக்கு பிரதான சேவை வழங்குநராக மிளிர்கிறது. அது மட்டுமல்லாது ஆரோக்கியா லைஃப் நிறுவனங்களைப் போல உயர்தர தொழில்நுட்பங்களினதும் சேவைகளினதும் உற்பத்தித் தளமாக இருந்து மேலும் பல புதிய முதலீடுகள், தொழில் முயற்சிகளின் பிறப்பிடமாக மூளாய் வைத்தியசாலை இருக்குமென எதிர்பார்க்கலாம். இக்காரணங்களுக்காகவும் இதர காரணங்களுக்காகவும் மூளாய் மருத்துவமனை எமது ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் உரியதாகிறது. மூளாய் மருத்துவமனை தற்போது  மருத்துவர் ஆர். சுரேந்திரகுமாரை சுகாதார அத்தியட்சகராகவும், திரு எம். ஞானேஸ்வரனைத் இயக்குநர் சபையின் யாழ்ப்பாணத் தலைவராகவும், மருத்துவர் எஸ். ராஜசுந்தரத்தை இயக்குனர் சபையின் பிரித்தானியத் தலைவராகவும் கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. இவர்களது தொடர்புகளைப் பின்வரும் தொடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.  http://moolaihospital.com/contact-us/ 

இக்கட்டுரை ‘லங்கா பிசினெஸ் ஒன்லைன்’ தளத்தில் ஜனவரி 08, 2019 இல் பிரசுரமானது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4862 பார்வைகள்

About the Author

ஜெகன் அருளையா

இக் கட்டுரை ஆசிரியர் ஜெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் தனது பெற்றோருடன் பிரித்தானியாவிற்கு இடம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக, இலங்கையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனங்களிலும் பணியாற்றியவர். 2015 இல், நிரந்தரமாக யாழ்ப்பாணத்துக்குக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)