குயர் மக்கள் தொடர்பான அசைவியக்கங்களும் சமூக ஊடகங்கள் மூலமான வலுப்படுத்தலும்
Arts
18 நிமிட வாசிப்பு

குயர் மக்கள் தொடர்பான அசைவியக்கங்களும் சமூக ஊடகங்கள் மூலமான வலுப்படுத்தலும்

August 17, 2024 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் – சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றிப் பேசவிழைகின்றது.

சமூகச் செயற்பாடுகள் பல்வேறு வழிகளிலும் வடிவங்களிலும் இடம்பெறுகின்றன. பால்நிலை ரீதியில்  ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகம் இடம்பெறுவதனை அவதானிக்க முடிகிறது. இலங்கை மக்களிடையே 2010 ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் உள்ளடங்கலான இணையவழி ஊடகங்களின் பாவனையானது அதிகரித்தது எனலாம். இணையவழி ஊடகங்கள் குயர் மக்களுடைய செயற்பாடுகளுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன. நாளாந்த வாழ்வில் ஏராளமான குயர் மக்கள் இணையவழி ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அண்மைக்காலங்களில் உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் மூலமான குயர் மக்களுக்கான அசைவியக்கங்கள் வலுப்பெற ஆரம்பித்துள்ளன. இலங்கையின் வடபுலம் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பண்பாட்டுச் சூழலுடன் ஒப்பிடும் போது மிகவும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. இறுக்கமான பண்பாட்டுக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் கூட, வடபுலத்தை வாழ்விடமாகக் கொண்ட ஒரு தொகுதி மக்கள் உலக மாற்றங்களுடன் உடன்பட்டு யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதிலும் தம்மை இற்றைப்படுத்திக் கொள்வதிலும் முன்நிற்கிறார்கள்.

இலங்கையின் வடபுலத்தில் இடம்பெறும் சமூக ஊடகங்கள் மூலமான அசைவியக்கங்களானவை மிகவும் வினைத்திறனுடன் செயலாற்றுவதை அவதானிக்கமுடிகிறது. இங்கு இன, மத, வர்க்க, சாதி, கல்வி என்ற வேறுபாடுகள் கடந்து குயர் மக்களும் குயர் செயற்பாட்டாளர்களும் இணைந்து செயற்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் குயர் உரிமைகளை வலியுறுத்தும் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் முதன் முதலில் கொழும்பில் தோற்றம் பெற்றாலும் கூட 2015 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் கொழும்பிற்கு வெளியேயும் தோற்றம் பெற ஆரம்பித்தன. இது யாழ்ப்பாணத்திலும் குயர் மக்கள் சார்ந்த நிறுவனங்கள் தோற்றம் பெறவும் பரிணாம வளர்ச்சி அடையவும் காரணமாகியது. பாலின நீதியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நிறுவனங்கள் தோற்றம் பெற்றுள்ளன.

குயர் சமூகம் சார்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களும் குயர் மக்களும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், இலங்கையில் குயர் உரிமைகளை அதிக அளவில் உள்ளடக்குதல் மற்றும் அங்கீகரித்தல் ஆகியவற்றை நோக்கிய தெளிவான மாற்றமும் தேவையாகவுள்ளது. தனிமனித சுய விருப்பங்களை ஒடுக்கும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், மீள்வருவார்ப்புக்களைக் கட்டுடைத்தல் போன்றவற்றில் இக் குயர் அமைப்புக்களின் தோற்றமும் அவற்றின் இணையவழிச் செயல்வாதமும் பெரும் செல்வாக்கைச் செலுத்தியுள்ளன. அது மட்டுமல்லாமல் அடையாள அரசியல், சுய மரியாதை, சமத்துவத்தை வலியுறுத்தல் எனப் பல பணிகளை இவ் அமைப்புகள் வலியுறுத்துகின்றன. அதேவேளை குயர் மக்கள் இணையப் பாவனையால் ஏராளமான சவால்களையும் எதிர்கொள்கின்றனர்.

குயர் மக்கள் மத்தியில் சமூக ஊடகப்பாவனை

வடபுலத்தை நோக்கும் போது குயர் மக்கள் மத்தியில் சமூக ஊடகப்பாவனை அதிகரித்திருக்கிறது எனலாம். பெரும்பாலான குயர் மக்களும் குயர் நிறுவனங்களும் வேறுபட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதனை அவதானிக்கலாம். இவர்கள் முகப்புத்தகம், ருவிற்றர், வைபர், வாட்ஸ்ஆப், இன்ஸ்ரகிராம், யூரியூப், ரிக்ரொக் (Facebook, Twitter, Instagram, Youtube, Viber, WhatsApp, Tiktok) போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

குயர் மக்கள் தங்களுடைய அடையாளங்களை வெளிப்படுத்தல், தொடர்பாடலை மேற்கொள்ளல், பொழுதுபோக்கு, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்களிற்காகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்ற அதேவேளை செயல்வாதத்திற்காகவும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றமையை அவதானிக்கலாம். இச் சமூக ஊடகங்கள் சாதகமான தாக்கங்களை மட்டுமல்லாது பாதகமான தாக்கங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. பாதகமான சமூக ஊடகத் தாக்கங்களால் குயர் மக்கள் உடல் மற்றும் உள ரீதியான சவால்களை எதிர்கொள்கின்றனர். இணையவழி ஊடகங்களில் குயர் செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.

வடபுலத்தில் உள்ள குயர் மக்களுக்கான அமைப்புகள்

யாழ்ப்பாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைகளைப் பேசும் நான்கு நிறுவனங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணச் சங்கம் (Jaffna Sangam), யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பு (Jaffna Transgender Network), விளிம்பின் குரல் (Voice of Edge) மற்றும் சமத்துவத்திற்கான குரல் (Voice for Equality) போன்ற நிறுவனங்கள் இயங்கி வந்திருக்கின்றன. அதிலும் யாழ்ப்பாணச் சங்கம் (Jaffna Sangam) மற்றும் யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பு (Jaffna Transgender Network) ஆகிய இரு அமைப்புகளும் தமது பணிகளை அண்மைக் காலங்களிலும் முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

1. யாழ்ப்பாணச் சங்கம் (Jaffna Sangam)

வடபுலத்தில் தோற்றம் பெற்ற முதலாவது தமிழ் பேசும் குயர் மக்களுக்கான அமைப்பாக யாழ்ப்பாணச் சங்கம் விளங்குகின்றது. இது 2017 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 17 ஆம் திகதி தோற்றம் பெற்றது. தேன்மொழி மாக்கிரட், கஸ்ரோ பொன்னுத்துரை, வரதாஸ் தியாகராஜா மற்றும் ஏஞ்சல் குயின்ரஸ் போன்றோர் இந் நிறுவனத்தின் நிறுவுனர்களாகத் திகழ்ந்தனர். யாழ்ப்பாணச் சங்கம் கடந்த காலங்களில் சமூக ஊடகங்கள் மூலமான ஏராளமான செயற்றிட்டங்களை முனைப்புடன் முன்னெடுத்து வந்துள்ளது.

2. யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பு (Jaffna Transgender Network)

ஏஞ்சல் குயின்ரஸ், யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பின் நிறுவுனராகத் திகழ்கின்றார். ஏஞ்சல் யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாகக் குயர் மக்களுடைய உரிமைகளுக்காகச் செயற்பட்டு வருகிறார். இவ் அமைப்பு திருநர் வலையமைப்புத் தொடர்ச்சியாகப் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது; அதன் ஆரம்ப காலங்களில் இருந்து இற்றை வரை சமூக ஊடகங்கள் மூலமான செயற்பாடுகளிலும் செயல்வாதங்களிலும் முனைப்புடன் ஈடுபட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது. சுயமரியாதை நடை, சுயமரியாதை மாத நிகழ்வுகள், யாழ்ப்பாணக் குயர் விழா போன்றவற்றை இந்நிறுவனம் சிறப்புற முன்னெடுத்து வருகின்றது. இந் நிறுவனத்தின் நிலைத்திருப்பைக் காலந்தான் தீர்மானிக்க வேண்டும்.

3. சமத்துவத்திற்கான குரல் (Voice for Equality)

சமத்துவத்திற்கான குரல் நிறுவனம் பெப்ரவரி 4 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந் நிறுவனம் குயர் மக்களுடைய உரிமைகளை வலியுறுத்தும் நோக்கிலேயே தோற்றம் பெற்றது. இந் நிறுவனம் குறுகிய காலத்தில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை குயர் மக்களுக்காக முன்னெடுத்திருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்நிறுவனம் தமது தொடர்பாடலை அதிகமாக சமூக ஊடகங்கள் மூலமாக மேற்கொண்டிருந்தமையை அவதானிக்க முடியும்.

4. விளிம்பின் குரல்  (Voice of Edge)

விளிம்பின் குரல் அமைப்பானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பானது பெரும்பாலும் திருநர்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குயர் சமூக மக்கள் போன்றோரையும் உள்வாங்கிக் கொண்டு செயற்படக்கூடிய ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது. ஆனால் குறுகிய காலப்பகுதியிலேயே இவ் அமைப்பு மௌனித்திருப்பதையே அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் தாம் பெரும்பாலும் எழுதுவதற்கும் பேசுவதற்கும் வாய்ப்பு இருக்கக்கூடிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாக விளிம்பின் குரல் நிறுவனத்தினர் தெரிவித்திருந்தனர். இவர்கள் முகநூல் மற்றும் யூரியூப் (Youtube) தளங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகின்றனர்.

சமத்துவத்திற்கான குரல் மற்றும் விளிம்பின் குரல் ஆகிய நிறுவனங்கள் தமது ஆரம்ப காலங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய வழியிலான சமூகச் செயற்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டிருந்தாலும், 2024 ஆம் ஆண்டின் அரை ஆண்டுகாலப் பகுதியில் அவற்றின் செயற்பாடுகளை அவதானிக்கும் போது, செயலற்ற நிலையிலேயே இருப்பதனை அவதானிக்க முடிகிறது.

குயர் மக்களும் குயர் செயற்பாட்டாளர்களும்

மாறிக்கொண்டேயிருக்கும் சமூகத்தில் போராட்ட வடிவங்களும் மாறிக்கொண்டேயிருக்கும். பிற சமூகங்களைப் போலவே குயர் மக்களுடைய செயல்வாதத்திலும் சமூக ஊடகங்களின் வகிபங்கானது அளப்பரியதாகும். குயர் மக்களின் இருத்தல் எப்போதும் சமூகத்தால் மறுதலிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் கூட சமூக ஊடகங்கள் குயர் மக்களுக்கான வெளியைத் திறந்துவிட்டிருக்கிறது எனலாம்.

சமூகச் செயற்பாட்டாளரான திசா திருச்செல்வம் 2013 ஆம் ஆண்டிலிந்து குயர் உரிமை சார்ந்து செயற்பட்டு வருகிறார். இவர் சமூக ஊடகங்கள் மூலமான செயல்வாதம் குறித்துக் குறிப்பிடுகையில், சமூக ஊடகங்கள் குயர் சமூகம் சார்ந்த நிகழ்வுகள், செயற்பாடுகள், மற்றும் போராட்டங்கள் தொடர்பான தகவல்களைப் பல்வேறு தரப்பினர்களிடமும் கொண்டு சேர்ப்பதற்கு உதவுவதாகக் குறிப்பிட்டார். திசா மேலும் குறிப்பிடுகையில் குயர் மக்கள் மற்றும் குயர் செயற்பாட்டாளர்களுக்கிடையில் வலையமைப்பொன்றை ஏற்படுத்தவும் சமூக ஊடகங்கள் உதவுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

குயர் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான தளம் சமூக ஊடகங்கள் எனக் குயர் செயற்பாட்டாளரும் விலங்கு மருத்துவருமான கஸ்ரோ பொன்னுத்துரை குறிப்பிடுகிறார். இவர் 2014 ஆம் ஆண்டிலிருந்து பால்நிலைச் சமத்துவம் மற்றும் குயர் உரிமைகள் தொடர்பில் செயற்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணச் சங்கம் மற்றும் யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பு என்பவற்றின் மூலமும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

“தனிப்பட்ட ரீதியில் நோக்கும் போது சமூக ஊடகங்கள் என்னை வலுப்படுத்துவதிலும் எனது குயர் செயல்வாதத்திலும் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றன. அதேவேளை சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட ஏராளமான இணையவழி வன்முறைகளுக்கும் முகம்கொடுக்க நேர்ந்தது. நான் ஏனைய சமூக ஊடகங்களை விட முகப்புத்தகம் மற்றும் யூரியூப் இனை அதிகம் பயன்படுத்துகிறேன். இது இலகுவில் விடயங்களைப் பகிரவும், குயர் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வை மக்களிடம் சேர்ப்பதற்கும் உதவுகின்றன” என்கிறார் ஏஞ்சல் குயின்ரஸ். யாழ்ப்பாணத் திருநர் வலையமைப்பின் நிறுவுனர்களில் ஒருவரான இவர் யாழ்ப்பாணத்தில் குயர் உரிமைகளுக்காகச் செயற்பட்டு வருகிறார்.

“ஆரோக்கியமான பதிவுகள், ஆரோக்கியமற்ற கருத்துகள் என்பன உள்ளடக்கங்களாக அமைகின்ற போதும் குயர் மக்கள் தம் சமூகம் சார்ந்த கருத்துகளுக்கு எதிர்வினை ஆற்றும் வாய்ப்பை சமூக வலைத்தள ஊடகங்கள் வழங்கியுள்ளன” என்கிறார் ஈழநிலா. அவர் மேலும் குறிப்பிடுகையில் குயர் மக்கள் தமக்கு இருக்கும் அங்கீகரிக்கப்படாத திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைச் சமூக ஊடகங்கள் வழங்குகின்றன. உதாரணமாக, நடிப்புத் திறமை, எழுதுகிற திறமை போன்றவற்றை டிக் ரொக் (TikTok), முகநூல் மற்றும் இன்ஸ்ரகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டுத் தமக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், தம்மைப் பிரபலப்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றைக் காணக்கூடியதாக இருக்கின்றது. விளிம்பின் குரல் அமைப்பின் நிறுவுனரான ஈழநிலா, எழுத்தாளராகவும் விளங்குகின்றார்.

இலங்கையில் குயர் மக்களுக்கான சமூக ஊடகங்கள் மூலமான சமூகச் செயற்பாடுகள்

இலங்கையில் குயர் செயற்பாட்டாளர்களும் குயர் சமூகத்தினரும் குயர் மக்களுடைய தேவைகள், மற்றும் உரிமைகள் தொடர்பில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர். எதிர்ப்பால் ஈர்ப்பை மட்டுமே சாதாரணம் எனக் கருதும் சமூகத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேவேளை, அண்மைக்காலங்களில் குயர் மக்களுக்கான சமூகச் செயற்பாடுகள் மற்றும் செயல்வாதங்களை முன்னெடுப்பதில் சமூக ஊடகங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

சுயமரியாதை மாத நிகழ்வுகள் மற்றும் யாழ்ப்பாணக் குயர் விழா போன்ற நிகழ்வுகளை குயர் சமூகத்தின் மத்தியிலும் ஏனையவர்கள் மத்தியிலும் கொண்டு சேர்ப்பதில் சமூக ஊடகங்கள் பாரியளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. யாழ்ப்பாணக் குயர் விழா நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல் மற்றும் விளம்பரப்படுத்தல்களை மேற்கொள்வதற்காகத் தனியான முகநூல் பக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். யாழ்ப்பாணக் குயர் விழா நிகழ்வுகளின் முழுமையான தகவல்களை அந்த முகநூல் பக்கம் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்கள் மூலமான குயர் செயற்பாடுகளும் சாதகமான தாக்கங்களும்

வடபுலத்தில் குயர் மக்களும் செயற்பாட்டாளர்களும் சமூக ஊடகங்கள் மூலமாக குறிப்பிடத்தக்க அளவில் குயர் மக்களை வலுப்படுத்தியிருக்கிறார்கள் எனலாம். ஏனெனில் சமூக ஊடகங்கள் பல்வேறுபட்ட வாய்ப்புகளை வழங்குவனவாக இருக்கின்றன. அந்தவகையில் குயர் மக்களைப் பிரதிநிதிப்படுத்துவதில் சமூக ஊடகங்களுக்குப் பெரும்பங்குள்ளது. யாதார்த்த வாழ்க்கையில் தம்மை வெளிப்படுத்துவதிலும் பார்க்க குயர் மக்கள் வேறுபட்ட சமூக ஊடகத் தளங்களிலேயே தம்மை அதிகம் வெளிப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் குயர் மக்களின் உரிமைப் போராட்டங்கள், செயல்வாதங்கள், நிகழ்வுகள், கூட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஏனைய முக்கிய நிகழ்வுகள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

குயர் மக்கள் தங்களுடைய சுயதொழில்களை விளம்பரப்படுத்துவதற்கும் வணிக நடவடிக்கைகளைப் பிரபலப்படுத்துவதற்கும் வேறுபட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். வணிக வலையமைப்பை புவியியல் எல்லைகளுக்கு அப்பாலும் விரிவுபடுத்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் சமூக ஊடகங்களுக்குப் பெரும்பங்குண்டு.

சமூக ஊடகங்கள், சமூகச் செயற்பாடுகள் மற்றும் செயல்வாதங்களை உலகளாவிய ரீதியல் கொண்டு சேர்ப்பதற்கும் மற்றும் பரந்த வலையமைப்பை உருவாக்கவும் பெரும்பங்காற்றுகின்றன. இன்று குயர் மக்கள் பல்வேறு நோக்கங்களுக்காகச் சர்வதேச பயணங்களை மேற்கொள்வதற்கு இணையவழித் தொடர்புகள் வழிகோலுகின்றன. ஆய்வு மாநாடுகள், இளைஞர் மாநாடுகள், வேறுபட்ட நிகழ்வுகள், கல்வி, சுற்றுலா மற்றும் வணிக நோக்கங்களுக்காகச் சர்வதேச நாடுகளுக்குப் பயணித்தல், அது தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலமும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்றவற்றில் இணையவழி ஊடகங்கள் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவண்ணம் இருக்கும் குயர் சமூகம் சார்ந்தவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்கும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. குயர் மக்களுடைய நல்வாழ்க்கைக்கும் உணர்வு ரீதியான ஆதரவு வழங்குவதற்கும் சமூக ஊடகங்கள் துணைநிற்கின்றன எனலாம். இவ்வாறான ஆதரவுகள் மூலம் குயர் மக்கள் தமது பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு இயலுமான சூழ்நிலை ஏற்படுத்தப்படுகின்றன. குயர் சமூகம் சார்ந்த வெறுப்பு பேச்சுக்கள் மற்றும் பதிவுகளுக்கு, உடனேயே பின்னூட்டம் இடக்கூடியதாக சமூக ஊடகங்கள் காணப்படுகின்றமையைப் பெரும்பாலான குயர் மக்கள்  நல்வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

சமூக ஊடகங்கள் மூலமான குயர் செயற்பாடுகளும் பாதகமான தாக்கங்களும்

சமூக ஊடகங்கள், பலருக்கு வாய்ப்பாக இருக்கக்கூடிய அதி உச்ச சுதந்திரம், தனிநபர்களுடைய பால்நிலை, வாழ்கை முறை மற்றும் சுதந்திரம் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் அமைந்துள்ளன. திருநர் வெறுப்பு, தன்பால் ஈர்ப்பு வெறுப்பு அல்லது ஒட்டுமொத்தமாக குயர் வெறுப்பை உமிழ்வதற்கான இடமாகவும் சமூக ஊடகங்கள் விளங்குகின்றன. இலங்கையில் குயர் வெறுப்பானது பண்பாடு, சமயம், சட்டம், தந்தையாதிக்கக் கருத்தியல் என்பவற்றின் அடிப்படையிலே கட்டமைக்கப்படுகிறது. இதற்கான முக்கிய காரணமாக பாலியல்பு மற்றும் பால்நிலை சார்ந்த கல்வியறிவும் புரிதலும் இல்லாமை காணப்படுகின்றது. இவை மட்டுமல்லாது வேறுபட்ட இணைய வழி வன்முறைகளையும் குயர் மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

குயர் மக்களையும் செயற்பாட்டாளர்களையும் இணையவழியில் பின்தொடர்தல், இணையவழியில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தல் போன்றனவும் சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெறுகின்றன. குயர் மக்கள் சமூக ஊடகங்களில் மோசமாகச் சித்திரிக்கப்படும் போது அது அவர்களை உளவியல் ரீதியாகவும் பாதிக்கின்றது. மன அழுத்தம் மற்றும் மன அதிர்வு போன்றவற்றுக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலைகளைக் குயர் மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக ஏராளமான உளவியல் ரீதியான பாதிப்புகளை சமூக ஊடகங்களால் எதிர்கொள்கிறார்கள். மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், போலிச் செய்திகள், வெறுப்புப் பேச்சு, குயர் மக்களைக் கேலிசெய்யக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்தல் எனக் குயர் வெறுப்பின் பல்வேறு வடிவங்களை இலங்கையின் வடபுலத்தில் உள்ள சமூக ஊடகப் பாவனையாளர்களின் பதிவுகளில் அவதானிக்கலாம். மீள்வருவார்ப்புக்களை உருவாக்குதல் சமூக ஊடகங்களில் குயர் மக்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளில் குறிப்பிடத்தக்கதாகும். திருநர்கள் மற்றும் தன்பாலீர்ப்பாளர்கள் பற்றிய ஏராளமான மீள்வருவார்ப்புக்களை இச்சமூகம் கொண்டிருக்கின்றது. பெரும்பாலான குயர் மக்கள் மற்றும் குயர் செயற்பாட்டாளர்கள், சமூக ஊடகங்களில் முகப்புத்தகத்திலேயே அதிகம் வன்முறைகளை எதிர்கொள்வதாகவும், பெரும்பாலானோர் முகப்புத்தகத்தைத் தவிர்ப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

“குயர் மக்களின் அந்தரங்கங்களைப் பற்றி மற்றவர்கள் அவதூறு பரப்பும் ஒரு சூழ்நிலை சமூக ஊடகங்களில் உருவாகியுள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்ற முயலும் திருநர்களையும் மற்ற குயர் மக்களையும் அவர்கள் சமூகம் சார்ந்து கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கி நகைப்புக்கு உள்ளாக்குவது என்பது மன உளைச்சலையும் அந்த சமூகம் பற்றிய கீழ்த்தரமான எண்ணத்தையும் மக்களிடையே விதைக்க வழி வகுக்கின்றது. இது மிகமோசமான நிலையாகக் காணப்படுகின்றது” என்கிறார் ஈழநிலா.

எது எவ்வாறாக இருந்தாலும் சமூக ஊடகங்கள் மூலமான குயர் செயல்வாதம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியளிக்கிறது எனலாம். வாழ்க்கையை மேம்படுத்தல், சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்ளல், வேலை வாய்ப்பைப் பெறல், சுயதொழில்களை மேம்படுத்தல், வலையமைப்பை உருவாக்குதல், கல்வி வாய்ப்புகள் போன்ற வாய்ப்புகளை சமூக ஊடகங்கள் மூலமாக குயர் மக்களால் அடைய இயலுமாக இருக்கின்றது. அதேவேளை ஏராளமான சவால்களையும் சமூக ஊடகங்கள் மூலம் குயர் மக்கள் எதிர்கொள்கிறார்கள். சவால்களுக்கு மத்தியிலும் கூட இலங்கையின் வடபுலத்தில் குயர் நிறுவனங்கள், குயர் உரிமைக்கான அமைப்புகள் ஆகியன இணைந்து குயர் மக்களுக்கான செயல்வாதங்களை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றன.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3536 பார்வைகள்

About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)