ஈழத்தில் கூட்டுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு
Arts
17 நிமிட வாசிப்பு

ஈழத்தில் கூட்டுறவுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு 

August 25, 2024 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

கூட்டுறவு, ஒரு பலமான சமூக – பொருளாதார அடித்தளத்தையும் சமூக மூலதனத்தையும் சம அளவில் உள்வாங்கி, பல மட்டங்களில் (கிராம, பிரதேச, மாவட்ட மற்றும் மாகாணச் சம்மேளனங்களாக) கிளைவிட்டுத் தழைக்கும் ஒரு அமைப்பு ஆகும். இலங்கையில், மிகவும் குறிப்பாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையக நிர்வாக நிலப்பரப்பில் கூட்டுறவின் அசைவியக்கம் ஒரு தேங்கு நிலைக்குச் சென்றுள்ளது. அண்மையில் கூட, இது பற்றிய கரிசனை பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. தற்போதைய கூட்டுறவின் நிலை, இலங்கையின் சமூக – பொருளாதார நெருக்கடியை ஒத்த தன்மையில் காணப்படுகிறது. இந்நிலையிலிருந்து மீள வேண்டுமானால் கூட்டுறவின் வகிபங்கு தொடர்பான ஒரு மதிப்பீடு அவசியம். அதில் முதலாவதாக ஆராய வேண்டிய பாகம்; ஒன்றிணைவு  மூலோபாயம். இரண்டாவது; கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் கூட்டுப் பங்காண்மையும் ஒத்தாசையும். 

கூட்டுறவு அமைப்புகள் சுய உதவி, சுய பொறுப்பு, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. தங்கள் நிறுவனர்களின் பாரம்பரியத்தில், கூட்டுறவு உறுப்பினர்கள் நேர்மை, வெளிப்படைத்தன்மை, சமூகப் பொறுப்பு மற்றும் பிறரைக் கவனித்துக்கொள்வது போன்ற நெறிமுறை மதிப்புகளை முழுமையாக நம்பி நடைபோடும் போது, கூட்டுறவின் சுய அடையாளம் மிளிர ஆரம்பிக்கும். கூட்டுறவு என்பது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டதாகும். சமூக, இன, பால், அரசியல் மற்றும் மதப் பாகுபாடு இல்லாமல், தங்கள் சேவைகளைப் பயன்படுத்தக்கூடிய அனைத்து நபர்களுக்கும் திறந்திருக்கும் வீடுகள் தான் கூட்டுறவு அமைப்புகள். 

நுண் அரசியல் என்பது கட்சி அரசியலுக்கு உடன்படாதது. எல்லோருக்கும் நன்மை தரும் ஒரு அசைவியக்கத்தில் நடைபோடும் ஒரு சமூக அரசியல் வழி. கூட்டுறவின் அரசியலும் ‘நுண் அரசியல் வடிவம்’ கொண்டது. தன் சமூகத்திற்கான அக்கறை என்பது கூட்டுறவின் நுண் அரசியல் செல்நெறியாகும். கூட்டுறவுகள் தங்கள் உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மூலம் தங்கள் சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்காக வேலை செய்ய வேண்டும். தங்கள் உறுப்பினர்களுக்கு மிகவும் திறம்பட சேவை செய்வதற்குரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும். உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச கட்டமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் கூட்டுறவு அமைப்புகள் பல வாய்ப்புகளை பெற முடியும்; தம் இயக்கத்தை வலுப்படுத்த முடியும்.

“அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளுடன் உலகெங்கிலும் உள்ள கூட்டுறவுகள் சர்வதேசக் கூட்டுறவு தினத்தைக் (July – 6, 2024) கொண்டாடின. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDG) செயற்படுத்துவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி, கூட்டுறவு நிறுவனங்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான தற்போதைய மற்றும் கடந்தகாலப் பங்களிப்புகளை வெளிப்படுத்துவதற்கு பல தீர்வுகளைத் தேடி ஓடவேண்டியுள்ளது. குறிப்பாக, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகக் கூட்டுறவு அமைப்புகளுக்குரிய மிகவும் பயனுள்ள ஒரு தீர்வு என்பது ஒன்றிணைந்து இயங்குவதுதான். பல அமைப்புகளுடன் ஒரு உடன்பாட்டில் பொது நன்மை கருதி ஒன்றிணைந்து பயன் காண்பது என்பது மிக முக்கியமானதாகும். ஒன்றிணைந்து இயங்குவதற்கு உலகளாவிய கூட்டுறவு அமைப்புகளின் அனுபவங்கள் முக்கியமானவை.

‘சனச’ கூட்டமைப்பு 

இலங்கையின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான ‘சனச’ ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களால் வளர்க்கப்படுகிறது. 1906 இல் காலனித்துவ அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு மாதிரியின் மறுசீரமைப்புடன் 1978 இல் ‘சனச’ தனது பயணத்தைத் தொடங்கியது. அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பயணம், தொடர்ச்சியான புதுமை மற்றும் வளர்ச்சியால் நிரம்பியுள்ளது. இலங்கையில் பல்வேறு ஆட்சிகளின் கீழ் உள்ளடங்கிய அபிவிருத்தியில் ‘சனச’விற்கு அதிக அனுபவம் உள்ளது. எனவே, உலகத்துடன் பகிர்ந்து கொள்ள அதனிடம் பல வெற்றிக் கதைகள் உள்ளன. 

சனச, 40 பிரதேச மட்ட இரண்டாம் நிலைக் கூட்டுறவுச் சங்கங்களுடனும், 8000 பதிவு செய்யப்பட்ட சிக்கன மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கங்களுடனும் இணைந்த 1 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இது கூட்டமைப்பு இயக்கத்திற்கு தலைமை, மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது; இயக்கத்தின் சார்பாக ஒழுங்குமுறை அமைப்புகளோடு சர்வதேச கூட்டுறவுச் சமூகத்துடன் செயற்படுகிறது. மேலும் இது, விவேகமான ஒழுங்குமுறை/ மேலாண்மை அமைப்புகளை அறிமுகப்படுத்துகிறது; இதன் இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிக்கு மதிப்புச் சேர்க்க புதிய உத்திகளைக் கண்டுபிடிப்பதில் தலைமை வகிக்கிறது. சனச சம்மேளனம் இலங்கையின் பலமான அரச – அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகின் மிகச் சிறந்த நுண்கடன் மாதிரிகளில் ஒன்றை இயக்கும் நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

SANASA பெடெரேஷன் (Federation of Thrift and Credit Co – Operative Societies in Sri Lanka) ஆனது அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு அமைப்பு எனக் கூறப்படுகிறது. ஆனால், சனச இன்டர்நேஷனல் என்பது, சனச இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான Dr P.A. கிரிவந்தெனியவினால் உருவாக்கப்பட்ட ஒரு தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனமாகும். சனச இன்டர்நேஷனல் 2007 ஆம் ஆண்டின் நிறுவனச் சட்டம் ‘எண்.7’ இன் கீழ், 2015 இல் இணைக்கப்பட்டது. இது, கூட்டுறவின் கொள்கையில் இருந்து ஒரு ‘நியூ லிபரல்’ பாதையில் இணையாத வழி செல்ல முயலும் செல்நெறியை உடையது. 

வடக்கு – கிழக்கு கூட்டுறவு அமைப்புகளின் ‘சனச’ அனுபவமானது கசப்பானதாக இருந்ததாக அறியப்படுகிறது. கூட்டுறவாளர்களின் கருத்துப்படி ‘சனச’ வடக்கு – கிழக்கு  மாகாணங்களின் யுத்த நிலைமையைக் காட்டி பெரும் நிதியைத் திரட்டியது. ஆனால், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பாதிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு, திட்ட அறிக்கையின் படி கிடைக்கவேண்டிய நிதி சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. இவை போன்ற காரணங்களால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் பாதிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்புகள், மாகாண மட்டத்தில் திரண்டு, சர்வதேசக் கூட்டுறவின் நியாயமான உதவியைப் பெறுவதும், அமைப்புகளின் வலுவான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதும் அவசியம். இதன் ஆரம்ப முனைவாக, தற்போதைய காலச்சூழ்நிலை கருதி, தமிழ் பேசும் தேசங்களின் கூட்டுறவுச் சம்மேளனங்களின் சம்மேளனம் ஒன்றை உருவாக்குவதும், அதன் மீது ஒன்றிணைவிற்கான திட்டங்களை முன்னெடுப்பதும் முக்கியமானது. இவை ஒன்றிணைவுக்கான முன்நிபந்தனைகள் ஆகும். ‘சனச’ நிறுவனத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. ஆனால், அவர்களின் செல்நெறிகள் வடக்கு – கிழக்கு மற்றும் மலையக கூட்டுறவு அமைப்புகளுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகம். 

புலம்பெயர்ந்தோரும் கூட்டுறவுச் செயற்பாடுகளும் 

நிகழ்காலப் போக்கின்படி, வடக்கு – கிழக்கு மற்றும் மலையகக் கூட்டுறவு அமைப்புகளுக்குரிய மிகச் சிறந்த தெரிவு புலம்பெயர் அமைப்புகளின் கூட்டு ஒன்றிணைவை மையமிட்ட அணுகுமுறையே. ஏனெனில் புலம்பெயர் அமைப்புகளின் தொப்புள்கொடி உறவு என்பது முக்கியமான ஒரு சமூக மூலதனமாகும். அவை நிலையான சுய பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தை உள்ளாந்த ஆர்வமாகக் கொண்டிருக்கின்றன. தற்போதைய தமிழர் சனத்தொகைக்கு இணையாக புலம்பெயர் சமூகம் உலகம் எங்கும் பரவியுள்ளது. புலம்பெயர் சமூகத்துக்கும் தேவைகள் உண்டு. ஆகவே பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிப் பயணிக்க வாய்ப்புகள் உண்டு. 

புலம்பெயர்ந்தோருக்கும் தாயகத்திற்கும் இடையிலான மனித இணைப்புகள் என்பது இடப்பெயர்வுகளின் விளைவாக உள்ளது. இன்று மிகவும் பலம்மிக்க சமூக, பொருளாதார கலாசார, மனிதப் பிணைப்புகளின் ஒரு வளரும் சக்தி புலம்பெயர்ந்தோர் சமூகங்கள் தான். உலகில் இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்ந்தோர் சமூகம் மிகப் பரந்த அளவில் உள்ளது. அது தாயகத்தின் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கு பக்க பலமாகவும் இருந்து வருகின்றது. புலம்பெயர் மூன்றாம் சந்ததியினருக்கும் தாயகத்திற்குமான உறவு மங்கி வருகிறது என ஒரு விமர்சனம் உண்டு. உண்மையில், புலம் பெயர் சமூகத்தின் தற்போதைய மூன்றாம் சந்ததிதான் ஒரு வினைத்திறன் மிக்க நீண்ட காலச் சிந்தனை கொண்டு பலமான கட்டமைப்புகளை அமைக்கவிருக்கிறது. 

2009 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தமிழர் உரிமைக்காகவும் சர்வதேச அங்கீகாரத்திற்காகவும் தங்களை அர்ப்பணிப்பதிலும் முழு அளவுக் கரிசனையுடன் தமது பங்களிப்பை நல்கியிருந்தன. தமிழர்களின் அரசியல் உரிமைக்காக மட்டுமல்ல, ஈழத்தில் தமிழர்களின் வளமான உள்ளூர்ப் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர்கள் தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். அதற்கும் மேலாக ஒரு நிலையான அபிவிருத்தியின் பாதையில் முன்னேற, சர்வதேச அளவில் நிறுவனக் கட்டமைப்புகளை கட்டமைத்தும் வருகிறார்கள். புலம்பெயர் சமூகம் நீண்ட கால அபிவிருத்தி பற்றிக் கரிசனை கொண்டுள்ளது. புலம்பெயர் சமூகத்தின் மூன்றாம் தலைமுறை, ஒரு கைவிடாத ஒரு நிரந்தரப் பிணைப்பின் அடையாளமாக மாறிவருகிறது. இது ஈழத்தில் தமிழர்களின் வளமான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஒரு நம்பிக்கை தரும் ஆறுதல்.

தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார ஒருங்கிணைப்பு கட்டமைக்கப்பட வேண்டும் எனும் நோக்கத்திற்கு திறம்படப் பங்களிப்பதற்காக, உலகளாவிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து செயற்படுவதற்கான முனைப்புகள் தெளிவாகத் தென்படுகின்றன. நிறுவனங்கள் புதுமைகள் மற்றும் மாற்றங்களை ஆதரிப்பதற்கு, மூலதனத்தை உருவாக்குதல், அறிவு, திறன்கள் மற்றும் அனுபவத்தை ஒருங்கிணைத்தல்; கூட்டுறவுச் சமூக நிறுவனங்கள் எதிர்காலக் கல்வி, திறன், வளங்களை அடிப்படையாகக் கொண்ட சகவாழ்வு மற்றும் அமைதிக் கலாசாரத்தை செயற்படுத்துதல்; தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் ஒருவரை ஒருவர் கண்டறிந்து, ஒத்துழைத்து, மாறுபட்ட அளவில் நிலையான முயற்சிகளை உருவாக்குதல் என்பன புலம்பெயர் சமூகத்தின் நீண்டகால நோக்கு நிலைகளாக உள்ளன.

புலம்பெயர்ந்தோர் சமூகத்தின் புத்தாக்கமிக்க கூட்டுறவு அபிவிருத்தி மீதான முன்னெடுப்புகள் மற்றும் கூட்டிணைவின் பெறுமதியான விளைவுகள் பற்றி நோக்கும் போது, முதன்மைப் புலம்பெயர் கூட்டுறவு அமைப்பாக கண்முன் தெரிவது, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நெதர்லாந்தின் கூட்டுறவுச் சங்கம் (The Co-operative Society of The Netherlands for Humanitarian Activities (CSNHA) ஆகும். இது டிசம்பர் 2012 இல் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற கூட்டுறவு அமைப்பாகும். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கூட்டுறவுக் கொள்கைகளின்படி சங்கத்தின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவ் அமைப்பின் நிர்வாகச் செயற்குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். போர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த நாடுகளில் வளமான, பாதுகாப்பான வாழ்வை முன்னெடுக்கச் செய்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிலையான வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கை உறுதி செய்தல் என்பன நெதர்லாண்ட்ஸ் மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இத் தமிழ் பேசும் புலம்பெயர் அமைப்பின் நோக்கங்களாகும்.

இக் கூட்டுறவுச் சங்கத்தின் நன்கு திட்டமிட்ட நடவடிக்கைகள் வடக்கு – கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் கூட்டுறவு அபிவிருத்தியின் உறுதியான நடவடிக்கைகளுக்கு உதவின. சிக்கனக் கூட்டுறவு மாவட்ட மற்றும் மாகாண முகாமையாளர்களுக்கான இந்தியப் பயிற்சி, 2015 இல் இதன் ஆரம்ப முயற்சியாக அமைந்தது. மேலும் இவ் அமைப்பு, வட மாகாண சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்துக்கான விவசாயத் திட்டங்களுக்கான நிதியை (44  Millions in  Sri  Lankan  Rupees) ஒரு சுழற்சிக்  கடனாகப் பகிர்ந்து, இன்றும் இயங்கி வருகிறது. இதன் மூலம் முல்லைத்தீவில் இயங்கும் பாற் பண்ணை, முல்லைத்தீவு – சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத்தின் உதவியுடன் நடைபோடுகிறது. கிழக்கு மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட  கிராமங்களில், சிறு விவசாயிகளின் விவசாயத்தை ஊக்குவித்தல் திட்டத்திற்காக அம்பாறை – சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத்திற்கென 26,009 யூரோவை ஆரம்ப நிதியாக வழங்கி, சமாஜத்தின் இயங்கு நிலைக்கு இவ் அமைப்பு உரமூட்டியது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் ஸ்கந்தபுரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் சூரிய சக்தியில் இயங்கும் நீர் உந்தி

‘கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் – சூரிய சக்தி ஏற்று நீர்ப்பாசன நிலையம் மற்றும் பயிர்ச் செய்கைக்கான வசதிகள் திட்டம்’ இவை அனைத்திற்கும் மேலான ஒரு திட்டமிட்ட முயற்சி எனலாம். இது, கூட்டுறவின் பெறுமதியான விளைவுகளை உண்டாக்கும் புத்தாக்கம் மிக்க அபிவிருத்தி முன்னெடுப்பாக அமைகிறது. இத் திட்டம் மூலம் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலங்கள் மீட்டும் உயிர் கொண்டுள்ளன. இன்று பலர் இந்த மண்ணின் செழிப்பைக் காண வருகிறார்கள். வல்லிபுரம் சந்திரநாதன் அவர்களே இத் திட்டத்தின் மூலவர். சூரிய சக்திப் பொறிமுறைகள் பற்றிய அனுபவமும் திறமையும் கொண்ட  ரஞ்சிதபாலன் அவர்கள் இத் திட்டத்தின் பொறியாளராகச் செயற்பட்டு வருகிறார்.  

வட மாகாண சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனத்தின் அங்கமான ஸ்கந்தபுரம் சிக்கனச் கூட்டுறவுச் சங்கம், ஒரு தொடர்ச்சியான தேவைக்காகப் போராடியது. அவர்கள் நீண்ட காலமாகக் கைவிடப்படட 360 ஏக்கர் பயிர் நிலங்களின் சோகக்கதையை பலருக்கும் கூறினார்கள்; தங்களுக்கு அருகில் ஓடும் வாய்க்கால் வழி ஓடும் நீர் தங்கள் வாழ்க்கைக்கு வளம் தரவில்லை என்றார்கள். யாரும் செவிமடுக்கவில்லை. ஆனால், நெதர்லாந்தில் இருந்த திரு. சந்திரநாதன் அவர்கள் காது கொடுத்தார். அதன் விளைவாகவே இத் திட்டம் உருக்கொண்டது. 

நெதர்லாந்தில் உள்ள தொண்டு நிறுவனங்களில் வைல்ட் கான்சென் (Wilde Ganzen) ஒரு முக்கியமான நிறுவனம். இது, ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மக்கள் மூலமாக நூற்றுக்கணக்கான சிறிய திட்டங்களை முன்னெடுக்க நிதியளிக்கும் அமைப்பாகும். இத் திட்டங்கள் தனியார் மேம்பாட்டு முயற்சிகளால் ஆதரிக்கப்படுகின்றன. இவை டச்சு மற்றும் பெல்ஜிய அடித்தளங்களைக் கொண்டவை. உலகெங்கிலும் உள்ள உள்ளூர் மேம்பாட்டு நிறுவனங்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணும் ஒரு அமைப்பாகவும் இது செயற்படுகின்றது. சந்திரநாதன் அவர்கள் கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் சூரிய சக்தி ஏற்று நீர்ப்பாசன நிலையம் அமைப்பதற்கான 60% இற்கும் மேலான நிதியை இந் நிறுவனத்திடமிருந்து பெற வழிசமைத்தார். 40% நிதியை சக புலம்பெயர்ந்தோர் வழங்க முன்வந்தனர். கிளிநொச்சி மக்கள் அமைப்பு நிதியைத் திரட்டியது. குவியம் சர்வதேச இணைப்பாளர் Dr. அகிலன் பலரின் உதவிக்கு வழி சமைத்தார். எல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க, ஸ்கந்தபுரம் சூரிய சக்தி ஏற்று நீர்ப்பாசன நிலையம் விவசாயிகளின் நீண்ட காலக் கனவை நிறைவேற்றியது. 

முடிவுரை 

கூட்டுறவு அமைப்புகள் பெரும்பாலும் இறந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் எதிர்காலமானது, தற்போதைய உறங்கும் நிலையிலிருந்து விழிப்பு நிலைக்கு மாறுவதில் தங்கியுள்ளது. கூட்டுறவு அமைப்புகள் பல வளமான கூட்டுறவுச் சொத்துகளை உள்வாங்கியுள்ளன. ஆனால், உற்பத்தித்திறன் என்பது பூச்சியம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் மட்டும் 3458 கூட்டுறவு உற்பத்தி மையங்கள் மூடப்பட்டுள்ளன. பல பெறுமதியான உற்பத்திச் சொத்துகள் பயனற்றுச் சீரழிந்து வருகின்றன. போரின் பின் பல முதலீடுகள், கூட்டுறவு அமைப்புகளை தேடிப்போயின; கொத்துக்கொத்தாக உற்பத்தி மையங்கள், எதுவித திட்டங்கள் இல்லாமல், முடுக்கிவிடப்பட்டன. நாளடைவில் எல்லாம் அழிந்து போயின. பல கூட்டுறவுச் சொத்துகள் தனிநபரின் வளர்ச்சிக்காகக் களவாடப்பட்டு வருகின்றன. போரில் நசுங்கிய மக்களின் வளமான வாழ்வுக்கு உதவக் கொடுக்கப்பட்ட அனைத்து கூட்டுறவு உதவிகளும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களின் தேவையை சென்றடையத் தவறிவிட்டன. வறியவர்களுக்கு உணவூட்டும் ஒரு நீடித்த கூட்டுறவு அணுகுமுறை தோல்வியின் விளிம்பில் நீடிக்கிறது. இத்தோல்வி உண்மையில் உள்ளூர் பொருளாதாரத்தின் வலுவான ஆதாரத்தைச் சிதைக்கும். சமூக – பொருளாதாரச் சிதைவுக்கு தன் கதவுகளை அகலத் திறந்துவிடும்.

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் தன் வகிபாகம் பற்றி அறியவேண்டிய நேரம் வந்துள்ளது. இன்றைய கூட்டுறவின் வீழ்ச்சிக்கு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமும் பதில் கூற வேண்டிய கட்டாயத்திலுள்ளது. கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், பெரும் வரி செலுத்துவோரின் எதிர்பார்ப்பிற்குச் செயலாற்றும் வகையில் வினைத்திறமையான ஒரு அபிவிருத்தி நிறுவனமாக மாறும் ஒரு மாறு கால நிலை பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. உள்ளூர், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேசக் கட்டமைப்புகள் மூலம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், தம் பலத்தை வலுப்படுத்துவதே கூட்டுறவின் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வு. புலம்பெயர் சமூகம் அதற்கான ஒரு ஆதார சக்தி. தற்போதைய கூட்டுறவு அமைப்புகள், மீண்டும் தங்கள் சொந்தக் காலில் நிற்க ஒரு திறந்த சிந்தனையை நோக்கிப் பயணிக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.  

உசாத்துணை

  1. The Cooperative Society of the Netherlands For Humanitarian Activities, More details on the lift Irrigation in Sreekandapuram, Kilinochchi – https://csnha.com/
  2. The Role of Cooperatives in Neoliberal Sri Lanka , A Case Study, Vidya Samarasinghe and Dhammika Jayawardena University of Sri Jayewardenepura.
  3. The impact of cooperatives on the economic and social empowerment of women in rural areas of  Sri Lanka. K. Darshani Piyumali  V.P.S.S. Balasooriya.
  4. National Cooperative Council, https://slncc.lk/contact-us/
  5. SANASA, the largest cooperative enterprise in Sri Lanka, https://sanasainternational.lk/
  6. K Paramothayan, The Cooperative Movement in Jaffna  District of Sri Lanka, 1911 -1970, 
  7. Rebuilding a Cooperative Movement in northern Sri Lanka, https://coopseurope.coop/development/projects/rebuilding-cooperative-movement-northern-sri-lanka.html
  8. The Greatest Power behind the Co-operative Societies is Women’s Power – Governor,https://np.gov.lk/the-greatest-power-behind-the-co-operative-societies-is-womens-power-governor/
  9. Cooperating for Peace:  Livelihood security through cooperatives in post-conflict recovery, ://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://d-nb.info/1195625448/34
  10. The Rise, Biggest and Most Impactful Global Network of Tamil Entrepreneurs and Professionals, https://www.tamilrise.org/home
  11. Tamil Diaspora Alliance (T.D.A), https://tamildiasporaalliance.org/about-us/,  
  12. The Tamil diaspora: solidarities and realities, Nirmala Rajasingam, https://www.opendemocracy.net/en/the-tamil-diaspora-solidarities-and-realities/

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5668 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)