மேல்கொத்மலைத் திட்டம் : தேச நலனா? இயற்கை வளமா?
Arts
14 நிமிட வாசிப்பு

மேல்கொத்மலைத் திட்டம் : தேச நலனா? இயற்கை வளமா?

August 28, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையின் கடந்த கால்நூற்றாண்டு கால அபிவிருத்தி அரசியலின் வரலாற்றில் மக்களின் பாரிய எதிர்ப்பைச் சம்பாதித்த அபிவிருத்தித் திட்டங்களில் மேல்கொத்மலைத் திட்டம் முதன்மையானது. மக்களின் எதிர்ப்பையும் மீறி அத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் இலங்கையின் சூழலியல் போராட்டங்களின் வரலாற்றில் முக்கிய இடம் இத் திட்டத்திற் கெதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு உண்டு. தேச நலனின் பெயரால் மலையகத் தமிழர்கள் தங்கள் வாழிடங்களில் இருந்து இடம் பெயர்க்கப்பட்டார்கள். இயற்கை அழிக்கப்பட்டது.

நீர் மின்சாரமும் அதற்காக உருவாக்கப்படும் நீர்த்தேக்கங்களும் பற்றிய நல்ல கதைகளும் மோசமான கதைகளும் உலகெங்கும் உண்டு. இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில் நீர்மின்சாரம் அறிமுகப்படுத்தப்பட்டமையானது மின்சாரத் தன்னிறைவையும் அனைவருக்குமான மின்சார அணுகலையும் சாத்தியப்படுத்தியது. ஆனால் இம் மின்சார உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் பாரிய சூழலியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தன. ஆனால் இவற்றுக்கெதிரான பாரிய எதிர்ப்புகள் இலங்கையில் தோற்றம் பெற்றிருக்கவில்லை. 1950 கள் முதல் 1980 கள் வரையான காலப்பகுதியில் பல பாரிய நீர்த்தேக்கங்கள் உருவாகின. ஆனால் அவை எதுவும் பாரிய மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகவில்லை. மேல்கொத்மலை திட்டம் இதற்கு விதிவிலக்கானது.  

1991 ஆம் ஆண்டளவில், நாட்டின் 20% அரிசி மற்றும் 55% மிளகாய், மகாவலித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் இது நீண்டகாலம் நிலைக்கவில்லை. பத்தாண்டுகளின் பின்னர் விவசாயிகள் பலர் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்தனர். மகாவலித் திட்டமானது அபிவிருத்திக்கு உட்படுத்திய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிகளுக்கு நீர் வழங்குவதாக உறுதியளித்தது. மேலும், இந்தியாவிற்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தினால் 1,11,400 குடும்பங்கள் அல்லது சுமார் 700,000 மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். இதில் பெரும்பான்மையானோர் வளமான பூர்வீக நிலங்களை இழந்து கொலனிகளில் குடியேறினர். மகாவலி, வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன் விவசாயிகளுக்குப் போதிய நீரைப் பெற்றுக்கொடுக்கவும் தவறியது.

நீர்ப்பிடிப்புகளை பராமரிக்காததால், நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாமல், மின்வெட்டைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டது. வறண்ட வானிலை காரணமாக 1996 இல் நீர்மின்சாரத்தின் மொத்த உற்பத்தி 28% ஆகக் குறைக்கப்பட்டது. 1996 பயிர்ச்செய்கை ஆண்டில் மகாவலி பிரதேசத்தின் கீழ் பயிரிடப்பட்ட மொத்தப் பரப்பளவு 13% ஆகக் குறைந்தது. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை விட அதிகமான நிலங்களை சுத்தப்படுத்தியதும் இதற்கு ஒரு காரணம். கிரிந்தி ஓயா இந்த நீர்த்தேக்கத்திற்கு போதுமான நீரை வழங்குவதில்லை. இதனால் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உமா ஓயாவை திசை திருப்புதல் மற்றும் மாணிக்க கங்கையைத் திசை திருப்புதல் போன்ற பணிகளை அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த இரண்டு திட்டங்களும் அதிக சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் கேடுகளை உருவாக்கக்கூடியன என்பதை எல்லோரும் அறிந்தேயிருந்தனர். இந்தப் பின்புலத்திலேயே மேல்கொத்மலைத் திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

காலமாகி வந்த கதை

மேல்கொத்மலை நீர்மின் திட்டமானது 1968 இல் மகாவலிப் படுகையில் நீர் மின்சார அபிவிருத்திக்கான பிரதான திட்டத்தின் (Master Plan) பகுதியாக உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டு தசாப்த காலத்திற்கு மேல்கொத்மலையில் நீர்மின் உற்பத்தி தொடர்பில் கவனம் கொள்ளப்படவில்லை. 1985 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த இயலுமா என்பதைப் பரிசோதிக்க, கொத்மலை ஓயாவின் மேல் பகுதியில் உள்ள நீர்மின் விருப்பங்களை ஆய்வு செய்வதற்காக, ஒரு சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி அளித்தது. இந்த ஆய்வில், பிரதான திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் விரிவான ஆய்வுக்குட்பட்டன. 

குறித்த சாத்தியக்கூறு ஆய்வு, ஐந்து இடங்களும் எட்டு மாற்று மேம்பாட்டுத் திட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டு, இரண்டு இடங்களில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமானது என்று முடிவைத் தெரிவித்தது. ஒன்று, கலிடோனியாவில் நீர்த்தேக்கத்தை உருவாக்குவது; இரண்டாவது,  தலவாக்கலையில் ஆற்றில் இருந்து வெளியேறும் நீரைச் சேமிப்பது. கலிடோனியாவில் உள்ள திட்டமானது 2,700 குடும்பங்களை இடம்பெயரவும், பெரிய அளவிலான தேயிலை நிலங்களை நீரில் மூழ்கடிக்கவும் செய்யும் என்றும் அவ்வறிக்கை கூறியது. 1987 ஆம் ஆண்டு இவ்வறிக்கை அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட போதும் 1992 ஆம் ஆண்டுவரை அது பொதுவெளிக்கு வரவில்லை. 1992 இல் இவ்வறிக்கை பொதுவெளிக்குக் கிடைத்ததும் இத்திட்டத்தின் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து 1992 பெப்ரவரியில் இலங்கை மின்சார சபை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஒன்றைச் செய்ய தொடங்கியது. இதற்கு ஜப்பான் அரசாங்கம் பொறியியல் சேவை ஆய்வு என்ற சட்டகத்துக்குள் கூடுதல் நிதியுதவியை வழங்கியது. இதில் சாத்தியக்கூறு ஆய்வு, உகந்த வளர்ச்சித் திட்டத்தின் தேர்வு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, விரிவான வடிவமைப்பு, ஒப்பந்த ஆவணங்களைத் தயாரித்தல் ஆகியவை அடங்கும். 1994 செப்டம்பர், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேல்கொத்தமலைத் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய சிக்கல்களை அடையாளம் கண்டது. நீரோடைக் குறைப்பு காரணமாக நீர் வீழ்ச்சி குறைவடைதல், அழகியலில் ஏற்படும் பாதிப்புகள், பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள், நிலத்தடி நீரில் ஏற்படக்கூடிய விளைவுகள், சுரங்கப்பாதை – நீரோடைகளில் நீர் நீக்கம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள், கீழ் ஓடை நீரின் பயன்கள் மற்றும் உயிரிகளின் பன்முகத்தன்மை மீதான தாக்கங்கள் ஆகியன அடிப்படையான பிரச்சினைகளாகக் குறிப்பிடப்பட்டன. ஆனால் அதற்கான தீர்வுகளையோ மாற்றுத் திட்டங்களையோ குறிப்பிடவில்லை. இவ்வளவு பாதிப்புகள் இருந்த போதும் மேல்கொத்மலைத் திட்டத்தை முன்னெடுக்கலாம் என்று முன்மொழிந்திருந்தது.

இலங்கை மின்சார சபை குறித்த அறிக்கையை அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அனுப்பி, திட்டத்தை முன்னெடுக்க அனுமதி கோரியது. 1995 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, குறித்த அறிக்கையை நிராகரித்தது. மார்ச் மாதம், இலங்கை மின்சார சபை, குறித்த தொழில்நுட்பக் குழுவின் முடிவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்தது. இதையடுத்து செயலாளர், குறித்த முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ஒரு குழுவை நியமித்தார். 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அக் குழுவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து, மின்சார சபையின் முறைப்பாட்டைத் தள்ளுபடி செய்தது.

சிலகாலத்தின் பின்னர் அதே அறிக்கையை சில திருத்தங்களோடு 1996 யூலை மாதம் இலங்கை மின்சார சபை மீண்டும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அனுப்பியது. அதே ஆண்டு டிசெம்பரில் அவ்வறிக்கையை மத்திய சுற்றாடல் அதிகார சபை மீண்டும் நிராகரித்தது. 1997 இல், இலங்கை பாரிய மின்சார நெருக்கடியை எதிர்நோக்கியது.  1997 ஏப்பிரலில் நாடு கடுமையான மின் நெருக்கடியை அனுபவித்து வருவதைக் காரணங்காட்டி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளரிடம் இருந்து இந்த திட்டத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் பெற்றது. நாட்டின் மின் தேவை, சுற்றுச்சூழலை விட முக்கியமானது என்று கருதி அனுமதி வழங்கியதாக செயலாளர் தெரிவித்தார். தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ், 1998 யூலை மாதம், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கெதிராக ஒக்டோபரில் சுற்றுச்சூழல் அமைப்பு வழக்குத் தாக்கல் செய்தது. 2000 ஆம் ஆண்டு குறித்த அமைப்புடன் நீதிமன்றத்துக்கு வெளியே உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து சுற்றுச்சூழல் அங்கீகாரம் இத் திட்டத்திற்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இலங்கை அரசாங்கம் மார்ச் 28, 2002 இல் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து நிதியுதவியைப் பெற்றது. இதையடுத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்தது. இவ்வாறுதான் மேல்கொத்மலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டது. இங்கு இரண்டு விடயங்களை நோக்குவது முக்கியம். முதலாவது, 1985 முதல் 2022 வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டம் தொடர்பான நடைபெற்ற விடயங்கள், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகள் யாருடைய நலனுக்காகச் செய்யப்பட்டன, ஏன் செய்யப்பட்டன போன்றவற்றை விசாரிக்க உதவும். இரண்டாவது, 2002 இல் இத்திட்டம் தொடங்கப்பட்ட பின்பு பாரிய மக்கள் எதிர்ப்பை ஏன் அது சந்தித்தது என்பது.

இவ்வகைப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் திட்ட அங்கீகரிப்பு நிறுவனமாக  நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது நியமிக்கப்பட்டிருந்தது. 1995 ஆம் ஆண்டு குறித்த அமைச்சானது, மேல்கொத்மலைத் திட்டம் சூழலுக்கும் மக்களுக்கும் கேடானது என்ற அதன் சொந்த தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையைக் கணிப்பில் எடுக்காமல், திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தது. மேல்கொத்மலைத் திட்டத்திற்கு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு பச்சை விளக்குக் கொடுக்க மறுத்துவிட்டது. ஆனால் திட்டத்திற்கு வேறு மூன்று மாற்றுகளை பரிந்துரைத்தது. எவ்வாறாயினும், மேற்பார்வைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க அமைச்சின் செயலாளர் தீர்மானித்ததுடன், அதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணக்கத்தையும் கோரினார். திட்டமானது போதிய மாற்று ஏற்பாடுகளை மதிப்பீடு செய்யவில்லை என்ற அடிப்படையில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய சுற்றாடல் அதிகாரசபை மறுத்தது. குறித்த அனுமதி நிராகரிக்கப்பட்டமைக்கு பின்வருவன பிரதான காரணங்களாகும்:

  1. திட்டத்திற்கு பொருத்தமான மாற்றுகளை அடையாளம் காணவில்லை.
  2. இது போன்ற திட்டம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றிய தெளிவான, ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. முக்கியமாக அழியவுள்ள நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்வரத்துக் குறையவுள்ள நீர்வீழ்ச்சிகள் ஆகியன ஏற்படுத்தும் சூழலியல் பாதிப்புகள் குறித்த தரவுகள் இன்மை.
  3. நீர்த்தேக்கத்தைக் கட்டுவதற்கு முன்மொழியப்பட்ட பகுதியில் சாத்தியமான நிலச்சரிவுகள் குறித்த தாக்க மதிப்பீடுகள் இல்லாமை.
  4. ரம்பொட ஓயா, புனா ஓயா, டெவோன் ஓயா மற்றும் பூண்டல் ஓயா ஆகியவற்றில் இருந்து தண்ணீரைக் கொண்டு வருவதற்காக உருவாக்கப்படவுள்ள பல கிலோமீட்டர்கள் நீளமான சுரங்கப் பாதைகள் அமைப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் செய்யப்படவில்லை.
  5. தலவாக்கலைப் பகுதி, பகுதியளவாக நீரில் மூழ்கவுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்படும் சேதம் குறித்த விரிவான கணக்கெடுப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. 
  6. அப்பகுதியில் கடும் மண் அரிப்பு ஏற்படும் (தேக்கத்தின் 15% ஆண்டுதோறும் நிரப்பப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.) நிலையில் அதைச் சரிசெய்யும் செயன்முறைகள் எதுவும் திட்டத்தில் இல்லை.
  7. சுமார் 30 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறுகள் மற்றும் அதன் கீழ்நிலைப் பகுதிகள் வறண்டு போகவுள்ளன. இது விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் நீரைப் பயன்படுத்துவோர் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் கணிப்பில் கொள்ளப்படவில்லை.
  8. இத்திட்டத்தின் வடிவமைப்பானது திடீர் வெள்ளம் இப்பகுதியை மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய வகையிலான நிச்சயமற்ற தன்மைகளை கொண்டிருக்கின்றமை.
  9. சுமார் 600 குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்கான சரியான திட்டம் இன்மை.

மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம்

மேல்கொத்மலைத் திட்டம் பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கியது முதல் இத்திட்டத்தினால் பாதிப்படையப் போகும் மக்கள் போராடத் தொடங்கினார்கள். 17 அமைப்புகளும் பல தனிநபர்களும் இணைந்து ‘மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இவ்வமைப்பு உருவாகிய கதையைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.

மக்களின் எதிர்ப்பின் விளைவாக இத்திட்டம் அவ்வப்போது நிறுத்தப்பட்டது. ஜே.ஆர். ஜெயவர்த்தன முதல் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் ஆட்சிக்காலம் வரை இவ்விவகாரம் எடுக்கப்பட்ட போதெல்லாம், வெகுஜன எதிர்ப்பு இருந்தது. அதனால் திட்டம் நிறுத்தப்பட்டது. இதில் கவனிப்புக்குரியது யாதெனில் மலையக மக்களின் பிரதான அரசியல் பிரதிநிதிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன இத்திட்டத்திற்கு ஆதரவளித்திருந்தன. மக்களை வேரோடு பிடுங்குவது, நிலத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்பது, சுற்றுச்சூழலைப் பற்றிய கவலை ஆகியவை மக்களின் எதிர்ப்பிற்கு பொதுவான காரணங்களாக இருந்தது. அரசியல் ஆதரவு இன்மையால் ஒழுங்குபடுத்தபடாத மக்கள் எதிர்ப்பாக இத்திட்டத்திற் கெதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் அமைந்தன.

மலையக அரசியல் தலைமைகளின் சந்தர்ப்பவாத நிலைப்பாடுகள் பரந்த வெகுஜன எதிர்ப்பு இயக்கம் ஒன்றைக் கட்டுவதற்குத் தடையாக அமைந்தன. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தினால் 2001 ஆம் ஆண்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டபோது, மலையன மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பி. சந்திரசேகரன் அதற்கு முழு ஆதரவை வழங்கினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலவாக்கலையில் கண்டனக் கூட்டமொன்றை நடத்தினார். 2004 இல் இ.தொ.க சந்திரிக்காவின் அரசாங்கத்தில் இணைந்த பின்னர், அவரும் இந்தத் திட்டத்தை ஆதரித்தார். இந்த இரண்டு தலைவர்களும் அவர்தம் கட்சிகளும் இத்திட்டத்தின் பாதகமான தாக்கத்தை நன்கு அறிந்திருந்தாலும், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களுக்காக அதை ஆதரித்துள்ளனர்.

இந்தப் பின்புலத்திலேயே மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் 2001 இல் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் திட்டத்திற்கு எதிராக இதுவரை தன்னெழுச்சியாக வந்த அனைத்து எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் ஒருமுகப்படுத்தி மையப்படுத்த இந்த அமைப்பானது அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் தனிநபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு இத்திட்டத்திற்கு எதிராகப் பல வெகுஜனப் போராட்டங்களை நடத்தியது. 2002 இல் இவ்வமைப்பு ஒழுங்குசெய்த கையெழுத்துப் பிரச்சாரம் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்பிரச்சாரத்தில் இத்திட்டத்திற்கு எதிராக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் கையொப்பங்களை இட்டனர். இக்காலப் பகுதியில் பி. சந்திரசேகரன் இத்திட்டத்தை முழுமையாக ஆதரித்தார். நிலம் பிடுங்கப்படும் மக்களுக்கு மட்டுமே இழப்பீடு கோரினார். ஆறுமுகன் தொண்டமானும் இதற்கு ஆதரவளித்ததுடன், அசல் திட்டத்திற்கு பதிலாக, தனது கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட மாற்று முன்மொழிவுக்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக பொதுமக்களிடம் கூறினார். ஆனால் இந்தப் பொய் அம்பலமாக நீண்டகாலம் எடுக்கவில்லை. இத்திட்டத்திற்கு கடன் வழங்கும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகாமை வங்கி இத்திட்டத்தைத் தொடங்க 2005 டிசம்பர் 10 ஆம் தேதி வரை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு காலக்கெடுவை வழங்கியதாக தகவல் வெளியானது. இது இந்தத் திட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் செயற்படுத்தப்படும் என்பதை உணர்த்தியது.

இக்காலப்பகுதியில் மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம்  தங்களது போராட்டங்களைத் துரிதப்படுத்தி, 2005 ஏப்ரல் 10 ஆம் திகதி ஒரு மாநாட்டை ஹட்டனில் மிகவும் வெற்றிகரமாக நடத்தினர். இம்மாநாடு இத்திட்டத்திற்கு எதிராக இடைவிடாத போராட்டத்தை நடத்த பல தீர்மானங்களை நிறைவேற்றியது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி, இம்மக்கள் இயக்கத்தினால் பொகவந்தலாவ நகரில் பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. 2005 மே 8 அன்று, இம்மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக தலவாக்கலையில் மலையக இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த கண்டனக் கூட்டமும் ஊர்வலமும் நடந்தன. 2005 மே 15 அன்று, மலையகத்தில் ஒரு வெற்றிகரமான எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. அன்று, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டன. மிகப்பெரிய மக்கள் போராட்டமாக இது வெற்றியடைந்தது. இது மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் பரந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருப்பதை உறுதி செய்தது.

மக்கள் இயக்கம் இதைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை இரண்டாம் கட்டத்திற்கு நகர்த்தியது. இது ஒரு மாதகால எதிர்ப்பு நடவடிக்கையாகத் திட்டமிடப்பட்டு 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடங்கப்பட்டது. மலையகத்தின் ஏனைய பகுதிகளிலும், கொழும்பிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கூட்டங்களும் நடாத்தப்பட்டன. இம்மக்கள் இயக்கம் பரந்துபட்ட மக்கள் ஆதரவைப் பெற்றது. மக்கள் இயக்கத்தின் ஒருமாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் நிறைவு நிகழ்ச்சி தலவாக்கலை நகரில் ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. தலவாக்கலை கதிரேசன் கோவில் அருகிலிருந்து ஆரம்பமான பேரணி தலவாக்கலை பஸ்தரிப்பு நிலையத்தைச் சென்றடைந்ததுடன், அங்கு மறியல் போராட்டம் இடம் பெற்றது. அப்போது அவ்விடத்திற்கு வந்த குண்டர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதனைப் பார்த்துக்கொண்டு தலவாக்கலைப் பொலிஸார் மௌனம் காத்து நின்றனர். தாக்குதலை மேற்கொண்டோரில்  தலவாக்கலை நகர சபைத் தலைவரும் இருந்தார். இது, மக்கள் போராட்டத்தின் மீது தலவாக்கலையிலுள்ள அரசாங்கச் சார்பு குண்டர்களே தாக்குதல் நடத்தினர் என்பதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து மக்கள் இயக்கத்தை முன்னெடுத்த தலைமைக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக இலக்கு வைக்கப்பட்டனர். இருந்த போதும் மக்கள் தொடர்ந்தும் மேல்கொத்மலைத் திட்டத்திற்கு எதிராகப் போராடிய வண்ணம் இருந்தனர்.

2006 ஆம் ஆண்டளவில் இலங்கையின் விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முழுமையான முடிவுக்கு வந்து, போர் தொடங்கியிருந்த சூழலானது மக்கள் இயக்கத்தைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் அரசுக்கு வாய்ப்பானது. 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் குறித்த மக்கள் இயக்கத்தை வழிநடாத்திய பிரதான செயற்பாட்டாளர்கள் 25 பேர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்கள். இதில் தமிழர்களும் சிங்களவர்களும் அடங்குவார்கள். இவர்கள் விடுதலைப்புலிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களில் பலர் நீண்ட சிறைவாசத்தை அனுபவிக்க நேர்ந்தது.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவை, திருத்திய திட்டத்திற்கு அனுமதியளித்தது. இது போராட்டத்தின் வெற்றியாகும். மேல்கொத்மலைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் 2005 ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கை மின்சார சபைக்கும் ஜப்பானிய நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு இத்திட்டம் நிறைவடைந்து நீர்மீன்சார உற்பத்தி தொடங்கியது.

நிறைவுக் குறிப்புகள்

மேல்கொத்மலைத் திட்டத்தின் கதையும் அதன் அனுபங்களும் சில முக்கியமான செய்திகளைச் சொல்கின்றன. பெரிய நீர்த்தேக்கங்கள் பற்றிய உலகளாவிய விவாதம் ஒரே நேரத்தில் மிகவும் சிக்கலானதும் அடிப்படையில் எளிமையானதுமாகும். இது சிக்கலானது, ஏனெனில் சிக்கல்கள் நீர்த்தேக்கத்தின் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் இயக்கம் ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்படவில்லை; சமூக, சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் தேர்வுகளின் வரம்பைத் தழுவியதால், வளர்ச்சி மற்றும் மேம்பட்ட நல்வாழ்வுக்கான மனித விருப்பங்களையும் சார்ந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில், உலகளாவிய மின்சார உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. மேலும், வளர்ந்து வரும் பொருளாதாரம் காரணமாக, உலகம் முழுவதும் மின்சாரத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. மின்சாரத் தேவை கணிசமாக அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், இது வேகமாக வளர்ந்து வரும் ஆற்றலின் இறுதிப் பயன்பாடாகும். எனவே, நீர்மின்சாரத்தின் தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் எதிர்கால உலக ஆற்றல் கலவையில், குறிப்பாக வளரும் நாடுகளில், முக்கிய பங்களிப்பாளராக அமைகிறது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கிய ஆதாரமாக நீர்மின்சாரம் உள்ளது. இது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதில் முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் நீர்மின்சாரம் முக்கியமான புதுப்பிக்கத்த சக்தி மூலமாகும். இருப்பினும், இடப்பெயர்வு, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார அபாயங்களுக்கும் மேலதிகமாக, நீர்த்தேக்கங்கள் பாதகமான சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியன. எடுத்துக்காட்டாக, ஒரு ஆற்றில் அணை கட்டுவது, நீரின் வெப்பநிலை, ஆக்ஸிஜன், உப்புத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து அளவுகளை மாற்றுகிறது. நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள் மற்றும் பாலூட்டிகளின் பல்லுயிர்ப் பெருக்கத்திலும் இருப்பிலும் இவை முக்கியமான தாக்கங்களை உண்டு பண்ணுகின்றன. மேலும், நீர்மின்சாரமானது பொதுவாக புதைபடிவ எரிபொருட்களுக்கு உமிழ்வு இல்லாத மாற்றாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீர்த்தேக்கங்கள் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்த்தேக்கங்கள், தாவரங்கள் மற்றும் பிற கரிமப் பொருட்களை நீரில் மூழ்கடித்து, அவை சிதைவடையும் போது காபனீரொக்சைட் மற்றும் மீத்தேன் ஆகியவற்றை காற்றில் வெளியிடுகின்றன. கூடுதலாக, வரவிருக்கும் தசாப்தங்களில் நீர்மின் அணைகளின் செயற்பாடு மற்றும் பாதுகாப்பை காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்வது மிகவும் முக்கியமானது. வறட்சியானது அணையின் ஆற்றலை உற்பத்தி செய்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் வழங்குவதற்கான திறனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். அதிக மழைப்பொழிவு, இதற்கு நேர்மாறாக, அணைகள் நிரம்பி வழியவும் அல்லது உடைந்து திடீர் வெள்ளம் ஏற்படவும் வழிவகுக்கும். இவை  பொருளாதார ரீதியில் கீழ்நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை அச்சுறுத்தும்.

நீர்மின்சார மேம்பாட்டின் பரந்த நிலைத்தன்மை மற்றும் சமூக நீதியை உணர, குறைந்த தீங்கு விளைவிக்கும் மற்றும் அதிக உற்பத்தியைச் செய்யக்கூடிய நீர்த்தேக்கத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பது மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவதை உறுதி செய்வதும் முக்கியம். இவ்வகையான நீர்த்தேக்கத் திட்டங்களால் ஏற்படும் இடப்பெயர்வு, சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் நலனுக்கு கணிசமான அச்சுறுத்தல்களை உருவாக்கம் என்பதே மேல்கொத்மலைத் திட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய அனுபவமாகும். வருமானம் மற்றும் வாழ்வாதாரச் சவால்களுக்கு மேலதிகமாக, அவர்கள் அடிக்கடி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் அடிப்படையில் பாதிக்கப்படுகின்றனர். இதை மேல்கொத்மலைத் திட்டத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களின் அனுபங்களின் வழி மிகச் சிறப்பாக உணர முடியும்.

பெரிய அளவிலான திட்டங்கள், பின்னணியில் அதிகார உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதிகாரத்திற்கு எதிரானதாகவே நில அபகரிப்புக்கெதிரான போராட்டங்களும் சூழலைக் காப்பதற்கான போராட்டங்களும் அமைகின்றன. எனவே பொதுமக்களின் ஆதரவு பெற்ற போராட்டங்கள் அதிகாரத்துக்கு எதிரானவையே. மேலும், இவ்வகையான போராட்டங்கள் என்பது சமூகத்தில் யாரெல்லாம் அங்கம் வகிக்க முடியும், யாரால் முடியாது என்பது பற்றியதும், அபிவிருத்தி பற்றிய வேறுபட்ட மதிப்புகளைக் கொண்டுள்ள குடிமக்களைப் பற்றியதும் கூட. மேல்கொத்மலைத் திட்டத்தினால் இடம்பெயர்க்கப்படவுள்ள மக்கள் பற்றிய அக்கறையற்று இருந்த வடபுலத்து மக்கள் மூன்று ஆண்டுகளில் போரினால் முழுமையாக இடம்பெயர நேர்ந்தது. எனவே பரந்துபட்ட ஒடுக்கப்படும் மக்களின் ஒன்றிணைவும் போராட்டமும் தவிர்க்க முடியாதவை.

நீர்மின் திட்டங்களைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மோதல்களின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழில்நுட்பத்தின் அரசியல் தன்மையைக் குறிக்கிறது. புதுப்பிக்கத்தக்க சக்தியின் தேவை மற்றும் அவசரம் பற்றிய பேச்சுகள் இன்று நீர்மின்சாரத்தின் வேகமான விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. இந்தக் கதையாடலின் கீழ், சுற்றுச்சூழல் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புத் தரநிலைகள் தளர்த்தப்படுகின்ற அதே நேரத்தில் சமூகத் துயரங்கள், சூழலியல் சீர்குலைவு ஆகியன அனுமதிக்கப்படுகின்றன. எவ்வளவு சக்தி (மின்சாரம்), யாரால், எதற்காக, எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயக விவாதம் இங்கு நடைபெறவே இல்லை.

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான வன்முறையும் அடக்குமுறையும் தனிப்பட்ட எதிர்ப்பாளர்களை மட்டும் குறிவைக்கவில்லை. அதிகாரம் வெளிப்படையான ஆர்ப்பாட்டங்களை (நேரடி வன்முறை) ஒடுக்குவது மட்டுமல்லாமல், வெவ்வேறு வழிகளில் அறிவாற்றல் மிகுந்த கேள்விகள் கேட்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. இது தங்களை அம்பலப்படுத்தும் பல்வேறு அரசியல் வங்குரோத்துத்தனத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேல்கொத்மலைத் திட்டத்திற்கு தொடர்ச்சியான மக்கள் எதிர்ப்புகள் இருந்த போதும் இத்திட்டத்திற்கு தொடர்ச்சியான ஆதரவையும் கடனுதவிகளையும் ஜப்பான் ஏன் செய்து வந்தது என்ற வினா விரிவான விவாதத்தை வேண்டுகிறது.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

4381 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)