லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் - சுண்டிக்குழி
Arts
10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – சுண்டிக்குழி

September 5, 2024 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

சென்ற கட்டுரையில் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றுத் தொடர்பாக நிலப்படத்தில் உள்ள விவரங்களைப் பற்றிப் பார்த்தோம். இனி யாழ்ப்பாண நகரத்தோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இன்னொரு கோவிற்பற்றான சுண்டிக்குழிக் கோவிற்பற்றைக் குறித்துப் பார்க்கலாம். இக் கோவிற்பற்றில் சுண்டிக்குழி, கரையூர், கொழும்புத்துறை, சிவியாதெரு, நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் ஆறு துணைப் பிரிவுகள் இருந்ததாக நிலப்படம் காட்டுகிறது. (படம்-1) இவற்றுள் கரையூர் தற்காலத்தில் குருநகர் எனவும், சிவியாதெரு இப்போது அரியாலை எனவும் அழைக்கப்படுகின்றன. நளவபரவு, கடையகுடியிருப்பு என்னும் இரண்டும் வேறு பதிவுகளில் காணப்படாத பிரிவுகள். 

நிலப்படம் காட்டும் சுண்டிக்குழிக் கோவிற்பற்றின் சிவியாதெருத் துணைப்பிரிவு முழுவதும் தற்போதைய நல்லூர் பிரதேசச் செயலர் பிரிவுக்குள்ளும் எஞ்சிய துணைப்பிரிவுகள் யாழ்ப்பாணப் பிரதேசச் செயலர் பிரிவுக்குள்ளும் அடங்குகின்றன. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் சிவியாதெருவின் கிழக்குப் பகுதி மட்டும் நல்லூர் பிரதேசசபையின் கீழும் ஏனைய பகுதிகள் யாழ்ப்பாண மாநகர சபையின் கீழும் வருகின்றன. 

எல்லைகள்

சுண்டிக்குழிக் கோவிற்பற்று, தெற்கிலும் வடக்கின் பெரும் பகுதியிலும் கடலேரியை எல்லையாகக் கொண்டுள்ளது. வடக்கு எல்லையின் எஞ்சிய பகுதியில் நல்லூர், கோப்பாய் ஆகிய கோவிற்பற்றுகள் உள்ளன. மேற்கில் யாழ்ப்பாண நகரமும் நல்லூரும் காணப்படுகின்றன. 

துணைப் பிரிவுகளான கரையூர், சுண்டிக்குழி, கொழும்புத்துறை என்பன தெற்கு எல்லையை அண்டிக் கடலேரி ஓரமாக மேற்கிலிருந்து கிழக்காக மேலே குறிப்பிட்ட வரிசை ஒழுங்கில் அமைந்துள்ளன. மிகச் சிறிய துணைப் பிரிவான கடையகுடியிருப்பும் தெற்குக் கரையோரமாகவே அமைந்துள்ளபோதும் ஏனைய மூன்று பக்கங்களிலும் இது கரையூர்ப் பிரிவால் சூழப்பட்டிருக்கிறது. மேலே குறிப்பிட்ட துணைப் பிரிவுகளுள் நளவபரவு மட்டுமே கடலேரியை எல்லையாகக் கொண்டிருக்கவில்லை. இது நல்லூர் எல்லையில் அமைந்துள்ளது. ஒப்பீட்டளவில் சிவியாதெரு மிகவும் பெரிய துணைப் பிரிவாகக் காணப்படுகிறது. 

குடியிருப்புகள்

மேலே குறிப்பிட்ட துணைப் பிரிவுகளின் பெரும்பாலான பெயர்கள் சாதிப் பெயர்களைத் தழுவியவையாகக் காணப்படுகின்றன. இது, மேற்படி பிரிவுகள் அல்லது அவற்றிலிருந்த முக்கிய குடியிருப்பு, குறித்த சாதியினருக்கு உரியதாக இருந்திருக்கும் என்பதைக் காட்டுகிறது. பிற்காலத்தில் நளவபரவு, கடையகுடியிருப்பு ஆகிய பிரிவுகளும் அவற்றின் பெயர்களும் பயன்பாட்டில் இல்லாமற் போய்விட்டன. சாதியைக் குறிக்கும் இடப்பெயர்களை மாற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் ஏனைய சாதி சார்ந்த பெயர்கள் மாற்றப்பட்டன. ‘கரையூர்’ என்பது அமைவிடம் சார்ந்த பெயரேயன்றி சாதிப் பெயர் அல்ல. ஆனாலும், அது சாதிப்பெயரைத் தழுவியதாகத் தோன்றுவதாற் போலும் அதற்கும் புதிய பெயர் வழங்கப்பட்டது. இக்குடியிருப்புப் போர்த்துக்கேயர் காலத்துக்கு முந்தியது. கேரோஸ் பாதிரியார் எழுதிய நூலில் இதற்குச் சான்றுகள் உள்ளன.1

சிவியாதெரு என்று அழைக்கப்பட்ட குடியிருப்பும் மிகவும் பழமையானது. நல்லூரைத் தலைநகராகக் கொண்டு தமிழ் மன்னர்கள் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலேயே இக்குடியிருப்பு இருந்துள்ளது. இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் அரச குடும்பத்தினருக்கும் பிற உயர்குடியினருக்கும் சேவை செய்ததால் தொடக்ககாலக் குடியிருப்பு நல்லூர் எல்லையை அண்டி இருந்திருக்கக்கூடும்.

கொழும்புத்துறையில் கடல்வழிப் போக்குவரத்துக்கான துறைமுகம் இருந்தது. குடாநாட்டிலிருந்து தலைநிலப் பகுதிகளுக்குச் செல்லும் பயணம் கொழும்புத்துறை ஊடாகவே இடம்பெற்றது. நல்லூர் மீது படையெடுத்த போர்த்துக்கேயர் கொழும்புத்துறையிலேயே தமது படைகளை இறக்கினர்.2 போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலங்களிலும் இவ்விடத்தைத் தென்பகுதிக்குச் செல்வதற்கான துறையாக அதிகாரிகளும் மக்களும் பயன்படுத்தியுள்ளனர். இதனால், இங்கே கடல்வழிப் போக்குவரத்துச் சேவையை வழங்குபவர்கள் குடியிருந்திருப்பர். அதேவேளை, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்களும் இப்பகுதியில் குடியிருந்திருக்க வாய்ப்பு உண்டு.

நளவபரவு என்று குறிப்பிட்டுள்ள பிரிவு நளவர் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்த குடியிருப்பு எனக் கொள்வதில் தவறில்லை. இந்த நிலப்படத்துக்கு முன்னரோ பின்னரோ இந்தப் பெயர் வேறு பதிவுகளில் இருப்பதாகத் தெரியவில்லை. கோட்டையினதோ நகரத்தில் வாழ்ந்த ஒல்லாந்தக் குடும்பங்களினதோ தேவைக்காக இம்மக்கள் நகரத்துக்கு அண்மையில் புதிதாகக் குடியேற்றப்பட்டனரா என்பது ஆய்வுக்குரியது. எவ்வாறெனினும் இம்மக்கள் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வாழ்கின்றனர் என்பதற்கு இந்நிலப்படம் சான்றாக உள்ளது.

நிலப்படத்தில் கடையகுடியிருப்பு எனக் குறித்துக் காட்டியிருக்கும் பகுதியில் இன்றும் அச்சமூகத்தினர் வாழ்ந்துவருகின்றனர். சுவாமி ஞானப்பிரகாசர் 1925 இல் எழுதிய நூலொன்றில், தேவாலயப் பதிவுகளைச் சான்று காட்டிக் குறித்த பிரிவினர் வண்ணார்பண்ணைக் கோவிற்பற்றில் உள்ள கொட்டடியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.3 ஆனால், இந்த நிலப்படம், சுவாமி ஞானப்பிரகாசர் நூல் எழுதியதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அவர்கள் இப்பகுதியில் வாழ்ந்ததற்குச் சான்று தருகிறது.

நிலப்படத்தில் குறிப்பிடாத மேலும் சில குடியிருப்புகள் இப்பகுதியில் இருந்தன. குறிப்பாக, அரியாலை, பாசையூர் ஆகியவை இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. அக்காலத்தில் இன்றைய கிழக்கு அரியாலையே அரியாலை எனப்பட்டது. போர்த்துக்கேயர் காலத்துப் பதிவுகளில் அரியாலையைச் சிவியாதெருவுக்குப் புறம்பான ஒரு ஊராகக் காட்டியுள்ளனர்.4 இது மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு குடியிருப்பு. நிலப்படத்தில் பாசையூர் குறிக்கப்படாவிட்டாலும் கரையோரமாக ‘Paseoer Ratel’ என்ற குறிப்பு உள்ளது. இது பாசையூர் துறையைக் குறிப்பதாக இருக்கலாம்.

வீதிகள்

நிலப்படத்தின்படி, சுண்டிக்குழிக் கோவிற்பற்றிற் காணப்படும் முக்கிய வீதிகளுள் ஒன்று யாழ்ப்பாண நகரத்தையும் கொழும்புத்துறையையும் இணைக்கிறது. (படம்-2) இவ்வீதி, நகரத்தின் பிரதான வீதியின் கிழக்கு நோக்கிய நீட்சியாகக் காணப்படுகிறது. இது தற்காலத்திலும் அதிக மாற்றம் அடையவில்லை. இந்த வீதியில் இருக்கும் தேவாலயத்துக்கு அருகிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் இன்னொரு வீதி நல்லூரில் உள்ள இன்றைய முத்திரைச் சந்தைப் பகுதிவரை செல்வதையும் நிலப்படம் காட்டுகிறது. இந்த வீதியை நல்லூரையும் சுண்டிக்குழித் தேவாலயப் பகுதியையும் இணைப்பதற்காகப் போர்த்துக்கேயர் அமைத்திருக்கக்கூடும். இந்த வீதியுடன் துல்லியமாகப் பொருந்தக்கூடிய வீதி எதுவும் தற்காலத்தில் இல்லை. இன்றைய பழைய பூங்கா வீதியின் கொழும்புத்துறை வீதிக்கு வடக்கேயுள்ள பகுதியும் கச்சேரி – நல்லூர் வீதியும் நிலப்படம் காட்டும் மேற்படி வீதிக்கு அண்மையில் உள்ளன. ஆனால் கச்சேரி – நல்லூர் வீதியின் நல்லூர் முனை நிலப்படம் காட்டும் இடத்துக்குக் கிழக்கே சற்றுத் தொலைவில் உள்ளது. நிலப்படத்தில் வீதி பிழையாக வரையப்பட்டதா அல்லது பிற்காலத்தில் வீதியின் தடம் மாற்றப்பட்டதா என்பது ஆய்வுக்கு உரியது. மேலே விவரித்த நல்லூர் – சுண்டிக்குழி இணைப்பு வீதியின் ஒரு புள்ளியிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் ஒரு வீதி கடலேரிக் கரையை அடைவதை நிலப்படம் காட்டுகிறது. இது இன்றைய கண்டி வீதித் தடத்தில் செல்வதாகவே தோன்றுகிறது. இந்த வீதியின் மேற்கூறிய தொடக்கப் புள்ளி தற்போதைய கண்டி வீதியைக் கச்சேரி – நல்லூர் வீதி சந்திக்கும் இடமாக இருக்கக்கூடும். 

பிற்காலத்தில் கண்டி வீதியை அகலமாக்கி மேம்படுத்தியபோது செங்கோணத் திருப்பங்களைத் தவிர்ப்பதற்காக இன்றைய பஸ்தியன் சந்தியிலிருந்து புதிய கச்சேரி வரையிலான வீதிப் பகுதி புதிதாக அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவ்வீதிப் பகுதி நிலப்படத்தில் இல்லை. 1840 களை அண்டிய காலப் பகுதியில் இன்று அழிபாடடைந்து காணப்படும் பழைய கச்சேரிக் கட்டடத்தை முதன் முதலில் கட்டியபோது, இந்தப் பகுதியிலிருந்த வீதிகளின் தடங்களையும் பெருமளவுக்கு மாற்றியிருக்க வாய்ப்புகள் உண்டு. அருகிலிருந்த பழைய ஒல்லாந்தத் தேவாலயக் கட்டடம் முறையான வீதியமைப்புக்கு இடைஞ்சலாக இருந்ததால் அதை இடித்துவிட்டுச் சற்றுத் தள்ளிப் புதிய தேவாலயத்தைக் கட்டியதற்குச் சான்றுகள் உள்ளன.

கட்டடங்களும் அமைப்புகளும்

சுண்டிக்குழிக் கோவிற்பற்றில் நிலப்படம் காட்டும் கட்டடங்களில் சுண்டிக்குழித் துணைப் பிரிவில் அமைந்துள்ள கோவிற்பற்றுத் தேவாலயம் முக்கியமானது. இது நல்லூரிலிருந்து தெற்கு நோக்கி வரும் வீதியும் யாழ்ப்பாண நகரிலிருந்து கொழும்புத்துறைக்குச் செல்லும் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. போர்த்துக்கேயர் காலத்தில் சுண்டிக்குழியில்  ஒரு தேவாலயம் இருந்துள்ளது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காகப் படையெடுத்து வந்த ஒல்லாந்தர் இத் தேவாலயத்தில் இரவைக் கழித்தது பற்றி போல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.5 இதையே ஒல்லாந்தர் கைப்பற்றித் தமது தேவைக்குப் பயன்படுத்தினர் என ஊகிக்கலாம். இந்தத் தேவாலயம் அலங்காரமானது என்றும் அவர் எழுதியுள்ளார்.6 அந்நூலிலுள்ள சுண்டிக்குழித் தேவாலயத்தின் படமும் அதை நிரந்தரமான கட்டடப் பொருட்களாலான அழகிய கட்டடமாகவே காட்டுகிறது.7 (படம்-3) இத்தேவாலயம் பல சமூகத்தைச் சார்ந்தவர்களும் வாழுகின்ற சுண்டிக்குழிக் கோவிற்பற்றின் ஒரே தேவாலயமாக இருந்தபோதும், இது சிவியார் சமூகத்துக்கு உரியது என போல்தேயஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார்.8 இதற்கான காரணம் தெரியவில்லை.

கொழும்புத்துறைத் துறைமுகத்துக்கு அருகில் கரையோரமாக, கட்டடமொன்றைக் குறிக்கும் ஒரு குறியீடு காணப்படுகிறது. இது ஒரு தேவாலயக் கட்டடக் குறியீட்டின் அளவுக்குப் பெரிய குறியீடாக உள்ளதுடன் அமைப்பிலும் அதைப் போலவே உள்ளது. கட்டடத்தின் பெயர் குறிக்கப்படவில்லை. இது துறைமுகத்தோடு தொடர்புடைய ஒரு கட்டடமாக இருக்கலாம். பொருட்களைக் களஞ்சியப்படுத்தும் கட்டடமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது படத்தில் உள்ளதுபோல் ஒரு பெரிய கட்டடமாக இருந்ததா என்பது தெரியவில்லை. 

இன்றைய கண்டி வீதியின் தடத்தில் அமைந்த வீதி உப்பாற்றுக் கரையில் முடியும் இடத்தில் ஒரு சிறிய கட்டடமும் ஒரு மரமும் குறியீடாகக் காட்டப்பட்டுள்ளன. இது பொதுவாக அம்பலம் அல்லது மடத்தைக் குறிக்கும் குறியீடு என முன்னைய கட்டுரைகளில் பார்த்தோம். இவ்வாறான மடங்கள், வீதிகள் நீரேரிகளைக் கடக்கும் இடங்களில் இருப்பதை ஏற்கெனவே எடுத்துக்காட்டினோம். இங்குள்ள மடத்தை உப்பாற்றைக் கடந்து தென்மராட்சிக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக அமைத்திருக்கக்கூடும்.

குளங்கள்

நிலப்படம் சுண்டிக்குழிக் கோவிற்பற்றில் 28 குளங்களைக் காட்டுகிறது. இவற்றுள் ஒன்றுக்குப் பெயர் இல்லை. இன்னொன்றுக்குப் பொதுப் பெயரை மட்டும் குறித்துள்ளனர். ஏனைய 26 குளங்களுக்கும் சிறப்புப் பெயர்கள் உள்ளன. இவற்றுள் யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் இருப்பது பத்து மட்டுமே. இவை 1. பெயர் குறிப்பிடாத குளம், 2. தேவரிக் குளம், 3. கரையா குளம், 4. புங்கங்குளம், 5. வண்ணக்கன் குளம், 6. பிரப்பங் குளம், 7. நீர்நொச்சித் தாழ்வு, 8. மதிப்பன் குளம், 9. நெரிஞ்சிக் குளம், 10. வெட்டுக் குளம் என்பவை. தற்காலத்தில் இப்பகுதியில் உள்ள குளங்களின் எண்ணிக்கை இதைவிட அதிகம். அத்துடன், நிலப்படத்தில் காட்டியுள்ள சில குளங்கள் பிற்காலத்தில் மூடப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. எனவே நிலப்படத்தில் அக்காலத்திலிருந்த பல குளங்களைக் காட்டாமல் விட்டுள்ளனர் என்றே தோன்றுகிறது.

மேலுள்ள குளங்களுள் தேவரிக் குளம், பிரப்பங் குளம், நீர்நொச்சித் தாழ்வு என்பன இன்றும் உள்ளன. அவற்றுக்குத் தற்காலத்திலும் அதே பெயர்களே வழக்கில் உள்ளன. பெயர் குறிப்பிடாத குளம் வண்ணார்பண்ணை, கரையூர் எல்லையில் உள்ளது. ஒப்பீட்டளவில் பெரிய குளமான இதைப் பல ஒல்லாந்தர்கால நிலப்படங்களில் காட்டியிருந்தாலும் எதிலும் இதன் பெயர் இல்லாதது வியப்புக்குரியது. பிரித்தானியர் காலத்தில் சப்பல் வீதியிலிருந்து முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருக்கள் வடக்கு நோக்கி நீட்டப்பட்டபோது மேற்படி குளம் குறுக்கே இருந்ததால் அது மூடப்பட்டிருக்கக்கூடும். நிலப்படத்தில் கரையா குளம் எனப் பெயர் தரப்பட்டுள்ள குளத்தைப் பிற்காலப் பதிவுகளில் காணப்படும் பட்டங்கட்டிக் குளத்துடன் அடையாளம் காணலாம். இக்குளம் திருக்குடும்பக் கன்னியர் மடத்துக்கு எதிர்ப் பக்கத்தில் இன்று தண்ணீர்த் தாங்கி உள்ள இடத்தில் இருந்தது. இதுவும் பிரித்தானியர் காலத்தில் மூடப்பட்டதற்குச் சான்றுகள் உள்ளன.9 புங்கங்குளம் என்னும் இடப்பெயரினூடாக இக்குளம் இருந்தது தெரிந்தாலும் அக்குளமும் இப்போது இல்லை. மேலுள்ள பட்டியலில் காணப்படும் ஏனைய குளங்களும் மூடப்பட்டிருக்கலாம் அல்லது பெயர் மாற்றம் பெற்றுத் தற்போதும் இருக்கக்கூடும். இது ஆய்வுக்குரியது.

யாழ் மாநகரசபைக்குள் அடங்காத அரியாலை கிழக்குப் பகுதியில் 1. மட்டி பிடித்த துரவு, 2. கூச்சே துரவு, 3. புளியடிக் குளம், 4. ஆலடிக் குளம், 5. குறிஞ்சாத் துரவு, 6. இத்தியடிக் குளம், 7. வெட்டுக் குளம், 8. ஆள்காட்டித் துரவு, 9. கிலிகிலிப்பைக் குளம், 10. கிராஞ்சிக் குளம், 11. புளியடிக் குளம், 12. இரணைக் குளம், 13. புல்லாண்டிக் குளம், 14. துரவு, 15. வெட்டுத் துரவு, 16. புளியங் குளம், 17. வெட்டுத் துரவு, 18. நரெயன் குளம் ஆகிய  18 குளங்களை நிலப்படம் காட்டுகிறது. மக்கள் தொகை அதிகமாக இருக்கக்கூடிய கோவிற் பற்றுகளிலேயே பல நீர்நிலைகள் வெறுமனே பொதுப் பெயரால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நிலையில், அதிகம் மக்கள் வாழாத அரியாலை கிழக்குப் பகுதியில் குறித்துள்ள எல்லா நீர்நிலைகளுக்குமே சிறப்புப் பெயர்கள் தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்காலத்தில் மேற்படி அரியாலை கிழக்குப் பகுதியில் 12 குளங்கள் மட்டுமே உள்ளன. இவை, 1. அம்மன் கோவில் குளம், 2. ஈச்சங்காட்டுக் குளம், 3. கூடைக் குளம், 4. குண்டுக் குளம், 5. சுடலையடிக் குளம், 6. காராமணக்குக் குளம், 7. வண்ணா குளம், 8. துரவடிப் பிள்ளையார் குளம், 9. முத்து விநாயகர் கட்டுக் குளம், 10. தாமரைக் குளம், 11. நரயன் வெளிக் குளம், 12. ஐயனார் கோவில் குளம் என்னும் பெயர்களில் பதியப்பட்டுள்ளன. மேலுள்ள இரண்டு பட்டியல்களையும் ஒப்பிடும்போது, பழைய பெயர்களும் புதிய பெயர்களும் பொருந்தி வராததைக் காணமுடிகிறது. அதேவேளை, தற்காலத்தில் எஞ்சியுள்ள குளங்களை நிலப்படத்திலுள்ள குளங்களுடன் அடையாளம் காண்பதும் இலகுவல்ல. ஓரளவு பெயர் ஒற்றுமையையும் அமைவிடத்தையும் கவனத்திற் கொள்ளும்போது, நிலப்படத்தில் நரெயன் குளம் (டச்சு மொழி எழுத்துகளில்: Narean Coelam) எனக் குறித்துள்ள குளமே தற்காலத்தில் நரயன் வெளிக்குளம் (ஆங்கில எழுத்துகளில்: Narayan veli Kulam) எனப் பெயர் பெற்றுள்ளதாகக் கருதலாம். தற்காலத்திலுள்ள 12 குளங்களுள் நான்கு குளங்கள் கோவில்களைத் தழுவிய பெயர்கள். இவை பிற்காலத்தில் அவற்றுக்கு அருகில் எழுந்த கோவில்களால் புதிய பெயர்களைப் பெற்றவை என்பது தெளிவு. 

குறிப்புகள்

  1. Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon vol I, trans. S. G. Perera (New Delhi: Asian Educational Services, 1992), —.
  2. Paulo Da Trinidade, Chapters on the Introduction of Christianity to Ceylon Taken from the Conquesta Spiritual Do Oriente of Friar Paulo Da Trinidade, trans. Edmund Peiris and Achilles Meersman (Colombo, 1972), 186.
  3. S.Gnanaprakasar, XXV Years of Catholic Progress, (Jaffna: St. Joseph’s Catholic Press, 1999), 116.
  4. P. E. Pieris, The Kingdom of Jafanapatam 1645 (New Delhi: Asian Educational Services, 1995), 48.
  5. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 299.
  6. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 328. 
  7. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 321.
  8. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 328.
  9. A. B. Fyers et all, “Report of the Commission appointed to inquire into the Outbreak of Cholera in the Northern Province,” In Ceylon Sessional Papers 1877 (Colombo: Government Printer, 1877), 14.

ஒலிவடிவில் கேட்க

3445 பார்வைகள்

About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)