அறிமுகம்
இலங்கையில் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இவ்வினங்களின் தனித்துவத்தைப் பேணிக்கொள்வதற்கும் கலாசாரப் பாதுகாப்பிற்கும், தாய்மொழியான தமிழ்மொழியின் பாதுகாப்பு முக்கியமானதாகும். இருந்த போதிலும் உலகமயமாக்கல் மற்றும் மேற்கத்திய ஆதிக்கம் என்பவற்றினாலும், இலங்கையில் வரலாற்றுரீதியாக சிறுபான்மையினர் மொழிரீதியான பாகுபாடுகளிற்கு உட்பட்டு வருவதனாலும், தமிழ்மொழி நலிவடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
மேலும் இனமுரண்பாடு மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக கணிசமானளவு தமிழ்மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் தமிழ்மொழியை எழுத, வாசிக்க இடர்படுகின்றனர். அவர்களுக்கான தமிழ் கற்பிக்கும் வழிமுறைகளைக் கண்டறியும் பொறுப்பும் அவர்களின் தாயகம் என்ற வகையில் இலங்கைக்குண்டு. இப் பின்னணியில் இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை மீள்பார்வைக்கு உட்படுத்தி, மேம்படுத்த வேண்டிய தேவை அவசியமாகவுள்ளது.

இலங்கையில் தமிழ்மொழி அமுலாக்கமும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளும்
இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் ‘சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகருமமொழி’ என்ற 33 ஆம் இலக்க தனிச் சிங்களச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனால் சிறுபான்மையினரின் மொழியுரிமை மறுக்கப்பட்டது. “இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்கும் மொழியே அடிப்படைக் காரணம். இது ஓர் அடிப்படை மனித உரிமை. இவ்வாறான உரிமைகள் கிடைக்கப்பெறாத போதுதான் புரட்சிகள் தோன்றுகின்றன” என களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜயந்த செனவிரத்தின அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பதின்மூன்றாவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தின் அடிப்படையில், தமிழ் அரச கரும மொழியாக்கப்பட்டது. சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாகவும் (உறுப்புரிமை 19), சட்டரீதியான மொழியில் தமிழ், சிங்களம் நடைமுறை மொழிகள் (உறுப்புரிமை 22) எனவும் இன்றைய அரசியலமைப்பில் மொழியுரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 25 ஆம் திகதிய சுற்றறிக்கையின்படி அரசமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ‘தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு’ உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சின் கீழுள்ள ‘அரசகரும மொழிகள் ஆணைக்குழு’ மொழிரீதியான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது மும்மொழிக் கொள்கை அமுலில் உள்ளபோதும், பல்வேறு மொழி ரீதியான பிரச்சினைகள் எதிர்நோக்கப்படுகின்றன (ஜெயசூரியன், 2014).
• மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மூன்றுவருடமாக மேற்கொள்ளப்பட்ட மொழியுரிமை ஆய்வில், 1788 முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகம், மொழி அமைச்சு, மொழித்திணைக்களம் மற்றும் மொழி ஆணைக்குழு போன்ற அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
• மும்மொழிகளும் பிரயோகிக்கப்படவேண்டிய புகையிரத நிலையம், பேரூந்து நிலையம் போன்ற பொதுவான இடங்களில் தனியொரு மொழியைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் பிரச்சினைகளைக்கூட அரசாங்கத்தினால் தீர்க்க முடியவில்லை.
• சுற்றுநிருபங்கள், கடிதங்கள் என அரச சேவை நிலையங்களிலிருந்து அனுப்பப்படும் ஆவணங்களில் சில, தனியொரு மொழியில் (சிங்கள மொழியில்) மாத்திரம் அனுப்பப்படுகின்றன.
தற்காலத்தில், இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் நடைமுறைகள்
இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் புராதன காலந்தொட்டு நடைபெற்று வருகின்றது. ஆதிகாலத்தில் குருகுல முறை மூலம் தமிழ் கற்றல் – கற்பித்தல் இடம்பெற்றது. தற்காலத்தில் முறைசார் கல்வி நிறுவனங்களான முன்பள்ளிகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இவற்றுக்குப் புறம்பாக சமூக நிறுவனங்களினாலும் இப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையிலான வகுப்புகளுக்கு தமிழ் கட்டாயப் பாடமாகவுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர வகுப்புகளில் (தரம் 10 மற்றும் தரம் 11) ‘தமிழ் இலக்கிய நயம்’ என்ற பாடமும், ‘இரண்டாம் மொழி – தமிழ்’ என்ற பாடமும் தெரிவுப் பாடங்களாக உள்ளன.
க.பொ.த சாதாரண தரத்தில் தமிழ்ப் பாடத்தில் திறமைச்சித்தி பெற்றுக்கொள்ளல், க.பொ.த உயர்தரம் பயில்வதற்கான அடிப்படைத் தகைமையாகவும் நடுத்தர மற்றும் உயர் அரச தொழில்களுக்கான அடிப்படைக் கல்வித் தகைமையாகவும் வேண்டப்படுகின்றது. கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கலைப்பிரிவில் தமிழ் ஒரு பாடமாக உள்ளது.

யாழ்ப்பாணம், பேராதனை, கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பாடத்தை சிறப்புப் பாடமாகக் கொண்ட பட்டக் கற்கைநெறி உள்ளது. மேலும் தமிழில் முதுமாணி, முதுதத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களையும் இலங்கையிலுள்ள மேற்படி பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன.
பாடசாலைகளில் தமிழ்மொழி கற்பித்தல் நோக்கங்கள்
மனிதனின் சிந்தனை விருத்திக்கும் அறிகைப்புல விரிகைக்கும் மொழி இன்றியமையாததாகும். மனிதனுடைய ஆளுமை விருத்தியின் அடிப்படை அம்சமாகத் திகழ்வது மொழிக்கையாட்சியாகும். இவற்றின் அடிப்படையிலேயே பாடசாலைக் கல்வியில் மொழி கற்பித்தல் என்பது முதன்மை பெறுகின்றது. மொழித் திறன்களான கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து ஆகியவற்றை விருத்தி செய்வதே மொழி கற்றல் – கற்பித்தலின் அடிப்படை நோக்கமாகும்.

இலங்கையின் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர வகுப்புகளில் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தை கற்பிப்பதன் நோக்கங்களாக பின்வருவன குறிப்பிடப்பட்டுளன.
• தமிழ்மொழியைத் தொடர்பாடற் கருவியாக காலத்துக்குப் பொருத்தமான முறையில் வினைத்திறனுடன் கையாளுதல்.
• இலக்கியங்களினூடாக சமூக, கலாசார விழுமியங்களை அறிந்து அவற்றைப் பேணும் மனப்பாங்கை வெளிப்படுத்தல்.
• கலைகள், அறிவியல், தொழில்நுட்பத் துறைகள் என்பவற்றின் வளர்ச்சிக்கேற்ப மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெறுதல்.
• மொழியினூடாக மாணவர் தம் ஆளுமையை வளர்த்துக் கொள்ளுதல்.
• தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்க மொழியை சாதனமாகக் கொள்ளல்.
அழகியல் பாடங்களான சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம், சிங்கள இலக்கிய நயம் மற்றும் ஆங்கில இலக்கிய நயம் என்பவற்றுடன் தெரிவுப் பாடமாக ‘தமிழ் இலக்கிய நயம்’ என்ற பாடமும் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ‘தமிழ் இலக்கிய நயம்’ பாடநூலின் நோக்கம் ‘நீண்ட இலக்கிய வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டுள்ள தமிழ் இலக்கியப் பரப்பில் இடம்பெறும் செய்யுள்கள், பாடல்கள், நவீன கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துகள், நாடகம் முதலான வடிவங்களை அறிமுகம் செய்தல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது,
இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தலினை வளப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நல்ல அம்சங்கள் (Good Practices)
இலங்கையில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றிற்கு புறம்பாக செயற்படும் பல நிறுவனங்களாலும் தமிழ் கற்றல் – கற்பித்தல் தொடர்பான நல்ல அம்சங்கள் பல முன்னெடுக்கப்படுகின்றன.
• கல்வியமைச்சினால் அகில இலங்கை ரீதியாக, புாடசாலை மாணவர்களிடையே தமிழ் மொழித்திறன் திறனாய்வு விருத்திப் போட்டிகள் நடாத்தப்படுகின்றன.
• கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் கல்முனை ஆகிய நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களினால் தமிழ் வளர்ச்சிக்கான காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அகில இலங்கை கம்பன் கழகத்தால் பல ஆண்டுகளாக தமிழ் வளர்க்கப்படுகின்றது.
• பல்கலைக்கழகங்களின் தமிழ்த் துறைகளினாலும், தமிழ் மாணவ மன்றங்களினாலும், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களின் தமிழ் விருத்திக்காக பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
• ‘பண்டிதர்’ மற்றும் ‘பால பண்டிதர்’ வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் நடாத்தப்படுகின்றன. அறநெறிப் பாடசாலைகளில் சமயப் பாடத்துடன் தமிழ்ப் பாடமும் போதிக்கப்படுகின்றது.
• சைவ பரிபாலன சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு ‘தமிழ்’ பாடச் சோதனை நடாத்தப்பட்டு தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
• பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் தமிழ் அறிஞர்களின் சிலைகள் அமைத்து, அவர்களின் விழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
பொதுப் பரீட்சைகளில் மாணவர்களின் தமிழ்ப் பாட அடைவுகள்
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்தில் சராசரியாக 20 சதவீதத்தினர் சித்தி எய்தத் தவறுகின்றனர். தெரிவுப் பாடமாகிய ‘தமிழ் இலக்கிய நயம்’ பாடத்தில் 33 சதவீதத்தினர் சித்தியடைவதில்லை. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சராசரியாக 16 சதவீதத்தினர் தேசிய ரீதியில் ‘தமிழ்’ பாடத்தில் சித்தி எய்த தவறுகின்றனர்.
இரண்டாம் மொழியாக தமிழைப் பயின்று க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றுபவர்களின் எண்ணிக்கையை விட இரண்டாம் மொழியாக சிங்களத்தைப் பயின்று பரீட்சைக்கு தோற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ‘இரண்டாம் மொழி – தமிழ்’ பாடத்தின் சராசரி சித்தி வீதம் (73.74 சதவீதம்) ‘இரண்டாம் மொழி-சிங்களம்’ பாடத்தின் சராசரி சித்தி வீதத்தினை விட (65.62 சதவீதம்) அதிகமாகும்.
இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தலில் எதிர்கொள்ளும் சவால்கள்
இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தலில் கல்விக் கொள்கைகள், கலைத்திட்டம், மதிப்பீடு, கற்பித்தல் முறையியல், மற்றும் ஆசிரியர் பயிற்சி சார்பான சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
• சில ஆரம்ப மற்றும் இடைநிலைப் பாடசாலைகளில் முறையாகப் பயிற்றப்படாத ஆசிரியர்கள் தமிழ்ப் பாடத்தைக் கற்பித்தல் (ஏனைய பாட ஆசிரியர்கள், தொண்டர் ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள்).
• கணிசமான எண்ணிக்கையான தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நவீன தமிழ் கற்றல் – கற்பித்தல் முறைகள் பற்றிய பயிற்சிகளின்மை மற்றும் தற்காலத்திற் கேற்ற ஆசிரியர் கல்விக் கலைத்திட்டம், மற்றும் நவீன பயிற்சி முறைகள் என்பன ஆசிரியர் கல்வி நிறுவனங்களால் பின்பற்றப்படுவதில்லை.
• இலங்கையில் இடைநிலைப் பாடசாலைகளிலே தாய்மொழி மூலம் கல்வியூட்டும் கொள்கை பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றபோதிலும் தாய்மொழியைக் கற்பிக்கும் முறையிலே ஆக்கபூர்வமான மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு புகுத்தப்படாமை பெருங்குறைபாடாக இருந்து வந்துள்ளது (‘தமிழ்மொழி கற்பித்தல் முறைகள்’, இலங்கை – தேசிய கல்வி நிறுவகம்).
• இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டக் காலப்பகுதியில் நிவாரணக் கிராமங்களில் இருந்த 85,000 மாணவர்களில் யுனிசெவ் மேற்கொண்ட ஆய்வில் 70,000 மாணவர்கள் 1.5 தொடக்கம் 3 வருடங்கள் வரையில் தமது கற்றல் செயற்பாடுகளை முற்றாக இழந்திருக்கின்றார்கள். பிற்காலப் பகுதியில் அவர்களுக்கான துரித கற்றல் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் அவர்கள் அடிப்படை மொழித்திறன் அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர் (குருகுலராஜா, 2014).
• ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் ‘தமிழ்’ பாடக் கலைத்திட்ட வடிவமைப்பு மற்றும் பாடநூலாக்கம் ஆகியவற்றில் குறைபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையின் அனைத்துப் பிரதேசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பாட உள்ளடக்கம் மற்றும் பாடநூல் எழுத்தாளர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஆறாந் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’ புதிய பாடநூலில் பல தவறுகள் காணப்படுவதாக கோணேசபிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார்.
• இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பாடத்தை சிறப்புப் பாடமாகத் தெரிவுசெய்து கற்கும் மாணவர் எண்ணிக்கை தற்காலத்தில் குறைவடைந்து செல்கின்றது. தொழில்வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் சமூக விஞ்ஞானப் பாடங்களை தெரிவுசெய்து கற்குமளவிற்கு மானிடவியல் மற்றும் மொழியியல் பாடங்களை தெரிவு செய்வதில்லை. இது நீண்ட நாளைய நோக்கில் தமிழ் கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
• இலங்கையில் மொழிப் பிரச்சினைகளைத் தீர்க்கவென அமைச்சு ஒன்று இருந்தும்கூட மொழிரீதியான பிரச்சினைகள் நாளுக் குநாள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. சட்டங்கள் பல இருப்பினும்கூட அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமை, அதிகாரம் போன்றன தீர்வுக்கான வழியைக் குழப்பின.
• 2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டது. எதிர்பார்க்கப்படும் வினாக்களின் தொகுப்பு தமிழ் மொழிப் பதிப்பில் இடம்பெற்றிருக்கவில்லை (ஞாயிறு தினக்குரல், 04 – 08 – 2014).
இலங்கையில் தமிழ் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளின் மேம்பாட்டுக்கான சிபாரிசுகள்
இலங்கையில் தமிழ்ப் பாடம் கற்றல் – கற்பித்தலில் உள்ள சவால்களை வெற்றிகொள்ளத்தக்க வகையிலான பின்வரும் முன்னெடுப்புகளை, காலமாற்றத்திற்கேற்ப மேற்கொள்ள வேண்டும்.

1. தமிழ்மொழிமூலம் கற்றலுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கப்பட வேண்டும். இந்நிறுவனம் நாட்டின் சகல தமிழ் மொழியில் கற்பிக்கும் பாடசாலைகளிலும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கல், பாடவிதானம் தயாரித்தல், அதற்கான நூல்கள், கற்பித்தல் முறை, தமிழ்மொழிமூலம் கற்றல் – கற்பித்தல் சம்மந்தமான நூல்களை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கும் (வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு – 2014).
2. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பெருமளவு ஈழத் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழ் உறவுகளின் இரண்டாம் தலைமுறைப் பிள்ளைகள் பலர் தமிழ் மொழியை எழுத, வாசிக்கத் தெரியாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் தாயகத்தினர் என்ற வகையில் அவர்களுக்கான தமிழ் கற்றல் – கற்பித்தலுக்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் (நித்திலவர்ணன் – 2014).
3. பாடசாலைகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான முன்மொழிவுகள் (ஆசிரியர் வழிகாட்டி, தரம் – 10, தமிழ் மொழியும் இலக்கியமும்).
4. மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியல் கருத்துகளையும் இணைத்து மொழியைக் கற்பிக்க வேண்டும்.
5. தமது ஆக்கவியல் திறமைகளைப் பயன்படுத்தி, வகுப்பறைப் தேவையின்படி இச்செயற்பாடுகளை மேலும் விருத்தி செயது கொள்வதோடு, புதிய செயற்பாடுகளையும் ஆசிரியர்கள் தயாரித்துக் கொள்ள வேண்டும்.
6. ஆசிரியர் வழிகாட்டியில் தேர்ச்சி மட்டங்களுக்குத் தரப்பட்டுள்ள பாட முன்னாயத்தங்களைப் பயன்படுத்தி, அதனடிப்படையில் ஏனைய விடய உள்ளடக்கங்களுக்கு பாட முன்னாயத்தங்களைத் தயார் செய்து வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும்.
7. தமிழ் மொழியும் இலக்கியமும் எனும் பாடத்தினைச் சிறப்பான முறையில் கற்பிப்பதற்கு பாடத் தலைப்புக்குப் பொருத்தாமன தரவிருத்தி உள்ளீடுகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
8. மாணவர்களுடைய திறன்களை விருத்தி செய்யக்கூடிய கற்பித்தல் சாதனங்களை அவர்களது நிலைக்கேற்ப தயாரித்து, ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’ எனும் பாடத்தினைச் செம்மையாகக் கற்பிப்பதனூடாக, மாறிவரும் உலகுக்குப் பொருத்தமான இளஞ் சந்ததியினரை உருவாக்க வேண்டும்.
முடிவுரை
இலங்கையில் வாழும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் இனத்துவ அடையாளத்தினைப் பேணிக்கொள்வதற்கும், பண்பாட்டுப் பாதுகாப்பிற்கும் தமிழ்மொழி அழியாது பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக தமிழ்மொழி கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள், காலமாற்றத்திற் கேற்றவாறு வினைத்திறனுடன் முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ்மொழி கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்ளத்தக்க வகையிலான முன்னெடுப்புகளை, காலமாற்றத்திற்கேற்ப மேற்கொள்வதனூடாக செம்மொழியான தமிழ் மொழியை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும்.
உசாத்துணைகள்
1. ஜெயசூரியன்,ஏ (2014), “எட்டாக்கனியாக உள்ளது மொழி உரிமை”, யாழ்.தினக்குரல், 21-12-2014, ஏசியன் மீடியா பப்பிளிக்கேசன் (பிரைவேட்) லிமிட்டெட், யாழ்ப்பாணம்.
2. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, ‘தமிழ்’, தரம்-13, தமிழ்மொழித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், இலங்கை.
3. மதிப்பீட்டு அறிக்கை, க.பொ.த சாதாரணதரப் பரீட்சை – 2012, ஆய்வு அபிவிருத்திக் கிளை, தேசிய மதிப்பீட்டுக்கும் பரீட்சித்தலுக்குமான சேவை, பரீட்சைத் திணைக்களம், இலங்கை.
4. ‘தமிழ் இலக்கிய நயம்’ பாடநூல், தரம் – 10 மற்றும் 11, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், கொழும்பு, 2014.
5. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’, தரம்-6, தமிழ்மொழித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், இலங்கை.
6. National Symposium on Reviewing of the performance of School Candidates, G.C.E (O/L) Examination-2011, Research & Development Branch, National Evaluation & Testing Service, Department of Examination, Sri Lanka.
7. Statistical Hand Book 2005-2007, Research & Development Branch, National Evaluation & Testing Service, Department of Examination, Sri Lanka.
8. தமிழ்மொழி கற்பித்தல் முறைகள், பகுதி -1, பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி, ஆசிரிய கல்வித்துறை, தேசிய கல்வி நிறுவகம், மகரகம.
9. Gurukularajah,T(2014), “Vulnerability in Northern Education’, Discussion on ‘Democratising the North: A Dialogue on Governance, Development and Vulnerability’, Jaffna, 10-01-2014.
10. கோணேசபிள்ளை,கோ (2014), “ஆறாந்தர தமிழ் மொழியும் இலக்கியமும் புதிய பாடநூலில் காணப்படும் தவறுகள்”, யாழ்.தினக்குரல், 04,05-12-2014, ஏசியன் மீடியா பப்பிளிக்கேசன் (பிரைவேட்) லிமிட்டெட், யாழ்ப்பாணம்.
11. ‘2014 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டியில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது” – செய்தி, “ஞாயிறு தினக்குரல்”, 04 – 08 – 2014, ஏசியன் மீடியா பப்பிளிக்கேசன் (பிரைவேட்) லிமிட்டெட், யாழ்ப்பாணம்.
12. வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு – 2014, வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு, வடக்கின் கல்வி முறைமை மீளாய்வு நெறிப்படுத்தும் குழு, வடக்கு மாகாணம், கல்வி அமைச்சு, யாழ்ப்பாணம்.
13. நித்திலவர்ணன்,ஆ (2014), வடமாகாணத்தின் பேண்தகு அபிவிருத்திக்கான சவால்களும், அவற்றை எதிர்கொள்வதற்கான கல்வி முறைகளைக் கண்டறிதலும், யாழ். கரவெட்டி, விக்னேஸ்வராக் கல்லூரியின் ஸ்தாபகரான இராசவாசல் முதலியார் உயர்திரு வீரவாகு சிற்றம்பலம் நினைவுப் பேருரை, 27-09-2014.
14. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, ‘தமிழ் மொழியும் இலக்கியமும்’, தரம்-6, தமிழ்மொழித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானப் பீடம், தேசிய கல்வி நிறுவகம், இலங்கை.