பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு
Arts
10 நிமிட வாசிப்பு

பெருந்தோட்ட நிர்வாக கட்டமைப்பு

June 30, 2022 | Ezhuna

இந்தியவம்சாவழி தொழிலாளர்களின் இலங்கை வருகை, அவர்களின் பிரஜாவுரிமை போன்ற பல விடயங்கள் தொடர்பேசுப்பொருளாக அமைந்திருக்கின்றன. ஆனால் கோப்பி பயிர்செய்கைக்குப் பின்னரான இந்தியவம்சாவழித் தமிழரின் வாழ்க்கை சூழல் எவ்வாறு அமைந்ததென ஒரு சில ஆய்வுகளே வெளிவந்துள்ளன. “கண்டி சீமையிலே-2 – சதிகளையும் சூழ்ச்சிகளையும் கடந்த வரலாறு” என்ற இந்த வரலாற்றுத்தொடர் அந்த இடைவெளியை நிரப்புவதாக அமைகின்றது. இலங்கையில் கோப்பிப்பயிர்செய்கை முடிவுற்று தேயிலை பயிர்செய்கைக்கான ஆரம்பத்தினை எடுத்துக்கூறுகின்றது. இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் தேயிலை தோட்டங்களில் பட்ட இன்னல்களையும் இடர்களையும் எடுத்துரைப்பதாக அமைகின்றது. கண்டி சீமைக்கு அழைத்துவரப்பட்ட தொழிலாளர்களின் உண்மை நிலையினை வரலாற்றுப் பார்வையினூடாக ஆதாரங்களுடன் எடுத்தியம்புகின்றது. இது வெறுமனே மக்களின் வாழ்வியல் பிரச்சினைசார் விடயங்களை மாத்திரம் தெளிவுப்படுத்தாமல், தொழில்சார், அரசியல், பொருளாதார, சமூகம் சார்ந்த பல்பரிமாண அம்சங்களினை வெளிகொணர்வதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக வரலாற்றின் ஒரு கட்டத்தில் உலகில் சாம்ராஜ்யங்கள் அழித்தொழிக்கப்பட்டு ஜனநாயக அரசாங்கங்கள் உருவாகிய போதும் ஆண்டான் – அடிமைத் தன்மை முற்றிலும் ஒழிந்து போய் விடவில்லை. ஜனநாயகம் முதலாளித்துவத்திற்கு சோரம் போனதேயன்றி அடிமட்ட விளிம்புநிலை மக்களை அது பாதுகாக்க எத்தனிக்கவில்லை. மேற்கு நாடுகளின் அடிமை வியாபாரம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சட்டம் கொண்டுவரப்பட்டு இல்லாதொழிக்கப்பட்ட போதும், பிரித்தானியாவின் கைத்தொழில் புரட்சியின் போதும், ஏகாதிபத்தியங்களின் வளர்ச்சியின் போதும் விவசாய தொழிலாளர் வர்க்கம் என்ற பாரிய அளவிலான தொழிலாளர் சனத்தொகை உருவாகியது. அவர்கள் ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் ஒரு பாரிய மக்கள் பிரிவினராக, அரை அடிமைகளாக உருவாக்கப்பட்டனர்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலக நாடுகளில் கைத்தொழில் பெரு வளர்ச்சி அடைந்தது. கைத்தொழில் மற்றும் போக்குவரத்தில் நவீன இயந்திரப் பாவனை உருவானது. தொழிற்பேட்டைகள் உருவாகி அவை இயந்திர மயமாக்கப்பட்டன. இயந்திரங்களும் போக்குவரத்து சாதனங்களான ரயில் வண்டி, மோட்டார் வண்டிகள், கப்பல்கள், பின்னர் ஆகாய விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை இயங்குவதற்கு பாரிய அளவில் எரிபொருள் தேவைப்பட்டது. அதற்காக ஆரம்பத்தில் நீராவி தொழில்நுட்பமும் பின்னர் நிலக்கரி, பெட்ரோல் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டன.

சக்தி எரிபொருளின் தேவை பாரியளவில் உருவான போது முதலில் நிலக்கரி சுரங்கங்களும் பின்னர் பெற்றோலிய சுரங்கங்களும் ஆரம்பமாகின. இவற்றில் தொழில் புரிவதற்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இவர்கள் அனைவருமே பல வழிகளில் முன்னைய அடிமை வியாபாரத்தின் தொடர்ச்சியாகவே ஒடுக்குமுறைக்குள் வைத்து பராமரிக்கப்பட்டனர்.

இவ்வித விஞ்ஞான தொழில்நுட்ப தொழில்துறையின் சமாந்தரமான வளர்ச்சியாக ஏற்பட்டதுதான் உலகமெங்குமான பெருந்தோட்ட கைத்தொழில் துறை. கோதுமை, கோப்பி, தேயிலை, றப்பர், கொக்கோ, பருத்தி, கரும்பு போன்ற பயிர்ச்செய்கைகள் அவை. இவை வளர்வதற்கான மண் காலநிலை போன்றவற்றை தெரிந்தெடுத்து அந்தந்த நாடுகளில் பாரிய அளவில் நிலத்தை ஆக்கிரமித்து, வர்த்தகப் பயிர்ச்செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இத்தகைய பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்துவதற்கு என பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இவர்களை உள்நாட்டில் திரட்ட முடியாமல் போனபோது உலகின் பல பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர்.

இலங்கை தேயிலை தோட்டம் 1880

உலகின் பெருந்தோட்டங்கள் நோக்கிய இந்த தொழிலாளர்களின் நகர்வு அவர்களின் விருப்பத்தின் பாற்பட்டதா..? அவர்கள் பலவந்தமாக அழைத்து செல்லப்பட்டார்களா..? அவர்கள் ஆசை காட்டி நயவஞ்சகமாக அழைத்துச் செல்லப்பட்டார்களா..? என்றெல்லாம் வரலாறு எங்கும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இது எப்படி இருந்தபோதும் இவர்கள் ஒருவிதமான அடிமை முறைக்குள் சிக்கிக் கொண்டார்கள் என்ற உண்மை தொடர்பாக எந்தவிதமான விவாதத்துக்கும் இடம் இருக்கவில்லை. இவர்கள் இவ்வாறு இடம்பெயர்ந்து செல்வதற்கு சம்மதம் தெரிவித்து ஆள் சேர்க்கும் கங்காணிகளிடமிருந்து ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்ட கணத்திலிருந்து அவர்கள் அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றனர்.

அதன் பின்னரும் தமது தேவைகள் கருதி மீண்டும் மீண்டும் கடன்படும் நிலை உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு கடன் சுமைக்குள் மூழ்கும் கூலித்தொழிலாளி தன்னை மாத்திரம் அல்லாது தனது குடும்பத்தினர், பிள்ளைகள் அனைவரையும் கடனாளியாக்கி கொத்தடிமைகள் ஆக்கி விடுகின்றான். இந்த நிலைமை அடுத்தடுத்த பரம்பரைக்கும் தொடர ஆரம்பிக்கின்றது. அதிகார வர்க்கத்தின் உயர்படியில் இருந்து கீழ் மட்டம் வரை இவர்கள் மிதித்து நசுக்கப்படுகின்றனர்.

இலங்கைப் பெருந்தோட்டத் துறையை பொறுத்தவரை ஒவ்வொரு தோட்டமும் (ஆரம்பத்தில் கோப்பி பின்னர் தேயிலை, றப்பர், கொக்கோ, தெங்கு) ஒரு அதிகார அலகாக உருவாக்கப்பட்டிருந்தது. எங்கேயோ தொலை தூரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளர்கள் மிக கட்டுக்கோப்பான புவியியல் எல்லைகளைக் கொண்ட விசாலமான பெருந்தோட்டம் ஒன்றில் வாழவும் தொழில் செய்யவும் என குடியமர்த்தப்பட்டனர். இவர்கள் உள்நாட்டு மக்களுடன் பழகவோ, பேசவோ, தொடர்பு கொள்ளவோ அனுமதிக்கப்படவில்லை. அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டிய பிராந்தியத்தில் முன்னர் ஏற்பட்டிருந்த அடிமை முறையின் தொடர்ச்சியாகவே இது உருவாக்கப்பட்டது. இவர்கள் படிமுறையான அதிகாரத்துவ அமைப்பு முறையால் அதிகாரத்துவ அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு தொழில்புரிய நிர்ப்பந்திக்கப்பட்டனர். தேவையாயின் வன்முறைகள் பயன்படுத்தப்பட்டன. கூலித்தொழிலாளர்கள் இந்த முறைமைக்கு பழக்கப்பட்ட உடன் இதனை மௌனமாக கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளவும் செய்தனர்.

தோட்டத்தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்தில்

இலங்கையின் பெருந்தோட்டங்கள்  “பிரமிட்” முறையில் அமைந்து அதன் அதிகார உச்சாணிக்கொம்பில் பிரித்தானிய  “பிளான்டர்” அல்லது “சுப்ரின்டென்ட்” ( Planter / Superintendent ) என்பவரே அமர்ந்திருந்தார். இவர் தமிழில் பெரியதுரை அல்லது  எஜமான் எனவும் இவரது மனைவி துரைசாணி என்றும் அழைக்கப்பட்டனர். இவர் எவ்வாறு அடிமை முறையின் போது மேற்கு நாடுகளில் பண்ணைகள் நிர்வகிக்கப்பட்டதோ அதற்கு சமமான நிர்வாகியாக தோட்டத்தில் செயல்பட்டார்.  இவருக்கு உதவியாக சின்னத்துரைமார்கள் (Assistant Superintendent) நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களும் வெள்ளைக்காரர்களே. இவர்கள் சின்ன எஜமானர்களாக செய்யப்பட்டனர். இந்த இரு தரப்பினருக்குமே தோட்டத்தின் மிக முக்கிய நிர்வாக அலகாக இருந்ததுடன் இவர்களின் அதிகார வரம்புகளிலும் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே  இருந்தன.

இவர்கள் ஏனைய அதிகாரிகளில் இருந்து இடம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பிரிந்திருந்தனர். பெரிய துரையும்  குடும்பத்தினரும் அந்தத் தோட்டத்திலேயே மிகப் பெரிய விசாலமான நன்கு காற்றோட்டமுள்ள ஆடம்பரமான மாளிகை போன்ற பங்களாவில் வாழ்ந்தனர். பங்களா பூத்துக்குலுங்கும் விசாலமான வீட்டு தோட்டத்துடன் ரம்மியமான காட்சியை நேர் பார்த்தபடி அமைந்திருக்கும். அங்கே பல பணியாளர்கள் நிரந்தரமாக பணிபுரிவார்கள்.

வெள்ளைதுரை - கம்பளை

சின்னத் துரைமாரும் வசதி வாய்ப்புடன் பெரிய பங்களாக்களில் வாழ்ந்தாலும் ஆடம்பரத் தன்மை பெரியதுரையை பார்க்கிலும் சற்றே குறைவாக இருந்தது. பெரியதுரைமார்கள் மற்றும் வெள்ளைக்கார அதிகாரிகள் ஆகியோர் தமக்கேயுரிய ஆடம்பர வாழ்க்கை முறை, கிழப்புக்கள், விருந்துகள், குடி, கூத்து என தனி சமூகமாக வாழ்ந்தனர்.

இவர்களுக்கு அடுத்ததாக தோட்ட நிர்வாக சேவையாளர்கள் (Staff) என அழைக்கப்பட்ட டீமேக்கர்கள், கன்டக்டர்கள்,  கணக்குப் பிள்ளைகள், என்போர் இருந்தனர் இவர்கள் தோட்டத்துக்கு வெளியிலிருந்து வந்த ஆங்கிலக்கல்வி கற்ற தமிழர்களாக  (வடமாகாண) அல்லது பிற்காலத்தில் சிங்களவர்களும் இருந்தனர். இவர்கள் மேலதிகாரிகளுக்கு மதிப்பு கொடுத்ததுடன் தொழிலாளர்களை சமூக வீதியில் தூரத்தில் வைத்தே பார்த்தனர். தாம் நிர்வாகத்தின் ஒரு அங்கம் என பெருமைப்பட்டுக் கொண்டனர் . இவர்கள் வசிப்பதற்கு குவாட்டர்ஸ் என அழைக்கப்பட்ட வசதியான வீடுகள் வழங்கப்பட்டிருந்தன.

தேயிலை பறித்துவிட்டுத் திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள் 1903

இத்தகைய அதிகார அமைப்புக்கு மேலதிகமாக இவர்களையும் சேராத தொழிலாளர் பக்கமும் சாராத அதிகார வர்க்கத்தினராக கங்காணிகள் செயற்பட்டனர். இவர்கள் இந்திய தமிழர்களாகவும் ஆங்கிலம் பேசுபவர்களாகவும்  அதிகார வர்க்கத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் நடுவில் இடைத்தரகர்களாக செயற்பட்டு தொழிலாளரை கசக்கி பிழிந்து அவர்களின் உழைப்பை சுரண்ட உதவுபவர்களாக செயற்பட்டார்கள். பண விஷயத்தில் இவர்கள் தொழிலாளரையும் ஏமாற்றி எஜமானர்களையும் வஞ்சித்தார்கள்.

இந்த அதிகார பிரமிட்டின் அடிமட்டத்திலிருந்து மிதிபடுபவர்களாகவே தொழிலாளர்கள் இருந்தனர். கிடைக்கும் சொற்ப கூடலிக்  காசுக்காக சொல்லொன்னா இன்னோரன்ன துன்ப துயரங்களை இவர்கள் எதிர்கொண்டார்கள். கடினமான பிரதேசங்களில் இராணுவத்தினர் தற்காலிகமாக தங்குவதற்கு அமைக்கப்படும் வசதி குறைந்த காற்றுப்புகாத வரிசையான காம்ராக்கள் இவர்களுக்கு வசிக்க வழங்கப்பட்டன. இந்த லயன் காம்ராக்கள் பிற்காலத்தில்
‘லயங்கள்’ என்று பெயர் பெற்றன.

இதே விதமான வாழ்விடங்களை முன்னர் அமெரிக்காவிலும் மேற்கு நாடுகளிலும் ஒப்பந்தக் கூலிகள்,  அடிமை தொழிலாளர்களுக்கும் அமைக்கப்பட்டன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காமிராக்கள் 12 × 12 அடி என்ற அளவில் இருந்ததுடன் இந்த காம்ராவில் 12 பேர் வசிக்க நிர்பந்திக்கப்பட்டனர் என சபோநாடியர் (Sabonadier – 1866)என்ற ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். “குளிருக்கு அது அவர்களுக்கு இதமாக இருக்கும்” என்று ஒரு தோட்டத்துரை இது தொடர்பில் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

11037 பார்வைகள்

About the Author

இரா. சடகோபன்

இரா. சடகோபன் என்று எழுத்து உலகில் அறியப்பட்ட இராமையா சடகோபன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்பு பட்டதாரி ஆவார். அதன்பின் ஒரு சட்டத்தரணியாக தன்னை உயர்த்திக் கொண்ட இவர் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்களுக்குத் தேசிய சாகித்திய விருதுகளையும் பெற்றுள்ளார்.

விஜய் சிறுவர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரான இவர், 'சுகவாழ்வு' சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் ஆவார். இதனைத் தவிர மலையக மக்கள் மேம்பாடு தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். சடகோபன் ஊடகத்துறையில் ஆற்றிய பணிக்காகச் சிறந்த ஊடகவியலாளருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (17)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)