ஆங்கில மூலம் : டெனிஸ் மெக்கில்ரே
மட்டக்களப்பு பிரதேசத்தில் இனக்குழப்பங்கள்
20 ஆம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னரும் கிழக்குக் கரையோரப் பகுதியில் இன உறவுகளைப் பாதித்த பல உள்ளூர் தமிழ் – சோனகக் கலவரங்கள் மற்றும் இடையூறுகள் ஆகியவற்றை பிரபலமான குறிப்புகள் விவரிக்கின்றன. உள்ளூர் தமிழ் – சோனக மோதல்களை நான் நேரடியாகக் காணவில்லை. என்றாலும், இதுபோன்ற மோதல்கள் பற்றிய வாய்வழிப் பதிவுகளை நான் சேகரித்தேன். இதற்கு உதாரணமான ஒரு சம்பவம் தேர்தலுக்குப் பிந்தைய பழிவாங்கல் ஆகும். வாக்களிப்பதாகக் கூறி பணமும், சாராயமும் பெற்றுக்கொண்ட பின், வாக்களிக்கத் தவறியமைக்காக எதிர்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீதான தாக்குதல் இடம்பெற்றது. ஒரு தனிப்பட்ட ஆத்திர மூட்டலில் இருந்து இரண்டாவது வகை மோதல்கள் எழும். இது ஒட்டுமொத்த தமிழ் அல்லது சோனகச் சமூகத்திற்கும் பொதுவான அவமானமாகக் கருதப்பட்டது.
எடுத்துக்காட்டாக, 1960 களின் பிற்பகுதியில், குடிபோதையில் சோனக ஆண் ஒருவர், பொதுவெளியில் தனது முன்னேற்றத்தை நிராகரித்த ஒரு தமிழ்ப் பெண்ணின் சடை முடியை வெட்டியதாகக் கூறப்பட்டபோது, ஒரு அப்பாவிச் சோனகர் தன் பார்வையையும், காதையும் விரைவில் இழந்தார். ஒரு வாரத்திற்கு இனப் பதட்டமும் வீதித் தடைகளும் இருந்தன. ஓராண்டு அல்லது அதற்குப் பிறகு, சோனக இளைஞர்கள் அக்கரைப்பற்றில், காந்தியத்தால் கவரப்பட்டு, சிரமதான சமூக சுய உதவித் திட்டத்தை ஏற்பாடு செய்தனர். அது சோனக விவசாயிகளுக்கு இனக் கலவரங்கள் நடந்தால் தங்கள் வயல்களுக்குச் செல்லும் போது பதுங்கியிருந்து தப்பித்து வர தோதான பாதையாக அமைந்தது.
மூன்றாவது வகை வன்முறையானது குடியிருப்புக் கட்டிடத் தளங்கள் உட்பட நிலத்திற்கான வளர்ந்து வரும் போட்டியுடன் தொடர்புடையது. கடந்த 150 ஆண்டுகளில், தமிழர்கள் கல்வி மற்றும் அரச தொழில்களில் ஈடுபாடு காட்டி வரும் அதேநேரம், சோனகர்கள் வெற்றிகரமாக தங்களின் விவசாய நிலம் மற்றும் வணிகங்களை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டினர்.
வட இந்தியாவில் நிகழும் இந்து – முஸ்லிம் கலவரங்கள் குறித்த பதிவுகளின் அடிப்படையில், இலங்கையிலும் தமிழ் – சோனக மோதல்கள் மத ஆத்திர மூட்டல்களால் தூண்டப்படும் என்று நான் ஆரம்பத்தில் கருதினேன் (முஸ்லிம் பசுக்கொலை, பள்ளிவாசல்களுக்கு அருகில் இந்து ஊர்வலங்கள் போன்றவை). ஆனால், நான் பதிவு செய்த கிழக்குக் கரையோர தமிழ் – சோனக மோதல் தொடர்பான சம்பவங்களுக்கு ‘மதப்’ பிரச்சினைகள் காரணமில்லை. இந்த மோதல்களில் இது ஒரு குறைந்தபட்சக் காரணமாகக் கூட இருக்கவில்லை. 1989 இல் இந்திய அமைதி காக்கும் படை வெளியேறியதன் பின்னர், அக்கரைப்பற்றில் உள்ள பத்ரகாளி இந்து ஆலயத்தை (இலங்கை இராணுவத்தின் ஒப்புதலுடன்) அழித்தது போன்ற மதத் தலங்கள் குறிவைக்கப்பட்ட சம்பவத்தில், கோவில் அமைந்துள்ள சோனகக் குடியிருப்புச் சுற்றுப்புறத்தின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான விருப்பமே அடிப்படை நோக்கமாக இருப்பது போல் தெரிகிறது.
இத்தகைய நிகழ்வுகள், வரலாற்று நெடுகிலும் நடந்தது என்று கருதப்படுவதை விடவும் நவீனத்திற்கு முந்தைய தமிழ் – இந்து அரசியல் ஆதிக்கம், சாதியப் படிநிலைகள் மற்றும் நிலப்பிரபுத்துவ நில உடமை முறைகளில் இருந்து சோனக சமூகத்தின் படிப்படியான விடுதலையின் ஒரு பகுதியாக அவை புரிந்து கொள்ளப்பட வேண்டும் (McGilvray 1982c). தற்காலத்தில் சோனகர்கள் தமிழர்களிடமிருந்து பொருளாதாரச் செழிப்பு மற்றும் அரசியல் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இது கற்பனையும் செய்து பார்க்க முடியாத ஒன்று. ஆயினும், தமிழ்ச் செல்வந்தர்கள், உயர்சாதித் தமிழர்கள் போன்றோர் தங்களின் பரம்பரை அந்தஸ்து, சலுகைகளின் இழப்பு அல்லது வளர்ந்து வரும் பொருத்தமின்மையை பிரதிபலித்த இந்தப் போக்கைக் குறித்து அறிந்திருந்தார்கள். பெரும்பாலான உயர்சாதித் தமிழர்கள் தங்களை இன்னும் தாழ்ந்தவர்களாகவே பார்க்கின்றனர் என்பதை சோனகர்கள் முழுமையாக அறிந்துகொண்டனர். இது இளைய மற்றும் தொழில்முறை நோக்குடைய சோனகர்களை தமிழர்களைச் சாராத முறையில் நவீன தொழில்களை நோக்கியும், தங்களுக்கான சுய – மரியாதையை நிலைநிறுத்துவதற்காகவும் பாடுபடத் தூண்டியது.
மிகச் சமீபத்தில், கிழக்குக் கரையோர தமிழ் – சோனக அரசியல் கூட்டணி உருவாகுவதைத் தடுக்க முயல்பவர்களால் வேண்டுமென்றே இனங்களுக்கிடையேயான வன்முறைகள் கோரமாகத் தூண்டப்பட்டன. அத்துடன் தமிழீழம், மற்றும் வடக்கு – கிழக்குப் பகுதியைக் குறித்த எதிர்காலப் பதட்டங்கள் காரணமாகவும் இரு சமூகங்களின் மக்களை இலக்கு வைத்து இனப்படுகொலைகள், மற்றும் பழிவாங்கும் செயற்பாடுகள் நடத்தப்பட்டன. இந் நிலைமைகளால், தமிழ் – முஸ்லிம் இன நல்லுறவு மோசமடையும் அளவுக்கு வெறுப்பும், சந்தேகமான சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தீங்கான சூழல் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடும் (UTHR அறிக்கை 10, 1993).
தவறான புரிதலும், தவறான கணிப்பீடும் எவ்வளவு ஆழமாக இருந்தது என்பதற்கு 1990 ஆம் ஆண்டு புலிகளின் பேச்சாளர் வை. யோகி ஆற்றிய உரை ஓர் உதாரணமாக இருந்தது. அவர், சோனகர்கள் தங்களை தமிழர்கள் என்று சரியாக அடையாளப்படுத்தத் தவறியதற்காகக் கடிந்து கொண்டதுடன், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலிருந்து முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதை, அவர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் இனத் துரோகத்திற்கு வழங்கிய தண்டனை என்று நியாயப்படுத்தினார்.
துன்பியலாக, இது பொன்னம்பலம் இராமநாதனின் 1888 ஆம் ஆண்டைய ‘இனவியல்’ பற்றிய கருத்தாக்கத்தை நினைவுபடுத்தியது. ஆனால், இம்முறை கலஷ்னிகோவ் துப்பாக்கிகளின் முனையிலும், இன அழிப்பு என்ற கெடூரத் திட்டத்தின் பின்னணியிலும் இது இடம்பெற்றது.
எதிர்காலத்துக்கான தெரிவுகள்
தமிழ் – முஸ்லிம் உறவுகளின் வீழ்ச்சி நிலை 1990 ஆம் ஆண்டில் உருவாகியது, ஆனால் அந்தக் கதையை அங்கு நிறுத்துவது மிகுந்த நம்பிக்கையில்லாதது என்று எனக்குத் தோன்றுகிறது. கலாசார உறுப்பினர் அடையாளம் எப்போதும் சூழ்நிலை அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் அமைக்கப்படுகிறது. தவிர, தற்போது இலங்கையில் புதிய வரலாறு உருவாகி வருகிறது என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது.
துணைக்கண்டத்தின் மூன்று அண்டைப் பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் வேறுபட்ட பண்பாட்டு முறைமைகள், இன அடையாளங்கள் மற்றும் அரசியல் மூலோபாயங்களை உருவாக்கிய திறனை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். அதாவது, கேரளத்தில் வன்முறையான ஜிஹாத், தமிழ்நாட்டில் இலக்கியம் மற்றும் ஆன்மீகக் கருத்தியல்கள், இலங்கையில் ‘தமிழல்லாத’ இன அரசியல் வழிமுறை.
பல்வேறு அவதானிகள், இக்காலத்தில் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள், அரசியல் மற்றும் கலாசாரக் காரணங்களால், தீவின் பல்வேறு பகுதிகளில், மாறுபட்ட உப பிராந்திய அடையாளங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளனர் என்று கருத்துரைக்கின்றனர். இதில் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், விவசாயப் பகுதியான வடக்கு – கிழக்கில் அடர்த்தியாக உள்ளனர். மீதமுள்ள மூன்றில் இரண்டு பகுதியினர் தென் பகுதியில் சிங்களவர்களோடு கலந்து பரவலாக வாழ்கின்றனர் (அலி 1992 பி; இஸ்மாயில் 1995; சிவத்தம்பி 1987).
பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கமானது இலங்கையில் 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் சோனகருக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஒரு ‘இன’ வேறுபாட்டை தோற்றுவிப்பதற்கு தோதான அரசியல் வெகுமதிகளை வழங்கியது. இதனால் இலங்கையில் நவீன சமூக அரசியலில் போட்டித் துறைகள் உருவாக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின், சிங்களப் பெரும்பான்மை அரசியலின் ‘இனத் தேசியவாத இடைவினை’ உருவானது. மேற்குக் கரையோர முஸ்லிம் உயர் குழாத்தினர், சிங்களச் சமூக அமைப்புடன் தனது நலன்களைப் பகிர்ந்து கொள்வதற்கான சாமர்த்தியமான ஏற்பாடுகளைச் செய்தனர். கடந்த இரு தசாப்தங்களில் நடந்த ஈழப்போர் காலப்பகுதியில் அரச படைகளாலும், தமிழ் ஆயுதக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளால் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையிலான பிளவு ஆழமாகி உள்ளது.