மகா நாக மன்னன் பற்றிக் குறிப்பிடும் வேலோடும் மலை - நாகமலைக் கல்வெட்டு
Arts
8 நிமிட வாசிப்பு

மகா நாக மன்னன் பற்றிக் குறிப்பிடும் வேலோடும் மலை – நாகமலைக் கல்வெட்டு  

September 11, 2024 | Ezhuna

‘இலங்கை பிராமிக் கல்வெட்டுக்களில் நாகர்’ எனும் இத்தொடர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை தொல்லியல் ரீதியாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைக் கொண்ட ஆவணமாகும். நாகர் தமிழ் மொழி பேசியவர்கள் எனவும், ஆதி இரும்புக் காலப் பண்பாட்டை பிரதானமாக அவர்களே இலங்கையில் பரப்பினார்கள் எனவும், இங்கு கி.மு ஏழாம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் ஒரு பேச்சு வழக்கு மொழியாக நிலை பெற்றிருந்தது எனவும் பேராசிரியர் எஸ். பத்மநாதன் கூறியுள்ளார். இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் பல மலைத் தொடர்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல உயரமான மலைக் குன்றுகளும், தட்டையான மலைப் பாறைகளும் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் தட்டையான மலைப் பாறைகளில் ஒன்று வேலோடும் மலை எனவும், அதன் அருகில் உள்ள மலை நாகமலை எனவும் அழைக்கப்படுகிறது. 

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குச் செல்லும் வீதியில் உள்ள வந்தாறுமூலைக்கும், சித்தாண்டிக்கும் இடையில் மாவடிவேம்பு என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து தென்மேற்குப் பக்கமாகச் செல்லும் வீதி சந்தனமடு ஆறு வரை செல்கிறது. இப்பகுதியில் மிகப்பெரிய பசுமையான வயல் நிலங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்து மேற்குப் பக்கத்தில் சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள சந்தனமடு ஆறு வரை இவ்வயல் நிலங்கள் உள்ளன. இவ்வயல் நிலப்பகுதி தெற்குப் பக்கத்தில் மகாஓயா வீதியில் உள்ள இலுப்படிச்சேனை வரை சுமார் 11 கி.மீ தூரம் வரை காணப்படும் மிகப்பெரிய வயல் களனியாகும். சுமார் 36 சதுர கி.மீ பரப்பளவில் இப் பகுதியில் நெல் பயிர் செய்யப்படுகிறது.

சந்தனமடு ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்லும் துறை அமைந்துள்ளது. இதுவே முறாக்கமடுத் துறையாகும். ஆனால் பொதுவாக மக்கள் இத்துறையை சந்தனமடு ஆற்றுத்துறை என அழைக்கின்றனர். ஆனால் சந்தனமடு ஆற்றுத்துறை இங்கிருந்து வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. ஆற்றைக் கடந்தவுடன் வேரம் திடல், இலுக்குப் பொத்தானை ஆகிய கிராமங்கள் ஊடாகச் செல்லும்போது அடர்ந்த காடு காணப்படுகிறது. காட்டுக்குள் சிறிது தூரம் சென்றதும் ஒரு மலையடிவாரத்தைக் காணலாம். இங்கு சுமார் 60 அடி உயரமான தட்டையான பரந்த இரண்டு மலைகள் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு மலையின் உச்சியில் முருகன் கோயில் அமைந்துள்ளது. அதுவே வேலோடும் மலை என அழைக்கப்படுகிறது.

வேலோடும் மலையின் பண்டைய பெயர்கள்

இம்மலை பண்டைய காலத்தில் வேடர் ஓடிய மலை, வேரோடிய மலை, வேரோடும் மலை, தேரோடும் மலை என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டதாகவும், இப்பெயர்களின் திரிபே பின்பு வேலோடும் மலை என ஆனதாகவும் இப்பகுதியில் உள்ள முதியவர்கள் கூறுகின்றனர். இப்பெயர்கள் உருவானதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பண்டைய காலம் முதல் வேடர்கள் இம்மலையில் நடமாடித் திரிவதால் ‘வேடர் ஓடிய மலை’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இம்மலையில் பல இடங்களில் பாரிய வெடிப்புகள் காணப்படுகின்றன. இது மலைப் பகுதியில் வளர்ந்திருந்த விருட்சங்களின் வேர்கள் ஓடியதால் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. இதனால் இம்மலை ‘வேரோடிய  மலை’ எனப் பெயர் பெற்றதாகவும் கூறுகின்றனர். இம்மலையில் இருந்த பண்டைய கோயிலின் தேர் மலை மீது ஓடியதாகவும், அதனால் இது ‘தேரோடும் மலை’ எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

வேடர் முருகனை வழிபட்ட கோயில் வனம்      

மிகப்பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்து வந்த வேடர்கள் இம்மலையில் முருகனின் வேலை வைத்து வழிபடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பண்டைய காலம் முதல் வேடர்கள் வாழ்ந்து வந்த பின்தென்னைக் காட்டுப் பகுதியின் கிழக்குப் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதி விளங்கியது. இங்கு வேடர்கள் பெருமளவில் வசித்து வந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வேலோடும் மலை, படர்கல் மலை, கரடியனாறு மலை உட்பட இம் மலைகளுக்கு அருகில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஓமுனகல, ஹேனனேகல, நுவரகல, கொக்காகல போன்ற மலைத் தொடர்களிலும் வேடர்கள் வாழ்ந்து வந்தனர். 

ஓமுனகல, ஹேனனேகல, நுவரகல, கொக்காகல ஆகிய மலைகளில் வேடர்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன. இவர்கள் தமது குல தெய்வமான முருகனுக்கு மலை உச்சியில், அல்லது பெரிய விருட்சத்தின் கீழ் முருகனின் வேலை நட்டு, அதற்கு படையல் இட்டு, பூஜை செய்து, குறிஞ்சி வெறியாட்டம் ஆடி முருகனை வணங்கி வந்தனர். இதனால் இப்பிரதேசம் ‘கோவில வனமே’ எனப்பெயர் பெற்று பெற்றிருந்தது. இது தமிழில் ‘கோயில் வனம்’ எனும் பொருள் கொண்டதாகும். வேலோடும் மலையிலும் பண்டைய கால வேடர் முருகனை வணங்கி வந்ததாக ஆய்வுகள் மேற்கொண்டபோது தெரியவந்தது.

வேலோடும் மலையில் பண்டைய கோயிலின் சிதைவுகள்

வேலோடும் மலை உச்சியில் முருகன் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு முன்பக்கம் ஓர் கட்டிடத்தின் சிதைவுகள் காணப்படுகின்றன. சுமார் 20 இற்கும் மேற்பட்ட கற்தூண்களின் துண்டுகளும், 30 இற்கும் மேற்பட்ட தூண் தாங்கிக் குழிக்கற்களும் பரவிக் காணப்படுகின்றன. கோயிலின் இடதுபக்க மலைச் சரிவில் ஒரு கட்டிடம் இருந்தமைக்கான அடையாளங்கள் தெரிகின்றன. இங்கு 10 இற்கும் மேற்பட்ட குழிக்கற்கள் காணப்படுகின்றன. இவை மலை மீது இருந்த பண்டைய ஆலயத்தின் பகுதிகளாகும்.

சித்தாண்டி முருகன் கோயிலுக்கும் வேலோடும் மலைக்கும் பண்டைய காலம் முதல் ஒரு தொடர்பு இருந்து வருவதாகவும், சித்தாண்டி கோயிலின் திருவிழா நடைபெறும் காலங்களில் வேலோடும் மலையில் இருந்து ஒரு ஒளி தோன்றி மறைவதாகவும் முதியவர்கள் கூறுகின்றனர். வேலோடும் மலையில் வட கிழக்கில் 7 கி.மீ தூரத்தில் சித்தாண்டி அமைந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

வேலோடும் மலைப்பகுதியில் நாகர்

வேலோடும் மலைப் பகுதியில் பண்டைய காலத்தில் வேடர் மட்டுமல்லாது நாகரும் வாழ்ந்துள்ளமை ஆய்வுகள் மூலம் தெரிகிறது. இம்மலையில் நாக வழிபாடு நிலவியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. நாக வழிபாடு செய்த நாக மன்னன் ஒருவன் பற்றிய பிராமிக் கல்வெட்டு ஒன்று வேலோடும் மலையின் அருகில் உள்ள நாக மலையில் காணப்படுகிறது.

இம்மலையின் உச்சிப் பகுதியில் செம்மஞ்சள் நிறத்தில் மண் மேடும், ஒரு புற்றும், குட்டையான மரங்கள் சிலவும் காணப்படுகின்றன. மண் மேடு வட்ட வடிவமாகக் காணப்பட்டது. இங்கு பழமை வாய்ந்த செங்கட்டிகள் ஆயிரக்கணக்கில் சிதறிக் கிடந்தன. இது ஒரு தூபியின் சிதைவுகளாகத் தெரிகின்றன. மண் மேட்டின் நடுப்பகுதியில் மூன்று இடங்களில் 5 முதல் 10 அடி ஆழம் வரையில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. புதையல் திருடர்கள் தமது கைவரிசையை இங்கே காட்டியுள்ளனர்.

தூபியின் சிதைவுகள் உள்ள மலையின் தென்பகுதியில் ஓர் கட்டிடம் இருந்தமைக்கான ஆதாரங்களாக நாகரின் குழிக்கற்கள் சிலவும், கற்தூண்கள் சிலவும் காணப்பட்டன. இவ்விடத்தில் ஓர் சிறிய கற்சுனையும், அதன் கீழ்ப் பகுதியில் சாந்து அரைக்கப் பயன்படுத்தப்பட்ட குழிகள் இரண்டும் காணப்பட்டன. மலை அடிவாரத்தில் எண் கோண வடிவுடைய நீர்த்தடாகம் ஒன்றின் சிதைவுகளும் காணப்படுகின்றன.

நாக மன்னன் பொறித்த பிராமிக் கல்வெட்டு

இம்மலையின் தென்மேற்கு அடிவாரத்தில் உள்ள பாறையில் ஓர் முக்கியச் சின்னம் காணப்படுகிறது. அது பண்டைய பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட கல்வெட்டாகும். இக்கல்வெட்டு இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல் வரியில் 18 எழுத்துகளும், கீழ் வரியில் 13 எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்துகளை ஆராய்ந்த போது இவை பிற்கால பிராமி எழுத்துகளாகத் தெரிந்தன. பெரிய எழுத்துகளில் ஆழமாக, தெளிவாக பின்வருமாறு கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது.

மஹநக ரஜஹ தக பகனக விஹரஹி 

கிரிகஹோதஹி  அலி சகய தினே

“கிரிக்காகோத்த எனும் ஊரில் உள்ள கால்வாய் அல்லது நீரோடை மகாநாக மன்னனால் தக்கபகன எனும் விகாரைக்காக சங்கத்தாருக்கு வழங்கப்பட்டது.” என கல்வெட்டில் உள்ள செய்தி கூறுகிறது. இக் கல்வெட்டைப் பொறித்த நாக மன்னனின் பெயர் மற்றும் காலம் போன்றவை குறிப்பிடப்படவில்லை. கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது இது பிற்கால பிராமி எழுத்து வடிவமாகத் தெரிகிறது. அதாவது பொ.ஆ. 1 ஆம், 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

கிழக்கிலங்கையை ஆட்சி செய்த நாக மன்னர்கள்

மட்டக்களப்பு மான்மியத்தின் படி கிழக்கிலங்கையை கலிங்க மன்னர்களும், நாக மன்னர்களும் ஆட்சி செய்துள்ளமை தெரிய வருகிறது. இவர்களில் மூவர் நாக மன்னர்கள் ஆவர். இவர்கள் மண்டுநாகன், கொட்டாயன், கொட்டியன் என மான்மியம் கூறுகிறது. இம்மூவரில்  கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலத்துடன் இரண்டு நாக மன்னர்களின் காலம் ஒத்துப் போகிறது.  இவர்கள் சிற்றரசர்களாக இருக்க வேண்டும். இவர்களில் கொட்டாயன் எனும் நாக மன்னன் திருகோணமலையில் இருந்து ஆட்சி செய்துள்ளான். இவனது காலம் பொ.ஆ. 8 ஆம் நூற்றாண்டு ஆகும். அடுத்த மன்னனான கொட்டியன் என்பவன் கொட்டியாபுரத்தில் இருந்து ஆட்சி செய்துள்ளான். இவனின் காலம் பொ.ஆ. 238 ஆகும். இந்த இருவரில் ஒருவர் காலத்தில் இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.  

இலங்கையை ஆட்சி செய்த நாக மன்னர்கள்

கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட இக் காலகட்டத்தில் இரண்டு நாக மன்னர்கள் இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். துட்டகாமினியின் தம்பியான சத்தாதீசனின் மகன்மார்களில்  ஒருவன் நாக வழிபாடு செய்தவன். இவன் பெயர் கல்லாட்ட நாகன். இவனின் காலம் பொ.ஆ.மு. 109 – 103 ஆகும். சத்தாதீசனின் இன்னுமோர் மகன் வலகம்பா. இவனின் மகன் சோர நாகன். இவனும் நாக வழிபாடு செய்தவன். இவனின் காலம் பொ.ஆ.மு. 63 – 51 ஆகும். இவர்கள் இருவரும் பொ.ஆ.மு. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.

பொ.ஆ 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாக மன்னர்கள் இருவர் உள்ளனர். ஒருவன் கல்லாட்ட நாகனின் மகனான மகாசூலிகனின் மகனான குட்டைக் கண்ணதீசனின் மகனாவான். இவனும் நாகவழிபாடு செய்தவன். இவனின் பெயர் மகாதாத்திய மகாநாகன். இவனின் காலம் பொ.ஆ. 7 – 19 ஆகும். அடுத்தவன் இலம்பகர்ண வம்சாவழியில் வந்த ஈழநாகன். இவனது காலம் பொ. ஆ. 33 – 43 வரையாகும். இந்த இருவரில் ஒருவர் காலத்தில் கூட இக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருக்கலாம்.

தமிழ் மொழி பேசிய நாகர்

அந்த வகையில் 1900 ஆண்டுகளுக்கு முன்பு பொ.ஆ. 1 ஆம் நூற்றாண்டில் மட்டக்களப்பு பகுதியில் நாக மன்னர்களின் ஆட்சி நிலவியுள்ளது என்பது தெரிய வருகிறது. நாகர்கள் தமிழர் என பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். “இலங்கையில் பரவிய ஆதி இரும்பு கால மக்கள் தமிழ் மொழி பேசியவர்கள் என்பதும், நாகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாகி உள்ளது” என அவர் எழுதியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. இவர்கள் வேலோடும் மலையின் அருகில் உள்ள மலையில் நாக வழிபாடு செய்துள்ளனர். அதன் பின்பு இங்கு ஒரு பெளத்த தூபியை அமைத்து அதற்கு இம்மலையில் இருந்து ஊற்றெடுத்து ஓடும் ஒரு நீரோடையைத் தானமாக வழங்கியுள்ளனர்.

எனவே வேலோடும் மலைப்பகுதியில் பண்டைய காலத்தில் வேடர் வேல் வழிபாடும், தமிழராகிய நாகர் நாக வழிபாடும் செய்துள்ளனர் என்பது உறுதியாகிறது. 


ஒலிவடிவில் கேட்க

3133 பார்வைகள்

About the Author

என். கே. எஸ். திருச்செல்வம்

கடந்த 25 வருடங்களாக இலங்கைத் தமிழர் வரலாறு, தமிழர் வழிபாட்டுப் பாரம்பரியம், பிராமிக் கல்வெட்டுகள், இந்து சமயம் என்பன தொடர்பாக ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாநிதி என்.கே.எஸ். திருச்செல்வம் அவர்கள் வரலாற்றுத்துறையில் இளமாணிப் பட்டத்தைப் பெற்றவர். தனது எழுத்துப்பணிக்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவர் இதுவரை பல உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன் 18 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் ‘தென்னிலங்கையின் புராதன இந்துக்கோயில்கள்’, ‘புதையுண்டுபோன புராதன இந்துக் கோயில்கள்’, ‘இந்து சமயம் ஓர் அறிவியல் பொக்கிஷம்’, ‘யார் இந்த இராவணன்’, ‘பாரம்பரியமிக்க கதிர்காம பாத யாத்திரை’, ‘பண்டைய தமிழ் நூல்களில் சிவன்’, ‘கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்’, ‘தமிழரின் குமரி நாடு உண்மையா? கற்பனையா?’ போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும். இவர் தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் இதுவரை 295 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • September 2024 (11)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)
  • August 2023 (23)