தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. இரு பிராந்தியங்களிலும் புழக்கத்தில் இருந்துள்ள காலத்தால் பழைய எழுத்தாகப் பிராமி கொள்ளப்படுகின்றது. இந்திய உபகண்டச் சூழலில் பெரும்பாலான மொழிகளின் வரிவடிவங்களுக்கான தாய் வடிவமாகப் பிராமி விளங்கியுள்ளது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளின் வரிவடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளன.
பிராமி எழுத்துகள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே முதன்முதல் வாசித்தறியப்பட்டன. ஜேம்ஸ் பிரின்ஸப் 1837 ஆம் ஆண்டு அசோகரின் பாறைக் கல்வெட்டுகளை வாசித்து வெளியிட்டார். அதனால் பிராமி கல்வெட்டுகளை வாசித்த முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். இருப்பினும் அவருக்கு முன்னரே பிராமி எழுத்துகளை வாசித்தறியும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்டியன் லாசன் கிரேக்க வரிவடிவத்தின் துணையுடன் பிராமி எழுத்துகளை வாசித்துள்ளார். “அவர் இந்தோ – கிரேக்க மன்னன் அகதோகலஸ் வெளியிட்ட இருவரி காசினைப் படித்துணர்ந்தார். மன்னன் பெயர் காசின் முன்பக்கத்தில் கிரேக்க வரிவடிவத்திலும் பின்புறத்தில் பிராமி வரிவடிவத்திலும் எழுதப்பட்டிருந்தது. பின்புறத்தில் பிராமி வடிவத்தில் எழுதப்பட்டிருந்ததைக் கிறிஸ்டியன் லாசன், அகதுக்ல ராஜா எனச் சரியாகப் படித்தார். அந்தவகையில் கிறிஸ்டியன் லாசன் அவர்களே பிராமி வரிவடிவத்தை முதன்முதல் படித்தவர் எனக்கூறவேண்டும்” (ராஜன், 2006: 105).

அசோகர் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் அமைந்தவையாகும். சாபாஸ்கார்கி, மான்சாரா ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் மட்டும் கரோஷ்டியில் எழுதப்பட்டுள்ளன. இவற்றுக்கு மாறாக தென்னிந்தியாவில் பிராமி வரிவடிவத்தைக் கொண்டு தமிழ்மொழியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதனால் அவ்வெழுத்தைத் ‘தமிழி’ என அழைக்கின்றனர். ராபர்ட் சீவல் பிராமி எழுத்துகளினாலான மாங்குளம் குகைக் கல்வெட்டுகளை 1882 ஆம் ஆண்டு கண்டுபிடித்துள்ளார். அக்கல்வெட்டுகள் கண்டறியப்பட்டு நான்கு தசாப்தங்களின் பின்னரே அவை தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட்டது. கே.வி. சுப்பிரமணிய ஐயர் 1924 ஆம் ஆண்டு மாங்குளம் பிராமிக் கல்வெட்டுகளைத் தமிழ்ப் பிராமியாக வாசித்து தென்னிந்திய வரலாற்றுக்குப் புதுவெளிச்சம் பாய்ச்சினார். தென்னிந்தியாவில் கிடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளை விரிவான ஆய்வுக்குட்படுத்திய ஐராவதம் மகாதேவன் ‘Early Tamil Epigraphy: from the Earliest times to the sixth Century C.E. (2021)’ என்ற நூலில் 96 தமிழ்ப் பிராமி – தமிழிக் கல்வெட்டுகளை முறைப்படி தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் பிராமி எழுத்தைக் கையாண்டு பிராகிருத மொழியில் எழுதியுள்ளனர். ஜேம்ஸ் பிரின்ஸப் அசோகர் பிராமிக் கல்வெட்டுகளைப் படித்த பின்பே இலங்கையில் பிராமிக் கல்வெட்டுகள் படிக்கப்பட்டன. ஏ.சி. புரோடை இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளை வாசித்த முன்னோடியாவார். தோணிகல பாறையிலும் பரமகந்த குகையிலும் உள்ள பிராமிக் கல்வெட்டுகளை வாசித்த அவர், அவை பற்றிய குறிப்புகளை 1855 ஆம் ஆண்டு ஆசியவியல் வேத்தியல் கழகத்தின் இலங்கைக் கிளையின் பருவ இதழில் வெளியிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து டி.டபிள்யூ. ராய்ஸ் டேவிட்ஸ், பி. கோல்ட்சுமித், ஹென்றி பார்க்கர் முதலான பலர் இலங்கைக் குகைக் கல்வெட்டுகளை வாசித்து வெளியிட்டுள்ளனர் (Paranavitane, 1970: I). இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுகளுள் அநேகமானவற்றைப் பரணவிதான ‘Inscriptions of Ceylon (1970), Inscriptions of Ceylon Late Brahmi Inscription (1983)’ ஆகிய இரு தொகுதிகளில் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் புழக்கத்திலிருந்துள்ள பண்டைய எழுத்தாகப் பிராமி ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அதன் தோற்றம், பரவல் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பிராமி எழுத்துகளைப் பொதுவாக வட பிராமி – தென் பிராமி, அல்லது பிராகிருத பிராமி – தமிழ்ப் பிராமி என வகைப்படுத்துவர். ஐராவதம் மகாதேவன் மௌரியப் பிராமி, தென்னகப் பிராமி, பட்டிப்புரோலு வரிவடிவம், சிங்களப் பிராமி என நான்காக வகைப்படுத்தி விளக்கியுள்ளார் (2021:213,214). எ.சுப்பராயலு தென்னிந்தியாவில் உள்ள பிராமி வகைகளை மட்டும் கருத்திற் கொண்டு, “ஆந்திர பிரதேசத்தில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பட்டிப்புரோலு என்னும் புத்தமதம் சார்ந்த இடங்களிலிருந்து கிடைத்தவை, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகத்தின் பிற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டவை, தமிழ்நாடு – கேரளத்தில் காணப்படுபவை என மூன்றாக வகைப்படு்த்தி, முதல் இரண்டு வகைகளில் பிராகிருதமும் மூன்றாம் வகையில் தமிழ்மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் (2018: 37).”
மேற்படி இருவரது வகைப்பாடும் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் ஐராவதம் மகாதேவன் இலங்கைப் பிராமியைச் சிங்களப் பிராமி என வரையறுத்துள்ளமை பொருத்தமற்றது என்ற வாதத்தைப் ப. புஷ்பரட்ணம் (2004), கா. ராஜன் (2010) முதலானோர் முன்வைத்துள்ளனர். அவர்களின் மறுப்பு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே உள்ளது. இலங்கைப் பிராகிருதத்தைப் பிராகிருதத்தின் கிளை மொழியாகக் கொண்டு சிங்கள – பிராகிருதம் என அழைத்துள்ளார், ஐராவதம் மகாதேவன். இலங்கையில் பயன்பாட்டிலிருந்த பிராகிருதம் ஒரு கலப்புப் பிராகிருதமாக விளங்கியுள்ளமையாலும் சிங்கள மொழியின் வரலாறு பிந்திய காலத்திலேயே தொடங்குவதாலும் அவ்வரையறையை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.
பிராகிருத பிராமியா, தமிழ்ப் பிராமியா காலத்தால் பழைமையானது, தமிழ்ப் பிராமியிலிருந்து பிராகிருத பிராமி தோன்றியதா, பிராகிருத பிராமியிலிருந்து தமிழ்ப் பிராமி தோன்றியதா என்பன இன்னும் முடிவுறாத வாதங்களாகவே தொடர்கின்றன. இலங்கையில் கிடைக்கப்பெற்றுள்ள பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் பௌத்த மதம் சம்பந்தமான விடயங்களைப் பதிவு செய்வனவாக விளங்குவதால் அவை அசோகர் காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன என்ற கருத்தையே பலரும் தொடக்கத்தில் கொண்டிருந்தனர். இலங்கையின் பிராமிக் கல்வெட்டுகளை விரிவாக ஆராய்ந்த செனரத் பரணவிதான இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராகிருதம் இந்திய பிராகிருதத்திலிருந்து வேறுபட்ட கூறுகளைக் கொண்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியதோடு அசோகருக்கு முன்னரேயே வணிகர்களால் இலங்கைக்குப் பிராமி எழுத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார் (1970: XXIII). அனுராதபுரத்தில் அகழாய்வுகளை மேற்கொண்ட கன்னிங்காம் (1999), சிரான் தெரணியகல (2000) முதலானவர்கள் அங்கு கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புகளைக் கதிரலைக் காலக்கணிப்புச் செய்து அதன் காலம் பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்ற முடிவினை முன்வைத்துள்ளனர். அம்முடிவினை மறுக்கும் சிலர், இக்காலக் கணிப்பு பொருத்தமானது அல்ல என்கின்றனர். உதாரணத்திற்கு, பியதிஸ்ஸ சேனாநாயக்க அப்பொறிப்பின் எழுத்தமைதியைக் கொண்டு அது பொ.ஆ. முதலாம் நூற்றாண்டுக்குரியதாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளதோடு கதிரலைக் காலக் கணிப்பில் கிடைக்கப்பெறும் கூடிய பட்சம், குறைந்த பட்சம் என்ற கால எல்லையில் குறைந்த பட்சக் கால எல்லையையே கருத்தில் கொள்ள வேண்டும்; ஆனால், அனுராதபுர பிராமிப் பொறிப்பின் கால எல்லையில் கூடிய பட்சக் எல்லையே காலமாகக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் (Senanayake, 2002: 35-75). அதேவேளை, திஸ்ஸமஹாராம அகழாய்வில் கிடைத்த பிராமிப் பொறிப்புகளின் காலத்தால் முந்திய எல்லையாக பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டைக் கொண்டுள்ளனர். கல்கமுவ அந்தரவெவ பெருங்கற்காலப் பகுதியில் கிடைத்த பிராமிப் பொறிப்பு, பொஆ.மு. ஆறாம் நூற்றாண்டுக்குரியது எனக் கதிரலைக் காலக் கணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது (Mendis, 2020:130).
இலங்கையில் பிராமி எழுத்துகளின் காலம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துகளின் காலத்தை நிர்ணயிப்பதற்குக் குறிப்பாக, தமிழ்ப் பிராமி (தமிழி) அசோகனுக்கு முன்னரே வழக்கில் இருந்துள்ளது என்பதை நிரூபிப்பதற்குத் துணையாகக் கொள்ளப்பட்டுள்ளன. நடன காசிநாதன் (1994), சு. ராஜவேலு (2007), கா. ராஜன் (2018) முதலானோர் அசோகனுக்கு முன்பே பிராமி வழக்கில் இருந்துள்ளது என்பதை நிரூபிப்பதற்கு அக் காலக்கணிப்பையும் துணையாகக் கொண்டுள்ளனர்.

அசோகர் காலத்தில் பௌத்தத்தின்வழி இலங்கைக்குப் பிராமி அறிமுகமானது என்று கூறுபவர்களும் அசோகருக்கு முன்னரே இலங்கையில் பிராமி எழுத்துப் பயன்பாட்டிலிருந்தது என்று கூறுபவர்களும் இலங்கைக்குப் பிராமி வட இந்தியாவிலிருந்து வந்ததாகவே பெரிதும் கூறுகின்றனர். இலங்கையின் பிராமி கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் பௌத்தம் தொடர்புடையனவாக அமைந்துள்ளமை இதற்குப் பிரதான காரணமாக விளங்கியுள்ளது. இக்கருத்தை மறுக்கும் ப. புஷ்பரட்ணம், இலங்கைப் பிராமிக்கும் தமிழ்ப் பிராமிக்கும் இடையிலான தொடர்பை எழுத்தமைதி, சொற்தொடர்கள் முதலியவற்றின் துணையுடன் விரிவாக விளக்கி, ‘வடபிராமிக்கு முன்பே இலங்கையில் தமிழ்ப் பிராமி அறிமுகமாகியுள்ளது’ என்ற கருத்தை முன்வைத்துள்ளார். இம் முடிவுக்கு வலிமை சேர்க்கும் வகையில் பௌத்தத்துக்கு முன்னர் சமண சமயம் இலங்கையில் அறிமுகமாகியிருந்துள்ளது என்பதற்குப் பாளி இலக்கியங்களில் காணப்படும் சில சான்றுகளை எடுத்துக்காட்டியுள்ள அவர் பெரியகுளம், மிகிந்தலை, வெஸ்ஸகிரிய முதலான இடங்களில் உள்ள காலத்தால் பழைய பிராமி கல்வெட்டுகளில் தமிழ்ச் செல்வாக்கைக் காணமுடிகின்றது; இவை தமிழ் நாட்டிலிருந்து சமண மதத்தோடு அறிமுகமானவை என்ற அபயசிங்கவின் முடிவினையும் துணையாகக் கொண்டுள்ளார் (2003). அதேவேளை, பின்னர் இம்முடிவிலிருந்து மாறி பிராமி எழுத்தே இலங்கையில் தோன்றி இந்தியாவிற்குப் பரவலடைந்துள்ளது என்ற கருத்தையும் புஷ்பரட்ணம் முன்வைத்துள்ளார் (2004). இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பிராமி சென்றிருக்கலாம் என்றொரு கருத்தைப் புஷ்பரட்ணத்துக்கு முன்னர் கே.வி. ரமேஸ் முன்வைத்துள்ளமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது (1990: 190).
இலங்கையிலிருந்து பிராமி இந்தியாவுக்குப் பரவலடைந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் அதை உறுதியாக நிறுவுவதற்குப் போதிய சான்றுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. திஸ்ஸமஹாராமையில் விரிவான ஆய்வை மேற்கொண்ட ஹாரி போக் (2014), பிராமி எழுத்து இலங்கையில் தோன்றியது என்ற கருத்தை மறுத்துள்ளமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. தன்னுடைய மறுப்பைப் பிரதானமாக இரண்டு காரணிகளின் அடிப்படையில் அவர் நிறுவியுள்ளார். முதலாவது, இலங்கையில் பிராமி எழுத்துத் தோன்றியிருந்தால் வடக்கே (இந்தியாவில்) வளர்ச்சியடைந்த பிராமியின் அடிப்படைக் கூறுகள் இலங்கைப் பிராமியில் காணப்பட வேண்டும். ஆனால், அகழாய்வில் கிடைத்த முடிவுகள் இதற்கு மாறாக இருக்கின்றன. இரண்டாவது, இலங்கைப் பிராமியின் எல்லா வேறுபாடுகளையும் அசோகன் பிராமியை அடிப்படையாகக் கொண்டே விளக்க வேண்டியுள்ளது. இவ்விரு காரணிகளும் இதுவரையிலான சான்றுகளின் அடிப்படையில் ஏற்கக்கூடியனவாகவே உள்ளன.
தமிழி அல்லது தமிழ்ப் பிராமி குறித்த ஆய்வுகளில் அவ்வெழுத்து முறை பிராகிருத பிராமியிலிருந்து தோன்றியுள்ளது, பிராகிருத பிராமிக்கு முன்னரே அது புழக்கத்தில் இருந்துள்ளது என்ற முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ஐராவதம் மகாதேவன் (2021), எ. சுப்பராயலு (2018) முதலானோர் பிராகிருத பிராமியிலிருந்து தமிழ்ப் பிராமி தோன்றியது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.
தமிழ்ப் பிராமியின் காலத்தை பொ.ஆ.மு. 2 ஆம் நூற்றாண்டெனக் கூறும் ஐராவதம் மகாதேவன், பிராகிருத பிராமியிலிருந்தே அது தமிழ்மொழி அமைதிக்கு ஏற்ப வளர்ச்சியடைந்துள்ளது என்ற கருத்தை முன்வைத்துள்ளார் (2021). எ. சுப்பராயலுவின் கருத்தானது, “தமிழ்நாட்டில் பிராமி எழுத்து வடிவத்தை அறிமுகம் செய்ததற்கு, பிராகிருதம் பேசும் வணிகர்களே ஆரம்பத்தில் தூண்டுகோலாக இருந்துள்ளனர். மகதப் பகுதியில் மௌரியர் ஆட்சிக் காலத்தில் பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில், முழுமையான எழுத்து வடிவத்தை அடைந்ததன் பின்னர், இந்நிகழ்வு ஏற்பட்டிருக்க வேண்டும். மௌரியர் காலத்தில் தொலை தூர வணிகச் சுழற்சிகள் மிகத் தீவிரமாக இருந்தபடியால் இந்தியாவின் பெரும்பகுதி இவர்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த வளர்ச்சியின் விளைவே எழுத்தறிவு, வணிகர்கள் மூலம் பரவியது. பிராகிருத மொழி பேசும் வணிகர்களிடமிருந்து தமிழ்ப் பேசும் வணிகர்கள் முதலில் இவ் அறிவைப் பெற்றார்கள்” (2018: 42) என அமைந்துள்ளது.
நடன காசிநாதன் (1994), சு. இராஜவேலு (2007) முதலானோர் தமிழ்ப் பிராமி, பிராகிருத பிராமிக்கு முந்தியது, தமிழ்ப் பிராமியிலிருந்து பிராகிருத பிராமி தோன்றியது என்கின்றனர். ராஜவேலுவின் கருத்தானது, “தொன்மைத் தமிழ் (தமிழ் – பிராமி) எழுத்துகள் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பாறை மற்றும் பானைகளில் காணப்படும் கீறல் குறியீடுகளில் இருந்து தோற்றுவிக்கப்பட்டு, தமிழ் மக்களால் சீர்செய்யப்பட்டன; தமிழகத்திற்கு வந்த சமண முனிவர்களால் அவை கற்றுக்கொள்ளப்பட்டு, அவர்கள் மூலமாக இலங்கைக்கும் வட இந்தியாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டன; அங்கு பிராகிருதம் எனப்படும் பாகத வடமொழிக்கு ஏற்ப, மூலத் தமிழ் எழுத்துகளிலிருந்து வர்க்க எழுத்துகளும் பிற எழுத்துக்களும் தோற்றுவிக்கப்பட்டு, மௌரியப் பேரரசன் அசோகனால் பெரிதும் பயன்படுத்தப்பட்டன” என அமைந்துள்ளது (2007:66).
மேற்படி இருசாராரினதும் முடிவுகளிலிருந்து வேறுபடும் கா. ராஜன், இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகளிலிருந்து தமிழ்ப் பிராமியும் பிராகிருத பிராமியும் சமகாலத்தில் வழக்கில் இருந்துள்ளமையைக் கண்டுகொள்ள முடிகிறது என்பதை, “கொடு மணலில் காலத்தால் முந்திய பண்பாட்டுப் புதைவிலும் கூடத் தமிழ்ப் பிராமியோடு பிராகிருதத் தாக்கம் பெற்ற பானையோடுகளும் நமக்குக் கிடைக்கின்றன. எனவே, பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டு என்ற காலக்கணிப்பு இன்றைய நிலையில் பிராகிருத பிராமி மற்றும் தமிழ்ப் பிராமி ஆகிய இரு எழுத்து முறைகளுக்கும் பொருந்தும் (2018: 478)” எனக் குறிப்பிட்டுள்ளார். கீழடியில் கிடைக்கப்பட்ட பிராமிப் பொறிப்புகளின் காலமும் பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டு எனக் கண்டறியப்பட்டுள்ளமை நினைவிற்கொள்ளத்தக்கது.
இலங்கையின் பிராமிப் பொறிப்புகளை மேற்படி முடிவுகளுடன் பொருத்திப் பார்க்கும்போது கா. ராஜன் அவர்களின் கருத்து மேலும் வலிமை பெறுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்ப் பிராமி புழக்கத்தில் இருந்த சமகாலத்தில் இலங்கையில் பிராகிருதப் பிராமி வழக்கில் இருந்துள்ளது. தமிழ்ப் பிராமியுடன் பிராகிருத மொழிக் கலப்பு காணப்படுவதைப் போல இலங்கையின் பிராகிருத பிராமியில் தமிழ்ப் பிராமியின் கலப்பு காணப்படுகிறது. இவை, இருவகை பிராமியும் ஏக காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதற்கு வலுவான சான்றுகளாக விளங்குகின்றன.
இலங்கையில் பிராமிப் பொறிப்புகள் பிராகிருத மொழியில் பொறிக்கப்பட்டிருந்தாலும் அவை முற்றிலும் அசோகர் பிராமியுடன் ஒத்தவையாக இல்லை என்பதும் அப்பிராமியில் தமிழ்ப் பிராமியின் தாக்கமும் இருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாகும். செனரத் பரணவிதான இலங்கையின் பிராகிருதமும் பிராமியின் வரிவடிவமும் அசோகர் பிராமியிலிருந்தும் இந்தியப் பிராகிருதத்திலிருந்தும் வேறுபட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ளார். மிக முக்கியமாக அசோகர் பிராமியின் கூட்டெழுத்துகள் இலங்கைப் பிராமியில் இல்லை. இத்தகைய கருத்துகளை அடியொற்றியே ஐராவதம் மகாதேவன் தமிழகத்தில் கிடைத்த இலங்கைப் பிராமிப் பொறிப்புகளைக் கொண்டுள்ள பானையோடுகளைச் சிங்கள – பிராமி, சிங்கள – பிராகிருதம் என அழைத்துள்ளார். செனரத் பரணவிதான இலங்கைப் பிராமியும் பிராகிருதமும் வட இந்தியாவிலிருந்து வேறுபட்டுள்ளன எனக் கூறினாலும் அவற்றைத் தமிழ்ப் பிராமியுடன் இணைத்து ஆராயும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. அவர் தமிழ்ப் பிராமியாக வாசிக்கக்கூடிய இடங்களையே வட பிராமியாக வாசித்துள்ளமையைக் காணமுடிகிறது.
இலங்கையின் பிராமிப் பொறிப்புகளை ஆராய்ந்த பலரும் மட்கலன்கள், முத்திரைகள், நாணயங்கள், கல்வெட்டுகள் என யாவற்றிலும் தமிழ்ப் பிராமியின் தாக்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் கிடைத்த அரிய முத்திரையை கா. இந்திரபாலா, பொ. ரகுபதி, சி. பத்மநாதன், சி.க. சிற்றம்பலம், ப. புஷ்பரட்ணம், கா. ராஜன் முதலானோர் தமிழ்ப் பிராமியாகக் கொண்டு ‘கோவேதன் – கோவேத – கோவேதம்,’ என வாசித்துள்ளனர். எ. சுப்பராயலு மாத்திரமே அதனை ‘ரேவத’ எனப் பிராகிருதமாக வாசித்துள்ளார் (2010).

இலங்கைப் பிராமி கல்வெட்டுகளில் தமிழ்ப் பிராமியின் சிறப்பு எழுத்துகளான ‘ழ், ன், ற், ன்’ ஆகிய எழுத்துகள் இடம்பெற்றுள்ளன; தமிழ்ப் பெயர்களும் பிராகிருத மயப்படுத்தப்பட்ட தமிழ்ப் பெயர்களும் இடம்பெறுகின்றன. பருமக, மருமக, மருமான, வேள, வேள், பூதன், பூதி, பரத, ஈழ முதலான சொற்கள் பரவலாக இடம்பெற்றுள்ளன. இச்சொற்கள் பெரிதும் ஈற்று மெய் இல்லாமலிருக்கின்றன. பிராகிருத மொழியில் ஈற்றில் மெய் வருவதில்லை என்ற காரணத்தினால் தமிழ்ப் பெயர்களைப் பிராகிருத மயப்படுத்தி எழுதும்போது ஈற்று மெய் தவிர்க்கப்பட்டுள்ளது என்பர் (பத்மநாதன், 2006: 30).
திஸ்ஸமஹாராம, அனுராதபுரம், கந்தரோடை, பூநகரி, மண்ணித்தலை முதலான இடங்களில் கிடைத்த மட்கலங்களில் தமிழ்ப் பிராமிப் பொறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. திஸ்ஸமஹாராமவில் கிடைத்த பிராமிப் பொறிப்புகளை ஆராய்ந்த ஹாரி போக், தமிழ் வரிவடித்தின் தொடக்க நிலையை அவற்றில் காணக்கூடியதாக உள்ளதாகவும் தமிழ்ப் பெயர்கள் பல பிராகிருதமயப்படுத்தப்பட்டு எழுதப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் (2014: 50). அனுராதபுரத்தில் ‘வேள்பூதன்’ என்ற தமிழ்ப் பிராமிப் பொறிப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அக்குறுகொடவில் கிடைத்த நாணயங்களில் உதிரன், தஸபிட்டன், மகாசாதஅன், கபதிகடப அன், திஸபுர தாட ணாக ராசந் முதலான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இலங்கையின் பிராமி கல்வெட்டுகள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதால் அவற்றுக்கும் தமிழ்மொழிக்கும் தொடர்பில்லை எனக் கூறமுடியாது என்பதை மேற்படி சான்றுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. தமிழகத்தில் பிராமி எழுத்துகளும், பிராமி எழுத்துகளைக் கொண்டு தமிழ்மொழியில் எழுதுதலும் புழக்கத்திலிருந்த அதே சமகாலத்தில் இலங்கையில் தமிழ்ப் பிராமியும், தமிழ்மொழியும் பயன்பாட்டில் இருந்துள்ளன. இலங்கையில் தமிழ்மொழி பயில்வு, தமிழர் குடிப்பரம்பல், இலங்கையின் பண்பாட்டு உருவாக்கத்திலும் அவற்றின் வளர்ச்சியிலும் தமிழரின் பங்களிப்பு முதலானவற்றைப் புரிந்துகொள்வதற்கும் பண்டைய இலங்கையில் நிலவிய கூட்டுப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துகொள்வதற்கும் இவை அடிப்படை ஆவணங்களாக விளங்குகின்றன.
பெருங்கற்காலக் குறியீடுகள் அல்லது பிராமி அல்லாத குறியீடுகள் பற்றிய ஆய்வுகள் தமிழ்நாட்டினதும் இலங்கையினதும் எழுத்தறிவின் தொடக்கம் குறித்த அறிதலில் புதிய வெளிச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியாவில் கிடைக்கப்பெற்றுள்ள காலத்தால் முந்திய எழுத்தாகச் சிந்துவெளிக்கால ஓவிய எழுத்துகள் கருதப்படுகின்றன. சிந்துவெளி எழுத்துகளைத் திராவிட எழுத்துகளின் மூலமாக வாசிக்கின்ற முயற்சிகள் இடம்பெற்று வந்தாலும் இற்றைவரை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு அவை வாசிக்கப்படவில்லை. சிந்துவெளி எழுத்துக்குப் பிறகு பிராமி எழுத்துப் பரவலாகப் புழக்கத்தில் இருந்துள்ளது. சிந்துவெளி எழுத்துக்கும் பிராமி எழுத்துக்கும் இடைப்பட்ட காலத்திற்குரியனவாக ஏராளமான குறியீடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. அக்குறியீடுகள் பிராமி எழுத்துகளுக்கு முன்னோடியாக விளங்கியுள்ளன என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவில் கிடைக்கப்பெற்றுள்ள குறியீடுகளின் தோற்றம், வளர்ச்சி, வடிவம், தொடர்பு ஆகியன குறித்துப் பலரும் ஆய்வு செய்துள்ளனர். இலங்கையில் கிடைக்கப்பெற்றுள்ள குறியீடுகள் பற்றி தெரணியகல (1972,1986), கா. இந்திரபாலா (1981), விமலா பேக்லி (1967, 1973), சுதர்சன் செனவிரத்ன (1992), ஆரிய லங்கமுவ (2009), பொ. ரகுபதி (1987), ப. புஷ்பரட்ணம் (1993), ஒஸ்மான் பொப்பேயாராய்ச்சி (2002), ஹாரி போக் (2014) எனப் பலர் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுள் சிலர் இந்தியக் குறியீடுகளுடன் இலங்கைக் குறியீடுகளை ஒப்பிட்டு நோக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். கா. ராஜனும் ஒஸ்மான் பொப்பேயாராய்ச்சியும் இணைந்து கொடுமணலில் கிடைத்த குறியீடுகளையும் ரிதிகமவில் கிடைத்த குறியீடுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து, இரண்டுக்கும் இடையிலான ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர் (2002).
இலங்கையில் அனுராதபுரம், ஆனைக்கோட்டை, ரிதிகம, இப்பன்கட்டுவ, யாப்பகுவ, களனி, கந்தரோடை, பொம்பரிப்பு, மாந்தை முதலான பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழாய்வுகளில் கிடைத்த மட்பாண்டங்களில் குறியீடுகள் காணப்படுகின்றன. குறியீடுகள் மட்டும் கொண்ட மட்பாண்டங்களும் பிராமி எழுத்துகளுடன் கூடிய மட்பாண்டங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன் பிராமி குகைக் கல்வெட்டுகளிலும் அத்தகைய குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. ஆனைக்கோட்டையில் கிடைத்த முத்திரையில் மூன்று பிராமி எழுத்துகளுக்கு இணையான வகையில் அவ்வெழுத்துகளின் மேலே மூன்று குறியீடுகள் இடம்பெறுகின்றன. அக்குறியீடுகளைப் பிராமி எழுத்துக்கு நிகரான குறியீடுகளாகக் கருதும் கா. இந்திரபாலா அவை சிந்துவெளி எழுத்துகளுக்கு இணையானவை என்றுள்ளார் (1981). ஆனைக்கோட்டை குறியீட்டுக்கு இணையான வகையில் எடக்கலில் கிடைத்த தமிழ் – பிராமிப் பொறிப்பொன்றின் இறுதியில் குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கொடுமணல், வல்லம், கரூர், சானூர் முதலான இடங்களில் அக்குறியீட்டை ஒத்த குறியீடுகள் கிடைக்கப்பட்டுள்ளன (ராஜன், 2018: 80).

இந்தியாவில் கிடைக்கப்பெற்றுள்ள குறியீடுகள் குறித்து ஆய்வு செய்தவர்களுள் சிலர் அக்குறியீடுகளைச் சிந்துவெளி எழுத்தின் தொடர்ச்சியாகக் காண முயற்சித்துள்ளனர். லால் (1962), ஐராவதம் மகாதேவன் (2021) போன்றோர் அக் கருதுகோளின் அடிப்படையில் முன்னோடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் கிடைக்கப்பட்டுள்ள குறியீடுகளையும் சிந்துவெளி எழுத்துகளினதும் ஹரப்பா குறியீடுகளினதும் தொடர்ச்சியாகக் கருதும் போக்கும் காணப்படுகின்றது. ஆரிய லங்கமுவ, பி. பிரியங்க முதலானோர் இலங்கையில் கிடைக்கப்பெற்றுள்ள குறியீடுகளை ஹரப்பா மற்றும் பிந்தைய ஹரப்பா கால முத்திரைகளில் இடம்பெறும் குறியீடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து, அவற்றின் தொடர்ச்சியாகவே இலங்கையின் குறியீடுகள் காணப்படுகின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர் (Mendis: 2020). அவ்வாறே பரணவிதானவும் (1970) இலங்கையில் கிடைக்கப்பெற்றுள்ள குறியீடுகள் சிந்துவெளி குறியீடுகளுடன் ஒத்துள்ளன என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
சிரான் தெரணியகல (1972) அனுராதபுரத்தில் கிடைத்த குறியீடுகளைப் பட்டியற்படுத்தி, இந்தியக் குறியீடுகளுடன் ஒத்துப்போவதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவை பிராமி எழுத்துக்கு முன்னோடியாக அமையக்கூடியவை என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கிடைத்த குறியீடுகளை நுண்ணிய தளத்தில் ஆராய முயற்சி செய்துள்ள சுதர்சன் செனவிரத்ன பிராமிக் கல்வெட்டுகளில் இடம்பெறும் பருமக – பருமகன் (நிர்வாகப் பதவிப் பெயர்) குறித்த பதிவுகளில் காணப்படுகின்ற குறியீடுகள் அனைத்தையும் ஒருங்கு திரட்டி, ஒப்பிட்டு ஆராய்ந்து, அக்குறியீடுகளுள் சில குலக்குறிகளாகவும் சில குடும்பக் குறிகளாகவும் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் (1992). அவரது மற்றுமொரு ஆய்வில் இப்பன்கட்டுவ, யாப்பகுவ முதலிய இடங்களில் கிடைத்துள்ள பிராமி அல்லாத குறியீடுகள், பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றுள்ளார் (1997).
பியதிஸ்ஸ சேனாநாயக்க (2018) மாத்தளை வேரகொட விகாரையின் பிராமி கல்வெட்டுகளில் பிராமி அல்லாத குறியீடுகள் இடம்பெறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு பண்டைக் காலத்தில் இக்குறியீடுகள் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றைச் சரியாகப் படித்துணர முடியாமையால் எந்தக் கருத்தையும் உறுதியாகக் கூறமுடியாதுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். விமலா பேக்லி (1967), பொ. ரகுபதி (1987), சி.க. சிற்றம்பலம் (1982), ப. புஷ்பரட்ணம் (1993, 2003) முதலானோர் இலங்கையின் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த குறியீடுகளை ஆவணப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் கிடைத்துள்ள குறியீடுகளுள் அநேகமானவை தென்னிந்தியாவில் கிடைத்த குறியீடுகளுடன் ஒத்திருப்பதைக் காணமுடிகின்றது. குறியீடுகள் குறித்து மிக விரிவான ஆய்வை மேற்கொண்ட கா. ராஜன் “தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட குறியீடுகளைச் சற்று மேலோட்டமாக ஒப்பாய்வு செய்ததில் அவை அனைத்தும் ஒரே வகையான குறியீடுகளாக இருப்பதை அறிய முடிகிறது; இது இவ்விரு நிலப்பரப்புக்கும் இடையில் பல்லாண்டு காலம் மிக நெருக்கமான பண்பாட்டு உறவு இருந்ததை நமக்கு உணர்த்துகிறது; இலங்கையில் பிராமி எழுத்தல்லாத அனைத்துக் குறியீடுகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவை அனைத்தும் தென்னிந்தியாவின் இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுத் தொடக்ககால மட்கலன்களில் கிடைக்கும் வடிவங்களுக்கு இணையான வடிவங்களாக அடையாளங் காண முடிந்தது (2018: 81,82)” என்ற முடிவினைத் தந்துள்ளார்.
இதுவரை கிடைக்கப்பட்டுள்ள பிராமி அல்லாத குறியீடுகள், தொடக்ககாலப் பிராமி ஆவணங்கள் முதலியவற்றைக் கவனத்தில் கொள்ளும்போது தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அவை ஏக காலத்தில் வழக்கில் இருந்துள்ளதைக் கண்டுகொள்ள முடிகிறது. இவை தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இருந்துவரும் நெருக்கமான உறவினை வெளிப்படுத்தி நிற்பதோடு இரு பிராந்தியங்களின் எழுத்தறிவு ஒன்றோடொன்று நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்துள்ளமையைக் காட்டிநிற்கின்றன.
இந்தியாவினதும் இலங்கையினதும் பிராமி எழுத்துகளின் வடிவம், மொழி, எழுது முறையில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றம் முதலானவற்றை ஆராயுமிடத்து வடஇந்தியா, தென்னிந்தியா, இலங்கை ஆகிய பிராந்தியங்களில் குறிப்பிட்ட காலப் பகுதியில் அவ்வெழுத்துகள் பரவலடைந்து புழக்கத்தில் இருந்துள்ளதை அறியமுடிகிறது. கிடைக்கின்ற சான்றுகள் எப்பிராந்தியத்தில் அவ்வெழுத்து முறை முதன்முதல் தோன்றியது என்பதைக் கண்டறிவதற்குப் போதுமானதாக இல்லை. அதனாலேயே பிராமி எழுத்துகளின் தோற்றம், அவற்றின் காலம், பரவல் முதலானவை குறித்து முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
முரண்பட்ட முடிவுகள் நிலவுவதற்கான பின்புலமும் உறுதியான முடிவினை எட்ட முடியாதளவுக்குச் சான்றுகளின் போதாமையும் நிலவினாலும் இந்திய உபகண்டச் சூழலில் எழுத்தறிவின் தொடக்கத்திலும் வளர்ச்சியிலும் வட இந்தியா, தென்னிந்தியா, இலங்கை ஆகிய பிராந்தியங்களின் பிணைப்பை மறுதலிக்க முடியாதுள்ளது. இனிவருங் காலங்களில் கிடைக்கின்ற நம்பகமான சான்றுகளைக் கொண்டே மேற்படி பிராந்தியங்களின் எழுத்தறிவின் தோற்ற மூலத்தைக் கண்டறியலாம்.
உசாத்துணை
- Cunningham, R.A.E., Allchin, F.R. (et all) (1999) Passage to India – Anuradhapura and Early use of the Brahmi Script, Cambridge Archaeological journal, 6 (1).
- Deraniyagala, S.U. & Abeyratne, M., (2000) “RadioCarbon chronology of Anuradhapura, Sri Lanka: A revised age estimate”, European Association of South Asian Archaeology, Vol. II.
- Falk, Harry., (2014) “Owner’s Graffiti on Pottery From Tissamaharama”, Zeitschrift für Archäologie Außereuropäischer Kulturen, Vol.6.
- Mahadevan, Iravatham, (2021) Early Tamil Epigraphy: from the earliest times to the sixth Century C.E. (3rd Edition), Central Institute of Classical Tamil, Chennai.
- Mendis, Thusitha, (2020) “Study of the Brahmi Letter and Others Symbols recovered from Galgamuwa Andarawewa Megalithic Burial in Sri Lanka” (in Sinhala), Samodhana – Vol.9., Rajarata University of Sri Lanka.
- Paranavitane, S., (1970) Inscriptions of Ceylon, Colombo: Archaeological Survey of Ceylon.
- Rajan, K., & Bopearachchi, Osmund., (2002) “Graffiti Marks of Kodumanal (India) Ridiyagama (Sri Lanka)”, Man and Environment, Vol.27-No.2.
- Ramesh, K.V., (1990) “Indian and Sri Lankan Epigraphy: A Comparative Study”, Ancient Ceylon Vol. I.
- Senanayake, P., (2018) Sri Lankave Ahilekana Hetherima (in Sinhala), Pathukka: Sandesha publication.
- ………………, (2002) “Sri Lankave peranima lekana yana Eevahe Aarambaya pilibandhava adhasak”, (in Sinhala) Hinduwara paryesanaathma lekana sangiraya, Daya Amarasegara and Rohitha Dishanayaka (Ed.) Warakapola: Ariya Pirakashaya.
- Seneviratne, Sudharshan, (1992) “Pre-State Chieftains and Servants of the State: A Case of Parumuga”, Sri Lankan Journal of the Humanities, Vol.15 – No.1.
- சுப்பராயலு, எ., (2010) “ஆனைக்கோட்டை முத்திரை எழுத்துப் பொறிப்பு – ஒரு மீள்பார்வை”, ஆவணம் – 21, தமிழகத் தொல்லியல் கழகம்
- ………………., (2018) “பிராமி எழுத்தும் தென் இந்தியாவின் மொழிகளும்”, “பெருங்கற்காலக் கல்லறைகளும் கீறல் குறியீடுகளும்”, சுருக்கமான தென்னிந்திய வரலாறு : பிரச்சினைகளும் விளக்கங்களும், நொபோரு கராஷிமா (ப.ஆ), ப. சண்முகம் (மொ.பெ), பொள்ளாச்சி: அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்.
- பத்மநாதன், சி., (2006) இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- புஷ்பரட்ணம், ப., (2003) பண்டைய இலங்கையில் தமிழும் தமிழரும், கொழும்புத் தமிழ்ச்சங்கம்.
- …………….., (2004) தமிழ் எழுத்தின் தோற்றம் (ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு), யாழ்ப்பாணம்: மாவட்டச் செயலகம்.
- ராஜன், கா., (2006) கல்வெட்டியல், தஞ்சாவூர்: மனோ பதிப்பகம்
- ……………, (2018) தொன்மைத் தமிழ் எழுத்தியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.