மலையகம்: சமூக - பொருளாதார - அரசியல் பரிமாணங்கள் - Ezhuna | எழுநா
மலையகம்: சமூக – பொருளாதார – அரசியல் பரிமாணங்கள்
மலையகம்: சமூக – பொருளாதார – அரசியல் பரிமாணங்கள்
முத்துவடிவு சின்னத்தம்பி முத்துவடிவு சின்னத்தம்பி

மலையகம், தேயிலைக் கைத்தொழிலின் உற்பத்தி, வர்த்தகம் சார்ந்த அம்சங்களைப் பிரதானமாக உள்ளடக்கியுள்ளது. மலையகச் சமூகத்தினரது சமூகநல விடயங்களையும், உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி குறித்த விடயங்களையும், தொழிற்சங்கம், அரசியல் மற்றும் மலையக மக்களின் வாக்குரிமைப் பிரச்சினைகளையும், தோட்டத் தொழிலாளர்களின் வேதன மாற்றங்கள், அது குறித்த கொள்கைகள், கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகள் போன்ற விடயங்களையும், வீட்டுரிமை, உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளையும் மையப்படுத்திய கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவருகிறது. மற்றொரு கோணத்தில் நோக்கும்போது, மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மலையக இளைஞர்கள், மலையகப் பெண்கள், தோட்டங்களில் வாழும் தொழிலாளர் சாராத குழுவினர் போன்றோரது பிரச்சினைகளை வெவ்வேறு கோணங்களில் அலசி ஆராய்கின்ற கட்டுரைகளையும் இந்நூல் தன்னகத்தே தாங்கி வெளிவருகின்றமை ஒரு சிறப்பம்சம் எனலாம்.

அத்தோடு, மலையகத்தில் தேயிலைக் கைத்தொழில் மற்றும் சமூக மேம்பாடு தொடர்பான கொள்கை முன்மொழிவுகளைக் கொண்டுள்ள கட்டுரைகள், இத் தொகுப்பு நூலில் இணைக்கப்பட்டுள்ளதோடு, தொழிலாளர்களின் வறுமை, பொருளாதாரப் பிரச்சினைகள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன. இந்த அனைத்து விடயங்களையும், ஒரு வளர்ச்சிப் போக்கு கண்ணோட்டத்தில் பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் ஆராய்ந்து, பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்துள்ளதோடு, அவற்றிற்கான தீர்வுகள் எவ்வாறு அமையலாம் என்பதற்கான பொறிமுறைகளையும் முன்வைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புத்தக ஆசிரியர் முத்துவடிவு சின்னத்தம்பி
எழுநா நூல் வரிசை 13
பக்க எண்ணிக்கை 288
வெளியீட்டு ஆண்டு 2024
பகுப்பு சமூகவியலும் மானிடவியலும்
முன்னுரை

பெருந்தோட்டச் சமூகத்திலிருந்து உருவான அறிவுசார் மரபின் அடையாளமாகப் பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்கள் விளங்குகின்றார். இவரை மலையகத்தின் முதல் தலைமுறை சார்ந்த புலமையாளர் எனக் குறிப்பிடுவது வழக்கமாகும்.

தமக்குப் பிறகு அந்த அறிவு மரபினை முன்னெடுப்பதற்கு அடித்தளம் அமைத்தவர். அவரது மாணவப் பரம்பரையொன்று உருவாகி காத்திரமான சமூகப் பங்களிப்புகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கதே ஆகும். பேராசிரியர், மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த விடயங்களைத் தமது ஆய்வுப் பரப்பாகவும், சிந்தனைப் பரப்பாகவும் கொண்டு தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்.

அவரது பெரும்பாலான எழுத்துகள் ஆங்கில மொழியிலேயே அமைந்திருக்கின்றன. பெருந்தோட்டச் சமூகம் பற்றி அவர் ஆங்கில மொழியில் மேற்கொண்ட ஆய்வுகள் இலங்கையில் பிற சமூகங்கள் மத்தியிலும், சர்வதேச ரீதியிலும் மலையக மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுபொருளாக்கின என்றே சொல்லவேண்டும். பேராசிரியர் எம்.

சின்னத்தம்பி அவர்கள் இறுதிக் காலப்பகுதிகளில் தமிழ் மொழியிலும் எழுதத் தொடங்கினார். அவ்வாறு எழுதிய சில கட்டுரைகள் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. அவற்றில் ‘தேயிலையின் செழுமையும் தொழிலாளர்களின் ஏழ்மையும்’ என்ற நூல் மிக முக்கியமானதாகும்.

தேயிலைக் கைத்தொழில் தொடர்பான முழுமையான தகவல்களைக் கொண்ட முதலாவது தமிழ் நூலாக அதனைக் கருதமுடியும். இப்போது உங்கள் கையில் இருக்கும் இந்நூல் பேராசிரியர் வெளியிட திட்டமிட்டிருந்த கட்டுரை நூல்களுள் ஒன்று. எனினும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அவரது மரணம் நூலாக்கச் செயற்பாட்டையும் நிறுத்திவிட்டது.

அவரால் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய இந்நூல் அவரது ஏனைய நூல்கள் போலவே மிகவும் முக்கியமானது. மற்ற நூல்களுக்கு இல்லாத ஒரு சிறப்பும் இந்த நூலுக்கு உண்டு. பெருந்தோட்டச் சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த அம்சங்களை முன்னிறுத்தும் அதேவேளை, பெருந்தோட்டச் சமூகத்தின் மேல்நோக்கிய அசைவியக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய பல முன்மொழிவுகளை அல்லது பொறிமுறைகளை அவர் இக்கட்டுரைகளில் முன்வைத்திருக்கிறார்.

பேராசிரியர் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இக்கட்டுரைகளை ஈமெயில் ஊடாக அனுப்பி, இக்கட்டுரைகளை வாசித்து பின்னூட்டலை வழங்குமாறும், இவற்றை நூல்வடிவில் கொண்டுவர உதவுமாறும் தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டார். அது ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்ததுடன், மறுபக்கம் பேராசிரியர் எம். சின்னத்தம்பி சேரின் உயர்ந்த பண்புகளை வெளிக்காட்டியது.

இக்கட்டுரைகளை இன்னும் மேம்படுத்துவற்கான ஆலோசனைகளையே அவர் எம்மிடம் கோரினார். இது அவரின் எளிமைத் தன்மையினையும், அறிவினைப் பகிர்ந்து கொள்வதற்கு வயது, அனுபவம், தொழில்நிலை என்பன தடையல்ல என்ற உயரிய மனநிலையையும் காட்டுகின்றது. இது கற்றறிவாளர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படையான பண்பாகும் என்பதற்கு மிகச் சிறந்த பாத்திரமாகவே பேராசிரியர் திகழ்ந்தார்.

மலையகம்: சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் என்ற இந்த நூல் பேராசிரியர் மறைந்த ஆண்டை நினைவுகூரும் வகையில் வெளிவருகின்றது. நூலின் இறுதிப் பகுதி, அதேபோல, இந்த நூலுக்கான அறிமுகவுரை வழங்கிய, சின்னத்தம்பி சேருடன் மிக நெருக்கமான உறவினை மிக நீண்டகாலமாகவே பேணிவந்த, அவரது மாணவர் பேராசிரியர் எஸ். விஜேசந்திரன் அவர்களுக்கும், மலையகம்: சமூக, பொருளாதார, அரசியல் பரிமாணங்கள் சிறப்புப் பார்வை என்ற பொருண்மையில் பேராசிரியரது பங்களிப்புகள் குறித்து கட்டுரை வழங்கிய, சின்னத்தம்பி சேருடன் 1980 களில் இருந்து பல்வேறு தளங்களில் பணியாற்றிய பேராசிரியர் ஏ.எஸ்.

சந்திரபோஸ் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இந்நூல் உருவாக்க முயற்சிகள் தொடர்பாக அவ்வப்போது தொலைபேசி ஊடாகப் பேசிய பேராசிரியர் எம். சின்னத்தம்பி அவர்களின் மனைவி திருமதி ஜோசப்பின் அவர்களுக்கும், அண்மையில் எம்மைவிட்டு பிரிந்த பேராசிரியர் சோ.

சந்திரசேகரன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந் நூலின் இறுதிப் பகுதி 'பேராசிரியர் எம். சின்னத்தம்பியின் நினைவுகளும் பகிர்வுகளும்' என்ற வகையில் அமைந்திருக்கின்றது.

பேராசிரியர் பற்றிய நினைவுகளை அவரது மாணவ நண்பர்கள் பேராசிரியர் சோ. சந்திரசேகரம், பேராசிரியர் ம.செ. மூக்கையா, திரு.எம்.

வாமதேவன், திரு.பெ. முத்துலிங்கம், திருமதி சோபனாதேவி ராஜேந்திரன், திரு.ஒ. ஆறுமுகம் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவருமே பேராசிரியருடன் மிக நெருக்கமான உறவினைப் பேணியவர்கள் என்பதுடன் மலையகச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக இணைந்து பணியாற்றியவர்கள். இந்நூல் வெளிவர வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக ஆர்வம் காட்டிய திரு.பெ. முத்துலிங்கம் மற்றும் திரு.ஒ.

ஆறுமுகம் அவர்களுக்கும் நூலினை வெளியிட்ட எழுநா பதிப்பகத்தாருக்கும் எனது நன்றிகள் உரித்தாகும். பதிப்பாசிரியர்கள்:

இரா. ரமேஷ்,

பேராதனை.

பெ. சரவணகுமார்,

தஞ்சாவூர்.