தமிழில்: த. சிவதாசன்
ராஜ் ஜனனின் தந்தையார் முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் வெற்றிகரமான ஆலை அதிபர். அலுமினியத் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, தனியார் மருத்துவமனை, செய்திப் பத்திரிகை எனப் பல தொழில்களையும் நடாத்தியவர். அப்போது ஜனனுக்கு 11 வயது மட்டுமே. 1971 இல் நடைபெற்ற ஜே.வி.பி ஆயுதக் கலகம் சிறுவன் ஜனனின் அரும்பும் காலங்களைக் குழப்பிவிட்டது. கலகத்தின் விளைவாக குடும்பம் பிரிய நேரிட்டது. தாயும் சகோதரியும் கொழும்பில் மாட்டிக்கொள்ள தந்தையுடனும் இரண்டு சகோதரர்களுடனும் ஜனன் யாழ்ப்பாணத்தில் தஞ்சமடையவேண்டி நேர்ந்தது. தாயின் அரவணைப்பில்லாது தனித்துவிடப்பட்ட ஜனன் தந்தையின் அலுமினியத் தொழிற்சாலையில் வேலை கேட்கவேண்டி ஏற்பட்டது. முதலாளியின் மகனுக்குரிய முகாமைத்துவ வேலைக்குப் பதிலாக ஜனனுக்குக் கிடைத்தது ஒரு தும்புத்தடி. இரண்டு வாரங்கள் ஆலைத் தரையைத் துப்புரவாக்கிய பின்னர் ஜனனுக்கு ‘ரீ போய்’ (Tea boy) ஆகப் பதவி உயர்வு கிடைத்தது. பெரியதொரு சட்டியை அடுப்பில் வைத்து விறகு மூட்டி நீரைக் கொதிக்க வைப்பதுவே அவரது வேலை. எவ்வளவோ அழுது பார்த்தும் அப்பா இரங்கவே இல்லை.
50 பணியாளர்களுக்கு தேநீர் தயாரிப்பதில் ‘சிறப்பு பட்டம்’ பெற்ற பின்னரே ஆலை இயந்திரங்களை இயக்குவதற்கான பணியுயர்வு ஜனனுக்குக் கிடைத்தது. இப்பருவத்திலேயே பொது மனிதர் மீதான பரிவு ஜனன் மனதில் துளிர்த்தது. வேலை முடிந்ததும் பணியாளர் அனைவரும் ஆலைக் கிணற்றில் குளிக்கும்போது ஜனனும் அவர்களோடு இணைந்து கொள்வார். துடைப்பக் கட்டையோ அல்லது தேனீர் தயாரிப்போ ஜனனுக்கு அவர் தந்தை மீது வெறுப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக சக மனிதர் மீதான பரிவை உருவாக்கியமைக்காக அவர் இப்போதும் தனது தந்தைக்கு நன்றியாகவிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தின் முன்னணிக் கல்லூரிகளான மத்திய கல்லூரி மற்றும் செய்ன்ட். ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியை முடித்துக்கொண்டு 1977 இல் ஜனன் இந்தியாவிற்குச் சென்று அங்கு பல்கலைக்கழக புகுமுகக் கல்வியைத் தொடர்கிறார். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்கும் தரங்களைப் பெற்றிருந்தாலும் தந்தை அதை அனுமதிக்காத காரணத்தால் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பைத் தொடங்குகிறார். ஜனனுக்கு 12 வயதாகவிருக்கும்போது தந்தையார் இயக்கச்சியில் 40 ஏக்கர் தென்னந்தோப்பு ஒன்றை வாங்கியமை ஜனன் இத்துறைக்குள் நுழைவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனையிறவுக்கு சற்று வடக்கே இருந்த இப்பண்ணையில் தந்தையுடன் ஜனன் சென்று பணியாற்றியது அவருக்கும் விவசாயத் துறையில் ஒரு விருப்பை ஏற்படுத்தியிருந்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு பெங்களூரிலிருந்து இலங்கை திரும்பிய ஜனன் நோர்வேயைச் சேர்ந்த அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து விவசாய ஆராய்ச்சியில் இறங்கினார்.
இலங்கையில் சுதேச பாரம்பரிய விவசாய நடைமுறைகள் சேதனப் பண்புகளைத் தக்கவைத்துக் கொள்வதுடன் எப்படி மண்ணையும் வளமாக வைத்துக்கொள்ள முடிகிறது என்பது பற்றி நோர்வே நாட்டினர் ஆராய்ச்சிகளைச் செய்து வந்தனர். 1984 இல் ஒருநாள் நோர்வேக்காரர் ஒருவருடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அருகே வாகனமொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது மின் கம்பத்தில் ஒருவர் கட்டப்பட்டுச் சுடப்படுவதைப் பார்த்தார். 1983 ஆடிக் கலவரங்களை அனுபவித்துக் கடந்து வந்த ஒருவருக்கு, ஒருவர் பகிரங்கமாகக் கட்டிவைத்துச் சுடப்படுவது மிகவும் கொடுமையான அனுபவமாகப்பட்டது. இதைப் பார்த்த பின்னர் நோர்வேக்காரரும் இலங்கையைவிட்டு நிரந்தரமாக விலகிவிடத் தீர்மானித்தார்கள். ஆனாலும் அவர்கள் போவதற்கு முன் நோர்வேயினால் வழங்கப்படும் மதிப்பு மிக்க ‘நோறாட்’ புலமைப் பரிசில் ஒன்றை ஜனன் பெறுவதற்கு உதவி செய்துவிட்டுச் சென்றிருந்தார்கள்.
நோர்வேயில் ஒரு வருடம் தங்கி படிப்பை முடித்ததும் நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ அமைப்பான நோறாட்டில் இணைந்து இஸ்ரேல், பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகளில் பணியாற்றினார். போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய அனுபவம் ஜனன் இந்நாடுகளில் பணிகளை ஏற்றுக்கொள்வதற்கு ஓரளவு உதவியாகவிருந்தது. மிகவும் ஆபத்தான இப்பணிகளுக்கு இதர விண்ணப்பதாரர்கள் முன்வராமையும் ஜனனுக்கு வசதியாகவிருந்தது. ஆனாலும் 1988 இல் நடைபெற்ற பாலஸ்தீனிய மக்கள் எழுச்சியின்போது ஜனனை ஒரு பாலஸ்தீனியர் என நினைத்து இஸ்ரேலிய இராணுவத்தினர் தாக்கியமையும், இதன் காரணமாக அவர் மூன்று பற்களை இழந்தமையும் அப்பிரதேசத்தில் பணியாற்றுவதை அவர் மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளியது. இச்சம்பவத்தின் பின்னர், ஜனன் ஒரு இலங்கையர் என அறிந்ததும் இஸ்ரேலிய இராணுவத்தினர் அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு அவரை அவரது ஓட்டலுக்கு கொண்டுசென்று காயங்களிலிருந்து ஆறுவதற்கு வசதிகளையும் செய்து கொடுத்திருந்தனர். மறுநாள் அவர்கள் மீண்டும் ஓட்டலுக்கு வந்து சுற்றுலாத் தலமான ‘ஒலிவ் மலை’ க்கு அழைத்துச் சென்று அவரைக் களிப்புற வைத்தமை வேறு கதை.
இதன் பிறகு ஜனன் ‘நோறாட்’ நிறுவனத்தை விட்டு விட்டு கனடாவிற்குப் புலம் பெயர்ந்தார். இங்கிருந்து அமெரிக்கா சென்ற அவர் சூழல் பாதுகாப்பு ஏஜென்சி (Environmental Protection Agency – EPA), ஆபத்தான கழிவுகள் ஆராய்ச்சி நிறுவனம் (Hazardous Waste Research Institute), இலிநோயிஸ் மாநில நீராய்வு (Illinois State Water Survey) மற்றும் நிலக் கண்காணிப்பு ஏஜென்சி (Land Monitoring Agency) உட்படப் பல சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றியிருந்தார். GPS தொழில்நுட்பத்தைப் பாவித்து அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகளின் வரைபடங்களை உருவாக்கிக் கொடுத்தமை இவரது பணிகளில் முக்கியமான ஒன்றாகும். தற்போது எமது ஸ்மார்ட் ஃபோன்களில் குடிகொண்டிருக்கும் GPS தொழில்நுட்பம் 1980 / 90 களில் முதுகில் தொங்கும் பாரிய உறைகளில் அன்ரெனா எனப்படும் கம்பிகளை வெளியே தள்ளிக்கொண்டு நிற்கும் பாரமான கருவிகளாக இருந்தன. இக்காலத்தில் ஜனனின் நண்பர் ஒருவரின் வற்புறுத்தலின் பலனாக அவர் ஒரு தரவுத்தள நிர்வாகிக்கான (Database Administrator) கல்வியைக் கற்று வால்ஸ்றீட்டில் பணிபுரியும் தொழில்நுட்பவாதிகளின் தரத்துக்கு தன்னை உயர்த்திக் கொண்டிருந்தார். அவரது நண்பர் தனது ஓய்வு வேளையின் 6 மாத காலத்தை ஜனனைப் புதிய துறைக்குப் பயிற்றுவிப்பதில் செலவிட்டிருந்தார்.
இப்பயிற்சியைத் தொடர்ந்து நியூயோர்க் வால்ட்ஸ்றீட்டில் இருக்கும் பிரபலமான முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி மோர்கன் என்ற நிறுவனத்தில் ‘டேற்றாபேஸ் அட்மினிஸ்ட்றேட்டர்’ பதவிக்கு விண்ணப்பித்தார். “என்னைப் போல ஒரு முட்டாள், 6 மாத சுயகல்வி மூலம் ஜே.பி மோர்கனில் வேலை எடுக்க முடியுமாக இருந்தால் வேலையற்ற கொம்பியூட்டர் பட்டதாரிகளைப் பயிற்றுவித்து ஆலோசகர்கள் (Consultants) பதவிக்கு அனுப்பிவைக்கலாம்” என யோசித்தேன் என்கிறார் ஜனன். அத்தோடு அவர் நிற்கவில்லை. இலங்கையிலிருந்து வந்து வேலை தேடிக்கொண்டிருந்த சமத், பாலா, வால்டர் ஆகியோருடன் ஜனனும் அவரது தொழில் பங்காளி சஞ்சாயும், தொழில்நுட்ப ஆலோசகர்களைப் பயிற்றுவித்தும், பணிக்கெடுத்தும் வால்ஸ்றீட் நிறுவனங்களுக்கு பணியாளர்களை வழங்க ஆரம்பித்தனர். இரண்டே வருடங்களில் அவர்களது நிறுவனம் 250 பணியாளர்களைக் கொண்டதாக வளர்ந்தது. ‘இங்க்’ என்ற சஞ்சிகையில் (Inc Magazine) அமெரிக்காவின் அதி வேகமாக வளரும் நிறுவனங்கள் என்ற பட்டியலில் ஜனனின் நிறுவனம் இரு தடவைகள் இடம்பெற்றிருந்தது. 2005 இல் ஜனனும் சஞ்சாயும் தமது நிறுவனத்தை பங்குச் சந்தையில் விற்றனர். 2007 இல் ஜனன் தனது பங்குகளையும் விற்றுவிட்டு வெளியேறிவிட்டார்.
2004 ஆழிப் பேரலையைத் தொடர்ந்து 2005 இல் ஜனன் யாழ்ப்பாணத்துக்கு வந்து சில மாதங்கள் ‘SOS KinderDorf’ (குழந்தைகளின் கிராமம்) என்னும் அமைப்புடன் இணைந்து வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதில் பணியாற்றினார். இங்கு அவர் அவரது தற்போதைய வியாபாரப் பங்காளியான மினெசோட்டா, அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் ராஸ்ராட் என்பவர்களைச் சந்திக்கிறார். ஒரு வெற்றிகரமான முதலீட்டு தொழில்முகவரான ஜோன் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதில் மிகவும் கெட்டிக்காரர். அத்தோடு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் பணிபுரிய மிகவும் விருப்புக் கொண்டவர். நியூயோர்க்கில் ஜோன், தொழில்நுட்பவியலாளர் கலாநிதி பிரியன் குணதிலக மற்றும் ஜனன் ஆகியோர் இணைந்து சக்தி பாவனையை அளக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பக் கருவியொன்றை உருவாக்கினர். இதற்கான தொழில்நுட்பத்தை அவர்களே கண்டுபிடித்ததுடன் அதற்கான காப்புரிமையையும் பதிவு செய்தனர். “பாவனையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு மின்சாரத்தைப் பாவிக்கிறார் என்பதை அளந்து சொல்லும் கருவியைப் பாவிப்பதன் மூலம் மின்சார விரயத்தைத் தடுக்க முடியும்” என இவர்கள் நம்பினார்கள். துரதிர்ஷ்டவசமாக 2008 இல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால் அடித்துச் செல்லப்பட்ட பல நிறுவனங்களில் ஒன்றாக ஜனனின் நிறுவனமும் சேர்ந்துகொண்டது. இருப்பினும் இக்கருவியின் கண்டுபிடிப்புக்கான காப்புரிமை இன்னமும் பாதுகாப்பாக இருக்கிறது. ஒருநாள் அவர்கள் மீண்டும் அதை உயிர்ப்பிக்கலாம். யார் கண்டது?
இதன் பிறகு இயக்கச்சியில் தந்தையாரால் வாங்கப்பட்ட தென்னந்தோப்பில் ஏதாவது செய்ய முடியுமா என ஜனன் யோசித்தார். இத்தோப்பில் இருந்த 2,500 தென்னைகள், 150 மாமரங்கள், 60 முந்திரி மரங்கள், ஒரு பல்-குள நீர்ப்பாசனத் திட்டம் ஆகியன போரினால் முற்றாக அழிக்கப்பட்டிருந்தன. இவற்றில் எஞ்சியிருந்தவை குண்டுகள் துளைத்த 170 மரங்களும், காடாகிப் போன நிலமும், அவற்றில் பரந்து கிடந்த வெடிக்காத குண்டுகளுமே. (இத்தனை குண்டுகள் துளைத்த மரங்களால் இப்போதும் எப்படி பழங்களைத் தர முடிகிறது என நான் ஆச்சரியப்பட்டதுண்டு). தனது மனைவி பிள்ளைகளுடன் நியூயோர்க்கில் வசித்துக்கொண்டே பணத்தையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி பண்ணைக்கு புத்துயிர் வழங்க ஜனன் முயற்சித்தார். வருடத்துக்கு ஒரு தடவை, இரண்டு வாரங்களுக்கு அவர் யாழ்ப்பாணம் வந்து பார்த்தும் அது எந்தவிதப் பலனையும் தரவில்லை. பண்ணையில் பெரிதாக எந்த மாற்றமும் நடைபெறவில்லை. இதனால் யாழ்ப்பாணத்தில் நீண்டகாலம் வதிவதற்கேற்ற தகுந்த வியாபார முயற்சியொன்றை ஆரம்பிக்க உத்தேசித்தார். இலங்கையில் இரண்டு பிரதேசங்கள் தென்னை வளர்ப்புக்குப் பேர் போனவை. தெங்கு முக்கோண வலயம் (Coconut Triangle Zone) என்பது ஒன்று. இது புத்தளம், குருநாகல், கொழும்பு ஆகிய நகரங்களை எல்லைகளாகக் கொண்டது. மற்றையது தெங்குப் பட்டி (Coconut Belt) எனப்படுவது. இது யாழ் குடாநாட்டில் ஆரம்பித்து A9 அருகாகச் சென்று இயக்கச்சி ஊடாக சாவகச்சேரியில் முடிவடைகிறது.
‘தெங்கு முக்கோணத்தில்’ தெங்கு வியாபாரம் பல்கிப் பெருகியிருந்த நிலையில், போர் ‘தெங்குப் பட்டி’ யையும் சேர்த்து யாழ் குடாநாட்டையே துவம்சம் செய்தது. இப்பேரழிவிலிருந்து மீண்டு தெங்குப் பயிர்ச்செய்கையை மீளவும் உச்சத்துக்குக் கொண்டுவர ஜனன் சந்தர்ப்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். தேங்காய்ப் பொச்சு, நார்க்கழிவு போன்ற தெங்குப் பொருட்கள் துணைவந்தன. இலங்கை தெங்கு அபிவிருத்தி நிர்வாகம், குறிப்பாக யாழ் தெங்கு விவசாயச் சபை ஆகியவற்றின் உதவியுடன் ஜனன் ஒரு வியாபாரத்திற்கான திட்டத்தை உருவாக்கினார். ஒரு பாரிய பண்ணையைத் தானே உருவாக்குவதை விடுத்து, வடக்கிலுள்ள சிறிய தெங்கு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைவதாக அவரது திட்டம் இருந்தது. அப்போது யாழ்ப்பாணத்திலிருக்கும் தெங்கு விவசாயச் சபையின் கீழ், வடக்கில், 330 கூட்டுறவுச் சபைகள் இயங்கி வந்தன. இவற்றிடமிருந்து தேங்காய்ப் பொச்சுகளை வாங்குவதாக ஜனன் ஒப்பந்தம் செய்தார். விவசாயிகளுக்கு நேரடியாகப் பணத்தையும் அதேவேளை கூட்டுறவுச் சங்கங்களுக்கு உரிய தரகுப் பணத்தையும் கொடுத்து சகலரது உழைப்பிற்கும் ஊதியம் கொடுத்தார். தேங்காய் மட்டைகளிலிருந்து பொச்சுக்களைப் பிரிக்கும் வேலைகளை அயலிலுள்ள பெண்களுக்குக் கொடுத்தார். வியாபாரம் பெருக, ஜனன் மினெசோட்டாவிலுள்ள அவரது நண்பர் ஜோன் ரேஸ்ரெட்டின் உதவியை நாடினார். அமெரிக்காவிலுள்ள முதலீட்டாளர்களையும் யாழ்ப்பாணத்திலிருந்து ஜனனையும் தொலைபேசி மூலம் இணைத்து ஜனனின் வியாபார முயற்சிக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இணக்கம் கண்ட முதலீட்டாளர்களை ஜனனும் ஜோனும் நியூயோர்க்கில் சந்தித்துக் கலந்துரையாடினர். தொழிலை உடனடியாக ஆரம்பிப்பதற்கு பணமும் சந்தைகளும் தேவைப்பட்டன. இதன் விளைவாக உருவானதே ‘சக்தி ஆக்ரோ’ (Sakti Agro). கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள இலங்கை முதலீட்டுச் சபையின் உதவியுடனும் US$ 500,000 முதலீட்டுடனும் இலங்கையில் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் பாரிய அளவில் முதலீடு செய்யப்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை. வருத்தம் தரும் வகையில் பாடங்கள் படிக்கவேண்டி நேரிட்டது.
உதாரணத்திற்கு, ஆலைக்குத் தேவையான இயந்திரங்களை ‘சக்தி’ இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதாக முடிவெடுத்திருந்தது. ஆனால் இயந்திரங்கள் உரிய காலத்தில் வந்து சேராதது மட்டுமல்ல, வந்தவையும் அரையும் குறையுமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இயந்திரங்களை வழங்கிய நிறுவனம் போதுமான ஆரம்பகால உதவிகளை வழங்கவில்லை. ஜனனும் அவர்களது பணியாளர்களும் ‘யூ ரியூப்’ காணொளிகளைப் பார்த்து தாமாகவே இயந்திரங்களைப் பழுதுபார்த்து இயக்க வேண்டியிருந்தது. இதே இயந்திரங்களை இலங்கையிலேயே வாங்கியிருக்க முடியும். ஆனால் இலங்கையில் இத்தொழிலில் ஈடுபடும் வெகு சில நிறுவனங்கள் ஜனனைத் தமது தொழில் எதிரியாகப் பார்த்ததனால் தமது ‘தொழில் இரகசியங்களைப்’ பகிர்ந்துகொள்ளத் தயங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக ‘சக்தி’யின் முதலீட்டாளர்கள் பொறுமை காத்தனர்; தொழில் முற்றாகப் பலன் தருவதற்கு 11 மாதங்கள் தாமதம் ஏற்பட்டிருந்தும் அவர்கள் ஜனனைப் புறம் தள்ளவில்லை. ‘சக்தியின்’ பிரதானமான ஏற்றுமதிப் பொருள் தெங்கு மட்டையின் பொச்சிலிருந்து பெறப்படும் நார்த் தூளாகும். தேங்காய்ப் பொச்சில் மூன்றில் ஒரு மடங்கு நாராகவும் மீதி தூளாகவும் இருப்பது வழக்கம்.
வழக்கமான தும்புத் தடிகள், படுக்கை மெத்தைகள், விரிப்புகள் போன்றவை நார்களின் மூலம் தயாரிக்கப்படுபவை. இதன்போது எச்சமாக வரும் நார்க்கழிவு குப்பையில் வீசப்படுகிறது. இக்கழிவுகளை தூளாகவோ அல்லது சதுரக் கட்டிகளாகவோ ஆக்கி தொட்டித் தாவரங்களுக்கு மண்ணாகப் பாவிக்கலாம். தண்ணீரை உறிஞ்சி வைத்திருப்பதுடன், பசளைத் துணிக்கைகளையும் தேக்கி வைத்துக்கொண்டு தாவரங்களின் வேர்கள் கிளைவிட்டு வளர்வதற்கு உதவியாக இருப்பதனால் இந்நார்க் கழிவுகளுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு உண்டு. வட அமெரிக்காவிலிருந்து மீண்ட ஜனன் விவசாயக் கல்வியறிவை மட்டுமல்ல இலங்கை மற்றும் வடமாகாணம் பற்றிக் கொண்டிருந்த அறிவையும் சேர்த்து தன் தொழில் முயற்சிகளில் பயன்படுத்தினார். தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், முதலீட்டாளர்களைக் கண்டுபிடித்தல், நிறுவனங்களை வளர்த்தெடுத்தல், அவற்றை வெற்றிகரமாகச் சந்தைப்படுத்தல், தேவையானால் உரிய வேளையில் அவற்றை விற்று தனக்கும் தன்னை நம்பி வந்த முதலீட்டாளர்களுக்கும் இலாபம் சம்பாதித்துக் கொடுத்துவிட்டு வெளியேறுதல் போன்ற திறமைகளை அவர் அமெரிக்காவில் கற்றுக்கொண்டார். முதலீட்டு நிறுவனங்களுடனும் தனிப்பட்ட தனவந்தர்களுடனும் அவர் ஏற்படுத்திய வலையமைப்பு யாழ்ப்பாணம் வரை வளர்ந்தது. கடலுணவுகள், விவசாயச் சாகுபடிகள் உட்பட்ட பல மூலப்பொருட்கள் செறிந்த பிரதேசமாக வடக்கு அமைந்திருப்பது மிகவும் சாதகமானது. இருப்பினும் அவற்றை அறுவடை செய்தவுடன் அப்படியே மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்வதன் மூலம் வெகுசொற்பப் பணத்தையே விவசாயிகள் சம்பாதிக்கிறார்கள். இம்மூலப் பொருட்களை நுகர்வோருக்குத் தேவையான வகையில் மாற்றிப் பண்டங்களாக விநியோகித்தால் அதிக இலாபமீட்ட முடியும். கடற் சாதாழை மற்றும் தெங்குப் பொருட்கள் சில ரூபாய்களுக்கு ஒரு கிலோகிராமென விற்கப்படுகிறது; கடலுணவு அதன் சில்லறை விலையில் ஒரு சிறு பங்கிற்கே விற்கப்படுகிறது. இவற்றைப் பதனிட்டு சேமித்து வைக்கத்தக்க குளிரூட்டப்பட்ட வசதிகள் இல்லாமையால் பெரும்பாலான பழங்களும், மரக்கறிகளும் மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. சேமிப்பு வசதிகள் அதிகமிருந்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும்போது மலிவு விலையில் அவற்றை விற்காது அவற்றைச் சேமித்து வைத்து விளைச்சல் குறைவான, தட்டுப்பாடான காலங்களில் அதிக விலைக்கு விற்றுப் பலன் பெற முடியும்.
வடக்கின் மக்கள் மிகவும் திறமையுடையவர்கள். போதுமான சந்தர்ப்பங்கள் வழங்கப்படாமையால் அவர்கள் தென்னிலங்கைக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்றுவிடுகிறார்கள். அதை இன்னுமொரு கட்டுரையில் பார்ப்போம்.
வட மாகாணமோ அல்லது யாழ்ப்பாணமோ எப்படியான சந்தர்ப்பங்களை வழங்கக் காத்திருக்கிறது என அங்கலாய்க்கும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான எனது புத்திமதி இப்படித்தான் இருக்கும். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னெடி சொன்னதை இன்னுமொரு வடிவத்தில் சொன்னால் “யாழ்ப்பாணம் உங்களுக்கு எதைத் தர முடியும் எனக் கேட்பதை விட, யாழ்ப்பாணத்திற்கு உங்களால் என்ன செய்ய முடியும் எனக் கேளுங்கள்”. சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களால் வடக்கு ஒரு அதிர்ச்சி வளர்ச்சிக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அதன் பிறகு தேவையானவர்களுக்கு போதுமான சந்தர்ப்பங்கள் கிடைக்கக்கூடியதாகவிருக்கும்.
*இக்கட்டுரை ஜனவரி 02, 2019 இல் வெளியான ‘லங்கா பிஸினெஸ் ஒன்லைன்’ பத்திரிகையில் வெளியானது.