சம்பூர் அனல்மின் நிலையம்: மக்கள் போராடிய பொழுதுகள்
Arts
25 நிமிட வாசிப்பு

சம்பூர் அனல்மின் நிலையம்: மக்கள் போராடிய பொழுதுகள்

September 27, 2024 | Ezhuna

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இன்று அனைவருமே அனுபவிக்கின்ற நிலையில் பசுமை நோக்கிய நகர்வு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் பரந்துபட்டளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. பசுமையின் பெயரால் வளச்சுரண்டல்கள், உரிமை மறுப்புகள், மோசடியான வர்த்தகம், போலியான திட்டங்கள் என அனைத்தும் அரங்கேறுகின்றன. குறிப்பாக மூன்றாமுலக நாடுகள் இதற்குப் பலியாகின்றன. இலங்கையும் இதற்கு விலக்கல்ல. இலங்கை உயிரினங்களின் செறிவு அடிப்படையில் ஆசியப் பிராந்தியத்தில் முக்கியமான நாடாக கருதப்படுகிறது. ஆனால் இலங்கையின் உயிர்ப்பல்வகைமை மிகப்பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் காலநிலை மாற்றத்தின் கொடும் விளைவுகளையும் இலங்கை சந்தித்துள்ளது. இவை குறிப்பாக விவசாயத் துறையை சீரழித்துள்ளது. உயரும் கடல்மட்டம் இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் உண்டு. இத்தகைய பின்புலத்தில் இலங்கைச் சூழலில் பசுமை எனும் பெயரால் நடைபெறுகின்ற விடயங்களைத் தத்துவார்த்த ரீதியிலும் வரலாற்று நோக்கிலும் சமகால நிகழ்வுகளுடனும் நோக்க இத்தொடர் விழைகிறது. பசுமையின் பெயரால் நடந்தேறுபவை ஏற்படுத்தும் சமூகப் பொருளாதார மாற்றங்களையும் அதன் அரசியல் சிக்கல்களையும் சேர்த்தே ‘பசுமை எனும் பேரபாயம்‘ எனும் இத்தொடர் கவனம் செலுத்துகிறது.

தொடக்கக் குறிப்புகள்

இலங்கையில் மக்களுக்கும் சூழலுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. ஆனால் அவற்றில் வெற்றியடைந்த போராட்டங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. குறிப்பாக 1978 இல் நிறைவேற்றதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் தோற்றமும் ஜனநாயக விழுமியங்களின் நலிவும் கருத்துரிமைக்குச் சவால் விடுத்தன. 1989-90 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி அடக்கப்பட்ட விதம் இலங்கையெங்கும் கருத்துரிமைகள் குறித்த பாரிய அச்சத்தை விதைத்தது. உள்நாட்டுப் போரின் தீவிரத்தன்மை ஏற்படுத்திய நெருக்குவாரங்கள் இலங்கையை மென்மையான சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தின. இவை அனைத்தும் கருத்து வெளிப்பாடுகள், எதிர்ப்புப் போராட்டங்கள் என்பன குறித்த பார்வையை மாற்றின. அதேவேளை அரசுக்கெதிரான போராட்டங்கள் ‘தேசத் துரோகச் செயல்கள்’ என முத்திரை குத்தப்பட்டன.

இந்தப் பின்புலத்தில் மக்களின் முணுமுணுப்புகளுக்கும் மென்மையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவை சூழலுக்கும் மக்களுக்கும் பாரிய சேதத்தை விளைவிக்கக் கூடியவையாக இருந்த போதும் அவை வீரியமான எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. இதற்கு சிறந்த உதாரணம் நுரைச்சோலை அனல் மின்நிலையமாகும். குறித்த திட்டத்திற்கு எதிராக மக்கள் குரல் எழுப்பினாலும் அவை ஒரு வீரியமான போராட்டமாக எழுச்சி பெறவில்லை. 2005 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும் ஜப்பானின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இந்த அனல் மின்நிலையமானது திட்டமிட்டபடி நடைமுறைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலையமொன்றை இந்திய நிறுவனமொன்றின் ஊடாக உருவாக்கும் முயற்சி மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் நிறுத்தப்பட்டது. இலங்கையின் சுற்றுச்சூழல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு மைல்கல்லாக இன்றும் அப்போராட்டம் நோக்கப்படுகிறது. அப்போராட்டத்தின் கதை முக்கியமானது. அது மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டியது. நம்பிக்கைகள் அற்ற காலத்தில் நம்பிக்கையையும் புத்துயிர்ப்பையும் தரும் கதை இது. இலங்கையின் சமூகங்களால் தங்கள் இன, மத, மொழி அடையாளங்களைக் கடந்து நாட்டையும் நாம் வாழும் சுற்றுச்சூழலையும் நமது இயற்கையையும் பாதுகாக்க இணைந்து போராட முடியும் என்பதைக் காட்டும் கதையிது.

சம்பூர்: போர் பெயர்த்த நிலம்

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு தரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகளில் காணப்படாத முன்னேற்றமும் 2005 இறுதிப் பகுதியில் புதிய அரசாங்கத்தின் வருகையும் நெருக்கடியான நிலையை உருவாக்கத் தொடங்கின. போர்நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும், 2006 ஏப்ரலில் இருந்து இலங்கையின் பாதுகாப்பு நிலைமை வேகமாக மோசமடையத் தொடங்கின. புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் வடக்கு மற்றும் கிழக்கில் மீண்டும் வன்முறை மோதல்கள் எழுந்தன. 29 மே 2006 அன்று, தமிழீழத் தாய்நாடு மீட்புப் படை என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது, இதன் விளைவாக ஜூலை 2006 முதல் வாரத்தில் பெரிய அளவில் இடம்பெயர்வு நிகழ்ந்தது.

இரண்டு வாரங்களின் பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளுக்கு நீர் வருவதை நிறுத்தும் நோக்குடன் மாவிலாற்றில் இருந்து பாயும் பாசனக் கால்வாயை புலிகள் மூடினர். கால்வாய் மற்றும் சம்பூர் பகுதியானது அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை மீண்டும் கைப்பற்றுவதற்காக இலங்கை ஆயுதப்படைகள் வான் மற்றும் தரைவழித் தாக்குதலைத் தொடங்கின. 2006 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதிக்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். பெரும்பான்மையான முஸ்லிம் மற்றும் சிங்களக் குடும்பங்கள் வெளியேறி, கந்தளாயில் தங்கியிருந்தன. தமிழ்க் குடும்பங்கள் தெற்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கோறளைப்பற்றுப் பகுதிக்கும் (வாகரை) மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தன.

திருகோணமலையின் ஷெல் தாக்குதல்கள், மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தெற்கே சீராக நகர்ந்தன. இடம்பெயர்வை எதிர்நோக்கும் குடும்பங்கள் மீண்டும் கோறளைப்பற்றில் உள்ள பொதுவான இடங்களில் தஞ்சம் புகுந்தனர் அல்லது மட்டக்களப்பின் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்தனர். ஆகஸ்ட் 18 அன்று, மட்டக்களப்பில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 26,700 பேர் இடம்பெயர்ந்தவர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். இது நவம்பர் 2006 இறுதியில் 72,191 ஆக உயர்ந்தது. 4 செப்டம்பர் 2006 அன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சம்பூரைக் கைப்பற்றியதாக அறிவித்தார. இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் “சம்பூர் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், பொதுமக்கள் அச்சமின்றி மீள்குடியேற முடியும்” என்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

எவ்வாறாயினும், அடுத்த மாதங்களில், சம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், அப்பகுதியில் கண்ணிவெடி அகற்ற வேண்டியதன் அடிப்படையிலும் அப் பகுதிக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. 16 அக்டோபர் 2006 அன்று, சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், சம்பூர் உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்கு முன்னர், ஜனாதிபதி இராஜபக்ஷ அவர்கள் 1976 இன் இலங்கை முதலீட்டு அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் திருகோணமலையில் ஒரு சிறப்பு பொருளாதார வலயத்தை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். இது மூதூர் மற்றும் சம்பூர் பகுதிகளை உள்ளடக்கிய ஏறக்குறைய 675 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இதன்மூலம் இப்பகுதி நிலங்கள் நிலக் கையகப்படுத்தல் சட்டகத்தின் பிரகாரம் அபிவிருத்தித் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன.

இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் உள்ளளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களைச் செயற்படுத்தப் போகிறது என்றும், இந்தியாவின் உதவியுடன் சம்பூரில் 300 மெகாவாட் நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது. அரசாங்கப் பேச்சாளர், “பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு சில சமயங்களில் மக்கள் மீள்குடியேற்றம் தேவைப்படுகிறது. இதற்கு முன்னர் தென்னிலங்கையில் மகாவலி நீர்ப்பாசனத் திட்டத்தினால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர் ஆனால் எவரும் அதனை எதிர்க்கவில்லை. இங்கும் அதையே எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இந்த நடவடிக்கையானது இனச் சுத்திகரிப்பு என்றும் தமிழ் மக்களை இந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றுவதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் சனத்தொகையை மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், இடம்பெயர்ந்த பொதுமக்களிடையே தங்கள் சொந்தக் கிராமங்களில் மீள்குடியேறுதல், பொருளாதாரச் செழிப்பு குறித்த சில நம்பிக்கைகள் இருந்தன. எவ்வாறாயினும், இந்தப் பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய வர்த்தமானி அறிவித்தலின் பின்பு இந்த நம்பிக்கைகள் வெளிப்படையாக சிதைக்கப்பட்டன.

ஜனாதிபதி இராஜபக்ஷவினால் மூதூர் கிழக்கு மற்றும் சம்பூரில் 1499/25 என்ற அதிவிசேட வர்த்தமானியின் கீழ் வெளியிடப்பட்ட அவசரகாலச் சட்டங்களின் கீழ் ஒரு உயர் பாதுகாப்பு வலயம் நிறுவப்பட்டது. இதற்குள் உள்வாங்கப்பட்ட மொத்தப் பரப்பளவு மூதூர் மற்றும் சம்பூரில் உள்ள 11 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் பொருளாதார வலயங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகளும் அடங்கும். உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானியின்படி, அப்பகுதிக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால், அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த 4,249 குடும்பங்கள் (மொத்தம் 15,648 நபர்கள்) பாதிக்கப்பட்டனர். இப்பகுதியில் உள்ள நிலத்தின் பெரும்பகுதி மிகவும் வளமானது. அது 88 நீர்த் தொட்டிகளைக் கொண்டுள்ளது. அவை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைக் கொண்டுள்ளன. கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 19 பள்ளிகள், 18 இந்துக் கோவில்கள், ஒரு தேவாலயம் மற்றும் இரண்டு மருத்துவமனைகள் ஆகியன உள்ளன.

திருகோணமலை மாவட்டம் அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கான முக்கிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கிடைக்கக்கூடிய தகவல்களின் பற்றாக்குறை மூதூர் – சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்குத் ஊர் திரும்புதல் மற்றும் மீள்திருத்தம் செய்வதைச் சிக்கலாக்கியது. ‘கிழக்கின் உதயம்’ என்ற கிழக்கு மறுமலர்ச்சித் திட்டம், 2007 இல் வெளியிடப்பட்ட மூன்று ஆண்டு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பொருளதார அபிவிருத்தி வலயம் ஆகியவை இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு வளர்ச்சித் திட்டங்களாகும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் முயற்சி தொடங்கியது.

சம்பூர் அனல் மின்நிலையம்

டிசம்பர் 2006 இல் இலங்கை மின்சார சபை திருகோணமலையின் சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு இந்திய நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இத்திட்டத்தின் படி 500 MW அளவிலான ஆறு மின்நிலையங்களை உருவாக்கிடவும், உற்பத்தியாகும் மின்சாரத்தை இந்தியாவுக்கு அனுப்புவதற்கு வழிவகை மேற்கொள்ளவும் உடன்பாடு எட்டப்பட்டது. இந்தக் கூட்டு முயற்சித் திட்டத்திற்காக இந்தியா 200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு கடன் வழங்கவும், திருகோணமலையில் இருந்து இந்தியாவின் தென் பிராந்தியத்திற்கு மின்சாரத்தை இணைப்பதற்கு 283 கி.மீ உயர் மின்னழுத்தக் கம்பிகள், கடற்கீழ் கேபிள் அமைப்புகளை உருவாக்கவும் உடன்பட்டது.

இதில் முக்கியமானது யாதெனில், இத்திட்டத்திற்கான முன்மொழிவை 2005 யூன் மாதமே இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் இலங்கை அரசாங்கத்திற்கு கையளித்தது. இக்காலப்பகுதியில் சம்பூர் முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் மின்நிலையம் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் முன்மொழிவை வழங்கியமையானது பல்வேறு வினாக்களை எழுப்புகிறது. நுரைச்சோலை அனல் மின்நிலையத்தை சீனாவுக்கு அளித்திருந்த நிலையில், இந்தியாவுக்கும் ஒரு அனல் மின்நிலையத்தை வழங்க இலங்கை அரசாங்கம் முடிவெடுத்தமையானது தற்செயலானதல்ல.

7 ஜூலை 2008 அன்று இலங்கை அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி நிலக்கரி மின்உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கியது. அறிவிப்பின்படி, அண்ணளவாக 1,717 ஏக்கர் நிலம் ஆய்வு செய்யப்பட்டு கையகப்படுத்தப்படும். எவ்வாறாயினும், இந்த நிலங்களை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பது மிகவும்  வெளிப்படையாகத் தெரிந்தது (கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்). இது தொடர்பில் இடம்பெயர்ந்த மக்களுக்கான சிறிய தகவல்களே வழங்கப்பட்டன. அவர்களின் நிலம் கையகப்படுத்தப்படும், மாற்று இடங்களில் புதிய காணிகள் வழங்கப்படும் என்பவற்றைத் தவிர வேறெந்தத் தகல்களும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்தப் பின்புலத்தில் இடம்பெயர்ந்த மக்கள், குறித்த நிலக்கரி மின்உற்பத்தித் திட்டம் குறித்து கவலை வெளியிடத் தொடங்கினர். இத்திட்டம் சம்பூரில் அமைக்கப்பட்டால் அது மொத்தத் திருகோணமலை மாவட்டத்திற்கே கேடானதாக அமையும் என்ற உண்மை மெதுவாக அப்பகுதி மக்களைச் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து மக்கள் இத்திட்டத்திற்கு எதிராகப் போராடத் தொடங்கினார்கள். இதை அவதானித்த ஒரு தொகுதி இளைஞர்கள் இணைந்து ‘பசுமைத் திருகோணமலை’ என்ற அமைப்பை நிறுவி இத்திட்டத்திற்கெதிரான எதிர்ப்பை அமைப்புவயப்படுத்தினர்.

பசுமைத் திருகோணமலை

நிலக்கரி மின்உற்பத்தியின் மூலம் ஏற்படும் சுகாதார சுற்றுச்சூழல் கேடுகளை இலங்கையருக்கு நுரைச்சோலை அனல் மின்நிலையம் மிகத் தெளிவாகக் காட்டியிருந்தது. இருந்தபோதும் இன்னொரு அனல் மின்நிலையத்தை நிறுவ இலங்கை அரசாங்கம் தயங்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த இடங்களுக்கு மீளக் காத்திருந்த மக்களுக்கு அவர்களின் நிலங்கள் அனல் மின்நிலையத்துக்காகக் கையகப்படுத்தப்பட்டமை பாரிய இடியாக இறங்கியது. ஆனாலும் இம்மக்களின் போராட்டம் வெறுமனே சம்பூர் மக்களின் போராட்டமாகவே இருந்தது. இதை திருகோணமலைக்கு விரிவுபடுத்தும் பணியை பசுமைத் திருகோணமலை அமைப்பு முன்னெடுத்தது. இவ் அமைப்பு திருகோணமலை மக்களிடையே பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதனூடு மக்கள் ஆதரவையும் வென்றெடுத்தது. இது இன, மத, மொழி கடந்து அனல் மின்நிலையத்துக்கு எதிரான மனநிலையைக் கட்டமைத்தது. இப்போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிகளில் இது முதன்மையானது. குறிப்பாக திருகோணமலை போன்ற மூவின மக்களும் வாழும் பகுதியில் அனைத்துத் தரப்பினரினதும் ஆதரவைப் பெறுவது இலகுவானதல்ல.

அனல் மின்நிலையம் எத்தகைய சூழலியல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை சம்பூர் மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக நுரைச்சோலைக்கு ஒரு தொகுதி சம்பூர் மக்களைப் பசுமைத் திருகோணமலை அழைத்துச் சென்றது. சம்பூரைச் சேர்ந்த 36 பேர் இவ்வாறு களவிஜயம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அனல் மின்நிலையத்தின் பல்பரிமாணப் பாதிப்புகளை மிகவும் தெளிவாக விளங்கிக் கொள்ள இப்பயணம் பெரிதும் உதவியது. சம்பூரில் அனல் மின்நிலையம் ஒன்றை ஏன் அமைக்கக் கூடாது என்பது தொடர்பில் இவ்வமைப்பினர் திருகோணமலைக்கு வெளியேயும் விழிப்புணர்வுக் கூட்டங்களை ஒழுங்கு செய்தனர். இதனை தேசிய கவனம் பெற வைத்த பணியை பசுமைத் திருகோணமலை அமைப்பே செய்தது.

பசுமைத் திருகோணமலையினருக்கு ஆதரவாக கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு பல்வேறு கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள், துண்டுப்பிரசுர நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொண்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த பல அமைப்புகள் இந்த முயற்சிக்குத் துணை நின்றன. குறிப்பாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், தேசிய கலை இலக்கியப் பேரவை, சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம், திருகோணமலை மாவட்டப் பெண்கள் வலையமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மூதூரிலும் தோப்பூரிலும் இந்த முயற்சிக்கு ஆதரவாக மூதூர் பசுமைக்குழுவும் உலமா சபையும் போராட்டங்களை ஒழுங்குபடுத்தியது. மூதூர் பிரதேசப் பெண்கள் வலையமைப்பு அனல் மின்நிலையத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம் ஒன்றை நடாத்தி 607 பேரின் கையெழுத்துகளுடன் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளித்திருந்தது.

இவ்வாறு பொதுமக்கள், அமைப்புகளின் ஆதரவு இருந்தபோதும் அரசியல் மட்டத்தில் இதற்கான ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. குறித்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் மௌனம் சாதித்தன. தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் தலைவர்கள், பல தடவைகள் இந்திய விருப்பங்களுக்கு முரணாகச் செல்வது நல்லதல்ல என்று பசுமைத் திருகோணமலை அமைப்பினருக்கு அறிவுரையும் வழங்கினர். அரசியற் கட்சிகளில் இருந்த தனிநபர்களின் ஆதரவு இந்த முயற்சிக்குக் கிடைத்ததேயன்றி அரசியற் கட்சியாக எந்தவொரு பாராளுமன்றக் கட்சியினதும் ஆதரவு கிட்டவில்லை. மக்கள் விடுதலை முன்னணி மட்டும் கிழக்கின் மக்கள் குரல் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக ஆதரவு வழங்கியது.

சம்பூர் அனல் மின்நிலையத்திற்கு எதிரான போராட்டம் தேசிய கவனம் பெறத் தொடங்கியது முதல் அது முக்கிய பேசுபொருளானது. இலங்கையின் பல பாகங்களில் இருந்து இதற்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. நுரைச்சோலையில் செய்ததைப் போல மக்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காது சம்பூரில் அனல் மின்நிலையம் அமைப்பது சிரமம் என்பது இலங்கை அரசாங்கத்திற்குப் புரிந்தது. ஆனாலும் இந்தியத் தரப்பில் இருந்து இத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தங்கள் வழங்கப்படுவதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு

சம்பூரில் அனல் மின்நிலையமொன்றை அமைப்பதில் சுற்றுச்சூழல் ரீதியாகச் சிக்கல்கள் இல்லை என்பதையே அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சொல்கிறது. தாக்க மதிப்பீட்டு காற்று மாசுபாடு பகுப்பாய்வு, உங்களிடம் போதுமான உயரமான புகைபோக்கி இருந்தால், சிக்கல்கள் மறைந்துவிடும் என்று கருதுதியது. இது முற்றிலும் தவறான அனுமானம். இந்தத் திட்டத்தால் வெளியேற்றப்படும் பெரும்பாலான மாசுகள், காற்றின் வடிவங்கள் மற்றும் நமது கடல் மண்டலத்தின் காரணமாக நாட்டிற்குள்ளேயே இறங்கும். இது மிகப் பாரிய விளைவுகளை நாடு முழுவதற்கும் ஏற்படுத்தும்.  

இந்த அறிக்கையின் இன்னொரு முக்கிய பிரச்சினை, நிலக்கரி மின் உற்பத்தியின் முக்கிய மாசுபாடுகளை இந்த மதிப்பீட்டு அறிக்கை குறிப்பிடவில்லை. கனரக உலோகங்கள் மற்றும் பாதரசம் ஆகியவை நிலக்கரியின் முக்கிய மாசுபாடுகளாகும். இவை இவ்வறிக்கையில் சாத்தியமான சுற்றுச்சூழல் சவால்களாக கூட அடையாளம் காணப்படவில்லை. இது உலகளாவிய நடைமுறைகளுக்கு முரணானது. உண்மையில், சீனா உட்பட பெரும்பாலான நாடுகளில் பாதரச மாசுபாடு பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. சம்பூர் மின்நிலைய வடிவமைப்பில் வெளியாகும் பாதரசத்தில் ஒரு பகுதி காற்றில் வெளியிடப்படும் (காலப்போக்கில் அது கடல் மற்றும் நிலத்தில் படியும்). மறுபகுதி நீரிலும், கடலிலும் வெளியிடப்படும்.

பாதரசம் மிகவும் தீங்கு விளைவிக்கும் நியூரோடாக்சின் ஆகும். இது வளரும் கருவைத் தாக்குகிறது. அத்துடன் மூளை, நுரையீரல் மற்றும் கண் பார்வையைத் தாக்குகிறது. இது மெதுவாக கடல் இனங்களில் குவிந்து, பெரிய மீன் இனங்களுக்குச் சென்று, மனித உணவுச் சங்கிலியில் நுழைகிறது. எங்களின் மிகப் பெரிய மீன்வளத்தை பாதரசத்துடன் ஏன் விஷமாக்க விரும்புகிறோம் என்று கேள்வி எழுப்பப்பட வேண்டும். பாதரச உமிழ்வைக் குறைக்க மின் உற்பத்தி நிலையங்கள் எந்தத் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த மறுப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

மற்றொரு பிரச்சினை, நிலக்கரியில் இருக்கும் கன உலோகங்கள், பின்னர் சாம்பலில் உறைகின்றது. பறக்கும் சாம்பலின் ஒரு பகுதி, சுமார் 2%, காற்றில் வெளியிடப்படுவதோடு பெரும்பாலானவை உள்நாட்டில் தேங்கும். கன உலோகங்களால் ஏற்கனவே விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் இது கவனத்தில் கொள்ளப்படவில்லை. நுரைச்சோலையில் இப் பிரச்சினை எவ்வாறான பொது சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்பதைத் தெரிந்த பிறகும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு  இவ்விடயத்தைப் புறந்தள்ளியுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் உள்ள காற்று மாசுபாடு தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட முனைவர் லரீஃப் ஜூபைர் தனது கட்டுரையில் காற்று மாசுபாடு தொடர்பான மாதிரிகள் உருவாக்கப்பட்ட விதம் தொடர்பில் சில முக்கிய விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். அடிப்படையான சில பிழைகளை அவர் முன்னிலைப்படுத்துகிறார். பல உள்ளூர்த் தரவுத் தொகுப்புகள் வடகிழக்குத் திசையைத் தெளிவாகக் காட்டும்போது, தென்கிழக்கில் இருந்து காற்று வருகிறது என்று கூறி, வடகிழக்குப் பருவமழைக் காற்றின் திசையை தவறாகக் காட்டுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. முட்டாள்தனத்தால் யாரும் பருவ மழையை வடகிழக்கு பருவமழை என்று அழைக்கவில்லை.

காற்றுத் திசைக்குச் செங்குத்தாக அல்லது எதிர் திசையில் மாசுபடுத்திகள் பயணிப்பதைக் காட்டும் படங்கள், அறிக்கையிலிருந்து எழும் மற்றொரு சிக்கல் ஆகும். பள்ளி மாணவர்களால் கூட அடையாளம் காணக்கூடிய இத்தகைய பிழைகள் எவ்வாறு ஒப்புதல் பெற்றன என்பது ஒரு பொருத்தமான கேள்வி. இது, குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் செயல்முறையின் தீவிர நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கிறது.

ஜூபைர் எழுப்பிய மற்றொரு பிரச்சினை என்னவென்றால், மாசுபடுத்திகளின் சாத்தியமான தாக்கங்கள், குறிப்பாக வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் மற்றும் மேக ஒடுக்கம், மழைப்பொழிவு மற்றும் சூரிய கதிர்வீச்சு, குறிப்பாக கிழக்கில் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றின் சாத்தியமான தாக்கங்கள் பற்றிய புரிதல் மற்றும் பகுப்பாய்வு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் இல்லை. வடகிழக்கு பருவமழையின் இத்தகைய இடையூறு (இலங்கையில் அதிக மழைப் பொழிவை வழங்குகிறது) நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் தாக்கங்களை உருவாக்கும். இவை எதுவும் குறித்த அறிக்கையில் விவாதிக்கப்படவில்லை.

அனல் மின்நிலையம் அமையவுள்ள பகுதியில் சமூகங்கள் அல்லது குடியேற்றங்கள் இல்லை என்றும் கைவிடப்பட்ட சில தொட்டிகள் மற்றும் கட்டிடங்கள் மட்டுமே உள்ளன என்றும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இது உயர் பாதுகாப்பு வலயமாக இருந்ததால், இவ்வாய்வு செய்யப்பட்ட நேரத்தில் இது உண்மையாக இருந்தது. ஆனால் 2015 மார்ச் முதல் மக்கள் திரும்பிச் சென்று மீள்குடியேறியுள்ளனர். இரண்டு பள்ளிகள், பல வீடுகள், நிலக்கரிக் கிடங்குக்கு அடுத்ததாக ஒரு மருத்துவ மையம், சாம்பல் சேமிப்பு பகுதி, ஒரு தொட்டி ஆகியன உள்ளன. பழைய இந்து மயானத்தின் வழியாக நீர் வெளியேறும் பாதை கடந்து செல்கிறது. மற்றும் கொட்டியார விரிகுடா இப்போது இரண்டு செழிப்பான பெரிய மீன்பிடி வாடிகளையும் சில சிறிய அளவிலான மீன்பிடி நடவடிக்கைகளையும்  கொண்டுள்ளது. தாக்க மதிப்பீட்டை மேற்கொண்ட குழுவால் நேர்காணல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவர்கள் இல்லாத முகவரிகளில் இருந்து வந்ததாகத் தெரிகிறது என்று தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

குறித்த அனல் மின்நிலையம் இயங்குவதற்கு நீர் தேவை. இந்நிலையம் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக இயங்கினால், 365 நாட்களுக்கும் தொடர்ந்தால், திட்டத்திற்கான மொத்த நீர்த் தேவை ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவிற்குச் சமமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனல் மின்நிலையம் கொட்டியார விரிகுடாவில் இருந்து நாளொன்றுக்கு 2.2 பில்லியன் லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது. அத்தகைய பாரிய நீர் வெளியேற்றத்தால் நுண்ணுயிரிகள், மீன் முட்டைகள் மற்றும் ஏனைய கடலுயிர்கள் பாதிக்கப்படும்.

சுடுநீரை மீண்டும் கடலுக்குள் வெளியேற்றுவது பற்றிய போதுமான பகுப்பாய்வை இவ்வறிக்கை வழங்கவில்லை. தாக்கமதிப்பீட்டு அறிக்கையின்படி, சம்பூர் மின் உற்பத்தி நிலையம் 2.2 பில்லியன் லிட்டர் தண்ணீரை அண்ணளவாக கடலில் வெளியேற்றுகிறது. முதலில், இது ஷெல் விரிகுடாவிற்கு (கிழக்கிலிருந்து கொட்டியார விரிகுடாவிற்கு) வெளியேற்றப்பட வேண்டும். இது ஒரு முக்கியமான பல்லுயிர் இருப்பிடம். இலங்கையில் ராட்சத மட்டிகளின் தாயகமாக இருக்கும் ஒரே இடமுமாகும். தேசிய நீர்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARA) கூற்றுப்படி, இன்னும் பல இனங்களும் இப்பகுதியில் உள்ளன. ஆனால் அவை இன்னமும் மரபணு ரீதியாக அடையாளம் காணப்படவில்லை. தாக்க மதிப்பீடானது இவ்வாறு சுடுநீரை கடலில் வெளியேற்ற வழங்கும் ஒப்புதலின் போது, கடல் நீரை வெளியேற்றுவதை, முதலில் எதிர்பார்த்ததை விட, கிழக்குப் பெருங்கடலில் அதிக ஆழத்தில் செய்யப் பரிந்துரைத்தது.

சூடான நீர் வெளியேற்றத்தின் சில சவால்களுக்கு இது பதிலளிக்கும் அதே வேளையில், இது இன்னும் குறிப்பிடத்தக்க கேள்விகளையும் எழுப்புகிறது. முதலாவதாக, புதிய இடத்தின் பல்லுயிர்த்தன்மை என்ன, அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஆராயப்படவில்லை. இரண்டாவது, மிக முக்கியமான வெப்பச் சிதறல் பகுப்பாய்வு சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

இந்தச் சூடாக்கப்பட்ட நீர் மீண்டும் ஷெல் விரிகுடாவில் வெளியேற்றப்பட்டு, 156 வகையான பவளப் பாறைவாழ் மீன்களைக் கொண்ட 56 வகையான கடின பவளப்பாறைகள் உட்பட கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் அழிவை ஏற்படுத்துகிறது. சம்பூர் வெப்பமண்டல உலர் கலப்பு பசுமையான காடுகள் வெப்பமண்டல முட் படுக்கைகள், பாறைகள் சார்ந்த காடுகள், சதுப்பு நிலங்கள், குளங்கள், கைவிடப்பட்ட நெல் வயல்களை உள்ளடக்கிய இயற்கையான வாழ்விடங்களின் வளமான வரிசை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வாழ்விடங்களில் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அவை சம்பூர் மக்களுக்கான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை வளப்படுத்துகின்றன. இப்பகுதியில் 272 விலங்கினங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 14 உள்ளூர் மற்றும் 2 அழியக்கூடிய தேசிய சிவப்புப் பட்டியலில் உள்ள விலங்குகளும் அடங்கும்.

இத்திட்டடமானது இறுதியில் கொட்டியார விரிகுடாவின் ஒட்டுமொத்த சூழலியலுக்கும் அருகில் உள்ள கடலுக்கும் ஆபத்தை விளைவிக்கும். நாட்டின் மிகவும் உயிரியல் ரீதியாக வளமான தளங்களில் ஒன்றின் ஒட்டுமொத்த சூழலியலையும் அழிக்கக்கூடிய திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அதிகாரசபை எவ்வாறு ஒப்புதல் அளித்தது என்பது கேள்விக்குரியது.

வண்டல் போக்குவரத்து பகுப்பாய்விற்கு (Sedimentation Transportation Analysis), தாக்க மதிப்பீடானது நீரோட்டங்களின் 2 வார பகுப்பாய்வை மட்டுமே பயன்படுத்தியது. இது முற்றிலும் போதுமானதாக இல்லை. நீரோட்டங்கள் மற்றும் அடிமட்ட வண்டல் போக்குவரத்தை மதிப்பிடுவதற்கு ஆய்வு நேரம் போதுமானதாக இல்லை. பருவமழை காரணமாக நீரோட்டங்கள் மாறுகின்றன. மேலும் வளைகுடாவில் உள்ள அலைகள் மற்றும் உயர் அதிர்வெண் அலைகள் சுழற்சியில் மாறுபடும். எனவே இவற்றைப் புறந்தள்ளிய பகுப்பாய்வு போதுமானதோ ஏற்கத்தக்கதோ அல்ல.

அனல் மின்நிலையம் இயங்குவதற்கு நிலக்கரி அவசியம். அந் நிலக்கரி குறித்த மின்நிலையத்திற்கு அருகாமையில் இறக்கப்பட வேண்டும். ஆனால் நிலக்கரி இறக்கும் இறங்குதுறை குறித்த எந்தக் குறிப்பையும் தாக்க மதிப்பீடு தவிர்த்து, அது இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி அல்ல என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தப் புறக்கணிப்பு சரியல்ல. இறங்குதுறை இல்லாமல் திட்டம் முன்னேற முடியாது. கொட்டியார விரிகுடாவில் இறங்குதுறைக்காக பகுதி ஒன்றை அடையாளங் காண்பது சிக்கலானது. ஏனெனில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, மண் அரிப்பு தவிர்க்க முடியாத நிலையில் இறங்குதுறை ஒன்றை அமைக்க இயலாது. அவ்வாறு அமைத்தாலும் மழைக்காலத்தில் கப்பல்கள் நிறுத்தும் திறன் ஒரு பெரிய பிரச்சினை. மழைக்காலத்தில் இது சாத்தியமில்லை என்று கிராம மீனவர்கள் உறுதியாகக் கூறுவதாகவும் இதுவே தேசிய நீர்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்களின் கருத்து என்றும் இது குறித்த பகுப்பாய்வு அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

நிறைவுக் குறிப்புகள்

இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த ஒரு திட்டத்திற்கு எதிராக பசுமைத் திருகோணமலை அமைப்பினரோடு இணைந்து ‘Environmental Foundation Limited’ என்ற அமைப்பு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. சுகாதார அடிப்படையில் நிலக்கரி பொருத்தமற்றது. நுரைச்சோலையில் ஏற்கனவே உணரப்பட்ட தாக்கங்களின் அடிப்படையில் இத்திட்டம் பாதகமானது. நிலக்கரியோடு ஒப்பிடுகையில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் சிறந்த பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பொருத்தம், உத்தேச நிலக்கரி மின் நிலையத்தால் சுகாதாரத்தில் ஏற்படும் பாதகமான பாதிப்புகள், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் அழிவு போன்றவை மனுவில் கவனம் செலுத்தப்பட்டன. அதேவேளை இத்திட்டத்திற்கு எதிரான பொதுக்கருத்து ஒன்று இலங்கையர்களிடத்தில் உருவாகியிருந்தன.

2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் 13 ஆம் திகதி, இந்த விடயம் உயர் நீதிமன்றில் கௌரவ பிரதம நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அரசாங்கமானது உத்தேச நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் சம்பூரில் ஆரம்பிக்கப்பட மாட்டாது என்பதை உறுதியளித்தது. இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இலங்கையின் சுற்றுச்சூழல் போராட்டங்களின் வரலாற்றில் குறித்த தீர்ப்பும் அரசாங்கத்தின் முடிவும் முக்கியமான ஒரு புள்ளி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இத்திட்டம் நிறுத்தப்பட்டாலும் கூட இப்பகுதிகளில் மக்கள் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. இன்னும் இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாகவே உள்ளது. அதேவேளை அனல் மின்நிலையத் திட்டத்தைக் கொணர்ந்த இந்திய நிறுவனமான தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதே பகுதியில் 100 MW அளவிலான சூரிய மின்கல உற்பத்தியை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையுடன் ஒரு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. ஆனால் அதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இவ்வாண்டு யூலை மாதம் மீண்டும் இப்பகுதியில் சூரிய மின்கலங்களை நிறுவும் திட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக 2006 ஆம் ஆண்டு உடன்பட்டபடியே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார இணைப்புகளை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

இலங்கையில் உற்பத்தியாகும் மின்சாரம் யாருக்கானது என்ற வினாவை இங்கு எழுப்ப வேண்டும். இலங்கையின் வடக்கு – கிழக்கில் பல புதுப்பிக்கத்தக்க சக்தித் திட்டங்களை இந்தியா மேற்கொள்கிறது. இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார இணைப்புத் திட்டங்களை நோக்க வேண்டும். எது எப்படியோ தங்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் இன்னமும் அகதிகளாவே இருக்கிறார்கள். அவர்களது வாழிடத்தில் நிலக்கரிக்குப் பதில் சூரிய சக்தி.  


ஒலிவடிவில் கேட்க

2197 பார்வைகள்

About the Author

மீநிலங்கோ தெய்வேந்திரன்

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ள ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் அங்கு சர்வதேச அபிவிருத்தி ஆய்வுகள் முதுகலைத் திட்டத்தை வழிநடத்துகிறார். பூகோளத் தெற்கில் புதுப்பிக்கத்தகு சக்தி மாற்றங்களின் சமத்துவமும் நீதியும் சார் அம்சங்கள் பற்றிய அவரது ஆய்வு, புவிசார் அரசியலின் இயக்கவியல் மீதும்; துப்புரவான சக்தி மாற்றங்களை எய்தலில் வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்கள் மீதும்; குறிப்பான கவனஞ் செலுத்துகிறது. இவர் கற்பித்தல், திட்ட முகாமை, பொதுக் கொள்கை, சர்வதேச அபிவிருத்தி ஆகியவற்றில் இருபது வருடப் பணி அனுபவம் உடையவர். ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் மானுடப் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (4)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)