சமஷ்டிகளும் சமஷ்டி அரசியல் முறைகளும்
Arts
9 நிமிட வாசிப்பு

சமஷ்டிகளும் சமஷ்டி அரசியல் முறைகளும்

September 29, 2024 | Ezhuna

கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons)  கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள்  (constitutional principles) என்பன சார்ந்த விடயங்களை குவிமையப்படுத்தும் உரையாடலை தொடக்கிவைப்பதாக அமைகிறது. தமிழ் சமூகவெளியில் (social space) சமஷ்டி முறைதொடர்பான ஆரோக்கியமான ஒரு விவாதம் இக்கட்டுரைத்தொடரின் பெறுபேறாக அமையும்.

ஆங்கில மூலம் : றொனால்ட்.எல். வாட்ஸ்

‘சமஷ்டி அரசியல் முறைகளை ஒப்பீடு செய்தல்’ (COMPARING FEDERAL SYSTEMS) என்னும் ஆய்வு நூலினை றொனால்ட் எல். வாட்ஸ் என்னும் அறிஞர் எழுதியுள்ளார். இந்நூலினைக் கனடாவின் ‘Queen’s University’ வெளியிட்டது. இதன் முதற்பதிப்பு 1997 இலும் இரண்டாம் பதிப்பு 1999 ஆம் ஆண்டிலும் வெளியாயின. இந்நூலில் 6 முதல் 14 வரையுள்ள பக்கங்களில் ‘சமஷ்டி குறித்த சொற்களின் வரைவிலக்கணங்களும் சமஷ்டித் தத்துவங்களும்’ (DEFINITION OF TERMS AND PRINCIPLES OF FEDERALISM) என்னும் தலைப்பில் உள்ள பகுதியில் நூலாசிரியர் கூறியிருக்கும் கருத்துகளைத் தொகுத்துத் தமிழில் கூறும் முறையில் இத் தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்கள்,

  1. சமஷ்டி வாதம் (Federalism)
  2. சமஷ்டி அரசியல் முறைகள் (Federal Political Systems)
  3. சமஷ்டிகள் (Federations)

என்னும் மூன்று சொற்கள், சொற்தொடர் என்பனவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார். இவ் வேறுபாடுகளை விளங்கிக் கொள்வதற்கேற்ற வரைவிலக்கணங்களையும் அவர் தருகிறார். முதலாவதான ‘சமஷ்டி வாதம்’ என்ற சொல், சமஸ்டிகள், சமஷ்டி அரசியல் முறைகள் என்ற இரண்டில் இருந்தும் வேறுபட்ட கருத்துடையது. அது பின்னைய இரண்டினைப் போன்று ஒரு விவரணச் சொல் (Descriptive Term) அன்று; அதுவொரு நியமச்சொல் (Normative Term) என்று குறிப்பிடுகிறார்.

நியமச் சொல்லான சமஷ்டிவாதம் பின்வரும் நியமங்களை (Norms) அல்லது இலட்சியங்களை (Ideals) வெளிப்படுத்துகிறது.

  1. ஐக்கியம் (Unity), பன்மைத்துவம் (Diversity) என்னும் இரண்டையும் ஒரே ஆட்சி முறைக்குள் பேணக்கூடிய நியமத் தத்துவத்தை (Normative Principle) இது உள்ளடக்கியது.
  2. ஒரே அரசியல் கட்டமைப்புக்குள் பன்மைப் பண்பாடுகளை உடைய சமூகங்கள் பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule), பிராந்திய சுயாட்சி (Regional Self Rule) ஆகிய இரு இலக்குகளையும் அடையும் இலட்சியத்தை வெளிப்படுத்துவது.
  3. அதிகாரம் பரவியிருத்தல் (Non Centralisation),  ஒரே நாட்டிற்குள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் வேணவா (Desire for Union)  என்னும் இரு தேவைகளையும் பூர்த்தி செய்யும் இலக்கினை வெளிப்படுத்துவது.

தனிநபர் உரிமைகளையும், தனிநபர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் (Community) கூட்டுரிமைகளையும் (Collective Rights) உறுதி செய்தல் என்பதும் சமஷ்டி வாதத்தின் இலக்குகளில்  அடங்குவது எனலாம்.

சமஷ்டி அரசியல் முறைகள்

பகிரப்பட்ட ஆட்சி (Shared Rule), சுயாட்சி (Self Rule) அல்லது தன்னாட்சி (Autonomy) என்ற இலக்குகளை அடையக்கூடிய அரசியல் முறைகளை சமஷ்டி அரசியல் முறைகள் (Federal Political Systems) என றொனால்ட் எல். வாட்ஸ் வகைப்படுத்துகிறார். இச் சொற்றொடர் அரைகுறைச் சமஷ்டிகள் (Quasi Federations), ‘சமஷ்டிகள்’ (Federations) ‘கொன்பெடரேஷன்கள்’ (Confederations) எனப் பல்வகைப்பட்ட வகையினங்களை உள்ளடக்கியது. அரைகுறைச் சமஷ்டிகள், சமஷ்டிகள், கொன்பெடரேஷன்கள் என்பவற்றிற்கிடையே உள்ள பொதுத்தன்மை அவை ஒற்றையாட்சி முறையல்லாத தன்மையைப் பெற்றிருப்பது தான் (Non – Unitary Form) என்று குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் சமஷ்டி அரசியல் முறைகளை ஒரு ‘தொடர்பம்’ (Continuum) அல்லது வரிசைத் தொடரில் (Spectrum) நிரற்படுத்திக் காட்டலாம். றொனால்ட்.எல். வாட்ஸ் நூலின் 8 முதல் 13 வரையுள்ள பக்கங்களில் உள்ள தகவல்களை ஆதாரமாக்கிக் கொண்டு ‘சமஷ்டி அரசியல் முறைகளின் தொடர் வரிசை’ (The Spectrum of Federal Political Systems) என்னும் தலைப்பில் அட்டவணை ஒன்றைத் தந்துள்ளோம். இத்தொடர் வரிசை ஒற்றையாட்சி என்னும் எதிர்த் துருவத்தில் இருந்து மறு அந்தத்தில் உள்ள ‘கொன்பெடரேஷன்’ வரையான சமஷ்டி அரசியல் முறைகளையும், கொன்பெடரேஷனிற்கு அப்பால் உள்ள முறைகள் சிலவற்றையும் காட்டுரு வடிவில் விளக்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

சமஷ்டி அரசியல் முறைகளின் வரிசைத் தொடர் (The Spectrum of Federal Political Systems)

chart

மேலே தரப்பட்ட வரிசைத் தொடரில் ஒரு அந்தத்தில் ஒற்றையாட்சி அரசும், வரிசைத் தொடரின் நடுப்பகுதியில் சமஷ்டிகள் என்னும் அரசியல் முறையும், இறுதி அந்தத்தில் கொன்பெடரேஷன், லீக் ஆகிய அரசியல் முறைகளும் அமைந்துள்ளன. அரசியல் மாணவர்கள் நன்கு அறிந்திருக்கும் சமஷ்டிகள் (Federations) என்னும் அரசியல் முறையை முதலில் விளக்கிக் கூறுவோம்.

சமஷ்டிகள் (Federations) 

றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் ‘COMPARING FEDERAL SYSTEMS’ நூல் சமஷ்டி நாடுகளின் அட்டவணையைச் சுருக்கக் குறிப்புகளுடன் தந்துள்ளது. சமஷ்டிகளின் இயல்பை விளக்குவதற்கு உதவக்கூடிய உதாரணங்கள் அந்நூலில் உள்ள சுருக்கக் குறிப்புகளுடன் கீழே தரப்பட்டுள்ளன.

  1. ஆர்ஜன்டீனா (22 மாநிலங்கள் + ஒரு தேசியப் பிராந்தியம் (National Territory) + ஒரு பெடரல் மாவட்டம் என்பவற்றை உள்ளடக்கியது)
  2. அவுஸ்திரேலியா (6 அரசுகள் (States) + ஒரு தலைநகர் பிரதேசம் + 7 நிர்வகிக்கப்படும் பிரதேசங்கள்)
  3. ஆஸ்திரியா (9 லான்டர்கள் (Lander))
  4. பெல்ஜியம் (3 பிராந்தியங்கள் + 3 பண்பாட்டுச் சமுதாயங்கள் (Cultural Communities)
  5.  பிரேசில் (26 அரசுகள் + 1 பெடரல் தலைநகர் மாவட்டம்)
  6. எதியோப்பியா ( 9 அரசுகள் + 1 மெட்ரோ பொலிற்றன் பகுதி)
  7. மலேசியா (13 அரசுகள்)
  8. மெக்சிக்கோ (31 அரசுகள் + 1 பெடரல் டிஸ்றிக்)
  9. சுவிற்சர்லாந்து (26 கன்டன்கள்)
  10.  கொமொறோஸ் தீவுகள் (4 தீவுகள்)

மேலே காட்டிய சமஷ்டி உதாரணங்களும், அவற்றின்  கட்டமைப்பு (Structure) பற்றிய சுருக்கக் குறிப்புகளும் தோற்ற அளவிலேயே சமஷ்டிகளின் மிகப் பிரதானமான இயல்பொன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. சமஷ்டிகளில் மத்திய அரசு, மாநில அரசுகள் என இரு நிலைகளில் அரசு (Two Levels of Government) செயற்படுகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் அந்தஸ்தில் சமத்துவம் உடையன. மத்திய அரசுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் (Subordinate) மாநில அரசுகள் இருப்பதில்லை. அவை சமத்துவ நிலையில் (Coordinate) உள்ளன. மாநிலங்கள், அரசுகள், லேன்டர்கள், கன்டன்கள் என சுயாட்சியுடைய அரசுகளைக் குறிக்க வெவ்வேறு பெயர்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

மத்திய அரசு எதேச்சையாகவும் ஒரு தலைப்பட்சமாகவும் மாநில அரசு ஒன்றின் அந்தஸ்தைக் கீழிறக்கவோ, அல்லது அதன் அதிகாரங்களைப் பறித்துவிடவோ முடியாது. அரசியல் யாப்பினைத் திருத்தும் போது மாநில அரசுகளின் சம்மதமின்றி திருத்தங்கள் எதனையும் செய்ய முடியாது என்பன போன்ற அரசியல் யாப்புச் சட்டப் பாதுகாப்புகள் சமஷ்டிகளின் அரசியல் யாப்புகளில் குறிக்கப்பட்டிருக்கும்.

சமஷ்டிகளின் அடிப்படைப் பண்புகள்

ஒற்றையாட்சி அரசை எவ்வாறு வரையறை செய்யலாம் என்பதற்கு இலகுவான பதில், நாம்  அதனை சமஷ்டிகளிற்கு நேர் எதிரான அடிப்படைப் பண்புகளைக் கொண்டவை என வரையறை செய்வதேயாகும். ஒப்பீட்டு முறையிலான இவ்வரைவிலக்கணத்தில் மேலே குறிப்பிட்ட இரண்டு பண்புகளான,

அ)இரு நிலை அரசாங்கங்களைக் கொண்டிருத்தல்

ஆ)மாநில அரசுகளின் அந்தஸ்து அரசியல் யாப்பினால் பாதுகாக்கப்பட்டிருத்தல் 

என்பன அடிப்படையானவை. இவற்றைவிட பின்வரும் முக்கிய சமஷ்டிப் பண்புகளும் ஒற்றையாட்சியில் இருந்து சமஷ்டிகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

  1. இரண்டு நிலையில் உள்ள அரசாங்கங்களும் பிரஜைகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கின்றன (Acting Directly).
  2. சட்ட ஆக்க அதிகாரமும், நிர்வாக அதிகாரமும் இரு நிலை அரசாங்கங்களிற்கும் தெளிவாக அரசியல் யாப்புச் சட்டப்படி வகுத்துரைக்கப்பட்டிருக்கும். இவ்வாறே வளங்களின் பங்கீடு பற்றியும் முறைசார் ஒழுங்குகள் (Formal Arrangements)  சட்டப்படி விதிக்கப்பட்டிருக்கும். மாநில அரசாங்கங்களின் செயற்பாடுகளில் தன்னாட்சி அல்லது சுய ஆட்சி (Self Rule) என்னும் இயல்பு உண்மைத் தன்மையுடையதாக இருக்கும்.
  3. சுயாட்சியை அனுபவிக்கும் மாநில அரசாங்கங்கள் மத்தியின் அரசாங்க அதிகாரத்திலும் பங்கேற்புச் செய்யும் பகிரப்பட்ட ஆட்சி (Share Rule) என்னும் பண்பும் சமஷ்டியின் முக்கிய இயல்பாகும். பெரும்பாலான சமஷ்டிகளில், மாநில அரசாங்கங்களின் கருத்துகள் மத்திய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதற்காக, சமஷ்டியின் இரண்டாவது சபை (Federal Second Chamber) உருவாக்கப்பட்டுச் செயற்பாட்டில் இருக்கும்.
  4. மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அரசாங்கத்திற்கும் பிணக்குகள் ஏற்படலாம். அவ்வாறான பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரமுடைய நடுவராக நீதிமன்றங்கள் செயற்படும். நடுத் தீர்ப்புக்கான நீதிமன்றத்தின் அதிகாரத்தோடு பொதுசன வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படுதல் என்னும் ஏற்பாடும் இருக்கும்.

மேலே குறிப்பிட்டவை சமஷ்டிகளின் அடிப்படியான பொது இயல்புகளாகும். ஆயினும் சமஷ்டிகளிற்கிடையே வேறுபாடுகள் உள்ளன. ஒப்பீட்டு ஆய்வுகளில் சமஷ்டிகளிடையிலான வேறுபாடுகள் முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் ‘COMPARING FEDERAL SYSTEMS’ நூலின் 6 ஆம் 7 ஆம் 8 ஆம் அத்தியாயங்கள் வேறுபாடுகளை ஒப்பீட்டு முறையில் பகுப்பாய்வு செய்வனவாக அமைந்துள்ளன.

‘கொன்பெடரேஷன்’

‘Confederation’ என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் பல வகையாக மொழிபெயர்க்கலாம். ஆயினும் கருத்துக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இக்கட்டுரையில் ‘கொன்பெடரேஷன்’ என்றே அழைப்போம். தனித்தனி அரசுகளாக முன்னர் இருந்து வந்த அரசுகள் சில பொதுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பொது அரசு ஒன்றை உருவாக்கும் போது ‘கொன்பெடரேஷன்’ என்னும் அரசியல் முறை தோன்றும். பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றன அரசுகள் ஒன்றிணைவதற்கான பொதுத் தேவைகளாக இருக்கலாம். இணையும் அரசுகளை விடப் பொது அரசு பலம் குறைந்ததாக இருக்கும். சுவிற்சர்லாந்து 1291 முதல் 1847 வரையான காலத்தில் கொன்பெடரேஷன் ஆகவே விளங்கியது. ஐக்கிய அமெரிக்கா 1776 முதல் 1789 வரை ‘கொன்பெடரேஷன்’ ஆக இருந்தது. இவை சிறந்த வரலாற்று உதாரணங்கள். இன்று ஐரோப்பிய யூனியன் கொன்பெடரேஷன் என்ற நிலையில் இருந்து மெல்ல மெல்ல சமஷ்டியின் இயல்புகள் சிலவற்றைத் தழுவிக் கொள்கிறது. பொது அரசின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டனவாக இருக்கும். இதனால் கொன்பெடரேஷனில் இணைந்திருக்கும் அரசுகள் பலமுடையனவாக இருக்கும். வாக்காளர் என்ற முறையிலும், வரி செலுத்துபவர் என்ற முறையிலும் பொது அரசுடன் பிரஜைகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதில்லை. அங்கத்துவ அரசுகள் தத்தம் பிரஜைகளுக்கும் பொது அரசுக்கும் இடையில் ஒரு தொடர்பாளர் போன்று செயற்படுகின்றன. எல்லா முக்கிய கொள்கைத் தீர்மானங்களும் அங்கத்துவ நாடுகளின் சம்மதத்துடனேயே செய்யப்படுகின்றன. அதனால் அரசுகளின் பலமும் சுதந்திரமும் வலுப்படுத்தப்படுகிறது. முரண்பாடு தோன்றும் போது ஒரு அரசு கொன்பெடரேஷனில் இருந்து விலகிக் கொள்ளலாம். அவ்வாறு விலகும் போது முன்னர் இணைந்த போது கையளித்த மட்டுப்படுத்தப்பட்ட இறைமையை (Sovereignty), முழுவதுமாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு குறித்த அரசு விலகிச் செல்கிறது என்பது முக்கியமானது. சமஷ்டிகளில் இருந்து வேறுபட்ட கொன்பெடரேஷன், சமஷ்டி அரசியல் முறைகளுள் ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

லீக்

அரசியல் சுதந்திரம் உடைய நாடுகள், சில பொதுத் தேவைகளுக்காக ஒன்று கூடி ‘லீக்’ என்ற அமைப்பினை உருவாக்கிக் கொள்கின்றன. அராபிக் லீக், ஆசியான், பால்டிக் நாடுகளின் கூட்டமைப்பு, பொதுநலவாயம், நேட்டோ, நோர்டிக் கவுன்சில், சார்க் கூட்டமைப்பு என்பன வாட்ஸ் உதாரணம் காட்டும் லீக் அமைப்புகளாகும்.

‘லீக்’ என்பதில் இருந்து வேறுபட்ட கூட்டுச் செயல் அதிகார அமைப்புக்கள் (Joint Functional Authorities) என்ற ஒரு பிரிவையும் வார்ட்ஸ் குறிப்பிடுகிறார். இவை ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளாகும். ‘சர்வதேச அணுசக்தி அதிகார சபை’ இவ்வகை அமைப்புக்கு உதாரணமாகும்.

ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி

ஒற்றையாட்சி நாடுகள் பலவற்றில் சமஷ்டி முறையில் சுயாட்சி (Autonomy) என்ற இயல்புடைய சமஷ்டி அரசியல் முறைகள் செயற்பாட்டில் உள்ளன என்பதை வாட்ஸ் தம் நூலில் விளக்கிக் கூறியுள்ளார். சில நாடுகளில் இவை வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டுச் சிறப்பாக இயங்குகின்றன. பெடரசி, அசோசியேட்டற் அரசு, கொன்டோமினியம் போன்ற மாதிரிகள் சிலவற்றையும் வாட்ஸ் குறிப்பிடுகிறார்.

இலமாதிரிஉதாரணம்விளக்கம்
1ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வுஐக்கிய இராச்சியம்வேல்ஸ், ஸ்கொட்லாந்து, வட அயர்லாந்து என்பன சுயாட்சிப் பகுதிகளாக உள்ளன.
2பெடரசிபின்லாந்துஆலந்து தீவுகள் சுயாட்சியுடைய பெடரசியாக உள்ளது
3அசோசியேட்டற் ஸ்டேற் (இணைப்பு அரசு என்று தமிழில் கூறலாம்)இந்தியாபூட்டான் இந்தியாவின் இணைப்பு அரசு. இது ஒரு வகைச் சமஷ்டி ஒழுங்குதான்.
4.கொன்டோமினியம்ஸ்பெயின் நாடும், பிரான்ஸ் நாடும் அன்டோரா என்ற நாட்டை தம் மேற்பார்வையில் வைத்திருந்தன.அன்டோராவிற்குச் சுயாட்சி அதிகாரங்களும் இருந்தன.

மேலே தரப்பட்ட அட்டவணையில் சமஷ்டி அரசியல்முறை மாதிரிகளுக்கு ஒவ்வோர் உதாரணம் தரப்பட்டு, விளக்கமும் கூறப்பட்டுள்ளது. இந் நான்கு மாதிரிகள் பற்றி அடுத்து விளக்கிக் கூறுவோம்.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு

ஒற்றையாட்சி அரசு (Unitary State) முறைக்குள் சமஷ்டி முறையலான அதிகாரப் பகிர்வை அல்லது சுயாட்சியை (Autonomy) வழங்கும் அரசியல் முறை மாதிரிகள் உலகில் இருபதிற்கும் மேற்பட்டவை உள்ளன. நெதர்லாந்து, இத்தாலி, ஐக்கிய இராச்சியம் போன்ற ஐரோப்பிய நாடுகளும்; அன்டிகுவா, பார்படோஸ், சொலமன் தீவுகள், கொலம்பியா போன்ற மூன்றாம் உலக நாடுகளும் றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் நூலில் உதாரணங்களாகக் காட்டப்பட்டுள்ளன. 1990 களில் காணப்பட்ட நடைமுறை உதாரணங்களையே இந்நூலில் வாட்ஸ் தருகிறார். ஐக்கிய இராச்சியத்தில் வேல்ஸ், ஸ்கொட்லாந்து ஆகிய இரு பகுதிகளும் சுயாட்சி நோக்கி முன்னேறுவதை அவர் குறிப்பிட்டுள்ளார். பெரிய வெள்ளி உடன்படிக்கையின் பின்னர் வட அயர்லாந்தில் அமைதி திரும்பியதோடு அதிகாரப் பரவலாக்கம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு பற்றி வாட்ஸ் பின்வருமாறு கூறுகிறார்: “இந்த அரசியல் அமைப்புகள் அடிப்படையில் ஒற்றையாட்சி அமைப்புக்களே. நாட்டின் அரசியல் அதிகாரம் மத்தியிலேயே இருக்கும். இருந்த போதும் அரசியல் யாப்பின் அங்கீகாரத்துடன் கூடிய உப அலகுகள் (Sub Units) மாநில, பிராந்திய மட்டங்களில் இருக்கும். அந்த உப அலகுகளுக்குச் சில விடயங்களில் சுதந்திரமாகச் செயற்படும் அதிகாரம் இருக்கும். இவற்றின் மூலம் பிராந்திய அல்லது உள்ளூராட்சி அலுவல்கள் செயற்படுத்தப்படும். இருப்பினும் அரசியல் யாப்பு மத்திய அரசுக்கே முழுமையான அதிகாரத்தை வழங்கியிருப்பதால் மத்திய அரசின் தயவில் இயங்கும் பலமற்ற அமைப்புக்களாகவே இவை உள்ளன.

பெடரசி (Federacy)

வாட்ஸ் இது பற்றி கொடுக்கும் விளக்கம் வருமாறு :

சிறிய அலகு ஒன்று அல்லது சிறிய நாடு ஒன்றோ சிலவோ பெரியநாடு ஒன்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலை பெடரசி எனப்படும். பெடரசி சுயாட்சி உடையதாக இருக்கும். அத்தோடு பெரிய நாட்டின் ஆட்சியில் அதன் பங்கு குறைவானதாக இருக்கும். பெடரசிக்குப் பல உதாரணங்களை வாட்ஸ் பட்டியலிட்டுள்ளார்.

  1. ஆலந்து தீவுகள் (ALAND ISLANDS) – பின்லாந்து
  2. அசோர்ஸ் தீவுகள் (AZORES) – போத்துக்கல் 
  3. FAROE ISLAND – டென்மார்க்
  4. கிரின்லாந்து – டென்மார்க்
  5. மான் தீவு (ISLE OF MAN) – ஐக்கிய இராச்சியம் 
  6. புவட்டோ றிக்கா – ஐக்கிய அமெரிக்கா

பெடரசியை ஒத்ததான அசோசியேட்டட் ஸ்டேற் (Associated State) அல்லது இணைப்பு அரசு என்பதற்கு உதாரணமாக பின்வருவன வாட்ஸ் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன.

  1. லெய்ச்ரென்ஸ்டின்  (LIECHTENSTEIN) – சுவிற்சர்லாந்து 
  2. சன்மரினோ (SAN MARINO) – இத்தாலி 

கொன்டோமினியம் (Condominium)

கூட்டு உடைமையைக் கொன்டோமினியம் என்ற சொல் குறிப்பிடும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒரு நாட்டைக் கூட்டாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே ‘கொன்டோமினியம்’ எனப்படும். பிரான்ஸ் – ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளின் கூட்டு உடமையாக அன்டோரா செயற்பட்டு வந்ததை வாட்ஸ் உதாரணம் காட்டுகிறார்.

சமஷ்டியும் பன்மைத்துவத்தை முகாமை செய்தலும்

சமஷ்டி அரசியல்முறை பன்மைத்துவச் சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய சிறந்த வழிமுறையாகக் காணப்படுகின்றது. உலகின் பெரும்பான்மையான நாடுகள் பன்மைப் பண்பாடுகளைக் கொண்டவையாகவும் மொழி, சமயம், பண்பாடு, இனம், பிராந்தியம் ஆகியவற்றால் வேறுபட்ட தேசிய இனங்களையும் சிறுபான்மைத் தேசியங்களையும் தமது ஆள்புலத்திற்குள் உள்ளடக்கியவையாகவும் காணப்படுகின்றன. நவீன உலகில் பன்மைத்துவம் ஒரு யதார்த்தம். அதை இல்லாது ஒழித்து ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மக்கள் என்ற கருத்தியல் மூலம் ஒருமைத் தன்மையைச் செயற்கையாக உருவாக்க முனைதல் பயனற்றது. பன்மைத்துவத்தை முகாமை செய்தலும் சிறுபான்மைத் தேசிய இனங்களிற்கு அரசியல் இறைமையை உறுதிப்படுத்துவதுமே நாடுகளின் முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாகும்.

சமஷ்டி நாடுகள் பன்மைத்துவத்தை முகாமை செய்வதில் வெற்றிகண்டுள்ளன. ஒற்றையாட்சி முறையினை உடைய நாடுகளிலும், சமஷ்டி முறையிலான அரசியல் முறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சமஷ்டிகளும், சமஷ்டி அரசியல் முறைகளும் என்னும் தலைப்பிலான இக்கட்டுரை பன்மைத்துவச் சமூகங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்துள்ள சமஷ்டி மாதிரிகள் பலவற்றை அறிமுகம் செய்வதாக உள்ளது.

குறிப்பு

இக்கட்டுரையை எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்த றொனால்ட்.எல். வாட்ஸ் அவர்களின் ஆக்கங்கள்:

  1. WATTS.RONALD,L. COMPARING FEDERAL SYSTEMS, QUEEN’S UNIVERSITY, KINGSTON, ONTARIO, CANADA. 2nd ED. 1999
  2. சமஷ்டி அதிகாரப் பகிர்வு மாதிரிகள் (கட்டுரை). சமஷ்டி எண்ணக்கரு என்னும் நூல் (பக்கம் 13-26). மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மற்றும் சமஷ்டி ஆட்சி நாடுகளின் மன்றம் (வெளியீட்டாண்டு குறிப்பிடப்படவில்லை).

ஒலிவடிவில் கேட்க

2431 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (4)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)