உள்ளிருந்து உணர்தலும் சமகால நெருக்கடிகளும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் கூட்டுறவுக் கால்நடைப் பண்ணையாளர்களின் அனுபவங்கள்
Arts
10 நிமிட வாசிப்பு

உள்ளிருந்து உணர்தலும் சமகால நெருக்கடிகளும்: மட்டக்களப்பு மாவட்டத்தின் கூட்டுறவுக் கால்நடைப் பண்ணையாளர்களின் அனுபவங்கள்

September 30, 2024 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

1977 இல் திறந்த பொருளாதாரம் அறிமுகமான போது பலர் ‘சந்தைப் பொருளாதாரம்’ தான் இலங்கையின் பிரகாசமான எதிர்காலத்திற்கான வழி எனக் கருதியதுண்டு. அப்போதைய நெருக்கடியில் அதற்கான ஒரு தேவை இருந்தது. திறந்த பொருளாதாரம் நன்மைகளைக் கொண்டு வந்தாலும் அது பல அதிர்வுகளையும் தந்தது. கூட்டுறவுத் துறை அதனால் மிகவும் நசுக்கப்பட்டது. அரசு கூட்டுறவுத் துறையை ஒரு விளிம்பு நிலைக்கு கொண்டுவந்தது. திறந்த பொருளாதார சுனாமி கூட்டுறவின் கட்டமைப்புகளை சிதைத்தது. ஆனால், இந்தியாவில், இதற்கு மாறாக நடந்தது. பி.வி. நரசிம்மராவ் 1991 இல் இந்தியாவின் பிரதமராக வந்து புதிய பொருளாதாரக் கதவுகளைத் திறக்கும் முன், கூட்டுறவின் பாதுகாப்புப் பற்றி அதிகம் யோசித்தார். கூட்டுறவின் நன்மை கருதி பல முன்னெடுப்புகளைச் செய்தார். கூட்டுறவின் கட்டடமைப்புகளை பலப்படுத்த நிதியீட்டினார். 1991 இற்குப் பிறகுதான் அமுல் நிறுவனம் நவீன வளர்ச்சி கண்டது.      

கூட்டுறவு மீதான தாக்கங்கள், அதன் தந்திரோபாய மூலோபாயத் திட்டங்கள் பற்றிய அக்கறையின்மை தான் 1980 களின் பின்பு இலங்கையில் கூட்டுறவுக் கலாசாரம் கரைந்து போக வழிவகுத்தன. காலச் சூழ்நிலைக்கு இசைவான உள்ளக யதார்த்தக் கணக்கெடுப்பு இன்மை, முனைப்பு மிக்க தயார் நிலை இன்மை ஆகியன கூட்டுறவுக்கு பாதகமாக அமைந்தன. போரின் பின்பான காலங்களில் வடக்கு – கிழக்கின் கூட்டுறவின் மந்த நிலைக்கு, தந்திரோபாய மூலோபாயத் திட்டங்கள் பற்றிய அக்கறையின்மை முக்கிய காரணமானது.

பின்வரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதில் கூட்டுறவு துறைசார் அமைப்புகளின் பங்கு தனித்துவமானது: 1. போருக்குப் பிந்தைய சூழ்நிலை மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டங்கள்; 2. சமூக, பொருளாதார மற்றும் நிதி ஆதாரங்களின் வீழ்ச்சி மற்றும் அது சார்ந்த சூழ்நிலை; 3. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள். கூட்டுறவுத் துறையானது ஒரு வலுவான, தவிர்க்க முடியாத ஒரு சமூகக் கட்டமைப்பு. மேலும் வேலைவாய்ப்புச் சவால்களுக்கு முகம் கொடுப்பதிலும் கூட்டுறவின் பங்கு முக்கியமானது.

கூட்டுறவு ஒரு வலுவான, சக்திமிக்க கட்டமைப்பாக துளிர முடியாமைக்கு பல காரணங்கள் உண்டு. கூட்டுறவு நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் மத்தியில் அவநம்பிக்கை நிலவுதல் அவற்றுள் மிக முக்கியமானது. தலைமைக்கும் பொது உறுப்பினர்களுக்கும் இடையே வெளிப்படைத்தன்மை இருப்பதில்லை. தலைமைத்துவம், நிர்வாக மற்றும் நிதி மேலாண்மை திறன்களின் பற்றாக்குறை தொடர்ந்து நீடிக்கிறது. 

ஒரு வருடத்திற்கு முன் (மார்ச் – 2023) கூட்டுறவு வளவாளராக பல கூட்டுறவு பயில்வு அமர்வுகளில் பங்கு பற்றினேன். கூட்டுறவில் ஆர்வம் மிக்க இளம் கூட்டுறவாளர்களின் மத்தியில் ஆராய்ந்த தலைப்புகளுக்கு 100 பங்கேற்பாளர்கள் தந்த மதிப்பீடுகள், கருத்துக் கணிப்புகள் பின்வருமாறு: (Source : Capacity Building Training on Promoting the Cooperative Culture, cooperative Business Models and Systems, FEDERATION OF INSTITUTIONS FOR RURAL MANAGEMENT, Vavuniya, February 2023).

இது மிகவும் திட்டமிட்ட ஆய்வுக்குரிய முறைமைகள் பின்பற்றப்பட்ட கருத்துக்கணிப்பு இல்லை எனினும் இதில் வெளிப்படும் இளம் கூட்டுறவாளர்களின் மனநிலைகள் புறக்கணிக்க முடியாதவை. கூட்டுறவு உறுப்பினர்களிடையே பயனுள்ள தொடர்பு இல்லாமை, கூட்டுறவு வணிகத்தில் தொழில் முனைவு இல்லாமை என்பன இதில் முக்கியமாக அவதானிக்கக்கூடிய விடயங்கள் ஆகும். 

உள்ளூர் உயரடுக்கின் கட்டுப்பாடு பற்றியும் இங்கே சிந்திக்க வேண்டியுள்ளது. இவ் ஆய்வில் 90% பெண்கள் (43 மொத்தப் பங்காளர்கள்) உள்ளூர் உயரடுக்கின் கட்டுப்பாடு பற்றிய கரிசனை கொண்டவர்களாக இருந்தனர். தலைப்புகள், பெரும் புள்ளிகளின் அளவுகள் என்பன அண்ணளவானதாக இருந்தாலும், கூட்டுறவு அமைப்புகளின் வளர்ந்துவரும் உள்ளகப் பிரச்சினைகளின் ஒரு குறுக்குவெட்டை இங்கு படம் பிடிக்கலாம்.

livestock

Research Conducted on 23 February 2023, Sarvodaya Resource Centre, Ariyalai, Jaffna.

போரிற்கு முன்பும் பின்பும் : கூட்டுறவாளர்களின் காலத்துயர்கள்

2009 யுத்த நிறைவின்  பின்னரான மீள் கட்டுமான பணிகள் இன்னமும்கூட முற்றிலுமாக நிறைவடையாத நிலையில் பல கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. போரின் பின்னரான காலம் கூட்டுறவின் துளிர்வுக்கு வித்திடும் என நம்பப்பட்ட போதும், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கூட்டுறவுத்துறையின் தற்போதைய நிலை இன்னும் விளிம்பு நிலைக்குச் சென்றுள்ளது. பல கூட்டுறவுச் சங்கங்கள் மீளப் புதுப்பிக்கப்படவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணங்களின் கூட்டுறவுத் துறை இன்னும் போரின் அதிர்வுகளிலிருந்து மீளவில்லை. 

மட்டக்களப்பு மாவட்ட சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத்தின் இன்றைய கைவிடப்பட்ட நிலை மிகவும் கரிசனைக்குரியது. 138 சிக்கனக் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றிணைவுடன் ஆரம்பிக்கப்பட்ட சமாஜம் (1987 , ஜனவரி 27 , பதிவு இலக்கம் – 351) 32  நிரந்தரப் பணியாளர்களுடன் நடைபோட்டு பல கடனுதவித் திட்டங்களை மிகச் சிறப்பாக முன்னெடுத்தது. வீட்டுக் கடனுதவி, விவசாயக் கடனுதவி, சேமிப்பு மற்றும் நிலையான அபிவிருத்தி முன்னெடுப்புகளை அமுலாக்கி பலமான ஒரு அமைப்பாக விளங்கியது. இன்று அது, நிர்வாகக் கட்டமைப்புக் குலைந்து, வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளது. மிக அண்மையில் தான் மீட்சி அமைப்பும் ‘CSNHA’ உம் இணைந்து அதனை மீள ஆரம்பிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போதைய கணக்கின்படி 40 கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கினாலும், 10 சங்கங்கள் தான் முறையாக இயங்குகின்றன. மிகவும் அதிர்ச்சியான விடயம் யாதெனில், 117 சங்கங்கள் போர்க் காலங்களில் முற்றாகக் கரைந்து போயின. போர் முடிந்து 15 வருடங்கள் கடந்தும், 117 சங்கங்களின் மீள் கட்டமைப்பு கவனத்தில் எடுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம் மற்றும் மீன்பிடியை நம்பியே உள்ளது. இம் மாவட்டத்தில் 23,792 விவசாயக் குடும்பங்களும், சுமார் 22,860 மீனவக் குடும்பங்களும் உள்ளன. சுமார் 77,389.90 ஏக்கர் நெல் நிலமும், 5,600 ஏக்கர் நிலப்பரப்பும், தென்னைச் சாகுபடி உட்பட வீட்டுத் தோட்டங்களும் உள்ளன. இம் மாவட்டத்தின் கரையோரக் கிராமங்கள் வெங்காயம், மிளகாய், வெற்றிலை மற்றும் மரக்கறிப் பயிர்ச் செய்கைகளுக்குப் பெயர் பெற்றவை. குளங்கள், நீண்ட கடல் கடற்கரை, இடைவெளியில் பொருத்தமான விரிகுடாக்கள், ஆறுகள், முகத்துவாரங்கள் மற்றும் நீர்த் துளைகள் ஆகியவை மீன்பிடித் தொழிலுக்குப் போதுமான வாய்ப்பை வழங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,907 கடல் மீனவர்களும், 11,551 நன்னீர் மீனவர்களும் காணப்படுகின்றனர். மாடுகள், ஆடுகள், எருமைகள், கோழிகள் உள்ளிட்ட விலங்குகளும் இம் மாவட்டத்தின் பொருளாதாரத்திற்கு முக்கியமானவை. இம் மாவட்டத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான பால் உற்பத்தி 5,342,695 லீற்றராக இருந்தது. நெசவு, அரிசி அரைத்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய் நெசவு, தென்னை நார் மற்றும் செங்கல் உற்பத்தி ஆகியவை இம் மாவட்டத்தில் முன்னணி சிறு தொழில்கள் ஆகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல் நிலப்பிரச்சினை ஒரு எரியும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் கால்நடைக் கூட்டுறவாளர்களே. மேய்ச்சல் நிலப்பிரச்சினை காரணமாக கால்நடைகள் இறப்பது உள்ளூர்ப் பொருளாதாரத்தை சிதைக்கிறது. இது கால்நடைக் கூட்டுறவுச் சங்கங்களின் சிதைவும் ஆகும்.

மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்/ கூட்டுறவாளர்களின் பிரச்சினைகள்

மட்டக்களப்பு – பொலநறுவை எல்லைப் பகுதியான தமிழ் பேசும் மக்களுக்கு சொந்தமான மயிலந்தனைமடு, மாதந்தனை மேய்ச்சல் தரைப் பகுதிகள் சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு வருகிறது. வனவளத் திணைக்களம், மகாவலி அபிவிருத்திச் சபை போன்ற அனைத்து கட்டமைப்புகளும் இங்குள்ள மேய்ச்சல் தரைக் காணிகளை அபகரிப்பதற்கான நடவடிக்கையில் உறுதியாக உள்ளன.

மட்டக்களப்பு கால்நடைக் கூட்டுறவுப் பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நிலத்தில் வெளியாட்கள் அத்துமீறிச் செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் மாடுகள் கொல்லப்பட்டன; நிலம் தீக்கிரையாக்கப்பட்டது. சுமார் 500,000 கால்நடைகள் மற்றும் எருமைகளை மேய்ச்சலுக்கு பாரம்பரியமாக பயன்படுத்திய நிலத்தை பிற மாவட்ட விவசாயிகள் ஆக்கிரமித்துள்ளதாக பாற் பண்ணையாளர்கள் கூறுகின்றனர். இப்பகுதி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ளதால் விவசாயிகள் தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்துகின்றனர். பெரும்பாலான பாற் பண்ணையாளர்கள், தங்கள் கால்நடைகளின் நலனுக்காக போராடும் கூட்டுறவு அமைப்புகளின் போராட்டம் இம் மாவட்ட மக்களின் போராட்டமாக இன்று உருமாறியுள்ளது.

விளைநிலங்கள் அருகி வருவதல் காரணமாக இப்பகுதியில் மோதல் ஏற்படுகிறது. இது கால்நடையாளர்களுக்கும் பாரம்பரிய விவசாயிகளுக்கும் இடையே பதட்டத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. கால்நடைப் பண்ணையாளர்கள், விளைநிலங்களை விரிவுபடுத்துவதற்குத் ஒரு தடையாகப் பார்க்கப்படுகின்றனர். 

பின்வருவன கூட்டுறவு விவசாயிகளின் கோரிக்கைகளாக அமைகின்றன: 

  1. கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
  2. அண்டை விவசாயிகளின் துன்புறுத்தல் மற்றும் வன்முறையில் இருந்து பாதுகாப்புக் கிடைக்க வேண்டும்.
  3. காணித் தகராறுகளில் அரசியற் தலையீடு நீக்கப்பட வேண்டும்.
  4. நிலையான விவசாய முறைகளுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் நிகழும் பருவநிலை மாற்றத்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்போர் பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர். நீடித்த வறட்சி மற்றும் கணிக்க முடியாத மழைப் பொழிவு ஆகியவை கால்நடைகளுக்கு புதிய மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் கிடைப்பதைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, கால்நடைகள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன. உணவுப் பற்றாக்குறையால் பால் உற்பத்தி குறைவதால், கூட்டுறவு  கால்நடை வளர்ப்போர் அன்றாட வாழ்க்கையை வாழச் சிரமப்படுகின்றனர்.

கீழே தரப்படும் தரவுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்புத் தொடர்பான பிரச்சினைகளையும், அதன் வழியான பொருளாதார வீழ்ச்சியையும் தெளிவாகப் படமிடுகிறது. 

கால்நடைக் கூட்டுறவு அமைப்புகள்மொத்தக் கால்நடைகள்இறப்பு – பசுக்கள்இறப்பு – எருமைகள்பொருளாதாரப் பெறுமதி
கால்நடை விவசாயிகள் கூட்டுறவுச் சங்கம், இலுப்பையடி8,5381674525904,000
கால்நடைப் பண்ணையாளர்கள் கூட்டுறவுச் சங்கம், கொம்மாந்துறை9,7443800117099,400,000
கால்நடைப் பண்ணையாளர்கள் கூட்டுறவுச் சங்கம், மயிலந்தனைமடு22,731372178190,040,000
கால்நடைப் பண்ணையாளர்கள் கூட்டுறவுச் சங்கம், பன்சேனை10,961196157250,660,000
கால்நடைப் பண்ணையாளர்கள் கூட்டுறவுச் சங்கம், ஏறாவூர்3,228694170159,940,000
மொத்தம்65,202118503218249,140,000

சுதந்திரத்தின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் கூட்டுறவுச் சங்கங்கள் முக்கிய பங்காற்றின. போருக்கு முந்தைய காலத்தில் உள்ளூர் உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றை கணிசமாக மேம்படுத்தின. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கூட்டுறவுகள் பிராந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45% இற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கின. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பங்கு கணிசமானது.

போரின் விளைவாக, கோறளைப்பற்று வடக்கு (வாகரை), கோறளைப்பற்று தெற்கு (கிரான்) உட்பட மாவட்டத்தின் புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் பின்தங்கிய பகுதிகளின் கூட்டுறவுச் சொத்துகள் பெருமளவு அழிந்தன. மக்களின் இடப்பெயர்வும் கூட்டுறவின் செயலிழப்பிற்குப் பங்காற்றியது. மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு மற்றும் பொரதீவுப்பற்று பகுதிகளில் கூட்டுறவின் அசைவியக்கம் முற்றாக முடங்கியது; தற்போதும் அதே நிலையே நீடிக்கிறது எனலாம். 

போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, கூட்டுறவுத் துறையானது அதன் கடந்த காலத்தை புதுப்பித்து, நிகழ்காலத்தில் நேர்மறையான தாக்கத்தை கொண்டுவரலாம் என கருதப்பட்டாலும் நடைமுறையில் ஒரு அசைவற்ற போக்குத்தான் நீடிக்கிறது. சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் துடிப்பான வலைப் பின்னல்களை உருவாக்கி கூட்டுறவுத் துறையை அபிவிருத்தி செய்யலாம் என்ற  எண்ணப்பாடுகள் இருந்தாலும் தற்போதைய சூழ்நிலைகள் மிகவும் முடங்கிய தன்மையையே காட்டுகின்றன. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிலப்பரப்பான மட்டக்களப்பு, அதன் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு கூட்டுறவுத் துறையை கணிசமாக நம்பியுள்ளது. எவ்வாறாயினும், கூட்டுறவுகள் தங்கள் முழுத் திறனை அடையவும், மாவட்டத்தின் பொருளாதாரத் திறனைக் கட்டவிழ்த்து விடவும் முறையான மற்றும் கவனமாகத் திட்டமிடப்பட்ட தலையீடுகள் அவசியம் தேவை. ஆனால், அதற்குரிய முன்னெடுப்புகள் பூச்சியமாகவே உள்ளன.

கூட்டுறவு அமைப்புகளின் கட்டமைப்புச் செயற்பாட்டுத் திறன் அபிவிருத்தி என்பது ஒரு சிக்கல் மிக்க, பல அக – புற சூழ்நிலைகளால் திரண்ட ஒரு கள நிலையில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இதற்காக, கூட்டுறவுத் துறையின் தற்போதைய நிலை பற்றிய முழுமையான ஒரு ஆய்வு தேவைப்படுகிறது. இம் முழுமையான பார்வையானது தற்போதைய அரசியல், பொருளாதார கள நிலைகளையும் உள்ளடக்க வேண்டும். கூட்டுறவில் இளம் சந்ததியினரின் பங்களிப்பு முழுமையாக அமைதல் வேண்டும். அதற்கு நிறுவனங்கள் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் கூட்டுறவுத் துறை முற்றாகச் சிதைந்து போகும் நிலைக்குத் தள்ளப்படுள்ளது. இது ஒரு கவனிக்கப்படாத துயரம். கால்நடைப் பண்ணையாளர்கள் மீதான கவனம், கூட்டுறவுத் துறை பற்றிய கவனமாக இல்லை. இம் மாகாணத்தின் கூட்டுறவுப் பண்ணையாளர்களின் பிரச்சினை, நில இழப்பு என்னும் பார்வையிலிருந்து அகன்று செல்ல வேண்டிய தேவையுள்ளது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கூட்டுறவு மீட்சிக்கு ஒரு நீண்ட கால ‘மினி மார்ஷல்’ தேவை. போர் எல்லாவற்றையும் கரைத்து, முடக்கி விட்டது. நிதி வழங்குவது, ஒரு சில பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது என்பன சில சங்கங்களின் தேவைகளுக்குத் தீனி போடலாம். ஆனால் அவை கூட்டுறவின் முழுமையான பலத்தைக் கொண்டுவராது. சமகால கள நெருக்கடிகள் உள்ளிருந்து உணரப்பட வேண்டும்; மாவட்ட ரீதியாகப் பார்க்கப்பட வேண்டும்; ஆய்வு ரீதியாக ஆராயப்பட வேண்டும். இம் முன்னெடுப்புகள் கூட்டுறவு அமைப்புகளின் கட்டமைப்புச் செயற்பாட்டுத் திறன் அபிவிருத்திக்கு உதவியாக அமையும். 

உசாத்துணை

  1. Batticalao District Profile, 2020, Batticaloa District Planning Division. 
  2. Batticaloa Dairy Farmers Face Violence and Threats over Grazing Land, https://groundviews.org/2023/10/09/batticaloa-dairy-farmers-face-violence-and-threats-over-grazing-land/; accessed on 23 August 2024. 
  3. Cattle farmers’ agitation continues in Batti, https://www.themorning.lk/articles/uJvwQ66Q8pfRzxbVQUcc, Accessed 23 August 2024. 
  4. Data from the Batticaloa District ACCD officer, Batticaloa 2024. Profile of Batticaloa Thrift and Credit Cooperative Societies Union; accessed on August 20024. 
  5. Eastern Province Thrift and Credit Coopertive Societies , Initial Assessment Report , 2023, Supported by CSNHA, Netherlands.
  6. Farmers furry rages, Mailaththamadu dairy farmers want speedy solution to grazing land issue, https://www.dailymirror.lk/print/news-features/Farmers-furry-rages/131-280491
  7. Field Reports, Consultations with the Dairy farmers in Chenkalady. 
  8. Impact of Environmental Factors on Trend of Milk Production: A Study Based in Batticaloa District, Sri Lanka , Santhirakumar and Narmilan. Department of Economics and Statistics, Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka . Department of Biosystems Technology, Faculty of Technology, South Eastern University of SriLanka. https://www.researchgate.net/publication/344283572_Impact_of_Environmental_Factors_on_Trend_of_Milk_Production_A_Study_Based_in_Batticaloa_District_Sri_Lanka
  9. Injunction order against dairy farmers in Batticaloa, Sunday Times, 7 October 2023, https://sundaytimes.lk/online/news-online/Injunction-order-against-dairy-farmers-in-Batticaloa/2-1143467.
  10. Training Report, Capacity Building Training on Promoting the Cooperative Culture, cooperative Business Models and Systems, FEDERATION OF INSTITUTIONS FOR RURAL MANAGEMENT, Vavuniya, February 2023).

ஒலிவடிவில் கேட்க

4082 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)