ஹௌ மக்களும் தமிழ் மக்களும் (பொ.ஆ 300 - 900) - பகுதி 1
Arts
30 நிமிட வாசிப்பு

ஹௌ மக்களும் தமிழ் மக்களும் (பொ.ஆ 300 – 900) – பகுதி 1

October 5, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

ஆதி வரலாற்றுக் காலத்துக்குப் பின் அடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து இரு பிரதான இனக் குழுக்களின் ஆக்கம் நடைபெற்றது. பொ.ஆ. 300க்கும், 900க்கும் இடையில் மிகவும் தெளிவாகத் தனித்துவப் பண்புகளுடன் இவை பரிணாம வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தன எனலாம். முதல் தடவையாக இக் காலத்துக் கல்வெட்டுகளில் சிங்கள மொழியின் பழைய வடிவமாகிய ஹௌ (எளு) மொழியில் சிங்கள இனக் குழுவுக்கு ஹௌ என்ற பெயரும் தமிழ் இனக் குழுவுக்கு தெமௌ என்ற பெயரும் காணப்படுகின்றன. அதே போல தமிழ் நாட்டுக் கல்வெட்டுச் சான்று மூலம் சிங்களர் என்ற பெயர் தமிழில் வழங்கியதையும் அறியலாம். இதே காலத்தில் இலங்கையில் எழுத்து மொழியாக இருந்த பிராகிருதம் மாற்றமடைந்து பழைய சிங்கள மொழி (ஹௌ) தோன்றியிருந்தது. இம் மொழியும் தமிழ் மொழியும் இக்காலப் பகுதியில் இலங்கையில் கல்வெட்டுக்களிலே பயன்படுத்தப்பட்டன. இவ்வாறாக, மொழிப் பரிணாம வளர்ச்சியும் இனக் குழுப் பரிணாம வளர்ச்சியும் மேலும் முன்னேற்றம் அடைந்தன.

சிங்கள மொழியின் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்யத் தொடர்ச்சியாக ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஆனால், இதேபோன்று, சிங்கள இனக்குழு மற்றும் தமிழ் இனக் குழு ஆகியவற்றின் வளர்ச்சியைப் படிப்படியாகக் காட்டக் கூடிய வகையில் சான்றுகள் வெளிப்படுத்தப்படவில்லை எனலாம். சிறப்பாக, அநுராதபுர அரசுக்கு வெளியே அதிகம் கல்வெட்டுச் சான்றோ இலக்கியச் சான்றோ வரலாற்றை ஆய்வு செய்யக் கிடைக்கவில்லை.

தமிழர் இன்று பெரும்பாலும் வாழும் இடங்களாகிய வடக்கு இலங்கையிலும் கிழக்கு இலங்கையிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியப் போதிய சான்றுகள் இல்லை. அப்பிரதேசங்களைப் பொறுத்தமட்டில் இக்காலப்பகுதி ஒரு நீண்ட வரலாற்று இரவு எனலாம். ஆனாலும் இந்த இருள் சூழ்ந்த காலம்தான் இலங்கைத் தமிழர் ஆக்கம் பெற்ற வரலாற்றில் மிகவும் முக்கியமான காலம். ஏனெனில், இக்காலம் தொடங்கும் கட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த தமிழ் இனக் குழுவைப் பற்றித் தெளிவாக எதுவும் அறிய முடியாத நிலை காணப்பட்டது. இக் காலம் முடிவுறும் கட்டத்தில் இலங்கையின் தமிழ் இனக்குழு ஆக்கம் பெற்று வெளிப்படும் நிலை காணப்படுகின்றது.

ஆதி வரலாற்றுக் காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்த பல்வேறு இனக் குழுக்கள் மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் தெற்கு இலங்கையில் சிங்கள இனக் குழுவினுள் கலந்து போக, வடக்கில் கூடுதலாகத் தமிழ் இனக் குழுவினுள் கலந்து போகும் போக்குக் காணப்பட்டிருக்கும். வடக்கில் தமிழ்மொழியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கும். ஆனாலும் தொடக்கத்தில் சமயத்தைப் பொறுத்த மட்டில் பௌத்தம் மேலோங்கியிருந்தது எனலாம். இந்நிலை ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் மாறத் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டளவில் சைவத்தின் செல்வாக்கு மேலோங்கி வளரத் தொடங்கியிருக்கும். இத்தகைய போக்குகள் இலங்கையில் உருவாகிய தமிழ் இனக் குழுவுக்குத் தமிழ் மொழியும் சைவ மதமும் முக்கியப் பண்புகளாக இருக்கச் செய்தன. இதேபோல, தெற்கில் உருவாகிய சிங்கள இனக் குழுவுக்குச் சிங்கள மொழியும் பௌத்த மதமும் முக்கிய பண்புகளாயின. இலங்கையின் இருபெரும் இனக் குழுக்களின் ஆக்கத்தில் மொழியும் மதமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

பல்லினக் கலப்பு

இந்த அத்தியாயத்தில் எடுத்துக் கொள்ளப்படும் காலப் பகுதியில் இலங்கையில் ஒரு தமிழ் இனக் குழுவின் பரிணாமம் பல குழுக்களின் சேர்க்கையால் நடைபெற்றது எனலாம். இப்படி ஒன்றிணைந்த குழுக்களுள் முக்கியமான ஒரு குழு நாகர் என்ற பெயரைக் கொண்டிருந்தோராவர். இவர்கள் ஒரு மர்மமான இனக் குழுவினர். இன்னொரு குழு ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்த தெலுங்குக் குழுவினர் என்று கருத இடமுண்டு. இவர்களைப் போன்று கேரளத்திலிருந்தும் கேரளர் (மலையாளத்தவர்) வந்திருக்கலாம் என்று கொள்வதற்கும் இடமுண்டு. குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களுடைய தேசவழமைச் சட்டத்தில் கேரளத்து மருமக்கள் தாயச் சட்டத்தின் பண்புகள் இருப்பதாலும் வேறு வழக்க முறைகள் கேரளத்து முறைகளை ஒத்திருப்பதாலும் இவ்வாறு கருத இடமுண்டு. வடக்கில் மிகவும் முக்கியமான இனக் குழுவாகத் தமிழ் பேசும் குழு ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதையும் ஊகிக்கலாம். அவ்வாறு இக்குழு ஆதிக்கத்துடன் இருந்தமையாலேதான் ஒன்பதாம் நூற்றாண்டளவில் ஓரளவு தெளிவான சான்றுகள் கிடைக்கத் தொடங்க, தமிழ் இனக் குழு அங்கு ஏனைய குழுக்களை உள்ளடக்கி எழுச்சி பெறுவதைக் காண முடிகின்றது. இவ்வாறு உள்ளடக்கப்பட்ட பிற இனக் குழுக்களுள் ஹௌ (சிங்கள) இனக் குழுவைச் சேர்ந்தோரும் இருந்திருப்பர்.

இக் காலப்பகுதியில் வடக்கு இலங்கையில் தமிழ் இனக்குழு வலுப்பெறுவதற்குப் பல காரணிகள் உதவின. அநுராதபுரத்தின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல இனக் குழுக்களை ஒரு பண்பாட்டுக்குள் இணைக்கும் போக்கு நடைபெற்றாலும், அப் போக்கு வடக்கிலும் பரவுவதற்கு இக் காரணிகள் தடையாய் இருந்தன. அவ்வாறு செயற்பட்ட காரணிகளை மூன்று பிரிவுகளில் அடக்கலாம்: அரசியல் காரணிகள், பொருளியல் காரணிகள் மற்றும் சமயக் காரணிகள்.

அரசியல் காரணிகளுள் ஒன்று தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாகவும், தென்னிந்தியாவிலிருந்து பொதுவாகவும் படை திரட்டிப் போராளிகளை இலங்கையைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இக்காலப் பகுதி முழுவதிலும் இலங்கைக்கு கொண்டு சென்றமையாகும். இன்னொன்று இலங்கையின் அரசுகளில் ஆட்சி நடத்தியோர் தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்புத் தேவைகளுக்காகப் படையினரை வேலைக்கு அமர்த்தியிருந்தமையாகும். இது தொடர்பாக, அநுராதபுரத்து மன்னர்கள் தமிழ் மெய்க்காப்பாளர்களை வேலைக்கு அமர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

பொருளியல் காரணியாகக் குறிப்பிடத்தக்கது தென்னிந்திய வணிக கணங்களின் நடவடிக்கைகளாகும். பல்லவப் பேரரசின் எழுச்சியின் விளைவாகக் கடல் வணிகம் பெரிதும் வளர்ச்சி பெற்று இலங்கை மற்றும் தென் கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியபோது தென்னிந்திய வணிகர் இலங்கையின் துறைமுகப் பட்டினங்களிலும் உள்ளூர் வர்த்தக மையங்களிலும் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். வணிக கணங்களுடன் பல்வேறு தொழில் புரிவோரும் கூடவே சென்றனர். தமிழ் நாட்டாரையும் பிற தென்னிந்தியரையும் இலங்கைக்குச் செல்வதற்குத் தூண்டிய இன்னொரு பொருளியல் காரணி நீர்ப்பாசன வசதிகள் தொடர்பாக ஏற்பட்ட வளர்ச்சியாகும்.

சமயக் காரணியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்ற பக்தி இயக்கத்தின் விளைவாகப் பௌத்தர்கள் இலங்கைக்குப் புலம் பெயரத் தூண்டிய காரணியைக் குறிப்பிடலாம். பல நூற்றாண்டுகளாக இலங்கைப் பௌத்த சங்கத்தார் தமிழ் நாட்டு விகாரைகளுக்குச் செல்வதும், தமிழ்நாட்டுப் பௌத்த சங்கத்தார் இலங்கையிலிருந்த விகாரைகளுக்குச் செல்வதும் வழக்கமாக இருந்தது. ஆனால் ஐந்தாம் நூற்றாண்டின் பின் பௌத்தம் தமிழ்நாட்டில் வீழ்ச்சியடையத் தொடங்க பெளத்த சங்கத்தார் மட்டுமன்றி பௌத்த பொதுமக்களும் இலங்கையில் அடைக்கலம் பெற்றிருப்பர்.

நாகர்

பொ.ஆ. 300 அளவில், இன்றைய யாழ்ப்பாண மாவட்டம் அமைந்துள்ள வடபாகம், குறிப்பாக யாழ்ப்பாணத் தீபகற்பம், தொடர்ந்து நாகதீப என்ற பெயரைப் பாளி நூல்களில் பெற்றிருந்தது. இங்கு கிடைக்கும் பழைய பொன்னேடு ஒன்றில் இப்பெயர் நகதிவ என்ற பிராகிருத வடிவத்தில் உள்ளது. இதே காலமளவில் தமிழ் இலக்கியத்தில் நாகநாடு என்ற ஓர் இடம் தமிழ்நாட்டுக்கு அப்பால் கடல் கடந்து சென்றதும் அடையக் கூடிய இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாக நாட்டில் நாகபுரம் என்ற நகரத்தில் ஆட்சி நடத்தியோர் சமஸ்கிருதப் பெயர்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். பாளி இலக்கியத்தில் நாகதீப என்ற இடத்தை ஆண்ட மன்னன் முன்னர் குறிப்பிடப்பட்டது போல் தீபராஜ என்ற விருதைப் பெற்றிருப்பதைக் காணலாம். இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கிரேக்க, உரோம நூல்களில் நாகடீப என்ற ஓர் இடம் இலங்கையின் முக்கிய கரையோரப் பட்டினங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கிரேக்க – உரோமர் வரைந்த தேசப் படத்தில் இவ்விடம் இலங்கையின் வடக்கில் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு பாளி, பிராகிருதம், தமிழ் மற்றும் கிரேக்க மூலாதாரங்களில் குறிப்பிடப்படும் நாகதீவு அல்லது நாகநாடு என்று பொருள்படும் இடம் இலங்கையின் வடக்கெல்லையில் இருந்த இடம் என்பதை அறியலாம்.

பழைய பெளத்த கதைகளை அடிப்படையாகக் கொண்டு பாளி வரலாற்று நூல்களும் தமிழ் இலக்கியமும் நாகதீவில் நாகர் என்போர் வாழ்ந்தனர் என்பதை அறிவிக்கின்றன. நாக தீவு என்ற இடம் நாகர் என்ற ஓர் இனக் குழுவினர் வாழ்ந்த இடம் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். இந்த நாகர் ஆதி இரும்புக் காலத்தில் இலங்கையின் பல பாகங்களில், குறிப்பாக வடக்கில் வாழ்ந்த மக்கள் என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

நாகர் இலங்கையில் மட்டுமின்றித் தென்னிந்தியாவிலும் வாழ்ந்தனர். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும். ஆதி வரலாற்றுக் காலத்தில் தாய்மொழி மாற்றம் ஏற்படத் தொடங்கிப் பல்வேறு சிறு இனக் குழுக்கள் பேரினக் குழுக்களுடன் கலக்கின்ற போக்குக் காணப்பட்டது. நாகர் என்ற இனக் குழுவினர் தென்னிந்தியா, இலங்கைப் பிராந்தியத்தில் ஆக்கம் பெறத் தொடங்கிய பேரினக் குழுக்களுடன் கலக்கத் தொடங்கினர். நாகர் பேசிய மொழி வழக்கற்றுப் போயிற்று. தமிழ்நாட்டில் நாகர், தமிழ் இனக் குழுவுள் அடங்கினர். இலங்கையில் அனுராதபுரத்திலும் பிற தென் பாகங்களிலும் உருவாகிக் கொண்டிருந்த, பிராகிருத மொழியைத் தழுவிய, ஹெள (இள) இனக் குழுவுள் நாகருள் ஒரு சாரார் கலந்து கொள்ள, பிற நாகர் வடக்கில் தமிழ் இனக் குழுவுள் கலந்து கொண்டனர். கேரளத்தில் வாழ்ந்த நாகர், அங்கு பின்னர் மலையாள மொழி பேசும் சமூகப் பிரிவாகிய நாயர் என்ற பிரிவாகப் பரிணாமம் பெற்றுக் கேரள இனக் குழுவுள் அடங்கினர் என்ற ஒரு கருத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஆதிக்கம் பெற்று வளரத் தொடங்கிய பேரினங்களுள் நாகர் கலக்கத் தொடங்கினர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இலக்கியச் சான்றும் கல்வெட்டுச் சான்றும் உள்ளன. இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் உயர் குழாத்தைச் சேர்ந்த பலர் நாகர் என்ற பொருள்படும் பெயராகிய நக என்ற பெயரைப் பெற்றோராய், பிராகிருத மொழியைப் பயன்படுத்துவோராய்க் காணப்படுகின்றனர். இதேபோல அநுராதபுரத்தில் ஆட்சி நடத்திய பல மன்னர்கள் நாக என்ற பெயரைப் பெற்றிருந்தனர் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் நாகர் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆனால், பிராகிருத மொழியைப் பயன்படுத்திய பேரினக் குழுவுள் கலந்து விட்டனர் என்று கொள்ளக் கிடக்கின்றது.

இதேபோன்று, தமிழ்நாட்டில் சங்க இலக்கியத்தில் நாகர் என்ற பெயரையுடைய பல புலவர்கள் தமிழில் செய்யுள்கள் இயற்றியதைக் காண்கின்றோம். இவர்கள் தமிழர் இனக் குழுவுள் அக் காலகட்டமளவில் கலந்து விட்டனர் எனலாம்.

இலங்கையில் ஆதி வரலாற்றுக் காலத்தில் நாக தீவில் வாழ்ந்த நாகர் தமிழ் மொழியின் செல்வாக்கால் அம் மொழியைத் தம் தாய்மொழியாக்கி படிப்படியாகத் தமிழ் இனக்குழுவுள் கலந்தனர் என்பதில் ஐயமில்லை. ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் நாகர், ஹௌ இனக் குழுவுடனும் தமிழர் இனக் குழுவுடனும் கலந்து விட்டனர் எனலாம். ஒன்பதாம் நூற்றாண்டின் பின் நாகர் பற்றிய தகவல்கள் இலங்கையில் வரலாற்று மூலங்களில் இல்லை. பத்தாம் நூற்றாண்டில் சோழர் படையெடுப்புகள் நடைபெற்ற போது வடக்கில் தமிழ் இனக் குழு மேலாதிக்கம் பெற்றிருந்தமை நாகரும் பிற இனக் குழுக்களைச் சேர்ந்தோரும் தமிழர் இனக் குழுவுள் கலந்து விட்டதைக் காட்டுகின்றது. 

தென்னிந்தியப் பின்னணி

இலங்கையின் தமிழ் இனக் குழுவின் வளர்ச்சிக்கு உதவிய அரசியல், பொருளியல் மற்றும் சமயக் காரணிகளை விளக்குவதற்கு தென்னிந்தியப் பின்னணியை அறிவது அவசியமாகும். மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதி தமிழ்நாட்டின் வரலாற்றில் ஓர் இருள் சூழ்ந்த காலமாகப் பொதுவாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இக் காலத்து அரசியல் நிகழ்ச்சிகளை அறியப் போதிய சான்றுகள் இல்லை. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டில் சிறப்பிடம் பெற்றிருந்த சோழரும் பாண்டியரும் இக் காலப்பகுதியில் ஆட்சி செலுத்தியதுக்குச் சான்றில்லை. அவ் வம்சங்களைக் களப்பிரர் என்போர் வெற்றி கொண்டு, தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தினர் எனப் பாளி இலக்கியத்திலும் கல்வெட்டிலும் வரும் சில சான்றுகள் உதவியுடன் ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி வரலாற்றுக் காலத்தில் சிறப்பிடம் பெற்றிருந்த சோழரும் பாண்டியரும் இக்காலப் பகுதியில் ஆட்சியிழந்து மறைந்தனர் என்பது தற்பொழுதுள்ள சான்றுகளின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. அவர்கள் ஆட்சி நடத்திய இடங்களில் களப்பிரர் என்போரும் பிற ஆட்சியாளரும் ஆதிக்கம் பெற்றிருக்கலாம். எனினும், இக் காரணத்துக்காக நாட்டில் அரசியல் உறுதியின்மையோ, குழப்பமோ காணப்பட்டது என்று கூறுவது பொருத்தமாகத் தெரியவில்லை. ஆதி வரலாற்றுக் காலத்தில் சோழரும் பாண்டியரும் தத்தம் ஆதிக்கத்தையும் ஆள் புலத்தையும் பெருக்கிக் கொள்ளப் பல போர்களில் ஈடுபட்டனர். அக்காலத்து அரசியல் நிலைமைக்கும் மூன்றாம் நூற்றாண்டின் பின் ஆறாம் நூற்றாண்டு வரை காணப்பட்ட நிலைமைக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருந்தது என்று கூற முடியாது. சேர, சோழ, பாண்டியர் முடியுடை மூவேந்தர் எனச் சங்க காலப் புலவர்களால் போற்றப்பட்டதன் விளைவாக அவர்கள் ஆண்ட காலம் ஒரு பொற்காலம் என்ற கருத்து உருவாகியதனால், அம் மன்னர்கள் ஆட்சி மறைந்ததும் அரசியலில் குழப்பம் ஏற்பட்டது என்ற கருத்துத் தோன்றியது எனலாம்.

களப்பிரர் ஆட்சி

தமிழ்நாட்டில் சோழரையும் பாண்டியரையும் வென்று ஆதிக்கத்தை நிலைநாட்டியோர் யார் என்பது இலகுவில் அறியக் கூடிய விஷயமாகாது. இப்படி வெற்றி பெற்றோர் தனியொரு வம்சத்தையோ இனக் குழுவையோ சேர்ந்தவர்கள் என்றும் கொள்ள முடியாது. களப்பிரர் இவர்களுள் ஒரு பிரிவினராக இருக்கலாம். இவர்கள் யாராக இருந்தாலும், இவர்கள் வெற்றியால் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி நடத்திய பழைய ஆட்சிக் குடும்பங்களைச் சேர்ந்தோர் ஆதிக்கத்தை இழந்தனர் எனத் தோன்றுகிறது. ஆதிக்கத்தை இழந்தாலும், இக் குடும்பங்களைச் சேர்ந்த பலர் தத்தம் நகரங்களில் இருந்திருக்கலாம். ஆனால் சிலர் வேறிடங்களுக்குப் புலம் பெயர்ந்தனர் என்று கொள்ள இடமுண்டு. சிலர் தமிழ்நாட்டுக்கு வடக்கே செல்ல வேறு சிலர் தெற்கே இலங்கைக்குச் சென்றனர் எனலாம்.

அரசியற் குழப்பங்கள் ஏற்படும் காலத்தில் ஓர் அரசில் ஆதிக்கம் இழந்தோர் இன்னோர் அரசில் அடைக்கலம் பெறுவது தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியத்தில் பொ.ஆ. தொடக்கத்திலிருந்தே காணக் கூடியதாய் உள்ளது. இதற்கு அமைய, சோழ நாட்டில் ஆதிக்கம் இழந்த சிலர் வடக்கே ஆந்திரப் பகுதிக்குச் சென்று அடைக்கலம் பெற்றனர் என்பது சில பிற்பட்ட தெலுங்கு மூலாதாரங்கள் வாயிலாக அறியக் கிடக்கின்றது. இவ்வாறே பாண்டியர் குலத்தைச் சேர்ந்த சிலர் இலங்கைக்குச் சென்றனர் என்று கொள்ள முடியும். ஐந்தாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ்த் தலைவர்களுள் முதலாவதாகக் குறிப்பிடப்படுபவன் பண்டு என்ற பெயரைக் கொண்டுள்ளான்.

இது பாளியில் பாண்டியரைக் குறிப்பதாகும். தமிழ்நாட்டில் மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் வலிமை வாய்ந்த அரசுகள் எழுச்சி பெறவில்லை எனலாம். இதனால் தமிழ் அரசுகளின் படையெடுப்புகள் எதுவும் இலங்கையை நோக்கி நடத்தப்படவில்லை.

ஆறாம் நூற்றாண்டின் பின் தமிழ்நாட்டின் அரசியலில் முக்கியமான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன. முதல் தடவையாகப் பேரரசுகள் என்று வர்ணிக்கத்தக்க இரண்டு அரசுகள் தமிழ்நாட்டின் பெரும் பாகத்தை உள்ளடக்கி எழுச்சி பெற்றன. முதலாவது, தொண்டை மண்டலத்தில் எழுச்சி பெற்ற பல்லவப் பேரரசு. மற்றது பாண்டியப் பேரரசு. இவையிரண்டும் தங்கள் ஆதிக்கப் படர்ச்சியின் போது இலங்கைக்கும் படையெடுப்பு நடத்தின. இதனால் இலங்கையில் தமிழ் இனக் குழுவின் வளர்ச்சியில் இந்த அரசியல் காரணி ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

பௌத்த – சமண மதங்களின் எழுச்சி

இக் காலப் பகுதியில் தென்னிந்தியாவின், குறிப்பாகத் தமிழ்நாட்டின், சமய நிலை இலங்கை வரலாற்றை விளங்கிக் கொள்ள முக்கியமானது. மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் பௌத்தமும் சமணமும் பெரும் வளர்ச்சி பெற்றிருந்தன. ஆறாம் நூற்றாண்டில் இவை வீழ்ச்சியடைய, சைவமும் வைணவமும் மேலோங்கி எழுந்தன. இந்நிகழ்ச்சிகள் இலங்கையில் தமிழ் இனக் குழு வளர்ச்சி பெற்ற வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் காரணிகளாம்.

ஆந்திரப் பிரதேசத்தில், சிறப்பாக நாகார்ஜுனக் கொண்டா மற்றும் அமராவதி ஆகிய இடங்களில், பௌத்தம் பொ.ஆ.மு. காலத்திலிருந்தே வளர்ச்சி பெற்று பொ.ஆ. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் உச்ச நிலையடைந்திருந்தது. தமிழ்நாட்டில் பொ.ஆ.மு. காலத்தில் பௌத்தமும் சமணமும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டின் பின்னரே அவை பெரிதும் வளர்ச்சியுற்றன. காஞ்சி, மதுரை, உறையூர் மற்றும் காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்கள் இச் சமயங்கள் சிறப்புற்ற மையங்களாக எழுந்தன. இவ்விடங்கள் பாளி மொழி வளர்ச்சிக்கு உதவிய மையங்களாகவும் அமைந்தன. இக்காலப் பகுதியில் தமிழ்நாடு தனது தலைசிறந்த அறிஞர்களைப் பௌத்த உலகுக்கு அளித்துப் பௌத்த மத வளர்ச்சிக்கு உதவியது. இக் காலப்பகுதியிலேயே பிரசித்தி பெற்ற தமிழ்ப் பெளத்த காவியங்களாகிய மணிமேகலையும் குண்டலகேசியும் படைக்கப்பட்டன. அவற்றைப் போன்று தமிழ்ச் சமண காவியமாகிய சிலப்பதிகாரமும் இக்காலத்தில் படைக்கப்பட்டதே. கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை ஆகியவற்றைப் பொறுத்து ஆந்திரப் பிரதேசத்தில் பௌத்தக் கட்டிடக் கலை, சிற்பக் கலை சிறப்பான வளர்ச்சி பெற்று இலங்கையிலும் தென்கிழக்காசியாவிலும் செல்வாக்குப் பெற்றன. 

பொருளியல் காரணிகள் – தென்னந்திய வணிக கணங்கள்

ஆறாம் நூற்றாண்டின் பின் இலங்கையில் தமிழ் இனக் குழுவின் வளர்ச்சியைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் பெறும் ஒரு பொருளியல் காரணி தென்னிந்திய வணிக கணங்களின் எழுச்சியாகும். பல்லவப் பேரரசின் வளர்ச்சியுடன் கடல் வணிகம் துரிதமாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. இதன் விளைவாக முன்னர் இல்லாத அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகளில் தென்னிந்திய வணிகர்கள் ஈடுபட்டதன் விளைவாகத் தென்கிழக்காசியாவுடனும் மேற்காசியாவுடனும் நெருங்கிய வர்த்தக உறவுகள் ஏற்பட்டதுடன், வலிமை வாய்ந்த வணிக கணங்களும் தோன்றின. இவை இலங்கையிலும் முக்கிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

நீர்ப்பாசனவியல் வளர்ச்சி

இக்காலப்பகுதியில் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் மிகவும் வளர்ச்சி பெற்ற ஒரு துறையாகக் காணப்படுவது நீர்ப்பாசனவியல் துறையாகும். பொ.ஆ.மு. நூற்றாண்டுகளில் சிறிய அளவில் குளங்கள் மற்றும் கால்வாய்கள் ஆகியவற்றை அமைத்து விவசாயம் நடத்திய நிலையிலிருந்து படிப்படியாகப் பெரும் குளங்கள், அணைகள் மற்றும் நீண்ட கால்வாய்கள் ஆகியவற்றை அமைக்கும் அளவுக்கு இக்காலப் பகுதியில் நீர்ப்பாசனம் தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியத்தில் ஒரு பொது வளர்ச்சியாகக் காணப்பட்டது. இத்தகைய வளர்ச்சிக்குத் தென்னிந்தியத் தொழில்நுட்பமும் இலங்கைத் தொழில்நுட்பமும் கருத்துப் பரிமாறலில் ஈடுபட்டதுடன் இரு நிலப் பகுதிகளிலிருந்தும் வேலையாட்களும் விற்பன்னர்களும் சென்று வந்தனர் என்றும் கொள்ள முடியும். இதன் ஒரு விளைவாக இலங்கையில் வளர்ச்சி பெற்ற தமிழ் இனக்குழு மேலும் வலுப் பெற்றது.

அநுராதபுர அரசில் தமிழர் ஆட்சி

ஏழாம் நூற்றாண்டில் பல்லவ அரசும் பாண்டிய அரசும் எழுச்சி பெறும் வரை இலங்கையின் அரசியல் தென்னிந்திய அரசியற் சம்பவங்களினால் பாரதூரமாகப் பாதிக்கப்படவில்லை. முன்னர் போல, தமிழ்நாட்டிலிருந்து சிலர் படையெடுத்து வந்து அநுராதபுரத்தில் ஆட்சியைக் கைப்பற்றினர். அநுராதபுரத்திலிருந்து சிலர் தென்னிந்தியாவுக்குச் சென்று படை திரட்டி வந்து ஆட்சியைக் கைப்பற்ற முயன்றனர். பொ.ஆ. 300க்கும் 900க்கும் இடையில் குறைந்தது ஒன்பது தடவையாவது இவ்வாறு அநுராதபுரத்து இளவரசர்கள் தென்னிந்தியாவுக்கு உதவி பெறச் சென்று படைகளுடன் வந்தனர் எனப் பாளி வரலாற்று நூல்கள் வாயிலாக அறியலாம். இவை மட்டுமின்றி, தமிழ்நாட்டு அரச குடும்பங்களில் சில சிங்கள அரசர்கள் மணம் முடித்து அரசியரை அழைத்திருந்தனர் என்றும் அறிய முடிகின்றது. இத்தகைய அரசியல் தொடர்புகள் அநுராதபுரத்தில் இருந்த தமிழர் செல்வாக்குத் தொடர்ந்தும் வலுவுடன் இருக்க உதவின.

ஐந்தாம் நூற்றாண்டின் முற்பாதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நோக்கினால் தமிழர் செல்வாக்கு எந்தளவுக்கு அநுராதபுரத்தின் அரச சபையில் வளர்ந்திருந்தது என்பதைக் காணலாம். அநுராதபுரத்தின் மன்னனாக 406 இல் மஹாநாம என்பவன் பதவியேற்றான். அவனுடைய அரசியருள் ஒருத்தி தமிழ்ப் பெண். இவ்வாறு ஒரு தமிழ்ப் பெண்ணை மணம் முடித்தமைக்கு அம்மன்னன் தமிழ் உயர்குழாத்துக் குடும்பங்களுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தமை அல்லது தமிழ்நாட்டு அரச குடும்பம் ஒன்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமை காரணமாகலாம். எவ்வாறாயினும், மன்னனுடைய தமிழ் அரசி பெற்றிருந்த செல்வாக்கும், அரச சபையில் தமிழ் உயர் குழாத்தினர் பெற்றிருந்த செல்வாக்கும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்க முடியும் என்பதையும் தமிழ், சிங்கள வேறுபாடு இல்லாத அரசியல் நிலை காணப்பட்டது என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னன் இறந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சிகள் அமைகின்றன.

மஹாநாம மன்னன் 428 இல் இறந்தபோது புதிய மன்னனாகப் பதவியேற்றவன் தமிழ் அரசிக்குப் பிறந்த சொத்திஸேனன் என்பவன். ஆனால் அவன் ஆட்சியேற்றதும் அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்து, சொத்திஸேனன் கொல்லப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக மூன்று மன்னர்கள் ஓராண்டுக் காலத்தில் பதவியேற்பதைக் காணலாம். இக் குழப்ப நிலையில் பண்டு என்ற ஒருவன் ஆட்சியைக் கைப்பற்றி அநுராதபுரத்தின் மன்னனாக ஆண்டான் என்று பாளி வரலாற்று நூல்களால் அறிகின்றோம்.

பாளி மொழியில் பண்டு என்ற பெயர் பாண்டியரைக் குறிக்கும். ஆகவே, இவ்வாறு ஆட்சி பெற்றவன் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவன் என ஊகிக்க இடமுண்டு. இக் காலத்துத் தமிழ் நாட்டு அரசியல் பின்னணியை நோக்கினால், அங்கு களப்பிரர் என்ற குழுவினர் பாண்டி நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிப் பாண்டியரை ஆதிக்கத்திலிருந்து நீக்கினர் என்று அறியக் கிடக்கின்றது. இச் சூழ்நிலையில் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த சிலர் அநுராதபுரத்துக்கு வந்திருக்கலாம். மஹாநாம மன்னனின் தமிழ் அரசி பாண்டிய வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்திருந்தால், அத் தொடர்பாலும் பாண்டிய வம்சத்தவர் அநுராதபுரத்தில் ஆட்சிபெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கலாம். எது எவ்வாறாயினும் 429 அளவில் தமிழ் மன்னன் ஒருவனுடைய ஆட்சி தொடங்கியது என்பதை வரலாற்று மூலாதாரங்கள் எடுத்துரைக்கின்றன.

இப் பாண்டிய மன்னனும் அவனுடைய வழித்தோன்றல்களும் அடுத்த கால் நூற்றாண்டு காலமாக (439 – 455) அநுராதபுரத்தை ஆண்டனர். இம் மன்னர்கள் சிங்கள மன்னர்கள் போலவே அநுராதபுரத்து மரபுகளின்படி ஆண்டனர் எனத் தெரிகின்றது. இவர்கள் பௌத்தர்களாகவும், பௌத்தத்தை ஆதரிப்போராகவும், ஹௌ (ஆதிச் சிங்கள) மொழியைத் தம் கல்வெட்டுகளில் பயன்படுத்தியோராகவும் ஆண்டனர் என்பதற்குச் சான்றுண்டு. கால் நூற்றாண்டுக் காலம் ஆட்சி நடத்த முடிந்தமை அவர்களது ஆட்சி ஏற்றுக் கொள்ளப்பட்டதற்குச் சான்றாகும்.

முதலில் ஆண்ட பண்டு மன்னன் பற்றி அறிய அதிக சான்றில்லை. அவனுடைய உண்மைப் பெயர் கூடப் பேணப்படவில்லை. அவன் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய பின் அவனுடைய மகன் பதவியேற்றான். இவன் பெயர் பாளியில் பாரிந்த எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஹெள மொழியில் இது பரிததேவ எனக் காணப்படுகிறது. இப்பெயரை சமஸ்கிருதத்தில் பாரீந்திர தேவ எனவும், தமிழில் பாரிந்திர தேவன் எனவும் கூறலாம். இவன் ஒரு பௌளத்தனாக இருந்தான். இவன் பௌத்த பள்ளி ஒன்றுக்கு அளித்த தானம் பற்றிய செய்தி ஒரு ஹௌ மொழிக் கல்வெட்டில் உள்ளது. இவன் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்தான். அவனுக்குப் பின் அவன் தம்பி இளம் பாரிந்திரன்/ பாரி தேவன் (ஹௌ மொழியில் – பரிதேவ) பதவியேற்றான்.

இளம் பாரிந்திரன் தமையனைப் போன்று ஒரு பௌத்தனாக ஆட்சி நடத்தியதுடன், முன் ஆண்ட சிங்கள மன்னர் கொண்டிருந்த விருதாகிய ‘புத தஸ’ (புத்ததாசன்) என்ற விருதையும் ஏற்றிருந்தான். இவனுடைய அரசி பௌத்த பள்ளி ஒன்றுக்கு வழங்கிய தானம் பற்றி ஒரு ஹௌ மொழிக் கல்வெட்டில் தகவல் கிடைக்கின்றது.

இளம் பாரிந்திரனுக்குப் பின் மூன்று தமிழ் மன்னர் சிறு சிறு காலப்பகுதி அநுராதபுரத்தில் ஒருவர் பின் ஒருவராக ஆண்டனர். பாளி வரலாற்றேடுகள் இவர்களைப் பற்றி அதிகம் தகவல்களைத் தரவில்லை. ஆனால் இவர்களுள் இருவரைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு ஹௌ மொழிக் கல்வெட்டு கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது. இளம் பாரிந்திரனுக்கு அடுத்ததாக ஆண்டவன் திரீதர (தமிழ்: திருதரன், சமஸ்கிருதம்: ஸ்ரீதர) என்பவன் ஆவான். இவன் சில மாதங்கள் ஆண்டபின், இவனுடைய மகன் தாடிய (தாடியன்) என்பவன் ஆட்சி நடத்தினான். இவன் இயற்பெயர் மஹாநாகன் என்பது கல்வெட்டு ஒன்றின் மூலம் அறியக் கூடியதாய் உள்ளது. தந்தை திருதரன் என்ற வைணவப் பெயரைப் பெற்றிருந்தபடியால் பௌத்தனாக இருந்தானோ என்பதைக் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் மகன் மஹாநாகன் பௌத்த நிறுவனம் ஒன்றை ஆதரித்தான் என்பது கல்வெட்டுச் சான்று கொண்டு கூறக் கூடியதாய் உள்ளது. இதனால் மஹாநாகன் இளம் பாரிந்திரனைப் போன்று பௌத்தனாக இருந்திருக்கலாம். இவனுக்குப் பின் பீடிய என்ற தமிழ் மன்னன் ஆண்டதாக அறிகின்றோம். இவன் ஏழு மாதங்கள் ஆண்டபின் தாதுஸேன என்ற சிங்கள இளவரசன் ஆட்சியைக் கைப்பற்றி அநுராதபுரத்தில் மீண்டும் சிங்கள வம்சத்தின் ஆட்சியை நிறுவினான். 

இவ்வாறாக ஆறு தமிழ் மன்னர்கள் ஐந்தாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர். தமிழ் நாட்டில் பௌத்தம் எழுச்சி பெற்றிருந்த அந்த நூற்றாண்டில் இவர்கள் பௌத்தர்களாக இருந்தமை வியப்புக்குரியதன்று. அநுராதபுரத்து மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக இவர்கள் பௌத்தத்தை ஆதரித்தனர் என்று கூற அவசியமில்லை. இத்தகைய கருத்துத் தவறாகும். அதுமட்டுமன்றி, அநுராதபுரத்திலிருந்த உயர்குழாத்தினருடைய ஆதரவு இம்மன்னர்களுக்கு இருந்தது என்பதையும் பாளி நூல்கள் மூலம் அறியலாம்.

தமிழ் மெய்க்காப்பர்

தாதுஸேன மன்னனுடைய ஆட்சியின் (455 – 478) பின் அநுராதபுரத்து அரசியல் சிறிது காலம் உறுதி பெற்றிருந்தது. தாதுஸேனனின் ஆட்சியின் போது நீர்ப்பாசன வசதிகள் பல அமைக்கப்பட்டன; விவசாயம் வளர்ச்சியடைந்தது. ஆனாலும், அநுராதபுரத்தின் பிரசித்தி பெற்ற மன்னர்களுள் ஒருவராகப் பெயர் பெறும் தாதுஸேன பரிதாபத்துக்குரிய வகையில் அவன் மகன் காஸ்யப என்பவனால் கொல்லப்பட்டான். அதன்பின் காஸ்யப மன்னனாக ஆட்சியேற்க, அவன் சகோதரன் முகலன் தென்னிந்தியாவுக்குத் தப்பியோடிச் சென்று, பதினெட்டு ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து, இறுதியில் அங்கிருந்து ஒரு படையுடன் வந்து காஸ்யப மன்னனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான்.

முகலன் தென்னிந்தியாவுக்கு ஓடிச் சென்று, வாய்ப்பு ஏற்படும்போது படைத் திரட்டி வந்து ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி எந்த விதத்திலும் ஒரு புது முயற்சியாகாது. முதலாம் நூற்றாண்டில் இருந்தே அநுராதபுரத்தில் ஆட்சியை இழந்தவர்கள் அல்லது ஆட்சியைக் கைப்பற்ற நோக்கங் கொண்டவர்கள் தென்னிந்தியாவுக்குச் சென்று படை திரட்டி வருவது வழக்கமாக இருந்தது. இப்படைகள் பொதுவாக இலங்கைக்கு அருகில் இருந்த தமிழ் அரசுகளில் இருந்தே கொண்டுவரப்பட்டன. இவ்வழக்கத்தின் முக்கியத்துவம் என்னவெனில், அடிக்கடி இவ்வாறு படைகள் கொண்டுவரப்பட்ட போது தமிழரும் பிற தென்னிந்தியச் சமூகத்தினரும் கூடுதலாக இலங்கையில் குடியேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. முகலன் ஆட்சிக் காலத்தில் இப்படிப் பல தலைவர்கள் படைகளுடன் வருவது புறக்கணிக்க முடியாத ஒரு பிரச்சினையாக இருந்தது எனத் தோன்றுகிறது. ஏனெனில், இப்படி வருவோரைத் தடுப்பதற்கு முகலன் கரையோரக் காவற் படைகளைப் பயன்படுத்தினான் என அறிகின்றோம். ஆனால், முகலன் காலத்துக்குப் பின் இத்தகைய நிகழ்ச்சிகள் மேலும் கூடினவே ஒழிய, குறையவில்லை.

இக்காலப்பகுதியில் அரண்மனைச் சதிகளும் அரசியல் சூழ்ச்சிகளும் நம்பிக்கையின்மையும் மலிந்து காணப்பட்ட போது அநுராதபுரத்து மன்னர்கள் தமிழ் மெய்க்காப்பரில் தங்கியிருக்கும் நிலை உருவாகியது. தங்கள் சொந்தப் பாதுகாப்புக்கும் சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் இந்த மெய்க்காப்பர் பெரிதும் தேவைப்பட்டனர். தென்னிந்தியா – இலங்கைப் பிராந்தியத்தில் இருந்த அரசுகளில் மட்டுமின்றி, உலகின் வேறு பாகங்களிலும் தங்கள் சொந்தப் பாதுகாப்புத் தேவைகளைக் கவனிக்க பிற நாட்டவரைக் காவலராக நியமிப்பது மன்னர்களுடைய பொது வழக்காக இருந்தது. தமிழ்நாட்டில் முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் மன்னர்கள் யவன (கிரேக்க உரோம்) மெய்க்காப்பரை வேலைக்கு அமர்த்தினர். அநுராதபுரத்திலும் யவனப் படையினர் முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் பணியாற்றியிருக்க முடியும். இக் காலப்பகுதியில் தமிழ் மெய்க்காப்பர் சிங்கள மன்னர்களைப் பாதுகாத்தது போன்று, தமிழ்நாட்டில் சிங்கள மெய்க்காப்பர் பணியாற்றினர்.

இவ்வாறு, ஆட்சியைக் கைப்பற்ற நோக்கங் கொண்டோர் தென்னிந்தியாவிலிருந்து கொண்டு வந்த படைகளும் அநுராதபுரத்து மன்னர் தமக்குப் பணிபுரிய வருவித்த தென்னிந்திய மெய்க்காப்பரும் ஆறாம் நூற்றாண்டின் பின் மேலும் அதிகரிக்க, பிரச்சினைகள் எழுந்தன. தென்னிந்தியாவிலிருந்து படைகளைக் கொண்டு வருவது ஏழாம் நூற்றாண்டில் உச்ச நிலையடைந்தது. இந்நூற்றாண்டில், 628 இலிருந்து ஒரு குறுகிய 55 ஆண்டுக் காலத்துள், எட்டுத் தடவைகளாவது ஆட்சியைக் கைப்பற்ற விரும்பிய சிங்களத் தலைவர்கள் தென்னிந்தியப் படைகளை அழைத்து வந்திருந்தனர். இவ்வாறு வந்த படையினரின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடியதும், பல பிரச்சினைகள் தோன்றின. தமிழ்ப் படையினரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் மன்னர்கள் தவித்தனர். அரச சபையில் உயர் பதவிகளில் தமிழர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். நான்காம் அக்கிரபோதி மன்னன் ஆட்சியின்பேது (667 – 683) பொத்தகுட்ட, பொத்தஸாத மற்றும் மஹாகந்த ஆகிய தமிழ் அதிகாரிகள் உயர் பதவிகளை வகித்து, பெளத்த நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கியோராய்க் காணப்படுகின்றனர். ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சமய இயக்கங்களின் விளைவாக அங்கிருந்து இலங்கைக்குச் சில தமிழ் பௌத்தர்கள் புலம் பெயர்ந்து சென்றிருக்கலாம். அவர்களுள் சிலர் அநுராதபுரத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கலாம். இவர்களை விட அநுராதபுரத்தில் முன்பிருந்தே வாழ்ந்த தமிழ்க் குடும்பங்களை சேர்ந்த பௌத்தர்களும் செல்வாக்குடன் விளக்கியிருப்பர்.

ஏழாம் நூற்றாண்டில் அநுராதபுரத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கிய ஒரு தமிழன் பாளி நூல்களில் பொத்தகுட்ட என்ற பெயருடன் காணப்படுகின்றான். இவன் செல்வம் மிகுந்தவனாகவும், பௌத்த சங்கத்துக்குக் குறிப்பிடத்தக்க தானங்களை வழங்கியவனாகவும் விளங்கியதுடன், அநுராதபுரத்து அரசியலில் பெரும் செல்வாக்கும் பெற்றிருந்தான். உயர் குழாத்தினர் மத்தியில் இவனுக்கு ஆதரவு இருந்தது என்று தோன்றுகிறது. அத்துடன் போதிய படை பலமும் அவனுக்கு இருந்திருக்கும். இதனால் அக்கிரபோதி மன்னன் இறந்தவுடன், பொத்தகுட்ட தனது படை பலத்தைக் கொண்டு அரச பதவி பெற இருந்த யுவராஜனாகிய தாட்டாசிவ என்பவனைக் கைப்பற்றிச் சிறையில் இட்டபின் அரசின் நிர்வாகத்தைத் தானே பொறுப்பேற்று நடத்தினான். ‘அரச பதவியில் தான் விரும்பியவர்களை வைத்து அவன் நிர்வாகத்தை நடத்தினான். இவ்வாறு நியமிக்கப்பட்ட இவனது கைப்பொம்மை அரசர்கள் நீண்ட காலம் பதவியில் இருக்கவில்லை.

பல்லவர் ஆதிக்கப் படர்ச்சி

பொத்தகுட்ட செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் தமிழ்நாட்டில் முதல் தடவையாக ஒரு பேரரசு எழுச்சி பெற்றிருந்தது. இது தொண்டை மண்டலத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த பல்லவப் பேரரசாகும். ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விஷ்ணு மன்னன் தொடக்கி வைத்த ஆதிக்கப் படர்ச்சி, ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் மகேந்திரவர்மன் மற்றும் முதலாம் நரசிம்ம வர்மன் ஆகியோர் ஆட்சியில் மேலும் வளர்ச்சி பெற்றுத் தமிழ்நாட்டின் மேலோங்கிய பேரரசாகப் பல்லவ அரசை மாற்றியது. இத்தகைய அரசியல் வளர்ச்சி இலங்கையையும் பாதித்தது. முதல் தடவையாக இலங்கையில் இருந்த ஆட்சியாளர் தென்னிந்திய ஆட்சியாளர்களுடைய அரசியல் விவகாரங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகியது.

முன்னர் கூறப்பட்டதுபோல், பல்லவர் எழுச்சிக்கு முன்னரே அநுராதபுரத்து அரச குடும்பத்தினர் பல தடவைகள் தென்னிந்தியாவுக்குச் சென்று படையுதவி பெற்று வந்தனர். அவர்களுக்கு உதவியோர் குறுநில மன்னர்களா அல்லது மூவேந்தர் எனப்பட்ட சோழ, சேர, பாண்டிய மன்னர்களா என்பது பற்றிச் சான்றில்லை. ஆறாம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் நாட்டிலிருந்து படை கொண்டு வந்து அநுராதபுரத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழர்கள் மூவேந்தர் சார்பாகப் படையெடுப்பு நடத்தினர் என்று கொள்வதற்கும் சான்றில்லை. ஆனால் இந்நிலை ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பல்லவப் பேரரசின் எழுச்சியுடன் மாறுவதைக் காணலாம்.

இலங்கை மன்னன் ஒருவனை வெற்றி கொண்ட ஒருவனாகக் கல்வெட்டுச் சான்று மூலம் நாம் அறியும் முதலாவது தமிழ்நாட்டு அரசு ஒன்றின் மன்னன் பல்லவ சிம்ம விஷ்ணு ஆவான். இவன் வெற்றி கொண்ட மன்னர் வரிசையில் சிங்கள மன்னனையும் சேர்த்துள்ளான். ஆனால், இலங்கை மூலாதாரங்களில் பல்லவர் படையெடுப்புப் பற்றியோ, வெற்றி பற்றியோ எதுவிதக் குறிப்பும் இல்லாமையால், சிம்ம விஷ்ணுவின் கூற்றுப் பொதுவாகக் கருத்திற் கொள்ளப்படவில்லை. எனினும் இக்காலத்து நிகழ்ச்சிகள் சிலவற்றை நோக்கினால், பல்லவ மன்னன் இலங்கைக்கும் படையெடுத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் (603-688) ஆட்சியின்போது அநுராதபுரத்துச் சிங்கள அரச வம்சத்தைச் சேர்ந்த இளவரசன் ஒருவன், மானவர்மன் என்பான், பல்லவர் தலைநகராகிய காஞ்சிக்குச் சென்று பல்லவ மன்னன் ஆதரவைப் பெற்றுச் சில காலம் அங்கு தங்கியிருந்தான். அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் நரசிம்ம வர்மனுக்குப் போர்களில் உதவியும் புரிந்தான். இவ்வாறாக சிங்கள இளவரசன் ஒருவன் பல்லவப் பேரரசன் சபையில் செல்வாக்குப் பெற்றுக் காஞ்சியில் பல ஆண்டுகள் தங்கியிருப்பதை நோக்குமிடத்து, பல்லவ அரசுடன், அநுராதபுர மன்னர்கள் ஏலவே அரசியல் தொடர்புகள் கொண்டிருந்தனர் என்று கொள்ள இடமுண்டு.

அநுராதபுரத்தில் ஏழாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பொத்தகுட்ட செல்வாக்குப் பெற்றிருந்தபோது, பல்லவ நரசிம்ம வர்மன் உதவியுடன் மானவர்மன் படையெடுப்பு நடத்தி அநுராதபுரத்தைத் தாக்கினான். ஆனால் அங்கு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற முன், திடீரெனத் தன் படைகளுடன் காஞ்சிக்கு மானவர்மன் திரும்ப நேரிட்டது. இதற்குக் காரணம் நரசிம்ம வர்மன் நோயுற்றிருந்தமை எனக் கூறப்பட்டுள்ளது. மானவர்மன் திரும்பிச் சென்றபின், நரசிம்மவர்மன் இறந்ததினாலோ என்னவோ மேலும் பல ஆண்டுகள் காஞ்சியில் அவன் தங்கியிருந்து, மீண்டும் ஒரு படையெடுப்பை இரண்டாவது நரசிம்மவர்மன் காலத்தில் (680 – 720) நடத்தினான். இப்படையெடுப்பின் போது பொத்தகுட்டனுடன் அவன் நியமித்திருந்த மன்னனும் கொல்லப்பட்டான். மானவர்மன் வெற்றிகரமாக அநுராதபுரத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.

பாண்டியர் எழுச்சி

மானவர்மன் ஆட்சிக் காலத்தின் பின் தமிழ்நாட்டில் அரசியல் நிலை மாறத் தொடங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு பாண்டிய வம்சத்தினர் படிப்படியாக எழுச்சி பெறத் தொடங்கினர். அவர்கள் ஆதிக்கம் வளர, தவிர்க்க முடியாத வகையில் பல்லவருடன் மோத வேண்டிய நிலை உருவாகியது.

ஆறாம் நூற்றாண்டில் கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிர மன்னன் ஒருவனை வெற்றி கொண்டு பாண்டி நாட்டில் ஆட்சியைத் தொடங்கியதிலிருந்து பாண்டியர் எழுச்சி நடைபெற்றது. இம் மன்னனுக்குப் பின் படிப்படியாக ஏற்பட்ட எழுச்சியைக் காட்டுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை. எனினும் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் அரிகேசரி மற்றும் ராஜசிம்மன் போன்ற மன்னர்கள் பல குறுநில அரசர்களை வென்று பாண்டிய அரசை வலுப்படுத்தினர் என அறிய முடிகின்றது.

ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டியப் பேரரசு உச்ச நிலையை அடைந்தது எனலாம். இந்த நூற்றாண்டில் பாண்டிய மன்னனாகப் பதவி பெற்ற ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் (815 – 862) பாண்டியர் ஆதிக்கத்தைப் பெருக்கிப் பல்லவப் பேரரசுடன் மோதினான். இந்நிகழ்ச்சியின் போது இலங்கையும் தென்னிந்திய அரசியலில் சிக்கிக் கொள்வதைக் காணலாம். முதல் தடவையாகப் பாண்டிய மன்னன் ஒருவன் இலங்கைக்குப் படையெடுத்துச் செல்வதை இக் காலத்தில் காணலாம். அநுராதபுரத்தில் முதலாம் ஸேன மன்னன் (833 – 853) ஆட்சி நடத்தியபோது, ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் வடக்கு இலங்கையில் படையுடன் வந்திறங்கி அநுராதபுரத்தை நோக்கிச் செல்ல, ஸேன மன்னன் அந்நகரத்தை விட்டு மலை நாட்டுக்குச் சென்றான். பாண்டிய மன்னன் அநுராதபுரத்தில் கிடைத்த செல்வத்துடன் தன் நாடு திரும்பினான்.

இவ்வாறு பாண்டியப் பேரரசு எழுச்சி பெற்று அநுராதபுரத்து அரசையும் அடக்க முற்பட்டதன் விளைவாக இலங்கை தென்னிந்திய அரசியலில் மேலும் சிக்கிக் கொண்டது. வலிமை வாய்ந்த ஓர் அரசு எழுச்சி பெறும்போது அந்த எழுச்சியால் பாதிக்கப்படுவோர் ஒன்று கூடுவது இயல்பே. அதற்கமைய, இலங்கை பல்லவ அரசுடன் இணைந்து பாண்டியப் பேரரசை எதிர்த்தது. இந்நிலையில் பாண்டியப் பேரரசன் மகனாகிய வரகுணப் பாண்டியன் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு, இலங்கைக்குத் தப்பியோடிச் சென்றான். பாண்டியர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவினைப் பயன்படுத்தி சிங்கள மன்னனும் பல்லவ மன்னனும் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபனுக்கு எதிராகப் போர் தொடுத்தனர். பல்லவ நிருபதுங்கவர்மன் பாண்டி நாட்டை வடக்கிலிருந்து தாக்க, அநுராதபுரத்து மன்னன் இரண்டாம் ஸேன (853 – 857) அனுப்பிய படைகள் பாண்டி நாட்டின் தென் பகுதியைத் தாக்கி மதுரையை நோக்கி முன்னேறின. வடக்கில் பாண்டியப் படைகளும் பல்லவர் படைகளும் அரிசில் என்ற இடத்தில் மோதின. அரிசில் போரில் பல்லவர் பாண்டியரை வெற்றி கொண்டனர். அதேவேளை, தெற்கில் சிங்கள மன்னன் அனுப்பிய படைகள் மதுரையைத் தாக்கி வெற்றி பெற்றன. அரிசில் போரில் தோல்வியுற்ற பாண்டியர் படை இதனைக் கேள்வியுற்று மதுரைக்கு விரைந்தது. மதுரையில் அப்படை நடத்திய போரில் ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபன் உயிரிழந்தான். சிங்கள மன்னன் படை வரகுணப் பாண்டியனைப் புதிய பாண்டிய மன்னனாக முடிசூட்டியது. இது 862 இல் நடந்த நிகழ்ச்சியாகும்.

இவ்வாறு தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பேரரசு எழுச்சி பெற்ற காலங்களில் இலங்கையையும் பாதிப்பது தவிர்க்க முடியாதது என்பது வெளிப்படையாகின்றது. தவிர்க்க முடியாதவாறு இலங்கை தென்னிந்திய அரசியலில் சிக்கிக் கொண்டது. ஏழாம் நூற்றாண்டில் பல்லவர் எழுச்சியுடன் ஏற்பட்ட தொடர்பு இலங்கையைத் தென்னிந்தியப் பேரரசுகளுக்கிடையிலான போராட்டங்களில் பங்குகொள்ள வழிவகுத்தது. முதலில் பல்லவரும் பாண்டியரும் மேலாதிக்கத்துக்காகப் போராடிய போது, சிங்கள மன்னர் பல்லவருக்குச் சார்பாக இருந்தனர். பின்னர் சோழப் பேரரசு எழுச்சி பெற, அதனால் பாதிக்கப்பட்ட பாண்டியருடனும் சேரருடனும் சிங்கள மன்னர் இணைந்து சோழரை எதிர்த்தனர். இந்த அரசியல் வளர்ச்சிகள் அனைத்தும் இலங்கையில் தமிழர் இனக் குழு வலுப்பெற இறுதியில் உதவின.

தொடரும். 


ஒலிவடிவில் கேட்க

5603 பார்வைகள்

About the Author

கா.இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.