ஹௌ மக்களும் தமிழ் மக்களும் (பொ.ஆ 300 - 900) - பகுதி 2
Arts
33 நிமிட வாசிப்பு

ஹௌ மக்களும் தமிழ் மக்களும் (பொ.ஆ 300 – 900) – பகுதி 2

October 13, 2024 | Ezhuna
'இலங்கையில் தமிழ் பௌத்தம்' என்னும் இப் புதிய தொடரில் ஏறக்குறைய 12 வரையான ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கவுள்ளோம். இக்கட்டுரைகளில் சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ஆய்விதழ்களில் பிரசுரிக்கப்பட்டவை. ஆங்கிலக் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு, தழுவலாக்கம், சுருக்க அறிமுகமும் விமர்சனமும் என்ற மூவகையில் அமைவனவாக இருக்கும். சி. பத்மநாதன், ஆ. வேலுப்பிள்ளை, பீட்டர் ஷல்க், சிவா. தியாகராஜா, பரமு. புஷ்பரட்ணம், அகிலன் பாக்கியநாதன் ஆகியவர்களின் கட்டுரைகள் இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலையை விளக்குவனவாக அமையவுள்ளன. இலங்கையில் தமிழ் பௌத்தம் பற்றிய தமிழர் நோக்கு நிலை, இலங்கையின் கடந்த கால வரலாறு முழுவதும் மேலாதிக்கம் பெற்றுள்ள சிங்கள பௌத்த இனக் குழுமத்தின் முழுமையான உரிமையும் உடமையும் என்ற நோக்கிலான கருத்தியலுக்கு மாறுபட்டது என்று சுருக்கமாகக் கூறலாம். சுனில் ஆரியரட்ண, ஜி.வி.பி. சோமரத்தின, எலிசபெத் ஹரிஸ் ஆகிய மூன்று ஆய்வாளர்களின் கட்டுரைகளும் இத்தொடரில் இடம்பெறவுள்ளன. இம் மூவரது கட்டுரைகளும் சிங்கள பௌத்த நோக்கு நிலை - தமிழர் நோக்கு நிலை என்ற இரண்டையும் விமர்சன நோக்கில் புரிந்துகொள்ள உதவுவன.

சமய அபிவிருத்திகள் 

தேரவாத பௌத்தம்

தமிழ்நாட்டில் தேரவாத பௌத்தம் எழுச்சி பெற்றதன் விளைவாக அங்கு பாளி இலக்கியம் சிறப்புற்று வளர்ந்தது. இந்த வரலாறு இன்று மறக்கப்பட்ட ஒரு வரலாறாகி விட்டது. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை, தமிழ்நாட்டில் இருந்த தேரவாத பௌத்த மையங்களில், சிறப்பாகக் காஞ்சி, மதுரை, காவிரிப்பட்டினம் மற்றும் உறையூர் ஆகிய நகரங்களில் அமைந்திருந்த பௌத்தப் பெரும் பள்ளிகளில் தலைசிறந்த பௌத்த அறிஞர்கள் பாளி மொழியில் பல நூல்களை இயற்றியும் உரை நூல்களை எழுதியும் பாளி இலக்கிய வளர்ச்சிக்கு உதவினர். கவலைக்குரிய வகையில் இப்படைப்புகள் தமிழ்நாட்டில் பேணப்படவில்லை. பெரும்பாலும் இலங்கையிலேயே இவை பேணப்பட்டுள்ளன.

இக்காலப் பகுதியில் பௌத்த உலகில் மூன்று பெரும் அறிஞர்களாகக் கருதப்படும் புத்தகோசர், புத்ததத்தர் மற்றும் தம்மபாலர் ஆகியோர் தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரும்பள்ளிகளில் கடமையாற்றியவர்கள். இவர்களுள் இருவர், புத்ததத்தரும் தம்மபாலரும், தமிழ்ப் பௌத்தப் பிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மூவருள் கூடிய பிரசித்தி பெற்ற அறிஞர் புத்தகோசர். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி அதிக நம்பகமான தகவல்கள் இல்லை.

புத்தகோசர் இயற்றிய பாளி நூல்களுள் மிகவும் பிரபல்யமான இரு நூல்கள் அங்குத்தர நிகாய மற்றும் மஜ்ஜிம நிகாய ஆகியவற்றுக்கு அவர் எழுதிய உரை நூல்களாம். முதலாவது, புத்தகோசர் காஞ்சியில் இருந்த காலத்தில் எழுதப்பட்டது. மற்றது மயூரரூபபட்டன எனப் பாளியில் பெயர் பெறும் ஓர் இடத்தில் இருந்த பௌத்தப் பள்ளியில் அவர் வாழ்ந்தபோது எழுதப்பட்டது. இந்த இடம் மயிலாப்பூரைக் குறிக்கும் என ஒரு கருத்து உண்டு.

புத்ததத்தர் சோழநாட்டில் பிறந்தவர்; ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்; வயதால் புத்தகோசருக்கு மூத்தவர். பௌத்த குருவாக காவேரிப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், காஞ்சி மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் இருந்த பெரும்பள்ளிகளில் பல பதவிகளை வகித்தவர். அவர் எழுதிய பாளி நூல்களுள் மிகவும் பிரபல்யமானவை விநய விநிச்சய, உத்தர விநிச்சய மற்றும் ஜினாலங்கார காவ்ய ஆகியவையாம். புத்ததத்தர் பெற்றுள்ள புகழுக்கு முக்கிய காரணம் அவர் எழுதிய உரை நூல்களே. இவர் அநுராதபுரத்துக்குச் சென்று அங்கு பழைய சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த உரை நூல்கள் பலவற்றைப் பாளியில் பெயர்த்தும் புதிதாக உரை நூல்கள் பல பாளியில் எழுதியும் புகழ் பெற்றுள்ளார். அவற்றுள் முக்கியமானவை மதுரத்த விலாஸினி மற்றும் அபிதம்மாவதார ஆகியவை.

தம்மபாலர் பற்றிய தகவல்கள் இலகுவில் பெற முடியாதவை. பல பௌத்த அறிஞர்கள் தம்மபால என்ற பெயர் பெற்றிருந்த காரணத்தால் அவர்கள் பற்றிய செய்திகள் வேறுபடுத்த முடியாத வகையில் கலந்து விட்டன. தமிழ்நாட்டில் பதரதித்த (கடலூர்) என்னும் இடத்தில் இருந்த பௌத்தப் பள்ளியில் வசித்த தம்மபாலர் ஓர் உரையாசிரியராகப் புத்தகோசரைப் போன்று புகழ் பெற்றவர். பல உரை நூல்களை எழுதியவர். அவற்றுள் மிகப் பிரபல்யம் பெற்ற நூல் பரமத்த தீபனீ என்பதாகும். நாகபட்டினத்தில் ஒரு பள்ளியில் வாழ்ந்த இன்னொரு தம்மபாலர் நெத்திபகரண என்ற நூலுக்கு உரை எழுதியவர்.

மஹாயான பௌத்தம்

இதுவரை குறிப்பிடப்பட்ட தமிழ்ப் பெளத்த அறிஞர்கள் அனைவரும் தேரவாத பௌத்தத்தைத் தழுவியவர்கள். அவர்கள் பெற்ற புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மேலோங்கிய பௌத்தப் பிரிவாகத் தேரவாதம் விளங்கியது என்ற கருத்துக்கு இடமுண்டு. ஆனால், இத்தேரவாத அறிஞர்களைப் போன்று சிறப்புப் பெற்ற பல மஹாயான பௌத்த அறிஞர்களும் இக்காலத்தில் தமிழ்நாட்டில் தோன்றினர். மஹாயானம் மட்டுமின்றி வேறு பௌத்த மதப்பிரிவுகளும் தமிழ்நாட்டில் இருந்தன. காஞ்சி போன்ற நகரங்களில் இம் மதப் பிரிவுகளைச் சேர்ந்த பள்ளிகள் இருந்தன. ஆனாலும் இவை பற்றிய வரலாற்றுத் தகவல்கள் அதிகம் பேணப்படவில்லை. பள்ளிகளின் அழிபாடுகளும் மறைந்து போயின. பேணப்பட்டுள்ள சமஸ்கிருத மஹாயான நூல்கள் மூலமாகவும் சீன நூல்கள் வாயிலாகவும் ஒரு சில தகவல்களைப் பெறக் கூடியதாய் உள்ளது.

தமிழ்நாடு தந்த பிரசித்தி பெற்ற மஹாயான அறிஞர்களுள் சிறப்பாக குறிப்பிடத்தக்க ஒருவர் பௌத்த மெய்யியலாளராகிய திண்ணாகர் (திக்நாக) என்பவராவர். இவர் காஞ்சிக்குத் தெற்கே சீயமங்கலம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வட இந்தியாவுக்குச் சென்று, பிரபல மஹாயான அறிஞராகிய வஸுபந்து என்பவருடைய போதனைகளை ஏற்று நாலந்தாவில் இருந்த பௌத்த கல்வி நிலையத்தில் (நாலந்தாப் பல்கலைக்கழகம் எனப் பொதுவாக இன்று பெயர் பெறும் நிறுவனத்தில்) ஒரு மெய்யியலாளராகவும், வாது செய்வதில் விற்பன்னராகவும் விளங்கினார். பின்னர் காஞ்சிக்குத் திரும்பி வந்து அங்கு தன் பிற்காலத்தைக் கழித்தார். பௌத்த மதத்தின் ஒரு தத்துவப் பிரிவாகிய விஞ்ஞானவாதத்தை விளக்கி முன் வைத்தவராக இவர் கருதப்படுகின்றார். இவர் எழுதிய இரண்டு முக்கிய நூல்கள் நியாயப்ரவேஸ மற்றும் நியாயஸமுச்சய ஆகிய சமஸ்கிருத நூல்களாம்.

இக்காலப் பகுதியில் தென்கிழக்காசியாவுடனான வர்த்தகம் துரித வளர்ச்சியடைய இந்தியத் துறைகளிலிருந்து சமயக் குரவர்களும், வணிகர்களுடன் தென்கிழக்காசிய அரசுகளுக்குச் சென்று வைணவம், சைவம் மற்றும் பௌத்தம் ஆகிய மதங்களின் வளர்ச்சிக்கு உதவினர். இந்தப் பண்பாட்டுப் பரம்பலில் தமிழ்நாட்டார் முக்கிய பங்கெடுத்தனர். தமிழ்ப் பௌத்த குருமார் மாமல்லபுரம், காவேரிப்பட்டினம், நாகபட்டினம் ஆகிய துறைகள் வழியாகத் தென் கிழக்காசியாவுக்கும் அப்பால் சீனாவுக்கும் சென்று சமய வளர்ச்சியில் ஈடுபட்ட வரலாறு இன்று மறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சென்ற பௌத்த அறிஞர் பிற பௌத்த குருமாரைப் போன்று பாளிப் பெயர்களை அல்லது சமஸ்கிருதப் பெயர்களைத் தரித்திருந்தமையால், அவர்கள் பெயர்கள் பல ஆவணங்களில் பேணப்பட்டிருந்தாலும் அவர்களைத் தமிழ் நாட்டார் என அடையாளங் காண முடியாது.

இவ்வாறு கிழக்கு நாடுகளுக்குச் சென்ற தமிழ்ப் பௌத்த அறிஞர்களுள் ஐயத்திற்கிடமின்றி மிகவும் பிரசித்தி பெற்றவர் போதிதர்மர் எனலாம். தமிழ்நாட்டில் இவர் பெயர் மறக்கப்பட்டாலும் இன்றும் இவர் பெயர் சீனர்களால் தமோ எனவும் ஜப்பானியரால் தரும எனவும் பேணப்பட்டு வருகின்றது. இதற்குக் காரணம் பிரசித்தி பெற்ற பௌத்த மதப் பிரிவாகிய தியான பௌத்தத்தை (ஆங்கிலத்தில்: Zen Buddhism) நிறுவியவராக இவர் கருதப்படுவதே. இதனால் இவர் வாழ்க்கை வரலாறு பற்றிய சில விபரங்கள் சீன நூல்களில் பேணப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு இவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் காஞ்சியில் இருந்து சீனாவுக்குச் சென்றவர் என்றும் அறிய முடிகின்றது. சீன நூல்கள் சிலவற்றில் இவர் காஞ்சியில் ஆண்ட ஒரு மன்னனின் மகன் என்று கூறப்பட்டுள்ளது. போதிதர்மர் காஞ்சியில் பௌத்த பள்ளி ஒன்றில் வாழ்ந்த காலத்தில் அங்கு வந்த சீனப் பெளத்த துறவிகள் அவரைச் சீனாவுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். அவரைப் போன்று வேறும் பல தமிழ்நாட்டுப் பெளத்த துறவிகள் தென்கிழக்காசியாவுக்கும் அப்பால் சீனாவுக்கும் அக்காலத்தில் சென்றனர் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய ஒரு பின்னணி தமிழ்நாட்டில் இருந்தபோது தமிழ்ப் பௌத்தர்கள் அங்கிருந்து இலங்கைக்குச் சென்று வரும் சூழ்நிலை நிலவியது எனலாம். அநுராதபுரத்தில் இக்காலகட்டத்தில் தமிழ்ப் பௌத்தர்கள் வாழ்ந்தனர். அவர்களுடைய தமிழ்க் கல்வெட்டுகள் அநுராதபுரத்தில் கிடைத்துள்ளன. புத்தகோசர் அநுராதபுரத்தில் வாழ்ந்த காலத்தில் அங்கிருந்த மக்கள் பெளத்த போதனைகளைத் தமிழில் கேட்டு விளங்கிக் கொள்ளக் கூடிய நிலையில் இருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சைவமும் வைணவமும்

தமிழ்நாட்டில் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் பௌத்தம் தன் வளர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்தது என்று கூறலாம். ஆறாம் நூற்றாண்டின் இறுதியளவில் இந்நிலை மாறத் தொடங்கியது. சைவமும் வைணவமும், பௌத்தத்தையும் சமணத்தையும் எதிர்த்து எழுந்தன. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்புதிய சூழ்நிலை பல்லவர் அரசிலும், பாண்டியர் அரசிலும் காணப்பட்டது. அப்பொழுது இரண்டு அரசுகளும் சமணத்தைத் தழுவிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தன. வெகு விரைவில் இந்நிலை மாறியது.

வடநாட்டு வைதிக சமயக் கருத்துகள் தென்னிந்தியாவில் வரலாற்றுத் தொடக்க காலத்திலேயே பரவத் தொடங்கின. தமிழ்நாட்டில் வாழ்ந்த பிராமணர் பற்றியும் பிராமணியச் சடங்குகள் பற்றியும் சங்க நூல்களில் சான்றுகள் காணப்படுகின்றன. படிப்படியாக வைதிக சமய வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டு, தென்னிந்தியாவில் முன்னரே இருந்த சமய நம்பிக்கைகளுடன் கலந்து சைவமும் வைணமும் முக்கிய மதங்களாக முன்னேறின. ஆழமான தத்துவங்களைக் கொண்டிருந்தாலும், இம் மதப் பிரிவுகள் பொதுமக்கள் மட்டத்தில் பல்வகைப்பட்ட சடங்குகள் நிறைந்தவையாக அமைந்தன. சமயத்தின் மேல்மட்டத்துக்கும் கீழ்மட்டத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் வகையில் நாயன்மார்களும் ஆழ்வார்களும், பக்தி இயக்கம் எனப் பெயர் பெறும் ஓர் இயக்கத்தைத் தொடங்கினர். இந்த மதப் பிரிவுகளுக்குரிய ஆழ்ந்த தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் விளங்கிக் கொண்ட தமிழ் மொழியில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தம் தேவார திருப்பதிகங்களை இயற்றி மக்கள் ஆதரவைப் பரவலாகப் பெற்றுத் தமிழ்நாடு முழுவதும் தம் இயக்கத்தை நடத்தினர்.

இந்நிலைக்கு மாறாக, இறுக்கமான ஒழுக்க நெறிகளையும் கொல்லாமையையும் கடைப்பிடித்துக் கடவுள் வழிபாடு இல்லாது அற வாழ்க்கையை நடத்துமாறு வற்புறுத்திய சமண, பௌத்த மதங்கள் பொதுமக்களிடையே பரவலான ஆதரவைப் பெறக் கூடிய மதங்களாக அமையவில்லை. அவற்றின் நெறிகள் பெரும்பாலும் உயர் குழாத்தினரைக் கவரக் கூடியவையாகவே காணப்பட்டன. தமிழ்நாட்டில் இம் மதங்களின் சிறப்பு உச்சநிலையை அடைந்திருந்த காலத்திலும் கூட அவை பொதுமக்கள் மத்தியில் பெரிதும் பரவியிருந்தன என்று கூறுவதற்கில்லை. இம் மதங்கள் பெரும்பாலும் நகர மையங்களிலும் வர்த்தக மையங்களிலும் உற்பத்தி நிலையங்களிலும் வேரூன்றிக் காணப்பட்டன. அம்மதங்களின் தத்துவங்கள் இவ்விடங்களில் செல்வாக்குப் பெற்ற உயர் குழாத்தினருக்குப் பொருத்தமானவையாக அமைந்தன. ஆகவே இம் மதத் தலைவர்களை எதிர்த்தெழுந்த நாயன்மார் அவர்களை வாதுக்கழைத்தபோது, அவர்கள் தத்துவங்கள் பொதுமக்கள் ஆதரவைப் பெறத் தவறியதில் வியப்பில்லை.

நாயன்மார் இயக்கம்

தமிழ்நாட்டில் நாயன்மார் தங்கள் இயக்கத்தைத் தொடங்கிய போது பொதுமக்கள் மீது அன்றி ஆட்சியாளர் மீது கவனம் செலுத்தினர். அப்பர் எனப் பலராலும் போற்றப்படும் திருநாவுக்கரசர், தானே சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய பின், பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனைச் சமணத்திலிருந்து சைவத்துக்கு மாற்றினார். இம் முக்கிய நிகழ்ச்சியுடன் சைவம் வெற்றிகரமாகத் தமிழ்நாடு முழுவதும் எழுச்சி பெறத் தொடங்கியது. அப்பர் காலத்தவராகிய திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டில், முதலில் மன்னன் மனைவியாகிய மங்கையர்க்கரசியைச் சமணத்திலிருந்து சைவத்துக்கு மதம் மாற்றி, பின்னர் மன்னனின் மதமாற்றத்துக்கும் உதவினார். இவ்விரு நிகழ்ச்சிகளும் பல்லவ அரசிலும் பாண்டிய அரசிலும் உயர் குழாத்தினர் சைவத்தைத் தழுவி, அதன் வளர்ச்சிக்கு உதவ வழிகோலின.

சைவமும் வைணவமும் இவ்வாறு முன்னேறிச் சென்றபோது தவிர்க்க முடியாதவாறு இவை சமணத்துடனும் பௌத்தத்துடனும் மோத வேண்டிய நிலை உருவாகியது. பகிரங்க வாதுக்களும் சமயப்பொறையின்மையும் இப்பூசல்களின் பண்புகளாயின. கழுவேற்றல் மற்றும் நாடு கடத்தல் போன்ற கடுந் தண்டனைகளும் விதிக்கப்பட்டன. எட்டாம் நூற்றாண்டின் இறுதியளவில் சமணமும் பௌத்தமும் வலுவிழந்து வீழ்ச்சியுற, சைவமும் வைணமும் மேலோங்கின.

இத்தகைய ஒரு பின்னணியில் பல இன்னல்களுக்கு இலக்காகிய சமணர்களும் பௌத்தர்களும் தமிழ்நாட்டிலிருந்து வேறு இடங்களுக்குச் சென்று புகலிடம் பெற்றனர். சமணர்கள் பொதுவாக வடக்கு நோக்கி கர்நாடக, ஆந்திர அரசுகளுக்குச் சென்றனர். ஆனால் பௌத்தர் தெற்கு நோக்கி இலங்கைக்குச் சென்றனர். பௌத்தம் பரவிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டுப் பௌத்த சங்கத்தார்க்கும் இலங்கைப் பௌத்தச் சங்கத்தார்க்கும் இடையில் நெருங்கிய உறவு உருவாகியிருந்தது. இந்த உறவு பற்றிய தமிழ்நாட்டு ஆவணங்கள் கிடைக்காவிட்டாலும், இலங்கையின் பாளி நூல்களில் சான்றுகள் இருக்கின்றன. அநுராதபுரத்தில் அரசியல் நெருக்கடியால் பௌத்த சங்கத்தார் பாதிக்கப்பட்டபோது தமிழ்நாட்டுக்கு ஓடிச் சென்றனர். அநுராதபுரத்தில் பௌத்த நூல்களை ஆய்வு செய்ய தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்து அறிஞர்கள் சென்றனர். இத்தகைய தொடர்புகள் இருந்த போது, தமிழ்நாட்டுப் பெளத்த சங்கத்தார் சைவ, வைணவ இயக்கத்தால் இன்னலுக்கு இலக்காகிய போது, இயல்பாகவே இலங்கைப் பெளத்த சங்கத்தார் உதவிக்குச் சென்றனர். அத்துடன் புகலிடமும் கொடுத்தனர்.

நாயன்மார்களுக்கும் பௌத்த சங்கத்தார்க்கும் இடையில் நிகழ்ந்த தகராறுகளில் இலங்கைப் பௌத்த சங்கத்தார் கொண்ட பங்கு பற்றி அறியப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் இது பற்றிய கதைகள் சில இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பேணப்பட்டுள்ளன. சைவக் குரவர்களுள் ஒருவராகிய மாணிக்கவாசகர் பௌத்தர்களை வாதில் வென்ற கதை இவற்றுள் ஒன்று.

சமணர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் கூட பகிரங்க வாதுக்கள் நடைபெற்றதாகக் கூறும் கதைகளும் உள்ளன. இவற்றுள் அகலாங்கர் என்ற சமணர் பற்றிய கதை குறிப்பிடத்தக்கது. இக் கதை கன்னட மொழியிலும் தெலுங்கு மொழியிலும் உள்ள மூலங்களில் காணப்படுகின்றது. இக் கதையின்படி, கர்நாடகத்திலிருந்து வந்த சமண முனிவராகிய அகலாங்கர் காஞ்சியில் பௌத்த சங்கத்தாருடன் வாது செய்து அவர்களை வெற்றி கொண்டார். தோல்வியுற்ற பௌத்தர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இவ்வாறு கிடைக்கும் கதைகளின் விபரங்களை உறுதி செய்ய முடியாவிட்டாலும், இவை அக்காலத்தில் நடைபெற்ற தகராறுகளின் விளைவாக சில பௌத்தர்கள் இலங்கைக்குப் புலம்பெயர்ந்தனர் என்பதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன எனலாம். அரசியல் நெருக்கடி மற்றும் பஞ்சம் போன்ற பொருளியல் சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டபோது இலங்கைப் பௌத்த சங்கத்தார் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்குச் சென்றது போல், இக்காலத்துச் சமயப் பூசல்களின் போது தமிழ்நாட்டுப் பௌத்த சங்கத்தார் இலங்கையிலிருந்த பள்ளிகளில் புகலிடம் பெற்றிருப்பர். பிற பெளத்தர்களும் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்திருப்பர். சிங்கள மொழியிலுள்ள மக்கள் இலக்கியத்தில் பேணப்பட்டுள்ள மரபுகளை ஆய்வு செய்த மானிடவியலாளர் பேராசிரியர் கணநாத் ஒபயஸேகர, இம்மரபுகளில் தென்னிந்தியாவிலிருந்து பௌத்தர்கள் புலம்பெயர்ந்து இலங்கைக்குச் சென்றதற்கான சான்றுகள் காணப்படுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார். 

பௌத்தம் வருவித்த தென்னாட்டார்

பௌத்தம் தமிழ்நாட்டில் வலுவிழந்த காலத்தில் இலங்கைக்குச் சென்ற தமிழர்களுக்கு முன்னர், அதாவது பௌத்தம் செழிப்புற்றிருந்த காலத்தில், பௌத்த கலைஞர்கள் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று அங்கு வாழ்ந்த தமிழ் இனக்குழுவை மேலும் வலுப்படுத்துவதற்கு உதவினர். பொ.ஆ.மு. 300 இற்கும் 900 இற்கும் இடையில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து சிற்பிகளும் பிற கலைஞர்களும் இலங்கைக்குச் சென்று பணியாற்றினர் என்பதற்குத் தொல்லியல் மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

மூன்றாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் தென்னிந்தியாவிலிருந்து பரவிய பௌத்த மதச் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆந்திரத்திலிருந்து வந்தது. அநுராதபுரத்தில் மட்டுமன்றி வடக்கில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும் இச் செல்வாக்குக் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஆந்திரத்திலிருந்த பிரசித்தி பெற்ற பௌத்த தலங்களாகிய அமராவதி மற்றும் நாகார்ஜுனக்கொண்டா ஆகிய இடங்களிலிருந்து பௌத்த சங்கத்தார் வந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. இலங்கையிலிருந்து ஆந்திரத்துக்குச் சென்ற பௌத்த துறவிகள் அமராவதியில் தங்கியிருப்பதற்கு ஒரு பள்ளி சிங்கள விகாரை என்ற பெயரால் அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறே இலங்கையிலும் ஆந்திரத்துப் பௌத்த துறவிகள் தங்குவதற்குப் பள்ளிகள் இருந்திருக்கும் எனலாம்.

சங்கத்தார் மட்டுமின்றி, பௌத்த சிற்பங்களையும் கட்டிடங்களையும் அமைப்பதற்குக் கூட ஆந்திரத்திலிருந்து சிற்பிகள் வந்திருப்பர். அவர்கள் இலங்கையில் பணியாற்றியதற்குச் சான்றாக ஆந்திரக் கலையின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் சிற்பங்கள் கிடைத்துள்ளன. சில ஆந்திரக் கலை வேலைப்பாடுகள் ஆந்திரத்திலே செய்யப்பட்டு வர்த்தகர்களால் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

ஆந்திரச் சிற்பக் கலையின் செல்வாக்குக் கூடுதலாகக் காணப்பட்ட இடம் இலங்கையின் வடபாகம் ஆகும். ஆந்திரப் பாணியில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் பல யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகம் மற்றும் வல்லிபுரம் ஆகிய இடங்களிலும், அநுராதபுர மாவட்டத்தில் அநுராதபுரம் மற்றும் மஹ இல்லுப்பள்ளம போன்ற இடங்களிலும் கிடைத்துள்ளன. இவற்றுள் சில ஆந்திரத்தில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்ட சிலைகள். ஆந்திரச் சிற்பிகள் இக்காலப் பகுதியில் இலங்கையின் வட பாகத்தில் பணியாற்றியிருப்பர் என்பதை மறுப்பது கடினம்.

ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் பல்லவ அரசிலிருந்து சிற்பிகளும் பிற கலைஞர்களும் இலங்கைக்குச் சென்றிருந்தனர். தமிழ்நாட்டில் பல்லவர் ஆட்சியிலேதான் தனிக் கற்களால் கோயிலமைக்கும் முறை தொடங்கப்பட்டது. இத்தகைய கட்டிடக் கலையில் திறமை பெற்ற சிற்பிகள் இலங்கைக்குச் சென்று இம்முறையை அறிமுகப்படுத்தினர். அதன் விளைவாய் அமைக்கப்பட்ட கட்டிடங்களுள் நாலந்தாவிலுள்ள கெடிகே மற்றும் தெற்கு இலங்கையில் தெவுந்தர (தெவிநுவர) என்னும் இடத்தில் உள்ள உற்பலவண்ணன் ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

பல்லவர்களுடைய சிற்பப் பாணி கிழக்கு இலங்கையிலும் அநுராதபுரத்திலும் உள்ள பல சிற்ப வேலைப்பாடுகளில் வெளிப்படுகின்றது. அநுராதபுரத்தில் இஸுருமுனிய என்ற இடத்தில் ஐயத்திற்கிடமின்றிப் பல்லவ அரசிலிருந்து சென்ற சிற்பிகளின் கைத்திறனை வெளிப்படுத்தும் படைப்புகளாகப் பாறையில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்கள் அமைகின்றன. இவற்றுள் ஒன்று ஐயனார் சிற்பம் என அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ‘குதிரைத் தலையும் மனிதனும்’ எனப் பொதுவாக வர்ணிக்கப்படும் சிற்பமாகும். பல்லவர் சிற்பக் கலையின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ள இச் சிற்பம் கலை விமர்சகர்களால் போற்றப்படும் ஒரு சிறந்த வேலைப்பாடாகும். இதற்கு அருகில் உள்ள பாறைப் புடைப்புச் சிற்பம் மாமல்லபுரத்தில் உள்ள மிகப் பிரசித்திபெற்ற பாறைச் சிற்பத்தை ஒத்துள்ளது.

அநுராதபுரத்துக்கு வெளியே கிழக்குக் கரையோரத்தில் மஹாயான பௌத்தத் தலங்களில் பல்லவர் சிற்பக் கலையின் செல்வாக்கைப் பிரதிபலிக்கும் அழகிய சிற்பங்கள் சில கிடைத்துள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் என்னும் இடத்தில் உள்ள மஹாயான சைத்தியத்தின் துவாரபாலகர் சிற்பங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸிதுல்பவு (சித்தலப்பர்வதம்) மற்றும் குருக்கள் மடம் ஆகிய இடங்களிலுள்ள பௌத்த சிற்பங்கள் பல்லவர் பாணியில் அமைந்துள்ளன.

சிற்பங்களைச் செய்வதற்கு மட்டுமின்றி, மஹாயான பௌத்தர்களுடைய சமஸ்கிருதக் கல்வெட்டுகளைத் தமிழ்நாட்டு எழுத்து முறையாகிய பல்லவ கிரந்த எழுத்தில் பொறித்து வைப்பதற்கும் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டுச் சிற்பிகள் சென்றிருந்தனர் என்பதைக் காட்டும் கல்வெட்டுகள் கிழக்கு இலங்கையிலும் வேறு இடங்களிலும் கிடைத்துள்ளன.

வர்த்தக வளர்ச்சி

பல்லவர்களுடைய ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு முக்கிய விளைவு கடல் வணிகம் முன்னேற்றமடைந்து வணிக கணங்களின் நடமாட்டம் வங்காள விரிகுடாவில் தென்னிந்தியாவுக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் இடையில் பெருகியமையாகும். இதன் ஒரு கூறாக இலங்கையுடன் நடைபெற்ற வணிகம் அமைந்தது. இலங்கையில் தமிழ் இனக்குழு மேலும் வலுப் பெறுவதற்கு உதவிய காரணிகளுள் மிகவும் முக்கியமானதாக இவ் வணிக வளர்ச்சியைக் கருத வேண்டும்.

இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையில் வளரத் தொடங்கிய வர்த்தகம் முதலாம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டுத் துறைகளையும் தொடர்புபடுத்தி முன்னேறியது. இவ் வர்த்தகத்தில் தமிழ்நாட்டு வணிகர்களும் படிப்படியாகக் கூடிய பங்கைப் பெற்றனர் என்று கூறலாம். ஐந்தாம் நூற்றாண்டின் பின்னர் பல்லவப் பேரரசு எழுச்சிபெறத் தொடங்கியதும், தமிழ்நாட்டின் கடல் கடந்த வர்த்தகம் செழிப்புற்றது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகத் தென்கிழக்காசிய வர்த்தகத்தில் தமிழ்நாட்டு வணிகர் முக்கிய பங்கெடுத்தனர். அவர்கள் செயல்களால் வர்த்தகம் வளர்ச்சியுற்றது மட்டுமின்றித் தென்கிழக்காசியாவிலும் இலங்கையிலும் பல்லவர் பண்பாட்டுக் கூறுகளும் பௌத்த, சைவ சமயங்களின் செல்வாக்கும் பரவின.

ஆறாம் நூற்றாண்டிலிருந்து கவனிக்கக்கூடிய ஒரு விஷயமாக வணிக கணங்களின் வளர்ச்சி அமைகின்றது. பல்லவ அரசின் எழுச்சி கடல் கடந்த வர்த்தகத்துக்குத் துணையாக இருந்த சூழ்நிலையில் வணிக கணங்கள் தமிழ்நாட்டுத் துறைகளிலிருந்து இலங்கைக்கும் தென்கிழக்காசியாவுக்கும் கூடுதலாகச் செல்லும் அளவுக்கு வலுப் பெற்றன. இதனை வெளிப்படுத்தும் தொல்லியல் சான்றுகள் தமிழ்நாடு, இலங்கை மற்றும் தென்கிழக்காசிய நாடுகளாகிய தாய்லாந்து, வியட்நாம் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவ்விடங்களில் தென்னிந்திய வணிக கணங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் பௌத்த சங்கத்தார், பிராமணர்கள் மற்றும் சிற்பிகள் ஆகியோரும் பங்கு கொண்டனர். கிழக்குக் கரைத் துறைகள், குறிப்பாக நாகபட்டினமும் மாமல்லபுரமும், வங்காள விரிகுடாவுக்கு அப்பால் கிழக்கு இலங்கையின் துறைகளாகிய பல்லவ வங்கம், திருகோணமலை ஆகிய துறைகளுடனும் தென்கிழக்காசியாவில் தாய்லாந்தின் தக்குவா-பா, வியட்நாமின் ஒக்இயோ ஆகிய துறைகளுடனும் வர்த்தக மார்க்கங்களால் தொடுக்கப்பட்டிருந்தன.

இந்த ஆர்வமூட்டும் வர்த்தக வரலாற்றைப் பற்றி விரிவாக அறிவதற்கு பத்தாம் நூற்றாண்டு வரை ஆவணங்கள் கிடையாது போனமை கவலைக்குரிய விஷயமே. இக் காலகட்டத்தில் பெருமளவு இலக்கியப் படைப்புகள் தமிழ்நாட்டில் இருந்த போதிலும், அவற்றில் இம் முக்கிய வர்த்தகம் பற்றிய தகவல்களைப் பெறுவது அரிது. இதற்கு விதிவிலக்காக, மணிமேகலையில் சாவகம் (இந்தோனேசியா) நோக்கிப் புறப்பட்ட கப்பல்கள் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு. தென்னிந்திய வணிகர்கள் எவ்வாறு கணங்களாக இயங்கினர்? வங்காள விரிகுடாவைத் தாண்டி அடிக்கடி தென்கிழக்கு ஆசியா சென்று வர எத்தகைய கப்பல்கள் பயன்பட்டன? எடுத்துச் செல்லப்பட்ட வர்த்தகப் பொருள்கள் யாவை? இவை எவ்வாறு பொதி செய்யப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டன? சென்ற இடங்களில் தமிழ்நாட்டுக் கணங்கள் எவ்வாறு இயங்கின? இவை போன்ற அடிப்படை வினாக்களுக்கு விடை காண முடியாத நிலையில் இவ் வர்த்தகம் பற்றிய அறியாமை நிலவுகின்றது. இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி கல்வெட்டுச் சான்றுகள் கூட 900 இற்கு முன் அரிதாகவே கிடைக்கின்றன. அஞ்சு வண்ணம் மற்றும் மணிக்கிராமம் போன்ற வணிக கணங்கள் பற்றிக் கூறும் கல்வெட்டுகள் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன் கிடைக்கவில்லை.

மிகப்பழைய தென்னிந்திய வணிக கணங்களுள் ஒன்று மணிக்கிராமம். இந்த வணிக கணத்தைப் பற்றி ஆவணங்கள் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாய் தென்னிந்தியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. பத்தாம் நூற்றாண்டில் இலங்கையில் உள்ளூர்ப் பகுதியாகிய மஹியங்கனைக்கு அருகாமையில் ஹோபிடிகம என்ற இடத்தில் மணிக்கிராமத்தவர் வர்த்தகம் நடத்தினர் என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுண்டு. இப்படியான உள்ளூர் வர்த்தக மையம் ஒன்றில் தம் முயற்சிகளில் ஈடுபட்ட மணிக்கிராமத்தவர் முதலில் கரையோர மையங்களாகிய திருகோணமலை, மாதோட்டம் போன்ற இடங்களில் தங்கள் நிலையங்களை நிறுவியிருப்பர் எனலாம்.

ஒன்பதாம் நூற்றாண்டில் மணிக்கிராமத்தவர் தாய்லாந்தின் தக்குவா-பா என்னும் துறையில் பல வகைப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்கு அவ்விடத்தில் கிடைத்த தமிழ்க் கல்வெட்டு ஒன்று சான்று பகருகின்றது. இதே நூற்றாண்டில் இவ்வணிக கணத்தினர், கேரளக் கரையோரத்திலும் பல முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து வர்த்தகம் நடத்திய பிற வணிக கணங்கள் மற்றும் வர்த்தகக் குழுவினர் ஆகியோருள் நான்கு நாட்டார் என்ற கணத்தைச் சேர்ந்தோரும் செட்டிகளும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் அநுராதபுரத்தில் சில சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது. நான்கு நாட்டார், பௌத்தப் பள்ளி ஒன்றுக்கு ஆதரவு வழங்கியவர்களாகவும், செட்டிகள் சைவக் கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்ட பணத்தை வைப்பாகப் பெற்றிருந்ததையும் இவற்றால் அறியலாம்.

தென்னிந்திய வணிக கணத்தினர் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமய நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்குவோராகவும் பிராமணர்களையும் பௌத்த சங்கத்தாரையும் தென்னிந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்ல உதவுவோராகவும், சிற்ப, கட்டிட வேலைப்பாடுகளை அமைப்பதற்கு சமய நிறுவனங்களுக்கு உதவுவோராகவும் செயலாற்றினர் என்பதை மறைமுகமான சான்று கொண்டு அறியலாம். இச் சான்று கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றின் வடிவத்தில் இலங்கையிலும் தென்கிழக்காசியாவிலும் கிடைக்கின்றது. பிற்பட்ட காலத்தில் கொழும்பு, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்துக் கோயில்கள் அமைப்பதிலும் அவற்றைப் பராமரிப்பதிலும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற செட்டி சமூகத்தினரும் பிற வணிகர்களும் உதவியது போன்றதே முன்னர் வணிக கணங்கள் எடுத்த முயற்சிகள் எனலாம்.

ஐந்தாம் நூற்றாண்டுக்கும் ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த சமஸ்கிருதக் கல்வெட்டுகள் பல இலங்கையிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் கிடைத்துள்ளன. இவை தென் பிராமி எனப்படும் எழுத்திலும் அதன் வழியாக உருவாகிய பல்லவ கிரந்தம் என்ற எழுத்திலும் உள்ளன. இந்த எழுத்து முறைகள் பல்லவர் ஆண்ட பகுதிகளில் சமஸ்கிருதத்தை எழுதுவதற்குப் பயன்பட்டவை. ஆகவே, இந்த எழுத்து முறைகளைக் கையாண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டமை பல்லவப் பிரதேசத்திலிருந்து வந்த சிற்பிகளும், பிராமணர்களும், வணிகர்களும் வெளிநாடுகளுக்குச் சென்று முயற்சிகளில் ஈடுபட்டதற்குச் சான்றாகும். பெரும்பாலும் இக் கல்வெட்டுகளுடன் சைவ, வைணவச் சிலைகள் மற்றும் கோயில்களின் அழிபாடுகள் ஆகியவையும் கிடைத்துள்ளமை இக் கருத்துக்கு வலுவூட்டுகிறது.

இப்படியான தொல்லியல் ஆதாரங்களுள் மிக முற்பட்ட ஒன்றாக லாஓஸ் நாட்டில் சம்பஸ்ஸக் என்னும் இடத்தில் கிடைத்த சான்றினைக் குறிப்பிடலாம். சம்பஸ்ஸக் நகரத்தில் உயரிய தூண் ஒன்றில் ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தென் பிராமி எழுத்தில் ஒரு சமஸ்கிருதக் கல்வெட்டு உள்ளது. சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய தெய்வங்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடைய கல்வெட்டாக அது இருந்தது. சம்பஸ்ஸக் நகரத்துக்கு அருகாமையில் ஏழாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட வேறு இரு சமஸ்கிருதக் கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லாஓஸ் நாட்டுக்கு அருகில் உள்ள வியட்நாமில், பழைய ‘பு – நான்’ அரசு இருந்த தென் பகுதியில், இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில் ஒரு முக்கிய துறையாக விளங்கிய ஒக்-இயோ என்ற இடத்தில் இன்னொரு சமஸ்கிருதக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது. தென் பிராமி எழுத்தில் உள்ள இக்கல்வெட்டு வர்த்தமானர் என்ற தெய்வத்துக்குக் கட்டப்பட்ட ஒரு கோயில் பற்றிக் குறிப்பிடுகின்றது. இவை போல மேலும் பல கல்வெட்டுகள் பல்லவ – கிரந்த எழுத்தில் எழுதப்பட்டவையாய் தாய்லாந்திலும் மலேஷியாவிலும் கிடைத்துள்ளன.

பல்லவ கிரந்த எழுத்திலுள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுகள் இலங்கையிலும் கிடைத்துள்ளன. இவை சிறப்பாகத் தமிழர் செல்வாக்குப் பெரிதும் காணப்பட்ட வடகிழக்கு இலங்கையில் கிடைத்துள்ளன. திருகோணமலைக்கு வடக்கே திரியாய் என்ற இடத்தில் இருந்த மஹாயான வழிபாட்டுத் தலத்தில் ஒன்றும் திருகோணமலைக்குத் தெற்கே குச்சவெளியில் இன்னொன்றும் கிடைத்துள்ளன. உள் நாட்டில் மிஹிந்தலையிலும் ஒரு சமஸ்கிருதக் கல்வெட்டுக் கிடைத்துள்ளது.

பல்லவ கிரந்தம் மஹாயான பௌத்தர்களால் மட்டுமன்றித் தேரவாத பௌத்தர்களாலும் பிறராலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக சிங்கள எழுத்தின் வளர்ச்சியில் சில தாக்கங்கள் ஏற்பட்டன. குகைக் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட பிராமி எழுத்திலிருந்து படிப்படியாக மாறி சிங்கள எழுத்தாக உருவாகிக் கொண்டு வந்த எழுத்து முறை பல்லவ கிரந்தத்தினால் பாதிக்கப்பட்டுப் புதிய வழியில் பரிணாமம் பெற்றது.

இவ்வாறு பல்லவ அரசிலிருந்து பரவிய செல்வாக்கு தமிழ்நாட்டிலிருந்து பெளத்த சங்கத்தாரும், சைவ சமயத் தலைவர்களும் மற்றும் பல்லவ கிரந்தத்தில் கல்வெட்டுகளைப் பொறிப்பதற்குத் தேர்ச்சி பெற்ற சிற்பிகளும் இலங்கைக்குச் சென்றிருந்தமையைக் காட்டி நிற்கின்றது.

நீர்ப்பாசனவியல் தொழில்நுட்பம்

இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய உறவு ஏற்பட்ட இன்னொரு துறை நீர்ப்பாசனவியல் தொடர்பான துறையாகும். இது பற்றிப் பெரும்பாலும் இலங்கை வரலாற்றாசிரியர்கள் கவனம் செலுத்தவில்லை. வரலாற்றுத் தொடக்கக் காலத்திலிருந்து தொடர்ச்சியாக, இத் துறையில் ஏறத்தாழ 1000 ஆண்டுகளாகத் தொழில்நுட்ப அறிவுப் பரிமாறல் மற்றும் நீர்ப்பாசன அமைப்புத் தொழிலாளர் வருகை ஆகியவை இரு பிரதேசங்களுக்கும் இடையில் நடைபெற்றன.

இலங்கையில் நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் ஆதி இரும்பு காலப் பண்பாட்டைத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வந்தோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர்கள் ஆதி இரும்பு காலப் பண்பாட்டுக் கூறுகளாகிய இரும்பின் உபயோகம், நெற் பயிர்ச்செய்கை, தொடக்க நிலையிலிருந்த நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் மற்றும் சிறு குளங்களைத் தோண்டும் கலைத்திறன் ஆகியவற்றை இலங்கைக்குக் கொண்டுவந்து பரப்பினர்.

குடியிருப்புகள் பெருகி விவசாய முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றபோது போதிய நீரைப் பயிர்ச்செய்கைக்குத் தேக்கி வைக்க வேண்டிய அவசியம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் தோன்றிய அரசமைப்புகளில் தொடக்கக் கட்டத்திலேயே உணரப்பட்டது. அநுராதபுரத்தில் தோன்றிய அரசில் அமைக்கப்பட்ட குளங்கள் பற்றி இலங்கையின் பாளி வரலாற்று நூல்கள் தகவல் தருகின்றன. தமிழ்நாட்டின் சங்கச் செய்யுள்கள் ‘குளம் தொட்டு வளம் பெருக்கிய’ மன்னர்களைப் புகழ்ந்துரைக்கின்றன. குடிகளின் பயிர்ச் செய்கைக்குத் தேவைப்பட்ட நீரைப் போதிய அளவில் பெறுவதற்கான முறையில் குளங்களையும் அணைகளையும் அமைப்பது தொடக்க கால மன்னர்களுடைய முக்கிய இலட்சியங்களுள் ஒன்றாக இருந்தது என்பது தெளிவு. சமய நிறுவனங்களை அமைக்கும் கடமை போல் குளங்களை அமைக்கும் கடமை மன்னர்களுடைய தலையாய கடமை ஆகியது. இக் காரணத்தினாலே தான் இலங்கையின் பாளி வரலாற்று நூல்களிலே, சுருக்கமாக ஒவ்வொரு மன்னனுடைய வரலாறும் கூறப்படும் போது, அம்மன்னன் கட்டிய சமய நிறுவனங்களும் நீர்ப்பாசனக் குளங்களும் தவறாது குறிப்பிடப்படுகின்றன. தென்னிந்திய மன்னர்களும் குளங்களை அமைப்பதில் கவனஞ் செலுத்தினர் என்பதற்குச் சான்று இருந்தாலும், அவர்கள் அமைத்த குளங்கள் பற்றிய விபரங்கள் இலங்கையைப் போல வரலாற்றேடுகளில் பேணப்படவில்லை. ஆனால் ஆறாம் நூற்றாண்டின் பின், கல்வெட்டுகள் முன்னைவிடப் பரவலாகப் பொறிக்கப்பட்ட போது, குளங்கள் பற்றிய தகவல்களும் கிடைக்கத் தொடங்குகின்றன.

கரிகாலன் கதைகள்

குளம் தொட்டு வளம் பெருக்கிய ஒரு பெரு மன்னனாக மிகவும் முற்பட்ட ஒரு கட்டத்திலேயே புகழ் பெற்ற ஒரு தமிழ் மன்னன் கரிகாலச் சோழன் ஆவான். இவன் காலத்தை உறுதியுடன் கூறுவதற்குச் சான்று இல்லை. இவன் பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்திருக்கலாம். சங்கச் செய்யுளாகிய பட்டினப் பாலையில் கரிகாலன் காடு கொன்று நாடாக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கி அரசின் வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியவனாகப் போற்றப்படுகின்றான். பிற்பட்ட காலத்துத் தெலுங்குச் சோழர் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோர் கல்வெட்டுகளிலும் காவேரி நதியின் அணைக்கட்டுக்களை உயர்த்திய மன்னனாக கரிகாலன் நினைவு கூரப்படுகின்றான். இலங்கையிலும், குறிப்பாகக் கரிகாலன் பற்றியும் பொதுப்படச் சோழ மன்னன் ஒருவன் பற்றியும், நீர்ப்பாசனம் தொடர்பாகப் பல கதைகள் சிங்கள வரலாற்றேடுகளிலும் பொதுமக்கள் இலக்கியத்திலும் பேணப்பட்டுள்ளன. இக் கதைகளில் காணப்படும் விபரங்களை உண்மை என ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், மன்னர்கள் குளம் மற்றும் அணை ஆகியவற்றை அமைத்து வளம் பெருக்குவதில் காட்டிய ஆர்வம் இக் கதைகள் மூலம் வெளிப்படுகின்றது.

மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையுள்ள காலத்தில் அநுராதபுரத்தில் அரசைக் கைப்பற்ற விழைந்தோர் பல தடவைகள் தென்னிந்தியாவுக்கு ஓடிச் சென்று படை திரட்டி வந்தனர். போரில்லாத போது இப்படிக் கொண்டுவரப்பட்ட படையினர் நீர்ப்பாசன வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பர். இப்படியான நிகழ்ச்சிகள் இலங்கையில் வழங்கும் கரிகாலன் கதைகளுக்கு வழிவகுத்திருக்கலாம். கரிகாலன் மற்றும் அநுராதபுர மன்னன் கஜபாகு ஆகியோர் பற்றி வழங்கும் கதைகளில் உட் பொருளாக அமைவது என்னவெனில், காவேரியில் அணைகட்ட சோழ மன்னன் 12,000 கைதிகளை இலங்கையிலிருந்து கொண்டு சென்றான் என்பதுவும், பின்னர் அதைக் கேள்வியுற்ற அநுராதபுரத்து மன்னன் கஜபாகு என்பான் சோழ நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அக் கைதிகளை மட்டுமின்றி, அங்கிருந்து மேலும் 12,000 கைதிகளைக் கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினான் என்பதும் ஆகும். பெருங் குளங்களை வெட்டி நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போது, சில இலங்கை மன்னர்கள் தென்னிந்தியாவிலிருந்து வேலையாட்களைத் திரட்டியிருக்கலாம். இப்படியாகப் பல தமிழர்கள் இலங்கைக்கு இக் காலத்தில் வந்து குடியேறித் தமிழ் பேசும் இனக் குழுவை மேலும் வலுப்படுத்தியிருப்பர்.

நீர்ப்பாசன வேலைகளில் வணிக கணங்களின் பங்கு

குளங்களையும் கால்வாய்களையும் அமைப்பதற்கு மன்னர்கள் மட்டும் பொறுப்பாக இருந்தனர் என்று கூற முடியாது. இக் காலகட்டத்தில் குளங்களை அமைப்பதிலும் பராமரிப்பதிலும் வணிக கணங்களும் பங்கு கொண்டனர் எனக் கொள்ள இடமுண்டு. தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற ஒரு வணிக கணமாகிய மணிக்கிராமம், ஒன்பதாம் நூற்றாண்டில் தாய்லாந்தில் தக்குவா-பா என்னும் இடத்தில் அவனிநாரணம் என்ற குளத்தைப் பராமரிப்பதற்கு பொறுப்பேற்றிருந்தது. இவ்வாறு வர்த்தகம் அல்லாத பிற முயற்சிகளிலும் வணிக கணத்தினர் ஈடுபட்டனர்.

குளம் தொட்டுப் பராமரித்தல் மற்றும் சமய நிறுவனங்களை அமைத்தல் போன்ற முயற்சிகள் வணிக கணத்தார் ஈடுபட்ட வர்த்தகமல்லாத முயற்சிகளுள் சில ஆகும். தென்னிந்திய வணிக கணங்கள் கடல் கடந்த வர்த்தகத்தில் பெரிதும் ஈடுபட்ட காலமாகிய 300 இற்கும் 900 இற்கும் இடைப்பட்ட தொடக்கக் கட்டம் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பிடத்தக்க நீர்ப்பாசன வசதிகள் அமைக்கப்பட்ட காலகட்டமாகும். இலங்கையில் அரசியல் உறுதியின்மை காணப்பட்ட போதும், இப்படியான பொருளியல் வளர்ச்சி ஏற்பட்டமை அதிசயிக்கத்தக்கதே. தென்னிந்தியாவில் பாண்டியரும் பல்லவரும் ஆதிக்கத்துடன் விளங்கியதால் அங்கு பெருங்குளங்கள் அமைக்கப்பட்டமை எதிர்பார்க்கக் கூடியதே. வலிமையற்ற மன்னர் பலர் அநுராதபுரத்தில் ஆட்சி நடத்திய இக் காலப்பகுதியில், மன்னர்கள் நீர்ப்பாசனத் துறையில் பெருந் தொண்டாற்ற வலுவற்றவர்களாக இருந்தனர் எனலாம். இக் காலப் பகுதியில் வணிக கணங்கள் குளந் தொட்டு வளம் பெருக்குவதில் ஈடுபட்டிருத்தல் கூடும். அத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டபோது தென்னிந்தியாவிலிருந்து வேலையாட்களையும் கொண்டு வந்திருக்கலாம்.

அநுராதபுரத்தில் தமிழர்

இதுவரை எடுத்துரைக்கப்பட்ட அரசியல், பொருளியல் மற்றும் சமயம் சார்ந்த முன்னேற்றங்களின் விளைவாக அநுராதபுர அரசில் வாழ்ந்த தமிழர் எண்ணிக்கை மேலும் கூடி முன்னை விட வலுப்பெற்றது. பாளி வரலாற்றேடுகள் மற்றும் சிங்களக் கல்வெட்டுகள் ஆகியவற்றின் சான்று இம் முடிவுக்குச் சார்பாக உள்ளது. சிங்கள இளவரசர்களும் பிற தலைவர்களும் தென்னிந்தியாவிலிருந்து பல தடவை இலங்கைக்குக் கொண்டுவந்த படையினர் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் நூற்றாண்டுகளில் அநுராதபுர மன்னர்களுக்குப் பெரும் பிரச்சினைகளை உண்டு பண்ணினர் என வரலாற்றேடுகள் குறிப்பிடுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் அரசைக் கூடக் கைப்பற்றினர். எடுத்துக்காட்டாகக் கூறினால், இரண்டாவது கஸ்ஸப மன்னன் (650 – 659) இறந்தபின் அவன் மருமகன் மான என்பான் தமிழ்ப் படையினரை வெளியேறும்படி ஆணையிட்டான். இந்த ஆணையை மறுத்த படையினர், அநுராதபுரத்தைக் கைப்பற்றி மன்னனையே வெளியேற்றினர். படையினருடன் போலி உடன்படிக்கை ஒன்றைச் செய்து, மன்னன் மீண்டும் ஆட்சியைப் பெற்ற போதும். வெகுவிரையில் மேலும் எதிர்ப்புகள் தோன்றின. அரசைக் கைப்பற்ற ஆசை கொண்ட ஹத்ததாட்ட என்ற ஒரு சிங்களத் தலைவன் வழமை போல் தென்னித்தியாவுக்குச் சென்று தமிழ்ப் படையினருடன் வந்தான். அவனுடைய தமிழ்ப் படையினர் அநுராதபுரத்தை நோக்கிச் சென்றபோது வழி வழியே மேலும் பல தமிழர் படையினருடன் சேர்ந்து ஹத்ததாட்டனுக்கு ஆதரவு வழங்கினர். ஹத்ததாட்ட தமிழர் உதவியுடன் அரசைக் கைப்பற்றினான். இப்படிப் பல நிகழ்ச்சிகள் பத்தாம் நூற்றாண்டு வரை பாளி வரலாற்றேட்டிலே குறிப்பிடப்படுகின்றன.

இப்படிக் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகளைக் கொண்டு பெறக்கூடிய ஒரு முடிவு என்னவெனில் அநுராதபுர அரசின் வட பாகங்களில் தமிழர் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது என்பதாகும். இலங்கையின் வட பாதியில் இருந்த முக்கியத் துறைகளுக்கும் அநுராதபுரத்துக்கும் இடையில் உள்ள பிரதேசத்தில் தமிழர் குடியிருப்புகள் காணப்பட்டன என்பது பாளி வரலாற்றேடு மற்றும் சிங்களக் கல்வெட்டுகள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகின்றது. தென்னிந்தியாவுக்குச் செல்வதற்குப் பயன்பட்ட இரண்டு முக்கிய துறைகள் மாதோட்டமும் திருகோணமலையும் என்பதில் என்பதில் ஐயமில்லை. இவ்விரண்டு இடங்களிலும் ஏழாம் நூற்றாண்டில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்கள் இருந்தன. பிற்பட்ட நூற்றாண்டுகளில் இவ்விடங்கள் தமிழர் குடியிருந்த இடங்களாகக் காணப்படுகின்றன. ஆகவே பாளி வரலாற்றேடு குறிப்பிடும் தமிழர் குடியிருப்புகள் மாதோட்டத்துக்கும் அநுராதபுரத்துக்கும் இடையில் அல்லது திருகோணமலைக்கும் அல்லது வேறொரு கிழக்குக்கரைத் துறைக்கும் அநுராதபுரத்துக்கும் இடையில் இருந்தன என்று கொள்ளலாம்.

பாளி வரலாற்றேட்டில் அங்குமிங்குமாகக் காணப்படும் குறிப்புகளிலிருந்து பெறக் கூடிய முடிவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் சிங்களக் கல்வெட்டுகளின் சான்றுகள் கிடைக்கின்றன. சிங்களக் கல்வெட்டுகளில் ஒன்பதாம் நூற்றாண்டளவில் தமிழ் ஊர்கள் மற்றும் தமிழ் நிலங்கள் ஆகியவை பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. மன்னனுக்குச் செலுத்தப்பட்ட இறை பற்றிய குறிப்புகள் காணப்படும் கல்வெட்டுகளிலும் இக் காலப்பகுதியில் தமிழர் இறை என்று பொருள்படும் ஒரு சொல்லும் காணப்படுகின்றது. இப்படியான குறிப்புகள் அனுராதபுர அரசில் தமிழர் குடியிருப்புகள் கருத்திற் கொள்ளத்தக்க வகையில் இருந்தமை பற்றிய சான்றுகள் எனலாம். கல்வெட்டுக் காணப்படும் இடங்கள் அநுராதபுரத்துக்கும் வடகிழக்கில் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் பொலநறுவைக்குக் கிட்டிய இடங்களில் கிடைக்கின்றன.

இக்காலகட்டத்தில் அநுராதபுர அரசில் தமிழ்ப் படையினர் தொடர்பான அலுவல்களைக் கவனிப்பதற்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த அதிகாரி ‘தமிளாதிகாரி’ என்ற பதவிப் பெயரைப் பெற்றிருந்ததான். இவ்வாறு ஓர் அதிகாரி நியமிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்தமைக்குப் பெருந் தொகையான தமிழ்ப் படையினர் அரசில் குடியிருந்தமை காரணமாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட கல்வெட்டுகள் காணப்பட்ட இடங்கள் அநுராதபுர அரசில் தமிழர் குடியிருப்புகள் கூடுதலாக இருந்த பகுதிகளை அறிய உதவுகின்றன. இவை வடகிழக்குப் பாகத்தில், பொலநறுவைக்குச் சிறிது வடக்கே கிடைத்த கல்வெட்டுகள். வடகிழக்கில், சிறப்பாகக் கரையோரத்தில், பல்லவர் செல்வாக்கை வெளிப்படுத்தும் சிற்பங்களும் சமஸ்கிருதக் கல்வெட்டுகளும் கிடைத்தமை முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பதினோராம் நூற்றாண்டில் இதே பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க தமிழ்க் கல்வெட்டுகளில் சைவக் கோயில்கள் இருந்தமை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பதினோராம், பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய வணிக கணங்களின் செல்வாக்கும் பெருமளவில் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. பதினோராம் நூற்றாண்டில் சோழர் இலங்கையில் ஆதிக்கம் பெற்றபோது இப்பிரதேசத்திலேதான் வலுவுடன் காணப்பட்டனர். இவற்றை எல்லாம் நோக்குமிடத்து வடகிழக்கு இலங்கை சோழர் ஆட்சிக்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகத் தமிழர் குடியிருப்புகளைக் கொண்டிருந்தது என்பது புலனாகின்றது. அதுமட்டுமின்றி அநுராதபுரத்துக்கு வடக்கே திருகோணமலை மாவட்டத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் மாவட்டம் வரை தமிழர் குடியிருப்புகள் இருந்தன என்று ஊகிக்க இடமுண்டு.

அநுராதபுரத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத வடக்கும், வடகிழக்கும் 

இலங்கையின் வடக்கு எல்லைப் பகுதியில், அதாவது இன்றைய யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகிய இடங்களில், இக் காலப்பகுதியில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளையும், முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ளச் சான்றுகள் போதா. அநுராதபுர அரசைப் பற்றிக் கூறும் பாளி வரலாற்றேட்டில் ஏழாம் நூற்றாண்டு வரை வட பகுதி பற்றிக் குறிப்பிடத்தக்க தகவல் எதுவும் இல்லை.

ஏழாம் நூற்றாண்டளவில் இருந்து பாளி வரலாற்றேடு மூன்று முக்கிய பிரதேசங்களை வேறுபடுத்திக் குறிப்பிடுகின்றது. இவை முன்பிருந்து வரலாற்றேடுகளில் குறிப்பிடப்பட்டு வந்த ரோஹண (இலங்கையின் தென் பாகம்) மற்றும் மலய (இலங்கையின் நடுவேயுள்ள மலைப் பிரதேசம்) ஆகியவற்றை விட வேறான பிரதேசங்கள். அவை: உத்தர தேஸ (வட நாடு), பசின தேஸ (கீழ் நாடு) மற்றும் தக்கிண தேஸ (தென்நாடு). இவற்றின் எல்லைகளை எவ்விதத்திலும் அறிய முடியாது. இப்பிரதேசங்கள் அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட அரசின் நடுப்பகுதிக்கு வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் இருந்த பிரதேசங்கள் எனவும் திட்டவட்டமற்ற முறையில் வகுக்கப்பட்ட மாநிலங்கள் எனவும் கொள்வது தவறாகாது. அநுராதபுரத்தில் ஆண்ட மன்னன் இவற்றைத் தன் ஆதிக்கத்துக்குட்பட்ட பிரதேசங்களாகக் கருதினான். இவற்றை நிர்வகிப்பதற்கு மன்னன் தன் குடும்பத்தினரை நியமிக்கும் வழக்கமும் தோன்றியிருந்தது. வாரிசுரிமையைப் பெற்றிருந்த மகனைத் தக்கிண தேஸத்தின் ஆட்சியாளனாக நியமிப்பது பொது வழக்காக இருந்தது. பசின தேஸத்துக்கு இளவரசன் ஒருவன் நியமிக்கப்பட்டது பற்றிச் சில குறிப்புகள் இருப்பினும், வடக்கில் இருந்த உத்தர தேஸத்துக்கு யாராவது நியமிக்கப்பட்டது பற்றிச் சான்றில்லை.

உத்தரதேஸத்தைப் பற்றிய குறிப்புகளை ஆய்வு செய்தால் அப்பிரதேசம் ஏனைய பிரதேசங்களை விட வேறுபட்டதாக இருந்தது என்பதை அறியலாம். அநுராதபுரத்து மன்னர்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு பிரதேசமாக பலமுறை அதனைக் காணலாம். அநுராதபுரத்தின் ஆட்சியை எதிர்த்தோர் அங்கு ஆதரவு பெற்றதையும் காணலாம். முற்பட்ட நூற்றாண்டுகளில் போலல்லாது, ஆறாம் நூற்றாண்டின் பின் தென்னிந்தியாவிலிருந்து வந்த படைகள் வட பகுதியில் வந்திறங்குவதையும் அவதானிக்க முடிகின்றது. அப்படி வந்த படைகள் வடக்கில் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின் அநுராதபுரத்தை நோக்கி முன்னேறின. இவற்றை நோக்குமிடத்து அநுராதபுரத்து ஆட்சியாளருக்குச் சாதகமான சூழ்நிலை வட பகுதியில் நிலவவில்லை என்பது தெளிவு.

தொடரும்.


ஒலிவடிவில் கேட்க

3211 பார்வைகள்

About the Author

கா.இந்திரபாலா

பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா இலங்கையின் வரலாற்றாய்வாளர், மொழியியலாளர் மற்றும் நெடுங்கால தொல்லியல் அனுபவம் உடையவரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி கற்றறிந்தவராவார். ஆதி இலங்கையில் இந்துமதம், இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், The Evolution of an Ethnic Identity, இலங்கையில் தமிழர் ஆகியன இவரின் குறிப்பிடத்தக்க நூல்களாகும்.