திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் நகரைக் கடந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வீதியில் உள்ள ஈச்சிலம்பத்தைச் சந்தியில் பிரதேச செயலகம் காணப்படுகிறது. இச்சந்தியில் இருந்து கிழக்குப் பக்கமாகச் செல்லும் வீதியில் ஈச்சிலம்பத்தையைக் கடந்து செல்லும்போது சுமார் 3 கி.மீ தூரத்தில் உப்பாறு எனும் ஆறு ஓடுகிறது. இவ்விடத்தில் கல்லடி ஆற்றுத் துறையடி அமைந்துள்ளது. சுமார் 100 மீற்றர் அகலமான இவ்வாற்றை படகு மூலம் கடந்து கிழக்குப் பக்கமாக மேலும் ஒரு கி.மீ சென்றால் நீலியம்மன் மலையை அடையலாம்.
இங்கு செல்வதற்கு தரைவழிப் பாதை ஒன்றும் உள்ளது. ஈச்சிலம்பத்தைச் சந்தியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வெருகல் பாலத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் 3 கி.மீ தூரத்தில் இலங்கைத்துறைச் சந்தி உள்ளது. இங்கிருந்து கிழக்குப் பக்கமாகச் செல்லும் வீதியின் வலது பக்கம் பண்டைய ஆனைத்தீவு குளம் அமைந்துள்ளது. குளத்தின் அணைக்கட்டில் பாதை ஓரத்தில் பழமை வாய்ந்த கட்டம்மன் கோயிலும், கோயிலுக்குச் சற்றுத் தூரத்தில் குளத்தின் வடக்குப் பக்கத்தில் பண்டைய குடியிருப்பு ஒன்றின் எச்சங்களும் காணப்படுகின்றன. இவற்றைக் கடந்து செல்லும்போது முட்டுச்சேனை கரச்சி ஆறும், அதை அடுத்து சிறிது தூரத்தில் முட்டுச்சேனைச் சந்தியும் அமைந்துள்ளன. இங்கிருந்து வடக்குப் பக்கமாக இலங்கைத் துறைக்குச் செல்லும் வீதியில் முட்டுச் சேனை, வாழைத்தோட்டம் ஆகிய ஊர்களைக் கடந்து சென்றதும் 4 கி.மீ தூரத்தில் கல்லடி நீலியம்மன் மலை அமைந்துள்ளது.
இம்மலை அமைந்துள்ள கல்லடி எனும் இடத்தில் இலங்கையின் ஆதிக்குடிகளான வேடர் பண்டைய காலம் முதல் வாழ்ந்து வருவதாகவும், இவர்களின் மூதாதையர் மிகப் பண்டைய காலத்தின் இம்மலையில் நீலியம்மன் எனும் பெண் தெய்வத்தை வழிபட்டு வந்ததாகவும் முதியோர் கூறுகின்றனர்.
நீலியம்மன் தமிழர்களின் மிகப்பண்டைய கிராமியத் தெய்வமாகும். 2500 ஆண்டுகளுக்கு முன்பு நீலியம்மன் வழிபாடு தோற்றம் பெற்றதாக தமிழக ஆலய வரலாற்றுக் குறிப்புகள் கூறுகிறன. தமிழ்நாட்டில் பழையனூர், கோவில்பாளையம், உனையூர், அரணாரை, முதியானெரிச்சல் ஆகிய இடங்களில் நீலியம்மனுக்கு கோயில்கள் உள்ளன.
மிகப்பண்டைய காலத்தில் இலங்கைத்துறை – கல்லடி பகுதியில் வேடர் குல மக்கள் வாழ்ந்து வந்த காலத்தில் இங்கு மலைப் பாறைகள் நிறைந்து காணப்பட்டன. இவற்றில் பிரதானமானது நீலியம்மன் குடி கொண்டிருக்கும் மலையாகும். ஏனையவை நாசவன் கல் மலை, உழுவ மலை, கல் முகத்து மலை ஆகிய சிறிய மலைப்பாறைகளாகும். இங்கு மலைப்பாறைகள் நிறைந்து காணப்பட்டதாலும், இவற்றில் பிரதான மலைப்பாறை அடிவாரத்தில் நீலியம்மன் குடி கொண்டிருந்ததாலும் இவ்வூர் கல்லடி எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. நீலியம்மன் குடி கொண்டிருந்ததால் இங்கிருந்த மலை நீலியம்மன் மலை எனப் பெயர் பெற்று விளங்கியது.
வேடர் குல மக்கள் தினமும் பயபக்தியுடன் மலையடிவாரத்தில் இருந்த நீலியம்மனுக்கு பூஜை வழிபாடுகள் நடத்தி வந்தனர். 1830 ஆம் ஆண்டு இவ் அம்மனுக்கு மலையில் கோயில் கட்டி வழிபட்டு வந்தனர்.
உள்நாட்டு யுத்தம் நிலவிய காலத்தில் 2006 ஆம் ஆண்டு இங்கிருந்த மக்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்து சென்ற காலகட்டத்தில் விமானத் தாக்குதலினால் கல்லடி நீலியம்மன் கோயில் முற்றாகச் சேதமடைந்ததாகவும், 2007 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின் ஊர் மக்கள் மீண்டும் இங்கு வந்தபோது கோயில் அழிக்கப்பட்டு, கோயில் இருந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு விகாரை அமைக்கப்பட்டு, அம்மன் சிலை வீதியில் போடப்பட்டிருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அதன் பின்பு ஊர் மக்கள் அம்மன் சிலையை எடுத்து நீலியம்மன் மலையின் முன்பாக உள்ள பிரதான வீதியின் அருகில் ஒரு சிறிய கோயில் கட்டி அங்கு சிலைகளை ஸ்தாபித்து வழிபட்டு வருகின்றனர்.
இவ்விதம் இரண்டாயிரம் ஆண்டு கால தொன்மை வரலாற்றைக் கொண்ட இம்மலைப்பகுதி நாக மன்னர்களுடன் தொடர்பு பெற்று விளங்கியுள்ளது. இலங்கையை ஆண்ட குட்டகண்ண தீசன் எனும் மன்னனின் இரண்டாவது மகனான மகாதாத்திய மகாநாகன் எனும் மன்னன் இங்கிருந்த வழிபாட்டுத்தலத்திற்கு மானியங்கள் வழங்கியமை பற்றிய கல்வெட்டுகள் இம்மலையில் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மன்னன் பொ.ஆ. 7 முதல் 19 ஆம் ஆண்டு வரை இலங்கையின் மன்னனாக ஆட்சி செய்து வந்துள்ளான். இவனது காலத்தில் பொறிக்கப்பட்ட ஏழு பிற்கால பிராமிக் கல்வெட்டுகள் இம்மலையில் உள்ளன. இவை அனைத்தும் பாறைக் கல்வெட்டுகளாகும். இவற்றில் 3 கல்வெட்டுகளில் நாகர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது கல்வெட்டு நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் முதலாவது வரியில் “மகாததிய நாக மஹா ரஜ” எனவும், இரண்டாவது வரியில் “நாக அலிய” எனவும் எழுதப்பட்டுள்ளது. நாக அலிய என்பது நாக கால்வாய் எனப் பொருள்படுகிறது. மேலும் இம்மலை “பஹன பவத்த” என அழைக்கப்பட்டுள்ளமை பற்றியும் கல்வெட்டுக் கூறுகிறது. பஹன பவத்த என்பது தமிழில் “ஒளி மலை” எனப் பொருள்படும். இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களின் படி, நாக மகாராஜன் இங்கு பஹன பப்பத விகாரை அமைத்து, அங்கு வசிக்கும் பிக்குகளுக்காகப் பூஜை ஒன்றை நடத்தியதாகவும், இங்குள்ள நாக எனும் பெயருடைய கால்வாய்க்குரிய நீர் வரியையும், இருபது பங்கு நெற் காணிகளுக்குரிய காணி வரியையும் விலக்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது கல்வெட்டு மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் முதலாவது வரியில் “மகா நாக ரஜ” என எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் படி, மகா நாக மன்னன் 24 கஹவனு பணம் விலை கொடுத்து வாங்கிய நிலத்தை பஹன பப்பத விகாரைக்கு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது கல்வெட்டின் இரண்டாவது வரியில் “நாக அலிஹி” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள விபரங்களின்படி, ரபா எனும் அமைச்சர் நாக கால்வாயின் நீர்ப்பாசனம் மூலம் கிடைக்கும் வரிப் பணத்தையும், அத்துடன் 500 கஹவனு பணத்தை வங்கியில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியையும் பஹன பப்பத விகாரையில் வாசம் செய்யும் பிக்குமாரின் தேவைக்காகப் பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் “நாக கால்வாய்” இப் பிரதேசத்தில் இருந்த விளை நிலங்களுக்கும், நெல் வயல்களுக்கும் நீர்ப்பாசனம் வழங்கிய முக்கிய பெரிய நன்னீர்க் கால்வாயாக இருந்திருக்க வேண்டும். இப்பிரதேசத்தில் பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் எதுவும் இல்லாதபடியால் நாக கால்வாயில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் இப்பகுதி மக்கள் அதிக நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு சிறந்த பயன் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நன்னீர்க் கால்வாய் இன்று இப்பகுதியில் காணப்படவில்லை. இருப்பினும் நீலியம்மன் மலையின் பின் பக்கம் ஓடும் உப்பாறு அன்றைய நாக கால்வாயாக இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. இன்று உப்பு நீர் கலந்து காணப்படும் இவ் ஆறு அன்று கடல் நீர் உட்புகாத வண்ணம் அமைக்கப்பட்டிருக்கலாம்.
கல்லடி நீலியம்மன் மலையின் தெற்கில் 5 கி.மீ தூரத்தில் வெருகல் ஆறு ஓடுகிறது. அன்றைய நாக மன்னர்கள் இவ்வாற்று நீரை மறித்து அணைகட்டி, அங்கிருந்து வடக்கு முனை வரை ஒரு கால்வாயை வெட்டி இப்பகுதிக்கு நீர்ப்பாசனம் வழங்கியிருக்க வேண்டும். வெருகல் ஆற்றில் இருந்து இலங்கைத்துறை முகத்துவாரம் வரையான 12 கி.மீ தூரத்திற்கு இக்கால்வாய் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது வெருகல் ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டி இப்பகுதியில் ஏற்கனவே இருந்த சிற்றாறுகளுடன் இணைத்திருக்க வேண்டும். இப்பகுதியின் நீர்ப்பாசனத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அகலமான பெரிய கால்வாயை வெட்டி அதற்கு நாக கால்வாய் எனப் பெயரிட்டிருக்க வேண்டும். ஏனெனில் இன்று நீலியம்மன் மலையின் பின்பக்கம் நாம் காணும் உப்பாறு சுமார் 100 மீற்றர் அகலத்தில் ஒரே சீராக ஓடுவதைக் காணலாம்.
ஈச்சிலம்பத்தை – வட்டவன் கல்வெட்டுகள்
பரதர் குலத்தைச் சேர்ந்த சுவாமி நாகன் பற்றிய கல்வெட்டு
திருகோணமலையில் இருந்து தெற்கு நோக்கி மூதூர் ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், மூதூரில் இருந்து 23 கி.மீ தூரத்தில் சுங்கான்குழி சந்தி காணப்படுகிறது. இச்சந்தியின் கிழக்குப் பக்கத்தில் ஈச்சிலம்பத்தை, இலங்கைத்துறை ஆகிய கிராமங்களும், சந்தியின் தெற்குப் பக்கத்தில் 2 கி.மீ தூரத்தில் வட்டவன் எனும் கிராமமும் அமைந்துள்ளன.
வட்டவன் கிராமத்தின் கிழக்குப் பக்கத்தில் பிரதான மட்டக்களப்பு வீதியும், அதன் கிழக்குப் பக்கம் வயல் வெளிகள் நிறைந்த பகுதியும் காணப்படுகின்றன. பிரதான வீதியில் இருந்து 800 மீற்றர் தூரத்தில் வயல் வெளிகளின் மத்தியில் ஒரு ஒடுங்கிய நீண்ட காடுகளுடன் கூடிய மலைப்பாறைத் தொடர் காணப்படுகிறது. இப்பாறைத் தொடரின் அருகில் சுங்கான் குழி ஆறு ஓடுகிறது. ஆற்றுக்கு சமாந்திரமாக சுமார் 50 மீற்றர் அகலத்தில் 700 மீற்றர் நீளமான இப்பாறைத் தொடர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆங்காங்கே சிறிய காடும், ஒன்றோடு ஒன்று ஒட்டிய வண்ணம் மலைப் பாறைகளும், குன்றுகளும் காணப்படுகின்றன. இச் சிறிய காட்டில் உள்ள மலைப்பாறைகளில் இயற்கையாக அமைந்துள்ள 10 கற்குகைகள் காணப்படுகின்றன. இவற்றில் பல குகைகளில் கற்புருவங்கள் வெட்டப்பட்டுள்ளன.
இவற்றில் 5 கற்குகைகளில் மொத்தமாக 5 பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. 3 முற்காலப் பிராமிக் கல்வெட்டுகளும், 2 பிற்காலப் பிராமிக் கல்வெட்டுகளும் இதில் அடங்குகின்றன. இவற்றில் தமிழ் மொழியில் பெருமகன் எனும் அர்த்தம் கொண்ட பருமக எனும் சொல் 2 கல்வெட்டுகளிலும், பாண்டியரைக் குறிக்கும் மஜ்ஜிம எனும் சொல் ஒரு கல்வெட்டிலும், நாகரைக் குறிக்கும் நாக எனும் சொல் 2 கல்வெட்டுகளிலும் காணப்படுகிறது.
இவற்றில் நாக எனும் சொல் காணப்படும் முதலாவது கல்வெட்டில் நாக எனும் சொல்லுக்கு முன்பாக “பத” எனும் சொல் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது “பத நாக” என எழுதப்பட்டுள்ளது. பத, பரத ஆகிய பதங்கள் “பரதர்” குலத்தவரைக் குறிக்கும் சொற்கள் என பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் பேராசிரியர் எஸ். பத்மநாதன் “பத” எனும் சொல்லின் பெண்பால் வடிவமே “பதி” எனும் சொல் எனவும், “பத்தன்” எனும் தமிழ்ச் சொல்லே “பத” என பிராமிக் கல்வெட்டுகளில் வந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
பேராசிரியர் பரணவிதான இச்சொல்லுக்கு ஆங்கிலத்தில் “Lord” எனப் பொருள் கூறியுள்ளார். எல்லாவல மேதானந்த தேரர் இதற்கு சிங்களத்தில் “சுவாமி” எனப் பொருள் கூறியுள்ளார். இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“புசஹ பத்த நாகச மகாசித்தச”
இதன் பொருள் ஆங்கிலத்தில், “Of Pussa, of Lord Naga, of Mahacitta” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழில், “புஸ்ஸவுடைய, சுவாமி நாகனுடைய மற்றும் மகாசித்தனுடைய” எனப் பொருள்படுகிறது. மேலும் பேராசிரியர்களின் கருத்துப்படி சுவாமி நாகனுடைய என்பதை பரதர் குலத்தைச் சேர்ந்த நாகனுடைய எனவும், பத்தன் நாகனுடைய எனவும் பொருள் கொள்ளலாம். இக்கல்வெட்டின் மூலம் நாக வழிபாடு செய்த ஓர் முனிவர் இப்பகுதியில் வாழ்ந்துள்ளார் எனத் தெரிகிறது.
பாமர பக்தன் நாகன் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு
ஈச்சிலம்பத்தையில் உள்ள நாக எனும் சொல் காணப்படும் இரண்டாவது கல்வெட்டு பிற்காலப் பிராமிக் கல்வெட்டாகும். இக்கல்வெட்டு பொ.ஆ. 1 ஆம், 2 ஆம் நூற்றாண்டுகளில் பொறிக்கப்பட்டதாகும். இக்கல்வெட்டு பக்தன் நாகன் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு:
“திஸ்ஸ தேரஹ லேன கடு திசிக பிகு சஹயே நியதே பிதஹ உபசக நாகஹ லேன”
இதற்கு ஆங்கிலத்தில் “The cave of the elder Tissa has been dedicated to the Sangha of the four quarters. The cave of his father, the lay devotee Naga” எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. இது தமிழில் “தேரர் திஸ்ஸவின் குகை நாலா பக்கங்களிலும் இருந்து வரும் சங்கத்தார்க்கு வழங்கப்படுகிறது. இவனின் தந்தையான பாமர பக்தன் நாகனின் குகை” எனப் பொருள்படுகிறது. இக்கல்வெட்டுகள் மூலம் ஈச்சிலம்பத்தை பகுதியில் நாக வழிபாடு செய்தவர்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.