இலங்கை முஸ்லிம்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வருபவர்கள். தங்களது மத அடையாளமான இஸ்லாமும், மொழி அடையாளமான தமிழும் இணைந்த ஒரு தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தை நிறுவி தங்களை ஒரு தனி இனமாக நிறுவிக் கொண்டவர்கள். இதனால் இலங்கை வரலாற்றில், அவர்கள் பின்பற்றி வரும் இஸ்லாம் பாரம்பரியத் தன்மைகளோடு இலங்கை – இந்திய மண்ணோடும், பிற பண்பாடுகளோடும் ஊடாட்டம் கொண்ட மதமாகவும் இருந்து வருகிறது. தனது மொழி அடையாளமான தமிழ்ப் பண்பாடு மற்றும் இனத்துவ மூலங்களிலிருந்து தோன்றி வளர்ந்துள்ள முஸ்லிம்கள் பிற பண்பாடுகளோடு நெருக்கமான ஊடாட்டத்தோடு தங்களது பாரம்பரிய இஸ்லாத்தைப் பின்பற்றி வருகின்றனர். அதுவே பாரம்பரிய இஸ்லாமாகும். முஸ்லிம்கள் மத்தியில் மதத் தூய்மைவாத இயக்கங்கள் வருவதற்கு முன் பிற பண்பாடுகளோடு நெருக்கமாக, சகவாழ்வை முன்னெடுத்த முஸ்லிம்களின் சமூகவியல் அடையாளங்கள் நவீன தூய்மைவாத இஸ்லாமிய இயங்கங்களால் பெரிதும் கேள்விக்குள்ளாகியுள்ளன. இலங்கைப் பாரம்பரிய இஸ்லாத்திலும் அது ஒரு நெருக்கடியான சூழலையே தோற்றுவித்துள்ளது. பிற பண்பாடுகளோடும், மக்களோடும் முஸ்லிம்கள் சகவாழ்வை முன்னெடுப்பதற்கு முக்கிய காரணமாக சூஃபித்துவம் விளங்கியது. பாரம்பரிய இஸ்லாத்தின் மெய்யியல் வடிமாக சூஃபித்துவம் இருந்து வருகிறது. ‘இலங்கையில் சூஃபித்துவம்’ எனும் எனது இந்தக் கட்டுரைத் தொடர் இலங்கையில் சூஃபித்துவத்தின் வரலாறு, அதன் முக்கிய போக்குகள், பிரபலமான சூஃபிகள் பற்றிய ஆய்வாக விரிய உள்ளது.
சூஃபித்துவத்தைப் புரிந்துகொள்ளுதல்
சூஃபித்துவம் தத்துவத்தன்மை கொண்டது; இறுக்கமான மதச்சட்டங்கள், விதிகள் என எந்த வரையறைக்குள்ளும் குறுகிவிடாத ஒரு திறந்த ஆன்மீக நிலையாகும். ஒரு வணிக, உலகியல் சமூகத்தினால் சூஃபிஸம் போன்ற மெய்ஞானக் கொள்கைகளைப் புரிந்துகொள்ளவோ அதைத் தொடர்ந்து கைக்கொள்ளவோ முடியாது. இலங்கை முஸ்லிம்கள் அதிகமும் தத்துவ, மெய்ஞான மரபுகளில் ஈடுபாடற்றவர்கள். இஸ்லாத்தை அதன் ஆன்மீகப் பரிமாணத்தைத் துறந்துவிட்டு அதனை வெறும் மதமாக அதன் சட்டங்களையும், சடங்குகளையும் மட்டுமே கடைப்பிடிக்க முனையும் ஒரு சமூகமாக இன்று அவர்கள் மாறியுள்ளனர். இதனால் உலகியல் நலன்கள் மீது அதிக நாட்டம் கொண்டவர்களாகவே முஸ்லிம்கள் உள்ளனர். இதனால் அவர்களின் வணிகமும், கல்வியும் உலகியல் தன்மையோடு மட்டுமே நின்றுவிட்டது. அதைக் கடந்து ஒரு தத்துவார்த்த ஆன்மீக நிலையைப் போதிக்கும் மெய்ஞான மரபுகளோடு பெரும்பாலும் தொடர்புகளைத் துண்டித்து வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் சவுதியைத் தளமாகக் கொண்ட அரபுத் தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்களின் தீவிரச் செயற்பாடேயாகும். வணிகம் மற்றும் ஏனைய உலகியல் நலன்கள் மீது மட்டுமே நாட்டம் கொண்டவர்களுக்கு இலகுவாகப் பின்பற்றவும், பரப்பவும் உவப்பான மத அமைப்பையே இந்த மதத் தூய்மைவாத இயக்கங்கள் முன்வைக்கின்றன. அனைத்திலும் ஒரு உலகியல் இலாபம் கொண்ட சமூகத்தையே தூய்மைவாத இயக்கங்கள் காண விரும்புகின்றன. இதனால் அவை சூபித்துவம் போன்ற மெய்யில் சார்ந்த சிந்தனைகளின் ஆன்மீக நிலைமையை முதலில் மாற்றியமைக்க விரும்பின. சூஃபித்துவம் போன்ற சிந்தனைகள் இந்திய – இலங்கைத் தன்மைகளோடும், உள்ளூர்த் தன்மையோடும் இருப்பதால் அதை அந்நியப் பண்பாடாக தூய்மைவாத இஸ்லாமிய இயக்கங்கள் இலகுவாகக் கட்டமைத்து விடுகின்றன. அதனை நம் வாழ்க்கையிலிருந்து விலக்குவது, அதிலிருந்து நீங்கிக்கொள்வது இன்றியமையாதது என வலியுறுத்துகின்றன.
சூஃபித்துவமும் இஸ்லாமும் இலங்கையில் நீண்டதும், செழுமையானதுமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. இதன் வரலாறும், ஆய்வுகளும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, அபயகோன் (1976), குணவர்த்தன (1976), டென்னிஸ் மெக்கில்ரே (1982; 1998; 2004; 2011), மஹ்ரூஃப் (1979); மோகன் (1987), காத்ரி (2005), சுக்ரி (1986), ஸ்பிட்டல் (1933, 2011) போன்றவர்கள் இது தொடர்பில் முன்னோடி ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளார்கள். சமீபத்தில் வெளிவந்த சுனிலா ஜெயவர்த்தனவின் ‘The line of Lanka’ அமீனா ஹூஸைன் எழுதிய ‘Ibn Battuta in Sri Lanka’ ஆகிய புத்தகங்களிலும் இலங்கையில் சூஃபிசம் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. எனது இந்த ஆய்வுக்கு நான் பெரும்பாலும் இவர்களைப் பயன்படுத்திக் கொள்வேன்.
சூஃபித்துவம் இரட்டைமுனை அர்த்தத்தைக் கொண்டது. முதலாவதாக, இது ஒப்பீட்டளவில் ஒத்திசைவான மாய நம்பிக்கைகள், நடைமுறைகள் மற்றும் ஒழுங்கமைப்புகளின் (Order) தொகுப்பாகும் (அதாவது தரீக்கா). இந்த சூஃபித்துவமானது, ஒன்பதாம் நூற்றாண்டில் (அல்லது இஸ்லாமிய நாட்காட்டியின்படி மூன்றாம் நூற்றாண்டளவில்) பக்தாத்தில் தோன்றி, இஸ்லாமிய உலகின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது (கரமுஸ்தபா 2007; டிரிமிங்ஹாம் 1998). இரண்டாவதாக, இது உள்ளூர், சுதேச, பாரம்பரிய இஸ்லாமிய மத நடைமுறைகளை பொது இஸ்லாமிய நடைமுறைகளுடன் இணைக்கும் நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளைக் குறிக்கும் ஒரு சொல்லாகச் செயற்படுகிறது. இலங்கையில் சூஃபித்துவமானது கூடியபட்சம் இந்த இரண்டாவது அர்த்தத்தில் அல்லது இரண்டும் இணைந்த விதத்தில் பின்பற்றப்பட்டு வந்தது என்று நான் புரிந்துகொள்கிறேன்.
இஸ்லாமிய மெய்யியல் பரிமாணம் என்றவகையில் சூஃபித்துவத்தைச் செயற்படுத்தியவர்கள் சூஃபிகள் அல்லது இறைநிலையாளர்கள் என அழைக்கப்பட்டனர். ‘Sufi’ என்பது ‘Shophi’ எனும் கிரேக்கச் சொல்லிருந்து பிறந்திருக்க வேண்டும். ஏனெனில் கிரேக்கத்தில் தத்துவத்தைக் குறிக்க ‘Shophi’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பகால இஸ்லாமிய இறைநிலையாளர்கள் அணிந்த கம்பளி ஆடைகள் (சூப்) அல்லது கடினமான ஆடை என்பதிலிருந்தும் இந்த ‘Sufi’ என்கிற சொல் பெறப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். சூஃபித்துவம் என்பதை மதிப்புகள், சடங்கு முறைகள், கோட்பாடுகள் மற்றும் ஒழுங்குகள் போன்ற இயல்புகளை உள்ளடக்கிய இஸ்லாமிய இறைநிலை நடைமுறையாகும்[i] என்றும் வரையறுக்கலாம். சூஃபிகளின் சிந்தனை, நடைமுறை, கருத்தியல்களைக் கொண்ட மொத்த தொகுப்பாகவே நாம் சூஃபித்துவத்தை (Sufism) பார்க்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய சமூகவியல் அறிஞர் இப்னு கல்தூன் முன்வைக்கும் சூஃபித்துவத்தின் பண்புகள் கவனிப்புக்குரியன. வணக்க வழிபாடுகளில் பூரண ஈடுபாடு; இறைவனை முற்றிலும் சார்ந்திருத்தல்; உலகக் கவர்ச்சி, அதன் மயக்கங்களிலிருந்து ஒதுங்கி இருத்தல்; பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் இன்பங்கள், செல்வம், பட்டம், பதவி ஆகியவற்றைப் பொறுத்தளவில் பற்றற்ற மனநிலையைக் கடைப்பிடித்தல்; தனிமையில் இறை வணக்கத்தில் ஈடுபடல் போன்றவற்றை இக்கலையின் அடிப்படைகளாக அவர் கருதுகிறார். [ii]
இந்த சூஃபித்துவ சிந்தனையும் நடைமுறையும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சூஃபி மகான்கள் மூலம் அறிமுகமாகி நிறுவனங்கள் வழியே வளர்ச்சியடைந்தன. சூஃபித்துவம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ‘Pnina Werbner’ மற்றும் ‘Helene Basu’ போன்ற ஆய்வாளர்கள் சூஃபித்துவத்தை (அதன் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள்) சாதாரண முஸ்லிம்களுடனும் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளுடனும் (எடுத்துக்காட்டாக பள்ளிவாசல்கள், திக்ர் வட்டங்கள் – திக்ர் செய்யும் சூஃபிகளின் கூட்டங்கள் – கந்தூரிகள் போன்றவற்றுடன்) இணைத்துப் பார்க்கின்றனர். உண்மையில் சூஃபி பக்தி நடைமுறைகள் உடல், மனம், மக்கள் கூட்டம், இடம் மற்றும் தொடர்புடைய கலைப்பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இந்த ‘உள்ளடக்கங்கள்’ சூஃபித்துவத்தின்/ புனிதத்தின் கூட்டு அனுபவங்களையும், தனிப்பட்ட அனுபவங்களையும் வடிவமைக்கின்றன. அந்தவகையில் பார்த்தால் சூஃபித்துவம் ஒரு தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல; அது ஒரு சமூக அனுபவமும் கூட.
இலங்கையில் சூஃபித்துவம் குறித்த களப்பணி மூலம் மானிடவியல் ஆய்வொன்றை மேற்கொண்ட ‘விக்டர் டி மங்க்’ (Victor de Munck) மற்றும் ‘கிறிஸ்தோபர் மனோகரன்’ (Christopher Manoharan) ஆகிய ஆய்வாளர்கள் எழுதிய ‘Accessing the interiority of others: Sufism in Sri Lanka’ என்கிற ஆய்வுக் கட்டுரை இலங்கையில் சூஃபித்துவ நடைமுறைகளை அறிந்துகொள்ள உதவும் மிக முக்கிய ஆய்வாக உள்ளது. இவர்கள் மொனராகல மாவட்டத்திலுள்ள ‘குடாலி’ (புனைப்பெயர்) எனும் கிராமத்தில் சூஃபித்துவ நடைமுறைகள் எவ்வாறு உள்ளன என்பதைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
இந்த இரு ஆய்வாளர்களில் முதலாமவரான விக்டர் டி மங்க், 1990 களில் இலங்கை முஸ்லிம் கிராமமான குடாலியில், நீடித்த இனவரைவியல் களப்பணிகளை மேற்கொண்டார். குடாலி என்பது கிழக்குக் கடற்கரையில் உள்ள நகர்ப்புற மையங்களிலிருந்து 60 மைல் தொலைவில் உள்ள ஒரு கிராமமாகும். இங்கு சூஃபித்துவ நடைமுறைகள் குறித்து அவர் மேற்கொண்ட களப்பணியிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களை தனது கட்டுரையில் பகிர்ந்திருக்கிறார்.
“இந்தக் கிராமம் பல்வேறு சூஃபி பயிற்சியாளர்களால் நிறைந்திருந்தது. சிலர் கலைநயமிக்கவர்கள், சிலர் பக்தர்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் சாதாரண சுன்னா முஸ்லிம்கள். அவர்கள் சடங்குகள், விழாக்களில் பங்கெடுத்தனர். ஆனால் தஸவ்வுஃப் (சூஃபி) நடைமுறைகளில் தாங்களும் பங்கேற்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. பாரம்பரியமாக அவ்வாறு செய்தனர் என்று தன் கட்டுரையில் விக்டர் டி மங்க் குறிப்பிடுகிறார். இறைக்காதலின் பக்தி வெளிப்பாடு மூலம் பக்தர்களை புனிதத்தின் இருப்புக்கு நெருக்கமாக கொண்டு வரும் ஆத்மீகச் சடங்கில் ஈடுபடுபவரையே மானிடவியலாளர்கள் ‘சூஃபி’ என்று பெயரிடுகின்றனர். அந்த அர்த்தத்தில் பார்த்தால் குடாலியில் சூஃபித்துவ நடைமுறைகளில் ஈடுபட்ட அனைவரையும் சூஃபிகளாக விக்டரால் கருத முடியவில்லை என்பது நியாயமானது.
இங்கு இன்னுமொரு விடயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு விவரிக்கப்பட்டுள்ள சூஃபி நடைமுறைகள் இலங்கையிலும், மேலும் பொது இஸ்லாமிய உலகிலும் அடிக்கடி சித்தரிக்கப்படுவது போன்று பிரதான இஸ்லாத்திற்கு எதிரானவை அல்ல. மாறாக சுன்னாப் பிரிவினரின் நடைமுறைகளுடனும், கோட்பாடுகளுடனும் ஒத்துப் போகக் கூடியதாகவும் இவை இருக்கின்றன. நாகூரில் நடந்த சூஃபி மகான் சாகுல் ஹமீது நினைவுக் கொடியேற்றம் மற்றும் கந்தூரி நிகழ்வின் சடங்குகள் பெரும்பாலும் தென்னிந்தியக் கிராமிய முஸ்லிம்களின் மதப் பழக்க வழக்கங்களுடன் ஒத்திருந்ததாக விக்டர் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது. உதாரணமாக, ‘பள்ளி’ என்ற சொல் பாரம்பரியமாக சூஃபி புனிதர்களின் தலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் பொதுவாக இச்சொல் முஸ்லிம்கள் தொழும் ஒரு பள்ளிவாசலைக் (Mosque) குறிக்க பேச்சுவழக்கில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், விக்டர் டி மங்க் இலங்கையில் ஆராய்ச்சி செய்த கிராமத்தில், பள்ளிவாசல் ‘பள்ளி’ என்றும், அதன் நீட்டிக்கப்பட்ட பெயரான ‘மொஹிதீன் ஆண்டவர் பள்ளி’ என்றும் குறிப்பிடப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்.
“குடாலி, மொனராகல மாவட்டத்தில் நில்கல வனப் பகுதியை அண்டி அமைந்திருந்ததனால் புவியியல் ரீதியாகவும் இனத்துவ ரீதியாகவும் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாகும். மொனராகல மாவட்டமானது 2010 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 98 சதவீதம் சிங்கள – பௌத்தர்களைக் கொண்ட மாவட்டம். அதே மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குடாலி 1,400 முஸ்லிம்களையும், 110 சிங்கள – பௌத்தர்களையும் கொண்ட, மாவட்டத்தின் மிகப்பெரிய முஸ்லிம் கிராமமாகும். இலங்கையில் பலவிதமான சூஃபி சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. ஆனால் ஷேக் மொஹிதீன் அப்துல் காதர் ஜெய்லானியின் பெயரிடப்பட்ட காதிரி சிந்தனைப் பள்ளியே அதிக எண்ணிக்கையிலானது என்று தோன்றுகிறது; டென்னிஸ் மெக்கில்ரேயின் (2011: 57) கருத்துப்படி, அவர் இலங்கை (மற்றும் தெற்காசிய) முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபலமான புனிதர் ஆவார். சூஃபித்துவம், இலங்கையின் மேற்கு கரையோரத்திலும், ஏனைய பகுதிகளிலும் இருப்பதைவிட கிழக்கு கரையோரத்தில் அதிகமாக காணக்கூடியதாகவும், ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் உள்ளது. இரு கரையோரங்களிலும் நான் சூஃபி கூட்டங்களுக்குச் சென்றபோது, இதனை வெளிப்படையாக உணர முடிந்தது [iii] என்று விக்டர் டி மங்க் தனது ஆய்வில் குறிப்பிடுகிறார்.
இவ்விரு மானிடவியல் ஆய்வாளர்களும் சூஃபித்துவம் குறித்த தங்களது ஆய்வை மூன்றாக வகுத்துக் காண்கின்றனர். “சூஃபி சம்பிரதாயப் பழக்கவழக்கங்கள் பற்றிய எங்கள் இனவியல் (Ethnographic Study) ஆய்வானது, மூன்று தனித்துவமான சமூக அமைப்புகள் மீது கவனம் கொண்டுள்ளது: கிராமம் (மற்றும் அண்டைப் பகுதி), வாராந்திர திக்ர் வட்டம், கந்தூரி (எடுத்துக்காட்டாக, இலங்கையில் உள்ள ஜெய்லானியில் இடம்பெறும் ஒரு பெரிய சூஃபி கந்தூரி நிகழ்வு). உள்ளார்ந்த அறிதிறன் வாய்ந்த மானிடவியலாளர்களாக (Cognitive Anthropologists), இந்த மூன்று வெவ்வேறு சூஃபி நடைமுறைகள் எவ்வாறு வெவ்வேறு அனுபவங்களை வழங்குகின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் எவ்வாறு வெவ்வேறு கூட்டு அனுபவங்களையும் வழங்குகின்றன என்பதில் எங்கள் பகுப்பாய்வு கவனம் செலுத்துகிறது [iv]” என்று குறிப்பிடுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சூஃபித்துவம் குறித்த இவர்களது ஆய்வு நோக்கில் ஜெய்லானி ஒரு முக்கிய சூஃபித்தலமாக குறிப்பிடப்படுகிறது. இவர்களது ஆய்வில் மட்டுமல்ல இலங்கையில் சூஃபித்துவம் குறித்து எழுதப்படும் அத்தனை ஆய்வுகளிலும் ஜெய்லானி ஒரு முக்கிய சூஃபித்தலமாக இடம்பெறுவதைக் காண முடியும்.
உசாத்துணை
[i] Wikipedia.org
[ii] கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி – தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம். நளீமிய்யா இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகம். 2022, பக்.09
[iii] Victor de Munck and Christopher Manoharan: Accessing the interiority of others: Sufism in Sri Lanka, P. 02
[iv] ibid. p. 02