2021 ஆம் ஆண்டில் நவீன யாழ்ப்பாண நகரம் தனது 400 ஆண்டுகால இருப்பை நிறைவு செய்தது. இந்நகரின் தோற்றம், வளர்ச்சி என்பவற்றைக் குறித்து விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்தக் குறையை ஓரளவாவது தீர்க்கும் முன்னோடி முயற்சியாக இந்நூல் அமைகிறது. குறித்த 400 ஆண்டுகளில், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகியோரின் குடியேற்றவாத ஆட்சிகள் நிலவிய 327 ஆண்டு காலத்து நகரின் வளர்ச்சியை நூற்றுக்கு மேற்பட்ட நிலப்படங்கள், வரைபடங்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்நூல் விளக்குகிறது. மேற்படி வளர்ச்சிகளின் பின்னணிகளைச் சரியாக விளக்குவதற்காக குடியேற்றவாத ஆட்சிகளுக்கு முற்பட்ட நல்லூர்க் கால நிலைமைகள் குறித்தும் நூல் ஆராய்கிறது.
அக்காலப்பகுதியின் பல்வேறு காலகட்டங்களினூடாக ஆட்சியாளர்களினதும் குடிமக்களினதும் தேவைகளுக்கும் அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் ஏற்ப, பாதுகாப்பு, நிர்வாகம், வணிகம், கல்வி, சமயம், வீதியமைப்பு, போக்குவரத்து, பொதுவசதிகள் முதலிய பல்வேறு துறைகள் சார்ந்து நகரம் வளர்ச்சியடைந்த விதம் குறித்து நூல் விரிவான விளக்கங்களைத் தருகிறது.
யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர் காலடி வைப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணப் பட்டினம் அல்லது அதையொத்த பெயர் கொண்ட ஒரு நகரம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. எனினும், இது எது, எங்கே இருந்தது, இன்றைய யாழ்ப்பாணத்துக்கும் அதற்கும் இடையேயான தொடர்பு என்ன போன்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் தெளிவற்றவையாகவே இருக்கின்றன. அண்மைக் காலத்தில் கோட்டைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வுகள், இவ்விடயத்தில் ஊக்கம் தரும் வகையிலான சான்றுகளைத் தந்துள்ளன என்பதில் ஐயமில்லை.
ஆனாலும், இன்னும் விரிவான ஆய்வுகளூடாகவே உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான நிலை ஏற்படும்.