இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 3
Arts
14 நிமிட வாசிப்பு

இடதுசாரி நோக்கில் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறை பற்றிய விமர்சனம் – பகுதி 3

October 25, 2024 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981 : பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்   : ஜயம்பதி விக்கிரமரட்ண

ஐக்கிய அமெரிக்காவும் பிரான்சும்

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிமுறை 200 ஆண்டுகால வரலாற்றை உடையது. சட்ட ஆக்கத்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை என்பனவற்றிற்கிடையிலான அதிகாரப்பிரிப்பு (Seperation of Power), பலமான இரு கட்சிமுறையின் வளர்ச்சி, கட்டுப்படுத்தல்களும் சமப்படுத்தல்களும் (Checks and Balances) என்னும் தத்துவத்தின் செயற்பாடு என்பன அந்நாட்டின் அரசியல் முறையின் ஸ்திரத்தன்மைக்கு காரணமாக அமைந்தன. ஆயினும் அந்நாட்டின் ஜனாதிபதி முறையினை மாதிரியாகக் கொண்ட தென் அமெரிக்க நாடுகளில் ஜனாதிபதி முறை தோல்வியடைந்துள்ளது. அந்நாடுகளில் ஜனாதிபதி முறை சர்வாதிகார ஆட்சிக்கே வழிவகுத்துள்ளது. ஜனாதிபதிமுறை அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருக்கு அளவற்ற அதிகாரத்தை வழங்குகிறது. ஒரு தடவை கட்டுப்பாடற்ற அதிகாரத்தை அனுபவித்தவர் பின்னர் அந்த அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதில்லை என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது. இலங்கையிலும் 1978 இல் ஜனாதிபதிமுறை புகுத்தப்பட்டமை துரதிஷ்டமானது. ஐக்கிய அமெரிக்காவிலும் பிரான்சிலும் அந்நாடுகளின் அரசியல் யாப்புகளில் காணப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், இலங்கையின் 1978 அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

ஐக்கிய அமெரிக்காவில் ஜனாதிபதியினால் செனற்றைக் கலைக்க முடியாது, கீழ்ச்சபையான சனப்பிரதிநிதிகள் சபையையும் கலைக்க முடியாது. காங்கிரஸ் குழுக்கள் (Congressional Committee) நிர்வாக விடயங்கள் பலவற்றை ஆராய்கின்றன; சட்ட ஆக்கத்துறையினருக்கு நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முடிகிறது. அந்நாட்டின் சட்டவாக்கத்துறையில் இருந்து அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. அவர்கள் யாவரும் வெளியே இருந்து நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆயினும் காங்கிரஸ் குழுக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை அமைச்சர்களுக்கு உள்ளது. காங்கிரஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தும் அதிகாரங்களைக் (Investigative Powers) கொண்டுள்ளன. அவை நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அதிகாரம் உடையன. அக்குழுக்கள் பொது விசாரணைகளை நடத்துகின்றன. 

பிரான்ஸ் நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் சபை (Council of Ministers) என்னும் மூன்று வெவ்வேறு அரசாங்கத் துறைகளுக்கிடையே அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. ஜனாதிபதி பிரதமரை நியமனம் செய்வார்; ஏனைய அமைச்சர்கள் பிரதமர் பெயர் குறித்து முன்வைக்கும் பிரேரணையின்படி நியமிக்கப்படுவர். அரசாங்கத்தின் நிர்வாக அலுவல்களைப் பிரதமரே கொண்டியக்குகின்றார். பிரதமரே பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர். அரசாங்கம் பாராளுமன்றத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டியதாக உள்ளது. நாட்டின் கொள்கை வகுத்தலையும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதையும் பிரதமர் தலைமையிலான அரசாங்கமே கொண்டிருக்கிறது. தேசிய அசெம்பிளி (National Assembly) எனப்படும் அவையை ஜனாதிபதி தன் எண்ணப்படி கலைக்க முடியாது. ஜனாதிபதி பிரதமரையும் இரு அவைகளினதும் தலைவர்களையும் கலந்தாலோசித்த பின்னரே கலைக்கலாம். தேசிய அசெம்பிளி அரசாங்கத்தின் மீது கண்டனப் பிரேரணையை நிறைவேற்றுதல், அரசாங்கத்தின் செயற்திட்டத்தை நிராகரித்தல் அல்லது கொள்கைப் பிரகடனத்தை நிராகரித்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் பிரதமர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பார்.

இவ்வாறாக ஐக்கிய அமெரிக்காவிலும், பிரான்சிலும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் ஏற்பாடுகள் இருப்பதை ஜயம்பதி விக்கிரமரட்ண எடுத்துக் காட்டுகிறார். 1978 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆளும் குழுக்கள் தமது ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி முறையை நன்கு பயன்படுத்தின.

1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் 3 ஆவது, 4 ஆவது யாப்புத் திருத்தங்கள்

1978 யாப்பின்படி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல்கள் 1984,1990 ….. என ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஒழுங்காக நடைபெற்றிருக்க வேண்டும். தனக்கு வாய்ப்பான தருணத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்த விரும்பிய ஜே.ஆர். ஜெயவர்த்தன, யாப்பிற்கான 3 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். 6 ஆண்டுகள் ‘நிரந்தரக்காலம்’ (Fixed Term of Office) என விதிக்கப்பட்டதை ‘நெகிழ்ந்து கொடுக்கும்’ (Flexible Term of Office) ஆக மாற்றுவதற்கு அவர் முடிவு செய்தார். நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஜனாதிபதி மறு தேர்தலை தமது விருப்பப்படி எந்தச் சமயத்திலும் நடத்துவதற்கு ஆணையிடலாம் எனத்திருத்தம் செய்யும் 3 ஆவது திருத்தத்தை 27.08.1982 இல் நிறைவேற்றினார். பாராளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்தை வைத்திருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதன் பயனாக 1982 இற்கும் 1984 இற்கும் இடைப்பட்ட காலத்தில் தமக்கு மிகவும் சாதகமான சந்தர்ப்பம் எதுவோ அப்போது ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் தந்திரோபாயத்தை அவரால் கையாள முடிந்தது. 1982 டிசம்பர் 22 ஆம் திகதி மறு தேர்தலை அறிவித்து, அதில் அவர் வெற்றி பெற்றார். அவரது ஆட்சி 1988 வரை தொடர்ந்தது. உலகில் ஜனாதிபதிமுறை நடைமுறையில் உள்ள நாடுகளில் ஜனாதிபதி 5 அல்லது 6 ஆண்டுகள் எனக் குறிப்பிட்ட காலம் பதவி வகிக்கும் முறையே உள்ளது. குறிப்பிட்ட கால முடிவில் சாதகமான நிலை இருந்தால் என்ன, பாதகமான நிலை இருந்தால் என்ன, தேர்தலை நடத்த வேண்டும் என்பதே விதிமுறை. இவ் விதிக்கு மாறான முறை சர்வாதிகாரியான பெர்டினன்ட் மார்க்கோசின் பிலிப்பைன்ஸ் நாட்டில் பின்பற்றப்பட்டது. 3 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் 4 ஆண்டுகள் முடிந்த பின் எந்நேரமும் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியது; ஜே.ஆர். பிலிப்பைன்ஸ் வழியில் சென்றார்.

ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. அரசியல் யாப்பிற்கான 4 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். இத்திருத்தம் அரசியல் யாப்பின் உறுப்புரை 161 ஐ திருத்தம் செய்வதாக அமைந்தது. இத்திருத்தம், 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை, பாராளுமன்றத் தேர்தலை நடத்தாமலே 1989 ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரை மேலும் 6 ஆண்டு காலம் தொடர்ந்து இருப்பதற்கு வழிசெய்தது. இத்திருத்தத்தைச் செய்வதற்கான பொதுசன வாக்கெடுப்பு (Referendum) ஒன்றை 1982 டிசம்பர் மாதம் நடத்தி, தனது ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மக்கள் அங்கீகாரத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

பொதுசன வாக்கெடுப்புக்கான பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஜனநாயக விரோதச் செயலைக் கண்டித்து எழுதிய கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா, பொதுசன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நடைபெறாது தடுக்க முயற்சி எடுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார். அவர் கூற்று வருமாறு:

”இப்போது ஜனாதிபதி ஜெயவர்த்தனவின் நோக்கமும், அவர் அரசியல் யாப்புச் சட்டத்தை எப்படித் தன் தேவைக்கேற்ப திருத்தப் போகிறார் என்பதும் தெளிவாகின்றன. அவர் செய்யப்போகும் வேலையின் ஜனநாயக விரோதத் தன்மை எவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். மக்களின் ஆலோசனையைப் பொதுசன வாக்கெடுப்பு மூலம் பெறப்போகிறேன் என்று கூறி அவர் நடத்தும் நாடகம் மூலம் அவர் செய்யப் போவது இதுதான்: தேர்தல் நடைமுறை மூலம் குறிப்பிட்டதொரு காலத் தவணைக்கு ஆட்சி செய்வதற்கென அரசாங்கம் ஒன்றைத் தெரிவு செய்யும் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படப் போகிறது.” (எளிமைப்படுத்தப்பட்ட தமிழாக்கம் – பக். 113 இல் தரப்பட்ட மேற்கோள்)

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 1982 இல் நடத்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்புக்கான தேர்தல், கறைபடிந்த பக்கங்களில் ஒன்று என ஜயம்பதி விக்கிரமரட்ண குறிப்பிடுகின்றார் (பக். 114).

சீர்திருத்தமா? பாராளுமன்ற முறைக்குத் திரும்புவதா?

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி முறையில் சில திருத்தங்களைச் செய்து அதனைத் தொடர்வதா அல்லது அம்முறையை முற்றாக நீக்கிவிட்டுப் பாராளுமன்ற முறைக்குத் திரும்புவதா என்ற வாதம் இன்று வரை இலங்கையில் தொடர்வதைக் காணலாம். ஜனாதிபதி முறை இலங்கைக்குத் தேவை என்பதற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தன முன்வைத்த வாதங்களில் சில மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அவரின் “ஒரு கட்சி, ஒரே ஒரு கொள்கை, ஒரு தலைவன்” (One party, One policy, One leader) கொள்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களால் மட்டுமன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களாலும் நாட்டைச் சரியான வழியில் நடத்துவதற்கான வழிகாட்டும் தத்துவமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக அரசியல் உறுதிநிலை (Political Stability), பொருளாதார வளர்ச்சி என்பன ஜனாதிபதி என்ற தனிநபர் ஒருவரால் தான் சாதிக்கப்பட முடியும் என்ற மாயை தொடர்ந்தது. 2009 ஆம் ஆண்டின் பின் இன்னொரு வாதமும் முன்வைக்கப்பட்டது.

“ஜனாதிபதி முறை இருந்திருக்காவிட்டால் பிரிவினைவாதிகளுக்கு எதிரான போரை வென்றிருக்க முடியாது“ என்பதே அந்த வாதம்.

திருத்தம் செய்வதா அல்லது ஜனாதிபதி முறையை ஒழிப்பதா? (Reform or Abolition?) என்ற தலைப்பில் நான்கு பக்கங்களில் (114-117) ஜயம்பதி விக்கிரமரட்ண இந்த விடயத்தை ஆராய்கிறார். உங்களுக்கு உறுதி நிலையான ஆட்சி வேண்டுமா அல்லது ஜனநாயகம் வேண்டுமா? என்று மக்களைப் பார்த்துக் கேட்பது போல் அமையும் ‘உறுதிநிலை எதிர் ஜனநாயகம்’ விவாதம் மேற்குறித்த நான்கு பக்கங்களில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

எமது அண்மை நாடான இந்தியாவில் பாராளுமன்றமுறை இருந்து வருகிறது. பல்லினச் சமூகங்களைக் கொண்ட பெரிய தேசமாக விளங்கும் இந்தியாவின் பிரச்சினைகள் சிக்கலானவை: இந்தியா தனது அயல் நாடான சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் போர்களை நடத்தியது. இந்தியாவிற்குள்ளேயும், பயங்கரவாதத்தையும் வன்முறையான ஆயுதப் போராட்டங்களையும் எதிர்த்துப் போர் புரிந்து வந்துள்ளது. அந்நாட்டில் மதக் கலவரங்கள், சாதிக் கலவரங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. மொழிசார் முரண்பாடுகள், வறுமை, பொருளாதாரப் பின்னடைவு ஆகியன இந்தியாவின் பல மாநிலங்களில் மிகத் தீவிரமான பிரச்சினைகளாக உள்ளன. இப்பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்தியாவில் சுதந்திரமடைந்த காலம் முதல் பாராளுமன்றமுறை வேரூன்றி நிலைத்துள்ளது. நிறைவேற்று ஜனாதிபதிமுறை (Executive Presidency) இந்தியாவுக்கு வேண்டும் என்ற வலுவான கோரிக்கை அங்கு எழவில்லை எனக் குறிப்பிடும் ஜயம்பதி விக்கிரமரட்ண விக்ரம் ராகவன் (VIKRAM RAGHAVAN) என்னும் எழுத்தாளரின் கூற்றொன்றை மேற்கோள் காட்டுகிறார் (பக். 117).

“இந்திய அரசியல் யாப்பை உருவாக்கியவர்கள் ஏன் பாராளுமன்ற முறையைத் தெரிவு செய்தனர்? அவர்கள் பிரித்தானிய மாதிரியைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினார்களா? ஏனைய மாற்று மாதிரிகள் பற்றிச் சிந்திப்பதற்கு தவறினார்களா? எமது நற்பேறாக அவர்கள் மிகுந்த கவனத்தோடுதான் இப் பிரச்சினையைப் பரிசீலித்தார்கள். 1787 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அரசியல் யாப்பை வரைவதற்கான சபை (Constitutional Convention) கூடிய போது, அச்சபையினர் ஆங்கிலேயரின் முடியாட்சியின் அடக்குமுறை மீது தீவிர வெறுப்பை உடையவர்களாய் இருந்தனர். அதனால் அவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக விளங்கும் ஒரு பதவியில் ஒரு நபரிடம் அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதை விரும்பவில்லை. எமது தலைவர்களும் அரசியல் யாப்பை வரைந்த போது உலகின் பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகள் இருப்பதையும், எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரு சர்வாதிகாரி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருப்பதையும் கண்கூடாகக் கண்டனர். இதனால் எமது அரசியல் யாப்புச் சபை எம் நாட்டில் எதிர்காலத்தில் ஒரு சர்வாதிகாரி  தோன்றுவதற்கு இடமளிக்க விரும்பவில்லை.

எமது அரசியல் யாப்பை வரைந்தவர்கள் எதிர்நோக்கிய சங்கடமான நிலையை, 1948 நவம்பரில் ஆற்றிய உரை ஒன்றின் போது அம்பேத்கர் அவர்கள் தமக்கே உரித்தான மொழியாற்றலுடன் எடுத்துக் கூறினார். ஒரு நாட்டின் நிர்வாகத் தலைவர் உறுதி நிலையைப் பேண வேண்டும்; அத்தோடு தன்னைத் தெரிவு செய்த வாக்காளர்களான மக்களுக்குப் பொறுப்புக் கூறுபவராகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு இலக்குகளையும் சமவிகிதத்தில் அடையக்கூடிய அரசியல்முறை உலகில் எங்கும் கிடையாது என்று அம்பேத்கர் வாதிட்டார். அமெரிக்காவிலும் சுவிற்சர்லாந்திலும் ஜனாதிபதிமுறை குறிப்பிடத்தக்க அளவுக்கு உறுதிநிலையை (Stability) அந்நாடுகளுக்கு வழங்கின. ஆனால் பிரித்தானியாவின் மந்திரிசபை முறை அரசாங்கங்கள் (British Cabinet Governments) அந்நாட்டு மக்களுக்குப் பொறுப்புச் சொல்வனவாக அமைந்தன. இவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்த அரசியல் யாப்புச்சபை உறுதிநிலையை விட பொறுப்புக் கூறலே முதன்மையானது என்ற முடிவுக்கு வந்தது. அம் முடிவின்படி அமெரிக்கா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளின் ஜனாதிபதிமுறையை விடுத்து பிரித்தானியாவின் மந்திரிசபை முறையிலான அரசுக்கட்டமைப்பை அரசியல் யாப்புச்சபை இந்தியாவிற்கு வழங்கியது.” (பக். 107 இல் தரப்பட்ட மேற்கோள். 2012 மே 27 ‘THE HINDU’ இதழில் VIKRAM RAGHAVAN எழுதிய ‘ALL THE PRESIDENT’S MEN’ என்ற தலைப்பிலான கட்டுரையில் இருந்து எடுக்கப்பட்ட கூற்று.)

இந்தியா ஜனாதிபதிமுறையைத் தெரிவு செய்யவில்லை; பாராளுமன்ற முறையைத் தெரிவு செய்தது. உறுதிநிலை, பொறுப்புக்கூறல் என்ற இரண்டு இலக்குகளையும் சம விகிதத்தில் அடைவதற்கு, பாராளுமன்றமுறை இந்தியாவிற்கான சிறந்த தெரிவாக அமைந்தது.

1994 இற்குப் பிந்திய காலம்  

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி, ஜனாதிபதி முறையின் கீழ் 17 ஆண்டு காலம் தொடர்ந்தது. 1994 இல் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெற்றன. ஜனாதிபதிமுறையை ஒழிப்பதற்கும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குமான வாய்ப்புகள் காணப்பட்டன. ஜயம்பதி விக்கிரமரட்ணவின் நூலில் ஏறக்குறைய 5 பக்கங்களில் (பக். 118 – 122) ‘1994 AND AFTER – A GOLDEN OPPORTUNITY MISSED’ என்ற தலைப்பில் 1994 இற்குப் பிந்திய காலத்தில் அரசியல் யாப்பைத் திருத்தி, புதியதொரு யாப்பினை அறிமுகம் செய்வதன் மூலம் ஜனாதிபதி முறையை நீக்குதல், அதிகாரப் பகிர்வு (Devolution of Powers) ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகிய இரு இலக்குகளையும் அடைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தமை விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

1977 தேர்தலில் 5/6 பெரும்பான்மைப் பலத்துடன் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன ‘FIRST – PAST – POST SYSTEM’ தேர்தல் முறை மூலம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார். அவர் ஜனாதிபதி முறையைப் புகுத்தியதோடு விகிதாசாரத் தேர்தல் முறையையும் புகுத்தினார். விகிதாசாரத் தேர்தல் முறையின்படி அரசியல் யாப்பைத் திருத்துவதற்கான 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெறுதல் சாத்தியமற்றதாக ஆக்கப்பட்டிருந்தது. 1994 பாராளுமன்றத் தேர்தலில் 225 ஆசனங்களைக் கொண்ட பாரளுமன்றத்தில் 94 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மதத்தைப் பெறாமல் அரசியல் யாப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. சந்திரிகா குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இவ்விடயத்தில் இடம்பெற்ற இழுபறிகள், இழுத்தடிப்புகள் என்பனவற்றை ஜயம்பதி விக்கிரமரட்ண இப்பகுதியில் விபரித்துக் கூறுகிறார்.

18 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் – ஜனாதிபதிமுறையை மேலும் பலப்படுத்தல்

2010 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச, அரசியல் யாப்புக்கான 18 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திருத்தம், ஜனாதிபதியின் பதவிக்காலம் 12 ஆண்டுகளுக்கு மேற்பட முடியாது என்ற தடையை நீக்கி, பதவியில் உள்ள ஜனாதிபதி ஒருவர் எத்தனை தடவையும், அதாவது இரண்டு தடவைகளுக்கு (Two Elected Terms) மேலும் போட்டியிடலாம் என்னும் வரப்பிரசாதத்தை மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கியது. 18 ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் சிலவற்றையும் பறித்தது. இதனை விட மேலும் பல அம்சங்கள் இத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டு, 1978 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தன தனக்கு உரியதாக ஆக்கிக் கொண்ட அதிகாரங்களையும் விட கூடிய அதிகாரங்களை உடைய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவை அரியணையில் அமர வைத்தது. 

ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் புகுத்தும் திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வேளை இடம்பெற்ற விவாதத்தின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்க பின்வருமாறு கூறினார்:

”இச் சட்டத் திருத்தத்தின் விளைவாக ஜனாதிபதி தேசிய அரசுப் பேரவையிலும் (National State Assembly) மேலானவராக மட்டுமன்றி, சட்டத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் மேலானவராகவும் (Above the Law and the Courts) தன்னை மாற்றிக் கொள்ளப் போகிறார். இதனால் எதிர்காலத்தில் இப்பதவியை வகிக்கப் போகிறவர், அவர் யாராக இருந்தாலும் சர்வாதிகாரியாக தனிநபர் ஒருவரின் கையில் சகல அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்கும் தனிநபராக இருக்கப் போகின்றார். இவ்வாறு அரசியல் யாப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்து ஒரு நபரின் கையில் அதிகாரத்தைக் குவியச் செய்து சர்வாதிகாரிகளை உருவாக்கியமைக்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன. அதன் விளைவாக அந்த நாடுகளில் ஏற்பட்ட விபரீத விளைவுகளிற்கும் பல வரலாற்று உதாரணங்கள் உள்ளன. இதனால் நாம் இந்தச் சட்ட மூலத்தை வன்மையாக ஒரே குரலில் எதிர்க்கின்றோம். இச் சட்டத்திருத்தம் எமது நாட்டைச் சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லப் போகிறது. இதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கான வழி கிடையாது. இச்சட்டம் இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து விடும். காலம் சென்ற டட்லி சேனநாயக்க அவர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போது, ‘ஜனாதிபதிமுறை ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும்’ என்ற கருத்தை முன்கூட்டியே கூறினார் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம் (பக். 103-104 எளிமைப்படுத்திய மொழிபெயர்ப்பு).” இக் கூற்றில் உள்ள நகைமுரண் கவனிக்கத்தக்கது.

மகிந்த ராஜபக்ச தமது கட்சியின் தலைவியாகிய, காலம் சென்ற சிறிமா பண்டாரநாயக்கவின் தலைமையில் செயற்பட்ட காலத்தில், ஜனாதிபதி முறையினை எதிர்த்தார். பின்னர் அவரே, நிறைவேற்று ஜனாதிபதி முறையினை மேலும் பலப்படுத்தும் கைங்கரியத்தை பல்லாண்டுகள் கடந்த பின் செய்து முடித்தார்.

முடிவுரை

தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் 1977 முதல் 2024 வரை ஆட்சி செய்தன. மாறி மாறி ஆட்சிக்கு வந்த இவ்விரு கட்சிகளின் அரசாங்கங்களும் ஜனாதிபதி முறையினை மேலும் மேலும் பலப்படுத்தி ஜனநாயக விரோத நடவடிக்கையைத் தொடர்ந்தன. 2024 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது சக்தியொன்று பேரலையாக எழுச்சி பெற்றுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்ற மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தென்னிலங்கை மக்களினால் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படுகிறார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மைப் பலமுடைய அரசாங்கத்தை அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினால் அமைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ் எதிர்பார்ப்பு நிறைவேறுமிடத்து ஜனாதிபதி முறையின் ஒழிப்பினையும் உள்ளடக்கியதான ‘முறைமை மாற்றம்’ (System Change) இலங்கையில் ஏற்படலாம் என நம்பலாம். 


ஒலிவடிவில் கேட்க

2756 பார்வைகள்

About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)