பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் புதிய உயரடுக்கும் பழைய உயரடுக்கும்
Arts
8 நிமிட வாசிப்பு

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் புதிய உயரடுக்கும் பழைய உயரடுக்கும்

October 29, 2024 | Ezhuna

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு  விளக்கங்கள் கூறப்படுகின்றன. இது தற்செயலாக வெடித்த ஒன்றோ தற்காலிகமான ஒன்றோ அல்ல. இதன் வரலாற்று வேர்கள் ஆழமானவை, நீண்டவை. இந்நிலைமைக்கு நிதிநிர்வாகத்தவறுகளை மாத்திரம் காரணம் காட்டமுடியாது. அதனை விடவும், 1948 முதல் இதுவரை இலங்கையை ஆட்சிசெய்த செய்த அனைத்து தலைவர்களும் நடத்திய இனவாத அரசியலுக்கு நாடு கொடுத்த விலையே இதுவாகும். இதனை விளக்குவதாகவே இலங்கையின் ‘இனவாத அரசியல் – ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற இத்தொடர் அமைகிறது. இதன்படி, 1915 க்கு முன்னர் இருந்து இன்றுவரை சிறுபான்மைத் தேசியங்கள் மீது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  இன வன்முறை தாக்குதல்களையும், அவற்றின் பின்னணியையும் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்  நேரடி அனுபவங்கள் ஊடாகவும், நூல்கள், செய்திகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்கள் வழியாகவும் இந்தத் தொடர் ஆராய்கின்றது. இரு பகுதிகளாக அமையவுள்ள இந்தத் தொடரின் முதல் பகுதி, இலங்கையின் இனவாத அரசியலின் தோற்றம் பற்றியும் வளர்ச்சி பற்றியும் இரண்டாம் பகுதி இலங்கையின் அரசியல் நெருக்கடியிலும் பொருளாதார நெருக்கடியிலும் இனவாத அரசியலின் பாத்திரம் பற்றியும் ஆராய்கிறது.

இலங்கையில் உயரடுக்கின் உருவாக்கமானது பிரித்தானியக் காலனிய ஆட்சி காலத்தில் ஆங்கிலம் கற்ற உயர் வகுப்பினரின் தோற்றத்தோடு உருவானது என்ற தவறான கருத்து சிலரிடையே நிலவுகிறது. உண்மையில் முன்பே குறிப்பிட்டதைப் போல இந்தியாவைப் போலல்லாமல், இலங்கையில் காலனித்துவத்திற்கு முந்தைய ஆளும் வர்க்கத்தின் மேல்தட்டு அழிக்கப்பட்டு, இரண்டாம் நிலைப் பிரிவு தகவமைக்கப்பட்டு காலனித்துவக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.

காலனித்துவ ஆட்சியின் உருவாக்கத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், இந்தியா இயந்திரக் கைத்தொழில்துறையின் வளர்ச்சியிலும், தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் உருவாக்கத்திலும் முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தை அடைந்திருந்தது. இலங்கையோ அப்போது பொருளாதார ரீதியாக இந்தியாவை விட மிகவும் பின்தங்கியிருந்ததுடன் நிலப்பிரபுத்துவத்தின் பிடியினால் தேக்க நிலையில் இருந்தது. இங்கு சிறு வணிக அணி ஒன்று உருவாகியிருந்தாலும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவாகி இருக்கவில்லை.

அதுவே இலங்கையில் சுதந்திரப் போராட்ட இயக்கம் ஒன்று வலுவாக உருவாகாததற்கான காரணமானது. அதற்குத் தலைமை கொடுக்ககூடிய தேசிய முதலாளித்துவ வர்க்கமோ அல்லது பாட்டாளி வர்க்கமோ இங்கு உருவாகியிராததுதான் அதற்கான காரணமாகும். இலங்கையில் அவ்வாறான ஒரு விடுதலை இயக்கமோ அல்லது சுதந்திர இயக்கமோ உருவாகி இருந்தால், முழு நாட்டு மக்களையும் அணிதிரட்ட வேண்டிய தேவை எழுந்திருக்கும்;  அச் சூழல் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக அனைத்துச் சமூகங்களையும் ஒன்றிணைத்திருக்கும்; பிற்காலத்தில் இனவாத அரசியல் கோலோச்சிய நிலைமை அநேகமாக ஏற்பட்டிருக்காது.

19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் உயரடுக்கு உருவாக்கத்தில் பிரதான காரணியாக இருந்தது, கோப்பித் தோட்டத்தின் அறிமுகமும் அதன் வேகமான வளர்ச்சியுமாகும். அதன் பிறகு தேயிலை, ரப்பர் மற்றும் தென்னைப் பெருந்தோட்ட வளர்ச்சி இந்தப் போக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. எனினும் தேயிலையே பெருந்தோட்டப் பொருளாதரத்தையும் நாட்டின் அபிவிருத்தியையும் நீண்டகாலம் தாங்கி நின்றது. இலங்கையில் முதலாளித்துவ வளர்ச்சி பெருந்தோட்டக் கைத்தொழில் வளர்ச்சியோடு பின்னிப் பிணைந்ததாக மாறியது. பெருந்தோட்டக் கைத்தொழில் வளர்ச்சி ஒருபுறத்தில் பாரிய இயந்திரக் கைத்தொழிலோடு இணைந்த ஒன்றாக இல்லாமல் பல நிலப்பிரபுத்துவ அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருந்தது.

இது இலங்கையின்  நிலத்தையும், பிரித்தானிய மூலதனம் – தொழில்நுட்பம் – நிர்வாகம் – உலகச்சந்தை ஆகியவற்றையும் பின்னர் இலங்கையாரான இந்தியத் தொழிலாளரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதில் ரப்பர், தென்னைப் பெருந் தோட்டங்கள் உருவாகும் வரை ஒருவரைத் தவிர வேறு எவரும் கோப்பி பெருந் தோட்டத்துறையில் ஈடுபடவில்லை. எனவே கோப்பி பெருந்தோட்டம் பெரும்பாலும் பிரித்தானியரின் ஏகபோகமாகவே இருந்தது. ஆயினும், பெரும்பாலான வெப்பமண்டல காலனிகளைப் போலல்லாமல் இலங்கையின் பெருந் தோட்டத்துறை வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் சுதேசிகள், குறிப்பாக சிங்களவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். உள்ளூர் தனவந்தர்கள் கோப்பி பெருந் தோட்டத்தினாலும் தேயிலைப் பெருந் தோட்டத்தினாலும் மறைமுகப் பயனை பெருமளவில் அனுபவித்தனர். ரப்பர் பெருந் தோட்டத்தில் கணிசமான அளவும், தென்னைப் பெருந் தோட்டத்தில் பெருமளவும், கறுவா பயிரில் பெருமளவும் இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதைவிட இலங்கையர்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் அதுவரை இருந்ததை விட மிகப் பெரும் பங்கை வகித்தனர். முக்கியமாக, பெருந் தோட்டச் சேவைகள் பலவும் கிட்டத்தட்ட சிங்களவர்களால் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது. தோட்டங்களை நிறுவுவதற்காக காடுகளை வெட்டும் குத்தகை, தோட்டங்களில் இருந்து விளைபொருட்களை துறைமுகங்களுக்கு கொண்டு செல்வது ஆகியவை இதில் அடங்கும்.

கோப்பி சகாப்தத்தில் மாட்டு வண்டிகள் மூலம் உருவாக்கப்பட்ட சிங்களவர்களின் போக்குவரத்து நிபுணத்துவம், இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் சாலைப் போக்குவரத்தின் ஆதிக்கத்துக்கும் காரணமானது. இதனால் மோட்டார் பேருந்துகள், லொறிகள் மூலமான போக்குவரத்து இரண்டிலும் இவர்களின் ஆதிக்கமே காணப்பட்டது.

இத்தனைத் தவிர காரீய அகழ்வும் ஏற்றுமதியும், முக்கிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் அமைத்தல் படகுகளின் மூலமும் வாடகை அறவிடுதல் (ரயில்வே கட்டப்பட்ட பிறகு இத்தகைய வாடகையின்  முக்கியத்துவம் குறைந்தது), பெரும் இலாபத்தை ஈட்டித்தந்த சாராய விற்பனையின் ஏகபோகம், நகர்ப்புற சொத்துகளில் முதலீடு செய்தல், சாலைகள் அமைத்தல், இரயில் பாதைகள் அமைத்தல், மரம் அறுத்து பலகைகள் செய்து விநியோகம்  செய்தல், பாடசாலைகள் – மருத்துவ மனைகள் – இரயில் நிலையங்கள் – அரச அலுவலகங்கள் – உயர் அதிகாரிகளின் வாசஸ்தலங்கள் போன்ற அரச கட்டிடங்கள் அமைக்கும் குத்தகை, அவற்றுக்குத் தேவையான செங்கல் – பலகை – மணல் – போன்றவற்றை விநியோகித்தல் போன்ற வாய்ப்புகளால் புதிய தனவந்தர்கள் உருவானார்கள். இப் பொருளாதார வாய்ப்பு பெருந்தோட்ட விரிவாக்கத்ததுடன் கூடவே   விரிவடைந்தது. நகரங்கள் உருவாகி, துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு கட்டிடத் தொழில் வளர்ச்சியடைந்த போது மேலும் பல புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின; இலங்கையில் தனவந்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது; அவர்களில் அதிக வசதி படைத்தவர்கள் உயரடுக்கு அந்தஸ்தைப் பெற ஆர்வம் காட்டினார்; இதனால் பாரம்பரிய  உயரடுக்கின் சமூக அந்தஸ்து அச்சுறுத்தலுக்குள்ளானது.

புதிய – பழைய உயரடுக்கினருக்கிடையிலான போட்டி முதன் முதலில் நில உடமைத் தளத்தில் ஏற்பட்டது. அதுவரை பாரம்பரிய உயரடுக்கு மாத்திரமே நில உடமையைக் கொண்டிருந்தது. 1832 ஆம் ஆண்டின் பின்னர் நிலமானியமுறை ஒழிக்கப்பட்டு, ஏல முறையின் மூலம் அரசால் தரிசு நிலத்தை விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், நிலம் சமூகத்தில் அனைத்து வகுப்பினரும் வாங்கக்கூடியதாக மாறியது. இதனால் பாரம்பரிய உயரடுக்கின் அந்தஸ்து ஆட்டம் கண்டது.

ஆரம்ப கட்டங்களில் கொய்கம முதலியார்களில் ஒரு பகுதியினர் புதிய இம்முறையின் முக்கிய பயனாளிகளாக உருவெடுத்தனர். அவர்கள் தங்கள் நிலங்களை வணிக ரீதியாக இலாபகரமான பெருந் தோட்டங்களாக மாற்றினர். அத்துடன் மேலதிகமாக நிலங்களை வாங்கிப் பெருக்கிக் கொண்டனர். பெருந்தோட்டக் கைத்தொழில் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பகுதிக்கு விரிவடையாததால், இவ்வளவு பெரிய நில அபகரிப்பு அல்லது விரிவாக்கம் அங்கு நடைபெறவில்லை. இருப்பினும், வெள்ளாளர்கள் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்கள் நில உடைமைகளை விரிவுபடுத்தினர்.

ஆனால், கொய்கமவின் நில ஆதிக்கம் குறுகிய காலமே நீடித்தது. ஏனெனில் மொரட்டுவயை மையமாகக் கொண்டு உருவான கராவ சாதித் தனவந்தர் விரைவில் அவர்களை விஞ்சினர். அப்போது நில உடமை புதிய பணக்காரர்களுக்கு சமூகத்தில் மேல்நோக்கி உயரும் வழியைச் சமைத்தது. கொய்கம அல்லாத மூன்று சாதியினரான கராவ, சலாகம, துரவா ஆகியோரில்ச் இருந்து விகிதாசார ரீதியில் கூடுதலான எண்ணிக்கையிலான புதிய பணக்காரர்கள் உருவாகினர். இவர்கள் பெருந்தோட்ட விவசாயம், வணிகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் அடைந்த வெற்றி அவர்களை பாரம்பரிய உயரடுக்கினரை விட மிகவும் பணக்காரர்களாக ஆக்கியது.

இருப்பினும், பழைய – புதிய உயரடுக்குகள் இருவரும் காலனித்துவப் பொருளாதாரத்தை மட்டுமல்ல, காலனித்துவ ஆட்சியாளர்களையும் முழுமையாகச் சார்ந்தே இருந்தனர். அதனால்தான் அவர்களால் தங்கள் எஜமானர்களுக்கு எதிராகச் சென்று சுதந்திரத்தைக் கோர முடியவில்லை.

ஆயினும் கொய்கம சாதியினர் அரசியலில் ஈடுபட்டு படித்த யாழ்ப்பாண வெள்ளாளரின் உதவியைப் பெற்று, இம் மூன்று புதிய உயரடுக்கின் எழுச்சியை பின்தள்ளி விட்டு, இனவாத ரீதியில் தமது அரசியல் பலத்தை மேம்படுத்திக் கொண்டு, தமது படிப்பின் பலத்தால் அரசியலில் முன்னணி வகித்த வெள்ளாளரையும் உதறித் தள்ளிவிட்டு, தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவான இனவாத அரசியலின் பின்னணி இதுவாகும்.

அதனால்தான் கொய்கம சாதியினர், உயரடுக்கு ஆதிக்கத்திற்கான போட்டியில் முதலில் எழுச்சி பெற்றுவரும் தமது இனத்தைச் சேர்ந்த பிற சாதிகளுக்கு எதிராகவும், பின்னர் இலங்கைத் தமிழர்கள், நகர்ப்புற இந்தியர்கள் மற்றும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகவும் திரும்பினர். சுவாரசியமாக, சுதந்திரத்தின் பின்னர் சிறிது காலத்திற்கு, அவர்கள் மீண்டும் ஒருமுறை தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக இலங்கைத் தமிழ் உயரடுக்குகளுடன் சமரசம் செய்து கொண்டனர். இதனை பின்னர் நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உசாத்துணை

  1. De Silva K.M (1981), A History of Sri Lanka, Delhi: Oxford University Press.
  2. Ferguson A.M. () ‘Plumbago: with special reference to the position occupied by the mineral in the commerce of Ceylon, Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, vol ix.
  3. Gumperz, Ellen McDonald, 1974, City-hinterland relations and the development of a regional elite in nineteenth century Bombay, The Journal of the Royal Asiatic Society, vol xxxiii-4.
  4. Jayawardena Kumari, 2000, Nobodies to Somebodies – The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka, New Delhi: Leftword Book
  5. Jiggins Janice, 1979, Caste and Family in the Politics of the Sinhalese, Cambridge University Press.
  6. Robert Michael (1982), Caste Conflict and Elite Formation – The Rise of a Karava Elite in Sri Lanka 1500 – 1931. ISBN 81-7013-139-1
  7. Russell R. Ross and Andrea Matles Savada, (1988) editors. Sri Lanka: A Country Study. Washington: GPO for the Library of Congress.
  8. JRASCB, The Journal of the Royal Asiatic Society Ceylon. Branch XXI 1909 No. 62
  9. Peebles Patrick. 1995. Social Change in Nineteenth Century Ceylon.
  10. Vythilingam M., 1971. The life of Sir Ponnambalam Ramanathan Volume I.
  11. Wright. A.W. (2007), Twentieth Century Impressions of Ceylon: Its History, People, Commerce, Industries and Resources Asian Educational Services, India.

ஒலிவடிவில் கேட்க

1820 பார்வைகள்

About the Author

பி. ஏ. காதர்

பி. ஏ. காதர் அவர்கள் நுவரெலியா ராகலையைச் சேர்ந்த எழுத்தாளர். அத்துடன் ஆய்வாளராகவும், சமூகச் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

பாவா அப்துல் காதர் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் பல ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவையாக ‘சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்’, ‘சுயம் நிர்ணயம் உரிமை’ மற்றும் ‘மேதின வரலாறும் படிப்பினைகளும்’ போன்ற நூல்கள் அமைகின்றன.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)
  • September 2023 (18)