கூட்டுறவுக்குள் கூட்டுறவு : பிலிப்பைன்ஸ் அனுபவம்
Arts
16 நிமிட வாசிப்பு

கூட்டுறவுக்குள் கூட்டுறவு : பிலிப்பைன்ஸ் அனுபவம்

October 30, 2024 | Ezhuna

2009 இல், போரின் முடிவில், போர் தந்த சிதைவுளுக்கு நாம் முகம் கொடுத்தோம். இதில் மிக முக்கியமானது போர் சிதைத்த எமது நிறுவன நினைவு வளம் (Institutional Memory) ஆகும். மனித இழப்புகளுக்கு அடுத்ததாக, எம்மால் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்வும், சிதைவும் பிடுங்கி எறியப்பட்ட பூசணிக் கொடிகள் போல எங்கும் பரவிக் கிடக்கிறது. நிறுவனங்களின் சிதைவுகளில் மிக முக்கியமானதும், மிகவும் பாதிக்கப்பட்டதுமாக அமைவது கூட்டுறவு இயக்கமாகும்; கூட்டுறவுத் துறையின் வெற்றிக்கு அச்சாணியாக இருந்த கடனுதவுக் கூட்டுறவுச் சங்கங்களும் அதனோடு இணைந்தே அழிவுக்குள்ளாகின. இச் சிதைவுகளைக் கண்டறிந்து மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய காலமிது. அதன் பொருட்டு, கூட்டுறவு இயக்கம் – கூட்டுறவின் கட்டமைப்புக்கள் மிக முக்கிய அசைவியக்கமாக மாற முடியுமா? போரின் பின்னரான மீள் கட்டுமானத் திட்டங்களுக்கும் நிலையான அபிவிருத்திக்கும் கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் யாது? எங்கிருந்து தொடங்குவது? போரின் பின்னரான சிதைவுகள், அதன் விளைவாக விளைந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு அதனால் உதவ முடியுமா? ஆகிய வினாக்களை இத் தொடர் முன்வைத்து ஆராய்கின்றது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையகம் உட்பட, இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள கூட்டுறவுத் துறையினால் ஒரு வலுவான மாற்றுப் பொருளாதாரக் கட்டமைப்புக்கு சிறப்பாக உதவ முடியும். கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி சார் விடயங்களை மையமிட்டு காத்திரமான விடயங்களை தர்க்கத்துடன் கலந்துரையாடி, சிந்தனைக்கான முன்மொழிவுகளை தரும் இத் தொடர் ‘கூட்டுறவு இயக்கத்தின் வகிபாகம் : போரின் பின்னரான மீள் கட்டுமானமும் அபிவிருத்தியும்’ எனும் பெயரில் அமைகிறது.

கூட்டுறவின் குறிக்கோள் என்ன என்பது தொடர்பாக கூட்டுறவாளர்களிடையே பல கருத்துகள் உள்ளன. உண்மையில், கூட்டுறவின் நோக்கம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூகத்தின் பொருளாதார, கலாசார மற்றும் சமூகத் தேவைகளை உணர்ந்து கொள்வதாகும். கூட்டுறவுகள் தங்கள் சமூகத்தின் மீது வலுவான அர்ப்பணிப்போடு சமூகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். கூட்டுறவுகள், மக்கள் தங்கள் பொருளாதார எதிர்காலத்தைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. அவை பங்குதாரர்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பதால், கூட்டுறவுச் செயற்பாட்டின் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் அவர்களது சமூகங்களுக்கே செல்கிறது. கூட்டுறவின் மூலம் உருவாக்கப்படும் இலாபம் நிறுவனத்தில் மீண்டும் முதலீடு செய்யப்படுகின்றது அல்லது உறுப்பினர்களுக்குத் திருப்பித் தரப்படுகிறது.

வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வருமானம் ஈட்டுவதற்கான வளங்களைத் திரட்டுவதற்குமான கருவியாகக் காணப்படுவது கூட்டுறவின் முதன்மையான பங்களிப்பு எனக் கருதலாம். கூட்டுறவு, நிலையான மனித வளர்ச்சிக்குப் பங்களிப்பதுடன் சமூக ஒதுக்கலை எதிர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனலாம். பொருளாதாரத்தில் பின்னடைவான சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதில் கூட்டுறவுகளின் வகிபாகம் அளப்பரியது. கூட்டுறவுகள் வறுமையைக் குறைக்க உதவும் விதமும் முக்கியமானது. அவை தங்கள் உறுப்பினர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை அடையாளம் காண்கின்றன. பின்தங்கியவர்களின் நலன்களைப் பாதுகாக்க அதிகாரம் அளித்தல்; தனிப்பட்ட இடர்களை கூட்டு அபாயங்களாக (Collective Risk) மாற்ற அனுமதிப்பதன் மூலம் ஏழைகளுக்கு பாதுகாப்பை வழங்குதல் என்பன வறுமை ஒழிப்பில் முக்கியமான விடயங்கள் ஆகும்.

கூட்டுறவுகள், ‘உள்ளடக்கிய’ நிறுவனங்கள் எனும் வகையைச் சார்ந்தவை. கூட்டுறவின் தனித்துவம் என்பது முடிவெடுப்பதில் பரந்த பங்கேற்பை அனுமதிப்பதும், திறமை மற்றும் படைப்பாற்றலுக்கான ஊக்கத்தை வழங்குவதுமாகும். மறுபுறம், கூட்டுறவு அல்லாத நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு சிறிய உயரடுக்கிற்கு பயனளிக்கும் நிறுவனங்களாக உள்ளன. அவை நீண்ட காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கின்றன. கூட்டுறவு கூட அதன் கொள்கை சார் விடயங்களிலிருந்து விலகி, ஒரு சிலரின் கட்டுப்பாட்டில், அவர்களது நலனின் பால் கட்டுண்டு பயணிக்கும் போது, காலப்போக்கில் அவையும் ‘பிரித்தெடுக்கும் நிறுவனங்கள்’ எனும் நிலைக்கு மாறி காலப்போக்கில் கரைந்து போவதை தற்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கூட்டமைப்பு அணுகுமுறை

ஒரு கூட்டுறவுக் கூட்டமைப்பு, பல்வேறு ஒன்றோடொன்று தொடர்புடைய இலக்குகளை தொடர்ந்து அடைய வேண்டும்: 1) அதன் துணை நிறுவனங்களின் சுயாட்சியை வலுப்படுத்தும் அதேவேளை சமூக வலைப்பின்னல்களைப் பராமரித்தல், நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு சேவை செய்யும் திறனை மேம்படுத்துதல்; 2) கூட்டுறவுகளைப் புரிந்துகொள்வதற்கும் நிர்வகிப்பதற்கும் புதிய வழிகளை ஆராய்தல்; 3) ஒரு புதுமையான, பொருளாதார ரீதியாக சாத்தியமான, போட்டி நிறுவனமாக இருக்கத் தேவையான நிலைமைகளை வளர்த்துக் கொள்ளுதல்.

இத்தகைய இலக்குகளை அடைய நடைமுறையில் சில முக்கியமான விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். 

  1. கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய முகாமைத்துவ மாதிரிகளை அறிமுகப்படுத்தக்கூடிய நியதிச் சட்டங்களை உருவாக்கல். இன்றைய தேவை கருதி, தேவையான படைப்பாற்றலை புதுமையானதாக மாற்றுவதற்கான வழிகளை அமைத்துக்கொள்ள வேண்டும். மாறிவரும் வணிகச் சூழல்களில் இணைந்து வளர்ச்சி அடையத்தக்க வகையில் கூட்டுறவை இசைவாக்கிக் கொள்ளல்.
  2. சமூக மூலதனத்தின் சக்தி உருவாக்கம் மூலம் கூட்டுறவின் பலத்தை உள்ளுணர்தல்; இணைத்தல்; கட்டமைப்புகள் மூலம் வலுப்படுத்தல். சமூகங்களில் நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைக்கான அடிப்படையை வழங்குதல் (ஜேக்கப்ஸ், 1961).
  3. இலங்கையில் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூட்டுறவு நிறுவனங்களின் சவால்கள் பல உள்ளன. சமூக, பொருளாதாரச் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு உள்ளூர் கூட்டுறவாளர்களின்  வேர்களை விட்டுக்கொடுக்காமல் போட்டி நன்மைகளை உருவாக்குதல்; தக்கவைத்தல். மாறிவரும் உலகளாவிய வணிகச் சூழலில் மிகவும் பொருத்தமான, கள நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய மாற்றங்களை உள்வாங்குதல். உள்ளூர் பொருளாதாரத்தின் படி தெரிவுகளை உள்வாங்கல்.  

உள்ளடக்கிய அரசியல், பொருளாதார நிறுவனங்கள் 

‘நாடுகள் ஏன் தோல்வியடைகின்றன: அதிகாரம், செழிப்பு மற்றும் வறுமையின் தோற்றம்’ எனும் நூல் 2012 இல் வெளியிடப்பட்டது. இது பொருளாதார வல்லுநர்களான டேரன் அசெமோக்லு (Daron Acemoglu) மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் (James A. Robinson) ஆகியோரின் ஆராய்ச்சிப் புத்தகமாகும். நாடுகளுக்கிடையிலான செழுமை பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகளில் பங்களித்ததற்காக இவர்கள் 2024 இல் நோபல் பரிசைப் பெற்றார்கள். உள்ளடக்கிய அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் (Inclusive Political And Economic Institutions) செழுமைக்கு வழிவகுக்கும் எனவும், பிரித்தெடுக்கும் நிறுவனங்கள் (Extractive Institutions) வறுமை மற்றும் தோல்விக்கு வழிவகுக்கும் என்றும் இவர்கள் வாதிடுகின்றனர். ‘உள்ளடக்கிய’ அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் நீண்ட காலத்திற்கு வெற்றி பெற்று உயிர்வாழும் நாடுகளாக உள்ளன. அந் நாடுகள் அவற்றின் அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களால் (அரசு, சந்தை அமைப்பு) மற்றவர்களை விட செல்வந்தர்களாகவும், செழிப்பாகவும் இருக்கின்றன என்றும், அந் நாடுகளின் தட்பவெப்பநிலை, புவியியல் அல்லது கலாசாரம் காரணமாக அல்ல என்றும் இந்நூல் வாதிடுகிறது. அமெரிக்கப் பொருளாதார வல்லுநரான ஜெஃப்ரி சாக்ஸ், உள்நாட்டு அரசியல் நிறுவனங்களில் மிகக் குறுகிய கவனம் செலுத்துவதும், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புவிசார் அரசியல் போன்ற பிற காரணிகளைப் புறக்கணிப்பதும் தான் ஒரு நாட்டின் தோல்விக்கு காரணம் என்கிறார்.

உள்ளடக்கிய நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் பரவலான செழுமையை மேம்படுத்த முனைகின்றன. உள்ளடக்கிய அரசியல், பொருளாதார நிறுவனங்கள் சொத்து உரிமைகள், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நிலையான பொருளாதார வாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதில் உதவுகின்றன; நீண்ட கால வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகின்றன. இந்த நிறுவனங்கள், தனிநபர்கள் கூட்டாக இணைந்து அவர்களின் கருத்தைப் பலமாக வழங்கச் சந்தர்ப்பம் தருகின்றன. சொத்துகளைப் பாதுகாக்கின்றன; எதிர்காலச் செழிப்புக்கான முதலீட்டை ஊக்குவிக்கின்றன. தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் கூட்டாக முதலீடு செய்வதற்கும், புதுமைகளை உருவாக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கும் உரமிடுகின்றன.

இதற்கு நேர்மாறாக, பிரித்தெடுக்கும் நிறுவனங்கள், எதேச்சதிகாரத்தின் மூலம் ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்க உதவுகின்றன. அவை உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மக்களைச் சுரண்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அமைப்புகள், உயரடுக்குகளுக்கு சமூகத்தின் பரந்த செழுமைக்கு மேல் அதிகாரத்தையும் செல்வத்தையும் தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னுரிமை அளிப்பதால், நீண்ட கால வளர்ச்சியைத் தொடர்வதற்கான ஊக்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. இந்த நிறுவனக் கட்டமைப்பானது புதுமைகளைத் தடுக்கிறது; வாய்ப்புகளைக் குறைக்கிறது; பொருளாதாரத் தேக்கத்திற்கு வழிவகுக்கிறது.

சில ஏழ்மையான நாடுகளில் பொருளாதார வளர்ச்சி இருந்த போதிலும், பணக்கார நாடுகளுக்கும் ஏழ்மையான நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தக் கவலைக்குரிய புள்ளிவிபரம் உலகளாவிய சமத்துவமின்மையின் சவாலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏழை நாடுகளை வளர அனுமதித்திருந்தாலும், இடைவெளியை நிரப்புவதற்குத் தேவையான வேகத்தில் அவை பணக்கார நாடுகளை முந்திச் செல்ல பல தடைகளைத் தாண்ட வேண்டிய நிலையில் உள்ளன. மிக முக்கியமான தடைகளில் முதன்மையானது உள்ளக நிறுவனங்களின் வகிபாகம் ஆகும். 

சுருக்கமாகக் கூறின், இலங்கை உட்பட, பல தேசங்கள் இன்று தோல்வியடைகின்றன. ஏனெனில் அவற்றின் பிரித்தெடுக்கும் பொருளாதார நிறுவனங்கள் சேமிக்க, முதலீடு செய்ய மற்றும் புதுமைகளை உருவாக்கத் தேவையான ஊக்கத் தொகைகளை மக்களுக்குக் கொடுக்கவில்லை. பிரித்தெடுக்கும் அரசியல் நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்களை பிரித்தெடுப்பதன் மூலம் பயனடைபவர்களின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகின்றன.

இரண்டு தசாப்தங்களாக, பிலிப்பைன்ஸில் உள்ள கூட்டுறவுகள், நிதிச் சேர்க்கை மற்றும் பொருளாதார வலுவூட்டலை ஊக்குவிப்பதில் பல சாதனைகளைப் புரிந்துள்ளன. கூட்டுறவுகள் அங்கே நிதிச் சேர்க்கைக்கு இன்றியமையாத பங்களிப்பாளர்களாக இருந்து வருகின்றன. மேலும் தொலைதூரக் கிராமப் புறங்களுக்கு தங்கள் பாரிய வலைப்பின்னல் மூலம் சேவை செய்யும் திறனைப் பெற்றிருக்கின்றன. சேமிப்பு மற்றும் மூலதனத்தை உருவாக்குதல், கடன் உதவிகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் உள்ளூர் வளங்களைத் திரட்டுகின்றன. சிறு கூட்டுறவுகளை பலமான கூட்டுறவுகளுடன் இணைத்து, இசைந்து இயக்குவதில் அனுபவங்களைக் கொண்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் அனுபவம் 

கூட்டுறவு என்பது கூட்டாகச் சொந்தமாக்கிக் கொண்ட, ஜனநாயகக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் மூலம் பொதுவான பொருளாதார, சமூக, கலாசாரத் தேவைகள் மற்றும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய தன்னார்வமாக ஒன்றுபட்ட நபர்களின் தன்னாட்சி சங்கம் எனலாம்.

கூட்டுறவுகள் மக்களை ஜனநாயகம் மற்றும் சமமான வழியில் ஒன்றிணைக்கின்றன. உறுப்பினர்கள் வாடிக்கையாளர்களாக இருந்தாலும், பணியாளர்களாக இருந்தாலும், பயனர்களாக இருந்தாலும் அல்லது குடியிருப்பாளர்களாக இருந்தாலும், கூட்டுறவுகள் ‘ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு’ விதியால் ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படுகின்றன. உறுப்பினர்கள் நிறுவனத்தில் முதலீடு செய்த மூலதனத்தின் அளவைப் பொருட்படுத்தாமல் சமமான வாக்குரிமையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கூட்டுறவானது, மலிவு விலையில் தரமான பொருட்கள், சேவைகள், விநியோகம் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை அதிகரிக்கவென பலமான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. செலவுகளைக் குறைத்தல், சந்தைகள் மற்றும் சமூகங்களுக்குச் சேவை செய்தல் ஆகியவை, வரலாற்று ரீதியாக  பங்களிப்புச் செய்வதில் அதிக கவனம் கொண்டுள்ளன. கூட்டுறவு, ஒரு உதவி அமைப்பாக, அரசாங்கத்தின் முறையான கண்காணிப்பு மற்றும் ஆதரவுடன் பல புதுமைகளை வெளிக்கொணர உதவுகின்றது; விரைவான பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கின்றது. ஏனெனில் கூட்டுறவுகள், சேமிப்பு மற்றும் மூலதனத்தை திரட்டும் சக்தியால் குறைந்த சலுகை பெற்றவர்களின் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் உள்ளீடுகளாகச் செயற்பட முடியும் என்பதோடு சமூகத்தின் உறுப்பினர்கள் கூட்டுப் பங்காளிகளாக உருமாறவும் உதவுகின்றன. கூட்டுறவு நிறுவனங்கள், உலகின் பல பகுதிகளில் உள்ள உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் பெண்களின் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் பாலினச் சமத்துவத்திற்கு பங்களிப்புச் செய்கின்றன; வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் மற்றும் பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதன் மூலம் வறுமையைக் குறைப்பதில் பங்களிக்கின்றன.

‘பிலிப்பைன்ஸ்’ இல் 1900 களின் ஆரம்பத்திலிருந்து கூட்டுறவுகள் செயற்படுகின்றன. கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தின் (CDA) படி, 1915 முதல் 1927 வரை, நாட்டில் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டன. டாக்டர். ஜோஸ் ரிசால் அவர்கள் விவசாய சந்தைப்படுத்தல் கூட்டுறவு அமைப்பை மிண்டானோவில் உருவாக்கினார். ஜோஸ் ரிசால் ஒரு பிலிப்பைன்ஸ் தேசியவாதி, எழுத்தாளர், பிலிப்பைன்ஸில் ஸ்பானிய காலனித்துவ காலத்தின் முடிவுக்கு வித்திட்டவர். கிளர்ச்சி குற்றத்திற்காக அவர் ஸ்பானிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்; புரட்சி அவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டது. அவர் பிலிப்பைன்ஸ் சுதந்திரத்திற்கு வழிவகுத்த சுதந்திர வீரர். கூட்டுறவு, சுதந்திரப் போராட்ட மக்கள் இணைப்புக்கு வழிதிறந்து விட்டது. இன்றும் கூட அதன் நீட்சி  தொடர்கிறது. பொருளாதாரச் சுதந்திரத்தில் இன்றும் கூட்டுறவுகள் தான் முன்னணி வகிக்கின்றன. மிண்டானோவில் கூட்டுறவு ஒரு பலமான அடித்தளக் கட்டமைப்பின் ஆதாரம்; ஒரு வலுவான பொருளாதாரக் கோட்பாடாக நவீன தேவைகளுக்கு இசைந்து தன்னை உருமாற்றி வருகிறது.

பிலிப்பைன்ஸில் கூட்டுறவுத் திணைக்களமும் கூட்டுறவாளர்களும் இணைந்து திட்டமிடுகிறார்கள். ஆண்டு தோறும் நடைபெறும் கூட்டுறவு மகாநாடுகளில் கூட்டுறவு ஒரு வலுவான குரலாக இருக்கிறது. பெரிய கூட்டுறவுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் இணைந்து உழைக்கிறார்கள். பல்கலைக்கழகங்கள் தமது கூட்டுறவுத்துறை ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து கொள்ளைத் திட்டமிடலுக்கு உதவுகின்றன. அங்கு கூட்டுறவின் அரசியல் பலம் வலுவானது; வாக்கு வங்கி, அரசின் கொள்கை உருவாக்கத்தில் கூட்டுறவின் குரல் வலுவானது.

கூட்டுறவுத் திணைக்களம் மூலம் திறன் அபிவிருத்தி, முகாமைத்துவ மேம்பாடு, நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கு தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் கிடைப்பதற்கு அரசு நிதி உதவி செய்கிறது. புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு கூட்டுறவுத் திணைக்கள (CDA) ஊழியர்களின் வழித்துணை உண்டு. கூட்டுறவு வணிகத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த வலுவான திட்டமிட்ட ஆலோசனைகள் மிண்டானோவின் கூட்டுறவு அபிவிருத்திக்கு உரமூட்டுகிறது.

நிதிக்கான அணுகல் என்பது ஒரு கூட்டு உழைப்பு. அரசாங்கத் திட்டங்கள், நிதி நிறுவனங்களுடனான கூட்டாண்மை மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவின் மூலம் மூலதனத்தை அணுகுவதற்கான கூட்டுறவின் வழிகளை அரசும் கூட்டுறவுச் சம்மேளனங்களும் கூட்டாக உருவாக்குகின்றன. புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு. பெரும்பாலான பெரிய கூட்டுறவு நிறுவனங்கள் அரசு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவியை எளிதாகப் பெற முடியும். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே தங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கான ஒரு சாதனைப் பதிவைக் கொண்டுள்ளனர். சில கூட்டுறவு அமைப்புகள் பல வழிகளில் சுயமான நிதி ஆதாரங்களை நாடுகின்றன. அதில் முக்கியமானது ‘கூட்டுறவு பிணை முறி’ (Cooperative  Bond). கூட்டுறவு தொடக்க நிறுவனங்கள் மற்றும் பெண்கள் கூட்டுறவு அமைப்புகள்  பெரும்பாலும் இந்த வாய்ப்பைப் பெறுகின்றன. கூட்டுறவுப் பங்குப் பத்திரங்கள் அல்லது கூட்டுறவு முறி (Coop Share Bond) அல்லது கூட்டுறவு சமூக நிதி என்பது பிரபலமான கூட்டுறவு நிதி முதலீடாகும். கூட்டுறவுச் சமூக நிதி, கூட்டுறவு மற்றும் சமூகம் ஆகிய இரண்டின் நீடித்த நன்மைக்காக, கூட்டுறவு வணிக மாதிரி முதலீட்டு வடிவங்களாக, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் நிதிச் சேவையை வழங்குகிறது. கூட்டுறவுச் சமூக நிதி ஒரு சட்ட வலுவுக்கு உட்பட்டது. கூட்டுறவு அமைப்புகள் கூட்டுறவுச் சமூக நிதி உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபடலாம். இது கடல் கடந்த பிலிப்பினோக்களின் சேமிப்பு (Cooperative Share Bond) மூலம் திரட்டப்படுகிறது. கடல் கடந்த பிலிப்பினோக்கள் மாதாந்தம் 3 பில்லியன் ‘பெசோ’ இனை அரசின் நிதிக்கு பங்களிப்பாகத் தருகின்றனர். நாடு கடந்தாலும், கடல் கடந்த பிலிப்பினோக்களுக்கு வாக்குரிமை உண்டு. அரசியல் பலம் உள்ளவர்கள் கூட்டுறவின் நிதி ஆதாரத்தை உறுதிப்படுத்துகின்றனர். கூட்டுறவின் முதலீட்டில் பங்களிப்பு நல்குவதன் மூலம் நாடு திரும்பும்போது, கூட்டுறவு வாழ்வாதார மூலங்களை வழங்குகின்றன.

கூட்டுறவுக் கொள்கை, கூட்டுறவுச் சம்மேளனங்களின் நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் இணக்கத்திற்கான ஊக்குவிப்புகளை வழங்குகின்றது. இதன் காரணமாக சிறிய கூட்டுறவுகளின் நிர்வாகச் சுமைகள் குறைக்கப்படுகின்றன.

சந்தை இணைப்புகள் மூலம் சந்தை அணுகலை எளிதாக்குதல் மற்றும் மதிப்புச் சங்கிலி ஒருங்கிணைப்புக்கான ஆதரவை வழங்குதல் ஆகியவை கூட்டுறவுச் சம்மேளனங்களின் முக்கிய வகிபாகம். பெரிய சந்தைகளை அடையவும் அவற்றின் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் சம்மேளனங்கள் திட்டமிட்டு உழைக்கின்றன.

கூட்டுக் கூட்டுறவுகள், கூட்டுறவுகள் – அரச நிறுவனங்கள் – தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து, கூட்டுப் பலத்தைப் பயன்படுத்தி பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான பலமான கூட்டுறவு முறைமையை உருவாக்குவதற்கு வழிவிடுகிறது.

கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான கூட்டுறவுகள் உள்ளன. வெற்றிகரமான, பெரிய கூட்டுறவு நிறுவனங்கள் தங்கள் வளங்களை விவசாய வளர்ச்சியைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துவதோடு பெறுமதிசார் கவனம் கொண்டும் இயங்குகின்றன.

ஒரு பெரிய கூட்டுறவுச் சங்கம் என்பது உறுப்பினர் கூட்டுறவுகளின் பங்களிப்புகளிலிருந்து திரட்டப்பட்ட அதிக ஆதாரங்களைக் குறிக்கிறது. வளங்கள் ஒன்றிணைக்கப்படும் போது, அது உறுப்பினர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் கூட்டுறவு விவசாயத் துறைக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

மிண்டானோவில் கூட்டுறவு என்பது ஒரு தனித்துவமான சங்கமாகும்; ஏனெனில் கூட்டுறவு தங்கள் வளங்களைத் திரட்டுவதற்கும், கூட்டுறவு அங்கத்தவர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு அமைப்பின் இணை உரிமையாளர்களாக இருப்பதற்கும் எப்போதும் உறுதி செய்கிறது. கூட்டுறவு, அமைந்துள்ள இடத்தின் அடையாளமாக மாற, கூட்டுறவு வாழ்வு உறுதிசெய்கிறது. ஒரு கூட்டுறவுச் சங்கத்தின் முறையான நிர்வாகம், அது வெற்றிகரமாக, உரிமையாளர் – உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக மாறும் தன்மையை எப்போதும் பேணும்.

பிலிப்பைன்ஸ் பொருளாதாரத்தில் கூட்டுறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக – பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன; நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துகின்றன. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிலிப்பைன்ஸில் விவசாயம், நிதி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 20,105 இற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவுகள் உள்ளன. இந்தக் கூட்டுறவுகளில் சிறிய சமூக அடிப்படையிலான முன்முயற்சிகள் முதல் பெரிய, பல்துறை நிறுவனங்கள் வரை உள்ளன. பிலிப்பைன்ஸ் ஒரு விவசாய நாடு. அதனால், கூட்டுறவுகளின் கணிசமான பகுதி விவசாயத்தை மையமாகக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. விவசாயக் கூட்டுறவுகள் விவசாயிகள் மற்றும் கிராமப்புறச் சமூகங்களை ஆதரிக்கின்றன. கூட்டுறவுகள் மூலம், அதன் உறுப்பினர்கள் வளங்கள், தொழில்நுட்பம் மற்றும் சந்தைகளை அணுகலாம். இது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.

பமிலியாங் பிலிப்பைன்ஸ் விவசாயிகளின் விவசாயக் கூட்டுறவு (The Pamilyang Filipino Farmers Agricultural Cooperative – PFFAC) முப்பத்து மூன்று நிறுவனக் கூட்டுறவு நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது குடும்ப விவசாயிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பண்ணைப் பணியாளர்களைக் கொண்ட ஒரு கூட்டுறவுப் புத்தாக்கம் ஆகும். பெரும்பாலும் பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் வடக்கில் உள்ள உறுப்பினர்களைக் கொண்ட ‘Calabarzon’ பகுதிகளில் சிறிய அளவிலான குடும்ப விவசாயிகள் உள்ளனர். முதலில் இவர்கள் ஒரு குடும்பக் கூட்டுறவு சமூக வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார்கள். இந்தக் குடும்ப விவசாயிகள், அவர்களது விவசாயத் தொழிலாளர்கள் உட்பட அதன் குடும்பங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயக் கூட்டுறவு ஒன்றை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்க முடிவு செய்தனர். பமிலியாங் பிலிப்பினோ விவசாயிகள் சமூகம் 21 ஆம் நூற்றாண்டின் குடும்பக் கூட்டுறவு விவசாயச் சமூகமாக உள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்குப் பங்களிப்பதற்கான நிலையான வழிக் குடும்ப விவசாயம் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஒன்றாகச் செயற்படுகின்றனர்; குடும்ப விவசாயம் சமூகத்தில் பல செயற்பாட்டுப் பாத்திரங்களை வகிக்கிறது என்ற கருத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இது அதிகாரபூர்வமாக 2019 இல் கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு இயங்க அனுமதிக்கப்பட்டது. 

மிண்டானோவில் (Mindanao, Southern Philippines) உள்ள கூட்டுறவுகளின் கூட்டமைப்பு (FEDCO) என்பது ஒவ்வொருவரினதும் விருப்பத்தக்க கூட்டுறவு அடையாளம் ஆகும். மிண்டானோ மக்களின் பெருமை, பலம் மற்றும் ஆதாரமாக இது உள்ளது. ‘FEDCO’ வாழைப்பழ உற்பத்திக்குப் பெயர் பெற்றது; விவசாய விளைவுகளைப் பொதிசெய்து மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளுக்கு வர்த்தகம் செய்கிறது; வாழைப்பழக் கூட்டுறவுகளை இணைத்து, நிர்வகித்து, தொலைதூரக் கொள்வனவாளர்களை நேரிடையாக நிர்வகிப்பதற்கான திறமையை உருவாக்குகிறது. ஜப்பான், சீனா, கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கொள்வனவாளர்களுடன் நேரடிச் சந்தை இணைப்புகளைத் திட்டமிட்டு வளர்த்த பெருமை ‘FEDCO’ இனையே சாரும். இதன் மூலம், அர்த்தமற்ற செலவுகளைக் குறைக்க முடிந்தது. வாழைக் கூட்டுறவு விவசாயிகள் தங்கள் பொருட்களை மிகவும் பாதுகாப்பாக, நல்ல விலையில் விற்பனை செய்வதற்கு உதவியது. வாழைச் சாகுபடியாளர்கள் இப்போது உலக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் சிறந்த வாழைப்பழங்களை நேரடியாக வழங்க முடியும். இது வாழை உற்பத்தியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் ஒரு சாதகமாக நிலையை பல்தேசியக் கம்பெனிகளுக்குப் போட்டியாக உருவாக்கியது.

‘FEDCO’ கூட்டுறவு விவசாயிகளைச் சந்தைகளுடன் இணைப்பதிலும், வாங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும், ஒருங்கிணைத்தல் – சந்தைப்படுத்தல் – செயலாக்கல் சேவைகளை வழங்குவதிலும், முதன்மைப் பொருட்களுக்கான விநியோக வழிகளை வழங்குவதிலும், பயிற்சி – வணிகத் திட்டமிடல் – திறன் மேம்பாட்டுச் சேவைகளை வழங்குவதிலும் முக்கிய வகிபாகம் வகிக்கிறது.

பிலிப்பைன்ஸில் விவசாயக் கூட்டுறவுகள் உள்ளூர்த் துறையைப் பற்றி அறிந்திருப்பதன் தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளன. விவசாயக் கூட்டுறவாளர்களின் மதிப்பு, கூட்டுறவுத் துறைக்கு வெளியே இருப்பதை விட, விவசாயிகளுக்கு அதிக இலாபம் தரும் நன்மைகளைக் கொண்டுள்ளது. விவசாயிகளின் நம்பிக்கை கூட்டுறவில் கலந்துள்ளமைக்குக் காரணம், கூட்டுறவுத் துறை ஒரு ‘உள்ளடக்கிய’ துறையாக கருத்தியல் ரீதியாக கட்டமைக்கப்பட்டமையாகும்.

‘FEDCO’ இன் சம்மேளன இணைவு இரண்டு வகைகளில் இடம்பெறுகிறது. 1) விநியோகக் கூட்டுறவு மற்றும் சந்தைப்படுத்தல் கூட்டுறவு நடவடிக்கைகளை ஒரு புள்ளியில் இணைத்தல். 2) பெறுமதி கூட்டல், பரந்த அளவில் கூட்டுறவாளர்களை இணைத்தல் மற்றும் நிதி மூலங்களைத் திரட்டுதல்.

மிண்டானோவின் கூட்டுறவு, பெரும்பாலும் ‘உள்ளடக்கிய’ நிறுவன அம்சங்களை உள்வாங்கியவை. நீடித்த பொருளாதார வளர்ச்சியின் பொருட்டு, உள்ளடங்கிய அரசியல் மற்றும் பொருளாதார நிறுவனங்களை கூட்டுறவுத் துறை மூலம் முனைப்புடன் இணைக்கின்றன. கூட்டுறவு இணைவுகள் பொருளாதார மற்றும் அரசியலில் பரந்த பங்கேற்பை அனுமதிக்கின்றன; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

முடிவு

வடக்கு – கிழக்கின் பல கூட்டுறவு அமைப்புகள், குறிப்பாக முதன்மையான சங்கங்கள், சமாசங்கள் மற்றும் கூட்டுறவுக் கூட்டமைப்புகள் (சம்மேளம்) ஆகியன ‘உள்ளடக்கிய’ நிறுவனங்களுக்குரிய உள்ளக அம்சங்களைக் கவனம் கொள்ளாது விலகிப் பயணிக்கும் போது, அவை ‘பிரித்தெடுக்கும்’ நிறுவனங்களாக உருவாகும் நிலை வரலாம். ஏனெனில், பல கூட்டுறவுகள் உண்மையான அதன் தாற்பரியத்தை அறியாமல் ‘பிரித்தெடுக்கும்’ நிறுவனங்கள் என்ற வகைக்குள் சென்று கொண்டிருக்கின்றன.

போரின் பின் கடல் வளங்கள் சுரண்டப்படுகின்றன. கடலை நம்பி வாழும் சமூகம் ஒரு கனதியான சமூக, பொருளாதார நெருக்கடியில் தினமும் அவதிப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தீவுப்பகுதிகளில் தினமும் இந்திய மீனவர்களின் வளச்சுரண்டல் நடைபெறுவதை அவதானிக்கலாம். பலம் பொருந்திய இந்தியா ஒரு அச்சுறுத்தும் அண்டை நாடாக உருவாகி வருகிறது. இதற்கு எதிராகப் போராடும் மீனவர்கள் அனைவரும் கூட்டுறவு அமைப்புகளின் பங்காளிகளாகவே உள்ளனர். இன்று வரை மீனவர்களின் போராட்டம் அவர்களின் போராட்டமாகவே தனித்துவிடப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் பல கூட்டுறவுச் சம்மேளனங்கள் (தெங்கு – பனை, சிக்கன கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம், பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம்) உள்ளன. ஆனாலும், மீன்பிடித்துறை விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலையில், மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்கள் போராடும் கொதி நிலைக்கு உட்படும் நிலையில், அது குறித்த ஏனைய கூட்டுறவு அமைப்புகளின் அக்கறை என்னவாக இருக்கிறது என்ற கேள்வி எம் முன்னே உள்ளது. பரஸ்பர நலன்களில் அக்கறை கொண்ட கூட்டுறவு அமைப்புகளின் ‘உள்ளடக்கிய’ தன்மை பற்றிய அறியாமையே இதற்கு மிக முக்கிய காரணம்.

எமது கூட்டுறவு அமைப்புகள் கடந்த காலங்களில் பல சாதனைகள் புரிந்தவை; பல முன்னோடித் திட்டங்களை மக்களின் நன்மைக்கு அர்ப்பணித்தவை. ஆனால் இன்று பலவீனமான கூட்டுறவுக் கட்டமைப்புகளாய் பிரிந்து, தனித்து நிற்கும் பனை மரங்களாய் உள்ளன. அவை தோப்புகளாக மாறினால் ஒழிய கூட்டுறவின் வளர்ச்சி உறுதி செய்யப்படப் போவதில்லை. தற்போது தேவைப்படுவது எல்லாம் கூட்டுறவுத் தலைவர்களிடையே உடன்பாடு தான். எல்லோரும் ஒன்றிணைந்த ஒரு சந்திப்பு நிகழுமாயின் எல்லாவற்றுக்கும் வழிபிறக்கும். 

உசாத்துணை

  1. Bill No. 124 Bangsamoro Cooperative and Social Enterprise https://parliament.bangsamoro.gov.ph › 2022/03 › B…
  2. Co-operative Summit in Mindanao, https://www.icaap.coop/icanews/co-operative-summit-mindanao
  3. Cooperative for tech services eyed in Mindanao, https://www.bworldonline.com/the-nation/2021/11/14/410435/cooperative-for-tech-services-eyed-in-mindanao/
  4. 4.Farmers Fighting Poverty through Value Chain Development in Mindanao, https://micdp.coops4dev.coop/project/farmers-fighting-poverty-through-value-chain-development-mindanao
  5. 5.Federation of Cooperatives in Mindanao (FEDCO), https://www.philfarm.com/federation-cooperatives-mindanao-fedco/. https://www.facebook.com/p/federation-of-cooperatives-in-mindanao-fedco-100057486968320/
  6. How can we make sure our cooperatives are inclusive?, Cooperative identity, values & principles, https://ica.coop/en/cooperatives/cooperative-identity.
  7. Jaffna District Federation of Fisheries Co-operative Unions, https://www.icsf.net/wp-content/uploads/2022/12/Sam_88_Roundup.pdf.
  8. MASS-SPECC Cooperative Development Center, https://microfinancecouncil.org/mass-specc-cooperative-development-center/
  9. Mindanao coops get Foccus certification, https://www.sunstar.com.ph/more-articles/12-mindanao-coops-get-foccus-certification
  10. Philippine Banana Cooperatives’ Successes and Challenges, https://archive.foodfirst.org/philippine-banana-cooperatives-successes-and-challenges/
  11. SRI: Northern Province Sustainable Fisheries Development Project – PPTA, https://www.adb.org/sites/default/files/project-documents/49325/49325-001-tacr-en.pdf
  12. The Mindanao Peace and Normalization through Cooperative Development (MPNCD 2019), https://cda.gov.ph/the-mindanao-peace-and-normalization-through-cooperative-development-mpncd-2019/
  13. Why Nations Fail: The Origins of Power, Prosperity, and Poverty, Paperback – September 17, 2013 by Daron Acemoglu (Author), James A. Robinson (Author), https://www.amazon.com/Why-Nations-Fail-Origins-Prosperity/dp/0307719227
  14. Notes: Jose Rizal, who travelled to Spain, set up the first cooperative in 1896 for agricultural marketing. Similarly, Teodoro Sandiko, influenced by the German cooperative banking model, prepared the 1915 Rural Credit Act. chrome-https://cda.gov.ph/wp-content/uploads/2021/01/basic-info-on-coops.pdf.

ஒலிவடிவில் கேட்க

4173 பார்வைகள்

About the Author

வை. ஜெயமுருகன்

சமூக அபிவிருத்தி ஆய்வாளரான இவரது எழுத்துக்கள் அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பாக கவனம் கொள்வதுடன் போரின் பின்னரான நினைவுகொள் காலத்தின் மீள் கட்டமைப்புக்கள் மீதும் அழுத்தம் கொடுக்கிறது. இவர், அபிவிருத்திக் கல்விக்கான கலாநிதிப் பட்ட ஆய்வுக்காக 'இலங்கையின் போரின் பின்னரான அபிவிருத்தி முரண்நிலை' என்னும் கருப்பொருள் மீதான ஆய்வை முன்னெடுத்தவர். இவ் ஆய்வு நூலாக வெளிவரவுள்ளது. சர்வதேச கிறிஸ்டின் பல்கலைக்கழகத்தில் 'M.A in Peace Study' ஆய்வுப் பட்டம் செய்ய ரோட்டரி (Rotary Peace Fellow) புலமைப்பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்
  • November 2024 (16)
  • October 2024 (22)
  • September 2024 (20)
  • August 2024 (21)
  • July 2024 (23)
  • June 2024 (24)
  • May 2024 (24)
  • April 2024 (22)
  • March 2024 (25)
  • February 2024 (26)
  • January 2024 (20)
  • December 2023 (22)
  • November 2023 (15)
  • October 2023 (20)